Daily Thanthi |
- ஐ.பி.எல். கிரிக்கெட் கொல்கத்தா அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’ பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- தேர்தல் முடிவினை வைத்து கூர் தீட்டி செம்மைப்படுத்தி கொள்வதுடன் தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும் பிறந்தநாளையொட்டி கருணாநிதி அறிக்கை
- இன்னும் 10 நாட்களில்...
- பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
- பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மகனுக்கு ஜெயில் தண்டனை
- ஐ.டி.எப். டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜீவன் தோல்வி
- உலக கோப்பை ஆக்கி இந்தியா–இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
- கூடுதலாக அம்மா உணவகங்கள்: சரத்குமார் வரவேற்பு
- துணை போலீஸ் சூப்பிரண்டுகள் 13 பேருக்கு பதவி உயர்வு; கூடுதல் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்
- ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை நாளை வெளியாகிறது முக்கிய வட்டி விகிதங்கள் 0.25% குறைக்கப்படும்?
| Posted: 01 Jun 2014 01:16 PM PDT பெங்களூர் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐ.பி.எல். கிளைமாக்ஸ் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி முதல் நடந்து வரும் 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் இரு அணியினரும் சர்வதேச கால்பந்து போட்டிகளை போல் சிறுவர்களுடன் ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்து வந்து வரிசையாக நின்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிந்ததும் போட்டி ஆரம்பமானது. பாலாஜி சேர்ப்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடித்ததால் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளான ஷேவாக் 10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ஷேவாக், உமேஷ்யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட முயல அது மேல்நோக்கி எழும்பி கேப்டன் கம்பீர் கையில் தஞ்சம் அடைந்தது. அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1 ரன்) சுனின் நரின் சுழலில் போல்டு ஆனார். இதனால் பஞ்சாப் 5.1 ஓவர்களில் 30 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து சுணக்கம் கண்டது. சஹா, மனன்வோரா அதிரடி இதனை அடுத்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, மனன்வோராவுடன் ஜோடி சேர்ந்தார். முதலில் இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. 10 ஓவருக்கு பிறகு இருவரும் அதிரடி ஆட்டத்தில் பட்டையை கிளப்பினார்கள். விருத்திமான் சஹா 12-வது ஓவரில் பியுஷ்சாவ்லா பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சர்களை தூக்கினார். சுனில் நரின் வீசிய 14-வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரி அடித்து சஹா அரை சதத்தை (29 பந்துகளில்) எட்டினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மனன்வோரா பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை (42 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) பூர்த்தி செய்தார். 15-வது ஓவரில் மோர்னே மோர்கல் பந்து வீச்சில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடிக்க ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் உமேஷ்யாதவ் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. விக்கெட் கீப்பிங் சர்ச்சை 16-வது ஓவரின் 3-வது பந்தில் விருத்திமான் சஹா 60 ரன்னில் இருக்கையில் தூக்கி அடித்து கையில் கொடுத்த எளிதான கேட்ச்சை பந்து வீசிய சுனில் நரின் தவறவிட்டார். அதற்கு அடுத்த பந்தில் மனன்வோரா கிரீசை விட்டு இறங்கி அடித்த பந்தை விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதில் சர்ச்சை எழுந்ததால் ரீ பிளேயில் பார்த்த நடுவர் அந்த பந்தை நோ-பாலாக அறிவித்தார். 18-வது ஓவரில் பியுஷ்சாவ்லா வீசிய முதல் பந்தில் மனன்வோரா அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். முகத்தில் பட்டு எகிறிய பந்தை ரத்தத்துடன் பியுஷ்சாவ்லா அபாரமாக கேட்ச் செய்தார். மனன்வோரா 52 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 67 ரன் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 73 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார்கள். இதைத்தொடர்ந்து களம் கண்ட அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 'ரிவர்ஸ் ஸ்விப்' ஆடி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 19-வது ஓவரில் சுனில் நரின் வீசிய பந்தில் விருத்திமான் சஹா ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்தார். 2-வது சிக்சர் தூக்குகையில் அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த ஐ.பி.எல். போட்டியில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இதுவாகும். கொல்கத்தா அணி வெற்றி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. விருத்திமான் சஹா 55 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 115 ரன்னுடனும், டேவிட் மில்லர் ஒரு பந்தில் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் பியுஷ்சாவ்லா 2 விக்கெட்டும், உமேஷ்யாதவ், சுனில் நரின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதிகபட்சமாக மனிஷ்பாண்டே 50 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பஞ்சாப் வீரர் விருத்திமான் சஹாவின் சதம் வீணானது. 2-வது முறை சாம்பியன் கொல்கத்தா அணி 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. ஏற்கனவே 2012-ம் ஆண்டில் வென்று இருந்தது. முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப் வெறும் கையுடன் வெளியேறியது. ஸ்கோர் போர்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஷேவாக் (சி) கம்பீர் (பி) உமேஷ்யாதவ் 7 மனன்வோரா (சி) அண்ட் (பி) பியுஷ்சாவ்லா 67 ஜார்ஜ் பெய்லி (பி) சுனில்நரின் 1 விருத்திமான் சஹா (நாட்-அவுட்) 115 மேக்ஸ்வெல் (சி) மோர்னே மோர்கல் (பி) பியுஷ்சாவ்லா 0 டேவிட் மில்லர் (நாட்-அவுட்) 1 எக்ஸ்டிரா 8 மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 199 விக்கெட் வீழ்ச்சி: 1-23, 2-30, 3-159, 4-170. பந்து வீச்சு விவரம்: மோர்னேமோர்கல் 4-0-40-0 உமேஷ்யாதவ் 4-0-39-1 சுனில்நரின் 4-0-46-1 ஷகிப் அல்-ஹசன் 4-0-26-0 பியுஷ்சாவ்லா 4-0-44-2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராபின் உத்தப்பா (சி) அக்ஷர் பட்டேல் (பி) ஜான்சன் 5 கம்பீர் (சி) டேவிட்மில்லர் (பி) கரன்வீர்சிங் 23 மனிஷ் பாண்டே (சி) ஜார்ஜ் பெய்லி (பி) கரன்வீர்சிங் 94 யூசுப்பதான்(சி)மேக்ஸ்வெல் (பி) கரன்வீர்சிங் 36 ஷகிப் அல்-ஹசன் (ரன்-அவுட்) 12 டென் டஸ்சாட் (சி) டேவிட் மில்லர் (பி) கரன்வீர்சிங் 4 சூர்யகுமார் யாதவ் (சி) மனன்வோரா (பி) ஜான்சன் 5 பியுஷ்சாவ்லா (நாட்-அவுட்) 13 சுனில்நரின் (நாட்-அவுட்) 2 எக்ஸ்டிரா 6 மொத்தம் (19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 200 விக்கெட் வீழ்ச்சி: 1-6, 2-59, 3-130, 4-156, 5-168, 6-179, 7-187. பந்து வீச்சு விவரம்: ஜான்சன் 4-0-41-2 பாலாஜி 4-0-41-0 பர்விந்தர் அவனா 3.3-0-43-0 கரன்வீர்சிங் 4-0-54-4 அக்ஷர் பட்டேல் 4-0-21-0
image: category:Tagging: |
| Posted: 01 Jun 2014 01:12 PM PDT சென்னை, தேர்தல் முடிவினை வைத்து கூர் தீட்டி செம்மைப்படுத்தி கொள்வதுடன் தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்று தனது பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள, தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– 91–வது பிறந்தநாள் ''காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை'' என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90–வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91–வது பிறந்த நாளாம். இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனும், பொருளாளர் ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர் க.அன்பழகன் என் மீது வைத்துள்ள வற்றாத பாசத்தினால், இந்த 92 வயதிலும், 2 முறை எனது வீட்டிற்கே வந்துவிட்டார்; நான் ஒப்புதல் அளித்த பிறகு தான் விட்டார். தமிழகத்திற்கும், மைசூருக்கும் இடையே காவிரி நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட அதே 1924–ம் ஆண்டில் பிறந்து, 1938–ல் கரங்களில் புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடி ஏந்தி, ''வாருங்கள் எல்லோரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்!'' என்று பரணி பாடிக் கொண்டே பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான். அரசியல் பணி ''நான் தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்'' என்பது திரைப் படத்திற்காக என்னால் எழுதப்பட்ட வெறும் வசனம் அல்ல: அது தான் என் வாழ்க்கைச் சுருக்கம்! 1957–ம் ஆண்டு என்னுடைய 33–வது வயதில், அறிஞர் அண்ணாவின் ஆணைப்படி, முதல் முறையாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். 2011–ம் ஆண்டு 87–வது வயதில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். இதுவரையில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு முறை கூடத் தோற்காமல், 12 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இடையில் 1984 முதல் 1986 வரையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறேன். 5 முறை தமிழகத்தின் முதல்–அமைச்சராகவும், 12 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய போதிலும், என்னுடைய எளிய வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை என்பதை தமிழகம் நன்கறியும். திரையுலகில் ஈடுபட்டபோது, குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக்கூட, என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழை எளியோர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மருத்துவமனையாக இயங்க எழுதிக்கொடுத்து விட்டேன். பெரியாரிடம் பெற்ற பயிற்சி இவற்றையெல்லாம் நான் என்னுடைய பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்காகக் கூறவில்லை. என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படத்தக்க வகையில் என்னால் இயன்ற வரை உழைத்திருக்கிறேன் என்பதை விளக்குவதற்காகவே குறிப்பிட்டுள்ளேன். 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா கழகத்தை நம்முடைய கரங்களிலே ஒப்படைத்து விட்டு மறைந்தார். கடந்த 45 ஆண்டுகளாக கழகத்தின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களிலே ஏற்றப்பட்டுள்ளது. இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய கழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், தூற்றல்கள், எள்ளல் ஏகடியங்கள், சச்சரவுகள் – ஆர்ப்பரித்து வந்த அத்தனையையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத் தான் கழகம் அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. தோல்வியாயினும், வெற்றியாயினும் துவளாமல் லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான். ''அடித்தாலும், அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை'' என்பதற்கொப்ப, எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை; தமிழ் மக்களிடமிருந்து என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கழகம் பெரும் தோல்வி கண்டுள்ளது. இதுபோன்ற தோல்விகளை கடந்த காலத்தில் கழகம் பெற்று, மீண்டெழுந்து வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. எனினும் இப்போதைய தோல்விக்குப் பலராலும் பல்வேறு காரணங்கள் விமர்சனமாக வைக்கப்படுகின்றன. கழகச் செயல்வீரர்கள் சிலர் வழக்கமாக ஆற்றிட வேண்டிய தேர்தல் பணிகளைப் புறக்கணித்து முடங்கி விட்டனர்; அல்லது அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களின் வெறுப்பையும், வருத்தத்தையும் வரவழைத்துள்ளன; என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகின்றது. அச்சாரமாக அமையும் அண்ணா ஒரு முறை, ''தம்பீ! உன்னை யாராலும் அழித்திட முடியாது; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர!'' என்று சொன்னார்கள். ''தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்பது புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. அதாவது நன்மைகள் வந்தாலும், தீமைகள் வந்தாலும், அவற்றுக்கெல்லாம் காரணம் நாம் தானே தவிர, பிறர் அல்ல. எனவே அந்த அரிய கருத்துக்களையெல்லாம் எண்ணிப் பார்த்து இந்தத் தேர்தல் முடிவினை உடன் பிறப்புகள் தம்மை கூர் தீட்டிக்கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்து நாம் எங்கிருக்கிறோம் – என்ன செய்கிறோம் – அதன் விளைவுகள் என்ன – நமது பயணமும், பாதையும், கட்சியின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில் இருந்திட எப்படிப்பட்ட சிந்தையும் செயலும் வேண்டுமென்று உணர்ந்து கொள்ளவேண்டும். அதுவே நாம் அடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இதுவே என் இனிய உடன் பிறப்புகளுக்கு நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 01 Jun 2014 01:09 PM PDT உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல உதைவிழா கடந்து வந்த பாதையை பற்றிய அலசலை இங்கு பார்க்கலாம்:– 2–வது உலக கோப்பை 1934 (சாம்பியன்–இத்தாலி) நடத்திய நாடு: இத்தாலி, பங்கேற்ற அணி–16, அடித்த கோல்கள்–70 சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக குழு 8 முறை சந்தித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு 2–வது உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு வழங்கப்பட்டது. இந்த உலக கோப்பையில் பங்கேற்க மொத்தம் 32 அணிகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தன. இவற்றில் தகுதி சுற்று மூலம் 16 அணிகள் கழற்றி விடப்பட்டன. போட்டியை நடத்தும் நாடு நேரடியாக தகுதி பெறாமல், தகுதி சுற்றில் விளையாடிய ஒரே உலக கோப்பை இது தான். முதலாவது உலக கோப்பையின் போது, ஐரோப்பிய அணிகள் குறிப்பாக இத்தாலி தென்அமெரிக்க நாடான உருகுவேக்கு வராமல் பின்வாங்கியது. இதற்கு பதிலடியாக நடப்பு சாம்பியன் உருகுவே இத்தாலிக்கு செல்ல மறுத்தது. நடப்பு சாம்பியன் பங்கேற்காத ஒரே உலக கோப்பை இது தான். இந்த உலக கோப்பையில் பங்கேற்ற நாடுகளில் 9 அணிகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் கால்இறுதிக்கு 8 அணிகள் முன்னேறின. கால்இறுதி ஆட்டங்களில் இத்தாலி 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், ஆஸ்திரியா 2–1 என்ற கணக்கில் ஹங்கேரியையும், செக்கோஸ்லாவக்கியா 3–2 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், ஜெர்மனி 2–1 கணக்கில் சுவீடனையும் வீழ்த்தின. அரைஇறுதிகளில் இத்தாலி 1–0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவையும், செக்கோஸ்லாவக்கியா 3–1 கணக்கில் ஜெர்மனியையும் வென்றன. கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இத்தாலியும், செக்கோஸ்லாவக்கியாவும் ரோமில் சந்தித்தன. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 95–வது நிமிடத்தில் ஏஞ்சலோ ஸ்சியவியோ கோல் அடித்து இத்தாலிக்கு கோப்பையை உறுதிப்படுத்தினார். இத்தாலி–ஸ்பெயின் இடையிலான கால்இறுதி ஆட்டம் முதலில் 1–1 என்ற கணக்கில் (கூடுதல் நேரத்தையும் சேர்த்து) சமனில் முடிந்ததால் மறுநாள் திருப்பி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த உலக கோப்பையின் போது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அப்போது இத்தாலியில் ஆட்சி செய்த சர்வாதிகாரி முசோலினி, தனது பாசிச கொள்கைகளை பரப்ப இந்த உலக கோப்பையை பயன்படுத்தியதாக அடுக்கடுக்கான சர்ச்சைகள் கிளம்பின. இத்தாலி ஆட்டங்களின் போடு நடுவர்களை தேர்வு செய்ததில் இவர் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தெரியுமா? எல்லா உலக கோப்பை கால்பந்து போட்டியிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமை பிரேசிலுக்கு மட்டும் தான் உண்டு. இதேபோல் உலக கோப்பையை அதிக முறை (5 தடவை) வென்ற அணி என்ற சாதனையும் பிரேசில் வசமே இருக்கிறது. image: category:Tagging: |
| பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் பெடரர் அதிர்ச்சி தோல்வி Posted: 01 Jun 2014 12:55 PM PDT பாரிஸ் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பெடரர் தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 6-ம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உலகின் 4-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் 7-6 (7-5), 6-7 (3-7), 2-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போராடி 18-ம் நிலை வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்சிடம் (லாத்வியா) தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), மிலோஸ் ரானிச் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். கால் இறுதியில் கனடா வீராங்கனை மழையால் 2 நாட்கள் நீடித்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 3-6, 6-3, 6-3, 4-6, 12-10 என்ற கணக்கில் ஜெர்மனியின் பிலிப்பை சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் மழை காரணமாக 2-வது நாளாக நடந்த மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ 6-3, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் காஸ்குயட்டை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீராங்கனையான கனடாவின் இஜெனி பவுச்சர்ட் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 8-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பெரை (ஜெர்மனி) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சாரெஸ் நவரோவா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை அஜ்லா டாம்ஜானோவிச்சை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஜெலீனா ஜான்கோவிச் (செர்பியா)- அலிசா கெய்பானோவோ ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-காதரினா செபோட்னிக் (சுலோவக்கியா) ஜோடி 6-2, 4-6, 5-10 என்ற கணக்கில் ஜூலியா ஜார்ஜ் (ஜெர்மனி)-நினாட் ஜிமோன்ஜிச் (செர்பியா) ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்கள். image: category:Tagging: |
| பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மகனுக்கு ஜெயில் தண்டனை Posted: 01 Jun 2014 12:52 PM PDT சாபாலோ 1958, 1962, 1970–ம் ஆண்டுகளில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியில் முக்கிய இடம் வகித்த ஜாம்பவான் பீலேவின் மகன்களில் ஒருவரான எடின்போ மீது போதை மருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து கறுப்பு பணத்தை பெற்று புழக்கத்தில் விட்டதாக புகார் வெளியானது. இதுதொடர்பான வழக்கு பிரேசில் நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எடின்போவுக்கு 33 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார். போதை கடத்தல் கும்பலிடம் போதை பொருள் வாங்கியதாகவும், ஆனால் அவர்களுடன் தனக்கு தொடர்பு எதுவும் கிடையாது என்று 43 வயதான எடின்போ மறுத்து இருந்தார். எடின்போ 1990–ம் ஆண்டிகளில் சான்டோஸ் கிளப் அணிக்காக கால்பந்து விளையாடி இருக்கிறார். image: category: |
| ஐ.டி.எப். டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜீவன் தோல்வி Posted: 01 Jun 2014 12:50 PM PDT புதுடெல்லி ஐ.டி.எப். டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள குயாமில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன், ஜப்பான் வீரர் தகுடோ நிகியை சந்தித்தார். இதில் சென்னையை சேர்ந்த ஜீவன் 7–6, 2–6, 5–7 என்ற செட் கணக்கில் தகுடோ நிகியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்தார். இதேபோல் இந்தோனேஷியாவில் நடந்த ஐ.டி.எப். டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 5–7, 6–2, 3–6 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை லின் சுவிடம் தோல்வி கண்டார். image: category:Tagging: |
| உலக கோப்பை ஆக்கி இந்தியா–இங்கிலாந்து அணிகள் இன்று மோதல் Posted: 01 Jun 2014 12:48 PM PDT ஹாக் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது 2–வது லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. உலக கோப்பை ஆக்கி 13–வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக்கில் நடந்து வருகிறது. வருகிற 15–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்தியா–இங்கிலாந்து மோதல் இந்த போட்டியின் 2–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் (பி பிரிவு) ஒன்றில் ஜெர்மனி அணி 4–0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. 3–வது நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் 2–3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 1–1 என்ற கணக்கில் டிரா கண்டு இருந்தது. டென் ஸ்போர்ட்சில் ஒளிபரப்பு இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடந்த உலக லீக் இறுதிப்போட்டியில் இந்திய அணி 0–2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு இருந்தது. அந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. image: category:Tagging: |
| கூடுதலாக அம்மா உணவகங்கள்: சரத்குமார் வரவேற்பு Posted: 01 Jun 2014 12:47 PM PDT சென்னை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:– சென்னை மாநகரில் இப்போது இயங்கிவரும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1000 உணவகங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி அவர்கள் அறிவித்துள்ளார். ஏழை–எளிய மக்களுக்கும், அன்றாடம் வேலைக்குச் செல்வோருக்கும், வெளியூர்களிலிருந்து சென்னையில் தங்கி இருந்து தொழில், வேலைகளில் ஈடுபடுவோருக்கும் அம்மா உணவகங்கள் பசி தீர்க்கும் தாய் வீடு போல திகழ்ந்து வருகிறது. இந்த உணவகங்கள் நல்ல முறையில் சுகாதாரத்தோடு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் மேலு விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கனக்கான உணவகங்கள் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இவை அனைத்திற்கும் பாராட்டுக்குரியவர் தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தை துவக்கிவைத்த முதல்–அமைச்சர் தான். இதற்கென தமிழக மக்கள் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் முதல்–அமைச்சருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. image: category:News Group Category: |
| Posted: 01 Jun 2014 12:35 PM PDT சென்னை, 13 போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு, கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு கொடுத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– சென்னை உதவி கமிஷனர்கள் * சென்னை நீலாங்கரை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். * சென்னை எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் செந்தில்குமரன், பதவி உயர்வு பெற்று, சென்னை வடக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார். * சென்னை பல்லாவரம் உதவி கமிஷனர் தமிழ்செல்வன், பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். * சென்னை பரங்கிமலை உதவி போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ், பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். * சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஞானசேகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும, கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசு * சென்னை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர்பாபு, பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் மாநில உளவுப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். * தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு வீரராகவன், பதவி உயர்வு பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட, தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக பதவி ஏற்பார். * திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் பெரம்பலூர் மாவட்ட தலைமையக, கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். * காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வீரமணி பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டு * சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரி இளங்கோ, பதவி உயர்வு பெற்றுள்ளார். அரியலூர் மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக பதவி ஏற்பார். * சென்னை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் மாநில உளவுப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார். * போலீஸ் அகாடமி துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திரகுமார், பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். * குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை நாளை வெளியாகிறது முக்கிய வட்டி விகிதங்கள் 0.25% குறைக்கப்படும்? Posted: 01 Jun 2014 12:31 PM PDT புதுடெல்லி பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஜூன் 3) வெளியாகிறது. ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தொழில்துறை அமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பொருளியல் நிபுணர்களிடம் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வளர்ச்சி சரிவடைந்தது கடந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக சரிவடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருப்பதால் மத்திய அரசு வட்டாரங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. வளர்ச்சி குறைந்துள்ளதற்கு ரிசர்வ் வங்கியின் கடுமையான நிதிக் கொள்கைகளும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. வளர்ச்சி வேகம் அதிகரிக்க வேண்டுமானால் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டியது மிக அவசியம் என தொழில்துறை வட்டாரங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தனது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்கிறது. நரேந்திரமோடி அரசு நரேந்திரமோடி மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி நாளை தனது நிதிக்கொள்கையை வெளியிட உள்ளது. நாட்டு முன்னேற்றதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ள மோடி அரசுடன் பெரிதும் முரண்பட்டு விடாமல், பணவீக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் இடையே ஒரு சமரசமான நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இப்போது எடுப்பார் என நம்பப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சரிவடைந்து 0.5 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் மூன்று மாதங்களுக்குப் பின் 8.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 9.66 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 1–ந் தேதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் ரகுராம் ராஜன் வட்டி விகிதங்களை மாற்றாமல் 8 சதவீதமாகவே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆய்வறிக்கைகள் 2013 செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார். டாலர் வரத்தை அதிகரிக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும் அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் இதுவரை ஐந்து முறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மூன்று முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. ரகுராம் ராஜன் அண்மையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசினார். அப்போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை குறைக்க வாய்ப்பில்லை என ஆர்.பீ.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வார வர்த்தகம் தொடர்ந்து மூன்று வாரங்களாக ஏற்ற நிலையில் இருந்த பங்குச் சந்தைகள் சென்ற வாரத்தில் எதிர்பாராத சரிவைச் சந்தித்தன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் பழைய நிலையே நீடிக்கும் என்ற செய்திகள் பரவியதால் பங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அண்மைக் காலத்தில் பெரும் ஏற்றம் கண்டிருந்த வங்கிப் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கைதான் நிர்ணயிக்கும் என தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அசோசெம் நம்பிக்கை கோதுமை, பருப்பு, காய்கறி, எண்ணெய் வித்துக்கள் விலை குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது. எனவே ரிசர்வ் வங்கி இதனைக் கருத்தில் கொண்டே நடவடிக்கை எடுக்கும் என அசோசெம் தெரிவித்துள்ளது. category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
