Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் தமிழகம் வருகை; தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்

Posted: 27 Mar 2014 01:26 PM PDT

சென்னை,

தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் வர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

மது சப்ளை

தேர்தல் தினங்களில் வாக்காளர்களை கவர்வதற்காகவும், ஓட்டுக்காக அவர்களை வசப்படுத்தி கொள்வதற்காகவும் அரசியல் கட்சிகள் சார்பில் மது சப்ளை செய்வது வழக்கமான ஒன்று. எனவே ஓட்டுக்காக மது சப்ளை செய்வதை தடுப்பதற்கு தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அதிக மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். எனவே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மதுவை புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வருவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வந்தன.

சோதனை சாவடிகள் அதிகரிப்பு

இதுகுறித்து பிரவீன்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் இருந்து மதுவை கடத்திக்கொண்டு வருவதை தடுப்பதற்காக 29 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்திருந்தோம். தற்போது அதன் எண்ணிக்கையை 45–ஆக உயர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து குறுக்கு வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 24–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் 22–ந்தேதி மாலை 6 மணியில் இருந்து அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இருந்து ஏப்ரல் 24–ந்தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்.

பதிலுக்கு காத்திருப்பு

கடை அடைக்கப்படுவதை முன்னிட்டு, ஏப்ரல் 22–ந்தேதி 6 மணிக்கு டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் கூடும் என்பதால், 22–ந்தேதி காலையில் இருந்தே கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களின் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளேன். அங்கிருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கிறேன். அதுபோல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மே 16–ந்தேதியன்று முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

நேரடியாக வரத்தேவையில்லை

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் நேரடியாக வரத்தேவையில்லை. முன்மொழிபவர் மூலமாக வேட்பு மனுக்களையும் உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்யலாம்.

ஆனால் அந்த உறுதிமொழி பத்திரத்தில், மாஜிஸ்திரேட்டு அல்லது தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருப்பவர்களின் முன்னிலையில் வேட்பாளர் கையெழுத்து போட்டுவிட்டு, அதற்கான சான்றளிக்கப்பட்ட நகலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளரை முன்மொழிபவர் தாக்கல் செய்ய வேண்டும்.

78 பார்வையாளர்

ஜெயிலில் இருக்கும் வேட்பாளர், அங்குள்ள பொறுப்பு அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போடலாம். ஆஸ்பத்திரியில் இருப்பவர் டீன் போன்ற மூத்த டாக்டர்களின் முன்னிலையில் கையெழுத்திட்டுவிட்டு, சான்றளிக்கப்பட்ட நகலை முன்மொழிபவர் மூலமாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் செலவீன பார்வையாளர்கள் 29–ந்தேதிக்கு முன்பு வந்துவிடுவார்கள். ஒரு தொகுதிக்கு 2 பேர் வீதம் மொத்தம் 78 பேர் வருகின்றனர். அவர்கள் அந்தந்த தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பேசிவிட்டு, அங்கு நேரடியாக சென்றுவிடுவார்கள்.

அவர்களுக்கென்று தனி பி.எஸ்.என்.எல். எண் தரப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும். புகார்களை அவர்களிடமும் மக்கள் தெரிவிக்கலாம்.

எங்கு, யார்–யார்?

திருவள்ளூர் தொகுதிக்கு, மராட்டிய மாநிலத்தில் பணியாற்றும் அஜய் தேகே (கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பணி), மராட்டிய மாநிலம் அகிலேந்திர பிரதாப் யாதவ் (பூந்தமல்லியில் தேர்தல் பணி) ஆகியோர் செலவீன பார்வையாளராக வருகின்றனர்.

அதுபோல், வடசென்னை தொகுதிக்கு ஆந்திராவைச்சேர்ந்த பி.ராஜாராம் (திருவொற்றியூர்), கர்நாடகாவை சேர்ந்த தல்லா வெங்கடரவி (பெரம்பூர்);

தென்சென்னை தொகுதிக்கு ஆந்திராவைச்சேர்ந்த கே.பாலகிருஷ்ணா (விருகம்பாக்கம்), ஆந்திராவைச்சேர்ந்த ராஜீவ் பெஞ்வால் (சைதாப்பேட்டை);

மத்திய சென்னை தொகுதிக்கு ஆந்திராவைச்சேர்ந்த பி.சி.எஸ்.நாயக் (வில்லிவாக்கம்), ஆந்திராவைச்சேர்ந்த ராமகிருஷ்ண பண்டி (துறைமுகம்);

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தைச்சேர்ந்த பரத் ஆர்.அந்தேல் (மதுரவாயல்), டெல்லியை சேர்ந்த பவானிசங்கர் (ஸ்ரீபெரும்புதூர்);

காஞ்சீபுரம் தொகுதிக்கு ஆந்திராவை சேர்ந்த வி.கோபிநாத் (செங்கல்பட்டு), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டி.பிரசாதராவ் (மதுராந்தகம்) ஆகியோர் செலவீன பார்வையாளராக வரவுள்ளனர்.

இன்று ஆலோசனை

இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் எத்தனை வாக்கு எந்திரங்கள் தேவைப்படும் என்பது உறுதி செய்யப்படும். தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு எந்திரங்கள் கைவசம் உள்ளன. அதன் பிறகு அந்த எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னங்கள் மற்றும் நோட்டா ஆகிய அம்சங்கள் அடங்கிய வாக்கு எந்திர சீட்டு அச்சடிக்கப்பட்டு, அந்த எந்திரங்களில் தேவைக்கு ஏற்ப ஒட்டப்படும்.

28–ந்தேதி (இன்று) தென்னிந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்தாலோசனை நடத்துகிறது. இந்த கூட்டம், காணொலி காட்சி மூலம் நடத்தப்படும். துணை கமிஷனர்கள் எங்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

கடைசி வரை ‘தண்ணி’ காட்டிய நெதர்லாந்து: அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பியது தென்ஆப்பிரிக்கா

Posted: 27 Mar 2014 12:50 PM PDT

சிட்டகாங்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறிய அணியான நெதர்லாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி மயிரிழையில் வெற்றி கண்டது.

உலக கோப்பை கிரிக்கெட்

வங்காளதேசத்தில் நடந்து வரும் 5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர்-10 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. சூப்பர்-10 சுற்றில் விளையாடும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் 2-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

அம்லா 43 ரன்

இந்த நிலையில் சிட்டகாங்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா - நெதர்லாந்து (குரூப்1) அணிகள் சந்தித்தன. தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரென், முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா முதல் ஓவரிலேயே குயின்டான் டீ காக்கின் (0) விக்கெட்டை இழந்தது. அதிரடி காட்டிய இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஷிம் அம்லா, மைக்கேல் ஸ்வார்ட்டின் ஒரே ஓவரில் ஒரு சிக்சரும், தொடர்ந்து 4 பவுண்டரியும் விளாசி அசத்தினார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிற்கவில்லை. அம்லா 43 ரன்களில் (22 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

146 ரன் இலக்கு

குட்டி அணிக்கு எதிராக நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்டுகளை அடித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ரன்ரேட் கணிசமாக சரிந்து போனது. யாரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காததால் தென்ஆப்பிரிக்க அணியால் 'மெகா' ஸ்கோரை எட்ட முடியவில்லை.

20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆசன் மாலிக் ஜமில் 19 ரன்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த உலக கோப்பையில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் இவர் தான். அது மட்டுமின்றி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஐ.சி.சி.யில் நிரந்தர அந்தஸ்து பெற்றுள்ள ஒரு அணிக்கு எதிராக, உறுப்பு நாட்டை சேர்ந்த வீரர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.

மிரட்டிய மைபர்க்

அடுத்து 146 ரன்கள் இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடியது. ஸ்டீபன் மைபர்க்கும், மைக்கேல் ஸ்வார்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை பின்னியெடுத்த ஸ்டீபன் மைபர்க் சிக்சரும் பவுண்டரியுமாக ஓட விட்டார். அவரது அதிரடியை கண்டு தென்ஆப்பிரிக்க வீரர்கள் மிரண்டு போய் விட்டனர். முந்தைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 39 ரன்களில் சுருண்ட நெதர்லாந்தா? இப்படி ஆடுகிறது என்று ரசிகர்களும் புல்லரித்து போய் விட்டனர். 5 ஓவர்களில் அந்த அணி 51 ரன்களை தொட்டது. அச்சுறுத்திய இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பிரித்தார். ஸ்வார்ட் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

சிறிது நேரத்தில் மைபர்க் (51 ரன், 28 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) டுமினியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். மைபர்க் பெவிலியன் திரும்பிய பிறகே, தென்ஆப்பிரிக்க வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்போது நெதர்லாந்தின் ஸ்கோர் 80 ரன்களாக (7.5 ஓவர்) இருந்தது.

ஆனால் தொடக்க ஜோடிக்கு பிறகு அடுத்து வந்த வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தார், நெதர்லாந்தின் மிடில்வரிசை சீர்குலைய செய்தார். ஆனாலும் கடைசி வரை ஆட்டத்தில் பரபரப்பு ஓயவில்லை.

தென்ஆப்பிரிக்கா 'திரில்' வெற்றி

தேவைக்கு அதிகமாக பந்துகள் இருந்த போதிலும், நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் பொறுமை காட்டாமல் அவசரகதியில் பேட்டை சுழற்றி விக்கெட்டுகளை தாரை வார்த்ததால், இறுதியில் வெற்றியையும் நழுவ விட்டனர். முடிவில் நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 6 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய நெதர்லாந்து அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஸ்கோர் போர்டு

தென்ஆப்பிரிக்கா

அம்லா(சி) பரேசி(பி)ஜமில் 43

குயின்டான் டீ காக் (சி)

மைபர்க் (பி) ஸ்வார்ட் 0

டு பிளிஸ்சிஸ் (சி) வான் பீக்

(பி) டாம் ஹூப்பர் 24

டிவில்லியர்ஸ் (சி) பென் ஹூப்பர் (பி) வான் பீக் 21

அல்பி மோர்கல்(சி) பென்

ஹூப்பர் (பி) ஜமில் 5

டுமினி (சி) பரேசி (பி) வான்

டெர் கக்டென் 12

டேவிட் மில்லர் (பி) ஜமில் 17

ஸ்டெயின் (சி) பரேசி (பி)

ஜமில் 5

ஹென்ரிக்ஸ் (சி) போரென்

(பி) ஜமில் 3

இம்ரான்தார்(நாட்-அவுட்) 9

சோட்சோப் (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 5

மொத்தம் (20 ஓவர்களில்

9 விக்கெட்டுக்கு) 145

விக்கெட் வீழ்ச்சி: 1-3, 2-45, 3-84, 4-92, 5-102, 6-120, 7-127, 9-133, 9-135

பந்து வீச்சு விவரம்

ஸ்வார்ட் 2-0-26-1

வான் டெர் கக்டென் 4-0-28-1

ஜமில் 4-0-19-5

வான் பீக் 2-0-14-1

முடாசர் புகாரி 4-0-26-0

சீலார் 1-0-9-0

டாம் ஹூப்பர் 3-0-22-1

நெதர்லாந்து

மைபர்க் (பி) டுமினி 51

ஸ்வார்ட் (சி) டு பிளிஸ்சிஸ்

(பி) ஸ்டெயின் 8

பரேசி எல்.பி.டபிள்யூ

(பி) தார் 14

போரென் எல்.பி.டபிள்யூ

(பி) தார் 13

டாம் ஹூப்பர் (சி) தார் 16

பென் ஹூப்பர் (சி)டீ காக்

(பி) ஸ்டெயின் 5

முடாசர் புகாரி (சி) மில்லர்

(பி) சோட்சோப் 11

சீலார்(சி) டுமினி (பி)தார் 2

வான் பீக் (ரன்-அவுட்) 1

வான் டெர் கக்டென் (சி)

டீ காக் (பி) ஹென்ரிக்ஸ் 8

ஜமில் (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 9

மொத்தம் (18.4 ஓவர்களில்

ஆல்-அவுட்) 139

விக்கெட் வீழ்ச்சி: 1-58, 2-80, 3-82, 4-97, 5-116, 6-116, 7-118, 8-125, 9-134

பந்து வீச்சு விவரம்

அல்பி மோர்கல் 2-0-19-0

ஹென்ரிக்ஸ் 3.4-0-16-1

சோட்சோப் 4-0-46-1

ஸ்டெயின் 4-0-19-2

இம்ரான் தார் 4-0-21-4

டுமினி 1-0-12-1
 

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: 3–வது வெற்றியை பெறுமா இந்தியா? வங்காளதேசத்துடன் இன்று மோதல்

Posted: 27 Mar 2014 12:47 PM PDT

மிர்புர்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் நோக்குடன் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.

இந்தியா–வங்காளதேசம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்–10 சுற்றில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) மிர்புரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தலா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்திய இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விடலாம். தோல்வியை சந்தித்தால், கடைசி ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டிய நெருக்கடி உருவாகும். எனவே இன்றைய ஆட்டத்திலேயே அரைஇறுதி வாய்ப்பை வசப்படுத்தி விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அது மட்டுமின்றி பின்தங்கியுள்ள ரன்ரேட்டை உயர்த்துவதிலும் இந்திய அணி கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் மிஸ்ரா

முந்தைய இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் தான் பிரதான பங்கு வகித்தனர். இரண்டு முறையும் அமித் மிஸ்ரா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் யுவராஜ்சிங் சொதப்பி வருகிறார். ஆனாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. எனவே இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது.

அதே சமயம் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் படுதோல்வி அடைந்த வங்காளதேசம் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சிக்கலில் தவிக்கிறது. இதிலும் மண்ணை கவ்வினால் அந்த அணியின் அரைஇறுதி கனவு சிதைந்து போய் விடும் என்பதால் இந்தியாவுக்கு கடுமையான சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

அணி விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

வங்காளதேசம்: தமிம் இக்பால், அனமுல் ஹக், மொமினுல் ஹக், ஷகிப் அல்–ஹசன், முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்), ஷம்சுர் ரகுமான் அல்லது சபிர் ரகுமான், நசிர் ஹூசைன் அல்லது மக்முதுல்லா, ஜியார் ரகுமான், சோஹக் காஜி, மோர்தாசா, அல்–அமின் ஹசன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் சந்திப்பு

முன்னதாக மாலை 3 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலியாவும், டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீசும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு, இந்த ஆட்டத்தில் வெற்றியை சொந்தமாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இவ்விரு அணிகளும் களம் இறங்குகின்றன.

ஆஸ்திரேலியா தனது தொடக்க ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்று அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 10 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5–ல் ஆஸ்திரேலியாவும், 5–ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டன.

ஐ.பி.எல். விவகாரம் குறித்து கேள்வி கேட்க தடை

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம் குறித்து பேட்டி அளிக்க இந்திய வீரர் ரோகித் ஷர்மா, நேற்று மாலை பத்திரிகையாளர் அறைக்கு வந்தார். ஐ.பி.எல். சூதாட்டம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவுகள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்க பத்திரிகையாளர் தயாராக இருந்தனர். ஆனால் அவருடன் வந்த அணியின் மீடியா மேலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, 'இந்திய அணி மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி சம்பந்தமான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும், மற்ற விஷயங்கள் குறித்து கேட்க கூடாது' என்று நிருபர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டார். விதித்தார். ஆனாலும் இரண்டு நிருபர்கள் ரோகித் ஷர்மாவிடம் ஐ.பி.எல். வழக்கால், இந்திய அணிக்கு பாதப்பு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். இதற்கு ரோகித் ஷர்மா சாதுர்யமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், 'இப்போது எங்களது கையில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதில் கவனம் செலுத்துவதே முக்கியம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனஉறுதியுடன் இங்கு வந்தோம். இப்போது இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். நாளை (இன்று) இன்னொரு முக்கியமான ஆட்டம் உள்ளது. அந்த ஆட்டத்தின் மீதே எங்களது முழு கவனமும் உள்ளது.' என்று பதில் அளித்தார். யுவராஜ்சிங் மீண்டும் பார்முக்கு வருவார் என்றும் ரோகித் ஷர்மா கூறினார்.

category:

ஓட்டுக்கு பணம் தருவது பற்றி தகவல் கொடுத்தால் பரிசு வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

Posted: 27 Mar 2014 12:44 PM PDT

சென்னை,

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக கொண்டு செல்லப்படும் நபர்கள் மற்றும் பணம் குறித்து தகவல் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல் டி.ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்டுப்பாட்டு அறை

பாராளுமன்ற தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 19-ந்தேதி ரூ.51 லட்சமும், சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்கள், முக்கிய ரெயில் நிலையங்கள், ஹோட்டல், பண்ணை வீடுகள், ஹவாலா ஏஜென்சிகள், பண புரோக்கர்கள், கூரியரில் வரும் பணம், அடகுகடைகள் மற்றும் பல்வேறு சந்தேகப்படும் ஏஜென்சிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாரம் 7 நாளும் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

தகவல் தரலாம்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் பெயர், முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும். வருமானவரி சட்டத்தின் கீழ் தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.

தகவல் தருபவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 6669 என்ற எண்ணிலும், பேக்ஸ் எண் 044- 282 536 59 மற்றும் இ.மெயில் வீ௴நீஷீஸீ௴க்ஷீஷீறீக்ஷீஷீஷீனீநீலீமீஸீஸீணீவீ@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற முகவரியிலும் தகவல் தரலாம்.

ஆவணங்கள் துணை

முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிகளின்படியோ அல்லது வருமானவரி சட்டத்தின்படியோ நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரிகள், தங்க விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விற்பனை ரசீது போன்ற தகுந்த ஆவணங்களின் துணையுடன் பணத்தை கொண்டு செல்வதில் எந்த தடங்கலும் இல்லை. கணக்கில் வராத பணத்தை பிடிக்கவே வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை

நடப்பாண்டுக்கான வருமானவரி படிவம் வரும் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வங்கி மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. வருமானவரி கட்டாதவர்களுக்கு இது கடைசி வாய்ப்பாகும். அதிக மதிப்புடைய பொருள்கள் வாங்குவது, அதிக பணம் சேமிப்பு கணக்கில் செலுத்துவது, ரூ.5 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள், ரூ.30 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்பவர்கள் குறித்து பதிவுதுறை மற்றும் வங்கியிலிருந்து வருமானவரித்துறைக்கு தகவல் வந்துவிடும்.

எனவே வரி செலுத்துபவர்கள் முறையாக வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தவறுபவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. அதற்கு பிறகு நடவடிக்கை கடுமையாகவே இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடன் வருமானவரித்துறை மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

ஹாலஸ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி இலங்கையை வீழ்த்தியது

Posted: 27 Mar 2014 12:32 PM PDT

சிட்டகாங்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஹாலசின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது.

190 ரன்கள் இலக்கு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிட்டகாங்கில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் இலங்கை–இங்கிலாந்து அணிகள் (குரூப் 1) மோதின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து முதலில் இலங்கையை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி ஆரம்பத்திலேயே குசல் பெரேராவின் (3 ரன்) விக்கெட்டை இழந்தது. அடுத்து இறங்கிய மஹேலா ஜெயவர்த்தனேவும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. 'கவர்' திசையில் அடித்த பந்தை மைக்கேல் லம்ப் கேட்ச் செய்து அவுட் கேட்டார். ஆனால் பந்து தரையில் பட்டது போன்று தெரிந்ததால் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக வழங்கப்பட்டது.

இதன் பின்னர் ஜெயவர்த்தனேவும், தில்ஷனும் அணி வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தனர். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், இங்கிலாந்து வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பினர். தில்ஷன் 21 ரன்னில் இருந்த போது பிரிஸ்னன் கேட்ச்சை நழுவ விட்டார். ஜெயவர்த்தனே 42 ரன்னில் எளிதான ரன்–அவுட் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். 80 ரன்னில் இருந்த போதும் அவருக்கு இன்னொரு மறுவாழ்வும் கிடைத்தது. இப்படி அதிர்ஷ்டத்தின் துணையுடன் விளையாடிய இந்த ஜோடி 2–வது விக்கெட்டுக்கு 145 ரன்கள் திரட்டியது. ஜெயவர்த்தனே 89 ரன்னிலும் (51 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), தில்ஷன் 55 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. திசரா பெரோ 23 ரன்னுடன் களத்தில் நின்றார்.

ஹாலஸ் சதம்

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில், மைக்கேல் லம்ப் (0), மொயின் அலி (0) இருவரையும் குலசேகரா முதல் ஓவரிலேயே காலி செய்தார். இதைத் தொடர்ந்து அலெக்ஸ் ஹாலசும், மோர்கனும் ஜோடி சேர்ந்து அணியை படிப்படியாக சரிவில் இருந்து தூக்கி நிறுத்தினர். அஜந்தா மென்டிசின் ஒரே ஓவரில் ஹாலஸ் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்கள் விளாசி ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. ஸ்கோர் 152 ரன்களை எட்டிய போது மோர்கன் 57 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். மறுமுனையில் அலெக்ஸ் ஹாலஸ் நிலைத்து நின்று விளையாடி அட்டகாசப்படுத்தினார். குலசேகராவின் ஓவரில் தொடர்ந்து இரு சிக்சர் பறக்கவிட்டு, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இங்கிலாந்து நாட்டவர் என்ற சாதனையை படைத்த ஹாலஸ், கடைசி ஓவரில் சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 25 வயதான அலெக்ஸ் ஹாலஸ் 116 ரன்களுடன் (64 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். 3–வது ஆட்டத்தில் ஆடிய இலங்கைக்கு இது முதல் தோல்வியாகும். 2–வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து முதல் வெற்றியை பெற்றதுடன், அரைஇறுதி வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

category:

மியாமி சர்வதேச டென்னிஸ்: ஜப்பான் வீரரிடம் வீழ்ந்தார், பெடரர்

Posted: 27 Mar 2014 12:32 PM PDT

மியாமி,

மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஜப்பானின் நிஷிகோரியிடம் வீழ்ந்தார்.

பெடரர் அவுட்

அமெரிக்காவின் மியாமி நகரில் சோனி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அனுபவசாலியான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு, 21–ம் நிலை வீரர் ஜப்பானின் கெய் நிஷிகோரி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 3–6, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பெடரரை வெளியேற்றினார்.

மற்றொரு கால்இறுதியில் 2–ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7–5, 6–3 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

லீ நா–சிபுல்கோவா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 2–ம் நிலை நட்சத்திரமான சீனாவின் லீ நா கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை எதிர்கொண்டார். வோஸ்னியாக்கி கடும் சவால் அளித்த போதிலும், லீ நாவின் முன்னேற்றத்திற்கு அணை போட முடியவில்லை. இறுதியில் லீ நா 7–5, 7–5 என்ற நேர் செட்டில் வெற்றியை சுவைத்து அரைஇறுதியை எட்டினார்.

இன்னொரு ஆட்டத்தில் 11–ம் நிலை வீராங்கனை சுலோவக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 3–6, 7–6 (7–5), 6–3 என்ற செட் கணக்கில் போராடி போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை சாய்த்தார். மூன்று முறை எதிராளியின் 'மேட்ச் பாயிண்ட்' வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்ட சிபுல்கோவா இந்த வெற்றிக்காக 2 மணி 39 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த வெற்றியின் மூலம் சிபுல்கோவா தரவரிசையில் முதல் முறையாக 10–வது இடத்தை பிடிக்கிறார்.

அரைஇறுதியில் லீ நா– சிபுல்கோவா மோத இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சந்தித்த 6 ஆட்டத்திதிலும் லீ நாவே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சானியா ஜோடி வெற்றி

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–4, 6–3 என்ற நேர் செட்டில் விடா பெஸ்சிக் (செக்குடியரசு)– ஸ்ரீபோட்னிக் (சுலோவேனியா) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

category:

உலக சதுரங்க தகுதி சுற்று: 12–வது சுற்றில் ஆனந்த் டிரா

Posted: 27 Mar 2014 12:32 PM PDT

கந்தி மான்சிஸ்க்,

2014–ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14–வது சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரருக்கு கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் நேற்று நடந்த 12–வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் டிமிட்ரி ஆன்ட்ரீகினுடன் மோதினார். இதில் வெள்ளை நிற காயுடன் ஆடிய ஆனந்த் 41–வது நகர்த்தலில் டிரா கண்டார்.

இன்னும் 2 சுற்று எஞ்சியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அர்மேனியா வீரர் லெவோன் ஆரோனியன் 6.5 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் இருக்கிறார். தலைவிதியை நிர்ணயிக்கும் 13–வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் முறையே நாளையும், நாளை மறுதினமும் நடக்கின்றன. 13–வது சுற்றில் செர்ஜி கர்ஜகினையும் (ரஷியா), 14–வது சுற்றில் பீட்டர் ஸ்விட்லரையும் (ரஷியா) ஆனந்த் எதிர்கொள்கிறார்.

category:

தி.மு.க. விடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம், காங்கிரசுக்கு இல்லை கருணாநிதிக்கு, ஞானதேசிகன் பதில்

Posted: 27 Mar 2014 12:26 PM PDT

சென்னை,

நாங்கள் எந்த தவறும், துரோகம் செய்யவில்லை என்றும், தி.மு.க.விடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்றும் ஞானதேசிகன் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை

கேள்வி:-தி.மு.க. தலைவர் கருணாநிதி காங்கிரஸ் நன்றி மறந்த கட்சி என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:-9 ஆண்டுகள் எங்களுடன் இருந்தவர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடனே ஒரு துண்டு சீட்டில் எழுதி, தங்களுக்கு வேண்டிய இலாகாக்களை, அதுவும் முக்கியமான இலாக்காக்களை பெற்றார்கள். கடைசி ஆண்டில் எங்களை விட்டு விலகினார்கள். அப்போது கூட நாங்கள் என்ன துரோகம் செய்து விட்டோம் என்பதை அவர்கள் கூறவில்லை. ஆட்சியில் அனுபவித்து விட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியை விட்டு விலகுவது அவர்களுக்கு சகஜமான ஒன்று.

கேள்வி:-காங்கிரஸ் கட்சி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

பதில்:-நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்? என்ன துரோகம் செய்து விட்டோம். மன்னிப்பு கேட்பதற்கு. தி.மு.க.விடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது. கோர்ட்டில் விசாரணை உள்ளது. இதில் மத்திய அரசுக்கு என்ன சம்பந்தம் உள்ளது. யார்? யார்? எந்த கட்சி என்று பார்க்காமல் நீதித்துறை விசாரணை நடத்துகிறது. இதில் மத்திய அரசாங்கத்திற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது.

கருணாநிதி என்ன பேசுகிறார்?

கேள்வி:-காங்கிரஸ் கட்சி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்:-கருணாநிதிக்கு நாங்கள் கடுமையான பதிலை சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் அவருக்கு (கருணாநிதிக்கு) சொல்லிக்கொள்கிறேன். வரும் தேர்தலில் யார் அதலபாதாளத்திற்கு செல்கிறார்கள் என்பது தெரியும். அதை மக்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி:-மதசார்பற்ற நிலைக்கு காங்கிரஸ் திரும்பினால், ஆதரவு அளிப்போம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரா?

பதில்:-அவர் என்ன பேசுகிறார் என்பதே எனக்கு புரியவில்லை. மதசார்புள்ள கட்சி பா.ஜ.க., மதசார்பற்ற கட்சி காங்கிரஸ். இதில் என்ன சந்தேகம். தேர்தலுக்கு பிறகு நரேந்திரமோடியை ஆதரிக்க மாட்டோம் என்று தி.மு.க. கூற தயாரா? என்று காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு அவர் ஏன் பதில் அளிக்கவில்லை.

கேள்வி:-தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு அளிக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

பதில்:-அந்தந்த நேரத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து, ஆதரவு குறித்து அகில இந்திய தலைமை முடிவு எடுக்கும்.

தேர்தல் பிரசாரம் எப்போது?

கேள்வி:-முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறாரே?

பதில்:-இதற்கு நாங்கள் ஏற்கனவே பதில் அளித்து விட்டோம். விலைவாசி உயர்வு குறித்து பேசும் ஜெயலலிதா தமிழகத்தில் மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர்வால் மக்கள் எவ்வளவு பாதிப்பு அடைகிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசும் அவர், விற்பனைவரியை குறைக்கலாமே?

கேள்வி:-மு.க.அழகிரியை சந்திப்பீர்களா? அவரை தொடர்ந்து பலரும் சந்தித்து வருகிறார்களே?

பதில்:-சகோதர போட்டியில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார். மதுரை செல்லும் போது சந்திப்பேன்.

கேள்வி:-தேர்தல் பிரசாரம் எப்போது மேற்கொள்வீர்கள்?

பதில்:-வருகிற 31-ந்தேதி வடசென்னையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்வோம். சோனியாகாந்தி, ராகுல்காந்தி தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வரும் தேதியும் பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பேசுவார். டெல்லி மேல்-சபை தேர்தலில் கனிமொழியை ஆதரித்த போது நன்றியுள்ளவர்களாக தெரிந்த காங்கிரஸ் இப்போது நன்றி கெட்டவர்களாக தெரிகிறது.

மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்கு எந்த விதமான பதவிகளும் பெறாமலேயே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்களே? அது நன்றியாக தெரியவில்லையா? எல்லாம் மக்களுக்கு தெரியும். நன்றி கெட்டவர்கள் யார் என்பதை தேர்தலில் அவர்கள் காட்டுவார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்கள் என்று சொல்வது தவறு. 39 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால் அவர்கள் போட்டியிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் விலை ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.1,024 குறைந்தது பவுன் ரூ.21 ஆயிரத்து 552–க்கு விற்றது

Posted: 27 Mar 2014 12:20 PM PDT

சென்னை,

தங்கம் விலை இறங்கும் முகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.1024 குறைந்துள்ளது.

தங்கம் விலை

கடந்த வருடம் சென்னையில் ஜூலை மாதம் ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 488 ஆக விற்றது. அதன் பின்னர் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதன் காரணமாக ஆகஸ்டு மாதம் 23–ந்தேதி தங்கத்தின் விலை ரூ.24 ஆயிரத்தை தாண்டியது.

பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் ஆகஸ்டு 27–ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1152 குறைந்து ரூ.23 ஆயிரத்து 208–க்கு விற்றது. பின்னர் மறுநாளே பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது. இப்படியாக தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது.

பவுனுக்கு ரூ.1024 குறைந்தது

இந்த நிலையில் இந்த வருடம் பவுன் விலை கடந்த ஒரு வாரமாக இறங்கும் முகமாக உள்ளது. கடந்த 17–ந்தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,848 ஆக இருந்தது. பவுன் ரூ.22 ஆயிரத்து 576 ஆக இருந்தது.

அது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.2,694–க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 552 ஆகும். அதாவது கடந்த ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.1024 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை சரிந்து வருவதால் நகைக்கடைகளில் நகை வாங்குவோர் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

category:

News Group Category:

கறுப்பு பண மீட்பு விவகாரம் இந்தியா கேட்ட தகவல்களை சுவிஸ் அரசு தரவில்லை ப.சிதம்பரம் கடிதம் அம்பலம்

Posted: 27 Mar 2014 12:19 PM PDT

புதுடெல்லி,

கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் இந்திய கேட்ட தகவல்களை சுவிஸ் அரசு தரவில்லை என்பதை ப.சிதம்பரம் அந்த நாட்டு நிதி மந்திரிக்கு எழுதிய கடிதம் காட்டுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தப்பணத்தை மீட்க கடந்த 65 ஆண்டுகளில் மத்திய அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே சுவிஸ் (சுவிட்சர்லாந்து) வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை அந்த நாட்டு அரசு வழங்கி இந்தியாவுடன் ஒத்துழைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

சுவிஸ் மந்திரிக்கு ப.சிதம்பரம் கடிதம்

இந்த நிலையில், சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தராதது தொடர்பாக அந்த நாட்டின் நிதி மந்திரி ஈவ்லின் வித்மர் ஸ்லம்புக்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கடந்த 13-ந்தேதியே ஒரு கடிதம் எழுதி உள்ளார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்தக்கடிதத்தில் அவர், ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டின் போது, 'வங்கிகள் (வாடிக்கையாளர்களின் கணக்கு) ரகசியத்தை காக்கிற சகாப்தம் முடிந்து விட்டது' என்று செய்யப்பட்ட பிரகடனத்தை நினைவூட்டி உள்ளார். கறுப்பு பண விவகாரத்தில் உரிய ஒத்துழைப்பை சுவிஸ் வழங்காவிட்டால், அந்த நாட்டை ஒத்துழைப்பு வழங்காத நாடு என்ற வரையறைக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி இந்தியா ஆராய வேண்டியது வரும் எனவும் எச்சரித்துள்ளார்.

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை

மேலும் அந்தக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

வங்கிகள் ரகசியத்தை காக்க வேண்டும் என்பதில் இன்னும் சுவிஸ் நம்பிக்கை வைத்திருக்கிறது. அது நவீனயுகத்துக்கு இன்னும் மாறி வரவில்லை. அதனால் தான் இந்தியா மற்றும் பிற நாடுகள் கேட்கிற தகவல்களை வழங்க மறுத்து வருகிறது.

இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையின்படி, இந்தியாவுக்கு தொடர்ந்து தகவல்களை தர மறுத்து வந்தால், இதுதொடர்பாக உலகளாவிய மன்றத்துக்கு இந்தியா எடுத்துச்செல்ல வேண்டிய வலுக்கட்டாயம் ஏற்படும்.

ஜி-20 உச்சிமாநாட்டில் எழுப்புவோம்

வெளிப்படை தன்மை தரத்தினை சுவிட்சர்லாந்து இன்னும் காக்கவில்லை என்றால், சுவிட்சர்லாந்தில் தேவையான சட்டப்பூர்வமான, ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்படாவிட்டால், இதை உலகளாவிய மன்றத்தில் எடுத்து வைக்க இந்தியா தயங்காது.

ஜி-20 உச்சி நாடுகள் அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய மன்றத்தில் இந்தியா இந்தப் பிரச்சினையை எழுப்பும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™