Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நலம் பல புரியும் வலம்புரி சங்கு மந்திரங்கள்

Posted: 06 Feb 2014 12:08 PM PST

இன்றைய நாகரீக உலகு தனது புறம் சார்ந்த வாழ்வியல் வழிமுறைகளில் மிகச் சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சிகள் விண்ணையே தொட்டு விட்டன. நமது சூரிய மண்டலத்தைத் தாண்டிய புறவெளி மண்டலத்தின் விரிவு பற்றிய ஆய்வுகளும் மிகமிக முன்னேற்றமடைந்துள்ளன. இருப்பினும், நம் தலைக்கும் மேலே விரிந்த புறவெளி பற்றி நாம் அறிந்த அளவை விடவும், நமக்குள் இருக்கும் நமது அகவெளி பற்றி நாம் அறிந்த அளவு மிகவும் குறைவுதான் என்பதை நாம் பல சூழ்நிலைகளில் உணர்ந்திருக்கிறோம்.

தன்னையறிய நினைக்கும் கலையே பெரும் கலை என்று எல்லாக் கால கட்ட மகான்களாலும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நவீன மயமாக்கப்பட்ட வாழ்க்கையின் வேகத்திலும், சிக்கல்களிலும் சிக்கிய மனித சமூகத்தின் மிகப் பெரும்பாலானவர்களுக்கு தன்னையறியும் ஆன்மிகம் பற்றி நினைப்பதற்கே நேரம் இல்லை என்பதே நடைமுறை உண்மை. அக நிலையின் மைய இயக்கம் பற்றி உள்ளுணர்வு ரீதியாக ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதில் பலருக்குத் தடுமாற்றம் உள்ளதை உணர்ந்த நமது ஆன்மிகப் பெரியோர்கள், இயற்கையிலுள்ள பலவிதமான பொருட்களை 'அருட் சாதனங்கள்' என்று நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவற்றின் மூலமாக செய்யும் பூஜை, பிரார்த்தனை, வழிபாடு, ஜபம், தியானம் ஆகிய முயற்சிகள் நல்ல விளைவுகளைத் தருகின்றன.

அப்படிப்பட்ட பலவித சாதனங்களில், இங்கு நாம் காண இருக்கும் சாதனம் 'வலம்புரிச் சங்கு'. இது ஸ்ரீ லட்சுமி சங்கு என்றும் வழங்கப்படுகிறது.

இத்தகைய மகத்துவம் பெற்ற வலம்புரிச் சங்கின் வாயிலாக நமது நடைமுறை வாழ்வின் பல சிக்கல்களுக்கான தீர்வுகளைத்தரும் மந்திரமுறையிலான வழிபாட்டு முறைகளை இங்கு நாம் காணலாம்.

'ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்'

இது சங்கிற்கான காயத்ரி மந்திரங்களில் ஒன்றாகும். இதைத் தினமும் ஸ்நானம் செய்த பிறகு 12 முறைகள் உச்சாடனம் செய்து தூப, தீப, நைவேத்தியம், ஆரத்தி என்ற முறைகளில் பூஜை செய்து வரலாம். சங்கை ஒரு மரப்பெட்டியில் மஞ்சள் பட்டு வஸ்திரம் அல்லது சிவப்பு வெல்வெட் துணி விரித்து அதில்தான் வைக்க வேண்டும். இல்லாவிடில், அதற்கான செம்பு அல்லது வெள்ளி ஸ்டாண்டில் அதைத் தென்வடலாக வைக்க வேண்டும். தினமும் காலையில் அதைச் சுத்த தண்ணீரால் கழுவிப் பொட்டிட்டு, மலர்தூவி, கற்பூர ஆரத்தி காட்டி மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்து வரலாம்.

மேலும் ஒரு நல்ல வலம்புரிச் சங்காக வாங்கி வந்து நமது கடைகள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வைத்து தினமும் தூபமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வந்தால் நல்ல பலன்கள் நாளும் நம்மை நாடித் தேடி ஓடிவரும். வலம்புரிச் சங்கை வெள்ளிப்பூண் போட்டு வைத்திருப்பதே மிகவும் நல்லதாகும்.

வலம்புரிச் சங்கை நாம் ஒரு வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளில் வாங்கி, அதைச் சுக்ர ஹோரை அமைந்த வேளையிலேயே நமது வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும். நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நாம் வைத்திருக்கும் வலம்புரிச் சங்கானது நமது உள்ளங்கையில் அடங்கக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் அது நல்ல வெண்ணிறமாகவும் இருக்க வேண்டும். பித்தளை அல்லது வெள்ளி ஸ்டாண்டிலோ, அல்லது வெள்ளித் தட்டிலோ தென்வடலாக வலம்புரிச் சங்கு வைக்கப் படவேண்டும்.

முதன்முதலில் ஸ்ரீ லட்சுமி சங்கு எனப்படும் வலம்புரிச் சங்கை வீட்டிற்குக் கொண்டுவந்து அதைக் கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி நமது வீட்டில் என்றும் இருந்து, நமக்கு நன்மைகள் தரப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

'ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீதர கரஸ்தாய
பயோநிதி ஜாதய ஸ்ரீதக்ஷ்ணாவர்த்த சங்காய
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ கராய பூஜ்யாய நமஹ'  

நாம் வாங்கி வந்த சங்கை, ஒரு நதிநீரை விட்டு சுத்தமாகக் கழுவி மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து, தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி மேற்கூறிய மந்திரத்தை 11 முறைகள் சொல்லி வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பெரிய பூஜா முறைகள் எதுவும் செய்யாவிடினும் கூட தினமும் ஒரு ஊதுபத்தியாவது காட்டி மேற்கண்ட ஸ்துதியை இயன்ற அளவு சொல்லி வணங்கி வரலாம்.

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட்'

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட ஆடையணிந்து, நெற்றியில் சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு, தெற்குப் பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும். நாமும் சிவப்பு நிற விரிப்பின் மீதே அமர வேண்டும். ஒரு மரப்பலகை மீது சிவப்பு நிற விரிப்பை விரித்து அதன் மீது ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்து அதன் மத்தியில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும். அதன்மேல் ஒரு ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்தையும், வலம்புரிச் சங்கையும் வைக்க வேண்டும். குங்குமம், அட்சதை, ரோஜா இதழ்கள் ஆகியன கொண்டு அவற்றை அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் வழிபாடு, பிறகு குரு வணக்கம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்ய தாமரை மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்.

புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு ஆகிய மூன்று நாட்களும் செய்து முடித்து விட்டு சனிக்கிழமை வரும் சுக்ர ஹோரையன்று ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றை நமது வியாபார ஸ்தலங்களிலோ, அலுவலகத்திலோ, தொழிற்கூடங்களிலோ, அல்லது நமது வீட்டின் பூஜையறையிலோ வைத்து தினமும் தூப தீபம் காட்டியும், மேற்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சாடனமும் செய்து வந்தால் பணம் பல வித வழிகளில் நிச்சயம் வந்து சேரும்.

மேலும் பணம் வரும் வழிகள் யாவும் விரிவடையும். முக்கியமாக நாம் ஜபம் செய்யப் பயன்படுத்திய தாமரைமணி மாலையை ஏதாவது நீர் நிலைகளில் சேர்ப்பித்து விட வேண்டும். இந்தப் பூஜையால் நமது பொருளாதார நிலையின் எல்லைகள் விரிவு பெற்று, மனதில் உற்சாகம் ஊற்றெடுத்து, உழைப்பின் வழி வந்த உயர்வுகளால் வாழ்க்கையின்தரம் சிறப்படையும்.

எளிதாகக் கடைப்பிடிக்க உகந்த மேலும் சில வழிமுறைகளை இப்போது காணலாம்.

ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தன்றோ, புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியன்றோ, ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியன்றோ, அல்லது சித்திரை மாதம் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்றோ, அல்லது இவையனைத்து நாட்களிலுமோ, இரவில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு ஸ்ரீ மகாலட்சுமியின் மீது அமைந்த ஏதாவது ஒரு ஸ்துதியையோ, மந்திரத்தையோ சொல்லி அந்தத் திருமகளை எளிய முறையில் பூஜித்து வந்தால் கூடப் போதும், நம்முடைய குறைகள் யாவுமே மெல்ல மெல்ல விலகி வாழ்வில் வசந்தம் மலய மாருதமாய் வீசத் தொடங்கும்.

சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம். அதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும் என்பது திண்ணம்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.

அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு விசேஷமான வழிமுறையை இப்போது நாம் காணலாம். ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நாம் கண்ட வழிபாட்டு முறைகளைப்போல், வலம்புரிச் சங்கை வைத்து நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாட்டு முறைகள் இன்னும் நிறைய நடைமுறையில் இருக்கின்றன.

வலம்புரி சங்கின் மகிமை

பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, 'தட்சிணாவர்த்தி சங்கம்' என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு 'வாமாவர்த்த சங்கம்' என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும். 'சங்கநாதம்' பிரணவ நாதத்தைப் பிரதி பலிப்பதாகும். அதன் சப்த அலைகளால் சுற்றுச் சூழலில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகியோடக்கூடிய தன்மையைப் பெற்றதாகும். தீய சூழ்நிலைகளை உண்டாக்கும் எதிர்மறை சக்திகள் வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் தமது சக்திகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அதிலிருந்து ஓம்கார ஸ்வரூப நாதம் தன்னியல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதன்பொருட்டே பல முக்கிய நிகழ்வுகளில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது.

வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா ஸ்ரூப நிலைகளும் எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை. அதிலும் விசேஷமாக ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையிலேயே நமது திருக்கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

category:

குழந்தைப் பேறு நல்கும் சிங்கவரம் ரங்கநாதர்!

Posted: 06 Feb 2014 12:05 PM PST

மகேந்திர பல்லவனின் புகழ்மிக்க குடைவரைக் கோவில், தேசிங்குராஜாவின் மனம் கவர்ந்த எம்பெருமான் வீற்றிருக்கும் தலம், பல்லவர்– சோழர்– பாண்டியர் திருப்பணி செய்த ஆலயம், ஆதிவராகப் பெருமாள் வாழும் தலம், குழந்தைப் பேறு அருளும் எம்பெருமான், பிரம்மாண்ட ரங்கநாதர் அமைந்த திருக்கோவில், கலைநயம் மிக்க துர்க்கை அமைந்த கோவில், ஸ்ரீரங்கம் பெருமாளுக்கே அடைக்கலம் தந்த தலம், இயற்கை எழில்மிகு மலைக்கோவில், சிறப்பான வாழ்வு தரும் இறைவன் என பல்வேறு பெருமைகள் கொண்டு திகழ்வது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் மலைக் கோவில் ஆகும்.

தொன்மைச் சிறப்பு

சிம்மவிஷ்ணு மன்னனின் புகழைப் போற்றும் வகையில் மகேந்திர பல்லவன் காலத்தில் சிம்மபுரமாக இருந்த இவ்வூர், இன்று சிங்கவரமாக  அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இந்திய தொல்லியல் ஆய்வறிக்கையின் மூலம் பதினோரு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு உள்ளன.  இதன்மூலம் இந்தப் பகுதி கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே சிறப்புற்றிருந்ததை அறிய முடிகிறது.

கி.பி. 10–ம் நூற்றாண்டுக் கல்வெட்டின் மூலம் இம்மலை திருப்பன்றிமலை என்றும், இறைவன் பன்றி ஆழ்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமாலின் அவதாரங்களுள் ஒன்றான பன்றியை (வராகர்) குறிக்கும் இம்மலையில் இன்றும் ஆதிவராகராக திருக்கோவில் கொண்டுள்ளார். சிங்கவரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பாக்கம் என்ற ஊரில் தொடங்கி இம்மலைக்கு வரும் நதிக்கு வராக நதி என்பது பெயர். இது இத்தலத்தின் பெயரை உறுதி செய்கின்றது. இதே நதியுடன் மலையை ஒட்டிய காட்டைக் கடக்கும் போது சில துணை ஆறுகளும் இணைந்து சங்கராபரணியாகப் பெயர் மாற்றம் பெறுகிறது.

இதன்பின் சிம்மவிஷ்ணு பல்லவனின் மகனான முதலாம் மகேந்திர பல்லவனின் கைவண்ணத்தில் குடைவரை கோவிலாக உருப்பெற்றுள்ளது. சிங்கவரம், பல்லாவரம், சீயமங்கலம், திருவல்லம், திருக்கழுக்குன்றம், மண்டகப்பட்டு, மாமண்டூர், தளவானூர், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி, சித்தன்னவாசல் என அனைத்துமே மகேந்திர பல்லவனின் கலைப் படைப்புகளாகும். இதில் சிங்கவரம், மாமண்டூர், மகேந்திரவாடி, நாமக்கல் ஆகியவை வைணவக் கோவில்களாகும். இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து, சிங்கபுரம்நாட்டு சிங்கபுரம் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. சமணர், பல்லவர், சோழர்,  பாண்டியர் ஆட்சிக் காலத்திலேயே இந்த ஊர் சிறப்பு பெற்று விளங்கியதை கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது.

கி.பி. 10–ம் நூற்றாண்டு கல்வெட்டு, இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1058), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1100), இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1246), முதலாம் குலசேகர பாண்டியன் (கி.பி. 1298), மாறவர்ம வீரபாண்டியன்   (கி.பி.1268) எனப் பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்து போற்றியதை வரலாறு கூறுகின்றது. பழங் காலத்தில் திருப்பன்றிமலை, திருப்பன்றி ஆழ்வார் என அழைக்கப்பட்ட இறைவன் இன்று ஆதிவராகப் பெருமாள் ஆலயமாகத் திகழ்ந்தாலும், இவ்வாலயம் ரங்கநாதர் ஆலயம் என்றே  வழங்கப்படுகிறது.

ஆலய அமைப்பு

சிங்கவரம் ஊரின் தென்பகுதியில் எழிலான மரங்கள் சூழ்ந்த மலைக்கோவிலாக சிங்கவரம் ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆதிவராகப் பெருமாள் மட்டுமே வாழ்ந்த இம்மலை இன்று வரதராஜப் பெருமாள், ரங்கநாதர், ரங்கநாயகி, துர்க்கை என பல்வேறு சன்னிதிகளைக் கொண்டு விளங்குகின்றது. மலை அடிவாரத்தில் சுமார் 35 அடி உயரம் உள்ள ஊஞ்சல் மண்டபமும், அதன் அருகே வாகன மண்டபமும் அமைந்துள்ளன.

இதனைக் கடந்ததும், எழிலான சுமார் 120 படிகளைக் கொண்ட மலைக்கோவில் நம்மை வரவேற்கிறது. படிகளைக் கடந்ததும், அழகிய ராஜகோபுரம் உள்ளே நுழைகின்றோம். உள்ளே வரதராஜப் பெருமாள் சன்னிதி. அதன் இடதுபுறம் சுனை நீர் குட்டையான சந்திர தீர்த்தமும், அதையடுத்து கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது. இதில் அனுமன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். அதனையடுத்து ரங்கநாதர் வாழும் குடைவரைக் கோவிலை அடைகின்றோம். வெளியே இரு துவாரபாலகர்கள் காவல் நிற்க, உள்ளே நுழைந்ததும், பிரம்மாண்ட கோலத்தில் சுமார் 24 அடி நீளமுள்ள ரங்கநாதர், எட்டு நிலை சயனக் கோலங்களில் ஒன்றான போக நிலையில் எழிலோடு காட்சி தருகின்றார்.

தமது வலது கரத்தினை கீழே தொங்கவிட்ட நிலையில், கீழே அனுமன், மேலே சக்ரத்தாழ்வார், இடது கையில் சின்முத்திரை, அருகே கந்தர்வர், நாபிக் கமலத்தில் பிரம்மன், கருடன், ஜெயவிஜயன், மார்பில் மகாலட்சுமி, திருவடியில் பூதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு, அத்திரி முனிவர்கள் என அனைத்து உருவங்களும் ஒருங்கே அமைந்துள்ளன. எம்பெருமானின் பிரம்மாண்ட பாத தரிசனம் பாவம் நீக்கும் தரிசனம் என்பது இத்தலத்தில் சிறப்பாகும். வைகுண்ட ஏகாதசி மற்றும் வராக ஜெயந்தி நாளன்று வரதராஜர் சன்னிதி அருகேயுள்ள வழியாக ரங்கநாதரை வலம் வரும் வாய்ப்பினைப் பெறலாம். மலை மீது லட்சுமி தீர்த்தம் மற்றும் ராமர் தீர்த்தம் ஆகியனவும் அமைந்துள்ளன.

ரங்க நாயகியும், துர்க்கையும்

ரங்கநாதர் சன்னிதியை ஒட்டிய பாறையில் துர்க்கையின் எழிலான வடிவில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம்  ரங்கநாயகி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. துர்க்கையை தாயார் சன்னதி வாசலின் அருகே உள்ள ஜன்னல் வழியே கண்டு மகிழலாம்.  துர்க்கையுடன் கபாலிகர்கள் காட்சி தருகின்றனர். இது இச்சிலையின் பழைமைத் தன்மையைப் பறைசாற்றுகிறது. ரங்கநாதர் சன்னிதிக்கு எதிரே பலிபீடம், கருடாழ்வார், கொடிமரம் அமைந்துள்ளன.  அதை அடுத்து  வடக்குப்புறம் ஆதிவராகப் பெருமாள்  சன்னதி அமைந்துள்ளது. இவரே இம்மலையில் ஆதியில் குடியேறியவர் என பழம் கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.

ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு அடைக்கலம்

முகமதுபின் துக்ளக் காலத்தில் மாலிக்கபூர் படையெடுத்த போது, பல்வேறு ஆலயச் சொத்துக் களைச் சேதப்படுத்தி, செல்வங்களைக் கொள்ளையடித்தான். கி.பி.        1310–ல் ஸ்ரீரங்கம் நோக்கிப் படையெடுத்து வருவதை அறிந்த பிள்ளைலோகாசார்யரும், வேதாந்த தேசிகரும் தென்னாடு மற்றும் மைசூருக்கு இடம் பெயர்ந்ததாக பிரபவம் எனும் வைணவ நூல் கூறுகிறது. அப்போது, ஸ்ரீரங்கத்து எம்பெருமானைத் திருப்பதியிலும், பின்னர் சிங்கவரத்திலும் பாதுகாத்து வந்ததை வரலாறு கூறுகிறது.

இதன்பின் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கனின் குரு நல்லான் சக்ரவர்த்தி சத்ரயாகம், சேஷாத்திரி ஐயங்கார் என்ற இருவரின்  பெருமுயற்சியினால் மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டு, கோபண்ணா என்பவரால் நிறுவப்பட்டதாக அனந்தார்யகர் எழுதிய  பிரபன்ன நாம கிரந்தம் நூலின் மூலம் தெரியவருகிறது. இச்செய்தியைத் தலவரலாறு குறிப்பிடுகிறது.

குழந்தைப்பேறு  தரும்  எம்பெருமான்

குழந்தைப் பேறு வேண்டி, இம்மலையில் வாழும் குரங்குகளுக்குப் பாலன்னம் அல்லது பழவகைகளைக் கொடுத்து, ரங்கநாதரை மனமுருகி வழிபட்டுச் செய்வோருக்கு ஓராண்டிற்குள் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தலத்தில் நடக்கும் திருமண தம்பதியினருக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண் குழந்தையாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. எலுமிச்சை,  நந்தியாவட்டை, அரசமரம் ஆகியவை தல விருட்சங்களாகவும், சந்திரத் தீர்த்தம் தல தீர்த்தமாகவும் உள்ளன. காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மலைக்கோவிலில் தரிசனம் செய்யலாம்.  

வைகாசி ரேவதியில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, வராக ஜெயந்தி, மாசி மகத்திற்கு புதுச்சேரி சென்று கடலாடி வருதல், மாசி மகத்தன்று செஞ்சி சங்கராபரணி ஆற்றில் இறங்கி காட்சி தருதல் என, அனைத்து விழாக்களுமே மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. தை அமாவாசையன்று தன் பக்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அருகேயுள்ள மேலச்சேரி என்ற ஊருக்குச் சென்று அங்கே ரங்கநாதர் காட்சி தருவது இன்றும் வழக்கமாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் செஞ்சியை அடுத்து வடக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் சிங்கவரம் அமைந்துள்ளது.  செஞ்சி பஸ்நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. இவ்வாலயத்தினை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. புகழ்பெற்ற செஞ்சிக்கோட்டை, பழம்பெரும் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம் முதலானவை இம்மலைக் கோவிலின் அருகே அமைந்துள்ளன. இயற்கையையும்,  இறைவனையும் தரிசிக்க விரும்புவோருக்கு  ஏற்ற தலம்,  செஞ்சி ரங்கநாதர் எனும் சிங்கவரம் ரங்கநாதர் மலைக்கோவில் என்றால் அது மிகையல்ல.

–பனையபுரம் அதியமான்.

மன்னனும்,  ரங்கநாதரும்...

தேசிங்குராஜனின் இஷ்டதெய்வம் சிங்கவரம் ரங்கநாதன். இந்த ரங்கநாதர், ராஜாதேசிங்குவின் உபாசனா மூர்த்தியாக விளங்கியதை இப்பகுதி மக்கள் இன்றும் கர்ணபரம்பரை கதையாக நினைவுபடுத்துகின்றனர். தேசிங்கு ராஜா எப்போது பயணம் செய்தாலும் சிங்கவரம் ரங்கநாதரை வணங்கி உத்தரவு பெற்றுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கி.பி. 1714–ம் ஆண்டு ஆற்காடு நவாப்புடன் போரிட இத்தலம் வந்த போது, எம்பெருமான், 'இன்று சூழ்நிலை உனக்குச் சாதகமாக இல்லை. இன்று நீ போருக்கு போக வேண்டாம்' என்று கூறினார். அப்போது சிந்தனை மயங்கிய தேசிங்கு ராஜா, 'நான் சத்திரியன், முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்' என்று கூறி போருக்குப் புறப்பட்டான்.  எம்பெருமானும் தன் விருப்பத்திற்கு மாறாக சென்றதால் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. (இன்றும் இதே நிலையில் ரங்கநாதரை இங்கு காணலாம்) இந்தப் போரில் மன்னன் தோல்வியுற்றான் என்பது வரலாறு.

category:

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடக்கம்: மெக்கல்லம், வில்லியம்சன் சதத்தால் சரிவில் இருந்து நிமிர்ந்தது நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 329 ரன்கள் சேர்ப்பு

Posted: 06 Feb 2014 12:03 PM PST

ஆக்லாந்து,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, கேப்டன் மெக்கல்லம், இளம் வீரர் வில்லியம்சனின் அபாரமான சதத்தால் சரிவில் இருந்து மீண்டது.

முதலாவது டெஸ்ட்

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் அஸ்வின், புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

லேசான மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இந்த சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து 6-வது முறையாக டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

சரிந்து நிமிர்ந்தது

இதைத் தொடர்ந்து நியூசிலாந்தின் இன்னிங்சை தொடங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஹமிஷ் ரூதர்போர்டு (6 ரன்), பீட்டர் புல்டான் (13 ரன்) இருவரும் இஷாந்த் ஷர்மா-ஜாகீர்கானின் வேகத்தில் காலியானார்கள். ராஸ் டெய்லரும் (3 ரன்) சொற்ப ரன்னில் நடையை கட்டினார். 30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (17.1 ஓவர்) பறிகொடுத்து நியூசிலாந்து தள்ளாடியது. ஆனால் பந்து வீச்சு மூலம் கிடைத்த அருமையான தொடக்கத்தை தக்க வைத்துக் கொள்வதில் வழக்கம் போல் இந்திய வீரர்கள் சொதப்பினர்.

4-வது விக்கெட்டுக்கு கனே வில்லியம்சனும், கேப்டன் பிரன்டன் மெக்கல்லமும் கைகோர்த்து நியூசிலாந்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து படிப்படியாக விடுவித்தனர். 'விக்கெட் சரிந்து விட்டதே' என்று பதற்றமடையாமல் ஒரு நாள் போட்டி போன்று பந்துகளை நாலாபுறமும் அடித்து விரட்டினார்கள். ஷாட் பிட்ச் பந்துகளையும் சூப்பராக சமாளித்தனர். வில்லியம்சன் 32 ரன்களில் இருந்த போது, அவரது பேட்டின் விளிம்பில் உரசிக் கொண்டு முதலாவது 'ஸ்லிப்' பகுதியில் சென்ற கேட்ச் வாய்ப்பை முரளி விஜய் வீணாக்கினார். இது அவர்களுக்கு மேலும் சாதகமாக போய் விட்டது.

மெக்கல்லம், வில்லியம்சன் சதம்

நங்கூரம் போல் நிலைத்து நின்ற இந்த ஜோடியை இந்திய பவுலர்களால் அச்சுறுத்த இயலவில்லை. சுழற்பந்து வீச்சிலும் எவ்வித சிரமமும் இன்றி ரன்களை சேகரித்தனர். ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டிய பிரன்டன் மெக்கல்லம், ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் இறங்கி வந்து சிக்சர் விளாசி தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். இது இந்தியாவுக்கு எதிரான அவரது 3-வது செஞ்சுரியாகும்.

இதே போல் ஒரு நாள் தொடரில் ஐந்து ஆட்டங்களிலும் அரைசதம் அடித்து சாதனை படைத்தவரான கனே வில்லியம்சனும் அடுத்த 2 ஓவர்களில் சதத்தை தொட்டார். அவருக்கு இது 5-வது சதமாகும். நியூசிலாந்தின் 3-வது மற்றும் 5-வது வரிசை பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதத்தை சுவைப்பது இது 4-வது நிகழ்வாகும்.

தாடியை மழித்துக் கொண்டு 'பளிச்' என்று களத்தில் வலம் வந்த மெக்கல்லமுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. அவர் 102 ரன்களில் வெளியேறி இருக்க வேண்டியது. அந்த சமயத்தில் கொடுத்த கேட்ச்சை தவறான கணிப்பால் ஷிகர் தவான் நழுவ விட்டார்.

மோசமான நிலையில் சிக்கித் தவித்த அணியை வலுவாக தூக்கி நிறுத்திய இந்த கூட்டணியை ஸ்கோர் 251 ரன்களாக உயர்ந்த போது தான் உடைக்க முடிந்தது. வில்லியம்சன் 113 ரன்களில் (172 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஜாகீர்கானின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மெக்கல்லம்-வில்லியம்சன் இணை 4-வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் (51 ஓவர்) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 4-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடி ஒன்றின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

329 ரன்கள் சேர்ப்பு

இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், பிரன்டன் மெக்கல்லமும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் கவனித்துக் கொண்டனர்.

முதல் நாள்ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 329 ரன்கள் குவித்தது. பிரன்டன் மெக்கல்லம் 143 ரன்களுடனும் (210 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 42 ரன்களுடனும் (78 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருக்கிறார்கள்.

பவுன்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய வேகப் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. அத்துடன் 4 கேட்ச் வாய்ப்புகளை பீல்டர்கள் கோட்டை விட்டதும் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

நியூசிலாந்து

புல்டான் எல்.பி.டபிள்யூ

(பி) ஜாகீர்கான் 13

ரூதர்போர்டு (சி) ரஹானே

(பி) இஷாந்த் 6

வில்லியம்சன் (சி) டோனி

(பி) ஜாகீர்கான் 113

ராஸ் டெய்லர் (சி) ஜடேஜா

(பி) இஷாந்த் 3

பிரன்டன் மெக்கல்லம்

(நாட்-அவுட்) 143

ஆண்டர்சன் (நாட்-அவுட்) 42

எக்ஸ்டிரா 9

மொத்தம் (90 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 329

விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-23, 3-30, 4-251

பந்து வீச்சு விவரம்

முகமது ஷமி 22-6-66-0

ஜாகீர்கான் 23-2-98-2

இஷாந்த் ஷர்மா 21-4-62-2

ரவீந்திர ஜடேஜா 20-1-81-0

விராட் கோலி 1-0-4-0

ரோகித் ஷர்மா 3-0-12-0

category:

இன்பமும்... துன்பமும்..!

Posted: 06 Feb 2014 12:00 PM PST

இன்பமும்–துன்பமும் கலந்தது தான் மனித வாழ்க்கை.

மாமனிதர்களான நபிமார்கள் முதல் சாமானியர்கள் வரை இன்பம்–துன்பம் இரண்டையும் அனுபவித்து, கடந்து தான் வாழ்வை கழித்திருக்கிறார்கள்.

பொய்யே பேசாத உத்தமர் உண்டு!

பாவமே புரியாத புனிதர் உண்டு!

துன்பமே படாத மாமனிதர் உண்டோ? இல்லை!

இதுதான் மனித வாழ்வின் பொது நிதி. இதை பின்வரும் திருக்குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது.

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் உள்ளது' (94–6)

வாழ்க்கையில் இன்பம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியன வரும்போது கர்வம் கொண்டு ஆணவத்துடன் ஆட்டம்போட்டு அலையக்கூடாது. துன்பத்தையும், வெற்றியையும் கொண்டாடும் வழி இதுவல்ல. இதுவே துன்பத்தின் தூதுவனாக மாறிவிடும்.

'மேலும், நீங்கள் பூமியில் கர்வம் கொண்டு நடக்கவேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீங்கள் பூமியைப் பிளந்து விடமுடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது' (17:37)

இன்பத்தையும், வெற்றியையும் கொண்டாடி மகிழ்வோர் சாமானியர்களை கண்டதும், கர்வத்துடன் தங்களது முகத்தை திருப்பிவிடுவார்கள். இப்பொழுது அவர்களின் போலி முகம் தெரிந்துவிடும். இப்படிப்பட்டவர்களை இறைவன் ஒருபோதும் நேசிக்கமாட்டான் என்பதை பின் வரும் திருக்குர்ஆனின் வசனம் சுட்டிக்காட்டுகிறது.

(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப் பெருமைக்காரர், ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான். (31:18)

இன்பத்தையும், வெற்றியையும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் எளிய வழியை இஸ்லாம் அழகாக கற்றுத் தருகிறது. நாம் கேட்பதையெல்லாம் இறைவன் கொடுக்கிறான். நாம் கேட்பதையும் வழங்குகிறான். இப்படிப்பட்ட இறைவனை இன்பத்தில் மனிதன் மறந்து விடுகின்றான். இறைவா! உனக்கு நன்றி என்று ஒரு வார்த்தைக்கூட மனிதன் வாயிலிருந்து வராதது வேதனை அளிக்கிறது.

நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன். நீங்கள் மாறு செய்தால் நிச்சயமாக எனது வேதனை மிகக் கடுமையானது என்று உங்களது இறைவன் அறிவித்ததையும் நினைவு கூருங்கள். (14:7)

துன்பத்தில் துவண்டு விடக்கூடாது:–

ஒரு மனிதனுக்கு துன்பமும், வேதனையும், சோதனையும் வரும்போது, அதை திறம்பட கையாளாகாமலும், அவற்றை சரியாக எதிர் கொள்ளாமலும், அவற்றிலிருந்து மீளாமலும் அவற்றைக்கண்டு பதற்றமடைந்து துவண்டு போய் விடுகின்றான்.

'நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான்'. (திருக்குர்ஆன் 70:19,20)

துன்பம் வரும்போது அதை துணிவுடன் எதிர்கொள்வது வீரம். அதற்குப் பணிந்து, பதற்றமடைந்து, துவண்டு போவது கோழைத்தனம். துன்பம் வரும்போது புலம்பாமல் மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

'(துக்கமான சமயத்தில்) எவர் கன்னங்களை அடிக்கிறாரோ, ஆடைகளை கிழிக்கிறாரோ, அறியாமை கால சொற்களை பயன்படுத்துகிறாரோ, அவர் நம்மைச்சார்ந்தவர் அல்ல! என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு மஸ் ஊத் (ரலி) புகாரி: 1294)

துன்பம் வரும்போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. துன்பத்தைக் கண்டதும் ஒப்பாரி வைப்பவர்கள், காட்டுக் கூப்பாடு போடுபவர்கள், புலம்பித்தள்ளுபவர்கள், செய்தவையெல்லாம் செய்துவிட்டு, இப்போது நாங்கள் பொறுமையை கடைப்பிடிக்கின்றோம் என்பார்கள்.

ஒப்பாரிக்குப் பிறகு கண்களில் கண்ணீர்வற்றியதும், புலம்பிய பிறகு உடலில் சக்தி குறைந்ததும் 'இப்போது பொறுமை காப்போம்' என்பது பொறுமையே அல்ல!

துன்பத்தின் ஆரம்ப நிலையில் கடைப்பிடிப்பதே பொறுமை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி:1302)

துன்பம் நீங்கிட இறைவனிடம் முறையிட வேண்டும். யூசுப் (அலை) காணாமல் போனதும் அவரின் தந்தை யஃகூப் (அலை) அவர்கள் இறைவனிடம் தமது துன்பத்தை முறையிடுவதை திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது. 'என்னுடைய சஞ்சலத்தையும், கவலையையும், இறைவனிடமே முறையிடுகின்றேன்' (12:86)

இன்பம் வரும்போதும், துன்பம் வரும்போதும் எவ்வாறு நடக்க வேண்டும்? அவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் எவை? போன்றவற்றை இஸ்லாம் அழகாக எடுத்துரைத்தது.

துன்பத்திலும்–இன்பத்திலும் வரம்பு மீறக்கூடாது. இன்பத்தை வானளாவிய அளவிற்கு கொண்டாடுவதும், துன்பத்தைக் கண்டு பூமியில் துவண்டு விழுவதும் பேராபத்து விளைவிக்கக்கூடியது. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

நிச்சயமாக அல்லாஹ் மனம் நாடியவரை வழிதவறச்செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான். ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம். (35:8)

''(நபியே!) அவர்கள் இறைவிசுவாசிகளாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக் கொள்வீர்போலும்!'' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இன்பத்திலும்–துன்பத்திலும் நடுநிலைப் பேணுவோம், அப்போது தான் மனநிறைவான வாழ்வை நாம் பெறமுடியும். அதற்கு திருக்குர்ஆன் காட்டும் வழியை நாம் பின்பற்றி நடப்போம்.

–மவுலவி அ.செய்யது அலி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

category:

தெண்டுல்கர்–வார்னே மீண்டும் மோதல்

Posted: 06 Feb 2014 11:58 AM PST

புதுடெல்லி,

ஒரு காலத்தில் களத்தில் எதிரிகளாக மல்லுகட்டிய ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களான பேட்டிங் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் (இந்தியா), சுழற்பந்து வீச்சு சூரர் ஷேன் வார்னேவும் (ஆஸ்திரேலியா) மீண்டும் ஒரு முறை நேருக்கு நேர் மோதப் போகிறார்கள்.

'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியம் 1814–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மெரில்போன் கிரிக்கெட் கிளப்புக்கு (எம்.சி.சி.) சொந்தமான இந்த ஸ்டேடியம் தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் எம்.சி.சி.–ரெஸ்ட் ஆப் தி வேல்டு அணிகள் மோதும் கண்காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் எம்.சி.சி. அணிக்கு சச்சின் தெண்டுல்கரும், ரெஸ்ட் ஆப் தி வேல்டுக்கு ஷேன் வார்னேவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.சி.சி. அணியில் ராகுல் டிராவிட்டும் இடம் பெறுகிறார். ஜூலை 5–ந்தேதி லண்டனில் நடைபெறும் இந்த போட்டி 50 ஓவர்கள் கொண்டதாகும்.

இது குறித்து தெண்டுல்கர் கூறுகையில், 'எம்.சி.சி. அணிக்கு கேப்டனாக இருக்கும்படி என்னை அணுகியது, எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாகும். அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறப்பு வாய்ந்த ஒரு இடம் லண்டன் லார்ட்ஸ் மைதானம். இந்த போட்டியின் மூலம் லார்ட்சின் 200–வது ஆண்டு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்றார். இந்த போட்டி நிச்சயம் வேடிக்கையாகவும், சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருக்கும் என்று வார்னே குறிப்பிட்டார்.

இந்த போட்டியில் விளையாடும் மேலும் பல பிரபலமான வீரர்களின் பெயர் விவரம் வருகிற வாரங்களில் வெளியாகும் என்று எம்.சி.சி. தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்தார்.

category:

ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்

Posted: 06 Feb 2014 11:57 AM PST

'அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்'. (1. கொரி.1:31)

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் ஞானத்தின் தேவனாயிருக்கிறார். தம்மிடத்தில் வருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளாமல் தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் பலத்த அற்புதங்களை செய்கிறார்.

தேவனுக்குப் பயப்படுங்கள்

'கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்'. நீதி.1:7

நாம் நம்மை உண்டாக்கின ஆண்டவருக்கு முதலாவது பயப்படவேண்டும். என்னை உண்டாக்கின ஒரு தெய்வம் இப்பூமியில் இருக்கிறார். அவர் தான் ஆண்டவராகிய இயேசு நாதர். அவருக்கு விரோதமாக ஒன்றையும் செய்யக் கூடாது என்கின்ற ஒரு பயம் எப்போதும் உங்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும்.

நம்மில் அநேகர் மனிதனுக்கு பயந்து, பயந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், அவருக்கு பயந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆலோசனையை மூடர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

உங்களுடைய தேர்வு குறித்தோ அல்லது மற்ற எந்த காரியங்களைக் குறித்தோ பயப்படுவதை நிறுத்தி தேவனுக்குப் பயப்படுங்கள். இது தேவனை கனம் பண்ணுவதற்கு அடையாளம்.

அனுதினமும் ஜெபியுங்கள்

'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக் கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்'. யாக்.1:5

நமக்கு ஞானம் இல்லாவிட்டால் ஜீவனோடு இருக்கிற ஆண்டவரை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏன் என்றால் 'அவரே நமக்கு ஞானமாயிருக்கிறார்'. உங்கள் பாடங்களை படிக்கும் போது அநேக காரியங்கள் உங்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாமல், புரிந்து கொள்ள முடியாமல் கலக்கத்தோடு இருக்கலாம் இதற்கு ஞானம் வேண்டுமல்லவா?

யோவான் 14:14–ல் ஆண்டவர் சொன்னார், 'என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்'.

இது ஆண்டவருடைய வாக்குத்தத்தம். அதே வேளையில் நாமும் ஆண்டவரை நோக்கி விசுவாசத்தோடு ஜெபம் பண்ண வேண்டும். இப்படி ஜெபம் பண்ணும்போது சந்தேகம் அவநம்பிக்கை உங்களுக்குள் உண்டாகலாம். இதைக் கொண்டு வருகிறவன் பிசாசு. ஆகவே பிசாசுக்கு இடங்கொடாமல் தினந்தோறும் ஜெபத்தோடு உங்கள் பாடங்களை கருத்தாக படியுங்கள். கட்டாயம் ஆண்டவர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்வார்.

'கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது'. சங்கீதம் 19:7

ஞானமில்லாத உங்களுக்கு வேதமே ஞானத்தின் பொக்கிஷமாகும். ஆகவே தேர்வுக்கு ஆயத்தப்படுவதற்கு முன்பாக காலையில் வேதத்தை எடுத்து வசனத்தை வாசித்து சில நிமிட நேரம் தியானியுங்கள். அதற்கு பிறகு உங்கள் பாடங்களை படிக்கத் துவங்குங்கள். தேவன் அற்புதமாய் உங்களுக்குள் கிரியை செய்வார். வேதத்தை ஒருநாளும் நீங்கள் மறக்கக்கூடாது. உங்கள் இளமையில் வேதத்தை சுமந்தால், இவ்வேதம் உங்களை முதிர்வயது வரைக்கும் சுமக்கும்.

ஆண்டவரை விசுவாசியுங்கள்

'அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்'. ஆதி.15:6

நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான காரியம் ஆண்டவரை நீங்கள் மனப்பூர்வமாய் விசுவாசிக்க வேண்டும். எப்படியெனில் இயேசு கிறிஸ்து எனக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார், ரத்தம் சிந்தினார், எனக்காக மரித்தார், மூன்றாவது நாள் உயிரோடு எழும்பினார். இன்றைக்கும் அவர் ஜீவிக்கிறார், அவர் தான் எனக்கு அற்புதங்களைச் செய்கிற தேவன் என்று முழு நிச்சயமான நம்பிக்கையோடு அவரை விசுவாசிக்க வேண்டும்.

நீங்களும் உங்கள் தேர்வில் அற்புதங்களை காண ஆண்டவரை மாத்திரம் நம்பிக்கையோடு விசுவாசியுங்கள். உங்களுக்கு அற்புதம் நிச்சயம்.

பிரயாசப்படுங்கள்

'சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்'. நீதி.14:23

விடா முயற்சியோடு பிரயாசப்படுங்கள், இது முக்கியம். நாம் ஜெபித்தாலும், வேதம் வாசித்தாலும் படிக்க வேண்டிய நேரத்தில் கருத்தாக பாடங்களைப் படிக்க வேண்டும். இது நம்முடைய கடமை. நாம் செய்ய வேண்டியதை கட்டாயம் நாம் தான் செய்ய வேண்டும்.

சில நேரங்களில் எனக்காக என் பெற்றோர், என் போதகர் ஜெபம் பண்ணுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு சரிவர பாடங்களை படிக்காமல் விட்டுவிட்டால் அது மிகுந்த குழப்பத்தை உண்டாக்கிவிடும். நம்பிக்கையற்ற தன்மை உங்களுக்குள் வந்துவிடும்.

ஆகவே ஆண்டவரை முற்றிலும் நம்பி பிரயாசப்படுங்கள். உங்கள் பிரயாசத்திற்கு மிகுந்த பலன் உண்டு. மேலும், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமாக மதிப்பெண்களை நீங்கள் பெற்று கட்டாயம் தேர்ச்சியடைவீர்கள்.

ஞானமுள்ள தேவன் உங்களை சகல ஞானத்தினாலும் நிரப்புவாராக!

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை.

category:

வியாபார விருத்திக்கு கடையில் எந்தப் படம் வைக்கலாம்?

Posted: 06 Feb 2014 11:55 AM PST

நல்ல காலம் வந்தாச்சு...

வியாபார  விருத்திக்கு  கடையில் எந்தப்  படம்  வைக்கலாம்?

கேள்வி:– நான் தனியார் துறையில் 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தேன். இப்பொழுது அதிலிருந்து விலகிக் கொண்டு சுயமாகத் தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனது ஜாதக ரீதியாக தற்சமயம் தொழில் தொடங்கினால் நன்றாக இருக்குமென்று ஒரு சிலர் சொன்னார்கள். ஆகவே எனது ஜாதகத்தையும், எனது மனைவி ஜாதகத்தையும் தங்கள் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். எனது மனைவி பெயரில் விரைவில் ஒரு பல்பொருள் விற்பனை நிலையம் தொடங்க இருக்கிறேன். வியாபாரம் தொடங்க ஏற்ற நேரம்தானா? கல்லாபெட்டிக்கு பக்கத்தில் எந்தப் படம் வைத்தால் இடையூறில்லாமல் வியாபாரம் நடைபெற்று லாபம் கிடைக்கும் என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (ராமச்சந்திரன், திருநெல்வேலி).

பதில்:– தங்கள் இருவர் ஜாதகமும் தொழில் தொடங்க ஏற்ற விதத்தில்தான் இருக்கிறது. திசாபுத்தி அடிப்படையில் தன லாபாதிபதி திசை உங்கள் மனைவி ஜாதகத்தில் நடைபெறுகிறது. எனவே, தொழில் தொடங்கினால் தன லாபம் நிச்சயமாக வந்து கொண்டேயிருக்கும். தங்கள் ஜாதகத்திலும் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கிறது. தற்சமயம் செவ்வாய் திசையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜூன் 2014–க்கு மேல் தொழில் ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியப் போகிறது. எனவே பழைய வேலையில் இருந்து விலகிக் கொண்டு இனி துணிந்து சுயதொழில் தொடங்கலாம். எதிர்மறைக் கருத்துக்கள் வராமல் கடைக்கு நல்ல பெயராக சூட்டிக் கொள்ளுங்கள். கடையில் எந்தப் படத்தை வைத்தால் வியாபாரம் நன்றாக நடக்குமென்று கேட்டிருக்கிறீர்கள். மக்கள் கடைக்குள் நுழையும் பொழுது நம்பிக்கை, நாணயம், கைராசி இவை மூன்றும் இருக்கிறதா? என்று எதிர்பார்ப்பார்கள்.

உங்கள் மனைவியின் பெயரில் தொழில் தொடங்கப் போவதாக எழுதியிருக்கிறீர்கள். மனைவியின் ஜாதக ரீதியாக பார்க்கும் பொழுது தொழில் ஸ்தானாதிபதி நவாம்சத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்தும், சேர்ந்திருக்கும் கிரகங்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தும் கடையில் நாம் வைத்து வழிபட உகந்த படத்தை பெரிய அளவில் மையப் பகுதியில் வைக்கலாம். அதிர்ஷ்ட சின்னங்களையும் நவாம்ச ரீதியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய ஜாதகப்படி செயல் ஸ்தானத்தில் சூரியன் பலம் பெற்று அவரோடு சில கிரகங்கள் இணைந்து கூட்டு கிரக யோகமாக விளங்குவதால் சிவபெருமானின் குடும்ப படத்தை (சிவ குடும்பம்) நீங்கள் உங்கள் தொழில் நிலையத்தில் வைத்துக்கொள்வது நல்லது. சிவன், பார்வதிக்கு நடுவில் விநாயகப் பெருமான், பார்வதிக்கு பக்கத்தில் முருகப்பெருமானும் மயிலும் நிற்க காளை வாகனமும் அருகில் நிற்கும்படியான படத்தை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தோடு நாம் விழாக்களில் கலந்து கொள்வதுபோல தெய்வங்களும் குடும்பத்தோடு வந்து அருள் வழங்கும், பொருள் வழங்கும்!

சித்திரை புத்தாண்டில் நீங்கள் நினைத்தபடியே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகப் போகிறது. விரைவில் தொழிலதிபராக வரும் விதத்தில் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் சாதகமாக உலா வருகின்றன.

கேள்வி:– எனது புதல்வியின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? மண வாழ்க்கை சந்தோஷமாக அமையுமா? வரன்கள் வந்து வந்து போகிறது. எதுவும் சரியாக அமையவில்லை. மனக்குழப்பமாக உள்ளது. தங்களது கனிவான பதிலை எதிர்பார்க்கிறோம். (வி.சுப்ரமணியன், காஞ்சீபுரம்).

பதில்:– தங்கள் புதல்வியின் ஜாதகப்படி தற்சமயம் 26 வயது நடைபெறுகிறது. ஜூன் 13–ந் தேதிக்கு மேல் குருப்பெயர்ச்சிக்கு பிறகு லக்னத்தைக் குரு பார்க்கப் போகிறார். அப்பொழுது ஏற்படும் பூரண வியாழ நோக்க காலத்தில் திருமணம் சீரும், சிறப்புமாக முடிவடையும். எனவே, எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதினால் வாழ்க்கை சந்தோஷமாக அமையும். சந்திரனுடன் ராகு சஞ்சரிப்பதால் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. வாரவழிபாடாக சர்ப்ப விநாயகரை வழிபடலாம்.

கேள்வி:– எனது ஜாதகத்தையும், எனது கணவரின் ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறேன். எங்களுக்குத் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? எனது கணவருக்கும் நிலையான தொழில் எப்பொழுது அமையும்? (பரிமளா தேவராஜ், சேலம்).

பதில்:– தங்கள் இருவர் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானாதிபதி நன்றாக பலம் பெற்றிருக்கிறார். எனவே, விரைவில் புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆயினும் தங்கள் ஜாதகத்தில் புத்திரகாரகனாகவும், ராசிநாதனாகவும் விளங்கும் குரு, கேது மற்றும் சூரியனுடன் இணைந்திருக்கிறார். அதே போல தங்கள் கணவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் கேது இருக்கிறார். சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கத்தில் புத்திரப்பேறு உண்டாகும் கிரகங்கள் சிக்கியிருந்தால், புத்திர உற்பத்தி ஏற்படுவதில் தடை உருவாகத்தான் செய்யும். இருப்பினும் திருமணம் முடிந்து 2 வருட இடைவெளிக்கு பிறகு புத்திர விருத்தி ஏற்படும் வாய்ப்பு உண்டு. முறையாக சர்ப்பசாந்தி செய்தால் முன்னேற்றமும் ஏற்படும். முத்தான குழந்தையும் பிறக்கும். வார வழிபாடாக சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குருபெயர்ச்சிக்குப் பிறகு தங்கள் கணவருக்கு நிலையான தொழிலும் அமையும். நீங்கள் எதிர்பார்த்தபடியே புத்திரப்பேறும் கிடைக்கும்.

கேள்வி:– எனது புதல்வரின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் உண்டா? தற்சமயம் வாடகை வீட்டில் இருக்கிறோம். ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? என்று ஜாதகத்தை பார்த்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறோம். (வி.ஈஸ்வரி, சென்னை–19).

பதில்:– தங்கள் புதல்வரின் ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானாதிபதி சனி, செவ்வாய் வீட்டில் இருக்கிறார். அம்சத்தில் சனி,  பகை கிரகமான சூரியன் வீட்டில் இருக்கிறார். 2–ல் கேது, 8–ல் ராகு அமர்ந்து சர்ப்பகிரகத்தின் ஆதிக்கத்தில் அனைத்து கிரகங்களும் இருக்கின்றன. எனவே, தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் அமைப்பே இருக்கிறது. அதே நேரத்தில் பூமிகாரகன் செவ்வாய் உச்சம் பெற்ற சுக்ரனுடன் இணைந்து 7–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு வீடு வாங்கும் யோகம் உண்டு. அதாவது இன்னும் ஓராண்டு கழித்தே சொந்த வீடு வாங்கிக் குடியேறும் வாய்ப்பு கிட்டும். சர்ப்பதோஷம் இருப்பதால் வார வழிபாடாக நவக்கிரகத்திலுள்ள ராகுகேதுக்களுக்கு பிரீதி செய்வதோடு, சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் சர்ப்ப ஸ்தலங்களுக்கு சென்று முறையான சர்ப்ப சாந்தியைச் செய்து வருவது நல்லது. நாகத்துடன் கூடிய பிள்ளையாரையும், வெள்ளிக் கிழமை தோறும் வழிபட்டு வரலாம்.

கேள்வி:– எனது ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம்செய்ய முடிவெடுத்திருக்கிறேன். மறுமண வாழ்க்கையாவது நன்றாக அமையுமா? எப்பொழுது அதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (கலாதேவி, சென்னை–17).

பதில்:– தங்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று விட்டார். எனவே தான் முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. மறுமண வாய்ப்பிற்கான சூழ்நிலை மார்ச் 12–க்கு மேல் அமையும். உங்கள் லக்னத்திற்கு அதிபதியான குரு வக்ர நிவர்த்தியாகிய பின்னால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். இனிவரும் வரன்களை நீங்கள் தேர்வு செய்யும் பொழுது கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.

கேள்வி:– எனது பேத்தி ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவளுக்கு எதிர்காலம் நன்றாக அமையுமா? இதற்கு பிறகு ஆண்வாரிசு உள்ளதா? என்பதைத் தெரியப்படுத்தவும். படிப்பு மற்றும் தோஷங்கள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கவும். (கே.அன்னியப்பன், பெங்களூர்).

பதில்:– தாங்கள் கடிதத்தில் குழந்தை அனிஷ்கா பிறந்த தேதி 31.10.2013 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் கணித்து அனுப்பியுள்ள ஜாதகத்தில் 31.10.2012 என்று தேதி குறிப்பிட்டு கணிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி பார்த்தால் விருச்சிக லக்னமும், கார்த்திகை நட்சத்திரமும் மேஷ ராசியுமாக அமைந்திருக்கிறது. படிப்பு ஸ்தானாதிபதி சனி உச்சம் பெற்று இருக்கிறார். லக்னாதிபதி செவ்வாயை குரு பார்க்கிறார். எனவே குரு மங்கள யோகமும் அமைந்திருக்கிறது. படிப்பும், எதிர்காலமும் நன்றாக இருக்கிறது. சகோதர ஸ்தானாதிபதி அம்சத்தில் குரு வீட்டில் இருக்கிறார். நவாம்சத்தில் சகோதரகாரகன் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். எனவே 2½ வருட இடைவெளியில் அடுத்து ஒரு ஆண் சகோதரன் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தையின் பிறந்த தேதி 31.10.2012 ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கணித்து அனுப்பிய ஜாதகம் சரியானதுதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். லக்னத்தில் ராகு, 7–ல் கேது இருப்பதால் ராகுகேது வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

ஜோதிடக்   கேள்விகளுக்கு பதில்    அளிப்பவர்:  'ஜோதிடக்கலைமணி'   சிவல்புரி சிங்காரம்

category:

சேலஞ்சர் கோப்பை டென்னிஸ்: அரைஇறுதியில் சோம்தேவ்-யுகி பாம்ப்ரி

Posted: 06 Feb 2014 11:53 AM PST

சென்னை,

ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று கால்இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், ஸ்பெயினின் ஜோர்டி சாம்பர் மோன்டனாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மோன்டனா திடீரென வயிற்று பிடிப்பால் பாதிக்கப்பட்டதுடன், வாந்தியும் எடுத்தார். இதையடுத்து மோன்டனா விலகியதால், சோம்தேவ் விளையாடாமலேயே அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் யுகி பாம்ப்ரி தன்னை எதிர்த்த பிரான்சின் லுகாஸ் பவுலியை 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் போராடி தோற்கடித்தார். இன்று பிற்பகல் 1 மணிக்கு நடக்கும் அரைஇறுதியில் சோம்தேவும், பாம்ப்ரியும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். மற்ற இந்திய வீரர்கள் சகெத் மைனெனி, சனம் சிங் ஆகியோர் தங்களது கால்இறுதியில் நேர் செட்டில் தோற்று வெளியேறினர்.

category:

இலந்தை மரமாக லட்சுமி

Posted: 06 Feb 2014 11:52 AM PST

கங்கை நதிக்கரையில் உள்ள தீர்த்த தலமாகிய பத்திரி ஆலயத்தில் விஷ்ணு, தவக்கோலத்தில் எழுந்தருளியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பத்திரி என்பதற்கு இலந்தை என்று பொருள் கூறப்படுகிறது. திருமகளாகிய லட்சுமிதேவி இங்குள்ள ஆலயத்தில் இலந்தை மரமாக வந்து நின்று விஷ்ணுவை காவல் புரிந்ததால் இத்தலத்திற்கு பத்திரி என்று பெயர் வந்ததாக பெயர்காரணம் கூறுகிறார்கள்.

category:

எமன் வழிபட்ட தலம்

Posted: 06 Feb 2014 11:50 AM PST

திருவாரூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம். காலத்தின் வடிவான எமதர்மன் தன்னுடைய பணிகளால் ஏதும் தோஷம் நிகழாமல் இருக்க இங்கு வந்து இவ்வாலயத்தில் உள்ள வாஞ்சிநாத சுவாமியை வழிபட்டுள்ளார்.

இந்த ஆலயத்தில் எமதர்மனே, சிவபெருமானுக்கு வாகனமாக இருக்கிறார். மூலஸ்தானத்தில் வாஞ்சிநாதர் சுயம்புவாக லிங்க வடிவில் காட்சி தருகிறார். பாவம், பழி, பித்ருக்கடன், திருமணத் தடை போன்றவற்றை உடைத்தெறியும் கருணைக்கடலாக வாஞ்சிநாதசுவாமி திகழ்கிறார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™