Daily Thanthi |
- பழனி அருகே பரபரப்பு சம்பவம்: ஓடும் ரெயிலில் என்ஜின் டிரைவர்கள் மோதல்–அடிதடி ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் தவிப்பு
- ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும்
- முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி 503 ரன் குவிப்பு இந்திய விக்கெட்டுகள் சரிவு
- சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
- இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்ட்: வங்காளதேசத்திற்கு 467 ரன்கள் இலக்கு சங்கக்கரா மீண்டும் சதம் அடித்தார்
- சேலஞ்சர் கோப்பை டென்னிஸ்: சோம்தேவை வீழ்த்தினார் யுகி பாம்ப்ரி
- சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்
- நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு ராமேஸ்வரத்தில் திதி கொடுத்த டிரைவர்
- திருவையாறு அருகே உள்ள கார்கோடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது
- காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் பிரதமர் பதவியை ஏற்க தயார் ராகுல் காந்தி சொல்கிறார்
| Posted: 07 Feb 2014 12:30 PM PST பழனி சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை பழனி அருகே வந்தபோது, என்ஜின் டிரைவருக்கும், உதவி டிரைவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் உதவி டிரைவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் எதிரொலியாக ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் தவித்தனர். சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து பழனிக்கு தினமும் இரவு 9 மணிக்கு சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 7.40 மணிக்கு பழனிக்கு வந்து சேரும். சென்னையில் இருந்து திண்டுக்கல் வரை ரெயில் என்ஜினை இயக்கும் பணியில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு உதவி டிரைவர் என 2 பேர் ஈடுபடுவர். சென்னையில் இருந்து வரும் டிரைவரும், உதவி டிரைவரும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இறங்கிவிடுவார்கள். அதன்பிறகு திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரெயில் செல்லும்போது, வேறு ஒரு டிரைவரும், உதவி டிரைவரும் பணியமர்த்தப்படுவதுண்டு. டிரைவர்கள் மோதல் அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் சென்னையில் இருந்து பழனி நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 6.20 மணிக்கு வந்தது. பின்னர் சென்னையில் இருந்து ரெயிலை ஓட்டிவந்த டிரைவர்கள் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக மதுரை மண்டலத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் (வயது 53), உதவி டிரைவர் நாகலிங்கம் (37). ஆகியோர் நியமிக்கப்பட்டனர். காலை 6.30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரெயில் புறப்பட்டு பழனியை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒட்டன்சத்திரம் ரெயில்வே கேட் அருகே உள்ள சிக்னல் பக்கம் ரெயில் வந்தபோது ரெயிலின் வேகத்தை குறைப்பது தொடர்பாக டிரைவர் முத்துக்குமாருக்கும், உதவி டிரைவர் நாகலிங்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சற்று தூரத்திலேயே ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர். ஆனால் உடனடியாக ரெயில் கிளம்பியதால் நிம்மதியடைந்தனர். சத்திரப்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து சத்திரப்பட்டி ரெயில் நிலையத்திற்கு காலை 7.20 மணிக்கு ரெயில் வந்தது. அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய உதவி டிரைவர் நாகலிங்கம் நிலைய மேலாளர் ரவிச்சந்திரனிடம் தனக்கும், டிரைவர் முத்துக்குமாருக்கும் ஏற்பட்ட தகராறு பற்றி புகார் தெரிவித்தார். அப்போது டிரைவர் முத்துக்குமார் தன்னை தாக்கியதாகவும் நாகலிங்கம் கூறினார். அதைத்தொடர்ந்து டிரைவர்களுக்கு இடையே நடந்த மோதல் பற்றி சத்திரப்பட்டி நிலைய மேலாளர் ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். இதனால் சுமார் 30 நிமிடங்கள் சத்திரப்பட்டி ரெயில் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர். 40 நிமிடம் தாமதம் பின்னர் ஒரு வழியாக 7.50 மணிக்கு சத்திரப்பட்டியில் இருந்து ரெயில் புறப்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக வழக்கமாக 7.40 மணிக்கு பழனிக்கு வரவேண்டிய ரெயில் 40 நிமிடம் தாமதமாக 8.20 வந்து சேர்ந்தது. அதன் பின்னரும் டிரைவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடரவே பழனி ரெயில் நிலைய மேலாளர் நாசரிடம் உதவி டிரைவர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அவர் இதுகுறித்து மதுரை கோட்ட மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி பழனி ரெயில் நிலைய மேலாளர் நாசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி வரும் அனைத்து ரெயில்களும் ஒட்டன்சத்திரம் ரெயில்வே கேட் அருகே உள்ள சிக்னல் பகுதியில் வேகத்தை குறைத்து ரெயில் தொடர்ந்து செல்ல அனுமதி கிடைத்த பின்னரே ரெயில்கள் செல்லவேண்டும். ஆனால் சென்னையில் இருந்து பழனி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை ஓட்டி வந்த டிரைவர் முத்துக்குமார் ஒட்டன்சத்திரம் ரெயில்வே கேட் அருகே ரெயிலின் வேகத்தை குறைக்காமலேயே சென்றதால், தான் வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னை தாக்கியதாகவும் உதவி டிரைவர் நாகலிங்கம் புகார் அளித்துள்ளார். இதுபற்றி மதுரை கோட்ட மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளேன். அவர்கள் தகராறுக்கு காரணமானவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். படுகாயமடைந்த உதவி டிரைவர் நாகலிங்கம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு ரெயில்வே போலீசாரிடமும் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். --– தாக்குதல் குறித்து உதவி டிரைவர் பரபரப்பு புகார் சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிரைவரால் தாக்கப்பட்ட உதவி டிரைவர் சம்பவம் குறித்து கூறியதாவது:– சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து டிரைவர் முத்துக்குமாருக்கு உதவி டிரைவராக சென்றேன். ரெயில் சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒட்டன்சத்திரம் ரெயில்வே கேட் அருகே உள்ள சிக்னல் அருகே ரெயில் வந்த போது தொடர்ந்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் ரெயிலின் வேகத்தை அவர் குறைக்காமல் சிக்னலை மீறி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதியே நான் ரெயிலின் வேகத்தை குறைத்ததுடன் ரெயிலை நிறுத்தினேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் உடனே ரெயிலை இயக்கியதுடன் என்னுடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ரெயிலில் இருந்த இரும்பு கம்பியால் என்னை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் நடக்கும் போது, சத்திரப்பட்டி ரெயில் நிலையம் வரவே நான் ரெயிலில் இருந்து உடனடியாக இறங்கி சத்திரப்பட்டி நிலைய மேலாளரிடம் இது குறித்து புகார் செய்தேன். மேலும் தொடர்ந்து அவருடன் ரெயிலில் செல்லமுடியாது என்றும் கூறினேன். இதைத்தொடர்ந்து ரெயில்வே பணியாளர் ஒருவரை என்னுடன் நிலைய மேலாளர் அனுப்பி வைத்தார். ரெயில் பழனி வந்ததும் பழனி நிலைய மேலாளரிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். --– மாற்று உதவி டிரைவருடன் திண்டுக்கல் சென்ற ரெயில் சென்னை–பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 40 நிமிடம் தாமதமாக பழனி வந்தது. இந்த ரெயில் மீண்டும் காலை 9.15 மணிக்கு திண்டுக்கல்லுக்கு செல்லும். இந்த நிலையில் நேற்று காலை 9.15 மணிக்கு திண்டுக்கல் நோக்கி புறப்பட வேண்டிய ரெயில் என்ஜின் டிரைவர்கள் தகராறில் உதவி டிரைவர் காயம் அடைந்ததால் ரெயில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மாற்று உதவி டிரைவரை உடனடியாக நியமித்ததால் 10 நிமிடங்கள் தாமதமாக பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. image: category: |
| Posted: 07 Feb 2014 12:20 PM PST புதுடெல்லி, ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு இதற்கு ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகள் அடங்கிய சீமாந்திராவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி அனுப்பி வைத்த மத்திய அரசின் மசோதாவை (ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா) ஆந்திர சட்டசபை நிராகரித்து விட்டது. மாநில பிரிவினையை தடுக்கும் கடைசி முயற்சியாக ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தியதோடு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஆந்திராவை பிரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் அமளி என்றாலும் தனி தெலுங் கானா மாசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி புதிய மாநிலத்தை அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட அமளியின் காரணமாக மசோதாவை தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கிடையே, தனி தெலுங் கானா மாநிலம் அமைக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மசோதாவை தாக்கல் செய்ய தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது. மத்திய மந்திரிசபை ஒப்புதல் இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. மந்திரிகள் குழு தனி தெலுங் கானா வரைவு மசோதா குறித்து ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியாக அதில் சில திருத்தங்களை செய்து இருந்தது. அந்த வரைவு மசோதா குறித்து மந்திரிசபை கூட்டத்தில் நேற்று விரிவாக ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஐதராபாத் பொது தலைநகரம் இந்த மசோதாவின்படி, ஐதராபாத் நகரம் 10 ஆண்டுகளுக்கு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும். அதன்பிறகு, தெலுங்கானாவின் தலைநகரம் ஆகிவிடும். ஆந்திராவுக்கு தனி தலைநகரம் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த ஐதராபாத்தை யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும் என்றும், அந்த யூனியன் பிரதேசத்துக்கு கிடைக்கும் வருவாயை இரு மாநிலங்களும் பிரித்துக்கொள்ள வகை செய்ய வேண்டும் என்றும் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் அதை மத்திய மந்திரி சபை நிராகரித்து விட்டது. அதே சமயம், சீமாந்திராவில் உள்ள பின்தங்கியபகுதிகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்து இருக்கிறது. சரத்பவார் மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பல்லம் ராஜு உள்ளிட்ட சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலன் இல்லை. ஐதராபாத்தை யூனியன் பிரதேசம் ஆக்கவேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய மந்திரி சரத்பவார், சீமாந்திராவின் தலைநகரம் எது? என்று கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு, புதிய தலைநகரம் அமைப்பதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று பதில் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத் நகரின் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி கவர்னரிடம் ஒப்படைக்கப்படுமா என்று அவர் கேள்வி எழுப்பிதாகவும் கூறப்படுகிறது. 12-ந் தேதி தாக்கல் மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தெலுங்கானா மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். பின்னர் அதை வருகிற 12-ந் தேதி பாராளுமன்றத்தின் மேல்-சபையில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. அப்போது மதசோதாவில் 32 திருத்தங்களை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. போராட்டம் இதற்கிடையே, தனி தெலுங் கானாவுக்கு எதிராக சீமாந்திரா பகுதியில் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த 4 லட்சம் அரசு ஊழியர் கள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள். பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த அவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். மாணவர்கள் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடத்துகிறார்கள். News Category:Hot Topic Icon : News Group Category: |
| முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி 503 ரன் குவிப்பு இந்திய விக்கெட்டுகள் சரிவு Posted: 07 Feb 2014 12:15 PM PST ஆக்லாந்து, ஆக்லாந்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பிரன்டன் மெக்கல்லத்தின் இரட்டை சதத்தின் துணையுடன் நியூசிலாந்து அணி 503 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்து பாலோ-ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கிறது. ஆக்லாந்து டெஸ்ட் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும், கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், கனே வில்லியம்சனின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது. தொடக்க நாளில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. பிரன்டன் மெக்கல்லம் 143 ரன்களுடனும், கோரி ஆண்டர்சன் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மெக்கல்லமும், ஆண்டர்சனும், அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டனர். ஆண்டர்சன் 77 ரன்களிலும் (109 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிச்சர்), விக்கெட் கீப்பர் வாட்லிங் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மெக்கல்லம் இரட்டை செஞ்சுரி மறுபக்கத்தில் மெக்கல்லமின் விசுவரூபம் நீடித்தது. டிம் சவுதி (28 ரன், 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஈஷ் சோதி (23 ரன், 3 பவுண்டரி) ஆகியோரின் ஒத்துழைப்புடன் இரட்டை சதத்தை நோக்கி துரிதமாக முன்னேறினார். உணவு இடைவேளைக்கு முந்தைய ஜடேஜாவின் ஓவரில் சிக்சரும், பவுண்டரியும் விரட்டி தனது 2-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவரது முதலாவது இரட்டை சதமும் இந்தியாவுக்கு எதிரானது தான் (2010-ம் ஆண்டு ஐதராபாத் டெஸ்டில் 225 ரன்) என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் மெக்கல்லம் 224 ரன்களில் (307 பந்து, 29 பவுண்டரி, 5 சிக்சர்) கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆனார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 503 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்சில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் எடுப்பது இது 4-வது முறையாகும். இந்தியா சறுக்கல் அடுத்து முதல் இன்னிங்சை இந்திய அணி தொடங்கிய விதம், காலையிலேயே ஆட்டத்தை டி.வி.யில் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், வெறுப்பாகவும் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். அன்னிய மண்ணில் நீண்ட நேரம் நிலைகொண்டு விளையாடும் யுக்தி எப்படி என்பதை தவான் முழுமையாக மறந்து விட்டார் போலும். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டின் முதல் ஓவரின் 2-வது பந்தை லெக்-சைடில் அடிக்க முயற்சித்த போது, அது பேட்டின் விளிம்பில் பட்டு 'கல்லி' திசையில் நின்ற வில்லியம்சனிடம் கேட்ச்சாக தஞ்சம் புகுந்தது. அடுத்து வந்த புஜாராவும்(1 ரன்) அதே ஓவரில் வெளியில் சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இதனால் இந்தியா ஆரம்பத்திலேயே தடம் புரண்டது. கோலியும் ஏமாற்றம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், 'இந்தியாவின் வருங்கால கேப்டன்' என்று வர்ணிக்கப்படும் விராட் கோலியும் (4 ரன்) அவுட் ஆனார். டிம் சவுதி வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட போது பந்து அவரது பெருவிரல் கையுறையில் முத்தமிட்டு, தொடர்ந்து ஹெல்மெட்டில் பட்டு 2-வது ஸ்லிப்பில் நின்ற புல்டானின் கையில் சிக்கியது. ஆனால் பந்து ஹெல்மெட்டில் மட்டுமே உரசியது என்பது போல் விராட் கோலி அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் டி.வி. ரீப்ளேயை பலமுறை ஆராய்ந்த போது, கையுறையில் பந்து லேசாக தடவிச் செல்வது தெரிய வந்தது. 10 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்து இந்திய அணி கதிகலங்கி போனது. முதல் இன்னிங்சில் 10 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவுக்கு இது 8-வது நிகழ்வாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்திய அணி கடைசியாக இது போன்று மோசமாக விளையாடியதும் நியூசிலாந்துக்கு எதிராகத் தான். 1999-ம் ஆண்டு மொகாலி டெஸ்டில் இவ்வாறு குறுகிய ரன்னுக்குள் 'விக்கெட் அணிவகுப்பு' நடத்தியது நினைவு கூரத்தக்கது. ரோகித் ஆறுதல் விராட் கோலிக்கு பிறகு ரோகித் ஷர்மா களம் புகுந்தார். தொடக்கத்தில் தடுமாறிய ரோகித் ஷர்மா 24 பந்துகளில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதற்கிடையே அணியை தூக்கி நிறுத்த போராடிக் கொண்டிருந்த தமிழகத்தின் முரளிவிஜய் 26 ரன்களில் (60 பந்து, 5 பவுண்டரி) வாக்னெரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 51 ரன்களாக (19.4 ஓவர்) இருந்தது. உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் 5-வது விக்கெட்டுக்கு ரோகித் ஷர்மாவுடன், ரஹானே ஜோடி சேர்ந்தார். இவர்கள் தான் நேற்றைய நாளில் ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடியவர்கள். விஜய் வெளியேறியதும் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த ரோகித்ஷர்மா, நீல் வாக்னெரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஓட விட்டார். இந்த ஜோடி விக்கெட் சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தியது. போதிய வெளிச்சம் இன்மையால் 2-வது நாள் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 39 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் ஷர்மா 67 ரன்களுடனும் (102 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 23 ரன்களுடனும் (56 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு இதுவரை 79 ரன்கள் சேர்த்திருக்கிறார்கள். பாலோ-ஆனை தவிர்க்குமா? பாலோ-ஆன் ஆபத்தில் இருந்து தப்பிக்க இந்தியாவுக்கு மொத்தம் 304 ரன்கள் தேவை. தற்போது 'பாலோ-னை' தவிர்க்க மேற்கொண்டு 174 ரன்கள் எடுத்தாக வேண்டும். 3-வது நாள் ஆட்டம் இன்று அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு தொடங்கும். ஸ்கோர் போர்டு நியூசிலாந்து புல்டான் எல்.பி.டபிள்யூ (பி) ஜாகீர் 13 ரூதர்போர்டு (சி) ரஹானே (பி) இஷாந்த் 6 வில்லியம்சன் (சி) டோனி (பி) ஜாகீர் 113 டெய்லர் (சி) ஜடேஜா (பி) இஷாந்த் 3 பிரன்டன் மெக்கல்லம் (சி) ஜடேஜா (பி) இஷாந்த் 224 ஆண்டர்சன் எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 77 வாட்லிங் (சி) தவான் (பி) இஷாந்த் 1 சவுதி (பி) ஷமி 28 சோதி (சி) ரோகித்(பி) இஷாந்த் 23 வாக்னெர் (சி) கோலி (பி) ஜடேஜா 0 பவுல்ட் (நாட்-அவுட்) 1 எக்ஸ்டிரா 14 மொத்தம் (121.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 503 விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-23, 3-30, 4-251, 5-384, 6-398, 7-434, 8-490, 9-495 பந்து வீச்சு விவரம் முகமது ஷமி 28-6-95-1 ஜாகீர்கான் 30-2-132-2 இஷாந்த் ஷர்மா 33.4-4-134-6 ஜடேஜா 26-1-120-1 கோலி 1-0-4-0 ரோகித் ஷர்மா 3-0-12-0 இந்தியா தவான் (சி) வில்லியம்சன் (பி) பவுல்ட் 0 விஜய்(பி) வாக்னெர் 26 புஜாரா (சி) வாட்லிங் (பி) பவுல்ட் 1 கோலி (சி) புல்டான் (பி) சவுதி 4 ரோகித்ஷர்மா(நாட்-அவுட்) 67 ரஹானே (நாட்-அவுட்) 23 எக்ஸ்டிரா 9 மொத்தம் (39 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 130 விக்கெட் வீழ்ச்சி: 1-1, 2-3, 3-10, 4-51 பந்து வீச்சு விவரம் டிரென்ட் பவுல்ட் 10-1-20-2 டிம் சவுதி 12-3-27-1 ஆண்டர்சன் 2-0-9-0 வாக்னெர் 7-0-46-1 ஈஷ் சோதி 6-0-13-0 வில்லியம்சன் 2-0-9-0 பிரமிக்க வைத்த கேட்ச் இரட்டை சதத்தை கடந்ததும் ரன்வேகத்தை தீவிரப்படுத்திய நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் பந்தை லாங்–ஆன் திசையில் சிக்சரை நோக்கி தூக்கியடித்தபோது, எல்லைக்கோடு அருகே நின்ற இந்திய ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பிரமாதமாக கேட்ச் செய்து மெய் சிலிர்க்க வைத்தார். அதாவது அந்தரத்தில் தாவி குதித்து பந்தை அவர் பிடித்த போது, கால் எல்லைக்கோட்டிற்கு நூலிழை அளவுக்கே வெளியே இருந்தது. பிடித்த வேகத்தில் தடுமாறிய அவர் எல்லைக்கோட்டை மிதிப்பதற்குள் பந்தை மேலே தூக்கி போட்டார். பிறகு எல்லைக்கோட்டிற்குள் விழுந்த அவர், அங்கிருந்து மீண்டும் உள்பகுதிக்கு ஓடி வந்து, பந்து கீழே விழுவதற்குள் பிடித்து அசத்தினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேட்ச்சுகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது. புதிய பந்தால் பாதிப்பு இரு அணிகளின் முதல் இன்னிங்சை பார்த்தால், புதிய பந்தில் தான் இரண்டு அணிகளின் பந்து வீச்சாளர்களும் தங்களது சாகசத்தை காண்பித்து இருப்பது தெரியும். ஆடுகளம் அல்லது சீதோஷ்ண நிலையை விட புதிய பந்து தான் சீர்குலைவை ஏற்படுத்தி விட்டது. புதிய பந்து தொடக்கத்தில் கொஞ்சம் அதிகமாகவே ஸ்விங் ஆனது. ஆனால் பந்து பழசானதும், பேட் செய்ய ரொம்ப எளிதாக இருந்தது. அதனால் தான் மிடில் ஓவர்களில் சுலபமின்றி ரன்கள் எடுக்க முடிந்தது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை அருமையாக 'ஸ்விங்' செய்தனர். என்றாலும் நாங்கள் இதை விட சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று நம்புகிறேன். –இந்திய தொடக்க ஆட்டக்காரர் விஜய் நினைத்து பார்க்காத ரன் குவிப்பு 30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் 200–களில் ஆட்டம் இழந்து விடுவோம் என்று தான் நினைத்தேன். ஆனால் 30–3 என்ற சிக்கலான நிலைமையில் இருந்து 500 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம். அதிலும் புஜாராவின் விக்கெட் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவரால் ஒரு வாரம் கூட பேட் செய்ய முடியும். அவரை சீக்கிரம் வெளியேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளைய (இன்று) ஆட்டம் கொஞ்சம் சீக்கிரம் தொடங்க இருப்பதால், காலையில் நிலவும் சீதோஷ்ண நிலை பந்து 'ஸ்விங்' ஆக உதவும் என்று நம்புகிறேன். இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் இது தான் (இரட்டை சதம்) எனது சிறந்த இன்னிங்சாக இருக்கும் –நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் image: category:Tagging: |
| சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி Posted: 07 Feb 2014 11:58 AM PST சென்னை, சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் சார்பில் கால்ஸ் 36–வது சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் சென்னை வருமானவரித்துறையின் முதன்மை ஆணையர் எஸ்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போ£ட்டியை தொடங்கி வைத்தார். இந்திய கைப்பந்து சம்மேளன முதன்மை செயல் அலுவலர் கே.முருகன், ஓய்வு பெற்ற வருமானவரி அதிகாரி எஸ்.செந்தாமரை கண்ணன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.வாசுதேவன், ஜெ.நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். வருகிற 12–ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 27 அணிகளும், பெண்கள் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று மாலை நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் தமிழக அணி 25–11, 25–9, 25–9 என்ற நேர் செட்டில் அசாமை எளிதில் வென்றது. பீகார், அரியானா, டெல்லி, கேரளா, புதுச்சேரி, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் ஆகிய அணிகளும் வெற்றி கண்டன. பெண்கள் பிரிவில் தமிழக அணி 25–2, 25–8, 25–3 என்ற நேர் செட்டில் மணிப்பூரை பந்தாடியது. ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், ஆந்திரா, கேரளா அணிகளும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. image: category:Tagging: |
| Posted: 07 Feb 2014 11:56 AM PST சிட்டகாங், வங்காளதேசத்திற்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 467 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 467 ரன்கள் இலக்கு இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 587 ரன்களும், வங்காளதேசம் 426 ரன்களும் குவித்தன. 161 ரன்கள் முன்னிலையுடன் 4–வது நாளான நேற்று 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 75.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 36 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த சங்கக்கரா 105 ரன்களும் (144 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால் 100 ரன்களும் (நாட்–அவுட்) விளாசினர். இதனால் வங்காளதேச அணிக்கு 467 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. *முன்னதாக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா மூன்று விதமான சாதனைகளை புரிந்தார். முதலாவது இன்னிங்சில் 319 ரன்களை திரட்டிய அவர், 2–வது இன்னிங்சிலும் சதத்தை நொறுக்கியிருக்கிறார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் முச்சதமும், சதமும் விளாசிய 2–வது வீரர் என்ற அரிய சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் கிரஹாம் கூச், 1990–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக இச்சாதனையை படைத்திருந்தார். *சங்கக்கராவுக்கு இது 35–வது சதமாகும். அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கவாஸ்கர், லாராவை பின்னுக்கு தள்ளிவிட்டு சங்கக்கரா இப்போது 5–வது இடத்தை பிடித்துள்ளார். *இந்த டெஸ்டில் சங்கக்கரா மொத்தம் 424 ரன்கள் (319, 105) குவித்துள்ளார். ஒரு டெஸ்டில் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் வரிசையில் சங்கக்கரா 3–வது இடத்தில் இருக்கிறார். இந்த வகையில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் 456 ரன்களுடன் (1990–ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 333 மற்றும் 123 ரன்கள்) முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 426 ரன்களுடன் (1998–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 334* மற்றும் 92 ரன்) 2–வது இடத்திலும் உள்ளனர். image: category:Tagging: |
| சேலஞ்சர் கோப்பை டென்னிஸ்: சோம்தேவை வீழ்த்தினார் யுகி பாம்ப்ரி Posted: 07 Feb 2014 11:46 AM PST சென்னை, ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய நட்சத்திர வீரர்கள் சோம்தேவ் தேவ்வர்மனும், யுகி பாம்ப்ரியும் மோதினார்கள். முதல் செட்டில் ஒரு கேமை கூட எதிராளியால் 'பிரேக்' செய்ய விடாமல் பார்த்துக் கொண்ட யுகி பாம்ப்ரி 2–வது செட்டின் போது சர்வீசில் தடுமாறினார். ஆனாலும் சமாளித்து ஆட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றினார். 1 மணி 41 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6–2, 6–4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். உலக தரவரிசையில் 174–வது இடம் வகிக்கும் யுகி பாம்ப்ரி, சோம்தேவை விட 71 இடங்கள் பின்தங்கி இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவர் ரஷியாவின் அலெக்சாண்டர் குட்ரியவ்ட்செவை எதிர்கொள்கிறார். ஒற்றையரில் கலக்கிய யுகி பாம்ப்ரி இரட்டையரிலும் வாகை சூடினார். அவரும், நியூசிலாந்தின் மைக்கேல் வினசும் கைகோர்த்து இரட்டையர் அரைஇறுதியில் ருபென் கோன்சலெஸ் (பிலிப்பைன்ஸ்)– ஆர்டம் சிடாக் (நியூசிலாந்து) இணையை வென்றனர். மற்றொரு அரைஇறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, சுலோவேனியாவின் பிளாஸ் ரோலா கூட்டணி 6–3, 7–6 (5) என்ற செட் கணக்கில் டி சென் (சீனத்தைபே)– மாரெக் செம்ஜன் (சுலோவக்கியா) இணையை தோற்கடித்தது. image: category:Tagging: |
| சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் Posted: 07 Feb 2014 11:21 AM PST டெல்லி, சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார். டி.ஜி.பி.அர்ச்சனா ராமசுந்தரம் தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் முதல் பெண் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தான் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கும், தமிழக போலீஸ் துறைக்கும் கொண்டு வந்துள்ளார். 1980–ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். முதல்பெண் அதிகாரி இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை–இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார். குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. புலனாய்வு புத்தகம் தமிழ்நாடு ரகசிய போலீஸ் பிரிவில் அவர் பணியாற்றிய போது 1906–ம் ஆண்டிலிருந்து 2010–ம் ஆண்டு வரை 104 ஆண்டுகள் தமிழக காவல் துறையில் புலனாய்வு செய்த முக்கிய வழக்குகள் பற்றிய விவரங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்ட அதிகாரிகள் குழுவில், இவருடைய பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. உத்தரபிரதேச மாநில மகளாக பிறந்து தமிழ்நாட்டின் மருமகளான அர்ச்சனா ராமசுந்தரம் தமிழில் சிறந்த புலமை மிக்கவர். எப்போதும் தமிழில் பேசுவதையே விரும்புவார். உத்தரபிரதேசம் என் பிறந்த வீடு என்றாலும் தமிழ்நாடு என் புகுந்த வீடு என்பதால் தமிழில் பேசுவதே எனக்கு மகிழ்ச்சி என்று எப்போதும் கூறிப்பிடுவார்.
image: category:Tagging:News Group Category: |
| நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு ராமேஸ்வரத்தில் திதி கொடுத்த டிரைவர் Posted: 07 Feb 2014 11:12 AM PST பவானியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற டிரைவர் ராமேஸ்வரத்தில் திதி கொடுத்துவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.. பிணமாக கிடந்தார் ஈரோடு மாவட்டம், பவானி வர்ணபுரம் 4–து வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 62). ஊராட்சிக்கோட்டை கட்டளை கதவணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருடைய 2–வது மனைவி பார்வதி (48). இவர்களுக்கு குழந்தை இல்லை. கருணாகரனின் முதல் மனைவிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர் தன்னுடைய மகன்கள் மகளுடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். கருணாகரன் 2–வது மனைவி பார்வதியுடன் வர்ணபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி காலையில் இருந்து பகல் 2½ மணி வரை பார்வதி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கருணாகரன் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. கதவு மட்டும் திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு பெண் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பார்வதி தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சரண் அடைந்தார் இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பார்வதிக்கும், அவருடைய கணவர் கருணாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரிந்தது. இதனால் கருணாகரன்தான் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று கருதி போலீசார் அவரை தேடி வந்தார்கள். இந்தநிலையில் மனைவியை கொன்றுவிட்டதாக கூறி நேற்று காலை பவானி கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகரிடம் கருணாகரன் சரண் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் கருணாகரனை பவானி போலீசில் ஒப்படைத்தார். நடத்தையில் சந்தேகம் அப்போது கருணாகரன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:– என்னுடைய 2–வது மனைவி பார்வதிக்கும், வேறு ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக எனக்கு தெரியவந்தது. இதுபற்றி அவளிடம் நான் கேட்டேன். ஆனால் அவள் தொடர்ந்து மறுத்து வந்தாள். ஆனாலும் பார்வதியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்தான் நாங்கள் ஏற்கனவே குடியிருந்த அண்ணா நகரை காலிசெய்துவிட்டு, வர்ணபுரத்துக்கு குடி வந்தோம். சம்பவத்தன்று பார்வதியிடம் தவறாக நடந்துகொள்ளாதே என்று அறிவுரை கூறினேன். அதை ஏற்காமல் எனக்கு ஆத்திரம் வரும் வரை அவள் பேசினார். அப்போது நள்ளிரவு 1 மணி இருக்கும். என்னால் பொறுக்க முடியவில்லை. வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவளுடைய தலையில் ஆத்திரம் தீர வெட்டினேன். இதனால் அப்படியே கீழே விழுந்து செத்துவிட்டாள். திதி கொடுத்தார்.... ரத்தவெள்ளத்தில் அவளை பிணமாக பார்த்தபோது எனக்கு பரிதாபமாக இருந்தது. அதிகாலை 3 மணி வரை அவள் பிணம் அருகே உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தேன். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி பஸ்சில் ராமேஸ்வரம் சென்றேன். அங்கு கடற்கரையில் அய்யரை வைத்து பார்வதியின் ஆத்மா சாந்தி அடைய திதி கொடுத்தேன். அதன்பிறகு போலீசார் என்னை தேடுவதால் நானே வந்து சரண் அடைந்தேன். இவ்வாறு கருணாகரன் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், கருணாகரனை கைது செய்து பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி கோவை மத்திய சிறையில் கருணாகரனை அடைக்க உத்தரவிட்டார். image: category: |
| திருவையாறு அருகே உள்ள கார்கோடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது Posted: 07 Feb 2014 11:10 AM PST திருவையாறு, திருவையாறு அருகே உள்ள கார்கோடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. கார்கோடேஸ்வரர் கோவில் திருவையாறை அடுத்த காமரசவல்லி என்ற இடத்தில் பிரசித்திப் பெற்ற கார்கோடேஸ்வரர் கோவில் உள்ளது. கடக ராசி பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவிக்கு மாங்கல்ய வரம் கொடுத்ததாக தலபுராணம் கூறுகிறது. மேலும் கார்கோடன் என்ற சர்ப்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு வம்சத்தை இறைவன் உயிர்ப்பித்து கொடுத்ததால் இக்கோவில் கால சர்பதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கார்கோடேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி, வரதராஜர், விநாயகர், காளியம்மன், மாரியம்மன், திரவுபதி அம்மன், செல்லி அம்மன், கருப்புசாமி, செங்கமல ஆண்டவர் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், செல்லி அம்மன், திரவுபதி அம்மன், செங்கமல ஆண்டவர் கருப்புசாமி, கூட காத்த ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 8.45 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு பாலாம்பிகா கார்கோடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. யாக கால பூஜை விழாவையொட்டி நேற்று முன்தினம் யாக கால பூஜைகள் தொடங்கின. நேற்று 2-ம் காலம் யாக பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆதினகர்த்தர்கள், மடாதிபதிகள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் கோதண்டராமன், செயல் அலுவலர் மணி, சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், காமரசவல்லி கிராம மக்கள் மற்றும் கார்கோடேஸ்வரர் கைங்கர்ய சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். image: category:Tagging: |
| காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் பிரதமர் பதவியை ஏற்க தயார் ராகுல் காந்தி சொல்கிறார் Posted: 07 Feb 2014 11:02 AM PST ராஞ்சி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல் காந்தி கூறினார். உரையாடல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:– காங்கிரஸ் கட்சியில் நான் ஒரு சிப்பாய். இதை சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மேலும், தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசின் வழக்கம் அல்ல. ஏற்க தயார் இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், நான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன். நான் கேட்டுக்கொண்டபடி, மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக மத்திய அரசு உயர்த்தியதையும், தண்டனை பெற்ற எம்.பி.க்களின் பதவியை காப்பாற்றும் அவசர சட்டத்தை கைவிட்டதையும் வைத்து, நான்தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரே சாய்ஸ் என்று கூறப்படுவது சரியல்ல. தொண்டர்களின் உணர்வுகள் அடிப்படையில்தான் நான் மேற்கண்ட நிலைப்பாடுகளை எடுத்தேன். ஒழுக்கம் இல்லை சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கீனம் நிலவுவது உண்மைதான். கட்சியில் ஒழுக்கத்தை புகுத்த நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரசில் 'மேலிட கலாச்சாரம்' நிலவுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவரிடமே நான் ஒப்படைத்து வருகிறேன். பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதை நான் ஆதரிக்கிறேன். லாலுவுடன் கூட்டணி லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பது அவசியம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |