Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மக்களை சிரிக்க வைக்கும் நாங்களும் டாக்டர்கள் தான் பல்கலைக்கழக விழாவில் நடிகர் செந்தில் பேச்சு

Posted: 18 Mar 2014 12:55 PM PDT

சின்னாளபட்டி,

திரைப்படங்கள் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நாங்களும் ஒருவகையில் டாக்டர்கள் தான் என்று காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் செந்தில் பேசினார்.

சினிமா பட விழா

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து மூவி கிளப் என்ற பெயரில் சினிமா குழு அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் சினிமா படவிழா என்னும் 2 நாள் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியில் மூவி கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் நேரு வரவேற்று பேசினார்.

விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜோசப் துரைராஜ் தலைமை தாங்கி பேசினார். இந்த விழாவை தொடங்கி வைத்த திரைப்பட நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான சிங்கமுத்து பேசும் போது கூறியதாவது:-

சினிமா துறைகள் வருவதற்கு முன்பு இலக்கியங்களே மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், மகிழ்ச்சியாக மனிதன் வாழவும் ஒரு கருவியாக இருந்தது. சினிமா என்ற துறை வந்த பின்பு அதிகமான மனிதர்கள் இலக்கியங்களை மறந்து விட்டனர். சினிமாவை மட்டுமே வைத்து மகிழ்ச்சி, இன்ப, துன்பங்களை மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

நான் இளைஞனாக இருக் கும் போது என் நடவடிக்கையை பார்த்து என் அப்பா சொல்வார், 'உன் பொழப்பை பார்த்து ஊரே சிரிக்க போகிறது' என்று திட்டுவார். ஆனால் அந்த பிழைப்பு எனக்கு பணத்தை சம்பாதித்து கொடுக்கிறது என்பது இப்போது தான் தெரிந்தது.

இவ்வாறு சிங்கமுத்து பேசினார்.

டாக்டர்கள் தான்..

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் செந்தில் பேசும் போது, 'திரைப்படங்கள் மூலம் மக் களை சிரிக்க வைக்கும் எங்களை போன்றவர்களும் ஒரு வகையில் டாக்டர்கள் தான். சிரித்தால் நோய் விட்டு போகும் என்றார்கள். மருந்து மாத்திரை இல்லாமல் சிரிக்க வைக் கும் நாங்கள் டாக்டர்கள். தற்போதுதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு நகைச்சுவை காட்சிகள் முக்கிய பங்காற்றுகிறது. திரைப்படங்களில் வரும் காட்சிகளில் "டைமிங் ஜோக்" தான் படத்தின் வெற்றிக்கு வித்திடுகிறது. இவ்வாறு நடிகர் செந்தில் பேசினார்.

நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் எல்.எஸ்.பிரபு ராஜா, பல்கலைக்கழக மாணவர் நலத்துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன், கலை மற்றும் வரைகலை ஒருங்கிணைப்பாளர் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் சமூகத்தை சித்தரிக்கும் பல்வேறு ஆவணப்படங்கள் திரையிட்டு காட்டப்பட்டு அதன் இயக்குனர்கள், அந்த படங்கள் பற்றி மாணவர்களுடன் விவாதிக்க உள்ளனர்.
 

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கடலூர் சிறையில் அடைப்பு

Posted: 18 Mar 2014 12:39 PM PDT

 நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் நோமன், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரகுப்பம் ஐ.டி.ஐ. நகரை சேர்ந்த ராஜ் என்கிற ராஜ்குமார்(வயது 35) என்பவர் என்.எல்.சி. 1-வது சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். இவர் 2-வது சுரங்கத்தில் பணிபுரிந்து வரும் தனது நண்பரை பார்ப்பதற்காக 2-வது சுரங்க நுழைவு வாயிலுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுத்ததால் அங்கு காவலுக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரரான பீகார் மாநிலத்தை சேர்ந்த நோமன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டார். இதில் ராஜ்குமார் பலியானார். இந்த சம்பவத்தை கண்டித்து நெய்வேலியில் பெரும் கலவரம் வெடித்தது.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்குமாரின் மனைவி அமலா ஷீபாராணி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் நோமனை(வயது 36) என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நோமனிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நோமனை நெய்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலையில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கவியரசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து நோமனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூருக்கு அழைத்துவந்தனர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது காஞ்சீபுரம் தொகுதியில் நடந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted: 18 Mar 2014 12:33 PM PDT

திருப்போரூர்,

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது என்று காஞ்சீபுரம் தொகுதி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காஞ்சீபுரம் தொகுதியில்

காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து நேற்று கேளம்பாக்கத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது:–

சில கட்சிகள், பல தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். வெற்றி பெற்றால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என மணலை கயிறாக திரித்து சொல்வார்கள். தி.மு.க. ஆட்சியில் 2 மணிநேர மின்வெட்டை குறைசொல்லி பொறுப்பேற்ற ஜெயலலிதா, மூன்று ஆண்டுகள் ஆகியும் மின்வெட்டு பிரச்சினையை தீர்த்தபாடில்லை.

கடல்நீர் சுத்திகரிப்பு

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போதும் இந்த மின்வெட்டுக்கு மத்திய அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம் என பொய் கூறுவார். இந்த தொகுதிக்காக தி.மு.க. ஆட்சியில் மத்தியகைலாஷ் முதல் மாமல்லபுரம் வரை சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.908 கோடியில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். திருப்போரூர் நெம்மேலி இடையே ரூ.4.10 கோடியில் பக்கிங்காம் கால்வாய் பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 3 வருடங்கள் ஆகியும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இன்னும் முடிக்கப்படவில்லை.

சங்கிலி பறிப்பு

இந்த அட்சிக்கு அறிவிப்பு ஆட்சி என பெயர் சூட்டலாம். பஸ் கட்டணத்தை உயர்த்தும்படி நாங்களே தி.மு.க. ஆட்சியில் வலியுறுத்தினோம். ஆனால் தலைவர் கருணாநிதி ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி தவிர்த்தார். மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலைகள் எல்லாம் உயர்ந்துவிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத ஆட்சி, இந்த ஆட்சி.

விடியற்காலையில் பெண் ஒருவர் வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு இளைஞன் சங்கிலியை அறுத்துச்சென்றான். மறுநாள் அதே வீட்டுக்கு அந்த இளைஞன் வந்து அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்து, தங்க சங்கிலி போடாமல் கவரிங் சங்கிலி போட்டு என்னை ஏமாற்றி விட்டாயே என கேட்டுள்ளான். திருடிச்சென்றவன் மறுநாள் வருவதை இங்கு தான் காணமுடிகிறது. அ.தி.மு.க. அரசுக்கு பாடம்புகட்ட வேண்டிய நல்ல தருணம் இந்த பாராளுமன்ற தேர்தல்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மாமல்லபுரத்தில்

மாமல்லபுரத்தில் பேசும்போது, ''ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை, அறிவிப்போடு சரி நடைமுறைக்கு வருவதில்லை. ஆனால் 1996–ல் தி.மு.க. ஆட்சியில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை புதுப்பொலிவோடு சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

மாமல்லபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மாமல்லபுரத்தில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது'' என்றார்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், மாமல்லபுரம் நகர செயலாளர் வெ.விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் வீ.கிட்டு, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் பாரூக்அலி, மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் பொ.தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலவாக்கத்தில் வடமாநில வாலிபரை கடத்தி ரூ.50 ஆயிரம் கேட்ட கும்பல் கைது

Posted: 18 Mar 2014 12:29 PM PDT

ஆலந்தூர்,

பாலவாக்கத்தில் வடமாநில வாலிபரை கடத்தி ரூ.50 ஆயிரம் பணம் கேட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வடமாநில தொழிலாளி கடத்தல்

சென்னையை அடுத்த பாலவாக்கம் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இங்கு கொல்கத்தாவை சேர்ந்த சதாம் (வயது 34), அவரது தம்பி ஜாபர் (30) ஆகியோர் தங்கி கட்டுமான தொழிலாளிகளாக வேலைபார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை ஜாபர், பாலவாக்கம் கடற்கரை பகுதிக்கு தனியாக நடந்து சென்றார்.

அப்போது 3 வாலிபர்கள் ஜாபரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்று உள்ளனர். தம்பி மாயமானதால் சதாம் பல இடங்களில் தேடிப்பார்த்தார். பின்னர் அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'உன் தம்பியை நாங்கள் கடத்தியிருக்கிறோம். எங்களுக்கு ரூ.50 ஆயிரம் தந்தால் விட்டுவிடுகிறோம். இல்லாவிட்டால் தலையை துண்டித்து அனுப்பி விடுவோம்' என கூறி அழைப்பை துண்டித்து விட்டான்.

6 பேர் கைது

இதுகுறித்து சதாம் நீலாங்கரை போலீசில் புகார் செய்தார். அடையாறு துணை கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் நீலாங்கரை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரித்து வந்தனர். அப்போது மீண்டும் கடத்தல்காரன் சதாமின் செல்போனில் பேசி, 'மேடவாக்கம் கூட்ரோட்டிற்கு வா' என்று கூறினார்.

கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் திட்டமிட்டு, சதாமுடன் மேடவாக்கம் கூட்ரோட்டிற்கு சென்று மறைந்து நின்று கண்காணித்தனர். அப்போது, தனியாக ஆட்டோவில் இருந்த சதாமிடம் 6 நபர்கள் வந்து சுற்றி நின்று கொண்டு பணத்தை கேட்டனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் சொன்ன தகவலின் பேரில் கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஜாபரை மீட்டனர். 6 பேரையும் பிடித்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், கொல்கத்தாவை சேர்ந்த சாகூர் (24). கலால்ஷேக் (25), ஹன்அருள் (26), ஷோபிக் (24), சுமன் (25), துலால் (38) என தெரியவந்தது. செலவிற்கு பணம் தேவைப்பட்டதால் கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்

Posted: 18 Mar 2014 12:02 PM PDT

சிட்டகாங்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடமும் தோல்வி அடைந்த ஹாங்காங் அணி போட்டியை விட்டு வெளியேறியது.

உலக கோப்பை கிரிக்கெட்

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 'சூப்பர்–10' சுற்றில் (மார்ச் 21–ந் தேதி முதல்) விளையாட உள்ளன. எஞ்சிய இரு இடத்திற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது.

தகுதி சுற்றில் களம் இறங்கியுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி 'ஏ' பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்–10' சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் சிட்டகாங்கில் நேற்று நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) குட்டி அணிகளான ஹாங்காங்–ஆப்கானிஸ்தான் அணிகள் சந்தித்தன. இதில் டாஸில் ஜெயித்து முதலில் பேட் செய்த ஹாங்காங் அணியில் முதல் பந்திலேயே இர்பான் அகமது கிளீன் போல்டு ஆனார். இதே போன்று தான் முந்தைய ஆட்டத்திலும் இர்பான் அகமது முதல் பந்திலே ஆட்டம் இழந்தார். ஆனாலும் சுதாரித்து கொண்டு சரிவில் இருந்து மீண்டு வந்த ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 38 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் வெற்றி

அடுத்து களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத், ஷபியுல்லா ஆகியோரின் அதிரடியால் வெற்றிப்பாதையை எளிதாக்கியது. 24 ரன்னில் இருந்த போது சுலபமான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த முகமது ஷாசாத், டோனி போன்று 'ஹெலிகாப்டர் ஷாட்'டில் சிக்சர் பறக்க விட்டு வியக்க வைத்தார். அவர் 68 ரன்களில் (53 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். பந்தை பவுண்டரிக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்த ஷபியுல்லா அரைசதத்தையும் ( 51 ரன்கள், 24 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கடந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் திரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றிருந்த ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

அதே சமயம் ஏற்கனவே நேபாளிடம் மண்டியிட்ட ஹாங்காங் அணி தொடர்ந்து 2–வது தோல்வியை சந்தித்தன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ஸ்கோர் போர்டு

ஹாங்காங்

இர்பான் அகமது (சி) ஷாபூர் ஜட்ரன் 0

வாக்கஸ் பர்கட் (சி) தவ்லட் ஜட்ரன் (பி) நபி 32

அட்கின்சன் எல்.பி.டபிள்யூ (பி) ஹம்சா 31

சாப்மன் (பி) தவ்லட் ஜட்ரன் 38

பாபர் ஹயத் (சி) ஸ்டானிக்ஜாய் (பி) நபி 5

நிஜாகத் கான் (சி) நபி (பி) ஹம்சா 9

முனிர் தர் (ரன்–அவுட்) 3

தன்விர் அப்சர் (சி) குல்படின் (பி) ஷாபூர் 11

ஹசீப் அம்ஜத் (நாட்–அவுட்) 7

அய்ஜாஸ் கான் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 16

மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 153

விக்கெட் வீழ்ச்சி: 1–0, 2–42, 3–102, 4–115, 5–117, 6–127, 7–135, 8–147

பந்து வீச்சு விவரம்

ஷாபூர் ஜட்ரன் 4–0–27–2

குல்படின் நயிப் 2–0–23–0

ஹம்சா ஹாட்டக் 4–0–32–2

ஷென்வாரி 3–0–17–0

தவ்லட் ஜட்ரன் 3–0–24–1

முகமது நபி 4–0–27–2

ஆப்கானிஸ்தான்

நஜீப் தராகாய் (சி) நதீம் அகமது (பி) தன்விர் 7

முகமது ஷாசாத் (சி) இர்பான் அகமது (பி) ஹசீப் 68

ஸ்டானிக்ஜாய் (சி) பாபர் ஹயத் (பி) அய்ஜாஸ் கான் 13

ஷபியுல்லா (நாட்–அவுட்) 51

முகமது நபி (நாட்–அவுட்) 6

எக்ஸ்டிரா 9

மொத்தம் (18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154)

விக்கெட் வீழ்ச்சி: 1–14, 2–69, 3–116

பந்து வீச்சு விவரம்

தன்விர் அப்சல் 3–0–19–1

ஹசீப் அம்ஜத் 4–0–35–1

நதீம் அகமது 3–0–22–0

இர்பான் அகமது 3–0–15–0

நிஜாகத் கான் 2–0–23–0

அய்ஜாஸ் கான் 3–0–39–1

category:

2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து அணியுடன் இந்தியா இன்று மோதல்

Posted: 18 Mar 2014 11:35 AM PDT

மிர்புர்,

20 ஓவர் உலக கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இங்கிலாந்துடன் மோதுகிறது.

பயிற்சி கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 21-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. இதில் நேற்று முன்தினம் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் தலைமையிலான முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை மிர்புரில் இன்று சந்திக்கிறது.

சோதனை தொடரும்

முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியில் யாரும் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை. யுவராஜ்சிங் (33 ரன்), சுரேஷ் ரெய்னா (41 ரன்) ஆகியோர் மட்டுமே ஓரளவு நன்றாக ஆடினார்கள். வழக்கம் போல் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்களான ஷோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் ஒற்றை இலக்கில் ஏமாற்றினர்.

பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை 15 பேரையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது பீல்டிங் செய்த 11 பேர் தான் பேட்டிங்கும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. களம் இறங்கும் வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 11 ஆக இருந்தால் போதும். மற்றபடி யாரையும் மாற்றி மாற்றி ஆட வைத்து கொள்ளலாம்.முதலாவது ஆட்டத்தில் இந்திய கேப்டன் டோனி 14 பேரை விளையாட வைத்தார். பீல்டிங் செய்த அவர் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக பேட் செய்ய வரவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவுக்கு மட்டும் களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை.

2-வது பயிற்சி ஆட்டத்திலும் பரீட்சாத்த முயற்சியை தொடர முனைப்பு காட்டி வரும் டோனி, இதிலும் அனைத்து வீரர்களையும் சோதித்து பார்ப்பார் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமாகும். இதில் வெற்றி பெறும் போது, அதே உத்வேகத்துடன், நேர்மறையான சிந்தனையுடனும் பிரதான சுற்று ஆட்டத்தை எதிர்கொள்ள முடியும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மற்ற ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து (மாலை 3 மணி), இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் (மாலை 3 மணி), தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் (இரவு 7 மணி) ஆகிய அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டங்களும் இன்று நடக்கின்றன.

category:

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக பீட்டர்சன் நியமனம் தினேஷ் கார்த்திக்குக்கு துணை கேப்டன் பதவி

Posted: 18 Mar 2014 11:32 AM PDT

புதுடெல்லி,

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக கெவின் பீட்டர்சனும், துணை கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அணி

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் டெல்லி டேர்டெவில்சும் ஒன்று.

2013–ம் ஆண்டு ஐ.பி.எல்.–ல் டெல்லி அணியின் செயல்பாடு படு மோசமாக இருந்தது. 16 ஆட்டங்களில் 13–ல் தோல்வியை தழுவி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் எதிரொலியாக டெல்லி அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. எந்த வீரரையும் தக்கவைக்காத அந்த அணி நிர்வாகம், முத்திரை வீரர் ஷேவாக்கை கூட கழற்றி விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் நடந்த ஏலத்தில் டெல்லி அணிக்கு அனைத்து வீரர்களும் புதிதாக வாங்கப்பட்டனர். 'மேட்ச் கார்டு' சலுகை மூலம் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்சனை ரூ.9 கோடிக்கு டெல்லி அணி தன்வசப்படுத்தியது.

பீட்டர்சனுக்கு கேப்டன் பதவி

இந்த நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கெவின் பீட்டர்சனை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. சர்ச்சைகளுக்கு மத்தியில் இங்கிலாந்து அணியில் இருந்து பீட்டர்சன் நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால், அவர் பாதியிலேயே சர்வதேச போட்டிகளுக்கு பறந்து விடுவார் என்ற பயம் இனி இல்லை. இந்த முறை அவர் எல்லா ஐ.பி.எல். ஆட்டத்திலும் விளையாட முடியும். இதன் அடிப்படையிலேயே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆச்சரியப்படும் வகையில் ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு டெல்லி அணியின் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பீட்டர்சன் கூறுகையில், 'இந்த சீசனுக்கான டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். டெல்லி அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன். இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் கலந்த அற்புதமான அணியாக டெல்லி அணி உருவாகியுள்ளது. அருமையான பயிற்சியாளர் குரூப்பும் அமைந்துள்ளது. எங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் முகத்தில் இந்த தடவையை புன்னகையை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

33 வயதான பீட்டர்சன் 2012–ம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடி 305 ரன்கள் (சராசரி 61) குவித்தார். காயத்தால் கடந்த ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடவில்லை.

பயிற்சியாளர் மகிழ்ச்சி

டெல்லி அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறுகையில், 'பீட்டர்சனுடன் கைகோர்த்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த ஐ.பி.எல்.–ல் அவர் முழுமையாக பங்கேற்க முடியும் என்பது எங்களுக்கு சிறப்பான விஷயம். அவரால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை. தினேஷ் கார்த்திக், நிறைய ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர். இதன் மூலம் போட்டியின் போது அணிக்கான வியூகங்களை வகுப்பதில் அவர் பயனுள்ள தகவல்களை அளிப்பார்' என்றார்.

category:

உலக சதுரங்க தகுதி சுற்று: ஆனந்த் மீண்டும் ‘டிரா’

Posted: 18 Mar 2014 11:29 AM PDT

கந்தி மான்சிஸ்க்,

2014–ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

இந்த நிலையில் நேற்று நடந்த 5–வது சுற்றில் ஆனந்த், ரஷிய வீரர் டிமிட்ரி ஆன்ட்ரீகினை எதிர்கொண்டார். கறுப்பு நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய ஆனந்த் 43–வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். 5 சுற்று முடிவில் ஆனந்த் 2 வெற்றி, 3 டிரா என்று 3.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஸ்விட்லர், கிராம்னிக், ஆரோனியன் தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். 6–வது சுற்றில் ஆனந்த், இன்னொரு ரஷிய வீரர் செர்ஜி கர்ஜகினை சந்திக்கிறார்.

category:

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த போக்குவரத்து கட்டமைப்பு துறையில் முதலீட்டை 7 மடங்கு உயர்த்த வேண்டும்

Posted: 18 Mar 2014 10:57 AM PDT

புதுடெல்லி

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நெடுஞ்சாலை, ரெயில்வே, துறைமுகம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்பு துறையில் அடுத்த 18 ஆண்டுகளில் முதலீட்டை ஏழு மடங்கு உயர்த்த வேண்டும் என தேசிய போக்குவரத்து வளர்ச்சி கொள்கை கமிட்டி (என்.டி.டீ.பி.சி) தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆய்வு அறிக்கை

நீண்டகால அடிப்படையில் தேசிய போக்குவரத்து கொள்கையை உருவாக்குவதற்காக 2010–ஆம் ஆண்டு பிப்ரவரி, 11–ந் தேதி அன்று ராகேஷ் மோகன் தலைமையில் மேற்கண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இது தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பதினொறாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007–12) போக்குவரத்து கட்டமைப்பு வசதிக்காக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6 சதவீதமா£கும். இதனை 12–வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–17) ரூ.19 லட்சம் கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம்) உயர்த்த வேண்டும் என ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த முதலீட்டை படிப்படியாக அதிகரித்து 15–வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2027–32) ரூ.70 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என என்.டி.டீ.பி.சி. தெரிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருக்கும்.

இந்த அளவிற்கு முதலீட்டை மேற்கொண்டால் 12–வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆண்டிற்கு சராசரியாக 7 சதவீத வளர்ச்சியும், 15–வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 9 சதவீத வளர்ச்சியும் ஏற்படும் என கமிட்டி தெரிவித்துள்ளது.

சேவை வரி

கடந்த 2005–06, 2006–07 மற்றும் 2007–08 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. உலக பொருளாதார சீர்குலைவால் 2008–09–ஆம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி, சேவை வரியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதன் காரணமாக 2009–10–ம் நிதி ஆண்டில் 8.4 சதவீதமாகவும், 2010–11–ஆம் நிதி ஆண்டில் 9.3 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது.

வட்டி விகிதம்

இந்நிலையில் கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதி போதுமான அளவிற்கு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சென்ற 2012–13–ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவீதமாக குறைந்தது. நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியல் துறை மதிப்பீடு செய்துள்ளது. எனவே 12–வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான ஆண்டு சராசரி பொருளாதார வளர்ச்சி இலக்கை (8 சதவீதம்) எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்றுமதி

சாலை, ரெயில்வே உள்ளிட்ட போக்குவரத்து வசதி நன்றாக இருந்தால்தான் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல முடியும். துறைமுகம் மற்றும் விமான நிலைய வசதி நன்றாக இருந்தால்தான் வெளிநாடுகளுக்கு சரக்குகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ராகேஷ் மோகன் கமிட்டி தெரிவித்துள்ளது.

விரிவாக்க திட்டங்கள்

நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்களில் முதலீடு செய்ய தயக்கம் காட்டியதால் நாட்டின் தொழில்துறை உற்பத்தி மந்தமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) தொழில்துறை உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை (ஜி.டீ.பி) கணக்கிடுவதில் இத்துறையின் பங்கு 26 சதவீதமாக உள்ளது. எனவே தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க வேண்டியது அவசியம் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

category:

கச்சா எண்ணெய் விலை குறைவால் டீசல் விற்பனையில் வருவாய் இழப்பு ரூ.7.16–ஆக குறைந்தது

Posted: 18 Mar 2014 10:53 AM PDT

புதுடெல்லி

கச்சா எண்ணெய் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1 லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும் வருவாய் இழப்பு ரூ.7.16–ஆக குறைந்துள்ளது. இது இம்மாதத்தின் முதல் 15 தினங்களில் ரூ.8.37–ஆக இருந்தது.

ரூபாயின் வெளிமதிப்பு

தற்போது 1 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் 106.18 டாலரிலிருந்து 105.36 டாலராக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் டீசல் விற்பனையில் வருவாய் இழப்பு ஏற்படாத நிலை ஏற்படும் வரை அதன் விலையை 2013 ஜனவரியிலிருந்து மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசு உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து இதுவரை 1 லிட்டர் டீசலுக்கு ரூ.8.33 உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் டீசல் வாயிலான வருவாய் இழப்பு குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ஒரு லிட்டர் மண்எண்ணெய் விற்பனை வாயிலான வருவாய் இழப்பு ரூ.35.76–ஆக இருந்தது. இது தற்போது ரூ.36.34–ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு விற்பனையில் வருவாய் இழப்பு ரூ.655.96–லிருந்து ரூ.605.80–ஆக குறைந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் மேற்கொண்ட எரிபொருள்கள் விற்பனையில் நாள் ஒன்றிற்கான வருவாய் இழப்பு ரூ.411 கோடியிலிருந்து ரூ.399 கோடியாக குறைந்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல், மண்எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்கின்றன. இது அடக்க விலைக்கும் குறைவாக இருப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சமையல் எரிவாயு

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த வருவாய் இழப்பு ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. இதில் டீசல் விற்பனை வாயிலாக ரூ.47,655 கோடியும், சமையல் எரிவாயு மூலமாக ரூ.30,604 கோடியும், மண்எண்ணெய் வாயிலாக ரூ.22,373 கோடியும் அடங்கும். மொத்த வருவாய் இழப்பு மார்ச் மாத இறுதிக்குள் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இது முந்தைய நிதி ஆண்டில் ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்தது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™