Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிப்பு

Posted: 10 Mar 2014 09:17 AM PDT

கோழிக்கோடு,

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதிரன் கோழிக்கோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்தையில் கலந்து கொண்டு பேசினார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,

திருவனந்தபுரத்தில் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி, உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்படும். பின்னர் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று துணை தலைவர் ராகுல்காந்தி, மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன் முடிவில் பாராளுமன்ற தேர்தலில், கேரள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் எந்தந்த தொகுதியில் யார்? யார்? போட்டியிட உள்ளார்கள் என்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றார்.

category:

News Group Category:

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார்

Posted: 10 Mar 2014 09:14 AM PDT

ஐதராபாத்,

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். இதைத்தொடர்ந்து அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரது ஆதரவாளர்கள் சார்பில் நாளை ராஜமுந்திரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் திடீரென , பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது புதிய கட்சி அறிவிப்பை கிரண்குமார் ரெட்டி வெளியிட்டார். புதிய கட்சிக்கு 'ஜெய் சமைக்கியா ஆந்திரா' என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கட்சியின் நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் பேசிய கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு மக்களின் சுயமரியாதையை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கட்சி, சீமாந்திரா பகுதியின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படும் என்றும், வருகிற தேர்தலில் போட்டியிட கட்சி தயாராக உள்ளதாகவும் கூறினார்.

கட்சியின் தலைவராக கிரண்குமார் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக முன்னாள் எம்.பி. ஸ்ரீதர் ராவ் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

category:

News Group Category:

74 பேரை பலி கொண்ட தானே கட்டிட விபத்து மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

Posted: 10 Mar 2014 08:58 AM PDT

தானே,

தானே மும்ராவை அடுத்த ஷீல் பாடா பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் சீட்டுகட்டு போல சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 74 பேர் பலியானார்கள். 60–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து, தரம் குறைவான கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரிகள், கட்டுமான அதிபர், கவுன்சிலர் மற்றும் போலீசார் உள்பட 24 பேரை கைது செய்தனர். அவர்களில் 7 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளான ரமேஷ், அண்டலே, சுபாஷ் ரவல், கிஷன் மட்கே மற்றும் கட்டுமான அதிபர் அப்துல் குட்டஸ் சவுத்ரி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி தானே செசன்சு கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சி.கத்கே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

category:

News Group Category:

பிரதமர் கனவால் நிதிஷ் குமாருக்கு தூக்கமில்லாமல் தவிக்கிறார்: நரேந்திர மோடி கடும் தாக்கு

Posted: 10 Mar 2014 08:47 AM PDT

புர்னியா,

பிரதமராக வேண்டும் என்ற கனவால்  நிதிஷ் குமார் தூக்கமில்லாமல் தவிக்கிறார்  என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

பீகார் மாநிலம் புர்னியாவில் நடந்த பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரை நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து குஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பீகார் மாநிலம் புர்னியாவில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் பேசியதாவது:

 பிரதமராக வேண்டும் என்ற கனவால், நிதிஷ் குமார் தூக்கமின்றி தவித்து வருகிறார்.  பிரதமர் பதவிக்கு தன்னைவிட யாரும் சிறந்தவர் இல்லை என்று அவர் கூறுகிறார் என்றார்.

 ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசிய அவர், "இளவரசர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல பிறர் மீது குற்றம்சாட்டிப் பேசுகிறார்.கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சி, அவருடைய கட்சியினுடையதா, இல்லையா என்பது பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் பெயரில் எல்லாருமே வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். மதசார்பின்மை பெயரால் முஸ்லிம் கண்களில் தூசிகள் தூவப்படுகிறது. இந்தப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்த விரும்புகிறேன். வேற்றுமையில் ஒற்றுமையை நாம் மதிக்கவும் போற்றவும் வேண்டும். குஜராத்தில் காணப்படும் மதசார்பின்மைதான் உண்மையானது. இவ்வாறு அவர் பேசினார்.
 

category:

News Group Category:

பாரதீய ஜனதாவுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Posted: 10 Mar 2014 08:39 AM PDT

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  பாரதீயஜனதாவுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-மதவாத வரலாறுகளை கொண்ட கட்சியை நான் ஆதரிக்கப்போவதில்லை. மூன்றாவது அணி பற்றிய தெளிவான நிலை தேர்தலுக்கு பிறகே தெரியும். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது.என்றார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் பேசியது குறித்து அவரிடம் கேட்டபோது, அது அரசியல் ரீதியீலானது. நாங்கள் அரசியல் குறித்து விவாத்தோம். இது தொடக்கம் தான் என்றார்.
 

category:

News Group Category:

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டி

Posted: 10 Mar 2014 08:09 AM PDT

பூந்தமல்லி,

சென்னை போரூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சலீம் மக்கார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. நான் வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். தற்போது 30 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் தலைவர் மம்தாபானர்ஜியும், அன்னாஹசாரேயும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அறிவிப்பார்கள்.   

தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகத்திற்கு அன்னாஹசாரே மற்றும் மம்தாபானர்ஜி ஆகியோர் வர உள்ளனர். இவர்களின் பிரசாரத்தால் தமிழகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

இந்திய கிரிக்கெட் அணிக்கு இளம் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும்: கவாஸ்கர்

Posted: 10 Mar 2014 07:28 AM PDT

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் இந்திய அணியின் மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 65 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரை மாற்ற இது சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவதுடன்கன் பிளட்சரை நீக்கி விட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு இளம் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சரியான தருணம் இதுவாகும். அணியினருடன் களத்தில் இறங்கி கடுமையான பயிற்சி அளிக்க பயிற்சியாளர் தான் நமக்கு தேவையாகும். ஓரமாக உட்கார்ந்து கொண்டு பயிற்சியை வேடிக்கை பார்க்கும் பயிற்சியாளரால் அணிக்கு எந்தவித பயனும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   

இதனிடையே பயிற்சியாளர் பிளட்சரின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவரது ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

பயங்கரவாதம் இந்தியாவின் பெரும் சவாலாக உள்ளது; உத்தரபிரதேச ஆளுநர் ஜோஷி கவலை

Posted: 10 Mar 2014 07:16 AM PDT

லக்னோ,

லக்னோவில் நடைபெற்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படை விழாவில் கலந்து கொண்டு பேசிய உத்தரபிரதேச ஆளுநர் பி.ஜோஷி கூறியதாவது; பயங்கரவாதம் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. பயங்கரவாதத்தை சமாளிக்க இந்திய படைகளின் பங்கு முக்கியமாக உள்ளது. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரவாதத்தின் தாக்கத்தால் நாட்டின் வளர்ச்சி பணிகள்  அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற தீய சக்திகள் எதிர்கொள்ள இந்திய படைகள் பங்கு மிகவும் தேவை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ராணுவத்தினர் தங்கள் வாழ்க்கை என்று கூட பார்க்காமல் நாட்டிற்காக போராடுகிறார்கள். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறினார். பயங்கரவாதம் நாட்டின் பெரும் பிரச்சனையாக இருப்பது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக உள்ளது என்று உத்தரபிரதேச ஆளுநர் ஆளுநர் பி.ஜோஷி குறிப்பிட்டார்.

category:

News Group Category:

பாராளுமன்ற தேர்தல் ஆம் ஆத்மியின் 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 10 Mar 2014 06:57 AM PDT

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும், 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த பட்டியலில், பத்திரிகையாளர் ஆசிஷ் கேதான் மற்றும் சமீபத்தில் ஆம் ஆத்மியில் இணைந்த இன்போசிஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆசிஷ் கேதான் டெல்லியிலும், வி.பாலகிருஷ்ணன், பெங்களூரு மத்திய தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்றிருந்த ஆசிஷ் கேதானுக்கு டெல்லி தொகுதி ஒதுக்கியிருப்பதன் மூலம், அந்த தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

தேசிய கொடியை தவறாக பயன்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது மும்பை கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

Posted: 10 Mar 2014 06:42 AM PDT

மும்பை,

 மும்பை ஐகோர்ட்டில், ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மயனாக் காந்தி, அஞ்சலி தானியா ஆகியோர் தேசிய கொடியை, தங்கள் அரசியல் லாபத்திற்காக தவறாக பயன்படுத்தியதாக கூறி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராம் சுமுத்ரே என்பவர்,மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஆம் ஆத்மி கட்சியினர், தேசிய கொடியையும், அதன் சின்னத்தையும் தேர்தல் பேரணிக்காக தங்கள் இணையதளத்தில் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மோகித் ஷா மற்றும் எம்.எஸ் சான்கலேச்சா ஆகியோரிடம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணை வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™