Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சீமாந்திரா பகுதி

Posted: 07 May 2014 12:33 PM PDT

சீமாந்திரா பகுதியில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. திருப்பதியில் முதல் முறையாக வாக்களித்த இளைய தலைமுறை வாக்காளர்கள் அடையாள மை தடவிய விரல்களை உற்சாகத்துடன் காட்டும் காட்சி.

6

முல்லை பெரியாறு அணை வழக்கு: ஜெயலலிதா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

Posted: 07 May 2014 11:14 AM PDT

சென்னை,

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த கடந்த 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, அந்த தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கும் வகையில் கேரள அரசு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றியதற்கு எதிராக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே அது உடைந்தால் கேரளாவில் பெரும் சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது. ஆனால் இது தவறான வாதம் என்றும், அணை உறுதியுடன் இருப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் தமிழக அரசின் சார்பில் ஆதாரங்களுடன் ஆணித்தரமான வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு அமைத்த நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவும் அணையை நேரில் ஆய்வு செய்து, அணை மிகவும் பலமாக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.

மேலும் 2011–ம் ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதித்தும், கேரள அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு இப்போது வழங்கி இருக்கும் தீர்ப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

category:

News Group Category:

இந்தியாவில் 53 சதவீதம் பெண்கள் என்ஜினீயரிங் படிக்கிறார்கள் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி எம்.எஸ்.மதன் பேச்சு

Posted: 07 May 2014 10:45 AM PDT

தூத்துக்குடி

இந்தியாவில் 53 சதவீதம் பெண்கள் என்ஜினீயரிங் படிக்கிறார்கள் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி எம்.எஸ்.மதன் கூறினார்.

அறிவியல் முகாம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம், காமராஜ் கல்லூரி இணைந்து பள்ளி மாணவ– மாணவிகளுக்கான இளம் விஞ்ஞானிகள் அறிவியல் முகாம் காமராஜ் கல்லூரியில் நேற்று நடந்தது.

தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் சி.எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் எம்.சக்திவேல், பேராசிரியர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி எம்.எஸ்.மதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

53 சதவீதம் பெண்கள்

மாணவர்களுக்கு இது போன்ற அறிவியல் முகாம்கள் நடத்தும் போது, அவர்களின் திறமைகளை வளர்க்க முடியும். இது மாணவ–மாணவிகள் சிறப்பாக படிக்க வேண்டிய தருணம். கொச்சியில் நடந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 53 சதவீதம் பெண்கள் தற்போது என்ஜினீயரிங் படிக்கின்றனர். பெண்கள் நன்றாக படிக்கின்றனர். மாணவர்கள், அவர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. அகில இந்திய அளவில் அனைத்து துறைகளும் போட்டி நிறைந்ததாக உள்ளது.

நாம் படிக்கும் போதே ஐ.ஐ.எஸ், ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் போது, புத்தகத்தை படித்தால் மட்டும் போதாது. நமது அறிவுத்திறனையும் வளர்த்து முன்னேற வேண்டும். கடந்த ஆண்டு இந்த அறிவியல் பயிற்சி முகாமில் பங்கேற்று படித்த மாணவர்கள், நிச்சயம் மற்ற மாணவர்களை விட அறிவில் சிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால் மாணவர்கள் இந்த முகாமை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு கடினமாக உழைத்து முன்னேற வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி எம்.எஸ்.மதன் பேசினார்.

பயிற்சிகள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறிவியல் சார்ந்த செயல் திட்ட விளக்கங்கள், அறிவியல் மாதிரி வடிவமைப்புகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துதல், கப்பல் மாலுமிகள், பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜே.நாகராஜன், பேராசிரியர் தேவராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

தூத்துக்குடி–மதுரை பைபாஸ் சாலையில் விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு சாலையில் நின்றவர் மீது லாரி மோதியது

Posted: 07 May 2014 10:44 AM PDT

எட்டயபுரம்,

தூத்துக்குடி–மதுரை பைபாஸ் சாலையில் விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

பஸ்சில் மோதிய லாரி

தூத்துக்குடியில் இருந்து பருப்பு மூடைகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவில் ஒரு லாரி தேனிக்கு புறப்பட்டு வந்தது. இரவு 11.15 மணி அளவில் எட்டயபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் ரோட்டில் லாரி சென்றது.

அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சின் பின்பக்கமாக லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

லாரியை ஓட்டி வந்த டிரைவர் பரமசிவம், சேதம் அடைந்த பஸ்சின் கண்ணாடியை மாற்றி தருவதாகவும், போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதுபற்றி பஸ்சின் டிரைவர், கண்டக்டர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ்சையும், லாரியையும் சற்று தொலைவில் தனித்தனியாக நிறுத்தி வைத்தனர்.

விசாரணை நடத்தினார்

அந்த நேரத்தில் கீழஈரால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ், சிறப்பு காவல் இளைஞர் படை வீரர் செல்வமுருகன் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்தனர்.

விபத்தில் பலி

அப்போது, அங்கு விபத்துக்குள்ளாகி நின்ற லாரியை கண்டார். உடனே காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, விபத்துக்குள்ளான லாரியின் முன்னால் நின்று, அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து வந்த லாரி ஒன்று, ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

இதில் விபத்துக்குள்ளான லாரி ஒருசில அடி தூரம் முன்னால் நகர்ந்து சென்றது. அங்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் கால்கள் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

அவருடன் நின்று கொண்டிருந்த சிறப்பு காவல் இளைஞர் படை வீரர் செல்வமுருகன் லேசான காயம் அடைந்தார். தகவல் அறிந்த, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை, கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு முரளி ராம்பா, விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கலெக்டர் அஞ்சலி

இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ், உடல் பிரேத பரிசோதனைக்கு எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தேவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரபுரம் முட்டக்காடு. அவருக்கு வயது 44. கடந்த 2–4–1996 அன்று வள்ளியூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் 23–9–2012 அன்று எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு பிரீத்தி (40) என்ற மனைவியும், சுவேதா (12) என்ற மகளும் உள்ளனர். மகள் சுவேதா, குமாரகிரி சி.கே.டி. பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் தன்னுடைய குடும்பத்தினருடன் எட்டயபுரம் வடக்கு ரத வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருடைய வீட்டிற்கு ஏராளமானவர்கள் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

வாரணாசியில் கங்கை பூஜை செய்ய மோடிக்கு அனுமதி அளிப்பு: பேரணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை

Posted: 07 May 2014 10:29 AM PDT

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும் களமிறங்கி உள்ளனர். இந்த தொகுதியில் வரும் 12-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.வாரணாசியில் மக்கள் நெரிசல் மிகுந்த வீனியா பாக் பகுதியில் வியாழக்கிழமை பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்யவிருந்தார்.

ஆனால் இந்த பிரசார பொதுக்கூட்டத்துக்கு, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, அனுமதி அளிக்க தேர்தல் அதிகாரி பிரஞ்சால் யாதவ் மறுத்து விட்டார். இது பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்று இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வாரணாசியில் அறிவு ஜீவிகளுடனான மோடியின் சந்திப்புக்கும், கங்கை பூஜைக்கும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

நிறுவனச் செய்திகள்

Posted: 07 May 2014 10:12 AM PDT

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

நிகர லாபம் 29 சதவீதம் உயர்வு

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், 2013–14–ஆம் நிதி ஆண்டில் ரூ.1,089 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டில் ரூ.844 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச பிரிமிய வருவாய் ரூ.14,304 கோடியாகவும், உள்நாட்டு பிரிமிய வருவாய் ரூ.11,540 கோடியாகவும் உள்ளது.

***

டி.சி.எம். ஸ்ரீராம் நிறுவனம்

நிகர லாபம் ரூ.83 கோடி

டி.சி.எம். ஸ்ரீராம் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.83 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.82 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் ரூ.1,427 கோடியிலிருந்து ரூ.1,479 கோடியாக அதிகரித்துள்ளது.

* * *

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்

நிகர லாபம் 23 சதவீதம் உயர்வு

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி – மார்ச்) 23 சதவீத வளர்ச்சியுடன் ரூ.451.50 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. மொத்த வருவாய் ரூ.1,334 கோடியிலிருந்து ரூ.1,569 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாய் 12.09 சதவீதம் உயர்ந்து ரூ.705 கோடியாக உயர்ந்துள்ளது.

category:

சீனாவின் புதிய கொள்கையால் பருத்தி நூல் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்தது

Posted: 07 May 2014 10:08 AM PDT

சுதானுகா கோசல்

கொல்கத்தா

சீனாவில் புதிய ஜவுளி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கான நூல் ஏற்றுமதி ஆதாயமற்றதாகியுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த நூல் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்துள்ளது.

உள்நாட்டில் தற்போது பருத்தி நூலுக்கான தேவைப்பாடு உயரத் தொடங்கியுள்ளது. எனினும் தேவைப்பாடு முழு வீச்சில் அதிகரிக்க இன்னும் சிறிது காலமாகும் என ஜவுளி ஆலைகள் தெரிவித்துள்ளன. இது ஓர் இடர்பாடாக உள்ளது. ஏனென்றால் 2009–10–ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் நெருக்கடியிலிருந்து ஜவுளி நிறுவனங்கள் இப்போதுதான் மீண்டு வந்துள்ளன.

இது குறித்து வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்.பி.ஆஸ்வால் கூறும்போது, ''கடந்த ஆண்டில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 12 கோடி கிலோ நூல் ஏற்றுமதியாகியுள்ளது. சீனாவின் தேவைப்பாடுதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 9 கோடி கிலோ மட்டுமே நூல் ஏற்றுமதியாகி உள்ளது. சீனாவின் புதிய கொள்கையால் ஏற்றுமதிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நமது நூல் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு ஏறக்குறைய 50 சதவீதமாக இருந்தது'' என்று தெரிவித்தார்.

category:

இந்திய நிறுவனங்கள், ஏப்ரல் மாதத்தில் கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டிய நிதி 44% சரிவடைந்தது

Posted: 07 May 2014 10:07 AM PDT

மும்பை

இந்திய நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கடன்பத்திரங்களை ஒதுக்கி ஏப்ரல் மாதத்தில் ரூ.23,574 கோடி திரட்டியுள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் ரூ.41,812 கோடியாக இருந்தது. ஆக, திரட்டிய நிதியின் மதிப்பு 44 சதவீதம் சரிவடைந்துள்ளது. செபியின் அண்மைக்கால புள்ளிவிவரம் ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 ஒதுக்கீடுகள்

கடந்த மாதத்தில் 300 ஒதுக்கீடுகள் வாயிலாக நிறுவனங்கள் நிதி திரட்டியுள்ளன. மார்ச் மாதத்தை விட இது அதிகமாகும். மேலும் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போதும் ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை (206) அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் பங்குச் சந்தைகள் ஏற்ற நிலையில் உள்ளன. நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து வரும் நிலையில் கடன்பத்திர வெளியீட்டில் நிறுவனங்களின் ஆர்வம் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்த வழிமுறையில் திரட்டப்பட்ட மொத்த தொகையில் ரூ.10,652 கோடி மும்பை பங்குச் சந்தையில் மேற்கொண்ட வெளியீடுகள் வாயிலாக பெறப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டும் திரட்டிய தொகை ரூ.9,123 கோடியாகும். இரண்டு சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் ரூ.3,800 கோடி திரட்டியுள்ளன.

நடைமுறை மூலதன தேவை

நிறுவனங்கள் தமது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பல்வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்குவது போல், கடன்பத்திரங்கள் ஒதுக்கி நிதி திரட்டுவதும் இதில் முக்கிய வழிமுறையாக உள்ளது. பங்குகளைப் போல் கடன்பத்திரங்களில் இடர்பாடுகள் இல்லை என்பதால் முதலீட்டாளர்களை எளிதில் ஈர்க்க முடிகிறது. இவ்வாறு திரட்டும் தொகையை நிறுவனங்கள் தமது நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

category:

ஐ.டி. நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது ‘சென்செக்ஸ்’ 185 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 07 May 2014 10:06 AM PDT

மும்பை

பங்கு வியாபாரம், இரண்டு நாள் தொடர் முன்னேற்றத்திற்கு பிறகு புதன்கிழமை அன்று மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 185 புள்ளிகளை இழந்தது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர் நிலவரத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறைந்தது. மேலும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.

நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 தினங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. இதனால் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாய் குறையும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பீட்டை யு.பீ.எஸ். நிறுவனம் குறைத்தது. இதனையடுத்து டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடிவாங்கின.

'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் எச்.டீ.எஃப்.சி., ஹிண்டால்கோ, சிப்லா, கெயில் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், டாட்டா பவர் உள்ளிட்ட 25 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 184.52 புள்ளிகள் குறைந்து மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு 22,323.90 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 22,532.82 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 22,286.26 புள்ளிகளுக்கும் சென்றது.

மந்தமாக இருந்தது

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 62.75 புள்ளிகள் குறைந்து 6,652.55 புள்ளிகளில் நிலைகொண்டது.

category:

ஜனவரி – மார்ச் மாத காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு 2.3 மடங்கு அதிகரிப்பு

Posted: 07 May 2014 10:01 AM PDT

சோபியா கான்

பெங்களூர்

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நான்காவது காலாண்டில் (ஜனவரி–மார்ச்) தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 2.36 மடங்கு அதிகரித்து ரூ.2,800 கோடியாக உயர்ந்துள்ளது.

அதிக ஆதாயம்

நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தக வளாகங்கள் பிரிவில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு நீண்டகால அடிப்படையில் அதிக ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களும் விரிவாக்க திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டன. இதுபோன்ற காரணங்களால் தனியார் பங்கு முதலீடு மிகவும் உயர்ந்துள்ளது என குஷ்மன் – வேக்ஃபீல்டு நிறுவனத்தின் செயல் நிர்வாக இயக்குனர் (தெற்கு ஆசியா) சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

நான்காவது காலாண்டில் ரியல் எஸ்டேட் துறை ஈர்த்த தனியார் பங்கு முதலீட்டில் வர்த்தக வளாகங்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.1,440 கோடியாகவும், குடியிருப்பு பிரிவில் செய்த முதலீடு ரூ.1,070 கோடியாகவும் உள்ளது. மொத்த முதலீட்டில் இந்த பிரிவுகளின் பங்கு முறையே 51 சதவீதம் மற்றும் 38 சதவீதமாக உள்ளது. குடியிருப்பு பிரிவில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைப்பதால் வரும் காலாண்டில் இப்பிரிவில் தனியார் பங்கு முதலீடு சிறப்பான அளவில் அதிகரிக்கும் என சஞ்சய் தத் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் துறை மந்தமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இத்துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டியுள்ளன. தற்போது இந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது பங்கின் விலை குறைவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இத்துறையில் முதலீடு மேலும் அதிகரிக்கும் என ரெட் ஃபோர்ட் கேப்பிட்டல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அன்னிய முதலீடு

கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் கட்டுமானத்துறை ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 17 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.1,430 கோடியாக உயர்ந்துள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™