Daily Thanthi |
- என்னுடன் நடித்த நடிகைகளில் அகம்பாவம் இல்லாத கதாநாயகி, ஜெனிலியா
- 20 ஓவர் உலக கோப்பை பயிற்சி கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
- 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் கட்ட அட்டவணை வெளியீடு தொடக்க ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா மோதல்
- நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜிம்பாப்வே வெற்றி
- பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வெற்றி பாகிஸ்தான் 71 ரன்னில் சுருண்டது
- தபால் நிலைய ஏ.டி.எம். சேவை விரைவில் தொடக்கம்
- உலக ஸ்குவாஷ் போட்டி: 2–வது சுற்றுக்கு தீபிகா பலிக்கல் முன்னேற்றம்
- சீனாவில் வசந்த திருவிழாஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்
- ஸ்டெயின், பிளிஸ்சிஸ் காயத்தால் அவதி
- உலக சதுரங்க தகுதி சுற்று: ஆனந்த் தொடர்ந்து முன்னிலை
| என்னுடன் நடித்த நடிகைகளில் அகம்பாவம் இல்லாத கதாநாயகி, ஜெனிலியா Posted: 19 Mar 2014 01:12 PM PDT சென்னை என்னுடன் நடித்த நடிகைகளில், அகம்பாவம் இல்லாத கதாநாயகி ஜெனிலியா என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார். பேட்டி நடிகர் ஜெயம் ரவி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயம் ரவி அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி:நிமிர்ந்து நில்Õ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். இந்த அனுபவம் மறக்க முடியாதது. இந்த படத்தின் கதையை கேட்டபோதே படம் பார்த்த மாதிரி இருந்தது. அப்போதே பெரிய நம்பிக்கை வந்தது. படம் எடுத்து முடித்தபோது அது மேலும் அதிகமானது. வெளியாகி வரவேற்பு பெற்று ஓடும்போது, எனக்கு மிகப்பெரிய சக்தியாக மாறியுள்ளது. சாக்லெட் பாய் கேள்வி:உங்கள் மீதான சாக்லெட் பாய் இமேஜ் மாறாதது வருத்தம் அளிக்கிறதா? பதில்:ஒரு நடிகன் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். அதற்கு இமேஜ் தடையாக இருக்கக் கூடாது. என் மீதான Ôசாக்லெட் பாய்Õ இமேஜை நான் வெறுக்கவில்லை. ஏனென்றால் காதலிப்பது போல் நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. காதலிக்க காதலி கிடைத்து காதலிப்பது எல்லோருக்குமா வாய்க்கிறது? எனக்கு படங்களில் காதலிகள் கிடைக்கிறார்கள். காதலிக்கிறேன். ஜெனிலியா கேள்வி:உங்களுடன் நடித்த நடிகைகளில் உங்களை கவர்ந்தவர் யார்? பதில்:ஜெனிலியாதான். அவர் நட்பாக பழகுவார். தான் என்கிற அகம்பாவம் எதுவும் அவரிடம் இல்லை. அவருடன் நடிக்கும்போது சவுகர்யமாக உணர்கிறேன். இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. மற்ற கதாநாயகிகள் கோபித்துக் கொள்வார்களே என்று நான் நினைக்கவில்லை. நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள் என நம்புகிறேன். நயன்தாராவுடன்... கேள்வி:உங்கள் அண்ணன் ராஜா டைரக்ஷனில் நயன்தாராவுடன் நடிப்பது பற்றி...? பதில்:அண்ணன் ராஜா டைரக்ஷனில் எம்.குமரன், உனக்கும் எனக்கும் ஆகிய படங்களில் நயன்தாராவை என் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி நடந்தது. நேரம் அமையவில்லை. இப்போது இணைந்து நடிக்கிறேன். தமிழ் தெரிந்த நடிகை என்பதால் சுலபமாக புரிந்துகொண்டு நடிக்கிறார். நயன்தாரா திறமையான நடிகைதான். பேட்டியின் போது டைரக்டர் சமுத்திரக்கனி உடன் இருந்தார். image: category:Tagging:News Group Category: |
| 20 ஓவர் உலக கோப்பை பயிற்சி கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா Posted: 19 Mar 2014 01:04 PM PDT மிர்புர் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை மிர்புர் ஸ்டேடியத்தில் சந்தித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்தின் தற்காலிக கேப்டன் மோர்கன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த முறையும் சொதப்பி வெறுப்பேற்றினர். ரோகித் ஷர்மா 5 ரன்னிலும் (8 பந்து), ஷிகர் தவான் 14 ரன்னிலும் (15 பந்து), யுவராஜ்சிங் 1 ரன்னிலும் (5 பந்து) ஆட்டம் இழந்தனர். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 39 ரன்களாக (6 ஓவர்) இருந்தது. கோலி, ரெய்னா அரைசதம் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் துரிதமாக உயர்த்தினர். ரவி போபராவின் ஒரே ஓவரில் 4, 4, 6, 4 என்று வரிசையாக எல்லைக்கோட்டிற்கு பந்தை ஓடவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரெய்னா அதே ஓவரில் கேட்ச் ஆகி போனார். ரெய்னா தன் பங்குக்கு 54 ரன்கள் (31 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார். டோனியும், கோலியும் முடிந்தவரை வேகம் காட்டினர். கடைசி ஓவரில் 3 பவுண்டரியுடன் கோலி இன்னிங்சை முடித்து வைத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. முதல் 10 ஓவர்களில் 73 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, அடுத்த 10 ஓவர்களில் 105 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. கோலி 74 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி), டோனி 21 ரன்களுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்தியா வெற்றி அடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹாலசும் (16 ரன்), மைக்கேல் லம்பும் (36 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஓரளவு நல்ல தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். ஆனால் அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இதனால் கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் இங்கிலாந்தால் இலக்கை நெருங்க முடியவில்லை. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது, 20-வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்ததுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இங்கிலாந்தை அடக்கினார். அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்னே எடுக்க முடிந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்திய அணி அடுத்து பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது. ஸ்கோர் போர்டு இந்தியா ரோகித் ஷர்மா (சி) ஹாலஸ் (பி) டெர்ன்பேச் 5 தவான் (சி) டிரெட்வெல் (பி) பிரிஸ்னன் 14 விராட் கோலி (நாட்-அவுட்) 74 யுவராஜ்சிங் (சி) பட்லர் (பி) ஜோர்டான் 1 ரெய்னா (சி) ஜோர்டான் (பி) போபரா 54 டோனி (நாட்-அவுட்) 21 எக்ஸ்டிரா 9 மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 178 விக்கெட் வீழ்ச்சி: 1-15, 2-30, 3-39, 4-120 பந்து வீச்சு விவரம் மொயின் அலி 1-0-4-0 டெர்ன்பேச் 3-0-27-1 பிரிஸ்னன் 3-0-31-1 ஜோர்டான் 4-0-37-1 ரவி போபரா 2-0-25-1 ஸ்டூவர்ட் பிராட் 2-0-14-0 டிரெட்வெல் 4-0-20-0 ஸ்டீபன் பரி 1-0-17-0 இங்கிலாந்து லம்ப் (ஸ்டம்பிங்) டோனி (பி) ரெய்னா 36 ஹாலஸ் (பி) புவனேஷ்வர்குமார் 16 மொயின் அலி (சி) ரஹானே (பி) ஜடேஜா 46 மோர்கன் (சி) யுவராஜ் (பி) அஸ்வின் 16 பட்லர் (ஸ்டம்பிங்) டோனி (பி) ஜடேஜா 30 போபரா (பி) முகமது ஷமி 6 பிரிஸ்னன் (நாட்-அவுட்) 3 கிறிஸ் ஜோர்டான் (நாட்-அவுட்) 1 எக்ஸ்டிரா 4 மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 158 விக்கெட் வீழ்ச்சி: 1-43, 2-58, 3-87, 4-128, 5-145, 6-157 பந்து வீச்சு விவரம் புவனேஷ்வர்குமார் 3-0-27-1 முகமது ஷமி 3-0-29-1 அஸ்வின் 4-0-20-1 ரெய்னா 4-0-23-1 ரவீந்திர ஜடேஜா 3-0-23-2 அமித் மிஸ்ரா 2-0-21-0 வருண் ஆரோன் 1-0-13-0 image: category: |
| 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் கட்ட அட்டவணை வெளியீடு தொடக்க ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா மோதல் Posted: 19 Mar 2014 01:00 PM PDT சென்னை 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தேதியும், பாராளுமன்ற தேர்தல் தேதியும் ஒரேநேரத்தில் வருவதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல். போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 2-வது கட்ட ஆட்டங்கள் இந்தியாவில் தேர்தல் முடிவடைந்த மாநிலங்களில் நடத்துவது என்றும், அதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் வங்காளதேசத்திலும், இறுதி கட்ட ஆட்டங்கள் இந்தியாவிலும் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல் கட்ட போட்டி அட்டவணை முடிவு செய்து வெளியிடப்பட்டது. முதல் கட்ட அட்டவணை வெளியீடு இதன்படி 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் (20 லீக் ஆட்டங்கள்) ஐக்கிய அரபு எமிரேட்சில் மூன்று மைதானங்களில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. அபுதாபி, துபாயில் தலா 7 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 6 ஆட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மே முதல் வாரத்தில் இருந்து... 2-வது கட்ட ஆட்டங்கள் மே 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும், இறுதிப்போட்டி உள்ளிட்ட கடைசி கட்ட ஆட்டங்கள் இந்தியாவில் மே 13-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரையும் நடக்கிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரையிலான காலத்தில் 9 கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'உள்துறை அமைச்சகம் தொடர்ந்து எடுத்த முயற்சியின் பலனாக நிறைய மாநிலங்கள் ஐ.பி.எல். போட்டியை தங்கள் மாநிலங்களில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதுவரை எங்களுக்கு கிடைத்து இருக்கும் சாதகமான பதில்களின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிக்கான ஆட்டங்களை மே முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேதி மோதும் அணிகள் இடம் இந்திய நேரம் ஏப்.16 மும்பை–கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி ஏப்.17 டெல்லி–ராஜஸ்தான் ஷார்ஜா இரவு 8 மணி ஏப்.18 சென்னை –பஞ்சாப் அபுதாபி மாலை 4 மணி ,, ஐதராபாத்–ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி ஏப்.19 பெங்களூர்–மும்பை துபாய் மாலை 4 மணி ,, கொல்கத்தா–டெல்லி துபாய் இரவு 8 மணி ஏப்.20 ராஜஸ்தான்–பஞ்சாப் ஷார்ஜா இரவு 8 மணி ஏப்.21 சென்னை–டெல்லி அபுதாபி இரவு 8 மணி ஏப்.22 பஞ்சாப்–ஐதராபாத் ஷார்ஜா இரவு 8 மணி ஏப்.23 ராஜஸ்தான்–சென்னை துபாய் இரவு 8 மணி ஏப்.24 பெங்களூர்–கொல்கத்தா ஷார்ஜா இரவு 8 மணி ஏப்.25 ஐதராபாத்–டெல்லி துபாய் மாலை 4 மணி ,, சென்னை–மும்பை துபாய் இரவு 8 மணி ஏப்.26–ராஜஸ்தான்–பெங்களூர் அபுதாபி மாலை 4 மணி ,, பஞ்சாப்–கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி ஏப்.27 டெல்லி–மும்பை ஷார்ஜா மாலை 4 மணி ,, ஐதராபாத்–சென்னை ஷார்ஜா இரவு 8 மணி ஏப்.28 பெங்களூர்–பஞ்சாப் துபாய் இரவு 8 மணி ஏப்.29 கொல்கத்தா–ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி ஏப்.30 மும்பை–ஐதராபாத் துபாய் இரவு 8 மணி image: category: |
| நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜிம்பாப்வே வெற்றி Posted: 19 Mar 2014 12:55 PM PDT சைலெட், 20 ஓவர் கிரிக்கெட் தகுதி சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 'சூப்பர்–10' சுற்றில் (மார்ச் 21–ந் தேதி முதல்) விளையாட உள்ளன. எஞ்சிய இரு இடத்திற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. தகுதி சுற்றில் ஆடும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி 'ஏ' பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்–10' சுற்றை எட்டும். நெதர்லாந்து 140 ரன் இந்த நிலையில் தகுதி சுற்றில், சைலெட்டில் (பி பிரிவு) நேற்று நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து–ஜிம்பாப்வே அணிகள் எதிர்கொண்டன. இதில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மைபர் (0) ஸ்வார்ட் (3 ரன்), இருவரும் 2–வது ஓவருக்குள் நடையை கட்டினாலும், டாம் ஹூப்பர் அரைசதம் அடித்து நெதர்லாந்து சவாலான ஸ்கோரை அடைய உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான டாம் ஹூப்பர் 72 ரன்களுடன் (58 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றார். தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணியில் ஹாமில்டன் மசகட்சா (43 ரன்), கேப்டன் பிரன்டன் டெய்லர்(49 ரன்,39 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) நிலைத்து நின்று ஆடினாலும், நெதர்லாந்து பவுலர்கள் நீயா–நானா? என்கிற ரீதியில் கடுமையாக நெருக்கடி அளித்தனர். கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜமில் வீசிய இறுதி ஓவரில் முதல் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து ஜிம்பாப்வே 6 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் சிக்ஸ் இதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த போது, சிபாண்டா (9 ரன்) அதை சிக்சருக்கு தூக்கியடித்து ஜிம்பாப்வேயின் வெற்றியை உறுதி செய்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்தில் ஒரு அணி வெற்றி காண்பது இது 13–வது நிகழ்வாகும். முந்தைய அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. image: category: |
| பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வெற்றி பாகிஸ்தான் 71 ரன்னில் சுருண்டது Posted: 19 Mar 2014 12:50 PM PDT பாதுல்லா 20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்க அணிகள் வெற்றி கண்டன. ஆஸ்திரேலியா 200 ரன்கள் குவிப்பு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி பாதுல்லா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட்வார்னரும், ஆரோன் பிஞ்சும், நியூசிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். கனே வில்லியம்சனின் ஒரே ஓவரில் பிஞ்ச் 4 பவுண்டரி, ஒரு சிக்சரை சாத்தினார். ரோனி ராவின் ஓவரில் 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் வார்னர் விரட்டியடித்தார். இருவரும் முதல் 8 ஓவர்களில் மட்டும் 113 ரன்கள் திரட்டி பட்டையை கிளப்பினர். இதன் பின்னர் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஜோடி 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி பாதியிலேயே பெவிலியன் திரும்பியது. வார்னர் 26 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 65 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 22 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்களும் விளாசினர். தொடக்க ஜோடி வெளியேறியதும் ரன்வேகம் சற்று தளர்ந்தது. ஆனாலும் 200 ரன்களை எட்டி விட்டனர். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் 3 சிக்சருடன் 27 ரன்களும், பிராட் ஹாட்ஜ் 2 சிக்சருடன் 25 ரன்களும், கேப்டன் ஜார்ஜ் பெய்லி 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3 ரன்னில் முடிவு அடுத்து கடின இலக்கை நோக்கி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டே வந்தது. வில்லியம்சன் 17 ரன்னிலும், கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 37 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் 62 ரன்களிலும் (34 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்கள். கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 19-வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், கோரி ஆண்டர்சன் (29 ரன்), லுக் ரோஞ்சி (21 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை காலி செய்து 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே வீசினார். இதில் ஜேம்ஷ் நீஷம் (2 ரன்), டேவ்சிச் (3 ரன்) ஆட்டம் இழக்க இந்த ஓவரில் 5 ரன்களே வந்தது. 20 ஓவர்களில் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி 'திரில்' வெற்றியை ருசித்தது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி மிர்புரில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. வெய்ன் சுமித் 60 ரன்களும், வெய்ன் பிராவோ 43 ரன்களும், டேரன் சேமி 30 ரன்களும், கிறிஸ் கெய்ல் 12 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 139 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷன் 43 ரன்கள் எடுத்தார். மூத்த வீரர்கள் மஹேலா ஜெயவர்த்தனே ரன் ஏதுமின்றியும், சங்கக்கரா 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரின் 4 விக்கெட்டுகளும், வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தான் 71 ரன் பாதுல்லா ஸ்டேடியத்தில் இரவில் நடந்த இன்னொரு பயிற்சி மோதலில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 17.3 ஓவர்களில் வெறும் 71 ரன்னில் சுருண்டது. அகமது ஷேசாத் (12 ரன்), உமர் அக்மல் (17 ரன்), சோகைப் மசூத் (15 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் 'அணிவகுத்து' சென்றனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் சோட்சோப், ஹென்ரிக்ஸ், பார்னல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். எளிய இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 14 ஓவர்களில் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. image: category: |
| தபால் நிலைய ஏ.டி.எம். சேவை விரைவில் தொடக்கம் Posted: 19 Mar 2014 12:49 PM PDT திண்டுக்கல், திண்டுக்கல்லில் விரைவில் தபால் நிலைய ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக தபால் சேமிப்பு கணக்கு எண்கள் அனைத்தும் 10 இலக்க எண்காக மாற்றும் பணி நடக்கிறது. தபால் நிலைய ஏ.டி.எம். சேவை இந்திய தபால் துறை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. மணி ஆர்டர், தபால் சேவை போன்றவற்றில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதில் மற்றொரு புதிய திட்டமாக தபால் நிலைய வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஏ.டி.எம். மையம் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தபால் நிலைய ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் இந்த ஏ.டி.எம். சேவைகளை தொடங்க தபால் துறை முடிவு செய்துள்ளது. திண்டுக்கல், பழனி அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் தபால் நிலைய ஏ.டி.எம். மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங் களில் ஏ.டி.எம். மையங்கள் தொடங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக திண் டுக்கல், பழனியில் ஏ.டி.எம். சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இதற்காக திண்டுக்கல், பழனியில் ஏ.டி.எம். வசதிக்காக தனியாக கட்டிட அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. 10 இலக்க எண்கள் மேலும் ஏ.டி.எம். சேவையை தொடங்குவதற்கு வசதியாக தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகள் அனைத்தும் ஒழுங்கு செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் 10 இலக்க எண்கள் வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதில் முதல்கட்டமாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் உள்ள சேமிப்பு கணக்குகள் அனைத்திற்கும் 10 இலக்க எண்கள் வழங்கப்பட்டு விட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள தபால் நிலைய சேமிப்பு கணக்குகளுக்கு 10 இலக்க எண்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 6¾ லட்சம் கணக்குகள் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 6¾ லட்சம் தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து கணக்குகளுக்கும் படிப்படியாக 10 இலக்க எண்கள் வழங்கப்பட இருக்கிறது. அதன்பின்னர் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டு, முக்கிய இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்படும். திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.டி.எம். மையம் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தபால் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். image: category: |
| உலக ஸ்குவாஷ் போட்டி: 2–வது சுற்றுக்கு தீபிகா பலிக்கல் முன்னேற்றம் Posted: 19 Mar 2014 12:46 PM PDT பினாங்கு, பெண்களுக்கான 29–வது உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவின் பினாங்கு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கல் 11–2, 11–6, 11–5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லிசா எய்ட்கெனை வீழ்த்தினார். இன்று நடக்கும் 2–வது சுற்றில் தீபிகா, எகிப்தின் ரனீம் எல் வெலிலியை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 7–11, 7–11, 11–9, 2–11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்சிடம் வீழ்ந்தார். 8–வது உலக படத்திற்கு குறி வைத்திருக்கும் நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான மலேசியாவின் நிகோல் டேவிட் முதல் சுற்றில் 11–9, 11–5, 11–8 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் எம்மா பெடோசை வென்றார். image: category: |
| சீனாவில் வசந்த திருவிழாஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர் Posted: 19 Mar 2014 12:45 PM PDT பிய்ஜிங், சீனாவில், சிச்சுவான் மாகாணத்தில் மியான்யாங்க் என்ற இடத்தில் 3 நாள் வசந்த திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழா காலத்தில் அங்குள்ள ஒரு பழமையான பாலத்தின் வழியே நடந்து சென்றால், தங்கள் கஷ்டங்கள், துன்பங்கள், நோய்கள் தீரும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக பாலத்தின் மீது நடந்து சென்றனர்.இதற்கான பாதுகாப்பு ஏற்படுகளை அந்நாட்டு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். image: category:Tagging:News Group Category: |
| ஸ்டெயின், பிளிஸ்சிஸ் காயத்தால் அவதி Posted: 19 Mar 2014 12:43 PM PDT sடாக்கா, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இருவரும் தொடையில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் அவர்கள் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. 20 ஓவர் உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்கா தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 22–ந்தேதி இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இவர்கள் இருவரும் களம் இறங்குவது சந்தேகம் தான். உடல்தகுதி பெறுவார்களா? என்பது போட்டிக்கு முன்பாகத் தான் முடிவு செய்யப்படும். பிளிஸ்சிஸ் ஆட முடியாமல் போனால், டிவில்லியர்ஸ் அணியை வழிநடத்துவார். image: category: |
| உலக சதுரங்க தகுதி சுற்று: ஆனந்த் தொடர்ந்து முன்னிலை Posted: 19 Mar 2014 12:38 PM PDT கந்தி மான்சிஸ்க், 2014–ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார். இந்த நிலையில் நேற்று நடந்த 6–வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், ரஷிய வீரர் செர்ஜி கர்ஜகினை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஆனந்த் 33–வது காய் நகத்தலுக்கு பிறகு டிரா கண்டார். ஆனந்த் கண்ட 4–வது டிரா இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் பல்கேரிய வீரர் வெசெலின் தபலோவ், ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கை 41–வது காய்நகர்த்தலில் வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் அஜர்பைஜான் வீரர் ஷக்ரியர் நேம்ட்யாரோவ், ரஷிய வீரர் பீட்டர் ஸ்விட்லரை சாய்த்தார். லெவோன் அரோனியன் (அர்மேனியா)–டிமிட்ரி ஆன்ட்ரீகின் (ரஷியா) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. 6–வது சுற்று முடிவில் இந்திய வீரர் ஆனந்த் 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். லெவோன் அரோனியன் (அர்மேனியா) 3.5 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளார். category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |