Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்

Posted: 18 May 2014 09:06 AM PDT

கராச்சி,

ஆன்லைன் மூலமாக சிறந்த முறையில் சிகிச்சையளிக்கும் முறையை பிரபலப்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் டாக்டர்கள் கைகோர்த்துள்ளனர்.

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவில் சிகிச்சை பெற வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தியாவில் நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

அந்தவகையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருகை தருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் அதிநவீன கருவிகள், மருந்துகள் மற்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் இருப்பதே அதற்கு காரணமாகும்.

இதுபோன்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அவர்கள் இந்தியாவிற்கு வர பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் 'பீஸ் கிளினிக்' என்று அழைக்கப்படும் ஜியாவுதின் பல்கலைக்கழக மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தொழிலதிபரான நாவித் அஸ்லாம் துவங்கினார். 10 ஆண்டுகளுக்கு முன் அவர் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த நடைமுறை சிக்கல்களை வேறு எந்த நோயாளியும் சந்திக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த ஆன்லைன் சிகிச்சை ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். இவரது ஐடியாவை கேட்டு ஆச்சர்யமடைந்த இந்திய மருத்துவர்கள் 'பீஸ் கிளினிக்' துவங்குவதற்கான அனைத்து உதவியையும் அவருக்கு செய்தனர்.

இங்கு மற்ற மருத்துவமனைகள் போல் அல்லாமல் இண்டர்நெட் மூலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அலர்ஜி முதல் கல்லீரல் பிரச்சனை வரை அனைத்து ஆபத்தான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். நோயாளிகள் இந்தியாவிலுள்ள மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் முகம் பார்த்து பேச முடியும்.

இதற்காக, ஒவ்வொரு நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும் வெப் கேமிராவுடன் இணைக்கப்பட்ட டிராலி மற்றும் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலுள்ள டாக்டர்கள் தினமும் நோயாளிகளுடன் உரையாடலாம், அவர்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்.

நோயாளிகள் ஹை டெபனீஷன் வெப் கேமிரா முன் அமர்ந்து ஆன்லைன் வழியாக இங்குள்ள டாக்டர்களிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மருத்துவ நிபுணர்களும் இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்ட நோயாளிகளின் மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் ரிப்போர்ட்-களின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.

தற்போது, பாகிஸ்தானிலுள்ள ஜியாவுதின் மருத்துவமனை இந்தியாவின் மேதந்தா, அப்பல்லோ மற்றும் பார்டிஸ் போன்ற உயர் சிகிச்சை மருத்துவமனைகளுடன்  இணைக்கப்பட்டுள்ளது.

category:

News Group Category:

வியட்நாம் கலவரம் எதிரொலி 3 ஆயிரம் சீனர்கள் வெளியேற்றம்

Posted: 18 May 2014 08:37 AM PDT

பீஜிங்,

வியட்நாமில் பரவி வரும் கலவரத்தையடுத்து 3 ஆயிரம் சீனர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சீனாவால் கொந்தளிப்பு

தெற்கு சீனக்கடல் பகுதி, பிரச்சினைக்குரிய பகுதியாக உள்ளது. இதை சீனா முழுமையாக உரிமை கொண்டாடுகிறது. ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, புருனே ஆகிய ஆசிய நாடுகள் தங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று உரிமை கோரி வருகின்றன.

இந்த நிலையில், தெற்கு சீனக்கடலில், தனக்கு சொந்தமானது என வியட்நாம் உரிமை கொண்டாடி வருகிற ஒரு பகுதியில் சீனா 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) மதிப்பிலான எண்ணெய் தோண்டும் எந்திரத்தை கடந்த 1–ந் தேதி நிறுவியது. இது வியட்நாமில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கலவரம் மூண்டது

சீனாவுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இடையே 1979–ம் ஆண்டு நடந்த எல்லைப்போருக்கு பின்னர் இப்போது மிக மோசமான அளவில் கலவரம் பரவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 13–ந் தேதி ஹோசிமின் நகரில் தொழிற்பூங்கா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 2 சீனர்கள் கொல்லப்பட்டனர். 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தொடர் கலவரங்கள், சீனர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

இதை உணர்ந்த சீனா அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. வியட்நாமில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்களை வெளியேற்ற முடிவு செய்தது. சீனர்களை வெளியேற்றி பத்திரமாக அழைத்து வருவதற்காக சீனா 5 கப்பல்களை உடனடியாக அனுப்பி வைக்கிறது.

ஹோசிமின் நகர் கலவரத்தில் படுகாயம் அடைந்த 16 சீனர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் சீனா ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் விமானத்தில் நேற்று நாடு திரும்பினர்.

தொழிலாளர்கள் திரும்ப அழைப்பு

இதேபோன்று, சமீபத்தில் தாக்குதலுக்கு ஆளான பார்மோசா பிளாஸ்டிக்ஸ் குழுமத்துக்கு சொந்தமான உருக்கு ஆலையில் பணி அமர்த்தப்பட்டிருந்த மெட்டலர்ஜிக்கல் கார்ப்பரேஷனின் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று சீனாவுக்கு திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதற்கிடையே வியட்நாமுக்கு செல்லுகிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு சீனர்களை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. வியட்நாம் தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி வு ஹய் ஹோங்கிடம் தொலைபேசி வழியாக பேசிய சீன வர்த்தகத்துறை மந்திரி காவோ ஹூசெங், பெருகி வரும் கலவரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

வியட்நாம் நடவடிக்கை

இப்போது கலவரத்தை ஒடுக்க வியட்நாம் நடவடிக்கை எடுக்கத்தொடங்கி இருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

category:

News Group Category:

ஹிட்லர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாகிறது

Posted: 18 May 2014 08:30 AM PDT

ஜெர்மனி சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவர் பிறந்த வீடு ஆஸ்திரியாவில் உள்ளது. இந்த வீடு கடந்த 2 ஆண்டுகளாக சமுதாயக்கூடமாக செயல்பட்டு வந்தது. இங்கு படிப்பறிவு பெற இயலாதவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வீட்டை வெளிநாடுகளில் இருந்து குடியேறிய மக்களுக்கு, மொழிப்பாடம் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக ஹிட்லரின் நாசிக் கட்சியினர் இந்த வீட்டை ஹிட்லரின் நினைவாக புனிதத்தலமாக மாற்ற வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது. மேலும், ஹிட்லர் வீட்டை மக்கள் வசிக்கும் வாடகை வீடாக மாற்றவும் அரசு அனுமதிக்கவில்லை.
 

category:

News Group Category:

தேர்தலில் படுதோல்வி; டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி

Posted: 18 May 2014 08:15 AM PDT

புதுடெல்லி,

கடந்த டிசம்பர் மாதம்  டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜனலோக்பால் மசோதாவை, சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சட்டசபை கலைக்கப்படவில்லை எனினும் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக்கோரி, அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியதுடன், 60 சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சி முன்னணி வகித்துள்ளது. 10 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி முன்னிலை பெற முடிந்தது.

இது ஆம் ஆத்மி கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் தற்போதையை நிலையில் டெல்லியில் மீண்டும் தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. எனவே காங்கிரஸ், அல்லது பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்க அவர்கள் யோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒன்றையும் நடத்தினர்.

ஆனால் ஆம் ஆத்மியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவளிக்காது என டெல்லி காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News Group Category:

கோவையில் கூலிப்படையை ஏவி கணவனின் கழுத்தை இறுக்கிகொலை செய்த மனைவி கைது

Posted: 18 May 2014 07:49 AM PDT

கோவை

2 மகள்கள், ஒரு மகன் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தில், கூலிப்படையை ஏவி கணவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி கைதானார். கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த படுகொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தற்கொலை குடும்பம்

கோவை அம்மன்குளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது 65). ஒர்க்ஷாப்பில் 'வெல்டிங்' செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பாப்பாத்தி (55). இவர்களுக்கு ரங்கநாயகி, ஜெகநாதன், சித்ரா என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

மூத்த மகள் ரங்கநாயகிக்கு திருமணமாகி 2 குழந்தைகளுடன் தொண்டாமுத்தூரில் வசித்து வந்தார். குடும்பத்தகராறில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் மற்றொரு மகனான ஜெகநாதன், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 3–வது மகளான சித்ரா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையில் மகள்கள், மகனை பறிகொடுத்த திருமலைச்சாமியும், பாப்பாத்தியும் சோகத்துடன் வாழ்ந்து வந்தனர்.

கணவர் கொடுமை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி பாப்பாத்திக்கும், கணவர் திருமலைச்சாமிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கிடைத்த பணத்தை மனைவிக்கு கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பாப்பாத்தி, கணவருடன் தகராறு செய்தார். கணவர் திருமலைச்சாமி மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் கணவர் மீது பாப்பாத்தி ஆத்திரத்தில் இருந்தார். அவரை கொலை செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று பாப்பாத்தி திட்டமிட்டார்.

கட்டிலில் பிணம்

நேற்று இரவு கணவர் திருமலைச்சாமி அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். மனைவி பாப்பாத்தியும் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை 5 மணியளவில் 'அய்யோ... கணவர் இறந்து போனாரே' என்று பாப்பாத்தி கண்ணீரும், கம்பலையுமாக அழுது கூச்சல் போட்டவாறே வீட்டை விட்டு வெளியே வந்தார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கதவை தட்டி கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, திருமலைச்சாமி கட்டிலில் பிணமாக கிடந்தார். சாதாரண மரணம் போல் காணப்பட்டாலும், திருமலைச்சாமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கியதற்கான அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்–இன்ஸ்பெக் டர்கள், போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கூலிப்படையை ஏவி கொலை

திருமலைச்சாமியின் பிணத்தை பார்வையிட்ட போலீசார், அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப் பட்டு இருப்பதை அறிந்துகொண்டனர். ஆனால் மனைவி பாப்பாத்தி, கணவர் உடல்நலக்குறைவால்தான் இறந்துபோனதாக கூறி சோகத்தில் இருப்பதுபோல் காட்டிக்கொண்டார். பாப்பாத்தி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி னார்கள்.

அப்போது மனைவி பாப்பாத்தி, கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்டிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இது குறித்து பாப்பாத்தி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனது கணவர் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். மேலும் குடும்பம் நடத்த பணமும் தருவ தில்லை. என்னை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டினார். பில்லி சூனியம் வைத்து என்னை சாகடித்துவிடுவார் என்றும் அச்சப்பட்டேன். மேலும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் நம்பினேன். கணவரின் கொடுமை தொடர்ந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அவர் திடகாத்திரமாக இருந்ததால் நான் ஒருஆளாக அவரை கொலை செய்ய முடியாது என்று கருதினேன். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் என்னுடன் பழக்கமானார். அவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். ஜாமீனில் விடுதலையாகி வந்த அவர் மூலம் கணவரை கொலைசெய்ய முடிவு செய்தேன். கணவரை கொன்றால் பணம் தருவதாக பழனிச்சாமியிடம் கூறினேன்.

கழுத்தை இறுக்கிக்கொலை

இதற்கு பழனிச்சாமி சம்மதித்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி நள்ளிரவில் பழனிச்சாமி எனது வீட்டு கதவை தட்டியதும், வீட்டுக்குள் அவரை அழைத்துச்சென்றேன். அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த கணவரை, அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலைசெய்தார். கணவரின் உயிர் பிரிந்ததும் பழனிச்சாமி பிணத்தை கட்டிலிலேயே போட்டுவிட்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் நான், கணவர் இறந்து போனதாக நாடகம் ஆடினேன். போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்டுவிட்டேன்.

இவ்வாறு பாப்பாத்தி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலையாளியை போலீஸ் தேடுகிறது

இந்த கொலையில் தொடர்புடைய பழனிச்சாமியை தேடி போலீசார் பொள்ளாச்சி விரைந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக பாப்பாத்தி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பாப்பாத்தி முன்னுக்குப்பின் முன் முரணான தகவலை தெரிவித்து வருகிறார். இந்த கொலையில் தொடர்புடைய பழனிச்சாமிக்கும், பாப்பாத்திக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் தொடர்புடைய பழனிச்சாமி பிடிபடுவதன் மூலம் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கோவையில் கூலிப்படையை ஏவி, கணவரை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

category:

News Group Category:

அழகர்கோவில் மலைக்கு கள்ளழகர் திரும்பினார் ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர்

Posted: 18 May 2014 07:43 AM PDT

மதுரை

அழகர்கோவில் மலைக்கு திரும்பி கள்ளழகர் இருப்பிடம் சேர்ந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து மலர்தூவி வரவேற்றனர். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெற்றது.

இருப்பிடம் சேர்ந்தார்

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் கடந்த 10–ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார். எதிர்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளல், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தது, தசாவதாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்பின் கோவிலுக்கு கள்ளழகர் புறப்பட்டார்.

நேற்றுமுன்தினம் 17–ந் தேதி அதிகாலையில் பூப்பல்லக்கு நடந்தது. தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் பிரியாவிடை பெற்று கருப்பணசாமி கோவில் முன்பிருந்து திருமாலிருஞ்சோலைக்கு அழகர் புறப்பட்டார்.

நேற்று (18–ந்தேதி) அதிகாலையில் அப்பன்திருப்பதியிலும் மற்ற மண்டபங்களிலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் யானை முன்வர அழகரின் பல்லக்கு பின்வர கோவிலுக்கு கள்ளழகர் வந்தார். அங்கு அவரை ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர்.

அப்போது கோட்டைவாசலில் இருந்து கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தீபராதனையும், வையாழியும் நடந்தது.

மலர்தூவி வரவேற்றனர்

கோவில் உள்பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் விதவிதமான வண்ண மலர்களை தூவி அழகரை வரவேற்றனர். 18 பூசணிக்காய்கள் வைத்து அவற்றில் தீபம் ஏற்றி 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழிக்கப்பட்டது.

பின்னர் காலை 10.30 மணிக்கு பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் கள்ளழகர், கோவிலுக்குப் போய் இருப்பிடம் சேர்ந்தார். அங்கு திருமஞ்சனத்திற்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இன்று (திங்கட்கிழமை) உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. சுவாமி மதுரைக்கு சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 21 உண்டியல்கள் வந்து சேர்ந்தன. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை கோவிலுக்கு வந்து காணிக்கையாக செலுத்தினர்.

இந்த ஆண்டு 407 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி தா.வரதராசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

category:

News Group Category:

காங்கிரஸ் தோல்வி 'ராகுல் காந்தியை மட்டுமே குற்றம்சாட்டுவது சரி அல்ல' கமல்நாத்

Posted: 18 May 2014 07:37 AM PDT

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ராகுல் காந்தியை மட்டுமே குற்றம்சாட்டுவது சரி அல்ல என்று மத்திய மந்திரி கமல்நாத் கூறி உள்ளார்.

ராகுல் மீது குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை முன்நின்று நடத்தியவர் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 543 இடங்களில் அந்த கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. இதனால், ராகுல் காந்தியின் அணுகுமுறைக்கு எதிராக அக்கட்சியில் உள்ள சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சரி அல்ல

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது. அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் சரிவர எடுத்துச் சொல்ல தவறிவிட்டோம். இதில் பிரதமர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, அரசுக்கு எதிரான அதிருப்தியே காரணம்.

எனவே இந்த தோல்விக்காக ராகுல் காந்தியை குற்றம்சாட்டுவது சரியாக இருக்காது. அவர் அரசாங்கத்தில் பங்கு பெறவில்லை.
கட்சி அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும். கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்ந்த அமைப்பான காரிய கமிட்டிக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கமல்நாத் கூறினார்.

ராஜினாமா விவகாரம்

திங்கட்கிழமை (இன்று) நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படுகிறதே? என்று பேட்டியின் போது கமல்நாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "பதவி விலக வேண்டாம் என அவர்களை நான் கேட்டுக் கொள்வேன்" என்று பதில் அளித்தார்.
 

category:

News Group Category:

மோடி அமோக வெற்றி பெறுவதற்கு காரணம் இளைஞர்கள்

Posted: 18 May 2014 07:33 AM PDT

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த 2014-ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றி பெறுவதற்கு பெரும்பாலும் முதல்முறை வாக்காளர்கள் பா.ஜ.க.விற்கு ஆதரவாக வாக்களித்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2014 மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 81.45 கோடி வாக்காளர்களில் 2.31 கோடி வாக்காளர்கள் (2.7 சதவீதம்) 18 வயது இளைஞர்களாவர்.

காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 39 சதவீத இளைஞர்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் 19 சதவீத முதல்முறை வாக்குகளையே பெற்றுள்ளது.

இந்த போக்கை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த பெரிய அரசியல் கட்சிகள் இளைஞர்களை கவரும் வகையில் பிரசாரங்களை நடத்த திட்டமிட்டன. வழக்கமான பிரசாரங்களை விட 2014 தேர்தலில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்த பிரசாரங்கள் இளைஞர்களை வேகமாக சென்றடைந்தன.

272 'பிளஸ்' என்ற இலக்கை அடைவதற்கு பாரதீய ஜனதா கட்சி சுமார் 2 லட்சம் பேரை தேர்வு செய்து 60 ஸ்வயம் சேவக குழுக்களை தயார் செய்திருந்தது. அவர்களே சமூக வலைத்தளங்களில் பிரசாரம் எடுத்துச் செல்லப்படுவதற்கு பாலமாக அமைந்தனர். அதுதவிர, பா.ஜ.கவின் 3டி பிரசாரமும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

உத்தர பிரதேசத்தில் 38 லட்சம் இளைஞர்களும், மேற்கு வங்காளத்தில் 20 லட்சம் இளைஞர்களும் வாக்களித்துள்ளனர். அதேபோல், ஹிமாசல பிரதேசத்தில் 1.3 சதவீத இளைஞர்கள் வாக்களித்திருந்ததால் பா.ஜ.க அங்கு போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.

தலைநகர் டெல்லியில் 2.7 சதவீத இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். அதுவே டெல்லியின் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவை வெற்றி பெற செய்தது. நாட்டிலேயே குறைந்த பட்சமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் 1.1 லட்சம் இளைஞர்கள் முதல்முறை வாக்காளர்களாக வாக்களித்தனர்.

category:

News Group Category:

முதல்-மந்திரியை தேர்வு செய்யும் முடிவை ஒத்திவைத்தது ஐக்கிய ஜனதா தளம்

Posted: 18 May 2014 07:03 AM PDT

பாட்னா,

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததை அடுத்து அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாதீய ஜனதாவுக்கு தாவும் சூழ்நிலை அங்கு ஏற்பட்டது. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கொண்டுவர ஐக்கிய ஜனதா தளம் முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ் குமாரே முதல்-மந்திரியாக பதவி வகிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்களும், நிதிஷ் குமாரே முதல் மந்திரியாக நீடிக்க வேண்டும் என்று அவரது வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் முதல்-மந்திரியை தேர்வு செய்யும் முடிவை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒத்திவைத்துள்ளது.

category:

News Group Category:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி

Posted: 18 May 2014 06:52 AM PDT

ராஞ்சி,

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இதுவரை 41 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 42–வது லீக் ஆட்டம் ராஞ்சியில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்து விளையாடியது. சென்னை அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்து பெங்களூர் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. சென்னை அணியில் அதிகப்பட்சமாக ரெய்னா 62 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல்களத்தில் இருந்தார். ஜடேஜா 10 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

சுமித் 9 ரன்களிலும், ஹஸ்ஸி 25 ரன்களிலும், டோனி 7 ரன்களிலும், மெக்கல்லம் 18 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்து விளையாடியது. பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகப்பட்சமாக கெய்ல் 46 ரன் களும், டிவில்லியர்ஸ் 28 ரன்களும் கோலி 27 ரன்களும் அடித்தனர். படேல் 10 ரன்னிலும், ரானா ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். யுவராஜ் 13 ரன்னுடனும், அகமத் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இறுதியில் களத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™