Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாராளுமன்ற தொகுதி கண்ணோட்டம் : வடசென்னை தொகுதி

Posted: 06 Mar 2014 12:38 PM PST

1957–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வடசென்னை பாராளுமன்ற தொகுதி, 1971–ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 1977–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை இதன் அடிப்படையிலேயே இங்கு தேர்தல் நடந்தது. பின்னர், 2008–ம் ஆண்டு தொகுதி வரையறை மூலம் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

தற்போதைய வடசென்னை பாராளுமன்ற தொகுதியில், திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), ராயபுரம் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தி.மு.க. அதிக வெற்றி

 தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது தி.மு.க.வே அதிக முறை இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது.

தி.மு.க. 10 முறையும், இ.காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்த பாராளுமன்ற தொகுதியில், 1957–ம் ஆண்டில் எஸ்.சி.சி.அந்தோணி பிள்ளையும் (சுயேச்சை), 1962–ம் ஆண்டு பி.சீனிவாசனும் (காங்கிரஸ்) வெற்றி பெற்றனர்.

1967, 1971–ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் நாஞ்சில் மனோகரனும், 1977–ம் ஆண்டில் ஏ.வி.பி.ஆசைத்தம்பியும், 1980–ம் ஆண்டு ஜி.லட்சுமணனும், 1984–ம் ஆண்டு என்.வி.என்.சோமுவும் என தி.மு.க. வேட்பாளர்களே    தொடர்ந்து     5 முறை வெற்றி பெற்றனர்.

 அதன்பிறகு, 1989–ம் ஆண்டு முதல் 1991–ம் ஆண்டு வரை நடந்த 2 தேர்தல்களில் தா.பாண்டியன் (காங்கிரஸ் கூட்டணி) வெற்றி பெற்றார். 1996–ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் என்.வி.என்.சோமு (தி.மு.க.) வெற்றி பெற்றார். அதன்பின்னர் நடந்த 3 தேர்தல்களில் (1998, 1999, 2004) தி.மு.க. வேட்பாளர் சி.குப்புசாமி தொடர்ந்து வெற்றி பெற்றார்.

கடைசியாக 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் டி.கே.எஸ்.இளங்கோவன் 2,81,055 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு) 2,61,902 வாக்குகளும் பெற்றனர். தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட யுவராஜ், யாரும் எதிர்பாராத விதமாக 66,375 ஓட்டுகள் வாங்கினார்.  

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

பொதுவாக, ''வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது'' என்று சொல்வார்கள். ஆனால், சென்னை மாநகரை எடுத்துக் கொண்டால், வடக்கு (வடசென்னை) தேய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இந்த தொகுதியில் நிறைவேற்றப்படவில்லை.

வடசென்னை தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்கு, நாடார், வன்னியர், மீனவர், முஸ்லிம், தலித் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஏராளமானோர் இந்த தொகுதியில் உள்ளனர்.

வடசென்னை தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினை என்று பார்த்தால், குடிநீரில் கழிவு நீர் கலப்பது, கொசுத்தொல்லை, குண்டும் குழியுமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படும் கச்சா எண்ணெய் கசிவால், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் ஆயில் கலந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

எண்ணூர் – மணலி சாலை பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு வரும் கனரக வாகனங்களால், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கும் தீர்வு எட்டப்படவில்லை.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிக்கடி குப்பைகள் எரிக்கப்படுவதால், புகைமூட்டம் ஏற்பட்டு காற்று மாசுபடுவதுடன், அங்குள்ள மக்களுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

வடசென்னை பகுதியில், ரெயில்வே பாதையை கடக்க, பெரம்பூர், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மற்றும் பட்டரவாக்கம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. மற்ற இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளே இருக்கின்றன. மழை காலங்களில் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகின்றன.

 வியாசர்பாடி கணேசபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பேசின்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலமும் மெதுவாகவே நடந்து வருகிறது. கொரட்டூர் பகுதியில் நடந்து வரும் சுரங்கப்பாதை பணியும் ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. மூலக்கடை மேம்பால பணிகள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு மேலாக நடந்தும், இன்னும் தூண்கள் கூட முழுமையாக அமைக்கப்படவில்லை. இப்படி, வடசென்னையை பொறுத்தவரை, குறைகள் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், நிறையென்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

வெற்றி யார் கையில்?

இந்த தொகுதியில் தி.மு.க. அதிக முறை வெற்றிகளை பெற்றிருந்தாலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 6 தொகுதிகளில் 4–ல் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் 3,55,700 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, இந்த தேர்தலில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் உள்ளனர்.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 77 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக கணக்கிட்டால், திருவொற்றியூரில் 2,55,480 வாக்காளர்களும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் 2,25,648 வாக்காளர்களும், பெரம்பூரில் 2,59,861 வாக்காளர்களும், கொளத்தூரில் 2,44,229 வாக்காளர்களும், திரு.வி.க. நகரில் 2,10,072 வாக்காளர்களும், ராயபுரத்தில் 1,82,045 வாக்காளர்களும் உள்ளனர்.

வடசென்னை தொகுதி மக்களிடம் எம்.பி. குறித்து கருத்து கேட்டபோது, தொகுதி பக்கம் அவர் வருவதே இல்லை என்று புகார் தெரிவித்தனர். மேலும், திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே புதிய ரெயில் நிலையம் அமைத்து தருவேன் என்றும், திருவொற்றியூரில் மும்பை, கொல்கத்தா செல்லும் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றும், கடலரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தருவேன் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் எதையும் அவர் நிறைவேற்றித் தரவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கடைசி லீக் ஆட்டத்திலும் இலங்கை அணி வெற்றி வங்காளதேசத்தை போராடி வீழ்த்தியது

Posted: 06 Mar 2014 12:03 PM PST

மிர்புர்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி லீக்கிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது.

மலிங்காவுக்கு ஓய்வு

5 அணிகள் இடையிலான 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இலங்கையும், பாகிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டியை எட்டி விட்டன. 5 முறை சாம்பியனான இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில் சம்பிரதாய மோதலான கடைசி லீக்கில் இலங்கையும், வங்காளதேசமும் மிர்புரில் நேற்று சந்தித்தன. இலங்கை அணியில் மலிங்கா மற்றும் சன்டிமாலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அஷன் பிரியஞ்சன், செனநாயக்கே சேர்க்கப்பட்டனர். வங்காளதேச அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

சுழல் ஜாலம்

டாஸ் ஜெயித்த வங்காளதேசம் முதலில் பேட் செய்தது. அனமுல் ஹக்கும், ஷம்சுர் ரகுமானும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். நிதானமாக ஆடிய இந்த ஜோடியை, ஸ்கோர் 74 ரன்களாக (18.2 ஓவர்) உயர்ந்த போது சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் பிரித்தார். அவரது பந்தில் ஷம்சுர் ரகுமான் 39 ரன்களில் (57 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக் (1 ரன்) அதே ஓவரில் கிளீன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து இலங்கையின் சுழல் தாக்குதலில் நிலை கொள்ள முடியாமல் வங்காளதேசம் தடம் புரண்டது. மொமினுல் ஹக்கை (49 ரன், 86 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பிரியஞ்சன் வெளியேற்றினார். நட்சத்திர வீரர்களான கேப்டன் முஷ்பிகுர் ரம் (4 ரன்), ஷகிப் அல்-ஹசன் (20 ரன்) ஆகியோரும் சுழலில் சிக்கி சிதறினர்.

205 ரன்கள் இலக்கு

சுழற்பந்து வீச்சாளர்களின் ஒத்துழைப்புடன் இறுதி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர்.

இருப்பினும் நசிர் ஹூசைன் (30 ரன்), மக்முதுல்லா (30 ரன்) ஆகியோர் கொஞ்சம் தாக்குப்பிடித்து தங்கள் அணி 200 ரன்களை கடக்க உதவினர். ஆனால் கடைசி 10 ஓவர்களில் வெறும் 3 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டன. 50 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 9 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.

காப்பாற்றிய மேத்யூஸ்

அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் புகுந்த இலங்கைக்கு, வங்காளதேச பவுலர்கள் 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர். இதில் சங்கக்கரா (2 ரன்) இந்த தொடரில் முதல் முறையாக ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்ததும், மஹேலா ஜெயவர்த்தனே ரன்-அவுட் ஆனதும் அடங்கும். இதனால் நெருக்கடியில் இருந்து இலங்கையால் உடனடியாக மீள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த அணி 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதன் பின்னர் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூசும், சதுரங்கா டி சில்வாவும் இணைந்து அணியை படிப்படியாக சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் 6-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேகரித்தனர். சதுரங்க டி சில்வா 44 ரன்னில் (52 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த திசரா பெரோ (15 ரன்) ரன்-அவுட் ஆனார். மறுமுனையில், அவசரப்படாமல் தேவைக்கு ஏற்ப சாமர்த்தியமாக ஆடிய கேப்டன் மேத்யூஸ் தனது 19-வது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன், அணியையும் வெற்றிகரமாக கரை சேர்த்தார்.

இலங்கை வெற்றி

இலங்கை அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் 74 ரன்களுடன் (103 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத இலங்கை அணி, இந்த முறை தோல்வியை சந்திக்காமல் அனைத்து லீக்கிலும் (4 ஆட்டம்) வெற்றிக்கனியை பறித்து அசத்தியுள்ளது. அதே சமயம் உள்ளூர் அணியான வங்காளதேசம் 4 ஆட்டங்களிலும் தோற்று ஏமாற்றத்துடன் நடையை கட்டியது.

இலங்கை-பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

வங்காளதேசம்

அனமுல் ஹக்(சி)திரிமன்னே

(பி) பிரியஞ்சன் 49

ஷம்சுர் ரகுமான் எல்.பி.டபிள்யூ

(பி) மென்டிஸ் 39

மொமினுல் ஹக்(பி)மென்டிஸ் 1

முஷ்பிகுர் ரம் எல்.பி.டபிள்யூ

(பி) டி சில்வா 4

ஷகிப் அல்-ஹசன் (சி)

மேத்யூஸ் (பி) பிரியஞ்சன் 20

நசிர் ஹூசைன் (சி)

ஜெயவர்த்தனே (பி) லக்மல் 30

மக்முதுல்லா (பி) லக்மல் 30

ஜியார் ரகுமான் (பி)

திசரா பெரேரா 12

அராபத் சன்னி (நாட்-அவுட்) 2

ருபெல் ஹூசைன் (பி)

திசரா பெரேரா 0

அல்-அமின் ஹூசைன்

(நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 17

மொத்தம் (50 ஓவர்களில்

9 விக்கெட்டுக்கு) 204

விக்கெட் வீழ்ச்சி: 1-74, 2-76, 3-87, 4-106, 5-119, 6-174, 7-183, 8-203, 9-203

பந்து வீச்சு விவரம்

லக்மல் 10-0-32-2

திசரா பெரேரா 8-0-29-2

செனநாயக்கே 10-1-37-0

டி சில்வா 10-0-33-1

அஜந்தா மென்டிஸ் 9-0-55-2

பிரியஞ்சன் 3-0-11-2

இலங்கை

குசல் பெரேரா (சி) அனமுல்

(பி) அல்-அமின் 0

திரிமன்னே (சி) ருபெல்

(பி) அராபத் 33

சங்கக்கரா (சி) நசிர் ஹூசைன் (பி) அல்-அமின் 2

ஜெயவர்த்தனே(ரன்-அவுட்) 0

பிரியஞ்சன் (சி) அனமுல்

(பி) ஜியார் 24

மேத்யூஸ் (நாட்-அவுட்) 74

டி சில்வா (சி) அனமுல்

(பி) மக்முதுல்லா 44

திசரா பெரேரா (ரன்-அவுட்) 15

செனநாயக்கே (நாட்-அவுட்) 7

எக்ஸ்டிரா 9

மொத்தம் (49 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 208

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-6, 3-8, 4-47, 5-75, 6-157, 7-193

பந்து வீச்சு விவரம்

அல்-அமின் ஹூசைன் 10-2-42-2

ருபெல் ஹூசைன் 6-0-25-0

ஷகிப் அல்-ஹசன் 10-0-27-0

ஜியார் ரகுமான் 10-0-34-1

அராபத் சன்னி 7-0-46-1

மக்முதுல்லா 6-1-30-1
 

category:

7 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த மளிகை கடைக்காரர் கைது

Posted: 06 Mar 2014 12:01 PM PST

சேலம்,

சேலம் அருகே 7 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு முத்தம்

சேலம் அல்லிக்குட்டை வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் 7 வயது சிறுமி மிட்டாய் வாங்க வந்தாள். அப்போது அந்த சிறுமியை பிடித்து ராமநாதன் சில்மிஷம் செய்ததுடன் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் நடந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறினாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் ஆவேசமடைந்து மளிகை கடைக்கு சென்றனர்.

பொதுமக்கள் முற்றுகை

பின்னர் அவர்கள் ராமநாதனை பிடித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியின் பெற்றோர், எனது மகளுக்கு ராமநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறினர்.

இதற்கிடையில் ராமநாதனை போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றுக்கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மளிகை கடைக்காரர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராமநாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

category:

‘‘அணியில் சுமையாக தொடரமாட்டேன்’’ பாகிஸ்தான் வீரர் அப்ரிடி பேட்டி

Posted: 06 Mar 2014 12:00 PM PST

மிர்புர்

பாகிஸ்தான் அணியில் சுமையாக ஒரு போதும் நீடிக்கமாட்டேன் என்று அப்ரிடி கூறியுள்ளார்.

அதிரடி மன்னன்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி இறுதிசுற்றுக்குள் நுழைய அச்சாணியாக இருந்தவர் ஆல்–ரவுண்டர் சாகித் அப்ரிடி என்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 34 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் திரிலிங்கான வெற்றியை தேடித்தந்த அப்ரிடி, வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்திலும் இறுதி கட்டத்தில் ருத்ர தாண்டவமாடினார். அதில் 25 பந்துகளில் 7 சிக்சருடன் 59 ரன்கள் திரட்டி பாகிஸ்தான் 327 ரன்கள் இலக்கை 'சேசிங்' செய்ய வித்திட்டார்.

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மிர்புரில் நாளை மோதுகின்றன. இதற்கு தயாராகி வரும் 34 வயதான அப்ரிடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

சுமையாக இருக்கமாட்டேன்

எனது ஆட்டத் திறமையின் மூலம் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் எல்லா நாளும் இதே போன்று ரன்கள் குவிக்க முடியாது. அதனால் தான் பேட்டிங் மட்டுமின்றி, பந்து வீச்சிலும் கவனம் செலுத்துகிறேன். இந்த வழியில் அதாவது பேட்டிங் அல்லது பந்து வீச்சில் எனது திறமையை வெளிப்படுத்தி, அணிக்கு உதவிட என்னை தயாராக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

2015–ம் ஆண்டு உலக கோப்பையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். உடல் தகுதி இருக்கும் வரை எனது வாழ்க்கை முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்து தொடர்ந்து விளையாடுவேன். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு சுமையாக இருக்கிறேன் என்று எப்போது உணரத் தொடங்குகிறேனோ அந்த தினமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். மற்றவர்கள் அது பற்றி (ஓய்வு குறித்து) பேச வாய்ப்பு தரமாட்டேன்.

இந்தியாவுடன் கிரிக்கெட்

இந்திய மண்ணில் நான் எப்போதும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இந்தியாவை தவிர வேறு எந்த இடத்திலும் ரசித்து, அனுபவித்து விளையாடியதில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நமக்குள் நல்ல உறவு இருக்க வேண்டும். கிரிக்கெட்டால் மட்டுமே இரு நாடுகள் இடையிலான உறவில் முன்னேற்றம் காண முடியும்.

இந்தியா–பாகிஸ்தான் இடையே அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். அது தான் என்னுடைய விருப்பமும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தான் எப்போதும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. அச்சுறுத்தல் நிலவிய போதிலும் கூட, பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான உறவுக்கு, கிரிக்கெட்டால் மட்டுமே புத்துயிர் அளிக்க முடியும். விளையாட்டு நட்புறவை வளர்க்கும்.

இவ்வாறு அப்ரிடி கூறினார்.

ஐ.பி.எல். வாய்ப்பு?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களின் எதிர்கால வாய்ப்பு பற்றி அப்ரிடியிடம் கேட்ட போது  'இது பற்றி இந்திய அரசிடம் கேளுங்கள். ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்' என்று காட்டமாக பதில் அளித்தார்.
 

category:

நாகை தாலுகாவில் 85 ஏக்கரில் மீன்வளப்பல்கலைக்கழகம் நாகை பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

Posted: 06 Mar 2014 12:00 PM PST

தஞ்சை

நாகை தாலுகாவில் உள்ள நாகூர் மற்றும் முட்டம் கிராமங்களில் 85 ஏக்கரில் மீன்வளப்பல்கலைக்கழகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

ஆழ்கடல் துறைமுகம்

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தொலைநோக்கு திட்டம் 2023 மற்றும் புதிய தொழிற்கொள்கைகளை நான் வெளியிட்டு உள்ளேன்.

நாகப்பட்டினத்தில் கூட்டு முயற்சியில் எரிவாயு மின்நிலையத்தை அமைக்கவும், இயற்கை திரவ எரிவாயுவை இறக்குமதி செய்யும் வகையில் ஆழ்கடல் துறைமுகத்தை அமைக்கவும் டிட்கோ நிறுவனத்திற்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வறட்சி நிவாரணம்

மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு பயிர் காப்பீடு செய்து. வறட்சி நிவாரணமாக கடந்த ஆண்டு 20 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,328 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நாகை உள்பட கடலோர மாவட்டங்களில் தொடர் வெள்ளப்பெருக்கு, புயல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடலோர பேரிடர் பாதிப்பு குறைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,481 கோடி மதிப்பில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

 கடல் நீர் உட்புகுவதை தடுக்க நிலத்தடி, கடலோர விவசாய நிலங்களில் நீரின் உப்புத்தன்மை குறைக்க ஆசிய வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தும் திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் 80 விழுக்காடு அரசு மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் 5 குதிரை திறன் கொண்ட பம்புசெட்டுகள் அமைத்துக்கொள்ள ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 137 பேர் பயன் அடைந்துள்ளனர்.

மீன்வளப்பல்கலைக்கழகம்

மீனவ மக்களுக்கு உதவும்பொருட்டு மீன்பிடிப்பு தடைக்கால நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் சிறப்பு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மீனவ மகளிருக்கு ரூ.1,800 வழங்கப்படுகிறது. டீசல், மண்எண்ணை மானிய விலையில் வழங்கப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நாகை மாவட்டம் நாகூர் கிராமத்தில் மீன்பதனிடும் பூங்கா ரூ.23 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் செருதூரில் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளும்வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பூம்புகாரில் சுமார் 79 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகை தாலுகாவிற்குட்பட்ட பனங்குடி மற்றும் நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மீன்வள பல்கலைக்கழகம் அமைக்கும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப்பெறும் போது இந்திய நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும், விலைவாசி உயர்வை கட்டுக்கொண்டு வரவும், காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற நதிநீர்ப்பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கை பேரின் போது இனப்படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் ஆக்கவும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அறவே ஒழியவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்

'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல அ.தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்பினை நீங்கள் நிச்சயம் நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பாரதம் ஒளிர, தமிழகம் மிளிர வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் டாக்டர் கே.கோபாலுக்கு எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச்சின்னமாம் ''இரட்டை இலை'' சின்னத்தில் வாக்களித்து அவரை மகத்தான வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாக்கை தமிழகத்தின் நலனுக்காவும், தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துங்கள். இந்திய நாட்டை காப்பாற்றுங்கள். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

''அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'' என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை நினைவுபடுத்தி, இந்திய நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று திரண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று மீண்டும் ஒரு முறை உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

category:

News Group Category:

அஸ்வின் எனக்கு போட்டி இல்லை ஹர்பஜன்சிங் சொல்கிறார்

Posted: 06 Mar 2014 11:58 AM PST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கடந்த ஒரு ஆண்டுகளாக அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு வருகிறார். உள்ளூர் போட்டிகளில் விளையாடி அணியில் மீண்டும் இடம் பிடிக்க முயற்சித்து வரும் 33 வயதான ஹர்பஜன்சிங்கிடம், உங்களுக்கு போட்டியாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளங்குகிறாரா? என்று கேட்டதற்கு பதிலளித்து கூறியதாவது:-

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு அஸ்வினை நான் போட்டியாக கருதவில்லை. எல்லா காலங்களிலும் எனக்கு ஒரே போட்டியாளர் தான். என்னையே எனக்கு போட்டியாளராக கருதுகிறேன். மற்றபடி அஸ்வின் உள்பட யாரையும் ஒருபோதும் போட்டியாக நினைத்ததில்லை. சர்வதேச விளையாட்டு என்பது தனிப்பட்ட பயணம். அதில் நமக்கு நாமே போட்டியாக விளங்கினால் தான் நம்முடைய திறமையை வளர்த்து கொள்ள முடியும். எப்பொழுதும் நமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். பிற விஷயங்களை குறித்து மற்றவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும். நடப்பு இந்திய அணி வீரர்கள் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு வயது ஒரு பிரச்சினை கிடையாது. உத்வேகமும், ஆர்வமும் தான் அவசியமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

category:

பெடரேஷன் கோப்பை கைப்பந்து தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’

Posted: 06 Mar 2014 11:53 AM PST

எர்ணாகுளம்,

27–வது பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு–சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25–21, 25–19, 25–19 என்ற நேர்செட்டில் சர்வீசஸ் அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. உத்தரகாண்ட் அணி 3–வது இடத்தையும், கேரள அணி 4–வது இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி 3–0 என்ற செட் கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணி 3–வது இடத்தையும், அரியானா அணி 4–வது இடத்தையும் பிடித்தன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே தலா ரூ.60 ஆயிரமும், ரூ. 40 ஆயிரமும், ரூ.30 ஆயிரமும், ரூ.20 ஆயிரமும், ரூ.40 ஆயிரமும், ரூ.30 ஆயிரமும், ரூ.20 ஆயிரமும், ரூ.10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன.

category:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது

Posted: 06 Mar 2014 11:50 AM PST

ஆன்டிகுவா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

கடைசி ஒருநாள் கிரிக்கெட்

இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோரூட் 107 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 99 ரன்னிலும், மொயின் அலி 55 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டும், ரவிராம்பால், சுனில் நரின், மில்லர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 29–வது ஒருநாள் போட்டியில் ஆடிய ஜோரூட் பதிவு செய்த முதல் சதம் இதுவாகும்.

ராம்டின் சதம் வீண்

பின்னர் 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அந்த அணி 43 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தாலும், 5–வது விக்கெட்டுக்கு களம் கண்ட விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்டின் மறுமுனையில் ஏற்பட்ட சரிவை பொருட்படுத்தாமல் அடித்து ஆடினார். 109–வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ராம்டின் 99 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் தனது கன்னி சதத்தை எட்டினார்.

ராம்டின் ஒருபுறம் நிலைத்து நின்று போராடினாலும், மறுமுனையில் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். கடைசி விக்கெட்டாக ராம்டின் (128 ரன்கள்), டிம் பிரிஸ்னன் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இங்கிலாந்து வெற்றி

47.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 278 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் டிம் பிரிஸ்னன் 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டும், ஜோரூட், மொயின் அலி, ஸ்டீபன் பாரி, ரவிபோபரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஜோரூட்டின் முதல் சதம் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆனால் ராம்டினின் கன்னி சதம் கானல் நீரானது. இங்கிலாந்து வீரர் ஜோரூட் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2–1 என்ற கணக்கில் தனதாக்கியது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்திலும், 2–வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது.

20 ஓவர் போட்டி

இதனை அடுத்து நடைபெறும் இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் வருகிற 9–ந் தேதி நடக்கிறது.

category:

சந்தோஷ் கோப்பை கால்பந்து: அரை இறுதியில் இன்று தமிழ்நாடு–மிசோரம் மோதல்

Posted: 06 Mar 2014 11:48 AM PST

சிலிகுரி,

சந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்குவங்காளத்தில் உள்ள சிலிகுரியில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவில் மிசோரம் முதலிடத்தையும், மராட்டியம் 2–வது இடத்தையும், 'பி' பிரிவில் இந்தியன் ரெயில்வே முதலிடமும், தமிழ்நாடு 2–வது இடமும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு–மிசோரம் அணிகள் மோதுகின்றன. 4 லீக் ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி கண்டுள்ள மிசோரம் அணி முதல்முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இரண்டு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள தமிழக அணி 2 தடவையும் கோப்பையை கோட்டைவிட்டது. மாலை 6.30 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் 3 முறை சாம்பியன்களான இந்தியன் ரெயில்வே–மராட்டியம் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இரண்டு ஆட்டங்களும் தூர்தர்ஷனின் விளையாட்டு சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அரை இறுதி ஆட்டம் குறித்து தமிழக அணி பயிற்சியாளர் ரஞ்சித் கருத்து தெரிவிக்கையில், 'மிசோரம் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. சில சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அந்த அணி வேகமாக செயல்படுகிறது. அவர்களுக்கு எதிராக நாங்கள் எங்களது முழு அனுபவத்தையும் வெளிப்படுத்தி விளையாட வேண்டியது அவசியமானதாகும். எங்களது ஆட்ட திட்டத்தின்படி எதிர்தாக்குதலை நாங்கள் தொடுக்க வேண்டும். முதல் 20 நிமிடங்களில் நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தி விட்டால் எங்களுக்கு பயனுள்ளதாக ஆட்டம் அமையும்' என்று கூறினார்.

category:

தரவரிசையில் வார்னர் முன்னேற்றம் கோலிக்கு பின்னடைவு

Posted: 06 Mar 2014 11:46 AM PST

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 5 இடங்கள் உயர்ந்து 5–வது இடத்தை பிடித்துள்ளார். அவரது வாழ்க்கையில் சிறந்த தரநிலை இதுவாகும். இந்திய வீரர்கள் புஜாரா ஒரு இடம் சரிந்து 8–வது இடத்திலும், விராட் கோலி 2 இடங்கள் குறைந்து 10–வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஸ்டெயின் முதலிடத்தில் நீடிக்கிறார். கேப்டவுன் டெஸ்டில் 7 விக்கெட்டுகள் சாய்த்து வெற்றிக்கு வழிவகுத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரையான் ஹாரிஸ் 2 இடங்கள் முன்னேறி 2–வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 3–வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 9–வது இடத்தில் இருக்கிறார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™