Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பஞ்சாப்–கொல்கத்தா இன்று மோதல்

Posted: 26 May 2014 01:59 PM PDT

கொல்கத்தா,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதலாவது தகுதி சுற்று ஆட்டம்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் ஆட்டங்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 'பிளே–ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2–வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பீனிக்ஸ் போல்...

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஆட்டத்தில் விளையாடி 11 வெற்றியும், 3 தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. பஞ்சாப் அணி லீக் ஆட்டத்தில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், ஒரு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது.

கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஆட்டத்தில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 2–வது இடம் பெற்றது. தொடக்க லீக் ஆட்டங்களில் தடுமாறிய கொல்கத்தா அணி ஆரம்ப கட்ட தோல்வியில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்து கடைசி 7 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

பேட்டிங் வரிசை

பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஷேவாக், மனன்வோரா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். முதலில் வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் கடைசி கட்ட ஆட்டங்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சோபிக்கவில்லை. பந்து வீச்சில் ஜான்சன், அக்ஷர் பட்டேல், சந்தீப் ஷர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிக ரன்கள் குவித்த ராபின் உத்தப்பா (613 ரன்கள்), அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஷகிப் அல்–ஹசன் ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுனில் நரின் (20 விக்கெட்டுகள்), மோர்னே மோர்கல் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர்.

விறுவிறுப்பு

இதுவரை இறுதிப்போட்டியை எட்டிப்பார்க்காத பஞ்சாப் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தனது முழு திறமையையும் காட்டும். 2012–ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க எல்லா வகைகளிலும் முயற்சிக்கும் சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபையும், பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவையும் வீழ்த்தி இருந்தன. கொல்கத்தா அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருக்கும் என்பதால் அந்த அணியின் கை ஓங்க வாய்ப்பு இருக்கிறது. இன்றைய போட்டி சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்த தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஜூன் 1–ந் தேதி பெங்களூரில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உண்டு. அந்த அணி வருகிற 30–ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், 28–ந் தேதி நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

அணி வீரர்கள்

இன்றைய ஆட்டத்தில் இரு உத்தேச அணிகள் வருமாறு:–

பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), ஜான்சன், டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், ஷேவாக், ஷான் மார்ஷ், மனன்வோரா, ரிஷி தவான், அக்ஷர் பட்டேல், விரித்திமான் சஹா, சந்தீப் ஷர்மா.

கொல்கத்தா: கம்பீர் (கேப்டன்), சுனில் நரின், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் அல்லது பியுஷ்சாவ்லா, யூசுப் பதான், ஷகிப் அல்–ஹசன், டென் டஸ்சாட், வினய்குமார், உமேஷ்யாதவ், மோர்னே மோர்கல்.

category:

ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் மும்பை நுழைந்தது ஆண்டர்சன் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது மும்பை கேப்டன் ரோகித்ஷர்மா மகிழ்ச்சி

Posted: 26 May 2014 01:49 PM PDT

மும்பை

பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. கோரி ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது என்று கேப்டன் ரோகித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மும்பை அணி வெற்றி

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிசயிக்கதக்க வகையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 74 ரன்னும், கருண்நாயர் 50 ரன்னும் சேர்த்தனர். பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கோரி ஆண்டர்சனின் (44 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 95 ரன்கள்) அதிரடி ஆட்டத்தில் 14.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றது. 14.3 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தால் அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலையில் ஆடிய மும்பை அணி 14.3 ஓவர்களில் 189 ரன்னை எடுத்து சமன் செய்ததால் யாருக்கு வாய்ப்பு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் பிளே-ஆப் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டது. அந்த பந்தில் ஆதித்ய தாரே சிக்சர் அடித்து மும்பை அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்து சென்றார். அப்போது ஸ்டேடியத்தில் எழும்பிய கரகோஷமும், உற்சாகமும் அடங்க நீண்ட நேரம் பிடித்தது. மும்பை, ராஜஸ்தான் அணிகள் தலா 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி (+0.095) பிளே-ஆப் சுற்று வாய்ப்பை எட்டியது. ராஜஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் (+0.060) அடுத்த சுற்று வாய்ப்பை நூலிழையில் இழந்து வெளியேறியது.

ரோகித் ஷர்மா மகிழ்ச்சி

வெற்றிக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கருத்து தெரிவிக்கையில், 'இந்த வெற்றியை என்னால் நம்ப முடிவில்லை. சிறிது நேரம் எனது இதயத் துடிப்பே நின்று விடுவது போல் இருந்தது. முடியாதது என்று எதுவும் கிடையாது. இதுபோன்ற அதிரடியான ஆட்டம் எல்லா நாட்களிலும் அமைந்து விடாது. இது மும்பை மக்களின் வெற்றியாகும். இது ஒரு அருமையான வெற்றியாகும். கோரி ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. எங்களுக்குரிய வெற்றி இலக்கு தெரியும் என்பதால் நெருக்கடி இல்லாமல் விளையாடினோம். சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் இதே மாதிரியான சூழ்நிலையை நாங்கள் சந்தித்து இருந்ததால் நம்பிக்கையுடன் ஆடினோம். எதிர்பார்த்தப்படி எல்லாம் நல்ல படியாக அமைந்தது' என்று கூறினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை அணி வீரர் கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து) கூறுகையில், 'அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது பெருமை அளிக்கிறது. மும்பை ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. சொந்த ஊரில் இருப்பதாகவே நான் உணருகிறேன்' என்று தெரிவித்தார்.

டிராவிட் ஏமாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில், 'ஒரு கட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். எங்கள் பந்து வீச்சை மும்பை வீரர்கள் அடித்து ஆடிய போது எங்களது மனநிலை சொல்ல முடியாத வகையில் இருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் எங்களது பந்து வீச்சு திட்டத்தை சரியாக அமல்படுத்தவில்லை' என்றார்.
 

category:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி

Posted: 26 May 2014 01:45 PM PDT

பாரிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென் னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச், ஷரபோவா ஆகியோர் வெற்றி கண்டனர்.

ஜோகோவிச் வெற்றி

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டங்கள் தாமதமாக ஆரம்பமானது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), போர்ச்சுக்கல் வீரர் ஜோ சோசாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1. 6-2, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நிஷிகோரி தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 10-ம் நிலை வீரர் நிஷிகோரி (ஜப்பான்) 6-7 (4-7), 1-6, 2-6 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீரர் மார்ட்டின் கிசானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 6-2, 7-6, 7-5 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் லூகாஸ் ரசூலிடம் தோல்வி கண்டார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பினொய்ட் பெய்ர் 6-3, 6-4, 7-6 என்ற நேர்செட்டில் கொலம்பியா வீரர் அலெஜான்ட்ரா பாலாவை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் ராபின் ஹாஸ் (நெதர்லாந்து), மரின் சிலிச் (குரோஷியா), டாமி ராபர்டோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி கண்டனர்.

ஷரபோவா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 8-ம் நிலை வீரர் மரியா ஷரபோவா (ரஷியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை செனியா பெர்வாக்கை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுலோவக்கியா வீராங்கனை டோமினிகா சிபுல்கோவா 7-5, 6-0 என்ற நேர்செட்டில் விர்ஜினி ரசனோவை (பிரான்ஸ்) தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் தமிரா பாசெக் (ஆஸ்திரியா), டிமெ பாசின்ஸ்கை (சுவிட்சர்லாந்து), மோனா பார்தெல் (ஜெர்மனி), இவ்ஜினி பவுச்சார்ட் (கனடா), ஷபின் லிஸ்கி (ஜெர்மனி), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), யாரோஸ்லாவா (கஜகஸ்தான்), ஜிலெச் சிமோன் (பிரான்ஸ்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

category:

நரேந்திர மோடி பதவி ஏற்ற காட்சி

Posted: 26 May 2014 01:44 PM PDT

நாட்டின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற காட்சி. அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

1

ஐ.பி.எல். கிரிக்கெட் கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்

Posted: 26 May 2014 01:41 PM PDT

மும்பை

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கெவோன் கூப்பர் (வெஸ்ட் இண்டீஸ்) வீசிய பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருந்ததாக ஆடுகள நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கெவோன் கூப்பர் பந்து வீச்சு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பந்து வீச்சு கமிட்டி ஆய்வு செய்யும் என்று தெரிகிறது.
 

category:

தடகள பயிற்சி முகாம் நிறைவு

Posted: 26 May 2014 01:33 PM PDT

சென்னை

இந்தியா ஸ்போர்ட்ஸ் புரமோஷன் அகாடமி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 13-வது கோடைக்கால தடகள பயிற்சி முகாம் சென்னை நேரு பார்க்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திடலில் ஒரு மாதம் நடந்தது. இதில் 10 முதல் 22 வயதுக்கு உட்பட்ட வீரர்-வீராங்கனைகள் 140 பேர் கலந்து கொண்டனர். முன்னாள் சர்வதேச தடகள வீரர்கள் ஆர்.நடராஜன், அண்ணாவி, நிஜாமுதீன், உடற்கல்வி இயக்குனர் தேசிங்குராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

சுவிஸ் பால், யோகா உள்பட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த முகாமில் சிறந்த வீரர்-வீராங்கனைகளாக அன்ட்ரா, செந்தில் ரத்னம், அரிபா, சிரஞ்சீவி, யாஸ்வினி, அரவிந்த் பிரகாஷ், அக்ஷயா, அதிபன், கீர்த்தனா, ரிச்சர்டு சார்லஸ், பூரணி, சங்கமித்திரன், ஷில்பா, சேசவர்பு கிரண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவு விழாவில் இந்திய கைப்பந்து அணியின் பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) கே.வைத்யநாதன், இந்திய ஸ்போர்ட்ஸ் புரமோஷன் அகாடமி இயக்குனர்கள் லட்சுமணன், செந்தில், ஆர்.நடராஜன், யோகா பயிற்சியாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

category:

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஸ்டிரிக் நியமனம்

Posted: 26 May 2014 01:29 PM PDT

டாக்கா

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜிம்பாப்வே டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்டிரிக் நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான ஸ்டிரிக் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஸ்டிரிக் 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 5 ஆண்டு காலம் பதவி வகித்து இருக்கும் ஸ்டிரிக், வங்காளதேச அணியினருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

category:

உலக கோப்பை ஆக்கி இந்திய அணியில் உபாத்யாய் சேர்ப்பு

Posted: 26 May 2014 01:26 PM PDT

புதுடெல்லி

உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹகுவில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் அர்ஜென்டினாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் ரமன்தீப்சிங்குக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் ரமன்தீப்சிங்குக்கு பதிலாக லலித் உபாத்யாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உபாத்யாய் உடனடியாக நெதர்லாந்து சென்றுள்ளார்.

category:

8 நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் வண்ணமிகு விழா 23 கேபினட் மந்திரிகள், 22 ராஜாங்க மந்திரிகளுடன் பிரதமராக மோடி பதவி ஏற்றார்

Posted: 26 May 2014 12:53 PM PDT

ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்றார். அவருடன் 23 கேபினட் மந்திரிகளும், 22 ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

புதுடெல்லி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது.

பதவி ஏற்பு விழா

பாரதீய ஜனதாவின் இந்த வரலாற்று வெற்றிக்கு கட்சியை வழிநடத்திய 63 வயதான நரேந்திர மோடி, முறைப்படி பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சி தலைவராக (பிரதமராக) கடந்த 20-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கூட்டணி தலைவர்கள் அத்வானி தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, நரேந்திர மோடியை அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 26-ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு முதல் முறையாக 'சார்க்' என்னும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஏறத்தாழ 3 ஆயிரம் பிரபலங் கள் விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார்கள்.

பதவி ஏற்றார் மோடி

நரேந்திர மோடி தலைமையில் 46 மந்திரிகளைக்கொண்ட மந்திரிசபையின் பதவி ஏற்பு விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் நேற்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மோடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

45 மந்திரிகள் பதவி ஏற்றனர்

நரேந்திர மோடியைத் தொடர்ந்து 23 கேபினட் மந்திரிகளும், 10 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளும், 12 ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனும் (தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி), பொன் ராதாகிருஷ்ணனும் (ராஜாங்க மந்திரி) அடங்குவார்கள்.

நேற்று பதவி ஏற்ற மந்திரிகள் யார்-யார் என்ற விவரம் வருமாறு:-

1) பிரதமர் நரேந்திர மோடி

கேபினட் மந்திரிகள்

2) ராஜ்நாத் சிங்

3) சுஷ்மா ஸ்வராஜ்

4) அருண்ஜெட்லி

5) வெங்கையா நாயுடு

6) நிதின் கட்காரி

7) சதானந்த கவுடா

8) உமாபாரதி

9) நஜ்மா ஹெப்துல்லா

10) கோபிநாத் முண்டே

11) ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி)

12) கல்ராஜ் மிஸ்ரா

13) மேனகா காந்தி

14) அனந்த குமார்

15) ரவிசங்கர் பிரசாத்

16) அசோக் கஜபதி ராஜு (தெலுங்குதேசம்)

17) ஆனந்த் கீதே (சிவசேனா)

18) ஹர்சிம்ரத் கவுர்(அகாலிதளம்)

19) நரேந்திர தோமர்

20) ஜுவல் ஓராம்

21) ராதா மோகன்சிங்

22) தவார் சந்த் கெலாட்

23) ஸ்மிருதி இரானி

24) ஹர்சவர்தன்

ராஜாங்க மந்திரிகள் (தனி பொறுப்பு)

1) வி.கே.சிங்

2) ராவ் இந்தர்ஜித்சிங்

3) சந்தோஷ் கங்வார்

4) ஸ்ரீபாத் நாயக்

5) தர்மேந்திரபிரதான்

6) சோனாவால்

7) பிரகாஷ் ஜவடேகர்

8) பியூஸ் கோயல்

9) ஜிதேந்திரசிங்

10) நிர்மலா சீதாராமன்

ராஜாங்க மந்திரிகள்

1) சித்தேஸ்வரா

2) மனோஜ் சின்கா

3) நிகல் சந்த்

4) உபேந்திர குஷ்வாகா (ராஷ்டிரீய லோக் சமதா கட்சி)

5) பொன்.ராதாகிருஷ்ணன்

6) கிரண் ரிஜ்ஜு

7) கிரிஷன் பால் குஜ்ஜார்

8) சஞ்சீவ் பலியான்

9) மன்சுக் வசாவா

10) ராவ் சாகிப் தான்வே

11) விஷ்ணு தேவ் சாய்

12) சுதர்சன் பகத்

பதவி ஏற்பு விழா முடிந்ததும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

'சார்க்' தலைவர்கள் வாழ்த்து

அதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பாராளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மற்றும் மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் ஆகியோர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சார்க் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பங்கேற்ற பிரபலங்கள்

விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பதவி விலகிய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ் (உத்தரபிரதேசம்) உமர் அப்துல்லா (ஜம்மு- காஷ்மீர்), ஜித்தன் ராம் மஞ்சி (பீகார்), தருண் கோகாய் (அசாம்), பூபிந்தர் சிங் ஹூடா (அரியானா), தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, குமார மங்கலம் பிர்லா, திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், புதிய எம்.பி.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழா மாலை 7.30 மணிக்கு முடிந்ததும் விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்பு விழாவுக்கு, தலைநகரில் நேற்று குடியரசு தின விழாவுக்கு வழங்குகிற உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் உள்நாட்டில் டீசல் கார் விற்பனை 14 சதவீதம் சரிவு

Posted: 26 May 2014 12:40 PM PDT

சன்சால் பால் சவுஹான் & ராஜீவ் ஜெயஸ்வால்

புதுடெல்லி

கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் டீசல் கார் விற்பனை 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், பெட்ரோல் கார்களை வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசம் குறைந்து வருவது இதற்கு முக்கிய காரணமாகும்.

விலை வித்தியாசம்

டீசல் விற்பனையில் வருவாய் இழப்பு ஏற்படாத நிலை உருவாகும் வரை அதன் விலையை 2013 ஜனவரி மாதத்திலிருந்து மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசு உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் ரூ.15–ஆக குறைந்துள்ளது. இது, 2013 ஜனவரியில் ரூ.20–ஆக இருந்தது. புதுடெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.40–க்கும், டீசல் ரூ.56.70–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு எரிபொருள்களுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் அடுத்த சில மாதங்களில் ரூ.10–ஆக குறையும் என வாகனத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் கார்

இந்நிலையில், பெட்ரோல் கார் விலையைக் காட்டிலும் டீசல் கார் விலை ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நகரங்களில் வசிக்கும் மக்களிடம் டீசல் கார் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. புதிய கார்கள் விற்பனையில் நகரங்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

டீசல் கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால் கடந்த நிதி ஆண்டில் டீசல் விற்பனை 1 சதவீதம் குறைந்துள்ளது. 2001–02–ஆம் நிதி ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் டீசல் விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த எரிபொருள் விற்பனையில் டீசலின் பங்கு 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு குறையும். இந்நிறுவனங்கள் டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்கின்றன. இது, அடக்க விலைக்கும் குறைவாக இருப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சீர்திருத்த நடவடிக்கைகள்

புதிய அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கடந்த ஒன்பது மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறையும்.

இதுபோன்ற காரணங்களால் நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு ரூ.1.10 லட்சம் கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2013–14–ஆம் நிதி ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் இழப்பு குறைவதால் மத்திய அரசின் மானியச்சுமை குறைந்து நிதிப்பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும். கடந்த 2010 ஜூன் மாதத்தில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

வருவாய் இழப்பு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் பெட்ரோலை போன்று டீசல் விலையையும் நிர்ணிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பது சில பொருளியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சந்தை விலைக்கு நிகராக டீசல் விலையை கொண்டு வருவதற்காக அதன் விலையை லிட்டருக்கு ஒரே நேரத்தில் ரூ.3 முதல் 4 வரை உயர்த்த வேண்டும் என்ற மத்திய அமைச்சரவையின் தீர்மானம் நிலுவையில் உள்ளது. இதனை நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு ஏற்றுக் கொண்டால் டீசல் கார் விற்பனை மேலும் சரிவடையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பெட்ரோல் கார் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் கார் விற்பனையில் பெட்ரோல் கார் பங்கு 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் கார் விற்பனை உயர்ந்து வருவதற்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் முக்கிய காரணம் என ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
 

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™