Daily Thanthi |
- திண்டுக்கல்லில் மாசித்திருவிழா: கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வீதிஉலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது
- ஒன்றல்ல.... 5 முறை நழுவல்...
- கோலி, அஸ்வின் சாதனை
- ‘தோல்விக்கு பனிப்பொழிவே காரணம் : இந்திய கேப்டன் விராட் கோலி
- தென் ஆப்பிரிக்கா உள்பட 3 நாடுகள் விருப்பம்: பாராளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகே ஐ.பி.எல். போட்டி இடம் முடிவு என்.சீனிவாசன் தகவல்
- பிறந்தநாள் கொண்டாட்டம் 22 பேருக்கு மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார்
- அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் எவ்வளவு? – செயலாளர் கணிப்பு
- வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
- மாணவியை பாலியல் தொந்தரவு செய்த அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர் கைது
| Posted: 28 Feb 2014 02:12 PM PST திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் நேற்று அம்மனின் பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நடந்த பூத்தேர் வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூத்தேர் வீதிஉலா திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் அம்மனின் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நேற்று திண்டுக்கல் அய்யப்பன் பூச்சொரிதல் கமிட்டி சார்பில் 42-வது வருட பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு கோவில் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் உதிரி பூக்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சன்னதியை சுற்றி வலம் வந்து கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூத்தேரில் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. அதன்பின்னர் பூத்தேரின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தண்டுகளின் மேல் சூடம் ஏற்றி அதை வெட்டிய பின் தாரை, தப்பட்டைகள் முழங்க கோட்டை மாரியம்மனின் பூத்தேர் வீதி உலா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் முழுவதும் பூக்கள் ஒட்டப்பட்டு, விநாயகர், முருகன், அய்யப்பன் சாமி சிலைகளுடன் நடுநாயகமாக கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று பூத்தேர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்தேர் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இந்த கண்கொள்ளா காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி அம்மனை தரிசித்தனர். இதுதவிர திண்டுக்கல் காய்கனி, காய்கறி, அரிசி, பலசரக்கு வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ, கார், லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட ஏராளமான அமைப்பினர் ஆங்காங்கே வழியெங்கிலும் மையங்கள் அமைத்து உதிரி பூக்களை காணிக்கையாக செலுத்தினர். அம்மனின் பூத்தேர் வீதிஉலாவினை காண திண்டுக்கல் மட்டுமில்லாது திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனின் பூத்தேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை அதனைதொடர்ந்து திண்டுக்கல் நகர வீதிகளில் வலம் வந்த அம்மனின் பூத்தேர் பகல் 2 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறை மற்றும் மூலஸ்தானத்தில் கொட்டப்பட்டு மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். முன்னதாக, அம்மனின் பூத்தேர் ஊர்வலத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வி.மருதராஜ், மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அய்யப்பன் பூச்சொரிதல் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். image: category:Tagging: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது Posted: 28 Feb 2014 01:12 PM PST பாதுல்லா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி சங்கக்கராவின் சதத்தின் துணையுடன் கடைசி ஓவரில் இந்தியாவை தோற்கடித்து 'திரில்' வெற்றியை பதிவு செய்தது. ஆசிய கிரிக்கெட் 12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச மண்ணில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். போட்டியின் 4–வது நாளான நேற்று பாதுல்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதின. இந்திய அணியில் வருண் ஆரோனுக்கு பதிலாக ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியும், இலங்கை அணியில் லக்மலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிசும் இடம் பெற்றனர். ரோகித் 13 ரன் டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வழக்கம் போல் பந்துகளை விரயம் செய்த ரோகித் ஷர்மா (13 ரன், 28 பந்து) 10–வது ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பின்னர் ஷிகர் தவானுடன் முந்தைய ஆட்டத்தின் நாயகன் கேப்டன் விராட் கோலி கைகோர்த்து ரன்ரேட் விகிதத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். ஆடுகளம் வேகமின்றி காணப்பட்டதால் (ஸ்லோ), பந்து எழும்பி வருவதை பார்ப்பதே அதிசயமாக இருந்தது. இதனால் தாழ்ந்து வரும் சுழற்பந்து வீச்சை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தவானின் சதம் நழுவியது அணியின் ஸ்கோர் 130 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி (48 ரன், 51 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிசின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். கோலி வெளியேறியதும் இந்தியாவின் ரன்வேகம் தளர ஆரம்பித்தது. கேரம்பந்து யுக்தியை கையாளும் மென்டிசும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தனர். சதத்தை நெருங்கிய ஷிகர் தவான் 6 ரன்னில் 6–வது சதத்தை நழுவ விட்டார். அவர் 94 ரன்களில் (114 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), மென்டிஸ் வீசிய கால் முட்டிக்கும் கீழாக வந்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் நிதானத்தை இழந்து அவசரகதியில் விக்கெட்டை தாரை வார்த்ததால், 35 ஓவரில் 175–2 என்ற நிலைமையில் இருந்த இந்திய அணியின் ஸ்கோர் திடீரென 7–215 (43.3 ஓவர்) என்று தடம் புரண்டது. இந்தியா 264 ரன் நல்லவேளையாக இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா (22 ரன்), அஸ்வின் (18 ரன்), முகமது ஷமி (14 ரன்) ஆகியோரின் பங்களிப்பு இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவியது. இதில் மென்டிசின் 49–வது ஓவரில் முகமது ஷமி 2 இமாலய சிக்சரை பறக்கவிட்டு எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் சேர்த்தது. பெரேரா அரைசதம் பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குசல் பெரேராவும், திரிமன்னேவும் இலங்கை அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இந்தியாவின் பீல்டிங் சொதப்பல் அவர்களுக்கு ரொம்ப வசதியாக போய் விட்டது. குசல் பெரேரா அரைசதத்தை எடுப்பதற்குள் இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து மறுவாழ்வு பெற்றார். ஒரு வழியாக இந்த ஜோடியை 80 ரன்களாக உயர்ந்த போது, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். திரிமன்னே 38 ரன்னிலும், குசல் பெரேரா 64 ரன்னிலும் (81 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். சங்கக்கராவின் போராட்டம் இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் சங்கக்கரா ஒரு பக்கம் மலைபோல் நிற்க, மறுபக்கம் இலங்கையின் விக்கெட்டுகள் கிடுகிடுவென சரிந்தன. சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் அவர்களின் ரன்வேட்டையை வெகுவாக கட்டுப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 216 ரன்னுக்குள் 7 விக்கெட் (43.1 ஓவர்) விழுந்த போது இந்தியாவின் கை ஓங்குவது போன்று தெரிந்தது. போட்டியிலும் பரபரப்பான சூழல் தொற்றிக் கொண்டது. ஆனால் 36 வயதான சங்கக்கராவின் ஸ்திரமான பேட்டிங், ஆட்டத்தை மறுபடியும் இலங்கை பக்கம் திருப்பியது. தனிவீரராக நின்று போராடிய சங்கக்கரா தங்கள் அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்ததுடன், 49–வது ஓவரில் பவுண்டரி விளாசி தனது 18–வது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த பந்தில் அவர் 103 ரன்களில் (84 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட போது, 2–வது பந்தில் அதை எடுத்து விட்டனர். இலங்கை வெற்றி இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் திரட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்களின் பீல்டிங் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏதோ கையில் எண்ணெயை தடவி விட்டு வந்தது போன்று தான் நமது வீரர்களின் பீல்டிங் இருந்தது. அதிலும் ஷிகர் தவான் எப்படி பீல்டிங் செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டார் போலும். இலங்கை அணிக்கு இது 2–வது வெற்றியாகும். ஏற்கனவே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் இலங்கையின் இறுதிவாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம். அடுத்து பாகிஸ்தானுடன்... 2–வது லீக்கில் ஆடிய இந்தியாவுக்கு இது முதல் தோல்வியாகும். இறுதி போட்டி வாய்ப்பில் நீடிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். ஸ்கோர் போர்டு இந்தியா ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்யூ (பி) செனநாயக்கே 13 தவான் (பி) மென்டிஸ் 94 கோலி(பி) மென்டிஸ் 48 ரஹானே (சி) திரிமன்னே (பி) செனநாயக்கே 22 அம்பத்தி ராயுடு (சி) பெரேரா (பி) டி சில்வா 18 தினேஷ் கார்த்திக் (சி) டி சில்வா (பி) மென்டிஸ் 4 ஜடேஜா (நாட்–அவுட்) 22 ஸ்டூவர்ட் பின்னி எல்.பி.டபிள்யூ (பி) செனநாயக்கே 0 அஸ்வின் (பி) மலிங்கா 18 புவனேஸ்வர்குமார் (ஸ்டம்பிங்) சங்கக்கரா (பி) மென்டிஸ் 0 முகமது ஷமி (நாட்–அவுட்) 14 எக்ஸ்டிரா 11 மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு) 264 விக்கெட் வீழ்ச்சி: 1–33, 2–130, 3–175, 4–196,5–200,6–214,7–215,8–245,9–247 பந்து வீச்சு விவரம் மலிங்கா 10–0–58–1 மேத்யூஸ் 3.2–1–9–0 செனநாயக்கே 10–0–41–3 திசரா பெரேரா 6.4–0–40–0 அஜந்தா மென்டிஸ் 10–0–60–4 சதுரங்க டி சில்வா 10–0–51–1 இலங்கை குசல் பெரேரா (சி) கார்த்திக் (பி) அஸ்வின் 64 திரிமன்னே எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 38 சங்கக்கரா (சி) அஸ்வின் (பி) ஷமி 103 ஜெயவர்த்தனே (சி) ரோகித் (பி) ஜடேஜா 9 சன்டிமால் (பி) ஜடேஜா 0 மேத்யூஸ் எல்.பி.டபிள்யூ (பி) ஷமி 6 செனநாயக்கே (சி) ரோகித் (பி) ஷமி 12 டி சில்வா எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 9 திசராபெரேரா(நாட்–அவுட்) 11 மென்டிஸ் (நாட்–அவுட்) 5 எக்ஸ்டிரா 8 மொத்தம் (49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 265 விக்கெட் வீழ்ச்சி: 1–80,2–134, 3–148, 4–148, 5–165, 6–183, 7–216, 8–258 பந்து வீச்சு விவரம் புவனேஸ்வர்குமார் 9.2–1–45–0 முகமது ஷமி 10–0–81–3 அஸ்வின் 10–0–42–2 ஸ்டூவர்ட் பின்னி 4–0–22–0 ஜடேஜா 10–1–30–3 அம்பத்தி ராயுடு 1–0–9–0 ரோகித் ஷர்மா 5–0–29–0 image: category: |
| Posted: 28 Feb 2014 01:10 PM PST இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கே காரணம் என்பதே நிதர்சனமான உண்மை. * இலங்கை தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 7 ரன்னில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை, ரஹானே, ஷிகர் தவான் இருவரும் பிடிக்க முயற்சித்து முட்டி மோதி கோட்டை விட்டனர். ஒருவர் மட்டுமே ஓடி வந்திருந்தால் கேட்ச் செய்திருக்கலாம். *திரிமன்னே 5 ரன்னில் இருந்த போது, வலுவாக அடித்த பந்தை அந்தரத்தில் பாய்ந்து ஜடேஜா பிடிக்க முயற்சித்தார். அது தவறியது. * 38 ரன்னில் இருந்த போது குசல் பெரேராவுக்கு, மறுபடியும் ஜடேஜாவின் உருவத்தில் கருணை கிடைத்தது. ஜடேஜாவின் கையில் பந்து சரியாக விழுந்த போதிலும், கண்ணிமைக்கும் நேரத்தில் நழுவிப் போனது. * சங்கக்கரா வழங்கிய வாய்ப்பை வீணடித்ததன் விளைவு தான் இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்தது. அவர் 30 ரன்னில் ஆடிக் கொண்டிருந்த போது, ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆகியிருக்க வேண்டியது. அவர் கிரீசை விட்டு வெளியே நின்ற போது பந்தை சேகரித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உடனடியாக ஸ்டம்பை தாக்க முயற்சித்த போது கை ஸ்டம்பில் படவில்லை. பிறகு 2–வது முயற்சியில் அடிப்பதற்குள் சங்கக்கரா கிரீசுக்குள் வந்து தப்பி விட்டார். * இலங்கை அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது கூட கடைசி ஓவரின் முதல் பந்தில் திசரா பெரேரா வழங்கிய எளிதான கேட்ச்சை மிட்–ஆப் திசையில் நின்ற ஷிகர் தவான் வீணடித்தார். image: category: |
| Posted: 28 Feb 2014 01:07 PM PST * இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலி 19 ரன்களை தொட்ட போது, இன்னொரு புதிய சாதனை அவரது வசம் ஆனது. அதாவது 132 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 125 இன்னிங்சில் களம் இறங்கியுள்ள விராட் கோலி இதுவரை 5629 ரன்கள் குவித்துள்ளார். 125 இன்னிங்சில் ஒருவர் குவித்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது 125–வது இன்னிங்சில் 5600 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. * இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் நேற்று 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 100 ஆக (77 ஆட்டம்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 17–வது இந்தியர் அஸ்வின் ஆவார். image: category: |
| ‘தோல்விக்கு பனிப்பொழிவே காரணம் : இந்திய கேப்டன் விராட் கோலி Posted: 28 Feb 2014 01:05 PM PST இரவில் பனிப்பொழிவால் பந்தை சரியாக பிடித்து (கிரிப்) வீச முடியவில்லை, அது பேட்ஸ்மேன்களுக்கு சுலபமாகி விட்டது என்பதே இந்திய கேப்டன் விராட் கோலி, தோல்விக்கு கூறும் காரணம். அவர் கூறுகையில், 'எங்களது பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். ஆனால் இறுதி கட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு பனிபெய்யும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் முந்தைய நாள் பனியின் தாக்கம் அதிகமாக இல்லை. மொத்தத்தில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்ற பெருமை பந்து வீச்சாளர்களையே சாரும். நாங்கள் 30 முதல் 40 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஜடேஜாவின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நேர்த்தியாக விளையாட வேண்டியது அவசியம்' என்றார். ஆட்டநாயகன் விருது பெற்ற சங்கக்கரா கூறுகையில், 'பனிப்பொழிவு, எனது பேட்டிங் வேலையை எளிதாக்கி விட்டது. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி விளையாடினேன். உடல்தகுதியை தக்க வைத்துக் கொள்ள கடினமான உழைத்து வருகிறேன்' என்றார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 28 Feb 2014 01:04 PM PST புவனேஸ்வர் தென் ஆப்பிரிக்கா உள்பட 3 நாடுகள் ஐ.பி.எல். போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு... இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்தது. தேர்தல் நடைபெறும் காலத்தில் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து விட்டதால், 7–வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்தலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் அளித்த பேட்டியில், 'பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தேவைப்பட்டால் போட்டியின் ஒரு பகுதி ஆட்டங்கள் வெளிநாட்டில் நடத்தப்படலாம். தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இருக்கின்றன. ஐ.பி.எல். போட்டிகள் வெளிப்படையாக நடைபெற எல்லாவிதமான நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும்' என்று தெரிவித்தார். இரண்டு விதமான திட்டம் ஐ.பி.எல். சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில், 'கிரிக்கெட் சூதாட்டத்தை தடுப்பது எப்படி என்பது குறித்து வீரர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் நாங்கள் விரிவாக தெரிவித்து இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டிகள் வெளிப்படையாக நடைபெற அவசியமாக தவிர்க்க வேண்டிய சில நபர்கள் யார் என்பதை நாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டு இருக்கிறோம். ஊழல் தடுப்பு பிரிவினர் வீரர்களுடன் இருந்து சூதாட்ட தடுப்பு பணிகளை கவனிப்பார்கள்' என்றார். 7–வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 9–ந் தேதி முதல் ஜூன் 3–ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அணியின் உரிமையாளர்கள், ஸ்பான்சர்களுக்கான பாதிப்பை தவிர்க்கும் வகையில் பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் நடத்தவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு போட்டி முழுமையாக மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இல்லையெனில் தொடக்க சுற்று ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது வங்காளதேசத்தில் நடத்தி விட்டு கடைசி கட்ட போட்டியை (தேர்தல் பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் மே 15–ந் தேதிக்கு பிறகு) இந்தியாவில் நடத்தலாம் என்ற மாற்று திட்டமும் பரிசீலனையில் உள்ளது. category: |
| பிறந்தநாள் கொண்டாட்டம் 22 பேருக்கு மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார் Posted: 28 Feb 2014 01:00 PM PST சென்னை, மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகள் உள்பட 22 பேருக்கு மடிக்கணினி வழங்கினார். மடிக்கணினி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முகநூல் (பேஸ்புக்) மூலம் சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்த 7 மாணவ-மாணவிகள் உள்பட 22 பேருக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வக்கீல் கவி ஆகியோர் கலந்து கொண்டனர். தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு இன்று காலை 8 மணி முதல் தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்கிறார். தி.மு.க. இலக்கிய அணி தலைவர் வேழவேந்தன், செயலாளர்கள் கவிதைபித்தன், தஞ்சை கூத்தரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பிராட்வேயில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறந்த இளைஞர்களுக்கு விருது வழங்குதல், கருத்தரங்கம் நாளை நடக்க உள்ளது. கருத்தரங்கம் இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.பி.சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தி.மு.க. தலைமை இளைஞர் அணி துணைச்செயலாளர் செந்தில்குமாருக்கு சிறந்த இளைஞர் எனும் விருது வழங்கப்படுகிறது. கா.வேழவேந்தன் வாழ்த்துரை வழங்குகிறார். அதனை தொடர்ந்து நடக்கும் கருத்தரங்கிற்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மகளிரணி புரவலருமான இந்திராகுமாரி தொடக்க உரையாற்றுகிறார். தஞ்சை கூத்தரசன் தலைமை தாங்குகிறார். தலைவர் கலைஞர் வழியில் தளபதி என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:Tagging: |
| அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் எவ்வளவு? – செயலாளர் கணிப்பு Posted: 28 Feb 2014 01:00 PM PST பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பட்டேல் புவனேஸ்வரில் அளித்த ஒரு பேட்டியில், 'அடுத்த 8 ஆண்டுகளில் (2015 முதல் 2023) இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் ஏறக்குறைய ரூ.3,716 கோடியாக இருக்கும் என்பது எனது கணிப்பாகும். கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி)வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் வாரியங்களில் ஒன்றாக இந்தியா விளங்கி வருகிறது. ஐ.சி.சி.வருவாயில் 68 சதவீத பங்களிப்பை அளிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதனிடம் இருந்து இதுவரை 4 சதவீதம் பெற்று வந்தது. இனிமேல் 21 சதவீதத்தை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் 2015 முதல் 2023–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,700 கோடி முதல் ரூ.1,857 கோடி வருவாய் கிட்டும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார். image: category: |
| வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல் Posted: 28 Feb 2014 12:58 PM PST ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1.30 மணி) மோதுகின்றன. image: category: |
| மாணவியை பாலியல் தொந்தரவு செய்த அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர் கைது Posted: 28 Feb 2014 12:52 PM PST சேலம், மருத்துவ மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:- அரசு டாக்டர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் குழந்தைகள் நல இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் செந்தில்குமார் (வயது 46). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் ஆகும். தற்போது இவர் தலைவாசலில் வசித்து வருகிறார். டாக்டர் செந்தில்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல மருத்துவராகவும் உள்ளார். சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த ஒரு மாணவி கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்தார். அப்போது, கல்லூரியில் பணிபுரிந்த இணைப்பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு, அந்த மாணவி மீது டாக்டருக்கு ஆசை ஏற்பட்டு ஒருதலைபட்சமாக அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், டாக்டரின் காதலை அந்த மாணவி ஏற்கவில்லை. பாலியல் தொந்தரவு இது ஒருபுறம் இருக்க, அந்த மாணவியின் பழக்கத்தை பயன்படுத்தி அவரது செல்போனுக்கு டாக்டர் செந்தில்குமார் அடிக்கடி போன் செய்து பேசி வந்ததாகவும், மேலும், எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச வார்த்தைகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த அந்த மாணவி, தற்போது கேரளாவிற்கு சென்று அங்கு மகப்பேறு மருத்துவம் படித்து வருகிறார். இருப்பினும், கேரளாவிற்கு சென்றபிறகும், டாக்டர் செந்தில்குமார் அந்த மாணவிக்கு செல்போனிலும், பேஸ்புக்கிலும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் கைது இதையடுத்து டாக்டரின் பாலியல் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாத அந்த மாணவி நேற்று சேலம் வந்து, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து டாக்டர் செந்தில்குமார் மீது புகார் மனு அளித்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சேலம் டவுன் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் செந்தில்குமார், அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று அவர் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவ மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |