Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


காங்கிரஸ் கட்சியின் ‘பொய் பலூன்’களை குஜராத் மக்கள் ஏற்கவில்லை ராகுல்காந்திக்கு மோடி பதிலடி

Posted: 30 Mar 2014 01:15 PM PDT

பிஜாப்பூர்,

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொய் பலன்களை மக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் தான் குஜராத்தில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது என்று ராகுல்காந்திக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார்.

மோடி பதிலடி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பேசுகையில், 'இந்தியா ஒளிர்கிறது என்று கடந்த 2004 தேர்தலின்போது பாரதீய ஜனதாவினர் பறக்க விட்ட பலூன் வெடித்து விட்டது (தோற்றுவிட்டது). அதே போன்று இப்போது பாரதீய ஜனதாவின் பிரசார பலூன் வெடித்துவிடும் என உறுதியாக கூறுகிறேன்' என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பதிலடி கொடுத்தார். கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி இதுகுறித்து கூறியதாவது:–

மக்கள் ஏற்கவில்லை

நீங்கள் குஜராத் மாதிரியை பலூனாக கருதிக் கொள்ளுங்கள். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்களது தாயார் (சோனியாகாந்தி) சொல்பவற்றில் நம்பிக்கை உள்ளவர் தானே? உங்களது தாயார் தலைவராக உள்ள ராஜீவ்காந்தி அறக்கட்டளையே, குஜராத் முதலிடத்தில் உள்ளதாக கூறி உள்ளது. உங்களது தாயாரின் பேச்சில் நீங்கள் பலூனை பார்க்கவில்லையா? உங்களது தாயாரும் பலூன்களை பறக்க விட்டு உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பொய்கள் அடங்கிய பலூன்களை 3 தடவையும் (2002, 2007, 2012 சட்டசபை தேர்தல்களின்போது) மக்கள் வெடிக்க செய்து விட்டனர். நீங்கள், உங்களது கட்சி, 18 முதல்–மந்திரிகள் 2002–ம் ஆண்டு குஜராத்தில் பொய் பலூன்களை பறக்க விட்டனர். ஆனால், உங்களது பொய் பலூன்களை மக்கள் ஏற்கவில்லை. அதன்பிறகு 2007, 2012–ம் ஆண்டுகளிலும் உங்களது பொய் பலூன்களை நம்ப மக்கள் மறுத்து விட்டனர். குஜராத்தின் வளர்ச்சியை பார்த்து மக்கள் பா.ஜனதாவை வெற்றி அடைய செய்தனர்.

தேர்தல் குஜராத் அரசுக்கா?

குஜராத் மாநிலம் குறித்து குற்றம்சாட்டுவதை விட்டு விட்டு, நாட்டின் நலனில் ராகுல்காந்தி கவனம் செலுத்த வேண்டும். அவர் எப்போதும் குஜராத் குறித்தே பேசுகிறார். இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது குஜராத் அரசா? குஜராத் முதல்–மந்திரியா? தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்க தான் நடைபெறுகிறது. மத்தியில் தான் ஆட்சி அமைய உள்ளது. இதனால் மத்திய அரசின் சாதனைகள் குறித்து ராகுல்காந்தி ஏன் விவாதிக்கக்கூடாது? கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது என்ன? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தேர்தலில் ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணில் வெற்றி கிடைக்காது. சில மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. நாட்டை கொள்ளையடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களிடம் உள்ள இந்த மனோபாவத்தை நான் கண்கூடாக பார்த்து உள்ளேன்.

வழியனுப்பு விழா

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகளில் 6½ கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 1¼ கோடி இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி தான் செய்த பணிகள் குறித்தும் எதுவும் சொல்வது இல்லை. விலைவாசி உயர்வை 100 நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று உறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை. எனவே இறுதியாக ஒருமுறை காங்கிரசுக்கு வழியனுப்பு விழா கொடுக்க வேண்டியது உள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்புக்கு தகுந்த விலை கிடைப்பது இல்லை. மேலும் சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன. போரில் இறக்கும் வீரர்களை காட்டிலும் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டது. இதற்கு காரணம், மே மாதம் 16–ந்தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு எங்கு இருப்போம் என்று அந்த கட்சிக்கு தெரிந்து விட்டது. மக்கள் ஒரு முறை ஆசி வழங்கி ஆட்சியில் அமர்த்திய பிறகு பணி செய்யாவிட்டால் அந்த இடம் தானே கிடைக்கும். ஏனென்றால் இது மக்கள் ஆட்சி.

பொய்களின் மூட்டை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை. அது தேர்தல் அறிக்கை அல்ல. வெறும் ஏமாற்று ஆவணங்கள். வலிமைமிக்க இளைய சமுதாயத்தை கொண்ட இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும். உலகில் நமது நாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்குவதே தேவையான ஒன்றாக உள்ளது. சிலர் லஞ்சம் அற்ற நாட்டை உருவாக்க முடியாது என்று கூறுகிறார்கள். அதை நான் உறுதியாக மறுக்கிறேன்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

category:

News Group Category:

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர் தற்கொலை மதுரையை சேர்ந்தவர்

Posted: 30 Mar 2014 01:12 PM PDT

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர் தேனியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

அரசு அலுவலர் தற்கொலை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் சந்தனகருப்பு என்ற முனியசாமி (வயது 40). இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்தார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட நிலை கண்காணிப்பு குழு அலுவலராக முனியசாமி நியமிக்கப்பட்டு இருந்தார்.

இவர் இடம் பெற்று இருந்த குழுவினர் அலங்காநல்லூர் அருகே உள்ள கேட்கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர் நிலை கண்காணிப்பு குழுவில் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து இருந்தார். நேற்று காலை தேனி பழைய பஸ் நிலையத்திற்கு வந்த முனியசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை தின்று தற்கொலை செய்து பிணமாக கிடந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று யுகாதி பண்டிகை; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Posted: 30 Mar 2014 12:49 PM PDT

சென்னை,

இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி வாழ்த்து

'யுகாதி' வாழ்த்து தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு மொழி பேசும் மக்கள் யுகாதி திருநாளை மிகச் சிறப்போடு கொண்டாடுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ் மக்கள் தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களுடன் நல்லுறவு கொண்டு கூடி வாழ்வது போலவே, தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரையும் உறவினர்களாக ஏற்று பல்லாண்டு காலமாக இணக்கமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் சமூக, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் நோக்கத்துடன் தெலுங்கு புத்தாண்டு பிறக்கும் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி தெலுங்கு மொழியையும், அம்மொழி பேசும் மக்களையும் பெருமைப்படுத்தியது.

இவ்வாறு தெலுங்கு மொழி பேசும் மக்களை தி.மு.க.வும், தமிழக மக்களும் போற்றி வரும் இந்த இனிய சூழலில் இந்த ஆண்டின் யுகாதி திருநாளை கொண்டாடி மகிழும் அருமை தெலுங்கு மக்கள் அனைவர் வாழ்விலும், வளமும், நலமும் நிறைய, வலிவும், பொலிவும் சேர எனது உளமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

பி.எஸ்.ஞானதேசிகன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இன்று( திங்கட்கிழமை) அன்று 'யுகாதி' பண்டிகை கொண்டாடும் தெலுங்கு பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புத்தாண்டு நாடெங்கிலும், ஒரு எழுச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கி நாடு நலம் பெறத் தக்க வகையில் நன்மை பயக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

திராவிடத்தின் அங்கமாக உள்ள தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு புத்தாண்டு திருநாளாம் யுகாதி பண்டிகை. புதியதாக புத்தாண்டு தொடங்குகிறபோது கடந்த காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி, வருகின்ற காலம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும்.

புத்தாண்டு என்பது புதிய தொடக்கத்திற்கு வழி வகுக்கிறது. அந்த வகையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி என்ற புத்தாண்டு இன்று தொடங்குகிறது. இந்த புத்தாண்டில் மக்கள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ இறைவனை வேண்டி, எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தே.மு.தி.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருமே தமிழர்களின் மொழி வழி சகோதர, சகோதரிகள் தான். தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் தலைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைப்பதற்கான தொடக்கமான இந்த ஆண்டு 'யுகாதி' திருநாள் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

'யுகாதி' என்று சொல்லப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் கன்னட வருடப்பிறப்பு நாளான இன்று(திங்கட்கிழமை), மொழி வேறுபாடுகளை கடந்து, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி வளர்ந்து சமாதானமான, சந்தோஷமான நல்வாழ்வு வாழ நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இந்த உறுதியோடும், உணர்வோடும் செயல்பட்டு, இன்று தொடங்கும் புத்தாண்டில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்று எனது சக தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகளுக்கு இனிய யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

இந்திய தேசிய முஸ்லிம் லீக்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, தமிழ்நாடு ஜனதா தளம் மாநில பொதுச்செயலாளர் கே.ஜான் மோசஸ், விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் பெ.செங்கோடன் உள்பட அரசியல் கட்சி மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும் யுகாதி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

category:

News Group Category:

நரேந்திர மோடியை பிரதமராக்க பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களியுங்கள் விஜயகாந்த் பிரசாரம்

Posted: 30 Mar 2014 12:01 PM PDT

பூந்தமல்லி,

நரேந்திர மோடியை பிரதமராக்க பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் பிரசாரம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் மாசிலாமணி, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோரை ஆதரித்து போரூரை அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

குஜராத்தில் முதல்–மந்திரிக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. தமிழகத்தின் வெண்தாடி வேந்தர் பெரியார். குஜராத்துக்கு வெண்தாடி வேந்தர் நரேந்திரமோடி. இந்த முறை மக்கள் போடும் ஓட்டு எதிரணிகளுக்கு வேட்டாக அமைய வேண்டும். மக்களின் கைகளில் கருப்பு மை வைத்ததால்தான் அரசியல்வாதிகள் பெரும்புள்ளிகளாக மாறி விட்டனர்.

40 தொகுதியிலும் வெற்றி

இந்த பகுதியில் ஏராளமான போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலேயே இவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்றால் சாதாரண நாட்களில் எப்படி இருக்கும்.

நாம் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் மோடி பிரதமராக வருவார். இதுவரை தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு நீங்கள் போட்ட ஓட்டுகள் எல்லாம் போதும். இந்த முறை எங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமராக ஆக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கொளப்பாக்கம் பகுதியிலும் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி

பின்னர் பழவந்தாங்கல், நந்தம்பாக்கம் ஆகிய இடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்து மக்களை வளர்ச்சி அடைய செய்யவில்லை. குஜராத்தில் மதுபானக்கடைகள் இன்றி சிறப்பான ஆட்சியை நரேந்திரமோடி செய்து வருகிறார். அங்கு விவசாயம் வளர்ச்சி அடைந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் குறைந்துவிட்டது. குஜராத்தில் 2,500 தடுப்பணைகளை கட்டி அங்கு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சினிமாவில் நடிப்பேன்

தமிழகத்திற்கு நல திட்டங்களை நிறைவேற்றவும் மக்களுக்கு நல்லது நடக்கவும் தான் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் எனது மகன் நடிக்கும் படத்தில் நான் நடிக்க உள்ளேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா யுவராஜ்சிங், அஸ்வின் அபாரம்

Posted: 30 Mar 2014 11:46 AM PDT

மிர்புர்,

20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

தவான் இல்லை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் (குரூப்2) மோதின. இந்தியா ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டிய நிலையில், ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை பறிகொடுத்து விட்டபடியால் இது 'பயிற்சி' ஆட்டமாகவே அமைந்தது.

இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரஹானே, மொகித் ஷர்மா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் பவுல்க்னெர் நீக்கப்பட்டு, கேமரூன் ஒயிட் சேர்க்கப்பட்டார்.

இந்த தொடரில் முதல் முறையாக இந்திய கேப்டன் டோனி  டாசை இழந்தார். டாசில் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

கோலி 23 ரன்

ரஹானேவும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரோகித் ஷர்மாவின் பேட்டிங்குக்கு ஆயுசு வெறும் 4 பந்து தான். அடுத்து களம் இறங்கி அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்ட விராட் கோலி 23 ரன்னிலும் (22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 19 ரன்னிலும் (16 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினர்.  சுரேஷ் ரெய்னா (6 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால், இந்தியா 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (11.3 ஓவர்) இழந்து தவிப்புக்குள்ளானது.

இதற்கு மத்தியில் யுவராஜ்சிங் தடுமாற்றத்துடன் அணியை தூக்கி நிறுத்த போராடிக் கொண்டிருந்தார். அவரும், கேப்டன் டோனியும் கைகோர்த்த பிறகு தான் மைதானத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் களை கட்டியது. சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் முயர்ஹெட்டின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை யுவராஜ்சிங் தூக்கியடித்து அசத்தினார். டோனியும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை. ஸ்டார்க்கின் பந்து வீச்சில் அவர் அடித்த ஒரு சிக்சர், எல்லைக்கோடு அருகே படம் பிடித்துக் கொண்டிருந்த கேமிராமேனை நோக்கி பதம் பார்க்க சீறிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக கேமிராவை நகர்த்திக் கொண்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டார்.

யுவராஜ்சிங் அரைசதம்

தனது மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவனமுடன் ஆடிய யுவராஜ்சிங், வாட்சனின் பந்து வீச்சில் மறுபடியும் ஒரு இமாலய சிக்சரை பறக்க விட்டு தனது 8–வது அரைசதத்தை கடந்தார்.

யுவி–டோனியின் மிரட்டலடியால் இந்திய அணி 170 ரன்களை தொடுவது போல் தெரிந்தது. ஆனால் கடைசி இரு ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர். கடைசி இரு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன் 3 விக்கெட்டுகளும் விழுந்தது. இதில் டோனி 24 ரன்னிலும் (20 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), யுவராஜ்சிங் 60 ரன்னிலும் (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆனதும் அடங்கும். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மெதுவான தன்மை (ஸ்லோ) கொண்ட இந்த ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்தனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த சுழல் மன்னன் அஸ்வின், எதிரணி வீரர்களை மிரள வைத்தார். அபாயகரமான பேட்ஸ்மேன் கிளைன் மேக்ஸ்வெல் (23 ரன், 12 பந்து, 3 சிக்சர்) அவரது பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்' அடிக்க முயற்சித்து கிளீன் போல்டு ஆனது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தொடக்கம் முதல் கடைசி வரை ஊசலாடிய ஆஸ்திரேலியா இறுதியில் 16.2 ஓவர்களில் 86 ரன்களில் முடங்கியது. இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர்ந்து 2–வது முறையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அஸ்வின் ஒரு இன்னிங்சில் 4 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கு இது 4–வது வெற்றியாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளையும் தோற்கடித்து இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது 3–வது மரண அடியாகும்.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் ஷர்மா (சி)முயர்ஹெட்    (பி) ஹாட்ஜ் 5

ரஹானே (சி) ஹேடின்    (பி) போலிஞ்சர் 19

கோலி (சி) ஒயிட் பி)முயர்ஹெட்    23

யுவராஜ்சிங் (சி) மேக்ஸ்வெல்    (பி) வாட்சன் 60

ரெய்னா (சி) பிஞ்ச்    (பி) மேக்ஸ்வெல் 6

டோனி (பி) ஸ்டார்க்    24

ஜடேஜா (ரன்–அவுட்)    3

அஸ்வின் (நாட்–அவுட்)    2

புவனேஷ்வர்குமார் (நாட்–அவுட்)    0

எக்ஸ்டிரா    17

மொத்தம் (20 ஓவர்களில்    7 விக்கெட்டுக்கு) 159

விக்கெட் வீழ்ச்சி: 1–6, 2–46, 3–53, 4–66, 5–150, 6–152, 7–158

பந்து வீச்சு விவரம்

ஹாட்ஜ்    2–0–13–1

மேக்ஸ்வெல்    4–0–20–1

மிட்செல் ஸ்டார்க்    4–0–36–1

வாட்சன்    4–0–36–1

போலிஞ்சர்    4–0–24–1

முயர்ஹெட்    2–0–24–1

ஆஸ்திரேலியா

ஆரோன் பிஞ்ச் (சி) கோலி    (பி) அஸ்வின் 6

வார்னர் (சி) ரோகித் (பி)    அஸ்வின் 19

ஒயிட் (சி) ஜடேஜா (பி)    புவனேஸ்வர் 0

வாட்சன் (பி) மொகித் ஷர்மா    1

மேக்ஸ்வெல் (பி) அஸ்வின்    23

பெய்லி (சி) கோலி (பி)    ஜடேஜா 8

ஹாட்ஜ் (சி) ஜடேஜா (பி)    மிஸ்ரா 13

ஹேடின் (சி) ரஹானே (பி)    மிஸ்ரா 6

மிட்செல் ஸ்டார்க் (ரன்–அவுட்)    2

முயர்ஹெட் (சி) டோனி (பி)    அஸ்வின் 3

போலிஞ்சர் (நாட்–அவுட்)    1

எக்ஸ்டிர     4

மொத்தம் (16.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 86

விக்கெட் வீழ்ச்சி: 1–13, 2–19, 3–21, 4–44, 5–55, 6–63, 7–75, 8–79, 9–83

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார்    3–0–7–1

மொகித் ஷர்மா    2–0–11–1

அஸ்வின்    3.2–0–11–4

ரெய்னா    1–0–16–0

ஜடேஜா    4–0–25–1

அமித் மிஸ்ரா    3–0–13–2

கம்பீரை முந்தினார், யுவராஜ்சிங்

20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை கவுதம் கம்பீரிடம் இருந்து யுவராஜ்சிங் தட்டிப்பறித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விளாசிய 60 ரன்களையும் சேர்த்து யுவராஜ்சிங்கின் ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 939 ரன்களாக (38 ஆட்டம்) உயர்ந்துள்ளது. கம்பீர் 932 ரன்களுடன் (37 ஆட்டம்) 2–வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 901 ரன்களுடன் (41 ஆட்டம்) 3–வது இடத்திலும் உள்ளனர்.

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Posted: 30 Mar 2014 11:42 AM PDT

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்: அகமது ஷேசாத் சதத்தால் பாகிஸ்தான் எளிதான வெற்றி

Posted: 30 Mar 2014 11:38 AM PDT

மிர்புர், மார்ச்.

வங்காளதேசத்திற்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அகமது ஷேசாத் சதத்தின் உதவியுடன் சுலபமாக வெற்றி கண்டது.

உலக கிரிக்கெட்

வங்காளதேசத்தில் நடந்து வரும் 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், சூப்பர்–10 சுற்று ஆட்டங்கள் உச்சகட்டத்துக்கு வந்துள்ளன. இதில் விளையாடும் 10 அணிகளில் குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் 2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இதுவரை இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் அரைஇறுதியை உறுதி செய்துள்ளன.

ஷேசாத் சதம்

இந்த நிலையில் மிர்புரில் நேற்று மாலை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்–வங்காளதேச அணிகள் (குரூப்2) மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் அமர்க்களப்படுத்தினார். மோர்தாசாவின் ஓவரில் 3 பவுண்டரியும், ஒரு சிக்சரும் நொறுக்கினார். ஆனால் மறுமுனையில் கம்ரன் அக்மல் (9 ரன்), கேப்டன் முகமது ஹபீஸ் (8 ரன்),  உமர் அக்மல் (0) ஒற்றை இலக்குடன் அணிவகுத்ததால், மிடில் ஓவர்களில் ரன்ரேட் தடாலடியாக சரிந்தது. அந்த அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 88 ரன்களே எடுத்திருந்தது.

அரைசதத்தை கடந்த பிறகு மீண்டும் விசுவரூபம் எடுத்த அகமது ஷேசாத், வங்காளதேச பவுலர்களை துவம்சம் செய்தார். ஜியார் ரகுமானின் ஓவரில் 2 பவுண்டரியும், 2 சிக்சரும் ஓடின. சோயிப் மாலிக் (26 ரன்), அப்ரிடி (22 ரன், 9 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஒத்துழைப்புடன் ஷேசாத், தனது 'கன்னி' சதத்தை பூர்த்தி செய்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நாட்டவர் அடித்த முதல் சதமும் இது தான். முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கடைசி 8 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் 102 ரன்கள் சேகரித்தது. அகமது ஷேசாத் 111 ரன்களுடன் (62 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.

வங்காளதேசம் தோல்வி

அடுத்து உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்காளதேச பேட்ஸ்மேன்களால் பாகிஸ்தான் பவுலர்களை சமாளித்து வாணவேடிக்கை காட்ட இயலவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணியால் 7 விக்கெட்டுக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான்

வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்–ஹசன் 38 ரன்கள் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

3–வது ஆட்டத்தில் விளையாடி 2–வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. வங்காளதேசத்திற்கு இது 3–வது தோல்வியாகும்.

பாகிஸ்தானின் வெற்றியால், ஆஸ்திரேலியாவின் நூலிலை வாய்ப்பும் முடிவுக்கு வந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிட்டும்.

சதம் அடித்து ஷேசாத் சாதனை

* இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் 8 ஆண்டு கால 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தை ருசித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை 22 வயதான அகமது ஷேசாத் பெற்றார். இதற்கு முன்பு அவர் 98 ரன்கள் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 2013–ம் ஆண்டு) எடுத்ததே பாகிஸ்தான் வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது.

*20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட 6–வது சதம் இதுவாகும். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல்–117 ரன் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007), இந்தியாவின் சுரேஷ் ரெய்னா –101 ரன்( தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2010), இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே–100 ரன் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 2010), நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம்–123 ரன் (வங்காளதேசம் எதிராக, 2012), இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹாலஸ்–116* ரன் (இலங்கை எதிராக, 2014) ஆகியோர் ஏற்கனவே 100 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

*ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் அரங்கில் பதிவான 12–வது செஞ்சுரி இதுவாகும்.

category:

‘பார்முலா1’ கார் பந்தயம்: மலேசிய போட்டியில் ஹாமில்டன் முதலிடம்

Posted: 30 Mar 2014 11:30 AM PDT

செபாங்,

'பார்முலா1' கார் பந்தயத்தின் 2–வது சுற்றான மலேசிய கிராண்ட்பிரீ போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

ஹாமில்டன் முதலிடம்

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான 'பார்முலா1' கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இந்த சீசனின் 2–வது சுற்றான மலேசிய கிராண்ட்பிரீ போட்டி செபாங் சர்வதேச ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 310.408 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயம் 56 சுற்றுகளை கொண்டதாகும். வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் அசுர வேகத்தில் காரை செலுத்தினார்கள்.

இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 40 நிமிடம் 25.974 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். 2008–ம் ஆண்டு உலக சாம்பியனான ஹாமில்டன், மலேசிய போட்டியில் தனது முதல் வெற்றியை 8–வது முயற்சியில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது சுற்றில் முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) 17.3 வினாடிகள் பின்தங்கி 2–வது இடமும், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (ரெட்புல்) 24.5 வினாடிகள் பின்னடைவுடன் 3–வது இடத்தையும் பெற்றனர்.

ராஸ்பெர்க் முன்னிலை

இந்திய தொழில் அதிபர்களுக்கு சொந்தமான ஸ்போர்ஸ் இந்தியா அணியை சேர்ந்த நிகோ ஹல்கென்பர்க் (ஜெர்மனி) 5–வது இடமும், செர்ஜி பெரெஸ் (மெக்சிகோ) கடைசி இடமும் பெற்றனர். 2–வது சுற்று பந்தயம் முடிவில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் 43 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 25 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளார்.

தொடரின் 3–வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரீ வருகிற 6–ந் தேதி நடக்கிறது.

category:

மியாமி டென்னிஸ்: செரீனா ‘சாம்பியன்’

Posted: 30 Mar 2014 11:27 AM PDT

மியாமி,

அமெரிக்காவின் மியாமி நகரில் சோனி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 2–ம் நிலை வீராங்கனை லீ நாவை (சீனா) எதிர்கொண்டார். இதன் முதல் செட்டில்  2–5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த செரீனா வில்லியம்ஸ் பின்னர் சுதாரித்து விளையாடி சரிவில் இருந்து மீண்டதுடன் அந்த செட்டையும் தனதாக்கினார். 2–வது செட்டில் லீ நா, செரீனாவுக்கு சவால் அளிக்க முடியவில்லை. 2 மணி நேரம்  நீடித்த இந்த மோதலில் செரீனா 7–5, 6–1 என்ற நேர்செட்டில் லீ நாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை செரீனா வெல்வது இது 7–வது முறையாகும். 32 வயதான செரீனா மொத்தத்தில் வென்ற 59–வது சர்வதேச பட்டம் இதுவாகும். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.4 கோடியே 71 லட்சம் பரிசாக கிடைத்தது.

category:

பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ‘40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்’ தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

Posted: 30 Mar 2014 11:22 AM PDT

சென்னை,

40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–

பாராளுமன்ற தேர்தல்

வருகின்ற 24–4–2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972–ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கம் எத்தனையோ பாராளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நம் இயக்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகமே போட்டியிடும் வாய்ப்பினை இந்தத்தேர்தலில் தான் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, நமக்கு இந்தத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்.

மக்கள் பணி

இப்போது லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். கழகத்தின் எளிய தொண்டர்கள் இப்படி மக்கள் தொண்டாற்றும் உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் கழகம் பெற்றுள்ளது போல், பாராளுமன்ற மக்களவையிலும் இது நாள் வரை இருந்திடாத அளவு கழகத்தின் சார்பில் 40 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற தேனினும் இனிய செய்தி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆலமரம் போல் தழைத்து வளர்ந்திருக்கும் நம் கழகத்தின் ஆணிவேர், கிளைக்கழக அமைப்புகளும், தன்னலம் கருதாது உழைக்கின்ற என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளும் தான் என்பதை நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணமும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. 2004–ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.

இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டை காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக்கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தெருமுனை கூட்டங்கள்

தமிழக வாக்காளப் பெருமக்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் கழக அரசின் சாதனைகளை; முன்னோடித்திட்டங்களை; வளர்ச்சித்திட்டங்களை; தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.

வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக தி.மு.க.வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றோடு நேரடி சந்திப்புகள் வழியாகவும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவரவேண்டும். மொத்தத்தில், கழக உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சார பீரங்கியாக மாற வேண்டும்.

அரசியல் தொண்டு

வழக்கமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை போல, இந்த நேரடித்தொடர்பு பிரச்சாரமும் மும்முரமாக நடைபெற்றிட வேண்டும். அந்த அளவிற்கு நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவடையும் வரை விழிப்புடன் களப்பணியாற்றிட வேண்டும் என்று, என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் பொதுவாழ்வும், அரசியல் தொண்டும் ஒரு பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாத தவம். பலகோடி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சுய அர்ப்பணிப்பு. எனதருமைக்கழக உடன்பிறப்புகள் அனைவரும் என் இதயத்தின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்பது எனது ஆவல்.

எம்.ஜி.ஆர். கண்ட கனவு

உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய இந்த அவாவினை மனத்தில் இறுத்தி நீங்கள் அனைவரும் பணியாற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ''நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே" என்பது, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவு. எனவே, 40 பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் கழகத்தின் வேட்பாளராக, உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே போட்டியிடுவதாக நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றி

கழக வேட்பாளர்கள் அனைவரது வெற்றியிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் உண்டு; நாம் ஆற்ற வேண்டிய கடமையும் உண்டு. கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் முதல் அண்மையில் இணைந்த உடன்பிறப்புகள் வரை, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வண்ணம், நீங்கள் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்.

'40 மக்களவைத் தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்' என்ற மகத்தான செய்தி வரும் வரை கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™