Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் 9–வது வெற்றி பெறுமா? பெங்களூர் அணியுடன் இன்று பலப்பரீட்சை

Posted: 17 May 2014 12:54 PM PDT

ராஞ்சி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இதுவரை 41 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை.

சென்னை–பெங்களூர் மோதல்

இந்த நிலையில் 42–வது லீக் ஆட்டம் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2010 மற்றும் 2011–ம் ஆண்டு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அடுத்தபடியாக 2–வது இடத்தில் இருப்பதுடன் 'பிளே–ஆப்' சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.  

மொகித்ஷர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் வெய்ன் சுமித், சுரேஷ்ரெய்னா, பிரன்டன் மெக்கல்லம், டுபிளிஸ்சிஸ் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். காயம் அடைந்த வெய்ன் பிராவோவுக்கு பதிலாக டேவிட் ஹஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் மொகித் ஷர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஈஸ்வர் பாண்டே ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மொகித் ஷர்மா இதுவரை 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐதராபாத் வீரர் புவனேஷ்வர்குமாருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6–வது இடத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெற்றி கட்டாயத்தில் பெங்களூர்

பெங்களூர் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டார்க், முரளிதரன் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர். கெய்லின் அதிரடி ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் கடைசி 2 ஆட்டங்களில் யுவராஜ்சிங் கலக்கி வருகிறார். ஸ்டேடியம் பிரச்சினை காரணமாக சென்னை அணியின் ஆட்டங்கள் ராஞ்சியில் நடந்தாலும் இங்கு நடந்த 2 ஆட்டங்களிலும் சென்னை அணி தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது.

வலுவான நிலையில் உள்ள சென்னை அணியை, நெருக்கடியில் உள்ள பெங்களூர் அணி சாய்ப்பது என்பது கடினமான காரியமாகும். வெற்றி உத்வேகத்தை தொடர விரும்பும் சென்னை அணியும், வெற்றி கட்டாயத்தில் உள்ள பெங்களூர் அணியும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 8 தடவையும், பெங்களூர் அணி 6 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்த சீசனில் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

category:

தாமஸ், உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் சாய்னா, காஷ்யாப் தலைமையில் இந்திய அணிகள் பங்கேற்பு

Posted: 17 May 2014 12:52 PM PDT

புதுடெல்லி,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் சாய்னா, காஷ்யாப் தலைமையில் இந்திய அணிகள் பங்கேற்கின்றன.

உலக பேட்மிண்டன் போட்டி

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக ஆண்கள் (தாமஸ் கோப்பை) மற்றும் பெண்கள் (உபேர் கோப்பை) அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. போட்டி  3 ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் ஆட்டங்களை உள்ளடக்கியதாகும்.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.

'சி' பிரிவில் இந்தியா

ஆண்களுக்கான போட்டியில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. மலேசியா, தென் கொரியா, ஜெர்மனி ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இதேபோல் பெண்களுக்கான போட்டியிலும் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. அந்த பிரிவில் தாய்லாந்து, கனடா, ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய ஆண்கள் அணி காஷ்யாப் தலைமையில் களம் காணுகிறது. ஸ்ரீகாந்த், குருசாய்தத், சவுரப் வர்மா, சாய் பிரனீத் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய பெண்கள் அணி லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா நேவால் தலைமையில் களம் இறங்குகிறது. பி.வி.சிந்து, அருந்ததி, துளசி, தன்வி லாத், ஜூவாலா கட்டா, அஸ்வினி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

முதல்முறை

தொடக்க ஆட்டங்களில் இந்திய ஆண்கள் அணி மலேசியாவையும், இந்திய பெண்கள் அணி கனடாவையும் சந்திக்கிறது. இந்த போட்டியில் 10 முறை சாம்பியன் சீனா, 13 முறை சாம்பியன் இந்தோனேஷியா மற்றும் டென்மார்க், ஜப்பான் ஆகிய வலுவான அணிகள் கலந்து கொள்கின்றன.

ஆண்கள் பிரிவில் இந்திய அணி இதுவரை 8 முறையும், பெண்கள் பிரிவில் 3 முறையும் தான் இறுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. ஒரு முறையும் கோப்பையை வென்றது. உலகின் முன்னணி வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

category:

தெற்காசிய கூடைப்பந்து போட்டி இந்திய ஆண்கள் அணி ‘சாம்பியன்’ ஆசிய போட்டிக்கு தகுதி

Posted: 17 May 2014 12:43 PM PDT

காத்மாண்டு,

தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தெற்காசிய கூடைப்பந்து

3–வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது.

இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் மாலத்தீவு அணி திணறியது.

இந்திய அணி சாம்பியன்

முதல் பாதியில் 64–16 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி முடிவில் 108–32 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்திய அணியில் அம்யோத்சிங், பிகென் பெதானி, அம்ரித் மான் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இந்திய அணி தனது எல்லா ஆட்டங்களிலும் வெற்றியை சுவைத்தது. முந்தைய லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அணிகளை வென்று இருந்தது.

ஆசிய போட்டிக்கு தகுதி

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் அணி சீனாவில் ஜூலை மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய போட்டியில் சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ் போன்ற வலுவான அணிகளின் சவால் இந்திய அணிக்கு காத்து இருக்கிறது.

category:

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 17 May 2014 12:42 PM PDT

சென்னை,

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேற்று மாலை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

category:

News Group Category:

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ள பங்குகள் குறித்து நிபுணர்கள் பரிந்துரை

Posted: 17 May 2014 12:24 PM PDT

மும்பை

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த 12 மாதங்களில் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ள 10 நிறுவனங்களின் பங்கு குறித்து நிபுணர்கள் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் இந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றவையாக உள்ளன என அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பங்கு வர்த்தகம்

இந்த ஆண்டில் பங்கு வர்த்தகம் செழிப்பாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் நீண்ட காலமாக சுணக்கம் கண்டிருந்த புதிய பங்கு வெளியீடுகளும் சூடுபிடிக்கும் என கருதப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களும் புதிய மற்றும் இரண்டாவது பங்கு வெளியீட்டு நடவடிக்கைகளில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிப் பங்குகள் பெரும் ஏற்றம் காணும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் நிலக்கரி, மின்சாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளிக்கும் என்றும், ரூபாய் மதிப்பு நிலவரத்தைப் பொறுத்து ஏற்றுமதி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

அடுத்த 12 மாதங்களில் ஏ.சி.சி., மதர்சன் சுமி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, லார்சன் அண்டு டூப்ரோ, மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.எல். அண்டு எஃப்.எஸ். மற்றும் டெக் மகிந்திரா ஆகிய பத்து நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளிக்கும் என வல்லுனர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

சிமெண்டு உற்பத்தி

ஏ.சி.சி. நிறுவனம் ஆண்டுக்கு 3 கோடி டன் சிமெண்டு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்நிறுவனம் தனது உற்பத்தி திறனை மேலும் 50 லட்சம் டன் உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2013–ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015–ல் இந்நிறுவனத்தின் வருவாய் 12 சதவீதமும், நிகர லாபம் 22 சதவீதமும் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டில் இப்பங்கின் விலை ரூ.1,580–ஐ எட்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மதர்சன் சுமி நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது புதிய தொழிற்சாலைகளின் உற்பத்தித்திறனை அதிகபட்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்தால் இந்நிறுவனத்தின் வருவாய்    அதிகரிக்கும்.    12     மாதங்களில் இந்நிறுவனப் பங்கின் விலை ரூ.320–ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல்திறன் இனி வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்துறையில் எதிர்பார்க்கப்படும்  சீர்திருத்தங்கள்தான் இதற்கு காரணம். இப்பங்கின் விலை ரூ.150–ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள்

எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களால் பெரிதும் பலனடையக் கூடிய துறைகளில் வங்கித்துறையும் ஒன்று என்று கருதப்படுகிறது. இந்திய வங்கித்துறையில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்திலும், ஐசிஐசிஐ வங்கி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு வங்கிகளின் எதிர்கால வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் சிறப்பாக உள்ளன. எனவே இந்த வங்கிகளின் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றவை என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலை நீங்கி வருகிறது. உள்நாட்டில் விரிவாக்க நடவடிக்கைகள் உத்வேகம் பெறத் தொடங்கியுள்ளன. இவை இரண்டும் பொறியியல் துறை நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும். இந்த வகையில் பல்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்தி வரும் லார்சன் அண்டு டூப்ரோ நல்ல ஆதாயம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த   நிறுவனத்தின் பங்குகளிலும் கவனம் செலுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. தனது உற்பத்தி திறனையும் அதிகரித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்கும் புதிய அரசு மோட்டார் வாகன துறைக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவையனைத்தும் இந்நிறுவனத்திற்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்தால் அது இந்நிறுவனத்திற்கு மேலும் பலம் சேர்க்கும். ஓராண்டு கால முதலீட்டுக்கு இப்பங்கு ஏற்றது என கருதப்படுகிறது.

வல்லுனர்களின் மதிப்பீடு

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச் சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

category:

உலக அளவில் விலையில் ஏற்றத்தாழ்வுகள் தங்கம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை உயர்த்தப்பட்டது

Posted: 17 May 2014 12:21 PM PDT

புதுடெல்லி

உலக அளவில் விலையில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருவதால் தங்கம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

வரி ஏய்ப்பு

சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சரக்குகளின் விலையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.

தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை இப்போது 422 டாலரிலிருந்து (10 கிராம்) 424 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை 632 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 650 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம் இது தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தங்கம் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 2013–14–ஆம் நிதி ஆண்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி 40 சதவீதம் குறைந்து 3,346 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டில் 5,579 கோடி டாலராக இருந்தது.

கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்து இருந்தது. சரக்குகள் இறக்குமதி அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

மறு ஏற்றுமதி

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இறக்குமதி வரியை 10 சதவீதமாக அதிகரித்தது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீத தங்கத்தை கட்டாயம் மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.

category:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து போராடும் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

Posted: 17 May 2014 12:20 PM PDT

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிட்டன. 18 தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளைச் சார்ந்த செயல் வீரர்கள் அர்ப்பணிப்போடு தேர்தல் பணியாற்றினர்.

முதலாளித்துவக் கட்சிகளுடைய பண பலத்தை எதிர்த்தும், பா.ஜ.க.வினுடைய வகுப்புவாத அணுகுமுறையை எதிர்த்தும் மற்றும் சாதிய சக்திகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து அரசியலாக தேர்தலை சந்தித்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளில் பணியாற்றிய இரண்டு கட்சி அணிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த, ஆதரித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக மக்கள் நலனுக்காக, வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும் என்பதை கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

category:

News Group Category:

தேர்தல் பிரசாரத்துக்கு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்திய அ.தி.மு.க. இளைஞர்களை பெருமளவில் கவர்ந்தது

Posted: 17 May 2014 12:12 PM PDT

சென்னை,

தேர்தல் பிரசாரத்துக்கு தொழில்நுட்ப சாதனங்களை அ.தி.மு.க. பயன்படுத்தியது. இதன் மூலம் இளைஞர்களை பெருமளவில் கவர்ந்தது.

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–

தொழில்நுட்ப சாதனங்கள்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளும் இணையதளம் மூலமும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமும் பிரசாரம் மேற்கொண்டன. இவற்றில் அ.தி.மு.க.வின் இணையதள தொழில்நுட்பத்தை திறம்பட கையாண்டதும் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சியின் வெற்றி சாதனைக்கு கைகொடுத்திருக்கிறது.

படித்த மற்றும் இளம் வாக்காளர்களை கவர அ.தி.மு.க. இத்தேர்தலில் பெரும் முயற்சி மேற்கொண்டது.

தகவல் பரிமாற்றங்கள்

சமூக வலைதளங்களில் நூதனப்பிரசாரம் மூலம் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளையும், அவரது பிரசார யுக்திகளையும் கொடுத்ததன் மூலம் இளைஞர்கள் பலரையும் அக்கட்சி ஈர்த்ததோடு, அ.தி.மு.க. இணையதளத்தை நோக்கி பலரையும் படையெடுக்கவும் வைத்தது.

மற்ற எந்த அரசியல் கட்சிகளின் வலைதளத்தைவிடவும், அ.தி.மு.க. இணையதளத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு பயனுள்ள செய்திகளும், முதல்–அமைச்சரின் செயல்பாடுகளும் வெளிப்படையாக கிடைத்தன. இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறித்த தகவல் தேடல் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் போன் செய்து ஜெயலலிதாவின் பிரசாரத்தை கேட்கும் புதுமையும் அக்கட்சியால் செயல்படுத்தப்பட்டது. சிலருக்கு ஜெயலலிதாவே போன் செய்து வாக்கு கேட்பது போன்றும் அழைப்புகள் சென்றன. ஜெயலலிதாவின் பிரசார வீடியோக்கள், வாட்ஸ்–அப் செய்தி பரிமாற்றம் மூலம் உடனுக்குடன் அதன் உறுப்பினர்களுக்கும், இணைப்பில் இருந்த லட்சக்கணக்கானோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வேகமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

இந்த முயற்சி இளம் வாக்காளர்களிடையே அ.தி.மு.க. குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவர்கள் ஆதரவாக செயல்படவும் தூண்டியுள்ளது என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

category:

News Group Category:

நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிலக்கரி தேவைப்பாடு 56.70 கோடி டன்னாக உயரும்

Posted: 17 May 2014 12:12 PM PDT

புதுடெல்லி

நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில், அனல்  மின்  உற்பத்தி  திட்டங்களுக்கான நிலக்கரி தேவைப்பாடு 56.70 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பயன்பாடு

சென்ற நிதி ஆண்டில் 49.83 கோடி டன் நிலக்கரியை மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தின. அவ்வாண்டில் 52.20 கோடி டன் நிலக்கரி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

உள்நாட்டில் உற்பத்தி குறைவாக உள்ளதால் நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் இறக்குமதியைத்தான் அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நடப்பு நிதி ஆண்டில் 52.70 கோடி டன் நிலக்கரியை பெற முடியும் என மின் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன. மீதமுள்ள 4 கோடி டன்னை இறக்குமதி வாயிலாக ஈடு செய்ய இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அனல்மின் உற்பத்தி திட்டங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மொத்த மின்நிறுவு திறனில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டங்களின் பங்கு 59 சதவீதமாக உள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 40.50 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக சிங்கனேரி கோலியரீஸ் நிறுவனம் 3.50 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்யும் என தெரிகிறது. மேலும், சில மின்உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமான சுரங்கங்களில் இருந்து 3.30 கோடி டன் நிலக்கரியை பெற வாய்ப்புள்ளது. ஆக, நிலக்கரி தேவை அதிகமாக உள்ள நிலையில் உள்நாட்டு நிலக்கரி நிறுவனங்கள் வாயிலான சப்ளை குறைவாகவே இருக்கும்.

இலக்கு

மத்திய அரசு நடப்பாண்டில் 1,02,300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் அனல் மின்உற்பத்தி திட்டங்கள் வாயிலாக 85,900 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. நிலக்கரியை முக்கிய எரிபொருளாக கொண்ட மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் 78,400 கோடி யூனிட்டும், லிக்னைட், நாப்தா, டீசல் மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் 7,500 கோடி யூனிட்டும் உற்பத்தி செய்யப்படும் என மத்திய மின்சாரம் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பு காலாண்டில்...

நடப்பு காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) 25,200 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் ஒவ்வொரு காலாண்டிலும் 25,700 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

category:

நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிலக்கரி தேவைப்பாடு 56.70 கோடி டன்னாக உயரும்

Posted: 17 May 2014 12:10 PM PDT

புதுடெல்லி

நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில், அனல்  மின்  உற்பத்தி  திட்டங்களுக்கான நிலக்கரி தேவைப்பாடு 56.70 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பயன்பாடு

சென்ற நிதி ஆண்டில் 49.83 கோடி டன் நிலக்கரியை மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தின. அவ்வாண்டில் 52.20 கோடி டன் நிலக்கரி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

உள்நாட்டில் உற்பத்தி குறைவாக உள்ளதால் நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் இறக்குமதியைத்தான் அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நடப்பு நிதி ஆண்டில் 52.70 கோடி டன் நிலக்கரியை பெற முடியும் என மின் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன. மீதமுள்ள 4 கோடி டன்னை இறக்குமதி வாயிலாக ஈடு செய்ய இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அனல்மின் உற்பத்தி திட்டங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மொத்த மின்நிறுவு திறனில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டங்களின் பங்கு 59 சதவீதமாக உள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 40.50 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக சிங்கனேரி கோலியரீஸ் நிறுவனம் 3.50 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்யும் என தெரிகிறது. மேலும், சில மின்உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமான சுரங்கங்களில் இருந்து 3.30 கோடி டன் நிலக்கரியை பெற வாய்ப்புள்ளது. ஆக, நிலக்கரி தேவை அதிகமாக உள்ள நிலையில் உள்நாட்டு நிலக்கரி நிறுவனங்கள் வாயிலான சப்ளை குறைவாகவே இருக்கும்.

இலக்கு

மத்திய அரசு நடப்பாண்டில் 1,02,300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் அனல் மின்உற்பத்தி திட்டங்கள் வாயிலாக 85,900 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. நிலக்கரியை முக்கிய எரிபொருளாக கொண்ட மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் 78,400 கோடி யூனிட்டும், லிக்னைட், நாப்தா, டீசல் மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் 7,500 கோடி யூனிட்டும் உற்பத்தி செய்யப்படும் என மத்திய மின்சாரம் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பு காலாண்டில்...

நடப்பு காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) 25,200 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் ஒவ்வொரு காலாண்டிலும் 25,700 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™