Daily Thanthi |
- துளிகள்
- டெல்லியில் நடைபெறும் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் நாளை வருகை 27-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
- மோடி ஆட்சியில் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு மத்திய அரசின் கடன்பத்திரங்களில் நிதி நிறுவன முதலீடு அதிகரித்தது
- வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி சாதனங்கள் மீது பொருள் குவிப்பு வரி விதிப்பு
- மொத்த விலையை காட்டிலும், காய்கறி சில்லறை விலை 49 சதவீதம் அதிகம் அசோசெம் ஆய்வில் தகவல்
- ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் தங்கம் இறக்குமதி 15 டன் அதிகரிக்கும்
- பங்குகளின் சந்தை மதிப்பில் இந்தியா பத்தாவது இடம்
- நிறுவனச் செய்திகள்
- இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 109 கோடி டாலர் உயர்வு
- 2015–16–ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் 6.5 சதவீத வளர்ச்சி ஏற்படும்
| Posted: 24 May 2014 01:07 PM PDT ஐ.சி.சி. விசாரணைக்கு ஆஜராகிறார், கிறிஸ் கெய்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் அளித்த வாக்குமூலத்தில் '2008–ம் ஆண்டில் முன்னாள் வீரர் ஒருவர் தன்னை இரண்டு முறை சூதாட்டம் தொடர்பாக அணுகினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன்' என்று தெரிவித்து இருந்தார். அந்த முன்னாள் வீரர் நியூசிலாந்து முன்னாள் ஆல்–ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ்சாக இருக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை அவர் மறுத்தார். இந்த நிலையில் ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் அளித்த ஒரு பேட்டியில், 'சூதாட்ட விசாரணையின் இறுதி கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். தனது தரப்பு விளக்கத்தை சொல்ல கிறிஸ் கெய்ன்ஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் சட்ட அமலாக்க ஏஜென்சிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் சிறிது காலம் பிடிக்கக்கூடும்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐ.சி.சி.யின் விசாரணைக்கு ஆஜராக கிறிஸ் கெய்ன்ஸ் லண்டன் புறப்பட்டு சென்று இருப்பதாகவும், அங்குள்ள போலீஸ் விசாரணைக்கும் அவர் ஒத்துழைப்பு அளிப்பார் என்று தெரிகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டி பாதுகாப்புக்கு ரூ.5 ஆயிரம் கோடி 32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் உள்ள 12 நகரங்களில் ஜூன் 12–ந் தேதி முதல் ஜூலை 13–ந் தேதி வரை நடக்கிறது. டெலிவிஷன் ஒளிபரப்பு மூலம் கோடிக்கணக்கானவர்கள் ரசிக்க இருக்கும் இந்த போட்டியை காண சுமார் 6 லட்சம் ரசிகர்கள் பிரேசில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில் இதுபோன்ற உலக கோப்பை போட்டி தேவையா? என்று எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போட்டியின் போது ஆர்ப்பாட்டம் அதிகரித்தால் எந்த மாதிரி எதிர்கொள்வது என்பது குறித்து பிரேசில் அரசு முடிவு செய்து அதற்கான பணிகளுக்கு தயாராகி வருகிறது. மிக முக்கியமான இந்த போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசாரும், 57 ஆயிரம் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மாநில தடகளம்: செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி 10–வது முறையாக சாம்பியன் 77–வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து முன்னணி வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி 112 புள்ளிகளுடன் முதலிடமும், தெற்கு ரெயில்வே அணி 43 புள்ளிகளுடன் 2–வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி 136 புள்ளிகளுடன் முதலிடமும், தெற்கு ரெயில்வே 58 புள்ளிகளுடன் 2–வது இடமும் பெற்றன. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 10–வது முறையாக சென்னை பிராட்வேயில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி (248 புள்ளிகள்) கைப்பற்றியது. தெற்கு ரெயில்வே 101 புள்ளிகளுடன் 2–வது இடம் பெற்றது. சென்னையில் பேட்மிண்டன் லீக் போட்டி 3–வது தமிழ்நாடு பேட்மிண்டன் லீக் போட்டி சென்னையில் வருகிற 28–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஜாவர் கமாஷர்ஸ், சென்னை சிங்கம், ஸ்கில் ஏஞ்சல்ஸ், ஈரோடு ஈகிள்ஸ் ஆகிய 4 அணிகள் கலந்து கொள்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறுவர்களுக்கான போட்டி 27–ந் தேதியும் நடக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு பேட்மிண்டன் லீக் நிறுவனர் ஆதித்யா இளங்கோ தெரிவித்துள்ளார். image: category:Tagging: |
| Posted: 24 May 2014 12:55 PM PDT நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் நாளை (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். புதுடெல்லி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. 'சார்க்' தலைவர்களுக்கு அழைப்பு இந்த விழாவுக்கு இதுவரை இல்லாத வகையில் 'சார்க்' என்னும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தவிர்த்து பிற 'சார்க்' தலைவர்கள் ஏற்கனவே உறுதி செய்து விட்டனர். வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மட்டும் தான் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டபடி ஜப்பான் செல்வதால், தனது சார்பில் பாராளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரியை அனுப்பிவைக்கிறார். நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வாரா என்பதில் இழுபறி நிலைமை இருந்து வந்தது. ராணுவம் சமாதானம் இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ள பச்சைக்கொடி காட்டியது. நவாஸ் ஷெரீப்பின் இந்தியப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பை நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் சந்தித்துப்பேசி, நவாஸ் ஷெரீப்பின் இந்தியப்பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, சமாதானப்படுத்தி விட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த நிலையில், நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவாஸ் ஷெரீப் டெல்லிக்கு நாளை தனி விமானத்தில் வந்து சேருகிறார். அவருடன் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறைக் கான அவரது ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், தனி உதவியாளர் தாரிக் பதேமி, வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் சவுத்ரி உள்ளிட்டவர்கள் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகின்றனர். நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் நாளை நவாஸ் ஷெரீப் பங்கேற்றுவிட்டு இரவு டெல்லியில் தங்குகிறார். நாளை மறுதினம் (27-ந் தேதி) அவர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார். பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அவர் இஸ்லாமா பாத் புறப்பட்டுச்செல்வார். சாதகமான வாய்ப்பு இருப்பினும் கடந்த ஆண்டு நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது நவாஸ் ஷெரீப்பை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கை தங்கள் நாட்டுக்கு வருமாறு பாகிஸ்தான் தலைவர்கள் பல முறை அழைப்பு விடுத்தபோதும் அவர் செல்லாமல் இருந்து விட்டார். இந்த நிலையில் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் வந்து கலந்துகொள்வது இரு தரப்பு உறவு வலுப்படுவதற்கு ஒரு சாதகமான வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறை சுதந்திரத்துக்கு பின்னர் 3 முறை இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று, இரு நாடுகளும் அணு ஆயுத போட்டி நாடுகளாகி உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். மோடி பதவி ஏற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பது குறித்து அவரது மகள் மரியம் 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்தியாவுடன் நல்லுறவைப் பராமரிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இது, உளவியல் ரீதியிலான தடைகள், அச்சம், சந்தேகங்களை போக்குவதற்கு உதவும்" என கூறி உள்ளார். நவாஸ் ஷெரீப்பின் உணர்வுகளையே அவரது மகள் பிரதிபலித்திருப்பதாக கருதப்படுகிறது. பூடான் பிரதமர்,வங்காள தேச சபாநாயகர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், வங்காளதேச பாராளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகிய இருவரும் இன்று டெல்லி வந்து சேருகிறார்கள். உலகத் தலைவர்கள், நாட்டின் பிரபலங்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் குடியரசு தினவிழாவை போன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் வருகை உறுதி செய்யப்பட்டிருப்பதால் அந்த பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 24 May 2014 12:28 PM PDT மும்பை நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசின் கடன்பத்திரங்களில் நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்தது. காப்பீட்டு நிறுவனங்கள் இம்மாதம் 21–ந் தேதி முன்னணி காப்பீட்டு நிறுவனங்களும் வருங்கால வைப்புநிதி அமைப்பும் ரூ.10,000 கோடிக்கு மத்திய அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. கடந்த நான்கு தினங்களில் நாள் ஒன்றிற்கு சராசரியாக ரூ.37,000 கோடிக்கு கடன்பத்திரங்கள் மீது வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முந்தைய தினங்களுடன் (ரூ.23,000 கோடி) ஒப்பிடும்போது இது 61 சதவீதம் அதிகமாகும். இம்மாதம் 23–ந் தேதி அன்று 10 ஆண்டுகளில் முதிர்வு காலத்தை கொண்ட மத்திய அரசு கடன்பத்திரங்கள் மீதான லாப ஈட்டு விகிதம் நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.63 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடன்பத்திரங்கள் விலை உயர்ந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. சீர்திருத்த நடவடிக்கைகள் மத்தியில் புதிதாக பொறுப்பு ஏற்கும் பாரதீய ஜனதா அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளும் என சந்தை வட்டாரங்கள் எதிர்பார்ப்பதாக சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் தலைவர் (குறித்த கால முதலீட்டு திட்டம்) திவிஜேந்திரா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் கைப்பற்றியது. இதனையடுத்து, புதிய பிரதமராக நரேந்திர மோடி இம்மாதம் 26–ந் தேதி பதவி ஏற்கிறார். அவரது அரசு மொத்தச் செலவினத்திற்கும், மொத்த வருவாய்க்கும் இடையில் உள்ள வித்தியாசமான நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிப்பற்றாக்குறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக வைத்து இருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதில், நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.90 சதவீதமாக குறைக்கும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக உர, உணவு மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றிற்கான மானியத்தை மத்திய அரசு குறைக்கும் என கூறப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு கடன்பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுகின்றன. இடைக்கால பட்ஜெட்டில் இந்த வகையில் ரூ.5.97 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதால் மத்திய அரசு கடன்பத்திரங்கள் வாயிலாக திரட்டும் கடன் ரூ.25,000 கோடி குறையும் என முன்னணி பரஸ்பர நிதி நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி தெரிவித்தார். எனவே, மத்திய அரசு கடன்பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கும். இதன் காரணமாக கடன்பத்திரங்களில் முதலீடு அதிகரித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளதால் சீர்திருத்த நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும். நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டின் இறுதிக்குள் பொருளாதாரத்தில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், காலாண்டிற்கான பணவீக்கத்தை 6 சதவீதமாக குறைக்க முடியும் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பை அதிகரித்தல், தொழிற்சாலைகளை நிறுவ நிலங்களை கையகப்படுத்தும் சட்டங்களில் சீர்திருத்தம், விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடுதல் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கு எட்டப்படுமானால் 2030–ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை சுமார் 10 லட்சம் கோடி டாலராக உயர்த்த முடியும். அப்போது பொருளாதார வலிமையில் ஜப்பானையும் விஞ்சி நம் நாடு மூன்றாவது இடத்தை பிடிக்கும். தற்போது இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2 லட்சம் கோடி டாலராக உள்ளது. image: category:Tagging: |
| Posted: 24 May 2014 12:22 PM PDT ஸ்ரேயா ஜெய் புதுடெல்லி அமெரிக்கா, சீனா, மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி சாதனங்கள் மீது பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் சில வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாடுகளில் நிலவும் சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைந்த மதிப்பில் பொருள்களை ஏற்றுமதி செய்யும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனை காக்கும் பொருட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் பொருள் குவிப்பு வரியை விதித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, தைவான் மற்றும் மலேசியா ஆகிய நாட்டு நிறுவனங்கள் சந்தை விலையைக் காட்டிலும் குறைந்த விலையில் சூரிய மின் சக்தி சாதனங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதாக பொருள் குவிப்பு தடுப்பு தலைமை இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த 2012–ஆம் ஆண்டில் உள்நாட்டு சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் இது குறித்து பொருள் குவிப்பு தடுப்பு இயக்குனரகத்திடம் முறையிட்டன. சீனா – மலேசியா இதனையடுத்து தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி பொருள்களுக்கு 'ஒரு வாட்'க்கு 0.48 டாலர் வரையிலும், சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி பொருள்களுக்கு 'ஒரு வாட்'க்கு முறையே 0.81 டாலர் மற்றும் 0.62 டாலரும், தைவான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 0.59 டாலரும் விதிக்கப்படுகின்றன. இந்திய சூரியமின் பொருள்கள் சந்தையில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதால் பல உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. மேலும் பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. இந்தியாவில் உள்ள சூரிய மின் சக்தி திட்டங்களில் 70 சதவீதம் இறக்குமதியை சார்ந்து செயல்பட கூடியவையாகும். இதில் பெரும்பான்மையான அளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. category:Tagging: |
| மொத்த விலையை காட்டிலும், காய்கறி சில்லறை விலை 49 சதவீதம் அதிகம் அசோசெம் ஆய்வில் தகவல் Posted: 24 May 2014 12:18 PM PDT புதுடெல்லி கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்பட அத்தியாவசிய காய்கறிகளின் சில்லறை விலை மொத்த விலையைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகமாக உள்ளதாக அசோசெம் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு வாயிலாக தெரிய வந்துள்ளது. கொள்முதல் இது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விலையைக் காட்டிலும் பொதுமக்களுக்கு மிகவும் அதிக விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக மொத்த விலையைக் காட்டிலும் சில்லறை விலை சராசரியாக 30 சதவீதம்தான் அதிகமாக இருக்கும் என்றும், இந்த இடைவெளி தற்போது மிகவும் உயர்ந்துள்ளது என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது. இந்த இடைவெளி அதிகமாக இருப்பதால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளின் லாப வரம்பு மிகவும் குறைவாக உள்ள நிலையில், பொதுமக்கள் காய்கறிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இடைத்தரகர்களும், வர்த்தகர்களும் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் செயல்படுவதே இதற்கு காரணம் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. 33 முக்கிய சந்தைகள் சென்னை, புதுடெல்லி, கவுஹாத்தி, ஜம்மு, திருவனந்தபுரம், சண்டிகார், புவனேஸ்வர், அபோஹர் உள்பட 33 முக்கிய சந்தைகளில் அசோசெம் இந்த ஆய்வை நடத்தியது. இதில் 18 மையங்களில் அனைத்திந்திய சராசரி சில்லறை மற்றும் மொத்த விலையைக் காட்டிலும் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அசோசெம் ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது. பாகற்காய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,பூண்டு, வெங்காயம், பட்டாணி வகைகள், உருளைக்கிழங்கு போன்ற முக்கிய காய்கறிகள் மேற்கண்ட ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 5.20 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் 8.59 சதவீதமாகவும் உள்ளது. image: category:Tagging: |
| ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் தங்கம் இறக்குமதி 15 டன் அதிகரிக்கும் Posted: 24 May 2014 12:15 PM PDT சுதானுகா கோசல் கொல்கத்தா இறக்குமதி மீதுள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளதால் தங்கம் இறக்குமதி மாதம் ஒன்றிற்கு 15 டன் வரை அதிகரிக்கும் என தங்கம், வெள்ளி வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாடுகள் மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. உள்நாட்டில் நவரத்தினம் மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதுமான அளவில் தங்கம் கிடைக்காததால் ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்து இத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் கூடுதலாக ஐந்து வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது. மேலும், அண்மையில் சில வர்த்தக அமைப்புகளுக்கும் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2013 ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் இறக்குமதி செலவினம் குறையும். இதுபோன்ற காரணங்களால் தங்கம் இறக்குமதி அதிகரித்து அதன் பயன்பாடு உயரும். கடந்த 2013–ஆம் ஆண்டில் நம் நாட்டில் தங்கம் தேவைப்பாடு 974.80 டன்னாக இருந்தது. இது, இவ்வாண்டில் சுமார் 1,000 டன்னாக உயரும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வைர ஆபரணங்கள் தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வைர ஆபரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பயன் பெறும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரத் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.நவாதியா இது குறித்து கூறுகையில், ''கடந்த 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 68–ஆக வீழ்ச்சி அடைந்தது. அப்போது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. தற்போது ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட நிறுவனங்கள் பயன் பெறும். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நம் நாட்டின் வைர நகைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது. எனவே, நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் நல்ல அளவில் வர்த்தக வாய்ப்பு உருவாகும்'' என்று தெரிவித்தார். 35 லட்சம் பேர் தங்கம் வர்த்தகத்தில் சுமார் 35 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆபரண தயாரிப்பு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இவர்கள் வேலை இழக்கும் அபாயம் நீங்கி விட்டது என வர்த்தக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். image: category:Tagging: |
| பங்குகளின் சந்தை மதிப்பில் இந்தியா பத்தாவது இடம் Posted: 24 May 2014 12:13 PM PDT ராஜேஷ் என் நாயுடு மும்பை சர்வதேச அளவில் நிறுவனப் பங்குகள் சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பெரும் எழுச்சி மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையால் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வந்தன. இதனால் நிறுவனங்களின் சந்தை மதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், உச்சகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியான தேதியை ஒட்டிய நாட்களில் பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. மே 20–ந் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை களில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் நாடுகளின் சந்தை மதிப்பை காட்டிலும் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் மொத்த மதிப்பு தற்போது 1.42 லட்சம் கோடி டாலராக உள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் தென் கொரிய பங்குச் சந்தைகளின் மதிப்பு முறையே 1.40 லட்சம் கோடி டாலர், 1.1 லட்சம் கோடி டாலர் மற்றும் 1.25 லட்சம் கோடி டாலராக உள்ளது. சீனா (3.14 லட்சம் கோடி டாலர்) மற்றும் ஹாங்காங் (3.40 லட்சம் கோடி டாலர்) ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை மதிப்பு இந்தியாவை காட்டிலும் அதிகமாக உள்ளது. அமெரிக்கா முதலிடம் சர்வதேச அளவில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டு பங்குகளின் சந்தை மதிப்பு 22.31 லட்சம் கோடி டாலராக உள்ளது. கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை மதிப்பும் அதிகமாக உள்ளது. உலக அளவில் அண்மையில் ஏற்பட்ட பங்குச் சந்தைகளின் ஏற்றத்தில் இந்தியாவின் பங்கு சுமார் 50 சதவீதமாக உள்ளது. 57,200 கோடி டாலர் அளவிற்கு சர்வதேச பங்குச் சந்தைகளில் சந்தை மதிப்பு உயர்ந்தது. இதில் 28,200 கோடி டாலர் அளவிற்கு இந்திய நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு அதிகரித்தது. சர்வதேச அளவில் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் இந்தியாவின் பங்கு 2.2 சதவீதமாக உள்ளது. இது, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 1.8 சதவீதமாக இருந்தது. சென்செக்ஸ் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதில் அன்னிய நிதி நிறுவனங்களும், உள்நாட்டு நிதி நிறுவனங்களும் ஆர்வமாக உள்ளன. எனவே, நடப்பு ஆண்டு இறுதிக்குள் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 27 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. image: category:Tagging: |
| Posted: 24 May 2014 12:08 PM PDT யூகோ பேங்க் லாபம் 5 மடங்கு உயர்வு மும்பை யூகோ பேங்க் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.285 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.50 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 5.7 மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு 2.75 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த வாராக்கடன் 5.42 சதவீதத்திலிருந்து 4.32 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிகர லாபம் 4 சதவீதம் உயர்வு இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.42 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.40 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. நிகர வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.526 கோடியிலிருந்து ரூ.642 கோடியாக உயர்ந்துள்ளது. என்.ஐ.ஐ.டி: லாபம் ரூ.14 கோடி என்.ஐ.ஐ.டி. நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.14 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2.70 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. நிகர வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.222 கோடியிலிருந்து ரூ.233 கோடியாக அதிகரித்துள்ளது. வீல்ஸ் இந்தியா: லாபம் 64% உயர்வு டி.வி.எஸ். குழுமத்தின் ஓர் அங்கமான வீல்ஸ் இந்தியா, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.9 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.5 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 64 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.467 கோடியிலிருந்து ரூ.485 கோடியாக அதிகரித்துள்ளது. image: category:Tagging: |
| இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 109 கோடி டாலர் உயர்வு Posted: 24 May 2014 12:00 PM PDT மும்பை இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மே 16–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 109 கோடி டாலர் அதிகரித்து 31,492 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, மே 9–ந் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் 197 கோடி டாலர் அதிகரித்து 31,383 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து நான்கு வாரங்களாக அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம்பெறுகின்றன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே, டாலரில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் இதர செலாவணிகளின் மதிப்பு 127 கோடி டாலர் உயர்ந்து 28,782 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வித மாற்றமும் இன்றி 2,096 கோடி டாலராக உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 1.45 கோடி டாலர் குறைந்து 446 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி 15.81 கோடி டாலர் குறைந்து 168 கோடி டாலராக குறைந்துள்ளது. image: category:Tagging: |
| 2015–16–ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் 6.5 சதவீத வளர்ச்சி ஏற்படும் Posted: 24 May 2014 11:57 AM PDT புதுடெல்லி 2015–16–ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் 6.5 சதவீத வளர்ச்சி ஏற்படும் என சர்வதேச நிதி சேவை நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்கும் பாரதீய ஜனதா அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி திறன் அதிகரிக்கும். மேலும் பல்வேறு காரணங்களால் சுணங்கி கிடக்கும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அவை மேலும் உதவும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் வளர்ச்சி 4.6 சதவீதம் என்ற அளவிலே இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 5.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற மதிப்பீடுகளால் அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே ஆண்டில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கும் என இந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |