Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மராட்டிய மாநிலம் மும்பை அருகே பயங்கர விபத்து ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி 145 பயணிகள் படுகாயம்

Posted: 04 May 2014 12:33 PM PDT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் திவா மற்றும் ரத்ன கிரி மாவட்டம் சாவந்த்வாடி இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

தடம் புரண்டது

இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல திவாவில் இருந்து புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறி சென்றனர். இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

ராய்காட் மாவட்டம் நாகோதானே மலை அடிவார பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை கடந்து ரெயில் சென்றது. காலை 9 மணி அளவில் நாகோதானே மற்றும் ரோகா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு வளைவில் சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.

மரண ஓலம்

ரெயிலில் மொத்தம் உள்ள 20 பெட்டிகளில் என்ஜின் மற்றும் அதனை அடுத்த 4 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன. தடம் புரண்ட பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியபடி கவிழ்ந்து கிடந்தன.

நொடிப்பொழுதில் நடந்த விபத்தில் சிக்கிய பயணிகள் மரண ஓலம் எழுப்பினார்கள். உயிரை காப்பாற்ற கூக்குரலிட்டனர். இதை அறிந்த மற்ற பெட்டிகளில் பயணித்த பயணிகள் பதறியடித்தபடி கீழே இறங்கி வந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கன் ரெயில்வே உயர் அதிகாரிகள், தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் ஆம்புலன்சு வேன்களுடன் மருத்துவ குழுவினரும் விரைந்து வந்தனர். சம்பவத்தை கேள்விபட்டு அக்கம்பக்கத்து கிராம மக்களும் அங்கு திரண்டனர். மீட்பு படையினர் கிராம மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

19 பயணிகள் சாவு

மீட்பு பணியின் போது ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிர் இழந்து கிடந்தனர். மேலும் ஏராளமானோர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அவசர அவசரமாக மீட்கப்பட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சு வேன்களில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 19 பயணிகள் பலியானார்கள். அவர்களது உடல்கள் நாகோதானே மற்றும் ரோகா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பிவைக்கப்பட்டன.

145 பேர் காயம்

மேலும் விபத்தில் 145 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். படுகாயம் அடைந்த பலர் மும்பை சயான் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. ரெயில் விபத்து செய்தியை கேட்டு உறவினர்கள் பலர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த தங்களது உறவினர் களை கண்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்த விபத்து பற்றி ரெயில்வே இலாகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 16 பேர் பலியானதாகவும், 69 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசவேலை காரணமா?

பலரின் உயிரை பறித்த இந்த ரெயில் விபத்து மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சேத்தன் பக்ஷி விசாரணை நடத்துவார் என்று ரெயில்வே வாரிய தலைவர் அருனேந்திர குமார் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சேத்தன் பக்ஷி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நிதி உதவி

இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த மத்திய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன கார்கே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் உதவி தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரெயில்கள் ரத்து

இந்த ரெயில் விபத்து எதிரொலியாக 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஹபா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், பிக்கேனர்- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதற்கிடையே தடம்புரண்டு கவிழ்ந்த ரெயில் பெட்டிகளை தூக்கி நிலை நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

ஆங்கிலேய அதிகாரி கொலை வழக்கில் பகத்சிங் பெயர் இடம்பெறவில்லை தூக்கில் போடப்பட்ட 83 ஆண்டுகள் கழித்து புதிய திருப்பம்

Posted: 04 May 2014 12:23 PM PDT

லாகூர்,

லாகூர் போலீஸ் நிலையத்தில், வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

மரண தண்டனை

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங், கடந்த 1931–ம் ஆண்டு லாகூரில் தூக்கில் போடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 23 தான். அவருடன், சுக்தேவ், ராஜகுரு ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களும் தூக்கிலிடப்பட்டனர்.

1928–ம் ஆண்டில் லாகூரில் வெள்ளைக்கார சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சவுண்டர்சை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

முதல் தகவல் அறிக்கை

அவர்கள் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கடந்த நிலையில், பகத்சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷித் குரேஷி, இந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை அளிக்குமாறு கோரி, லாகூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதை ஏற்று கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், லாகூரில் உள்ள அனார்கலி போலீஸ் நிலைய ஆவணங்களில் லாகூர் போலீசார் தேடிப்பார்த்தனர். ஒருவழியாக, அந்த முதல் தகவல் அறிக்கையை கண்டுபிடித்தனர்.

பெயர் இல்லை

அனார்கலி போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் நேரில் பார்த்து புகார் அளித்ததன்பேரில், 1928–ம் ஆண்டு டிசம்பர் 17–ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்த முதல் தகவல் அறிக்கை உருது மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 'துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத 2 பேருக்கு எதிராக' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலையாளியின் அடையாளமும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பகத்சிங் உள்பட 3 பேரில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இதனால், இக்கொலை வழக்கில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோர்ட்டில் ஒப்படைப்பு

முதல் தகவல் அறிக்கை நகல், மூடி சீல் வைக்கப்பட்டு, லாகூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. பகத்சிங் அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷித் குரேஷிக்கும் அந்த நகல் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில், 450 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு அளிக்காமல், பகத்சிங்குக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

பகத்சிங் நிரபராதி என நிரூபிப்பதற்காக, இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தக்கோரி, லாகூர் ஐகோர்ட்டில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதை அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.

category:

News Group Category:

பேரம்பாக்கம் அருகே நாகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Posted: 04 May 2014 12:05 PM PDT

திருவள்ளூர், மே.5–

பேரம்பாக்கம் அருகே உள்ள களாம்பாக்கத்தில் மரகதவல்லி அம்பிகை சமேத நாகேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அருகே பொன்னியம்மன், செல்வ விநாயகர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களின் கும்பாபிசேக விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலை 9 மணியளவில் பொன்னியம்மன், செல்வ விநாயகர், ஆதிகேசவ பெருமாள் கோவில்களில் கும்பாபிசேகம் நடந்தது. அதன்பிறகு 10 மணியளவில் நாகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து வரப்பட்டு கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இரவு சுவாமி திருக்கல்யாணமும், அதன்பிறகு மரகதவல்லியுடன் நாகேஸ்வரர் திருவீதிஉலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா

Posted: 04 May 2014 12:02 PM PDT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்ததும், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் திகழும் வீரராகவபெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இருவேளையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்று, தங்க சப்பரம், சிம்ம வாகனம், யானை வாகனம், கருட வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. வருகிற 10–ந்தேதி தேரோட்டமும், 11–ந்தேதி திருமஞ்சனமும், 12–ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

இதேபோல் பேரம்பாக்கம் அருகே கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் சித்திரை பிரமோற்சவ விழாவும், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள 12–ம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வச்சேக்கிழார் பெருமானால் நிறுவப்பட்ட காமாட்சி அம்மன் உடனுறை நாகேச்சர சுவாமி கோவில் சித்திரை மாத பிரமோற்சவ விழாவும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருப்போரூரில் துணிகர சம்பவம் ஏ.டி.எம். எந்திரத்தை வெடி வைத்து கொள்ளை முயற்சி பொதுமக்கள் சத்தம் போட்டதால் ரூ.34 லட்சம் தப்பியது

Posted: 04 May 2014 11:45 AM PDT

திருப்போரூர்,

திருப்போரூரில் ஏ.டி.எம். எந்திரத்தை வெடி வைத்து தகர்த்து கொள்ளையடிக்க முயன்ற போது, பொதுமக்கள் சத்தம் போட்டதால் மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டான். இதனால் ரூ.34 லட்சம் பணம் தப்பியது.

ஏ.டி.எம். மையம்

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே 'பாங்க் ஆப் மைசூர்' வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது.

வங்கியின் எதிர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மூர்த்தி மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தனர். அவர்கள் வெளியே வந்து எட்டி பார்த்த போது, ஏ.டி.எம். மைய கதவு கண்ணாடி உடைந்து இருந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் அருகில் ஒரு மர்ம ஆசாமி அமர்ந்து இருப்பதையும் பார்த்தனர் உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர்.

இதனால் பயந்துபோன அந்த ஆசாமி, ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து கட்டிடத்தின் அருகே ஏற்கனவே தயாராக நின்றிருந்த மற்றொரு நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டான்.

இதுபற்றி திருப்போரூர் போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

கண்காணிப்பு கேமரா

சம்பவ இடத்துக்கு திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்து அதன் மேல்புற கவர், சாலையில் விழுந்து கிடந்தது. கண்ணாடி கதவும் பலத்த சேதமடைந்து இருந்தது.

9 'வோல்ட்' கொண்ட பேட்டரிகள் மற்றும் வயர்கள், டெஸ்டர், வயரை துண்டிக்கும் சிறிய அளவிலான 'கட்டிங் பிளேயர்' உள்ளிட்டவைகள் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே சிதறிக்கிடந்தன.

பின்னர் போலீசார் வங்கி அதிகாரிகள் உதவியுடன் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.34 மணிக்கு ஜீன்ஸ் பேண்ட், டி–சர்ட் அணிந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம ஆசாமி, கறுப்பு நிற பாலிதீன் கவரால் கண்கள் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு, கையுறை அணிந்தபடி உள்ளே நுழைகிறான்.

கொள்ளை முயற்சி

நேராக ஏ.டி.எம். எந்திரம் மீது ஏறி அமர்ந்த அந்த ஆசாமி, அங்கிருந்த மின்சார விளக்குகளை கழட்டிவைக்கிறான். பின்னர் உள்ளே இருந்தபடியே வெளியே யாராவது வருகிறார்களா? என்று பார்த்தபடி எந்திரத்தின் அருகில் சென்று அமர்ந்துகொள்கிறான்.

பின்னர் தான் கொண்டு வந்த பேட்டரிகள் மூலம் வயர்களை இணைத்து பணம் வைக்கும் பகுதியை மட்டும் வெடிக்கச்செய்கிறான்.

இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. வெடி வைத்ததால் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக அவன் எந்திரத்தின் ஓரமாக சுமார் 2 நிமிடங்கள் அமர்ந்து இருக்கிறான். திடீரென எழுந்து வெளியில் ஓடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. சுமார் 20 நிமிடங்கள் அந்த கொள்ளையன், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

ரூ.34 லட்சம் தப்பியது

முதல் வெடியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் மேல் பாகம் மற்றும் பணம் வைக்க பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்ணின் பகுதிகள் மட்டும் சேதமடைந்தது.

ஆனால் கனமான இரும்புக்கதவுகள் போன்ற பகுதி சேதம் அடையவில்லை. கொள்ளையன் மீண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குள் பொதுமக்கள் வந்து விட்டதால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

நேற்று முன்தினம் மாலைதான் சுமார் ரூ.34 லட்சம் ஏ.டி.எம்–ல் வைக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் அந்த பணம் தப்பியது.

கொள்ளையன் வந்த 1 மணி நேரத்துக்கு முன்புதான் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ரோந்து பணியில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து ஆய்வுசெய்துவிட்டு சென்று இருப்பதும் கேமராவில் பதிவாகி உள்ளது.

பரபரப்பு

இந்த துணிகர கொள்ளை முயற்சி குறித்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் துப்பு துலக்கப்பட்டது.

இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள் முதல் முறையாக பேட்டரிகள் மூலம் வெடிக்கச்செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாணக்கியன் சொல் (05-05-2014)

Posted: 04 May 2014 11:41 AM PDT

Daily Thanthi Image Special chanakkiyan: 

மதுராந்தகம் அருகே மரத்தில் கார் மோதி, சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

Posted: 04 May 2014 11:40 AM PDT

மதுராந்தகம்,

மோட்டார் சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.

தோல் கம்பெனி உரிமையாளர்கள்

சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது 34). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஆர்.வி.தோல் கம்பெனியின் உரிமையாளர் ஆவார். இவருடைய நண்பர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(35), சரவணன்(33). இவர்கள் இருவரும் சேர்ந்து குரோம்பேட்டையில் மகாகணபதி என்ற பெயரில் தோல் கம்பெனி நடத்தி வருகின்றனர்.

பேராவூரணியில் உள்ள பாலகிருஷ்ணனின் உறவினர் ஒருவரின் வீட்டு கிரகப்பிரவேசம் இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சுவாமிநாதன், பாலகிருஷ்ணன், சரவணன் மற்றும் அவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் கேரளாவைச் சேர்ந்த சச்சு(32) ஆகிய 4 பேரும், சுவாமிநாதனுக்கு சொந்தமான காரில் நேற்று மதியம் குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்றனர். காரை சுவாமிநாதனே ஓட்டினார்.

3 பேர் பலி

மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு இந்தியன்ஆயில் நிறுவனம் அருகே நேற்று மதியம் 3 மணியளவில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜி.எஸ்.டி. ரோட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபக்கம் உள்ள பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த சுவாமிநாதன், பாலகிருஷ்ணன், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

2 பேர் காயம்

காரில் பயணம் செய்த சச்சு மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவாதூரைச் சேர்ந்த அப்பாஸ்(32) இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், படாளம் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருக்குள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண்டியார் (05-05-2014)

Posted: 04 May 2014 11:40 AM PDT

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Andiyar: 

கன்னித்தீவு (05-05-2014)

Posted: 04 May 2014 11:39 AM PDT

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:

ஆன்மீக சிந்தனை (05-05-2014)

Posted: 04 May 2014 11:39 AM PDT

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™