Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


14,582 மாணவ மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்

Posted: 03 Mar 2014 11:40 AM PST

தேனி,

தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 582 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தவர்களில் 146 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்–2 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 25–ந்தேதி முடிவடைகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கல்வி மாவட்டம், உத்தம பாளையம் கல்வி மாவட்டம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 48 பள்ளிகளை சேர்ந்த 3,203 மாண வர்கள், 3,534 மாணவிகள் என மொத்தம் 6,737 பேர், பெரிய குளம் கல்வி மாவட்டத்தில் 58 பள்ளிகளை சேர்ந்த 3,705 மாணவர்கள், 3,781 மாணவி கள் என மொத்தம் 7,486 பேர் என தேனி மாவட்டத்தில் உள்ள 106 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 908 மாணவர்கள், 7 ஆயிரத்து 315 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 223 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். அதுமட்டும் இன்றி தனித்தேர்வர்களாக 505 பேரும் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர்.

14,582 மாணவ, மாணவிகள்

பிளஸ்–2 தேர்வுக்கு தேனி மாவட்டத்தில் மொத்தம் 41 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டு இருந்தன. உத்தம பாளையம் கல்வி மாவட்டத் திற்கு 20 மையங்களும், பெரிய குளம் கல்வி மாவட்டத்திற்கு 21 மையங்களும் அமைக்கப் பட்டு இருந்தன. முதல்நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வுக்கு 10 நிமிடம் வினாத்தாள் வாசிப்பு, 5 நிமிடம் விடைத்தாள் பூர்த்தி செய்தல் என நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.15 மணிக்கு முடிந்தது.

தனித்தேர்வர்கள் உள்பட தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தவர்களில் உத்தம பாளையம் கல்வி மாவட்டத் தில் 62 பேரும், பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 84 பேரும் என மொத்தம் 146 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. நேற்று நடந்த தேர்வை தனித்தேர்வர் கள் உள்பட மொத்தம் 14 ஆயிரத்து582பேர் எழுதினர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த 15 பறக்கும் படை யினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடு பட்டனர்.

பிளஸ்–2 தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. தேர்வு முடிந்தவுடன் விடைத் தாள்களும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் 2–ம் தாள் தேர்வு நடக் கிறது.

category:

குழந்தை திருட்டு சம்பவம் எதிரொலி: பிரசவ வார்டில் நுழைய பார்வையாளர்களுக்கு நுழைவுச்சீட்டு கட்டாயம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அதிரடி

Posted: 03 Mar 2014 11:39 AM PST

சென்னை,

குழந்தை திருட்டு சம்பவத்தின் எதிரொலியாக பிரசவ வார்டில் நுழைய பார்வையாளர்களுக்கு நுழைவுச்சீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினேஷ் என்பவரின் மனைவி சரிதாவின் குழந்தையை மர்ம பெண் ஒருவர் கடந்த 1–ந்தேதி திருடி சென்றுவிட்டார். பிரசவ வார்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் கோளாறு காரணமாக குழந்தையை திருடிச்சென்ற மர்ம பெண்ணின் உருவம் பதிவாகவில்லை. இதனால் போலீசாருக்கு மர்ம பெண்ணை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மர்ம பெண்ணை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சரிதாவின் கணவன், தோழிகள், பிரசவ வார்டிலிருந்த பார்வையாளர்கள், பாதுகாவலர்கள், டாக்டர்கள், நர்சுகள் என பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தார்.

நுழைவுச்சீட்டு கட்டாயம்

ஆய்வினை நிறைவு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''இனிமேலும் இதுபோன்ற (குழந்தை திருட்டு) சம்பவம் மருத்துவமனையில் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமராவை சரியாக பராமரிப்பு செய்யாத நிறுவனம் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே குழந்தையை வார்டிலிருந்து வெளியேயும், உள்ளேயும் எடுத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருகின்றோம்'' என்றார்.

குழந்தை திருட்டுப்போன சம்பவத்தையடுத்து பிரசவ வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களை உடன் இருந்து கவனிக்கும் நபர்களுக்கு நுழைவுச்சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு இருக்கும் நபர் மட்டுமே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை கவனித்துக்கொள்ள உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரசவ வார்டில் பணியில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், பாதுகாவலர்கள் என அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

குழந்தையை திருடிய பெண்ணை இன்னும் ஓரிரு தினங்களில் பிடித்துவிடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

image: 

பத்திரப்பதிவு துறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வரை, நில மோசடியை தடுக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

Posted: 03 Mar 2014 11:34 AM PST

சென்னை,

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் கொண்டு வந்து பிழை இல்லாத வில்லங்க சான்றிதழ் வழங்கும் வரை, நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்க முடியாது என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.நாகமுத்து, தன் உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோசடி வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் சத்தீஷ். இவர், தந்தை பெயரில் இருந்த நிலத்தை, அவரது மறைவுக்கு பின்னர், முரளிதரன் என்பவருக்கு கடந்த 2008–ம் ஆண்டு ஜனவரி 10–ந் தேதி விற்பனை செய்தார். இதற்கிடையில், அந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ளது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், நில அபகரிப்பு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வி.எஸ்.ரவி என்பவர் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விவரம் இல்லை

இதையடுத்து, வி.எஸ்.ரவி, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிலத்தை வாங்குவதற்கு முன்பு பத்திரப்பதிவு அலுவலகத்தில், வில்லங்கம் சான்றிதழ் பெற்று, அதனடிப்படையில்தான், சார்லஸ் என்பவரிடம் இருந்து நிலத்தை வாங்கியதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'மனுதாரர் பெற்ற வில்லங்க சான்றிதழில், புகார்தாரர் சத்தீஷ் தன்னுடைய நிலத்தை முரளிதரனுக்கு விற்பனை செய்துள்ள விவரம் இல்லை' என்பதை ஒப்புக்கொண்டார்.

பத்திரப்பதிவு துறை விளக்கம்

இதையடுத்து, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யிடம் விளக்கம் கேட்டு தகவல் தெரிவிக்கும்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில், பத்திரப்பதிவு ஐ.ஜி.யின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'வில்லங்க சான்றிதழ் கேட்டு அதிக அளவில் விண்ணப்பங்கள் வருகிறது. நிலங்கள் விற்பனையின் மூலம் பலரது பெயருக்கு மாற்றப்படுவதாலும், அதனால் சர்வே எண், அந்த எண்ணின் துணை சர்வே எண் என்று பல எண்களாக பிரிக்கப்படுவதாலும், வேலை பளுவின் காரணமாகவும் பத்திரப்பதிவு ஊழியர்களால் சரியான தகவலை கொடுக்க முடியவில்லை.

அதனால், உலகில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் நிலம் தொடர்பான தகவல்களை பார்க்கும் வசதியாக இணையதளத்தில் விவரங்கள் வெளியிடும் பணி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.58.33 லட்சத்தை ஒதுக்கியுள்ளது' என்று கூறப்பட்டு இருந்தது.

நம்ப முடியவில்லை

இதையடுத்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், வடசென்னையில் ஒரு சொத்து தொடர்பாக பெறப்பட்ட பல்வேறு தகவல்களை கொண்ட வில்லங்க சான்றிதழை உதாரணத்துக்காக தாக்கல் செய்தார். மேலும், 'இந்த காலத்தில் பத்திரப்பதிவு துறை வழங்கும் சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ்களின் உண்மை தன்மையை நம்பும் படியாக இல்லை' என்றும் வாதம் செய்தார்.

அவரது வாதத்தை இந்த கோர்ட்டு ஏற்றுக்கொள்கிறது. இந்த வில்லங்க சான்றிதழ் மூலம் சொத்துக்களை வாங்குபவர்கள் உண்மையில் அப்பாவிகள்தான்.

தடுக்க முடியாது

பத்திரப்பதிவு ஐ.ஜி.யின் அறிக்கையில், தவறு இல்லாமல் வில்லங்க சான்றிதழ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலை பற்றி கூறியுள்ளார். தற்போதுள்ள நவீன கம்ப்யூட்டர் உலகில், தகவல் தொடர்பு துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

எனவே வில்லங்க சான்றிதழ்களை பிழை இல்லாமல் கொடுக்க முடியவில்லை என்று ஐ.ஜி. கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மை காலங்களில் சொத்து தொடர்பான மோசடி வழக்குகள் அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, பிழை இல்லாத வில்லங்க சான்றிதழ் வழங்கும் வரை, நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்க முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.

மாற்றம் வேண்டும்

எனவே இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் விதமாக பத்திரப்பதிவு துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். இந்த உத்தரவை தமிழக தலைமை செயலாளர், பத்திரப்பதிவு துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பிவைக்க வேண்டும். மனுதாரர் வி.எஸ்.ரவிக்கு, நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்குகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

category:

News Group Category:

மாணவர்களின் தலைமுடியை வெட்டிய தலைமை ஆசிரியை பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் முற்றுகை

Posted: 03 Mar 2014 11:14 AM PST

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் மாணவர்களின் தலை முடியை தலைமை ஆசிரியை வெட்டியதால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமுடி வெட்டிய...

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முத்தழகுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி நேரம் முடிந்தது, மாணவ, மாணவிகள் வீட்டுக்கு சென்றனர். அதில் 3–ம் வகுப்பு மாணவன் விஜயராஜ், 5–ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ் பிரகாஷ், நவீன் பிரதாப், நிர்மல், செபஸ்தியான் ஆகியோர் தலைமுடி தாறுமாறாக வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்கு சென்றனர்.

பெற்றோர்கள் முற்றுகை

இது குறித்து மாணவர்களிடம், பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது தலையில் முடி அதிகமாக வளர்ந்து இருப்பதாக கூறி, அந்த 5 பேரையும் அழைத்து தலைமை ஆசிரியை மாணவர்களின் தலைமுடியை வெட்டியதாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர். மேலும் தலைமை ஆசிரியையின் செயலை கண்டித்து பள்ளி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சமரச பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், சரவணன் மற்றும் போலீசார், ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திண்டுக்கல்லில் நடந்த இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சென்னை புழல் சிறையில் 58 கைதிகள் பிளஸ்–2 பரீட்சை எழுதினர்

Posted: 03 Mar 2014 11:06 AM PST

செங்குன்றம்,

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வழக்கம்போல தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் பிளஸ்–2 பரீட்சை எழுத கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 58 கைதிகள் நேற்று இந்த தேர்வை எழுதினர்.

இதற்காக சென்னை புழல் தண்டனை சிறை வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தலைமைஆசிரியர்கள் சுந்தரராஜன், கலைச்செல்வி, சுவாமிநாதன் ஆகியோரது கண்காணிப்பில் இந்த தேர்வு நடந்தது.

இதில் புழல் சிறைவாசிகள் 18 பேரும், மதுரை சிறைவாசிகள் 14 பேரும், கடலூர் சிறைவாசிகள் 12 பேரும், கோவை சிறைவாசிகள் 5 பேரும், பாளையங்கோட்டை சிறைவாசிகள் 4 பேரும், சேலம் சிறைவாசிகள் 3 பேரும் வேலூர் சிறைவாசிகள் 2 பேரும் என மொத்தம் 58 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை சிறைத்துறை டி.ஐ.ஜி. (பொறுப்பு) ராஜேந்திரன் பார்வையிட்டார்.

31 ஆயிரத்து 112 மாணவ– மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர் தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

Posted: 03 Mar 2014 10:50 AM PST

திருச்சி, மார்ச்.4–

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 31 ஆயிரத்து 112 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பிளஸ்–2 தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 91 மையங்களில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு எழுதுவதற்காக மாணவ–மாணவிகள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்தனர். பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் ஆசி பெற்று மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர். இதேபோல தேர்வு எழுதுவதற்கு முன்பு சக மாணவ–மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொண்டு தேர்வு மையத்திற்கு உள்ளே சென்றனர்.

இந்த ஆண்டு விடைத்தாளில் மாணவர்கள் புகைப்படம், பெயர், பள்ளி விபரம், பதிவு எண், ரகசிய கோடு ஆகியவை அடங்கிய முகப்பு தாள் தனியாக இணைக்கப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாளில் உள்ள முகப்பு தாளில் தங்களது புகைப்படம், பதிவு எண், பள்ளி விபரம் அனைத்தும் சரியாக உள்ளதா? என சரி செய்து அதில் கையெழுத்திட்டு தேர்வு எழுத தொடங்கினர்.

31 ஆயிரத்து 284 பேர்

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. திருச்சி வருவாய் மாவட்டத்தில் திருச்சி, முசிறி, லால்குடி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 200 மாணவர்கள் மற்றும் 18 ஆயிரத்து 84 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 284 பேர் பிளஸ்–2 தேர்வை எழுத இருந்தனர். இதில் 31 ஆயிரத்து 112 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 172 பேர் தேர்வு எழுத வரவில்லை.

8 தனித்தேர்வர் தேர்வு மையங்களில் 676 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கண் பார்வையற்றவர், வாய் பேச இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. புத்தூரில் கண் பார்வையற்றோர் பள்ளியை சேர்ந்த மாணவிகள் தலா ஒரு ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதினர். மேலும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட பறக்கும்படை குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

கலெக்டர் ஆய்வு

திருச்சி பாலக்கரை சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) ஜார்ஜ் ஜார்ஜி ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கருப்பசாமி, தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.

தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அந்தந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. மேலும் விடைத்தாள் மையங்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. தமிழ் 2–ம் தாள் தேர்வு நாளை(புதன்கிழமை) நடக்கிறது. வருகிற 25–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவடைகிறது.

அரசியல்வாதிகளின் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Posted: 03 Mar 2014 10:47 AM PST

புதுடெல்லி,

கடுமையான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அரசியல்வாதிகள் பேசுவதை தடுப்பதற்காக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது.

''மக்களுடைய அடிப்படை உரிமைகளை நாங்கள் குறைக்க முடியாது. நமது அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள விலைமதிப்பற்ற உரிமை அது'' என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ''நமது நாடு முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடு. மக்கள்தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும்'' என்றும், தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ''இது புலன் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயமாகும்; ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாத ஒரு கருத்து மற்றொருவருக்கு சரியாகத் தோன்றலாம். 128 கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு 128 கோடி கருத்துகள் இருக்கலாம். ஒருவர் மற்றொருவருடைய கருத்தை ஏற்பதா? வேண்டாமா? என்பது அவருடைய விருப்பமாகும்'' என்றும் தெரிவித்தனர்.

பொது நல மனுதாரரான வக்கீல் எம்.எல்.சர்மா, அரசியல்வாதிகள் தங்களுடைய சுய ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், அப்படி அவர்கள் பேசாமல் இருப்பதற்காக சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

image: 

category:

News Group Category:

ஐ.நா. மனித உரிமை மாநாடு தொடங்கியது; அமெரிக்காவின் தீர்மானத்தை சந்திக்க தயார் என இலங்கை அறிவிப்பு

Posted: 03 Mar 2014 10:29 AM PST

கொழும்பு,

ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

ஐ.நா. மாநாடு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை மற்றும் இங்கிலாந்து, கனடா நாட்டு வெளியுறவு மந்திரிகள் ஆகியோர் இலங்கை தொடர்பான தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

நவிபிள்ளை தனது சமீபத்திய அறிக்கையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை இலங்கை நிராகரித்தது.

அமெரிக்கா தீர்மானம்

மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மனித உரிமைகள் தொடர்பான மெத்தன நடவடிக்கைகள், தமிழர் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளில் தாமதம் ஆகியவை காரணமாக 3–வதாக ஒரு தீர்மானம் ஐ.நா. மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திக்க தயார்

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயகே கூறும்போது, ''ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீர்மானத்தை சந்திக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.

ஏற்கனவே இதற்கு முந்தைய காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த 2 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது.

மன்மோகனுடன் சந்திப்பு

இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த வாரம் கூறும்போது, அண்டை நாடான இந்தியாவில் தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால், தமிழ்நாட்டின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க கூடும் என்றார்.

மியான்மரில் நடைபெற இருக்கும் வங்க கடல் நாடுகள் (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே புறப்பட்டு சென்றார். அங்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

இந்தியா மட்டுமே

கடந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை மன்மோகன்சிங் புறக்கணித்த பின்னர் இப்போது முதல்முறையாக ராஜபக்சேவை சந்தித்து பேச இருக்கிறார்.

7 உறுப்பு நாடுகளை கொண்ட பிம்ஸ்டெக்கில் இந்தியா மட்டுமே ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

image: 

category:

News Group Category:

உக்ரைன் போர், பொருளாதார மந்தநிலையால் ‘சென்செக்ஸ்’ 173 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 03 Mar 2014 10:25 AM PST

மும்பை

பங்கு வியாபாரத்தில் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 173 புள்ளிகளை இழந்தது. ஆக ஐந்து தினங்கள் தொடர் முன்னேற்றத்திற்கு பின் பங்கு வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.

கச்சா எண்ணெய்

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. போர் அபாயத்தால் நேற்று சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தங்கம் விலையும் 2 சதவீதம் அதிகரித்தது.

ரூபாய் வெளிமதிப்பு

நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 28 காசு சரிவடைந்து 62.04–ல் நிலைபெற்றது. அதாவது டாலர் மதிப்பு உயர்ந்தது. ரூ.61.76–ஆக இருந்த ஒரு டாலர் மதிப்பு ரூ.62.04–ஆக உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவால் கச்சா எணண்ய இறக்குமதி செலவினம் மிகவும் அதிகரித்து மத்திய அரசின் மானியச்சுமை உயரும்.

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக குறைந்தது. தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் நிதி பற்றாக்குறை மாற்றி அமைக்கப்பட்ட பட்ஜெட் இலக்கில் 101 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளதால் இந்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.6 சதவீதமாக வைத்து இருப்பது சவாலாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 12 துறைகளில் நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நீங்கலாக 10 துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக மருந்து, ஐ.டி. மின்சாரம், மோட்டார் வாகனம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின.

'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டி.சி.எஸ், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மாக உள்ளிட்ட 25 நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 173.47 புள்ளிகள் குறைந்து 20,946.65 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 21,140 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 20,920.98 புள்ளிகளுக்கும் சென்றது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 55.50 புள்ளிகள் குறைந்து 6,221.45 புள்ளிகளில் நிலைகொண்டது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™