Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பெண்ணை கற்பழித்த வழக்கில் ஜாமீன் கேட்ட வாலிபருக்கு நீதிபதி முன்னிலையில் திருமணம்

Posted: 14 May 2014 01:10 PM PDT

விழுப்புரம்,

பெண்ணை கற்பழித்த வழக்கில் ஜாமீன் கேட்ட வாலிபருக்கு நீதிபதி முன்னிலையில் திருமணம் நடந்தது.

பெண் கற்பழிப்பு வழக்கு

கள்ளக்குறிச்சியை அடுத்த கருந்தலாக்குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சக்திவேல் (வயது 22). அதே ஊரைச் சேர்ந்தவர் கலியன் மகள் கலைச் செல்வி (வயது 20) இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். அப்போது சக்திவேல் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கலைச்செல்வியிடம் உல்லாசம் அனுபவித்துள் ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள கோரி கலைச்செல்வி சக்தி வேலிடம் கூறியுள்ளார். இதற்கு சக்திவேல் மறுத்த தாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.இது குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேஸ்வரி, சக்திவேல் அவரது தாய் தங்காள், சித்தப்பா அருணாசலம், சகோதரர் சரத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சக்திவேலுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம்

இந்த பிரச்சினையை கேள்விப்பட்ட விழுப்புரம் மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, மாற்று தீர்வு மையத்தின் மூலம் பேசி தீர்க்க முடிவு செய்து சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் கலைச்செல்வி குடும்பத்தினர் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு குடும்பத்தாரும் சுமுகமடைந்து திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்த காதல் ஜோடிகளின் திருமணம் நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி வினாயகர் கோவிலில் துர்க்கை அம்மன் சன்னதியில் நடந்தது. நீதிபதி கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில் சக்திவேல் - கலைச்செல்வி கழுத்தில் தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டார். இவர் களது திருமணத்திற்கு சீர் வரிசையாக கட்டில், பீரோ, பாத்திரங்கள் ஆகியவைகளை நீதிபதி, விழுப்புரத்தில் உள்ள மனித உரிமை அமைப்பு ஆகியோரின் சார்பில் வழங் கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் முதன்மை குற்றவியல் நீதிபதி வெற்றிசெல்வி, மாவட்ட அரசு வக்கீல் பொன்சிவா, மனித உரிமை அமைப்பை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய ஸ்கோரை ‘சேசிங்’ செய்து அசத்தியது, பஞ்சாப்

Posted: 14 May 2014 01:04 PM PDT

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் இமாலய இலக்கையும் பஞ்சாப் அணி எளிதாக எட்டிப்பிடித்து அசத்தியது.

முதல்முறையாக வோரா

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8  அணிகளும் தங்களுக்குள் தலா 2  முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் நேற்று மாலை ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ஐதராபாத் சன் ரைசர்சும் எதிர்கொண்டன. பஞ்சாப் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரரான மனன் வோரா முதல்முறையாக இந்த ஆண்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஷிவம் ஷர்மாவும் அணிக்கு திரும்பினார். மன்தீப்சிங், பர்விந்தர் அவனா நீக்கப்பட்டனர்.

தவான் 45 ரன்

டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து ஐதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும், கேப்டன் ஷிகர் தவானும் பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கினர். ஆடுகளம் பேட்டிங்குக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், அதிரடி–சரவெடியை கொளுத்தி போட்டனர். 5–வது ஓவரில் சந்தீப் ஷர்மா வீசிய பந்தை துவம்சம் செய்த ஷிகர் தவான் அந்த ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சரை சாத்தினார். இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்து வலுவூட்டினர். பிஞ்ச் 20 ரன்களில் (23 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆனார். 10 ஓவர்களில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்த 10 ஓவர்களில் ஐதராபாத்தின் ரன்வேட்டை தீவிரமானது. தவான் 45 ரன்களில் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவும், டேவிட் வார்னரும், பஞ்சாப்பின் பந்து வீச்சை பஞ்சராக்கினார்கள். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. வார்னர் 44 ரன்களில் (23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் டக்–அவுட் ஆனாலும், நமன் ஓஜாவின் பேட் நாலாபுறமும் சுழன்று கொண்டே இருந்தது. அடிக்கடி பந்தை வான் வழியாக பயணித்ததால், உள்ளூர் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். அத்துடன் முதல் முறையாக ஐதராபாத் அணி 200 ரன்களையும் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. நமன் ஓஜா 79 ரன்களுடன் களத்தில் நின்றார். இதில் 4 பவுண்டரியும், 7 சிக்சரும் அடங்கும்.

வல்லவனுக்கு நிகர் வல்லவன்

பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடியது. பவுண்டரியுடன் கணக்கை தொடங்கிய ஷேவாக் 2–வது பந்திலேயே கேட்ச் ஆனார். இதன் பின்னர் மனன் வோராவும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் இணைந்து பட்டையை கிளப்பினர். இந்த தொடரில் பேட்ஸ்மேன்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய அபாயகரமான பவுலர்களாக வர்ணிக்கப்பட்ட ஸ்டெயின், புவனேஷ்வர்குமார் ஆகியோராலும் இந்த இளம் கூட்டாளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.  ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் ரெக்கை கட்டி பறந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஸ்டெயினின் ஓவரில் இன்னும் முதலாவது சிக்சர் அடிக்க முடியாமல் கெய்ல் தவித்து கொண்டிருக்கின்ற நிலையில், அவரது ஓவரில் மனன் வோரா சர்வ சாதாரணமாக பந்தை சிக்சருக்கு ஓட விட்டார்.

பவர்–பிளேயான முதல் 6 ஓவர்களில் 86 ரன்கள் திரட்டியதால், பஞ்சாப்புக்கு நெருக்கடி படிப்படியாக குறைந்தது. ஸ்கோர் 95 ரன்களை தொட்ட போது, சஹா 54 ரன்களில் (26 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து சிக்சர் மன்னன் கிளைன் மேக்ஸ்வெல் இறங்கினார்.

மேக்ஸ்வெல் 5 சிக்சர்

சற்று கூட தாமதிக்காமல் வந்த வேகத்திலேயே கரண் ஷர்மாவின் ஓவரில் 3 முறை பந்தை சிக்சருக்கு விரட்ட, மேக்ஸ்வெல்லின் அட்டகாசம் சூடுபிடித்தது. 7.3 ஓவர்களில் பஞ்சாப் 100 ரன்களை கடந்தது.

பஞ்சாப் பேட்ஸ்மேன்களை அடக்க வழிதெரியாமல் ஐதராபாத் பவுலர்களும், பீல்டர்களும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இது நேரடி போட்டியா அல்லது, 'ஹைலெட்சா' என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து ரன்மழையை பொழிந்து கொண்டிருந்தனர்.

அபாரமாக ஆடிய மனன் வோரா எதிர்பாராத விதமான 47 ரன்களில் (20 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். சிக்சருக்கு முயற்சித்த மேக்ஸ்வெல் 43 ரன்களில் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார்.

பஞ்சாப் வெற்றி

மேக்ஸ்வெல் பெவிலியன் திரும்பிய பிறகு சில ஓவர்களில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பொறுமை காட்டினர். இறுதியில் தனது விசுவரூபத்தை தூக்கி நிறுத்திய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ஸ்டெயின் ஓவரில் 2 சிக்சரும், 2 பவுண்டரியும் அடித்து அவரை ஒரு வழிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து 19–வது ஓவரில் சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெய்லி 35 ரன்களுடனும் (19 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் மில்லர் 24 ரன்களுடனும் (24 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் நின்றனர். ஸ்டெயின் 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

முதலிடம்

10–வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப்புக்கு இது 8–வது வெற்றியாகும். இதன் மூலம் பிளே–ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. அது மட்டுமின்றி சென்னையை இறக்கி விட்டு புள்ளி பட்டியலில் மறுபடியும் முதலிட அரியணையில் ஏறியது. 10–வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத்துக்கு இது 6–வது தோல்வியாகும். அரைசதம் அடித்த பஞ்சாப் வீரர் விருத்திமான் சஹா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

ஸ்கோர்   போர்டு

ஐதராபாத் சன் ரைசர்ஸ்

ஆரோன் பிஞ்ச் (பி)    ஷிவம் ஷர்மா  20

ஷிகர் தவான் (சி) ஷிவம்     ஷர்மா (பி) ரிஷி தவான் 45

நமன் ஓஜா (நாட்–அவுட்)    79

டேவிட் வார்னர்(ரன்–அவுட்)    44

ஹென்ரிக்ஸ் (சி) மில்லர்    (பி) சந்தீப் ஷர்மா 0

இர்பான் பதான் (சி) மில்லர்    (பி) ரிஷி தவான் 1

கரண் ஷர்மா (நாட்–அவுட்)    1

எக்ஸ்டிரா    15 மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 205

விக்கெட் வீழ்ச்சி: 1–65, 2–88, 3–169, 4–183, 5–196

பந்து வீச்சு விவரம்

சந்தீப் ஷர்மா    4–0–65–1

மிட்செல் ஜான்சன்    4–0–26–0

ஷிவம் ஷர்மா    4–0–31–1

அக்ஷார் பட்டேல்    4–0–40–0

ரிஷி தவான்    4–0–42–2

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஷேவாக் (சி) அண்ட் (பி)    புவனேஷ்வர்குமார் 4

மனன் வோரா (ரன்–அவுட்)    47

சஹா (ஸ்டம்பிங்) நமன்    ஓஜா (பி) கரண் ஷர்மா 54

மேக்ஸ்வெல் (சி) ஸ்டெயின்    (பி) அமித் ஸ்ரா 43

டேவிட் மில்லர்(நாட்–அவுட்)    24

ஜார்ஜ் பெய்லி (நாட்–அவுட்)    35

எக்ஸ்டிரா    4

மொத்தம் (18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 211

விக்கெட் வீழ்ச்சி: 1–4, 2–95, 3–125, 4–159

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார்    3.4–0–38–1

ஸ்டெயின்    4–0–51–0

ஹென்ரிக்ஸ்    2–0–36–0

கரண் ஷர்மா    4–0–46–1

அமித் மிஸ்ரா    4–0–32–1

இர்பான் பதான்     1–0–5–0

அன்று சென்னை...இன்று ஐதராபாத்...

இந்த ஐ.பி.எல். சீசனில் ரசிகர்களை புலங்காகிதம் அடைய வைக்கும் அணி எது என்றால், அது பஞ்சாப் தான் என்று அடித்து சொல்லலாம். சென்னைக்கு எதிராக தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 205 ரன்கள் குவித்த போதிலும், அதை 19–வது ஓவரில் சர்வ சாதாரணமாக சேசிங் செய்து விட்டது. இதே போல் இந்த ஆட்டத்திலும் ஐதராபாத் அணி 205 ரன்களைத் தான் எடுத்தது. அதையும் 19–வது ஓவருக்குள் எட்டிப்பிடித்து, ஐதராபாத் எக்ஸ்பிரசை தடம் புரள வைத்து விட்டனர்.

சாதனையோ... சாதனை...!

* இந்த ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 131 ரன்களை அள்ளியது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இது தான். இதற்கு முன்பு 2008–ம் ஆண்டு மும்பைக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணி இந்த வகையில் 130 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* பஞ்சாப் இளம் வேகப்பந்து வீச்சாளர் 20 வயதான சந்தீப் ஷர்மா 4 ஓவர்களில் 65 ரன்களை வாரி இறைத்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இது 2–வது மோசமான பந்துவீச்சாகும் . இஷாந்த் ஷர்மா (ஐதராபாத் அணி) கடந்த ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 66 ரன்களை விட்டுக்கொடுத்ததே இந்த நாள் வரை ஒரு பவுலர் தாரைவார்த்த அதிகபட்ச ரன்களாக இருக்கிறது. டெல்லி அணிக்காக உமேஷ் யாதவ் ஆடிய போது கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக 65 ரன்களை விட்டுக்கொடுத்ததும் இந்த பட்டியலில் இருக்கிறது.

* ஐ.பி.எல். போட்டிகளில், 200 ரன்களுக்கு மேலான ஸ்கோரை பஞ்சாப் அணி வெற்றிகரமாக எட்டிப்பிடிப்பது (சேசிங்) இது 3–வது முறையாகும். மற்ற எந்த அணியும் ஒரு முறைக்கு மேல் 200 ரன்களுக்கு மேலான ஸ்கோரை சேசிங் செய்ததில்லை.

* பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், தொடர்ந்து 4–வது முறையாக முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டியிருக்கிறார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். முதல் ஓவரில் அவர் அவுட் ஆவது இது 22–வது முறையாகும். வேறு எந்த பேட்ஸ்மேன்களும் இந்த வகையில் இத்தனை தடவை ஆட்டம் இழந்ததில்லை.

*  ஐதராபாத் வீரர் டேவிட் வார்னர், உள்ளூர், சர்வதேசம், ஐ.பி.எல், பிக்பாஷ், கவுண்டி என்று எல்லாவகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து நேற்று 5 ஆயிரம் ரன்களை தாண்டினார். அவர் இதுவரை 175 ஆட்டங்களில் விளையாடி 5029 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல், பிராட் ஹாட்ஜ், டேவிட் ஹஸ்சி, பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் ஏற்கனவே 5 ஆயிரம் ரன்களை கடந்தவர்கள் ஆவர்.

*அதிக ரன் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் நேற்று 500 ரன்களை தாண்டினார். அவர் 10 ஆட்டங்களில் விளையாடி 34 சிக்சருடன் 517 ரன்கள் குவித்துள்ளார். 2–வது இடத்தில் உள்ள சென்னை வீரர் வெய்ன் சுமித் 29 சிக்சர் உள்பட 440 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்திருக்கிறார்.

category:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

Posted: 14 May 2014 12:54 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா 5–வது வெற்றி மும்பை அணி வெளியேறுகிறது?

Posted: 14 May 2014 12:50 PM PDT

கட்டாக்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி 5–வது வெற்றியை பதிவு செய்தது.

காலிஸ் நீக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கட்டாக் மைதானத்தில் அரங்கேறிய 40–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்தித்தன. கொல்கத்தா அணியில் காலிசுக்கு பதிலாக ஷகிப் அல்–ஹசன் சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த கொல்கத்தா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி சுழற்பந்து வீச்சை சமாளித்து அதிரடி காட்ட முடியாமல் திணறியது. சுனில் நரினும், ஷகிப் அல்–ஹசனும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களை முடக்கினர். இதற்கு மத்தியில் கேப்டன் ரோகித் ஷர்மா (51 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அம்பத்தி ராயுடு (33 ரன், 27 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடினர். 20 ஓவர்களை முழுமையாக எதிர்கொண்ட மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பொல்லார்ட் 10 ரன்களுடன் (11 பந்து), ஆதித்ய தாரே 2 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

கொல்கத்தா தரப்பில் மோர்னே மோர்கல் 2 விக்கெட்டும், ஷகிப் அல்–ஹசன் (4 ஓவரில் 21 ரன்), சுனில் நரின் (4 ஓவரில் 18 ரன்) பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

மும்பை வெளியேற்றம்?

எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் திரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா 80 ரன்களும் (52 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் கம்பீர் 14 ரன்களும், மனிஷ் பாண்டே 14 ரன்களும், ஷகிப் அல்–ஹசன் 9 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். தனது 100–வது ஆட்டத்தில் விளையாடிய யூசுப் பதான் 20 ரன்களுடன் (13 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தார்.

10–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 5–வது வெற்றியாகும். அதே சமயம் 10–வது போட்டியில் களம் கண்ட நடப்பு சாம்பியன் மும்பைக்கு இது 7–வது தோல்வியாகும். இதன் மூலம் அந்த அணியின் பிளே–ஆப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இந்த ஆட்டத்துடன் மும்பை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா (இலங்கையை சேர்ந்தவர்) சர்வதேச போட்டிக்காக இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்.

category:

புதுவை சட்டசபை துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் பிறந்த நாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் வாழ்த்து

Posted: 14 May 2014 12:39 PM PDT

திருக்கனூர்,

புதுவை சட்டசபை துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முதல்- அமைச்சர் ரங்கசாமி நேரில் கலந்து கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

துணை சபாநாயகர் பிறந்தநாள்

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் நேற்று தனது 44-வது வயது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி அவர் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து குடும்பத்துடன் திருக்கனூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

முதல்-அமைச்சர் நேரில் வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் கலந்து கொண்டு துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு டி.பி.ஆர்.செல்வம் சால்வை அணிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், காட்டேரிக்குப்பம் ஸ்ரீஅன்னை ராணி கான்வென்ட் மேல்நிலை பள்ளி நிர்வாகி பொன்.நா.சண்முகம், திருக்கனூர் போன்நேரு மேல்நிலை பள்ளி நிர்வாகி துரை.ஜானகிராமன், சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளி நிர்வாகி சம்பத், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜேந்திரன், கலியபெருமாள், மகேந்திரன், சேகர், வி.கே.ராமன் என்ஜினீயரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் கோதண்டராமன், ஜோதி லேபரட்ரீஸ் மேலாளர் கார்த்திகேயன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு டி.பி.ஆர்.செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பாரத ரிசர்வ் வங்கி கமிட்டி பரிந்துரை பொதுத்துறை வங்கிகளில், அரசின் பங்கு மூலதனத்தை குறைக்க வேண்டும்

Posted: 14 May 2014 12:15 PM PDT

மும்பை

பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தை 50 சதவீதத்திற்கும் கீழாக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் பி.ஜே.நாயக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி கமிட்டி இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

செயல்திறன் பாதிப்பு

இந்த கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் ஆகிய இரண்டு அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன. மேலும் சில அமைப்புகளின் குறுக்கீடுகளும் வளர்ச்சிக்கு தடைக்கற்களாக உள்ளன. இதனையடுத்து, 26 பொதுத்துறை வங்கிகளின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

''பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு மூலதனத்தை 50 சதவீதத்திற்கும் கீழாக குறைப்பதால் தடைக்கற்கள் அகற்றப்படும். வங்கிகளின் போட்டித் திறன் மேம்படும். அதேசமயம், மத்திய அரசு தொடர்ந்து அதிக பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கும். மத்திய அரசின் கட்டுப்பாடு குறையாது'' என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசல் 3 விதிமுறை

சர்வதேச வங்கிகள் செயல்பாட்டு விதிமுறைகளின் படி (பேசல்மிமிமி) அடுத்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.4.15 லட்சம் கோடி மூலதனம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு பங்கு மூலதனத்தை மத்திய அரசு வழங்க முடியாது. எனவே, வங்கிகள் இதர வழிமுறை வாயிலாக தேவையான நிதியை திரட்ட வேண்டும்.

இதற்கு தீர்வு காணும் வகையில் 'ஸ்பெஷல் பர்ப்பஸ் வெஹிகிள்' எனப்படும் சிறப்பு நிறுவனம் ஒன்றை அமைக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. வங்கிகளின் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் இந்த சிறப்பு நிறுவனத்துக்கு மாற்றப்படும். ரியல் எஸ்டேட் சொத்தை வாடகைக்கு அளித்து அதன் வாயிலாக ஈட்டும் வருவாயை அடிப்படையாக வைத்து இந்த சிறப்பு நிறுவனம் நிதி திரட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு மூலதனம் குறைக்கப்பட வேண்டும் என்ற செய்தி வெளியானதையடுத்து நேற்று வர்த்தகத்தின் இடையில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலை 13 சதவீதம் வரை அதிகரித்தது. பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கி பங்கு விலை முறையே 13.4 சதவீதம் மற்றும் 8.7 சதவீதம் உயர்ந்தது. கனரா வங்கி பங்கின் விலை 6.7 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 1.59 சதவீதமும் உயர்ந்தது.

வங்கிப் பங்குகள்

மத்தியில் புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பொருளாதாரத்திற்கும், வங்கிகளின் செயல்திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் காரணமாக வங்கி பங்குகளில் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கின் முதலீடு அதிகரித்து வருகிறது.

ரூ.8,000 கோடி கூடுதல் மூலதனம்

நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.8,000 கோடி மூலதனம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.11,200 கோடி பங்கு மூலதனம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேவைப்பாடு அதிகரித்துள்ளதால் கூடுதலாக ரூ.6,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரை மூலதனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிச்சேவை துறை செயலாளர் ஜீ.எஸ்.ஸாந்து தெரிவித்துள்ளார். இது குறித்து புதிய அரசு முடிவு எடுக்கும் என தெரிகிறது.

கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.14,000 கோடி மூலதன உதவி அளித்தது. இதில், ரூ.2,000 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கும், ரூ.1,200 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும் வழங்கப்பட்டது.

கடனை வசூலிப்பதில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி–மார்ச்) வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு 4.44 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில் ரூ.5.07 சதவீதமாக இருந்தது.

image: 

category:

மருத்துவபடிப்புக்கு விண்ணப்பம் வழங்கும் பணி மருத்துவக்கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்

Posted: 14 May 2014 12:13 PM PDT

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் வழங்கும் பணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.

விண்ணப்பம் வழங்கும் பணி

தமிழகத்தில் சென்னை மருத்துவக்கல்லூரி உள்பட 19 மருத்துவக்கல்லூரிகள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று காலை தொடங்கியது. தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் பணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் மகாதேவன் தொடங்கி வைத்தார். பின்பு அவர் கூறியதாவது:-

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று (நேற்று) முதல் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை மாணவர்கள் வாங்கி செல்லலாம். வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு 1,627 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. இதனால் இந்த ஆண்டு கூடுதல் தேவைகள் இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியே கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்பட்டாலும் உடனே சென்னையில் இருந்து வரவழைக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்

விண்ணப்பங்கள் வாங்க வரும் ஓ.சி., பி.சி., எம்.பி.சி. மாணவர்கள் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பகட்டணம் ரூ.500-யை செயலாளர், மருத்துவக்கல்வி தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் வரைவோலை எடுத்து வர வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், அருந்ததியினர் ஆகிய பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பகட்டணம் கிடையாது. இவர்கள் 2 சாதிச்சான்று நகல்களை கொண்டு வர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நாள் அடுத்தமாதம்(ஜூன்) 2-ந்தேதியாகும்.

சென்னை மருத்துவக்கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தரப்பட்டியல் வெளியிடும் நாள், கலந்தாய்வு குறித்த தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகாமி, கல்வி அலுவலர் ஸ்ரீமதி, மருத்துவக்கல்லூரி பேராசிரியை சாந்தி, கண்காணிப்பாளர் பாலையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விண்ணப்பங்களை வாங்கி செல்வதற்காக மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

category:

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு தளர்த்தும் ஆபரண தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை

Posted: 14 May 2014 12:09 PM PDT

கொல்கத்தா

பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் என தங்கம் மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இறக்குமதி வரி

நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்தியது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் ரிசர்வ் வங்கி விதித்தது. இந்த நிபந்தனைக்கு 80:20 விதிமுறை என்று பெயர். இந்த விதிமுறையால் தங்கம் இறக்குமதி குறைந்து ஆபரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்தலும் அதிகரித்துள்ளது. எனவே, 80:20 விதிமுறையை நீக்க வேண்டும் என இத்துறையின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் ஆபரண தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி இது குறித்து கூறுகையில், ''இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை. 80:20 விதிமுறையைத்தான் நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. கடத்தல் அதிகரித்துள்ளதால் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பாரதீய ஜனதா ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 74 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை 43 சதவீதம் குறைந்து 1,008 கோடி டாலராக குறைந்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளதால் புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு ஆபரண தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்கும் என அனைத்திந்திய நவரத்தின மற்றும் ஆபரண வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரேஷ் சோனி தெரிவித்துள்ளார்.

தங்கம் சப்ளை

விதிமுறைகள் தளர்த்தப்படுவதால் உள்நாட்டில் தங்கம் சப்ளை அதிகரிக்கும். இதன் காரணமாக நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி கவுன்சில் தலைவர் விபில் ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2013–14–ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி சரிவடைந்து இருந்தது.

image: 

category:

நவம்பர்–ஏப்ரல் மாத காலத்தில் பாமாயில் இறக்குமதி 14 சதவீதம் குறைந்தது

Posted: 14 May 2014 12:04 PM PDT

புதுடெல்லி

நடப்பு எண்ணெய் பருவத்தில் (2013 நவம்பர்–2014 அக்டோபர்) ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் பாமாயில் இறக்குமதி 14 சதவீதம் குறைந்து 37 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்த 2012–13 பருவத்தின் இதே காலத்தில் 43 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

60 சதவீதம் இறக்குமதி

இந்தியா தனது மொத்த தாவர எண்ணெய் (சமையல் எண்ணெய் + இதர எண்ணெய்) தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 1.80 கோடி டன் அளவிற்கு தாவர எண்ணெய் இறக்குமதியாகிறது. இதில் பாமாயிலின் பங்குதான் அதிகமாக உள்ளது. அதாவது அதனுடைய பங்கு 80 சதவீத அளவிற்கு உள்ளது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் 4.38 லட்சம் டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2013 ஏப்ரல் மாத இறக்குமதியை விட இது 87 சதவீதம் அதிகமாகும். அதே சமயம் சுத்திகரித்த பாமாயில் இறக்குமதி 2.53 லட்சம் டன்னிலிருந்து 81 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. கச்சா சமையல் எண்ணெயில் சோயா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்து 1.13 லட்சம் டன்னை எட்டியுள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்து 1.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

மே 1 நிலவரப்படி, பல்வேறு துறைமுகங்களில் 4.65 லட்சம் டன் சமையல் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் கச்சா பாமாயில் மட்டும் 2.30 லட்சம் டன் உள்ளது. சமையல் எண்ணெய் தவிர வேறு சில தாவர எண்ணெய் வகைகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதிப்பீட்டின்படி மற்ற எண்ணெய் வகைகளின் இறக்குமதி 13,325 டன்னாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது 13,500 டன்னாக இருந்தது.

தாவர எண்ணெய்

சமையல் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வகைகளுமாக மொத்தம் 8.32 லட்சம் டன் தாவர எண்ணெய் ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 6.54 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆக, இறக்குமதி 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

image: 

category:

சித்ரா பவுர்ணமியையொட்டி பிரகதீஸ்வரர்–பிரகன்நாயகிக்கு சிறப்பு அலங்காரம்

Posted: 14 May 2014 11:55 AM PDT

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வானுலக உயர்ந்த கோபுரம், பெரியநந்தி, கோவிலில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள் அனைத்தும் காண்போரை மெய்சிலிர்க்க செய்கின்றன. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரகதீஸ்வரர், பிரகன்நாயகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் வள்ளி–தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெரியகோவிலில் உள்ள கருவூராருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தஞ்சை நகர கிளை, அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை சார்பில் பெரியகோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் பொதுமேலாளர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். இதில் வக்கீல் கோ.அன்பரசன், அறக்கட்டளை நிர்வாகிகள் தமிழரசு, மோகன், பரமசிவம், எண்ணரசு, ஜெயபாலன், முருகேசன், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

image: 

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™