Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பா.ஜனதாவும், காங்கிரசும் இந்து– முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Posted: 13 Mar 2014 08:43 AM PDT

மும்பை,

பா.ஜனதா இந்துகளுக்கும், காங்கிரஸ் முஸ்லிம்களுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

மும்பையில் பிரசாரம்

ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மும்பையில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஆட்டோ, மின்சார ரெயில்களில் சென்று பொதுமக்களை சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்தநிலையில் மும்பையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:–

மோடி அலை இல்லை

சிலர் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறி வருகின்றனர். நான் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும், மாநிலங்களுக்கும் சென்றேன். ஆனால் மோடி அலை எங்கும் வீசவில்லை. மக்கள் அலை மட்டுமே நாடு முழுவதும் வீசுகிறது.

அது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிரான அலைகளே தவிர மோடிக்கு ஆதரவான அலைகள் அல்ல.

குற்றச்சாட்டு

காங்கிரசும், பா.ஜனதாவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதைப்பற்றி பேசுவதையே தவிர்த்து வருகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அவர்கள் மதக்கலவரத்தை துண்டிவிடுகின்றனர். கலவரம் ஏற்பட்ட உடன் இந்துக்கள் ஒரு கட்சி பின்னாலும், முஸ்லிம்கள் ஒரு கட்சி பின்னாலும் செல்கின்றனர். ஆனால் பா.ஜனதா இந்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. அதுபோல் காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

category:

News Group Category:

தேர்தல் கமிஷனின் விழிப்புணர்வு பிரசார படங்களில் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி

Posted: 13 Mar 2014 08:31 AM PDT

ராஞ்சி,

பாராளுமன்ற தேர்தலில் வாக்கு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தேர்தல் கமிஷன் பல்வேறு மாநிலங்களிலும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிக்கெட் கேப்டன் டோனி, ஏற்கனவே தேர்தல் கமிஷனின் விழிப்புணர்வு பிரசார தூதராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியும் தேர்தல் கமிஷனின் விழிப்புணர்வு பிரசார தூதராக நியமிக்கப்பட்டு இருப்பதாக ஜார்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.ஜஜோரியா ராஞ்சி நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்கு அளிப்பதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரசார படங்களில் தீபிகா குமாரி தோன்றுவார் என்றும் அவர் கூறினார்.

category:

News Group Category:

மூணாறில், 2–வது நாளாக தமிழக ரேசன் அரிசி 40 மூட்டைகள் பறிமுதல்

Posted: 13 Mar 2014 08:19 AM PDT

மூணாறு,

மூணாறில் தமிழக ரேசன் அரிசி மூட்டைகள் 2–வது நாளாக தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டன.

ரேசன் அரிசி

தமிழக–கேரள மாநில எல்லை நகரமாக கேரள மாநிலம் மூணாறு அமைந்துள்ளது. பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தலமான இங்கு நேற்று தமிழகத்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரேசன் அரிசி 211 மூட்டைகளை மூணாறு போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து ரேசன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மூணாறில் உள்ள அரிசி மொத்த வியாபார கடைக்கு தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசியை கொண்டு வந்ததாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து தேவிகுளம் வழங்கல் துறை அதிகாரிகள், தேவிகுளம் தாசில்தார், மூணாறு போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வியாபார கடைக்கு சீல் வைத்து மூடினார்கள்.

40 மூட்டைகள் பறிமுதல்

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் தேவிகுளம் தாசில்தார், வழங்கல் துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட கடையை திறந்து இன்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசி 40 மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அந்த ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடையை மீண்டும் சீல் வைக்க முயன்ற போது, மூணாறு வியாபார சங்கத்தினர் தலையிட்டு கடையை சீல் வைத்து மூடக்கூடாது என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் கடையை சீல் வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள். இதை அடுத்து அதிகாரிகள் கடையை சீல் வைக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து கடத்தி வரப்படும் ரேசன் அரிசி இடுக்கி மாவட்டம் முழுவதும் டன் கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே கேரள மாநில வழங்கல் துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

category:

News Group Category:

நிமிர்ந்து நில்

Posted: 13 Mar 2014 08:15 AM PDT

Top Five Cinema Priority: 
1

தெகிடி

Posted: 13 Mar 2014 08:14 AM PDT

Top Five Cinema Priority: 
2

வல்லினம்

Posted: 13 Mar 2014 08:14 AM PDT

Top Five Cinema Priority: 
4

மைசூர் அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி கள்ளக்காதலி 7 மாதங்களாக வீட்டிற்குள் சிறைவைப்பு மின்வாரிய ஊழியர் கைது

Posted: 13 Mar 2014 08:00 AM PDT

மைசூர்,

மைசூர் அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி கள்ளக்காதலியை 7 மாதங்களாக வீட்டிற்குள் சிறைவைத்த மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மின்வாரிய ஊழியர்

மைசூர் மாவட்டம் பிரியாபட்டணா டவுன் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஷ் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சாமுண்டீஸ்வரி மண்டல மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.

அதேப் போல் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா சிலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (27). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் கூலி தொழிலாளி. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் ஜெகதீஷ் அடிக்கடி மின்சார பழுதை நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிக்காக சிலகுந்தா கிராமத்திற்கு சென்று வந்துள்ளார்.

கள்ளக்காதலி சிறைவைப்பு

அப்போது ஜெகதீசுக்கும், சரஸ்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெகதீஷ், நீ கணவரை விட்டு பிரிந்து வா, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று அடிக்கடி சரஸ்வதியிடம் ஜெகதீஷ் கூறியுள்ளார்.

இதனால் ஜெகதீசின் ஆசை வார்த்தைகளில் மயங்கி சரஸ்வதியும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவருடன் சென்றார். அதன் பின்னர் ஜெகதீஷ், சரஸ்வதியுடன் தான் தங்கியிருந்த மின்வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இதற்கிடையே ஜெகதீஷ், கணவரை விவாகரத்து செய்து விட்டு வா. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று அடிக்கடி சரஸ்வதியிடம் கூறிவந்துள்ளார். ஆனால் இதற்கு சரஸ்வதி சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், சரஸ்வதியை வீட்டை விட்டு வெளியே விடாமல், ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

கைது

மேலும் திருமணம் செய்ய சம்மதித்தால் தான், அறையில் இருந்து வெளியே வர முடியும் என்றும் ஜெகதீஷ், சரஸ்வதியை மிரட்டி வந்துள்ளார். இவ்வாறு கடந்த 7 மாதங்களாக சரஸ்வதியை, ஜெகதீஷ் தனி அறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சரஸ்வதி ஜெகதீஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் சம்பவம் பற்றி பிரியாபட்டணா போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கள்ளக்காதலியை கடத்தி வந்து வீட்டிற்குள் சிறை வைத்து கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதான ஜெகதீசிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

image: 

category:

News Group Category:

நிமிர்ந்து நில்

Posted: 13 Mar 2014 07:48 AM PDT

Cinema Category: 
விமர்சனம்

Cinema Group

Cinema Group Image

images: 

Cinema Group History

நடிகர்கள்: 
ஜெயம் ரவி, அமலாபால்,சரத்குமார், சூரி,நாசர், தம்பி ராமய்யா, பேராசிரியர் ஞானசம்பந்தம், சித்ராலட்சுமணன், ஞானவேல், சுப்பு, படவா கோபி
இசை: 
ஜீ.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: 
எம்.சுகுமார், எம்.ஜீவன்
இயக்கம்: 
பி.சமுத்திரக்கனி
தயாரிப்பு: 
வாசன்ஸ் விசுவல் வென்சர்ஸ்

Cinema Description

Cinema Description: 

கதையின் கரு: லஞ்சத்துக்கு எதிராக போராடும் இளைஞன்.

ஜெயம் ரவி, இரட்டை வேடங்களில் நடித்த படம்.

அரவிந்த் சிவசாமி, ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர். தனது மோட்டார் சைக்கிளில் 'சிக்னலுக்காக' நின்று கொண்டிருக்கும்போது, ஒரு போலீஸ்காரர் லஞ்சம் கேட்கிறார். ''என்னிடம் எல்லா சான்றிதழ்களும் இருக்கும்போது நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?'' என்று அரவிந்த் சிவசாமி பணம் கொடுக்க மறுக்கிறார். அவருடைய உண்மையும், நேர்மையும் பூமாரியை கவர்கின்றன. காதலிக்கிறார்.

லஞ்சம் கொடுக்க மறுக்கும் அரவிந்த் சிவசாமிக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் அத்தனை வழக்குகளையும் அவர் மீது பதிவு செய்கிறார்கள். அரசியல்வாதிகளை விட, அவர்களை லஞ்சம் வாங்க தூண்டி விடும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார், அரவிந்த் சிவசாமி. வீடியோ படம் மற்றும் ஆதாரங்களுடன் லஞ்சம் வாங்கிய 147 பேர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார்.

அந்த 147 பேர்களும் சேர்ந்து அரவிந்த் சிவசாமியை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார்கள். இதற்காக, ஆந்திராவில் இருந்து அரவிந்த் சிவசாமி போன்ற தோற்றம் கொண்ட நரசிம்மா ரெட்டி என்பவரை கண்டுபிடித்து, சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். நரசிம்மா ரெட்டி என்ன செய்கிறார்? என்பதே படத்தின் உச்சக்கட்ட காட்சி.

அரவிந்த் சிவசாமி, நரசிம்மா ரெட்டி ஆகிய இரண்டு வேடங்களிலும் ஜெயம் ரவி நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். லஞ்சத்துக்கு எதிராக மரணத்தையே சந்திக்க தயாராகும் துணிச்சல் மிகுந்த இளைஞர் அரவிந்த் சிவசாமி வேடத்தில் ஜெயம் ரவி அடக்கி வாசித்து இருக்கிறார். பதிநான்கு கோடி லஞ்ச பணத்தை வாங்கிக்கொண்டு அரவிந்த் சிவசாமியை தீர்த்துக்கட்ட சென்னைக்கு வரும் நரசிம்மா ரெட்டி வேடத்தில், அமர்க்களம் செய்கிறார்.

இரண்டு பேரும் மோதுகிற சண்டை காட்சி, நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

அவரை துரத்தி காதலிக்கும் அமலாபால், அழகு. இடையிடையே கனவு பாடல்களில் ஜெயம் ரவியுடன் ஆட்டம் போடுவதே இவர் வேலை.

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு டிரக்கில் பயணித்தபடி, டெலிவிஷன் மூலம் பொதுமக்களிடம் பேசும் ஜெயம் ரவியை பிடிக்க, பாய்ந்து செல்லும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார். ஓடும் லாரியை ஒற்றைக் கையினால் பிடித்தபடி அவர் தொங்குகிற சாகசம், சிலிர்க்க வைக்கிறது.

வழக்கம் போல் கதாநாயகனின் நண்பனாக சூரி. இவரும், அமலாபாலும் மச்சி, மச்சான் என்று பேசிக்கொள்ளும் 'காமெடி,' கலகலப்பு.

நாசர், தம்பி ராமய்யா, பேராசிரியர் ஞானசம்பந்தம், சித்ராலட்சுமணன், ஞானவேல், சுப்பு, படவா கோபி என நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.

எம்.சுகுமார், எம்.ஜீவன் ஆகிய இருவரும் போட்டி போட்டு ஒளிப்பதிவு செய்திருப்பார்கள் போலும். குறிப்பாக, அந்த அருவி நீரில் ஜெயம் ரவியும், அமலாபாலும் மூழ்கியபடி வரும் பாடல் காட்சியில் கேமராவும், கிராபிக்ஸ்சும் கைகோர்த்தபடி ஜாலம் காட்டுகின்றன. ஜீ.வி.பிரகாஷ்குமாரின் மெல்லிசையில், பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.

படத்தின் கதையும், காட்சிகளும் (முதல்வன், ரமணா பாணியில்) இப்படியெல்லாம் நடக்குமா? என்று யோசிக்க வைத்தாலும், ''நடக்க வேண்டும்'' என்ற உள்ளுணர்வை தூண்டியதில், டைரக்டர் சமுத்திரக்கனி வெற்றி பெற்று இருக்கிறார். படத்தில் முன்பகுதியில் இருந்த வேகமும், விறுவிறுப்பும் பின்பகுதியில் குறைந்திருப்பதை கவனித்திருக்கலாம். வசனம், நிறைய இடங்களில் அறிவுப்பூர்வமான விஷயங்களை அள்ளி தெளித்து இருக்கின்றன.

டைரக்டரையும், தயாரிப்பாளரையும் நிமிர்ந்து நிற்கவைக்கிற படம் இது.

தெகிடி

Posted: 13 Mar 2014 07:48 AM PDT

Cinema Category: 
விமர்சனம்

Cinema Group

Cinema Group Image

images: 

Cinema Group History

நடிகர்கள்: 
அஷோக் செல்வன்,ஜனனி அய்யர்,ஜெயப்பிரகாஷ்,
இசை: 
நவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு: 
தினேஷ் கிருஷ்ணன்
இயக்கம்: 
பி.ரமேஷ்

Cinema Description

Cinema Description: 

கதையின் கரு: பணத்துக்காக கொலை செய்யும் கும்பல்.

அஷோக் செல்வன், 'கிரிமினாலஜி' படித்தவர். அவருக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. அவருக்கு முதல் பணியாக, பல்வேறு வேலைகளில் இருக்கும் நான்கு பேர்களை பற்றிய விவரம் சேகரிக்கும் வேலை தரப்படுகிறது. அவர்களில் மூன்று பேர் ஆண்கள். ஒருவர் பெண். (ஜனனி அய்யர்.)

அவர்களில், இரண்டு பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். மூன்றாவது நபரை அஷோக் செல்வன் காப்பாற்ற முயற்சிக்கும் போது, அவர் கண் முன்பே அந்த நபர் கொலை செய்யப்படுகிறார். அடுத்த குறி தனது காதலி ஜனனி அய்யராகத்தான் இருக்கும் என்று யூகித்த அஷோக் செல்வன், ஜனனி அய்யரை தன் பாதுகாப்புக்குள் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், போலீஸ் துப்பறிந்து அஷோக் செல்வனை பிடிக்கிறது. போலீஸ் அதிகாரி ஜெயப்பிரகாசிடம் நடந்த விவரங்களை அஷோக் செல்வன் சொல்கிறார். அவர், ஜெயப்பிரகாஷ் உதவியுடன் உண்மையான குற்றவாளிகளை நெருங்கும் போது, எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.

துப்பறியும் நிபுணர் வேடத்துக்கு அஷோக் செல்வன் பொருந்துகிறார். அவர் பணியின் நிமித்தம் கள்ளச்சாவி போட்டு ஒரு வீட்டின் பூட்டை திறக்கும் போது, அதைப் பார்த்து ஜனனி அய்யர் சந்தேகிப்பதும், அவருடைய சந்தேகத்தை போக்கி தான் திருடன் அல்ல என்று அஷோக் செல்வன் நிரூபிக்க முயற்சிப்பதும் – ரசனையான காட்சிகள்.

ஜனனி அய்யருக்கு முக வசீகரம் கூடியிருக்கிறது. இவருடைய ஊடலும், கூடலும் கலந்த காதல் காட்சிகள், ரசிக்கவைக்கின்றன.

ஒரு போலீஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் ஜெயப்பிரகாஷ். இவர் வந்த பிறகு படத்தின் விறுவிறுப்பு அதிகரிக்கிறது. மற்றவர்கள் புதுமுகங்கள் என்றாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முகங்கள்.

நவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசையும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு ஒத்துழைத்திருக்கின்றன.

துப்பறியும் படத்துக்கே உரிய திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பி.ரமேஷ். துப்பறியும் நிறுவனம் நடத்திய சடகோபன் பிடிபட்டதுமே (எந்தவித 'டார்ச்சர்'ரும் அனுபவிக்காமல்) உண்மைகளை எல்லாம் ஒப்புக்கொள்வது போல் காட்டியிருப்பதில், அவசர கோலம் தெரிகிறது.

அது சரி, 'தெகிடி' என்றால் என்ன அர்த்தம்? அதை ஒரே ஒரு வரி வசனம் அல்லது காட்சியின் மூலமாக விளக்கியிருக்கலாம்.

வல்லினம்

Posted: 13 Mar 2014 07:47 AM PDT

Cinema Category: 
விமர்சனம்

Cinema Group

Cinema Group Image

images: 

Cinema Group History

நடிகர்கள்: 
நகுலன்,மிருதுளா, சிவா,குணா, ஜெயப்பிரகாஷ்,சித்து, அதுல் குல்கர்னி, சந்தானபாரதி, ஒய்.ஜி.மகேந்திரன்
இசை: 
தமன்
ஒளிப்பதிவு: 
கே.எம்.பாஸ்கரன்
இயக்கம்: 
அறிவழகன்
தயாரிப்பு: 
ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்

Cinema Description

Cinema Description: 

கதையின் கரு: சவாலில் ஜெயிக்கும் கூடைப்பந்தாட்ட வீரர்.

நகுலனும், அவருடைய உயிர் நண்பர் சிவாவும் கூடைப்பந்தாட்ட வீரர்கள். ஒரு போட்டியின்போது, நகுலன் அடித்த பந்து தாக்கி சிவா உயிர் இழக்கிறார். நண்பனின் மரணம் நகுலனை பெரிதாக பாதிக்கிறது. திருச்சியில் படித்துக்கொண்டிருந்த அவர் கூடைப்பந்து விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சென்னை கல்லூரியில் வந்து சேருகிறார்.

அங்கு குணாவின் நட்பு கிடைக்கிறது. தொழில் அதிபர் ஜெயப்பிரகாசின் மகள் மிருதுளாவின் காதலை சம்பாதிக்கிறார். நட்பும், காதலும் கிடைத்தது போல், 'சீனியர்' மாணவர் சித்துவுடன் பகையும் வருகிறது. சித்து, அந்த கல்லூரி கிரிக்கெட் அணியின் கேப்டன். பணக்கார முரடன். இவருக்கும், நகுலனுக்கும் ஏற்படும் மோதல்–சவால் காரணமாக, நகுலன் மீண்டும் கூடைப்பந்தை கையில் எடுக்கிறார். கல்லூரி கூடைப்பந்து அணியின் 'கேப்டன்' ஆகிறார்.

மாவட்ட அளவில், மாநில அளவில் என வரிசையாக வெற்றிகளை குவித்துக்கொண்டு வரும் நகுலனின் கூடைப்பந்து அணி, இறுதிப்போட்டியாக தேசிய அளவில் வந்து நிற்கிறது. அந்த அணி ஜெயிக்கக்கூடாது என்பதற்காக பல சதித்திட்டங்களை தீட்டுகிறார், சித்து. அவருடைய சதிகளை நகுலன் முறியடித்தாரா, இல்லையா? என்பது 'கிளைமாக்ஸ்.'

படத்தின் ஆரம்பமே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. நண்பனின் மரணம் நகுலனுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, திருச்சியில் இருந்து சென்னைக்கு இடம்பெயர வைத்தபின், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

நகுலன், ஒரு கூடைப்பந்து வீரராகவே மாறியிருக்கிறார். அவருடைய முகபாவனைகளும், உடல் மொழியும் அசல் விளையாட்டு வீரரை முன் நிறுத்துகிறது. நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியையும், குற்ற உணர்ச்சியையும் நகுலன் வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறார். சென்னை கல்லூரியில், 'ராகிங்'கில் அறிமுகமாகும் நண்பனுக்காக அவர் சித்துவுடன் மோதும் இடத்தில், அதிரடி 'ஆக்ஷன் ஹீரோ'வாகவும் பொருந்துகிறார்.

மிருதுளாவின் காதல் நினைவுகளில் பந்துகளை அவர் கோட்டை விடும் இடத்திலும், காதலி வந்திருக்கிறாளா? என்று கேலரியை ஏக்கத்துடன் பார்க்கும் இடத்திலும், நகுலன் முகமெல்லாம் காதல் ரேகைகள்.

பணக்கார தோற்றத்துக்கு மிருதுளா மெத்த சரி. ஆனால், அழகான காதலியாக அவரை ஏற்க முடியவில்லை. பணக்கார வில்லனுக்கு கச்சிதமாக பொருந்துகிறார், சித்து. கூடைப்பந்து 'கோச்' ஆக அதுல் குல்கர்னி, அமைச்சராக சந்தானபாரதி, கல்லூரி முதல்வராக ஒய்.ஜி.மகேந்திரன், கதாநாயகியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ், வில்லனின் அப்பாவாக கணேஷ் ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

தமனின் பின்னணி இசையும், கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்த உதவியிருக்கின்றன.

விளையாட்டை கதைக்களமாக கொண்டு இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் அறிவழகன். கிரிக்கெட்டுக்கும், கூடைப்பந்து விளையாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை 'கோச்' அதுல் குல்கர்னி மூலம் வெளிப்படுத்தும் விதம், பாராட்டுக்குரியது.

நகுலன் அணி ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், பதைபதைப்பையும் படம் முழுக்க தூண்டியிருக்கும் டைரக்டர் அறிவழகன், ''உங்கள் மகளை காதலித்து விடுவோம்'' என்று கல்லூரி முதல்வரை மாணவர்கள் மிரட்டி பணிய வைப்பது போன்ற மலிவான காட்சியையும் செருகியிருப்பது, திருஷ்டி பரிகாரம்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™