Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் 90 லட்சம் மாணவர்களுக்கு வழங்க புத்தகம், சீருடைகள் தயார் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

Posted: 31 May 2014 04:28 PM PDT

சென்னை,

திட்டமிட்டபடி தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மொத்தம் 90 லட்சம் மாணவர்களுக்கு வழங்க புத்தகங்கள் மற்றும் சீருடைகள் தயார் நிலையில் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் நாளை திறப்பு

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து ஏப்ரல் மாதம் 23–ந் தேதி முதலும், தொடக்க கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே மாதம் 1–ந் தேதி முதலும் கோடை விடுமுறை விடப்பட்டது.

ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர், 2014–2015–ம் கல்வி ஆண்டில், அனைத்து பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கொளுத்தும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பது சில நாட்கள் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.

பள்ளி திறக்கும் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

4 கோடி பாடப்புத்தகங்கள்

ஏற்கனவே, 1 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என மொத்தம் 4 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, 1 முதல் 9–ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு என 2 கோடியே 20 லட்சம் புத்தகங்களும், 10, பிளஸ்–1, பிளஸ்–2 ஆகிய மாணவர்களுக்கு என 2 கோடி புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

தற்போது தமிழகத்தில், 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் 57 லட்சம் பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 33 லட்சம் பேரும் என மொத்தம் 90 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள்.

பள்ளிகளுக்கு சென்றன

பள்ளி திறக்கும் நாளான நாளையே, மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு வழங்க ஜாமெண்டரி பாக்ஸ், ஸ்கூல் பேக், செருப்பு உள்ளிட்டவைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுவதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

category:

News Group Category:

மலேசியாவில் தாய்லாந்து எண்ணெய் கப்பல் கடத்தல்?

Posted: 31 May 2014 01:30 PM PDT

கோலாலம்பூர்,

சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி தாய்லாந்து நாட்டு டீசல் எண்ணெய் கப்பல் 'எம்.டி. ஆரபின்–4' சென்று கொண்டிருந்தது. கப்பலில் 14 சிப்பந்திகள் இருந்தனர். சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றதை தொடர்ந்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து விட்டது. இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச கடல் முனையம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது. அதில் இருந்த 3 மில்லியன் லிட்டர் டீசல் திருடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

category:

News Group Category:

உலக கோப்பை கால்பந்து திருவிழா–2014

Posted: 31 May 2014 01:28 PM PDT

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கோலாகல திருவிழா கடந்து வந்த பாதையை பற்றிய அலசலை இங்கு பார்க்கலாம்:–

முதலாவது உலக கோப்பை 1930 (சாம்பியன்–உருகுவே)

நடத்திய நாடு: உருகுவே, பங்கேற்ற அணி–13 அடிக்கப்பட்ட கோல்கள்–70

முதலாவது உலக கோப்பையை நடத்துவதற்கு உருகுவே, ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகள் உரிமை கோரின. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அந்தஸ்து, புதிய ஸ்டேடியம் கட்டுவதாக வாக்குறுதி, அணிகள் பங்கேற்பதற்கான செலவுத் தொகை அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அளித்த உத்தரவாதம் போன்ற காரணங்களால் தென்அமெரிக்க நாடான உருகுவேக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது. உருகுவேயில் முதலாவது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக கோப்பை திருவிழாவும் சேர்ந்து கொண்டது.

மொத்தம் 13 அணிகள் போட்டியில் பங்கேற்றன. தென்அமெரிக்க நாட்டிற்கு செல்வது நெடிய பயணம் மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் என்பதால் குறைந்த ஐரோப்பிய நாடுகள் (4) மட்டுமே முதலாவது உலக கோப்பையில் கலந்து கொண்டன. தகுதி சுற்று இல்லாமல் நடத்தப்பட்ட ஒரே உலக கோப்பை இது தான்.

அணிகள் 4 பிரிவாக பிரிவுக்கப்பட்டன. மெக்சிகோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் லுசியன் லாரென்ட் 19–வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் கோல் இது தான். இந்த ஆட்டத்தில் 4–1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், அர்ஜென்டினா, சிலிக்கு எதிரான லீக்கில் தோற்றதால் அரைஇறுதி வாய்ப்பை பெற தவறியது.

லீக் முடிவில் 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா 6–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும், உருகுவே அணி 6–1 என்ற கோல் கணக்கில் யுகோஸ்லாவியாவையும் தோற்கடித்தன.

இறுதிப்போட்டியில் உருகுவே–அர்ஜென்டினா அணிகள் 93 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடின. முதல் பாதியில் உருகுவே 1–2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போதிலும் பிற்பாதியில் சியா, இரியர்ட், கேஸ்ட்ரோ ஆகியோர் அடித்த கோலால் உருகுவே 4–1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று, முதல் உலக கோப்பை மகுடத்தை சூடிக் கொண்டது. மொத்தம் 70 கோல்கள் பதிவாகின. அதிகபட்சமாக அர்ஜென்டினா வீரர் குல்லர்மோ ஸ்டாபிலே 8 கோல்கள் அடித்திருந்தார்.

முதலாவது உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் யாரும் இப்போது உயிருடன் கிடையாது. அர்ஜென்டினா அணிக்காக பங்கேற்ற பிரான்சிஸ்கோ வரலோ கடைசியாக தனது 100–வது வயதில் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார்.

தெரியுமா?

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவரை மொத்தம் 2208 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. முதலாவது கோலை பிரான்ஸ் வீரர் லுசியன் லாரென்ட் (1930–ம் ஆண்டு) அடித்தார். 100–வது கோலை இத்தாலி வீரர் எஞ்சலோ ஸ்சியவியோ (1934–ம் ஆண்டு), 1000–மாவது கோலை நெதர்லாந்து வீரர் ராப் ரென்சென்பிரிங் (1978–ம் ஆண்டு), 2000–மாவது கோலை ஸ்வீடன் வீரர் மார்கஸ் அல்பேக் (2006–ம் ஆண்டு) ஆகியோர் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

category:

சிங்கப்பூர் கலவர வழக்கு: இந்தியர்கள் மறுஆய்வு மனு வாபஸ்

Posted: 31 May 2014 01:16 PM PDT

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20–ந்தேதி நடந்த பயங்கர கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன. 54 சிங்கப்பூர்வாசிகள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 25 இந்தியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியர்கள் அருண்கலியமூர்த்தி, ராஜேந்திரன் மோகன், ரவிஅருண் வெங்கடேஷ் மற்றும் ராஜேந்திரன்ரஞ்சன் ஆகியோர் சிங்கப்பூர் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இந்த மனுவை அவர்கள் திடீரென வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து இந்தியர்கள் தரப்பு வக்கீல் ரவி கூறுகையில், 'சிங்கப்பூர் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே, எங்களது மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற்று உள்ளோம்' என்று தெரிவித்தார்.

category:

News Group Category:

கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 31 May 2014 01:07 PM PDT

சென்னை,

தமிழகத்தில் தற்போது, வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இன்னும் தமிழகத்தில் தொடங்கவில்லை.

இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு விவரம் வருமாறு:–

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 5 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. கடந்த சில நாட்கள் பெய்த மழையை ஒப்பிட்டு பார்க்கும் போது, மிகவும் குறைவான இடங்களிலேயே மழை பெய்துள்ளது.

எனினும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

category:

News Group Category:

ஐ.பி.எல். கிரிக்கெட் மகுடம் யாருக்கு? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்–கொல்கத்தா பலப்பரீட்சை

Posted: 31 May 2014 12:58 PM PDT

பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்–கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந் தேதி முதல் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே–ஆப்' சுற்றுக்கு முன்னேறின. ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டன.

முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது தகுதி சுற்று வாய்ப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு முறை சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இன்று இறுதிப்போட்டி

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி ஏற்கனவே ஐ.பி.எல். கோப்பையை 2012–ம் ஆண்டில் கைப்பற்றி இருக்கிறது. 2–வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல அந்த அணி ஆர்வம் காட்டும்.

முதல்முறையாக தகுதி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொறுத்தமட்டில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் அந்த அணி முனைப்புடன் களம் காணும்.

கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா (655 ரன்கள்), யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஷகிப் அல்–ஹசன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சுனில் நரின் (20 விக்கெட்டுகள்), உமேஷ்யாதவ், மோர்னே மோர்கல் போன்ற நல்ல பவுலர்களும் உள்ளனர். சுனில் நரின் (வெஸ்ட் இண்டீஸ்) நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் தனது நாட்டு அணிக்காக பங்கேற்பதை தவிர்த்து விட்டு இறுதிப்போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக் அதிரடி

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் அணியில் ஷேவாக், மேக்ஸ்வெல் (552 ரன்கள்), டேவிட் மில்லர், மனன்வோரா போன்ற அபாரமான பேட்ஸ்மேன்களும், ஜான்சன், சந்தீப் ஷர்மா, அக்ஷர் பட்டேல் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் நல்ல நிலையில் உள்ளனர். ஷேவாக் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் அதிரடியாக 122 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருப்பது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். முதல் கட்ட லீக் ஆட்டங்களில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் கடந்த சில ஆட்டங்களில் சோபிக்காமல் போனது அந்த அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.

ஐ.பி.எல். போட்டி தொடரில் இரு அணிகளும் இதுவரை 14 முறை சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா அணி 8 முறையும், பஞ்சாப் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது. ஆனால் இந்திய மண்ணில் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி, பஞ்சாபை பதம் பார்த்தது.

அணி வீரர்கள்

இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குவதால் இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டத்துக்கு, கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே அணை போட தவறினால் அந்த அணியின் நிலை அம்பேல் ஆகக்கூடும். இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:–

கொல்கத்தா: கம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், டென் டஸ்சாட், சூர்யகுமார் யாதவ், பியுஷ்சாவ்லா, சுனில்நரின், மோர்னே மோர்கல், உமேஷ்யாதவ்.

பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), ஷேவாக், மனன்வோரா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, ஜான்சன், அக்ஷர் பட்டேல், கரன்வீர்சிங், சந்தீப் ஷர்மா, பர்விந்தர் அவனா.

category:

24 ரன்னில் தோற்று சென்னை வெளியேறியது: அனுபவம் வாய்ந்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் காரணம் கேப்டன் டோனி வருத்தம்

Posted: 31 May 2014 12:55 PM PDT

மும்பை

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது. முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஷேவாக்கின் (58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அதிரடி காட்டிய சுரேஷ்ரெய்னா 25 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன்கள் குவித்து சென்னை அணி 6 ஓவர்களில் 100 ரன்னை எட்டி சாதனைக்கு வழிவகுத்தார். ரெய்னா ஆட்டம் இழந்ததும் சென்னை அணியின் வெற்றி நம்பிக்கையும் பறிபோனது. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் வெய்ன் சுமித் 7 ரன்னிலும், பாப் டுபிளிஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், பிரன்டன் மெக்கல்லம் 11 ரன்னிலும், டேவிட் ஹஸ்ஸி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தோல்விக்கு பின்னர் சென்னை அணி கேப்டன் டோனி அளித்த பேட்டியில், 'ரெய்னா ஆடிய விதத்தை பார்க்கையில் நாங்கள் வெற்றி இலக்கை எட்டி இருக்க வேண்டும். மிடில் ஆர்டர் வரிசையில் சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடி விரைவில் ஆட்டம் இழந்ததே தோல்விக்கு காரணமாகும். வெய்ன் பிராவோ காயத்தால் ஆட முடியாமல் போனது எங்கள் அணிக்கு பின்னடைவாகும். ஷேவாக்கின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் அடித்து ஆட ஆரம்பித்து விட்டால் எந்தவொரு பந்து வீச்சாளரும் அவரை தடுத்து நிறுத்துவது கடினம்' என்றார்.

 

category:

இங்கிலாந்துடன் 4–வது ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி

Posted: 31 May 2014 12:53 PM PDT

லண்டன்

இங்கிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் குக், இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சங்கக்கரா 112 ரன்னும் (104 பந்துகளில் 14 பவுண்டரியுடன்), தில்ஷன் 71 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி குர்னே 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் புட்லெர் 121 ரன்கள் (74 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து ரன்–அவுட் ஆனார். இலங்கை அணி தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டும், அஜந்தா மென்டிஸ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2–2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி பர்மிங்காமில் வருகிற 3–ந் தேதி நடக்கிறது.

category:

உலக கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு முதல் கோணல் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது

Posted: 31 May 2014 12:51 PM PDT

ஹாக்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

உலக கோப்பை ஆக்கி

13-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக்கில் நேற்று தொடங்கியது. வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தோல்வி

தொடக்க நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியிடமே பந்து அதிக நேரம் வலம் வந்தது. 4-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பிரி ட் வாய்ப்பு வீணானது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் வான் அபெல் இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. 45-வது நிமிடத்தில் மன்தீப்சிங்கும், 50-வது ஆகாஷ்தீப்சிங்கும் கோல் அடித்தனர். வழக்கம் போல கடைசி கட்டத்தில் இந்திய அணி பலவீனமான ஆட்டம் வெளிப்பட்டது. இதனை பயன்படுத்தி பெல்ஜியம் அணி வீரர் குக்னார்ட் 56-வது நிமிடத்திலும், டுக்மென் 70-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். முடிவில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு முதல் கோணலை சந்தித்தது.

இங்கிலாந்துடன் நாளை மோதல்

முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை (திங்கட்கிழமை) சந்திக்கிறது.

category:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் 4–வது சுற்றுக்கு தகுதி

Posted: 31 May 2014 12:47 PM PDT

பாரிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடால் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 7–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனும், உலக தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–2, 7–5, 6–2 என்ற நேர்செட்டில் லினார்டோ மேயரை (அர்ஜென்டினா) தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6–2, 7–6, 6–3 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் ஆந்த்ரே செபியை தோற்கடித்து 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டுசன் லாஜோவிச் (செர்பியா), மார்செல் கானெலர்ஸ் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி கண்டு 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அனா இவானோவிச் தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு வீராங்கனை லூசி சபரோவா 6–3, 6–3 என்ற நேர்செட்டில் செர்பியா வீராங்கனை அனா இவானோவிச்சை சாய்த்து 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்வெட்லானா குனெட்சோவா (ரஷியா) 6–7, 6–1, 9–7 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு தகுதி கண்டார்.

மற்ற ஆட்டங்களில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஜெலீனா ஜான்கோவிச் (செர்பியா), சிமோன் ஹாலெப் (ருமேனியா), சாரா எர்ரானி (இத்தாலி) ஆகியோர் வெற்றி கண்டு 4–வது சுற்று முன்னேறினார்கள்.

சானியா ஜோடி வெற்றி

கலப்பு இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)–காதரினா செபோட்னிக் (சுலோவக்கியா) ஜோடி 6–3, 3–6, 10–7 என்ற கணக்கில் காரா பிளாக் (ஜிம்பாப்வே)–ராபர்ட் பாராக் (கொலம்பியா) ஜோடியை தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)–காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி 6–2, 6–2 என்ற நேர்செட்டில் காப்ரிலா (கனடா)–அலிஜா (போலந்து) ஜோடியை எளிதில் தோற்கடித்தது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™