Tamil Star |
- சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!
- சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த ஹீ லியாங்கய் கண்டுப்பிடிக்கப்பட்ட சூட்கேஸ் ஸ்கூட்டர்
- எகிப்து அதிபர் தேர்தலில் அப்தெல் ஃபத்தா அல் சிசி அமோக வெற்றி!
- பாராளுமன்ற தேர்வுக்குழு மூலமே பிரச்சினைக்குத் தீர்வு! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
- வல்லப்பட்டை மரத்தின் பாகங்களூடன் மூன்று சீனர்கள் கைது!
- வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
- எதிர்வரும் நவம்பரிலேயே ஜனாதிபதி தேர்தல்! சிலோன் ருடே தகவல்
- பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுங்க திணைக்களத்தில் இருந்து அபகரிக்க ஜனாதிபதி திட்டம்
- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கோருவதற்காக ஒட்டாவாவில் கூட்டம்!
- இலங்கை அரசாங்க நடவடிக்கைகள் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும் எச்சரித்த அமெரிக்கா!
- கனடியப் பிரதமரான ஹாப்பர் தாய்சேய் நலத் திட்டங்களுக்கு 3.5 பில்லியன் நிதி!
- தென் ஆபிரிக்காவிற்குப் பயணிக்க கனடியர்களின் விசா நிபந்தனைகள்!
- லிங்காவுக்கு அடுத்து ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போகும் ரஜினி!
- ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கை சம்பந்தப்பட்ட நட்பு திரைப்படமாகிறது…!
- பிறந்தநாளில் கபிலன் வைரமுத்து எழுதிய குருவிகளாக வகுப்பு வந்து கருவிகளாக மாறுகிறோம் பாடல்!
- கமல்ஹாசன் பாராட்டிய 'மனம்' திரைப்படம்
- இளையராஜா பிறந்த நாளையொட்டி 71001 மரக் கன்றுகள்: முதல் கன்றை நட்டு தொடங்கி வைக்கிறார் ராஜா!
- வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி!
- இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்!
- எல்ஜிக்கு தனி அந்தஸ்து செல்போன் தயாரிப்பில் முன்னனி
| சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதல்! Posted: 29 May 2014 11:50 PM PDT
ஐபிஎல் 7வது சீசனின் இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதலிடம் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, குவாலிபயர் 1 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது. கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், தோல்வியடைந்த பஞ்சாப் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பாக குவாலிபயர் 2 ஆட்டம் அமைந்துள்ளது. கால் இறுதியாக அமைந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் இன்று மோதுகிறது. அரை இறுதி ஆட்டமாக அமைந்துள்ள இப்போட்டி ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்சை வீழ்த்தியதால் உற்சாகமாக உள்ள டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஸ்மித், டுபிளெஸ்சிஸ், மெக்கல்லம், ரெய்னா, டோனி, ஜடேஜா என்று அதிரடி வீரர்கள் அதிகமுள்ளதால் சென்னை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது பஞ்சாப் பவுலர்களுக்கு சவாலாகவே இருக்கும். அதே சமயம், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை என்பதால், ஆட்டத்தின் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வென்று பைனலுக்கு முன்னேறப் போவது எந்த கிங்ஸ்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.டோனி (கேப்டன்), வேய்ன் ஸ்மித், டேவிட் ஹஸி, பேப் டு பிளெஸ்சிஸ், பாபா அபராஜித், ஆர்.அஷ்வின், சாமுவேல் பத்ரீ, ஜான் ஹேஸ்டிங்ஸ், மேட் ஹென்றி, பென் ஹில்பென்ஹாஸ், ரவீந்திர ஜடேஜா, பிரெண்டன் மெக்கல்லம், மிதுன் மன்ஹாஸ், ரோனித் மோரே, பவான் நேகி, ஆசிஷ் நெஹ்ரா, ஈஷ்வர் பாண்டே, சுரேஷ் ரெய்னா, விஜய் ஷங்கர், மோகித் ஷர்மா. கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), வீரேந்திர சேவக், அனுரீத் சிங், பர்விந்தர் அவானா, லஷ்மிபதி பாலாஜி, ரிஷி தவான், குர்கீரத் சிங் மான், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், மிட்செல் ஜான்சன், கரண்வீர் சிங், முரளி கார்த்திக், மன்தீப் சிங், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்ஷர் பட்டேல், செதேஷ்வர் புஜாரா, விருத்திமான் சாஹா, சந்தீப் ஷர்மா, ஷிவம் ஷர்மா, ஷர்துல் தாகுர், மனன் வோரா.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த ஹீ லியாங்கய் கண்டுப்பிடிக்கப்பட்ட சூட்கேஸ் ஸ்கூட்டர் Posted: 29 May 2014 11:41 PM PDT
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த ஹீ லியாங்கய், இவர் சூட்கேஸை கொண்டு பேட்டரியால் ஓடும் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தன்னையும், தன்னுடைய உடமைகளையும் கொண்டு செல்ல முடிவதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது கண்டுபிடிப்பு குறித்து ஹீ லியாங்கய் : 7 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் இரண்டு பேர் பயணம் செய்யமுடியும். ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் 20 கிலோமீட்டரை அந்த ஸ்கூட்டர் சென்றடையும். அதில் ஜி.பி.எஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளதுடன் அலாரமும் அமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியால் இயங்குவதால் இதை ரீசார்ஜ் செய்யவேண்டும் என்றார். மேலும் விவசாயியான இவர் இந்த சூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்க 10 வருடங்கள் ஆனதாக தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எகிப்து அதிபர் தேர்தலில் அப்தெல் ஃபத்தா அல் சிசி அமோக வெற்றி! Posted: 29 May 2014 11:37 PM PDT
எகிப்து அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி அமோக வெற்றி பெற்றுள்ளார். எகிப்தில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அங்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ஆதரவுடன் முகமது மோர்சி அதிபர் பதவியேற்றார். ஆனால், அவர் பதவியேற்ற பின் கடந்த 2 ஆண்டாக அந்நாட்டில் அரசியல் ஸ்திரதன்மை இல்லாமல் இருந்தது. மோர்சியின் ஆட்சியை எதிர்த்து கலவரங்கள் வெடித்தன. இதற்கு ராணுவமும் ஆதரவளித்தது. இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு ஜுலையில் எகிப்தில் மோர்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்த கிளர்ச்சியில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், எகிப்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 59 வயதான முன்னாள் ராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி மற்றும் இடதுசாரித் தலைவர் ஹம்தீன் சபாஹி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த வாக்குகள் கெய்ரோவில் நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் 352 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 312 இடங்களில் சிசி முன்னணியில் உள்ளார். அவருக்கு 96.2 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹம்தீனுக்கு 3.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 4.2 சதவீத வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிசியின் வெற்றியை அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கெய்ரோவின் சாலைகளில் கூடி, நாட்டு கொடியை பறக்கவிட்டும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாராளுமன்ற தேர்வுக்குழு மூலமே பிரச்சினைக்குத் தீர்வு! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Posted: 29 May 2014 11:28 PM PDT
இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற சகல விடயங்களும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெளிவாக இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் எவரது அழுத்தங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் இதனை செய்துவிட முடியாது. எவரும் எமக்கு உத்தரவிடவும் முடியாது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்தியா எமக்கு கூறுவதற்கு செவிமடுக்க முடியும். ஆனால் அவர்கள் கூறுவது போல எம்மால் செய்ய முடியாது. இரு நாடுகளிலும் பலம் வாய்ந்த அரசுகள் உள்ளன. சர்வதேசத்துக்கு முன்னால் சார்க் வலய நாடுகள் ஒரே எண்ணத்திலான நிலைப்பாட்டை காண்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியப் பிரதமர் உள்ளார் என்றும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்தார். 13வது திருத்தச்சட்டம் என்பது எம்மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டதொன்று என்பதை அனைவரும் அறிவார்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் இது கொண்டுவரப்பட்டது. இதனை நாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் நாம் வட மாகாண சபையை உருவாக்க மாட்டோம் என்ற பிரசாரத்தை கொண்டு சென்றார்கள். இன்று வடமாகாண சபையும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். முதலில் முழுமையாக என்றால் என்ன? 13வது திருத்தச் சட்டத்தில் எதனை நடை முறைப்படுத்துவது எதனை நீக்குவது என்பது தொடர்பான முடிவை பாராளுமன்றமே எடுக்கும். அதற்காகவே அனைத்துக் கட்சிகளும் உள்ளடக்கியதாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கு வெளியே எங்கெங்காவது சென்று கூறித்திரிவதை விடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வர வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இன்னமும் காலியாகவே காத்திருக்கின்றன என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார். இவர்களுடன் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வல்லப்பட்டை மரத்தின் பாகங்களூடன் மூன்று சீனர்கள் கைது! Posted: 29 May 2014 11:17 PM PDT
வல்லப்பட்டை மரத்தின் பாகங்களை முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்ற மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலி மாவட்டம் நெலுவ, லங்காகம என்ற பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் சீனப் பிரஜைகளுடன் சென்ற மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடம் இருந்து 1.35 கிலோ கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையில் சீனப் பிரஜைகள் அதிகளவில் இருந்து வருவதுடன் அவர்கள் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! Posted: 29 May 2014 11:11 PM PDT
சுற்றுலா விசாவின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவிக்கின்றார். சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லவிருந்த பெண்களே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது. தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றவர்களிடம், தொழில் நிறுவனத்தின் ஒப்பந்தம் அல்லது தொழிலுக்கான விசா இருக்க வேண்டும் என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன் நாட்டின் சட்டத்திற்கு அமைய தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், அதனை கருத்திற்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவதானமாக செயற்பட்டு வருவதாகவும் பிரதி பொது முகாமையாளர் தெரிவிக்கின்றார். மேலதிக விசாரணைகளின் பொருட்டு கைதானவர்கள் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மங்கல ரந்தெனிய கூறினார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச் சென்று, அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அவர்கள் விற்பனை செய்யப்படும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்வரும் நவம்பரிலேயே ஜனாதிபதி தேர்தல்! சிலோன் ருடே தகவல் Posted: 29 May 2014 11:06 PM PDT
2015ம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே எதிர்வரும் நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சிலோன் ருடே' ஆங்கில நாளிதழ் இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இது தொடர்பாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதன்படி புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட்டதும் அத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையாளர் விடுப்பார். தற்போதைய அரசமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவர் தமது ஆறாண்டு பதவிக் காலத்தில் முதல் நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் எந்தச் சமயத்திலும் முற்கூட்டித் தேர்தலுக்கு உத்தரவிட முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. எனினும் அத்தேர்தல் வெற்றி மூலம் கிடைத்த தமது புதிய பதவியை 2010 நவம்பரில்தான் ஜனாதிபதி ஏற்றிருந்தார். ஆகவே அவரது தற்போதைய பதவிக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் 2014 நவம்பரில்தான் முடியும். தற்போதைய அரசமைப்பு ஏற்பாடுகளின்படி, இனி ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதாயின் அதற்காக 2014 நவம்பர் வரை ஜனாதிபதி ராஜபக்ச காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே புதிய தேர்தலுக்கான அறிவிப்பை அவர் விடுக்க முடியும். அப்படி அறிவிப்பு விடுக்கப்பட்டால் அதற்குப் பிறகு, 2015 ஜனவரிக்குப் பின்னர்தான் அத்தேர்தல் சாத்தியமாகும். இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு ஜூனில் வெளியாகி அத்தேர்தல் ஓகஸ்டில் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது ஓகஸ்டில் முடிவடைந்த கையோடு புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்து, நவம்பரில் அத்தேர்தலையும் நடத்தி முடித்துவிட அரசு விரும்புகின்றது. அப்படி முற்கூட்டியே தேர்தலை நடத்துவதாயின் அதற்கென மீண்டும் ஓர் அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும். தற்சமயம் அத்தகைய பெரும்பான்மை ஆதரவு நாடாளுமன்றத்தில் தனக்கு இருப்பதாகக் கருதும் அரசு, அதன் மூலம் அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி, ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்த எண்ணியுள்ளது என்கிறது அந்த ஆங்கில நாளிதழ். அதேசமயம் ஊவா மாகாண சபைத் தேர்தல், உத்தேச ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பல்வேறு திட்டங்களை அறிவிக்கவும் அரசு விரும்புகின்றது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது. இதற்காக, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தல், தற்காலிக மற்றும் சமயாசமய ஊழியர்களைப் பணி நிரந்தரமாக்குதல், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளித்தல், மின் கட்டணத்தைக் குறைத்தல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்து திறைசேரிச் செயலாளருடன் தொடர் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் கூட அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுங்க திணைக்களத்தில் இருந்து அபகரிக்க ஜனாதிபதி திட்டம் Posted: 29 May 2014 10:59 PM PDT
யானைகளின் தந்தங்களில் உருவாகும் முத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக, சுங்க திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்தங்களை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் கடத்தப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுங்க திணைக்களத்தில் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் பெறுமதியான யானைத் தந்தங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் யானை முத்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை அபகரிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கோருவதற்காக ஒட்டாவாவில் கூட்டம்! Posted: 29 May 2014 10:53 PM PDT
கனடியத் தமிழர் தேசிய அவை இலங்கைக்கு எதிராக கனடிய அரசாங்கத்தின் பிரத்தியேகப் பொருளாதாரத் தடைச் சட்டத்தை பிரயோகிக்குமாறு கோருவதற்காக ஒட்டாவாவில் மே 26 முதல் மே 30 வரை கூடி உள்ளனர். இப்பரப்புரைக்காக பல தமிழர் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மாணவர் சமூகத் தலைவர்களும் கனடாவின் பல பாகங்களிலுமிருந்து வந்து இலங்கையின் போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைப் புரிந்த இலங்கை அரசிற்கு எதிராக பொருதாரத்தடையைக் கோரி உள்ளனர். இப்பரப்புரையில் பல கனடிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பல வெளிநாட்டு தூதுவராலயங்களுடனும் பல காத்திரமான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 13-2014 ல் எண்பது தமிழ்க் கனடிய அமைப்புக்கள் ஒன்றுகூடி ஒருமித்த தீர்மானத்தை எடுத்திருந்தனர். இத்தீர்மனத்தின் அடிப்படையில் இலங்கை அரசுக்கெதிரான இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார தடையும் ஒன்று.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை அரசாங்க நடவடிக்கைகள் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும் எச்சரித்த அமெரிக்கா! Posted: 29 May 2014 10:41 PM PDT
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் மத்தியமய அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இன மற்றும் மதரீதியில் சிறுபான்மையினங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சமவுரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்பனவும் உள்ளடங்கும் என்று அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 26 வருட காலப்போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள போதிலும் கடந்த காலங்களை விட தற்போது சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்ற பின்னர் அங்கு சிறியளவிலான நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசாங்கம் காங்கிரஸ்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துடன் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளது. இதற்காக யுஎஸ்எய்ட் நிறுவனம் முன்னாள் போர் வலயப்பகுதிகளில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மத்தியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது. அத்துடன் சுதந்திரமான ஊடகத்துறைக்கான உதவிகளை வழங்கி வருகிறது. இன்னும் உள்ளுரில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகிறது. அதேநேரம் இறுதி சமாதானததுக்காகவும் அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடியப் பிரதமரான ஹாப்பர் தாய்சேய் நலத் திட்டங்களுக்கு 3.5 பில்லியன் நிதி! Posted: 29 May 2014 10:31 PM PDT
கனடியப் பிரதமரான ஹாப்பர் தாய்சேய் நலம் சம்பந்தமான நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 5 வருடங்களில் 3.5 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார். இத் தகவலை வியாழக்கிழமை ரொறன்ரோ Davisville Public School ல் நடைபெற்ற நிகழ்வின்போது தெரிவித்திருப்பதாக கனடியன் பிறஸ் செய்தித் தாபனம் தெரிவித்திருக்கின்றது. பிரதமரால் கூறப்பட்ட புதிய நிதியானது 2015ம் ஆண்டு தொடக்கம் 2020 வரையிலான காலங்களில் ரொறன்ரோவிலுள்ள ஆரம்பப் பாடசாலைகளை மையமாகக் கொண்டு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 அங்கத்தவர்களைக் கொண்ட coalition of aid groups அமைப்பினைச் சேர்ந்த Rosemary McCarney என்பவர் ஹாப்பரது இந்த அறிவிப்பினைப் பெரிதும் பாராட்டியதுடன், இவ்வாறான முடிவுகளை எடுப்பவர்கள் இந்த உலகில் வெகு அருமையாகக் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கின்றார். G8 மாநாட்டில் தீர்மானித்ததற்கு இணங்க குறிப்பிட்ட சுகாதார மாநாடு ஹாப்பரினால் கூட்டப்பட்டதெனவும், சர்வதேச ரீதியாகப் பல நிபுணர்கள் கலந்துள்ளார்கள் எனவும் தெரியவருகிறது. ஹாப்பர் தெரிவிக்கையில் குறிப்பிட்ட மாநாடானது குறிப்பிட்டளவு வெற்றியளித்துள்ளதெனவும் ஆனால் அதிகம் செய்யப்படவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகிறது. சுகாதாரரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள திட்டமானது Muskoka Initiative என அழைக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் உலகளாவியரீதியில் தாய் சேய் நலத்தினைப் பாதுகாத்தலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தென் ஆபிரிக்காவிற்குப் பயணிக்க கனடியர்களின் விசா நிபந்தனைகள்! Posted: 29 May 2014 10:24 PM PDT
கனடியர்கள் யாராவது தென் ஆபிரிக்காவிற்குப் பயணிக்க வேண்டுமாயின் அவர்களின் விசா நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாற்றங்கள் இந்த மதத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது தென் ஆபிரிக்காவில் சுற்றுலாப் பயணியாகவோ தொழில் நிமித்தமோ 90 நாட்கள் தங்க வேண்டுமாயின் கனடியர்களுக்கு விசா தேவையில்லை. ஆளால் அங்கிருந்து அயல் நாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் தென் ஆபிரிக்காவிற்கு வந்து 90 நாட்கள் விசாவில் தங்கக்சுடியதாக இருக்கின்றது. இந்த விதி முறையானது மே மாதம் 2014ல் மாற்றம் அடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரும்பவும் அங்கு செல்கின்றபோது புதிய சுற்றுலா விசா கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இருக்க மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளும்படி கனடிய அதிகாரிகள் எச்சரிக்கின்றார்கள். அவ்வாறு கூடுதலான காலத்திற்கு தென் ஆபிரிக்காவில் தங்க வேண்டுமாயின் அவர்கள் தமது விசா முடிவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்பே உடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கோரப்படுகின்றது. கூடுதலான காலத்திற்கு தங்குபவர்கள் தண்டம் செலுத்த வேண்டியோ அல்லது சிறைவாசம் அனுபவிக்க வேண்டியோ நேரலாம் எனக் கனடிய அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கின்றார்கள். இவர்களைத் தவிர கல்வி சம்பந்தமாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ செல்வதாயின் விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லிங்காவுக்கு அடுத்து ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போகும் ரஜினி! Posted: 29 May 2014 05:45 AM PDT
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். நான்கு நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா மற்றும் லாரன் இர்வின் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ரஜினி ஜோடிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்தப் படம் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் ரஜினி. யாருக்கும் அனுமதி கிடைக்காத மைசூர் அரண்மனையில் ரஜினியின் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்குகிறது. அங்கு மீதிப்படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஷங்கர் தனது ஐ படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கியாம். ஜூன் இறுதி அல்லது ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தை வெளியிட்ட கையோடு, சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு, ரஜினியின் படத்துக்காக களமிறங்கப் போகிறாராம் ஷங்கர். முன்பெல்லாம் மூன்றாண்டுகளுக்கொரு படம் என்ற கொள்கை வைத்திருந்த சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டே மூன்று படங்களில் நடிப்பது, ரசிகர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சிதானே!This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கை சம்பந்தப்பட்ட நட்பு திரைப்படமாகிறது…! Posted: 29 May 2014 03:00 AM PDT
ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கை சம்பந்தப்பட்ட நட்பு, 'ஒன் வே' என்ற கன்னடத் திரைப்படமாகவும் 'ஒரு வழிச் சாலை' என்ற தமிழ்ப் படமாகவும் படமாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும் நண்பராகவே நடிக்கிறார். இவர் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். "இப்படி ஒரு படத்தை எடுக்கப் போகிறோம் என்று ரஜினிகாந்திடம் சொன்னதுமே அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டாராம். அவர் இந்த படத்தைப் பாரக்க மிகவும் ஆர்வமாக உள்ளார். படம் வெளியானதும் நாம் இருவரும் சேர்ந்து படத்தைப் பார்க்கலாம் என ரஜினி சொன்னார்," என்கிறார் ராஜ் பகதூர். இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்களாம். ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தால்தான் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமாம். படத்தில் ரஜினிகாந்தைப் பற்றிய புகைப்படங்களோ, அவர் சம்பந்தமான எந்தவித காட்சிகளோ இடம் பெறவில்லை. பல ஆண்டுகளாக ரஜினிகாந்துக்கும், ராஜ் பகதூருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை ருஷி என்பவர் இயக்குகிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ரஜினிகாந்த், நடிகராக நடித்த 'குசேலன்' திரைப்படம் இதே போன்று ஒரு நடிகருக்கும், அவருடைய பால்ய கால நண்பனுக்கும் இடையிலான கதையாகத்தான் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் பெறவில்லை. இருப்பினும் ராஜ் பகதூர் இந்த புதிய படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளாராம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிறந்தநாளில் கபிலன் வைரமுத்து எழுதிய குருவிகளாக வகுப்பு வந்து கருவிகளாக மாறுகிறோம் பாடல்! Posted: 29 May 2014 02:09 AM PDT
கவிஞர் வைரமுத்துவின் இளைய வாரிசு கபிலன் வைரமுத்து. அண்ணனை போலவே இவரும் சினிமாவில் நிறைய பாடல்கள் எழுதி பிஸியான கவிஞராக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களை மையமாக வைத்து பூமரேங் பூமி, மற்றும் மகப்பேறு மன அழுத்தத்தை மையமாகக்கொண்டு உயிர்ச்சொல் ஆகிய நாவல்களை எழுதியவர், தற்போது காட்சி ஊடகத்தை மையமாகக்கொண்டு தன் மூன்றாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று(மே 29ம் தேதி) கபிலன் வைரமுத்து தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். கூடவே இந்த பிறந்தநாளில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், பொறியாளன் படத்தில் தான் எழுதியிருக்கும் பாடலின் வரிகளை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இன்றைய கல்வி முறையை எதிர்த்து மாணவர்கள் விரக்தியில் பாடுவது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஜல்லிக்கட்டு போனா கூட செத்து பொழச்சு வருவ... கல்வி கற்க போனா இங்க செத்த பேயா திரிவ... என்று பாடல்கள் வரிகள் ஆரம்பிக்கிறது. இந்தப்பாடல் வெளிவரும்போது மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் என்று இப்போதே சொல்கிறார்கள். எழுத்தில் அதீதமான கற்பனைத்தளத்திற்கு போகாமல் மனிதர்களையும் உணர்வுகளையும் பிரதானப்படுத்துவதே இவர் பாணி. பிறந்தநாளான இன்று, இவரது எழுத்து பணி சிறக்க வாழ்த்துவோம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கமல்ஹாசன் பாராட்டிய 'மனம்' திரைப்படம் Posted: 29 May 2014 02:01 AM PDT
'அக்கினேனி' என அழைக்கப்படும் ஏ.நாகேஸ்வரராவ் குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகத்தான படம் என்ற பாராட்டைக் குவித்து வருகிறது. பல்வேறு நடிக, நடிகையர் படத்தைப் பார்த்து பாராட்டித் தள்ளி வருகிறார்கள். ஏ.நாகேஸ்வரராவ் கடைசியாக நடித்த படம் என்ற சிறப்பு கொண்ட இந்த படத்தில் 'அக்கினேனி' குடும்பத்தைச் சேர்ந்த நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஸ்ரேயா, சமந்தா ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். இந்த படத்தை சமீபத்தில் கமல்ஹாசன் பார்த்து ரசித்துள்ளார். "நான் சிவாஜிகணேசன், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோரின் தீவிர ரசிகன். 'மனம்' படத்தைப் பார்த்ததும் ஏஎன்ஆர் மீண்டும் எனது அபிமான நடிகராகிவிட்டார். இப்படிப்பட்ட சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக 'அக்கினேனி' குடும்பத்தை மிகவும் பாராட்டுகிறேன். மிகச் சிறப்பான படமாக 'மனம்' அமைந்திருக்கிறது," என்று கமல் பாராட்டியுள்ளார். 'மனம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார், தமிழில் மாதவன், நீது சந்திரா நடித்து வெளிவந்த 'யாவரும் நலம்' படத்தை இயக்கியவர். அதன் பின் அவர் சில தமிழ்ப் படங்களை இயக்குவதாக இருந்தது, சில காரணங்களால் அவை தள்ளிப் போயின. இருந்தாலும், தெலுங்கில் அவருக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தெலுங்குத் திரையுலகமே பாராட்டும் ஒரு முக்கியமான படத்தைக் கொடுத்திருக்கிறார். இனி, தமிழ்த் தயாரிப்பாளர்களும் அவரைத் தேடிப் போவார்கள் என நம்பலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இளையராஜா பிறந்த நாளையொட்டி 71001 மரக் கன்றுகள்: முதல் கன்றை நட்டு தொடங்கி வைக்கிறார் ராஜா! Posted: 29 May 2014 01:47 AM PDT
இசைஞானி இளையராஜா பிறந்த நாளையொட்டி 71001 மரக் கன்றுகளை அவரது ரசிகர்கள் நடுகிறார்கள். முதல் கன்றை இளையராஜாவே தன் கையால் நட்டு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் பயணத்தைத் தொடங்கியவர் இளையராஜா. தமிழ் திரையிசை என்ற பெயரில் இந்திப் பாடல்களின் ரீமேக்குகள் ஆதிக்கம் செலுத்தி வந்த எழுபதுகளில், தமிழனின் இசையை கொடிகட்டிப் பறக்க வைத்தவர். 40 ஆண்டுகாலம் இசைத் துறையில் கோலோச்சும் ராஜா, இன்று உலகின் தலை சிறந்த இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிறார். அவரது பல இசைக் கோர்வைகள் மேலை நாட்டாரை பிரமிப்பில் ஆழத்தி வருகின்றன. தனி இசையமைப்பாளராக 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்து இளையராஜா, இந்த ஆண்டு தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த முறை அவரது பிறந்த நாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடுகின்றனர் ராஜாவின் ரசிகர்கள். கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் வைத்து தனது ரசிகர் மன்றத்தை முறைப்படி தொடங்கி வைத்தார் ராஜா. ஒரு மாத காலத்துக்குள்ளாக இந்த ரசிகர் மன்றத்தில் கவிஞர்கள், பாடகர்கள், பாடகியர், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் விரும்பி இணைந்து வருகின்றனர். இந்த ரசிகர் மன்றம் சார்பாக இளையராஜாவின் பிறந்த நாள் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக தன் பிறந்த நாளில் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வார் இளையராஜா. அதைவிட மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்யுங்க என்பதே ஆண்டுதோறும் அவர் விடுக்கும் பிறந்த நாள் செய்தி. இந்த முறை அவரது விருப்பத்துக்கேற்ப, அவரது பிறந்த நாளன்று 71001 மரக்கன்றுகளை நட இளையராஜா ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கன்றுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடப்படுகிறது. தனது பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி திங்களன்று காலை 9 மணிக்கு முதல் மரக் கன்றை இளையராஜா தன் கையால் நட்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி! Posted: 29 May 2014 01:36 AM PDT
வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன. வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும். வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் `கம்போ' என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்' என்று அழைக்கின்றனர். பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள். அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்! Posted: 29 May 2014 01:24 AM PDT
கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள்: சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும். சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். 100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் 'சி'-37மி.கி., வைட்டமின்'பி' காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும். பேன் தொல்லைக்கு சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எல்ஜிக்கு தனி அந்தஸ்து செல்போன் தயாரிப்பில் முன்னனி Posted: 29 May 2014 01:12 AM PDT
ஆன்டிராய்டு ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் வந்த பின்னர் 70 சதவீத செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இதையே பயன்படுத்த துவங்கியது. இதனால் சிறிய அளவிலான நிறுவனங்கள் கூட தங்களின் செல்போன்களில் ஆன்டிராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் செல்போன்களை விற்று வருகிறது. பிரபல எலக்ட்ரானிக் நிறுவனங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதில் எல்ஜி நிறுவனம் நீண்ட காலமாக செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் சந்தையில் ஒரு நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக இந்த நிலை மாறி எல்ஜி தயாரிப்புகளுக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து "நெக்சஸ் 5" மாடல் செல்போன் தயாரித்ததுதான். இந்த வெற்றியை தொடர்ந்து எல்ஜி நிறுவனம் தற்போது புதிய செல்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு "எல்ஜி ஜி3" என பெயரிட்டுள்ளது. இதில் அதிவேகமாக செயல்படும் குவாட்கோர் பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேகமாக டவுன்லோட் செய்யலாம். மேலும் மொபைல் அப்ளிகேஷன்கள் சிறப்பாகவும் வேகமாகவும் செயல்படுவதற்கு வசதியாக 3ஜிபி ரேம் இதில் நிறுவப்பட்டுள்ளது. இது தவிர 13 எம்பி பின்பக்க கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா, 32 ஜிபி/16ஜிபி இன்பில்டு மெமரி, 5.5 டச் ஸ்கீரின், 10மணி நேரம் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும் வகையிலான 3000 மெகஹர்ட்ஸ் திறன் கொண்ட பேட்டரி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிம்கார்டு போடும் வகையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ள இந்த ஜி3 செல்போன், சந்தையில் எல்ஜி நிறுவனத்திற்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தரும் என அந்நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதன்விலை மற்றும் இதர விவரங்களை எல்ஜி நிறுவனம் விரைவில் வெளியிடும். இதன் மூலம் செல்போன் விற்பனையில் எல்.ஜி நிறுவனமும், தனி அந்தஸ்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















