Daily Thanthi |
- எண்ணூரில் ரூ.5 ஆயிரம் கோடியில் அனல் மின்சார திட்டம் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
- நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள நேசமணி மணிமண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வென்றது பாகிஸ்தான் உமர் அக்மல் சதம் அடித்தார்
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி தொடருமா? இலங்கையுடன் இன்று மோதல்
- ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது? இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் இன்று ஆலோசனை
- சந்தோஷ் கோப்பை கால்பந்து: தமிழக அணிக்கு முதல் வெற்றி
- வார்னருக்கு அபராதம்
- சூதாட்டத்தில் சிக்கிய நியூசிலாந்து வீரர்
- ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 5–வது இடம்
- 95 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் நாளை தொடக்கம்
| எண்ணூரில் ரூ.5 ஆயிரம் கோடியில் அனல் மின்சார திட்டம் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் Posted: 27 Feb 2014 12:56 PM PST சென்னை, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் மாநிலத்தில் முதன்முறையாக ரூ.4 ஆயிரத்து 956 கோடி மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டப்பணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆக்கப்பூர்வ நடவடிக்கை இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– மின்சார பற்றாக்குறையை அறவே அகற்றி, மின் வினியோகத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழவும், தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் 29–ந்தேதியன்று சட்டசபையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்க திட்டம் என்னும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த அனல் மின் திட்டம் சூப்பர் கிரிட்டிக்கல் என்ற தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும் என்றும், இதன் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியை பெற இயலும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். சர்வதேச ஒப்பந்தம் அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் ரூ.4 ஆயிரத்து 956 கோடி மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டப்பணிக்கு தமிழக அரசின் அனுமதி கடந்த ஆண்டு மார்ச் 30–ந்தேதியன்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு பிற அனுமதிகளும் பெறப்பட்ட பின் இந்த திட்டத்தை நிறுவுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் அரியானா மாநிலம், குர்கானில் அமைந்துள்ள லான்கோ இன்ப்ராடெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. முதல் திட்டம் இது இந்த அனல்மின் திட்டமானது, தமிழ்நாட்டில் நிறுவப்படும் முதல் மிக உய்ய அனல் மின் திட்டமாகும். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் மாநிலத்தில் முதன்முறையாக 4 ஆயிரத்து 956 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல்மின் திட்டப்பணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா 27–ந்தேதி (நேற்று) அடிக்கல் நாட்டினார். மேலும், இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகிய அனல்மின் நிலையத்தை 3 ஆயிரத்து 961 கோடி ரூபாய் செலவில் நிறுவுவதற்கான பணி ஆணையை, லான்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல்.மதுசூதன்ராவிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அமைச்சர், அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கு.ஞானதேசிகன், லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி.மனோச்சா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள நேசமணி மணிமண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார் Posted: 27 Feb 2014 12:55 PM PST சென்னை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். குமரித் தந்தை இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியை தாய்த்தமிழகத்துடன் தக்க வைத்துக்கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தி தியாகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் பெருமை பெற்றவர் ஆவார். எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகள் மார்ஷல் நேசமணி, நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிகள் வகித்து மக்களுக்கு தொண்டு செய்தவர் ஆவார். மார்ஷல் நேசமணியின் அரும்பணியை நினைவு கூர்ந்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1–ந் தேதியன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். மணிமண்டபம் மார்ஷல் நேசமணியின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன், ரூ.48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக 27–ந் தேதி (நேற்று) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மூ.ராசாராம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வென்றது பாகிஸ்தான் உமர் அக்மல் சதம் அடித்தார் Posted: 27 Feb 2014 12:14 PM PST பாதுல்லா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கிரிக்கெட் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், பாதுல்லா மைதானத்தில் நேற்று நடந்த 3–வது லீக்கில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிலாவல் பாத்திக்கு பதிலாக அன்வர் அலி சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பாகிஸ்தானை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், குட்டி அணியான ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சில் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர். ஆடுகளமும் (பிட்ச்) பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கவில்லை. மந்தமான இந்த ஆடுகளத்தில் பந்து அதிக உயரத்திற்கு எழும்பவில்லை. இதனால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஷர்ஜீல் கான் 5 ரன்னில் ஆட்டம் இழந்திருக்க வேண்டியது. அவரது கையுறையில் உரசிக் கொண்டு விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்திடம் கேட்ச்சாக விழுந்த பந்தை நடுவர் கவனிக்கவில்லை. இந்த அதிர்ஷ்டத்துடன் தொடர்ந்து ஆடிய அவர் 25 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் (50 ரன், 74 பந்து, 7 பவுண்டரி) அரைசதம் எடுத்த திருப்தியுடன் வெளியேறினார். தடுமாறிய பாகிஸ்தான் ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக தள்ளாட வைத்து விட்டனர். இதில், தூண் போன்று நிலைகொண்டு ஆடக்கூடிய கேப்டன் மிஸ்பா உல்–ஹக்கின் நிலைமை தான் பரிதாபம். சகவீரர் சோகயப் மக்சூத் பந்தை அருகில் அடித்த போது, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு மிஸ்பா உல்–ஹக் ஓடினார். ஆனால் சில அடி தூரம் ஓடிய மக்சூத் பிறகு வேண்டாம் என்று கூறிக் கொண்டு அவரும் திரும்பினர். இதனால் இருவரும் ஒரே முனையில் நிற்க மிஸ்பா உல்–ஹக் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன்–அவுட் ஆனார். முகமது ஹபீஸ் (10) ரன்), மக்சூத் (13 ரன்), அப்ரிடி (6 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடும் 3–வது ஒரு நாள் போட்டி இதுவாகும். போதிய அனுபவம் இல்லாத நிலையிலும் கூட ஆப்கானிஸ்தானின் செயல்பாடு, உண்மையிலேயே புருவத்தை உயர வைத்தது. அக்மல் சதம் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 117 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (29.3 ஓவர்) இழந்து பெரும் தவிப்புக்குள்ளானது. இந்த இக்கட்டான சூழலில் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் பாகிஸ்தானுக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் 28 ரன்னில் அளித்த எளிதான கேட்ச் வாய்ப்பை, 'பாயிண்ட்' திசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ஷென்வாரி நழுவ விட்டார். இந்த கேட்ச்சை மட்டும் அவர் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இதன் பிறகு அன்வர் அலியுடன் (21 ரன்) இணைந்து 7–வது விக்கெட்டுக்கு 60 ரன்களும், உமர் குல்லுடன் (15 ரன்) சேர்ந்து 8–வது விக்கெட்டுக்கு 40 ரன்களும் எடுத்து உமர் அக்மல் அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். அது மட்டுமின்றி கடைசி 5 ஓவர்களில் பேட்டை மின்னல் வேகத்தில் சுழட்டிய உமர்அக்மல் 50–வது ஓவரின் 5–வது பந்து சிக்சருக்கு தூக்கி தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் சேர்த்தது. 23 வயதான உமர் அக்மல் 102 ரன்களுடன் (89 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் 59 ரன்கள் சேகரித்தது. ஆப்கானிஸ்தான் தோல்வி அடுத்து 249 ரன்கள் இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் ஆடியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை ஓரளவு சமாளித்து ரன்கள் எடுத்தனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்ததும் அவர்களின் வேகம் முடங்கியது. சுழல்வாதிகள் சயீத் அஜ்மல், அப்ரிடி, முகமது ஹபீஸ் ஆகியோர் எதிரணியின் ரன்ரேட்டை வெகுவாக குறைத்தனர். இதனால் நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து நடையை கட்டினர். 47.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நூர் அலி ஜட்ரன் 44 ரன்கள் (63 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றிருந்த பாகிஸ்தானுக்கு இது முதல் வெற்றியாகும். ஆட்டநாயகனாக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டார். சதத்தை தனது மனைவிக்கு சமர்பிப்பதாக தெரிவித்த உமர் அக்மல், 'இறுதி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். அது தான் நடந்துள்ளது. எனது சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று' என்றார். ஸ்கோர் போர்டு பாகிஸ்தான் ஷர்ஜீல் கான் (சி) நூர் அலி (பி) ஹம்ஜா 25 அகமது ஷேசாத் (பி) ஷென்வாரி 50 ஹபீஸ் (சி) முகமது நபி (பி) அஷ்ராப் 10 மக்சூத் (சி) ஸ்டானிக்ஜாய் (பி) ஷென்வாரி 13 மிஸ்பா உல்–ஹக் (ரன்–அவுட்) 0 உமர் அக்மல் (நாட்–அவுட்) 102 அப்ரிடி (பி) தவ்லத் ஜட்ரன் 6 அன்வர் அலி (சி) நவ்ரோஸ் (பி) அஷ்ராப் 21 உமர்குல் (பி) தவ்லத் ஜட்ரன் 15 சயீத் அஜ்மல் (நாட்–அவுட்) 1 எக்ஸ்டிரா 5 மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 248 விக்கெட் வீழ்ச்சி: 1–55, 2–78, 3–89, 4–89, 5–108, 6–117, 7–177, 8–217 பந்து வீச்சு விவரம் ஷாபூர் ஜட்ரன் 9–1–42–0 தவ்லத் ஜட்ரன் 10–0–73–2 முகமது நபி 8–0–46–0 ஹம்ஜா ஹாட்டக் 8–1–22–1 மிர்வாய்ஸ் அஷ்ராப் 8–1–29–2 ஷென்வாரி 7–0–34–2 ஆப்கானிஸ்தான் ஷாசாத் (சி) அக்மல் (பி) குல் 9 நூர் அலி எல்.பி.டபிள்யூ (பி) அஜ்மல் 44 ஸ்டானிக்ஜாய் (சி) ஹபீஸ் (பி) அப்ரிடி 40 நவ்ரோஸ் மங்கல் (ரன்–அவுட்) 35 முகமது நபி எல்.பி.டபிள்யூ (பி) குல் 15 நஜ்புல்லா ஜட்ரன் (பி) ஹபீஸ் 1 ஷென்வாரி (பி) ஹபீஸ் 14 மிர்வாய்ஸ் அஷ்ராப் (ரன்–அவுட்) 4 தவ்லத் ஜட்ரன் (பி) அஜ்மல் 0 ஷாபூர் ஜட்ரன் (சி) அஜ்மல் (பி) ஹபீஸ் 1 ஹம்ஜா ஹாட்டக் (நாட்–அவுட்) 0 எக்ஸ்டிரா 13 மொத்தம் (47.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 176 விக்கெட் வீழ்ச்சி: 1–32, 2–65, 3–139, 4–140, 5–151, 6–159, 7–172, 8–172, 9–175 பந்து வீச்சு விவரம் உமர்குல் 9–0–44–2 அன்வர் அலி 4–0–23–0 ஜூனைட் கான் 6–1–16–0 அப்ரிடி 10–0–31–1 அஜ்மல் 9–1–25–2 முகமது ஹபீஸ் 9.2–0–29–3 image: category: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி தொடருமா? இலங்கையுடன் இன்று மோதல் Posted: 27 Feb 2014 12:12 PM PST பாதுல்லா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆசிய கிரிக்கெட் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ள 12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். போட்டியின் 4–வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பாதுல்லா ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தங்களது தொடக்க ஆட்டங்களில் வென்று இருந்தன. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு இறுதிசுற்று வாய்ப்பு பிரகாசமாகி விடும். கோலியின் ராஜ்ஜியம் தொடருமா? வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் சொதப்பிய நிலையில், கேப்டன் விராட் கோலியின் அபாரமான சதமும், ரஹானேவின் அரைசதமும் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது. கோலி தான் இந்திய அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். அது மட்டுமின்றி, வங்காளதேச மண்ணில் அவரது ஆட்டம் வியப்பை அளிக்கிறது. இங்கு இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 சதம் உள்பட 868 ரன்கள் குவித்துள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு உண்மையான சோதனை இன்று தான் ஆரம்பிக்கிறது. பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இலங்கை அணி சரியான கலவையில் உள்ளது. சங்கக்கரா, ஜெயவர்த்தனே, கேப்டன் மேத்யூஸ், திரிமன்னே, குசல் பெரேரா உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், 'யார்க்கர்' மன்னன் மலிங்கா, லக்மல், செனநாயக்கே, திசரா பெரேரா ஆகியோர் பந்து வீச்சிலும் அசத்தக்கூடியவர்கள். குறிப்பாக மலிங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை சாய்த்து கலங்கடித்ததை மறந்து விட முடியாது. ஆரோன் நீக்கம்? அதே நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வங்காளதேச அணியே நெருக்கடியின்றி விளையாடி 279 ரன்களை வரை திரட்டி விட்டது. எனவே பேட்ஸ்மேன்களை பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை. முதல் ஆட்டத்தில் வருண் ஆரோன் மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் அது அச்சுறுத்தும் வகையில் இல்லை. 7.5 ஓவர்களில் 74 ரன்களை வாரி இறைத்தது மட்டுமே மிச்சம். எனவே அவருக்கு பதிலாக ஈஸ்வர் பாண்டே சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவும், இலங்கையும் அடிக்கடி மோதிக்கொள்ளும் அணிகளாகும். இப்போது நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 144–வது முறையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் இத்தனை முறை மோதிக் கொண்டதில்லை. இதில் 78–ல் இந்தியாவும், 53–ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை. அவ்வப்போது மோதிக் கொள்வதால்? யார்–யார் எப்படி? பலம், பலவீனம் என்ன? என்பது இவ்விரு அணிகளுக்கு இடையே நன்கு பரீட்சயமான ஒரு விஷயம். ஏறக்குறைய ஒரே மாதிரியான பலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. சன்டிமால் சவால் இலங்கை துணை கேப்டன் தினேஷ் சன்டிமால் நேற்று கூறுகையில், 'விராட் கோலி அற்புதமாக விளையாடி வருகிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது ரன் குவிப்பு குறித்த கவலை எங்களுக்கு அதிகமாக இல்லை. எங்களிடம் மலிங்கா போன்ற பவுலர்கள் உள்ளார்கள். எனவே நாளை (இன்று) களத்தில் பார்த்துக் கொள்வோம்' என்றார். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:– இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, வருண் ஆரோன் அல்லது ஈஸ்வர் பாண்டே. இலங்கை: குசல் பெரேரா, திரிமன்னே, சங்கக்கரா (விக்கெட் கீப்பர்), மஹேலா ஜெயவர்த்தனே, தினேஷ் சன்டிமால், மேத்யூஸ் (கேப்டன்), திசரா பெரேரா, சதுரங்க டி சில்வா, செனநாயக்கே அல்லது அஜந்தா மென்டிஸ், மலிங்கா, சுரங்கா லக்மல். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. எல்லா புகழும் தந்தைக்கே! நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி, 280 ரன்கள் இலக்கை 49–வது ஓவரில் எட்டிப்பிடித்தது. இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலி 136 ரன்கள் விளாசி பிரமாதப்படுத்தினார். கோலியின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி இலக்கை வெற்றிகரமாக 'சேசிங்' செய்வது இது 12–வது நிகழ்வாகும். 2–வது பேட் செய்து அணிக்கு சதத்துடன் வெற்றியை தேடித்தந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே (14 சதம்) அவரை விட முன்னிலையில் உள்ளார். மேலும், 19–வது சதத்தை அதிவேகமாக கடந்தவர் என்ற சாதனைக்கும் கோலி சொந்தக்காரர் ஆனார். அவர் தனது 124–வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை அடைந்தார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் தனது 189–வது இன்னிங்சில் 19–வது சதத்தை அடித்ததே சாதனையாக இருந்தது. இது குறித்து விராட் கோலி கூறும் போது, 'இந்த ஆட்டத்தில் அணியின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் என்ன சாதனை செய்தாலும் எனது தந்தைக்கே (விராட் கோலியின் தந்தை வழக்கறிஞர் பிரேம் 2006–ம் ஆண்டு இறந்து விட்டார்) எப்போதும் நன்றி சொல்வேன். அவருக்கே அதை அர்ப்பணிக்கிறேன். ஏனெனில் நான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறேன் என்றால், அதற்கு அவரது கடின உழைப்பே காரணம்' என்றார். image: category: |
| ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது? இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் இன்று ஆலோசனை Posted: 27 Feb 2014 12:09 PM PST புவனேஸ்வர் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் புவனேஸ்வரில் இன்று நடக்கிறது. இதில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. செயற்குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்த முக்கிய ஆலோசனை இந்த கூட்டத்தில் இடம் பெறுகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிவதற்கு முன்பாக ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஏற்கனவே மத்திய அரசு கைவிரித்து விட்டது. ஐ.பி.எல். போட்டி குறித்து முடிவு? மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்து விட்டதால் 2–வது ஐ.பி.எல். போட்டி நடந்த தென் ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்தலாமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முயற்சி எடுக்கலாமா? என்பது குறித்த கருத்துகள் நிலவுகின்றன. அதே நேரத்தில் பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று அணிகளின் உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து இன்று முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து சந்தித்து வரும் தோல்வி எதிரொலியாக கேப்டன் டோனி, தலைமை பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்தும் உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் பிளட்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அவரது ஒப்பந்தம் 2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. image: category: |
| சந்தோஷ் கோப்பை கால்பந்து: தமிழக அணிக்கு முதல் வெற்றி Posted: 27 Feb 2014 12:03 PM PST சிலிகுரி, 10 அணிகள் இடையிலான சந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ரெயில்வேயிடம் தோற்று இருந்தது. இந்த நிலையில் தமிழகம் தனது 2–வது ஆட்டத்தில் நேற்று கோவாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 3–2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. தமிழக அணியில் கார்த்திக் 13–வது நிமிடத்திலும், ரீகன் 31–வது நிமிடத்திலும், அசோக்குமார் கடைசி நிமிடத்திலும் கோல் போட்டனர். தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 3–ந் தேதி பஞ்சாபை எதிர்கொள்கிறது. image: category: |
| Posted: 27 Feb 2014 12:02 PM PST போர்ட் எலிசபெத், ''தென் ஆப்பிரிக்க அணியினர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டின் போது பந்தை சேதப்படுத்தினர். விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் ஒவ்வொரு முறை, பந்தை பிடிக்கும் போதும் கையுறையில் பந்தை தேய்த்தார்' என்று பகிரங்கமாக புகார் கூறிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை (ரூ.1¾ லட்சம்) அபராதமாக விதித்துள்ளது. சர்வதேச போட்டி குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்வது விதிமீறல் என்பதன் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. image: category: |
| சூதாட்டத்தில் சிக்கிய நியூசிலாந்து வீரர் Posted: 27 Feb 2014 12:00 PM PST டாக்கா, கடந்த ஆண்டு நடந்த வங்காளதேச பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அரங்கேறிய சூதாட்டம் குறித்து வங்காளதேச தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் குல்னா ராயல்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் 35 வயதான லூ வின்சென்ட்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தன்னை சூதாட்டக்காரர் அணுகிய போதிலும் அதை ஏற்க மறுத்து விட்டதாக கூறினார். ஆனால் இந்த விஷயத்தை உடனடியாக போட்டி அமைப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்த குற்றத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. வங்காளதேச முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், இன்னொரு சர்வதேச வீரர் ஆகிய மூன்று பேருக்கு இன்னும் 2 வாரத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. image: category: |
| ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 5–வது இடம் Posted: 27 Feb 2014 11:38 AM PST ஷார்ஜா, 16 அணிகள் கலந்து கொண்ட ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 5–வது இடத்திற்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் ஷார்ஜாவில் நேற்று சந்தித்தன. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. அன்குஷ் பெய்ன்ஸ் 74 ரன்களும், சஞ்சு சாம்சன் 67 ரன்களும், ஷிரியாஸ் அய்யர் 66 ரன்களும், தீபக் ஹூடா 42 ரன்களும் விளாசினர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பாலின் மகனான டேக்நரின் (112 ரன், 136 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிகோலஸ் பூரன் (54 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) நிலைத்து நின்று ஆடிய போதிலும் அவர்களால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5–வது இடத்தை உறுதி செய்தது. உலக சாம்பியன் யார்? என்பதை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–தென்ஆப்பிரிக்க அணிகள் துபாயில் நாளை மல்லுகட்டுகின்றன. முன்னதாக 3–வது இடத்திற்கான மோதலில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை இன்று எதிர்த்து விளையாடுகிறது. image: category: |
| 95 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் நாளை தொடக்கம் Posted: 27 Feb 2014 11:34 AM PST சென்னை, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் கல்லூரிகள் இடையேயான 'ஜெட்ஸ்' விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12–வது ஜெட்ஸ் விளையாட்டு போட்டிகள் மார்ச் 1–ந் தேதி, 2–ந் தேதி மற்றும் 8 முதல் 10–ந் தேதிகளில் அந்த கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பெண்கள் கல்லூரிகள் உள்பட 95 அணிகள் கலந்து கொள்கின்றன. கூடைப்பந்து, கைப்பந்து, செஸ், டேபிள் டென்னிஸ், கபடி, பால்பேட்மிண்டன் (இருபாலருக்கும்), பேட்மிண்டன், கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. பெண்கள் விளையாட்டு போட்டிகள் வருகிற 1, 2 ஆகிய தேதிகளிலும், ஆண்கள் விளையாட்டு போட்டிகள் 8 முதல் 10–ந் தேதி வரையும் நடைபெறுகிறது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மொத்தம் ரூ.2¼ லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |