Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாலை ரோட்டில் கொட்டி உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

Posted: 04 Feb 2014 12:17 PM PST

ஓமலூர் அருகே பாலை ரோட்டில் கொட்டி உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், கலப்பு தீவனம், தவிடு போன்றவற்றை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும், கோமாரி நோயால் தாக்கப்பட்டு இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஓமலூர் அருகே உள்ள நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை நடுரோட்டில் கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அதில் 100-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

கறவை மாடுகளுடன் திரண்டனர்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சார்பில் ஓமலூர்-சேலம் மெயின் ரோட்டில் சுங்கசாவடி அருகே தண்ணீர் தொட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடுகளுடன் திரண்டனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்துக்கு வந்ததை அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் மறியலுக்கு வந்த விவசாயிகளை கோட்டகவுண்டம்பட்டி என்ற இடத்தில் மறித்தனர். அதையும் மீறி 30-க்கும் மேற்பட்டவர்கள் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் போலீசார் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அதையும் மீறி அவர்கள் கறவை மாடுகளுடன் வந்ததால் அவர்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பெரியண்ணன் மற்றும் 2 பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினார்கள். எனவே பால் உற்பத்தியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

கோஷம்

இதைத்தொடர்ந்து மாடுகளுடன் எங்களையும் கைது செய்யுங்கள் என்று விவசாயிகள் கோஷமிட்டனர். உடனே போலீசார் வாகனங்களில் ஏற்றப்பட்டு இருந்தவர்களை கீழே இறக்கி விட்டனர். அப்போது இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராவிட்டால் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

category:

நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 8-ந் தேதி முதல் இயக்கம்?

Posted: 04 Feb 2014 12:09 PM PST

சேலம் ,

வருகிற 8-ந் தேதி முதல் நாகர்கோவில்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பெங்களூர் தினசரி ரெயில்

நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதுசம்பந்தமாக பாராளுமன்றத்தில் இந்திய ரெயில்வே பட்ஜெட் கூட்டத்தொடரில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பலனாக 2013-ம் ஆண்டின் ரெயில்வே பட்ஜெட்டில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டது,இதைத்தொடர்ந்து இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அன்று ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் தென்மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

8-ந்தேதி முதல்

இந்த நிலையில், வருகிற 8-ந் தேதி(சனிக்கிழமை) முதல் நாகர்கோவில்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும், அன்று மத்திய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜூன் கார்கே இந்த ரெயிலை இயக்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டமோ அல்லது பெங்களூர் ரெயில்வே கோட்டமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கவில்லை. எனவே 8-ந்தேதியும் ரெயில் விடப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான செம்மலையிடம் கேட்டபோது, 'இதுபற்றி நான் விசாரித்த வரையில், போதுமான ரெயில் பெட்டிகள், ரெயில் என்ஜின்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் இந்த புதிய ரெயில் இயக்குவது தள்ளி கொண்டே செல்கிறது. 8-ந் தேதி விடப்படுவதாக கூறுவது பற்றி உறுதியான தகவல் தனக்கு வரவில்லை' என்றார்.

category:

வடகாடு அருகே பரிதாபம்: வெளிநாடு செல்ல இருந்த வாலிபர் வேன்மோதி பலி

Posted: 04 Feb 2014 11:59 AM PST

வடகாடு அருகே வேன்– மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், வெளிநாடு செல்ல இருந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வேன்– மோட்டார் சைக்கிள் மோதல்

தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் செருவாவிடுதியில் டீக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் தமிழ்வேந்தன் (வயது 24). இவர் வேலைக்காக வெளிநாடு செல்ல கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்தார். இதை யடுத்து சமீபத்தில் அவருக்கு விசா கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2 நாட்களில் அவர் சிங்கப்பூர் செல்ல இருந் தார்.

இதனால் அவர் வெளிநாடு செல்வதை, உறவினர்களுக்கு சொல்வதற்காக சித்துக் காட்டில் இருந்து புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாட்டுக்கு நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மாங் காடு பூச்சிகடை அருகே வந்தபோது, அப்பகுதி யில் சென்ற ஒரு பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே மாங் காட்டில் இருந்து கைகாட்டிக்கு வந்த கொண்டிருந்த வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

வாலிபர் பலி

இதில் பலத்த காயமடைந்த தமிழ்வேந்தன் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு அங்கு வந்தனர். அவர்கள் தமிழ் வேந்தனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி, அப் பகுதியில் நின்றவர்களின் கண்களை கண்ணீர் குளமாக் கியது.

விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட காடு சப்–இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், தமிழ் வேந்தனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் அணவயலைச் சேர்ந்த சுப்பிர மணியன் மகன் கார்த்தி (வயது 30) யை கைது செய்த னர்.

2 நாட்களில் வெளிநாடு செல்ல இருந்த வாலிபர் வேன் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யது.

image: 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்

Posted: 04 Feb 2014 11:48 AM PST

நியூயார்க்,

பில்கேட்சை நிறுவன தலைவராக கொண்ட 78 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா நியமிக்கப்பட்டு உள்ளார். 46 வயதான இவர் ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 3&வது தலைமை செயல் அதிகாரியாக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாப்டின் 38 ஆண்டு கால வரலாற்றில், அதற்கு இந்தியர் ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்பது இதுவே முதல் தடவை ஆகும்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாதெள்ளா 1992-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன் கிளவுடு அண்டு எண்டர்பிரைசஸ் குழுமத்தின் செயல் துணைத்தலைவராக பணியாற்றினார். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட சத்ய நாதெள்ளா, தலைமை பண்பை அந்த விளையாட்டின் மூலம் கற்றுக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ள அவருக்கு பில்கேட்ஸ் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சையின் பெயரும் அடிபட்டது. இறுதியில் சத்ய நாதெள்ளா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

category:

News Group Category:

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted: 04 Feb 2014 11:38 AM PST

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகிய 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதை அடுத்து, தமிழக கவர்னரின் சிபாரிசின் பேரில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மறு சீராய்வு மனு

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள், 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது.இந்த நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

மத்திய அரசு எதிர்ப்பு

தங்கள் கருணை மனுவை நிராகரிக்கும் விஷயத்தில் மத்திய அரசு நீண்ட கால அவகாசத்தை எடுத்துக்கொண்டதால் 3 பேருடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் சிவ்கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு தரப்பில் தலைமை வக்கீல் வாகன்வதி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் 3 பேருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்

கருணை மனுவின் மீது பரிசீலனை செய்வதற்கு அதிக காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் மட்டுமே குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. இவர்களின் கருணை மனு மீதான பரிசீலனையை மேற்கொள்வதில் அதிக கால தாமதம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தூக்கு தண்டனையை குறைக்கும் அளவில் விளக்க முடியாததாகவோ, காரணங்கள் அற்றோ, தவறாகவோ ஏற்பட்ட காலதாமதம் அல்ல அது.   கடந்த 2000வது ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டு வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின்போது இந்த கருணை மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2005ம் ஆண்டு மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் கருணை மனு தொடர்பான கோப்புகள் மீண்டும் வெளியில் எடுக்கப்பட்டன. 2005ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை இந்த மனு ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்தது.

சித்ரவதை இல்லை

இருந்தாலும் இந்த கால தாமதத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்று தெரிவிக்க முடியாது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறியுள்ள படி, மிகவும் அதிகமான கால தாமதத்தின் அடிப்படையில் இவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க இந்த வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை. ஏன் என்றால், அந்த தீர்ப்பில் குறிப்பிட்டது போல இந்த வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் எவ்வித துயருக்கும் ஆளாகவில்லை.  
எந்த வகையான சித்ரவதைக்கும் அவர்கள் ஆளாகவில்லை. மனித தன்மையற்று நடத்தப்படவில்லை. சொல்லப்போனால் அவர்கள் சிறையில் இருந்தபோது படித்து பட்டம் பெற்றிருக்கிறார்கள். சிறையில் இசை, பாடல்கள், கண்காட்சி என்று பல வகையான கேளிக்கைகளுடன் நாட்களை கழித்திருக்கின்றனர். இதனை குற்றவாளிகளே தங்களுடைய கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

வருந்தவில்லை

மேலும் இந்த குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவிலும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிலும் தாங்கள் புரிந்த கொடூரமான செயல் பற்றி எவ்வகையிலும் வருந்தவில்லை. எனவே, கருணை மனுவை பரிசீலிப்பதற்கு ஏற்பட்ட கால தாமதத்தை மட்டுமே காரணமாக வைத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கூடாது.இவ்வாறு வாகன்வதி வாதிட்டார்.

நடைப்பிணம் போல்

மனுதாரர்களில் ஒருவரான முருகன் தரப்பில் வாதாடிய வக்கீல் யுகி சவுத்ரி, மத்திய அரசு வக்கீலின் வாதங்களை முழுமையாக மறுத்தார். அவர் கூறியதாவது:
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் சிறையில் தங்கள் நாட்களை எந்த வகையிலும் நிம்மதியாக கழிக்கவில்லை. 2000வது ஆண்டு கருணை மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் இருந்து தாங்கள் விடுவிக்கப்படுவோமா, இல்லையா? என்ற அச்சத்திலேயே அவர்கள் சிறையில் வாடியிருக்கிறார்கள். ஏறத்தாழ 5 ஆண்டுகள் இவர்களுடைய வாழ்க்கை நடைப்பிணம் போல கழிந்திருக்கிறது. எனவே அரசு தரப்பு வக்கீல் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியாவின் 2–வது இடத்திற்கு ஆபத்து

Posted: 04 Feb 2014 11:37 AM PST

ஆக்லாந்து,

உலக டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள இந்திய அணி நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தால் மட்டுமே அந்த இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

நாளை டெஸ்ட் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக 'நம்பர் ஒன்' இடத்தை இழந்து 2–வது இடத்திற்கும் இந்தியா தள்ளப்பட்டது. மோசமான தொடக்கம், வெளிநாட்டில் விளையாடிய போதிய அனுபவம் இன்மை ஆகியவையே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இந்திய அணிக்கு அடுத்த சவால் காத்திருக்கிறது. இந்தியா–நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மிரட்ட தயாராகும் நியூசிலாந்து

இந்திய அணியை அச்சுறுத்துவதற்காக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஆடுகளங்களை அமைப்பதே சரியாக இருக்கும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி இந்திய அணியின் பலவீனமான ஷாட்பிட்ச் யுக்தியை டெஸ்ட் தொடரிலும் கையாண்டு மிரட்டுவோம் என்றும் எச்சரித்து இருக்கிறார். இது போன்ற அவர்களின் வியூகங்களை இந்திய வீரர்கள் எப்படி உடைக்கப் போகிறார்கள் என்பதே இந்த டெஸ்டின் சுவாரஸ்யமான அம்சமாகும்.

டெஸ்ட் போட்டிக்கு புஜாரா, ஜாகீர்கான் ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். இதே போல் பயிற்சி ஆட்டத்தில் அசத்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அது இன்னும் சாதகமான விஷயமாக அமையலாம்.

பரிகாரம் தேடுவார்களா?

இந்திய அணி கடந்த முறை (2009) கேப்டன் டோனி, தெண்டுல்கர், டிராவிட், ஷேவாக், கவுதம் கம்பீர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஒரு வலுவான படையாக நியூசிலாந்துக்கு படையெடுத்து வெற்றி வாகையுடன் திரும்பி வந்தது.

ஆனால் தற்போதைய அணியில் உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் இந்திய மண்ணில் சிறப்பாக ஆடுகிறார்கள். விராட் கோலி, கேப்டன் டோனி, புஜாரா ஆகியோர் தவிர மற்றவர்கள் பார்மில் இருந்தது மாதிரி தெரியவில்லை. என்றாலும் ஒரு நாள் தொடரில் கிடைத்த அனுபவத்தின் உதவியுடன் டெஸ்டில் அதற்கு பரிகாரம் தேடிக்கொள்வார்களா? என்பதை கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

2–வது இடத்திற்கும் ஆபத்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா 133 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 117 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4–வது இடத்திலும், பாகிஸ்தான் 100 புள்ளிகளுடன் 5–வது இடத்திலும், இலங்கை 90 புள்ளிகளுடன் 6–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 87 புள்ளிகளுடன் 7–வது இடத்திலும், நியூசிலாந்து 82 புள்ளிகளுடன் 8–வது இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்தால் மட்டுமே (0–0), (1–1) இந்திய அணியால் 2–வது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்திய அணி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றினால் தரவரிசையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியா கூடுதலாக ஒரு புள்ளி பெற்று 118–வது புள்ளிகளை எட்டும்.

மாறாக தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்தால் இந்திய அணி 110 புள்ளிகளுக்கு சரிந்து 3–வது இடத்திற்கு தள்ளப்படும். 0–1 என்ற கணக்கில் தோற்றால் இந்தியாவின் புள்ளிகள் 112 ஆக குறையும். ஆனால் மயிரிழையில் 2–வது இடத்தில் நீடிக்கும். தொடரை நியூசிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் அந்த அணி தரவரிசையில் 8–வது இடத்தில் இருந்து 7–வது இடத்திற்கு முன்னேறும்.

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் புஜாரா(5–வது இடம்), விராட் கோலி (11) ஏற்றம் காணவும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.

அதிகாலை 3.30 மணிக்கு தொடக்கம்

இந்தியா–நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக்லாந்திலும் (பிப்.6–10), 2–வது டெஸ்ட் வெலிங்டனிலும் (பிப்.14–18) நடக்கிறது. இவ்விரு டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 46 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அங்கு இதுவரை 21 டெஸ்டில் பங்கேற்றுள்ள இந்திய அணி அதில் 5–ல் வெற்றியும், 7–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 9 டெஸ்ட் 'டிரா' ஆனது. 1968–ம் ஆண்டு நவாப் பட்டோடி தலைமையிலும், 2009–ம் ஆண்டில் டோனி தலைமையிலும் இந்தியா அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

நியூசிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடுகள் வருமாறு:–

ஆண்டு டெஸ்ட் முடிவு

1968 4 3–1 (இந்தியா வெற்றி)

1976 3 1–1 (டிரா)

1981 3 1–0 (நியூசிலாந்து வெற்றி)

1990 3 1–0 (நியூசிலாந்து வெற்றி)

1994 1 0–0 (டிரா)

1998 2 1–0 (நியூசிலாந்து வெற்றி)

2002 2 2–0 (நியூசிலாந்து வெற்றி)

2009 3 1–0 (இந்தியா வெற்றி)

இந்திய அணியை எதிர்க்கப்போகும் 'மண்ணின் மைந்தன்'

இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கும் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 21 வயதான ஈஷ் சோதியின் பூர்வீகம் இந்தியாவாகும். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த அவர் சில ஆண்டுகள் இந்தியாவில் வசித்தார். அதன் பிறகு அவரது பெற்றோர் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து விட்டனர். அதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் ஆடிய சோதி அங்குள்ள தேசிய அணியிலும் இடம் பிடித்துவிட்டார்.

நியூசிலாந்து அணிக்காக 5 டெஸ்டில் விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் சோதி, தனது சொந்த ஊர் அணியை எதிர்த்து முதல் முறையாக நேருக்கு நேர் மல்லுகட்டப்போகிறார்.

சிறுவயதில் கும்பிளேவை 'ஹீரோ'வாக கொண்டு வளர்ந்த சோதி, சமீபத்தில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவை சந்தித்து சுழற்பந்து வீச்சு தொடர்பாக பல்வேறு நுணுக்கங்களை கேட்டறிந்தார். இது தனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

சோதி நேற்று அளித்த பேட்டியில், 'எனது நாட்டுக்காக (நியூசிலாந்து) விளையாட வாய்ப்பு கிடைப்பது என்னை பொறுத்தவரை மிகவும் முக்கியமான விஷயமாகும். இதே போல் இந்தியாவுக்கு எதிராக ஆடப் போவதும் எனக்கு சிறப்பு வாய்ந்த இருக்கும். ஏனெனில் நானும் நீண்ட இந்திய பாரம்பரியத்தை கொண்டவன் தான். ஆனாலும் உலகின் சிறந்த வீரர்களை எதிர்த்து நான் விளையாடப்போகிறேன். பொதுவாக இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சில் அபாரமாக ஆடக்கூடியவர்கள். எனவே அவர்களுக்கு பந்து வீசுவது எனக்கு மிகப்பெரிய சவாலாகும். ஆனால் உலகின் சிறந்த அணியையும், சவாலையும் எதிர்கொள்ள விருப்பமுடன் இருக்கும் போது தான், ஒரு கிரிக்கெட் வீரராக நமது திறமை அடையாளம் காணப்படும் ' என்றார்.

category:

அரவக்குறிச்சி அருகே கார்–லாரி தீப்பிடித்து எரிந்தது 4 பேர் படுகாயம்

Posted: 04 Feb 2014 11:35 AM PST

அரவக்குறிச்சி,

கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியயர் சோதனைசாவடி அருகில் உள்ள ஒரு திருப்பத்தில் லாரி திரும்பியபோது எதிரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித்தது. உடனே அந்த காரில் பயணம் செய்த 4 பேர் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினர். காரில் பிடித்த தீ லாரியிலும் பரவி லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

image: 

category:

வங்காளதேசத்திற்கு எதிரான 2–வது டெஸ்ட்: இலங்கை வீரர் சங்கக்கரா சதம் விளாசினார்

Posted: 04 Feb 2014 11:27 AM PST

சிட்டகாங்,

வங்காளதேசத்திற்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்கரா சதம் அடித்தார்.

சங்கக்கரா சதம்

இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் காயமடைந்த ஹெராத், எரங்காவுக்கு பதிலாக அஜந்தா மென்டிஸ், நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டனர். வங்காளதேச அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால் வங்காளதேச அணியில் 4 பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றனர்.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவ்ஷல் சில்வா (11 ரன்), கருணாரத்னே (31 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மூத்த வீரர்கள் சங்கக்கராவும், மஹேலா ஜெயவர்த்தனேவும் இணைந்து, வங்காளதேசத்தின் சுழல் தாக்குதலை சமாளித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேர்த்தியாக ஆடிய சங்கக்கரா பவுண்டரி அடித்து தனது 34–வது சதத்தை பூர்த்தி செய்தார். வங்காளதேசத்திற்கு எதிராக அவரது 6–வது செஞ்சுரியாகும்.

314 ரன்கள் சேர்ப்பு

அணியின் ஸ்கோர் 227 ரன்களாக உயர்ந்த போது, ஜெயவர்த்தனே 72 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சன்டிமால் (27 ரன்), கேப்டன் மேத்யூஸ் (5 ரன்) இருவரும் கடைசி கட்டத்தில் கேட்ச் ஆனார்கள்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 92 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. சங்கக்கரா 160 ரன்களுடனும் (245 பந்து, 19 பவுண்டரி, 3 சிக்சர்), விதநாகே ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார், சங்கக்கரா

இலங்கை வீரர் 36 வயதான சங்கக்கராவுக்கு இது 34–வது சதமாகும். இதன் மூலம் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் சுனில் கவாஸ்கர், பிரையன் லாரா ஆகியோரின் சாதனையை சங்கக்ககரா சமன் செய்தார். அதிக சதங்கள் அடித்த டாப்–10 வீரர்கள் விவரம் வருமாறு:–

வீரர் நாடு சதம் டெஸ்ட்

தெண்டுல்கர் இந்தியா 51 200

காலிஸ் தென்ஆப்பிரிக்கா 45 166

பாண்டிங் ஆஸ்திரேலியா 41 168

டிராவிட் இந்தியா 36 164

சங்கக்கரா இலங்கை 34 122

கவாஸ்கர் இந்தியா 34 125

லாரா வெஸ்ட் இண்டீஸ் 34 131

ஜெயவர்த்தனே இலங்கை 33 143

ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலியா 32 168

ஹைடன் ஆஸ்திரேலியா 30 103

category:

வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய அரியலூர் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது

Posted: 04 Feb 2014 11:24 AM PST

அரியலூர்,

வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய அரியலூர் நகராட்சி ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெயர் மாற்ற மனு

அரியலூர் புது மார்க்கெட் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவர் தான் கட்டிய புது வீட்டிற்கு உரிய வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றி புதிய ரசீது போடுவதற்காக அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு செய்து இருந்தார். இதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு பல முறை அலைந்த அவர் வரி வசூல் ஊழியர் வீரமணியிடம்(வயது 30) ரசீது பெயர் மாற்றம் குறித்து கேட்டார்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

அதற்கு வீரமணி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பெயரை மாற்றி தருவதாக மணிகண்டனிடம் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அரியலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மணிகண்டனிடம் கொடுத்து அதை வீரமணியிடம் லஞ்ச பணமாக கொடுக்கும்படி கூறினார்.

2 ஊழியர்கள் கைது

போலீசாரின் அறிவுரை படி மணிகண்டன் நேற்று ரூ.2 ஆயிரத்தை வீரமணியிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய வீரமணி அந்த பணத்தை கண்ணன்(31) என்ற மற்றொரு வரி வசூல் ஊழியரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வரி வசூல் ஊழியர்கள் வீரமணி, கண்ணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பத்மநாபன் வழக்கை விசாரித்து அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலஞ்சர் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ், யுகி பாம்ப்ரி வெற்றி

Posted: 04 Feb 2014 11:23 AM PST

சென்னை,

சென்னையில் நடந்து வரும் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் சோம்தேவ், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.

சோம்தேவ் முன்னேற்றம்

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் ஸ்ரீராம் கேபிட்டல் லிமிடெட் ஆதரவுடன் ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த மோதலில் சோம்தேவ் 7–5, 5–4 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது, தசைப்பிடிப்பு காரணமாக ராம்குமார் விலக நேரிட்டது. இதையடுத்து சோம்தேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் சென்னை ஓபன் டென்னிசில் முதல் சுற்றில் சோம்தேவை ராம்குமார் வீழ்த்தி இருந்தார். அதற்கு இப்போது சோம்தேவ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தகுதி சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு வந்த இந்தியாவின் சனம்சிங் 6–4, 7–5 என்ற நேர் செட்டில் பிரான்சின் டேவிட் கஸ்சை வெளியேற்றி 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்ரீராம் பாலாஜிக்கு இரட்டை வெற்றி

யுகி பாம்ப்ரியும் (இந்தியா) வெற்றியுடன் தொடங்கியுள்ளார். அவர் தன்னை எதிர்த்த சீனத்தைபேயின் லியான்–சி ஹூயாங்கை 6–2, 6–4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். மற்ற இந்திய வீரர்கள் சகெத் மைனெனி 6–4, 6–2 என்ற நேர் செட்டில் முகமது சாப்வாத்தையும் (எகிப்து), என்.ஸ்ரீராம்பாலாஜி 6–3, 6–3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் குனேஸ்வரனையும் தோற்கடித்தனர்.

அதே சமயம் தமிழகத்தை சேர்ந்த 'வைல்டு சலுகை' பெற்றிருந்த ஜீவன் நெடுஞ்செழியன் போராடி வீழ்ந்தார். அவரை நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் 7–6 (3), 6–7(1), 6–1 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஒற்றையரில் வெற்றி கண்ட என். ஸ்ரீராம்பாலாஜி இரட்டையரிலும் கலக்கினார். அவரும் சுலோவேனியாவின் பிளாஸ் ரோலாவும் கைகோர்த்து, போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் இரட்டை சகோதரர்களான சஞ்சய் ரதிவதனா– சோஞ்சாத் ரதிவதனா (தாய்லாந்து) இணைக்கு 5–7, 7–5, 10–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™