Daily Thanthi |
- தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு ‘‘நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது’’
- சென்னை பெண் என்ஜினீயர் கொலை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு டி.ஜி.பி. அறிக்கை
- தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி, ராகுல் மீது குற்றச்சாட்டு
- தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று 66–வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
- சென்னையில் இரண்டாம் தவணையாக 5½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 1,340 மையங்களில் வழங்கப்பட்டது
- பதவியை பறித்து பாராளுமன்றம் தீர்மானம் உக்ரைன் அதிபர் எங்கே? மர்மம் நீடிக்கிறது
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு நடிகர் கார்த்திக் பேச்சு
- 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
- ‘ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள்’ பா.ஜனதா மீது ராகுல் காந்தி தாக்கு
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வங்காளதேசம் சென்றது
| Posted: 23 Feb 2014 11:58 AM PST புதுடெல்லி, பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு இந்தநிலையில் இது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் கே.அஜய் குமார் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– இலவசங்கள் அறிவிப்பு தமிழக அரசு இலவசங்கள் வழங்குவது குறித்து சுப்பிரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை 5–ந் தேதி வழங்கிய தீர்ப்பில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வழங்குவதாக அறிவிப்பது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் வாக்குறுதிகள் ஊழல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக கருத முடியாது என்ற போதிலும், இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது, வாக்காளர்களை கவர உதவும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இது தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் ஆணிவேரையே அசைப்பது போல் அமைந்து விடும் என்றும் தெரிவித்து இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த இந்த கருத்துகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன. வாக்குறுதிகள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளிக்கக்கூடாது. நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி மாநில அரசு, மக்களுக்கு தெரிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் அரசியல் சட்டத்தின் கொள்கைகளுக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு விரோதமாகவும் இருக்கக்கூடாது. தேர்தலை நியாயமாக நடத்தும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு முரணாகவும், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தும் வகையிலான வாக்குறுதிகளையும் அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். மாறுபட்ட கருத்து சமீபத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது, இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சில கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அறிக்கைகளில் இதுபோன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளிப்பது தங்களுக்கு உள்ள உரிமை என்றும், அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உதவும் என்றும் கூறினார்கள். அது ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துதான் என்ற போதிலும், அளிக்கப்படும் வாக்குறுதிகள் வேட்பாளர்களிடம் பாரபட்சமில்லாத நிலையை ஏற்படுத்துவதற்கும், தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தும் தேர்தல் கமிஷனின் நோக்கத்துக்கும் விரோதமாக அமைந்துவிடக்கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| சென்னை பெண் என்ஜினீயர் கொலை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு டி.ஜி.பி. அறிக்கை Posted: 23 Feb 2014 11:43 AM PST சென்னை, சென்னையை அடுத்த சிறுசேரி பகுதியில், பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ராமானுஜம் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:– பொதுமக்களிடம் இருந்து சிறுசேரி பகுதியில் 23 வயதான ஒரு பெண் கொலை செய்யப்பட்டது குறித்து பொது மக்களிடமிருந்து தகவல்களை காவல்துறை வேண்டுகிறது. 13.2.2014 அன்று இரவு 10 மணி அளவில் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வேலை முடித்து புறப்பட்ட பெண், பின்னர் காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அப்பெண் அன்றிரவு பழைய மாமல்லபுரம் சாலையை (ஓ.எம்.ஆர்.) நோக்கி நடந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்கும் (சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சாலை அல்லது சிறுசேரி சாலை) பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையே முதலாவது பிரதான சாலைக்கு சற்றுத் தொலைவில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள புதர்களின் நடுவில் அப்பெண்ணின் சடலம் காயங்களுடன் 22.2.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகப்படும்படி... சம்பவம் நடைபெற்றதாகக் கருதப்படும் அந்நேரத்தில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் எதனையும் கண்டவர்களோ அல்லது அச்சம்பவம் குறித்து பயன்படக்கூடிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்களோ அதுகுறித்து 044–2250 2500 அல்லது 044–2250 2510 அல்லது 98410 59989 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். மேலும், அத்தகவல்களை cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். ரூ.2 லட்சம் பரிசு குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலோ அல்லது அவர்களைப் பிடிக்க உதவும் வகையிலோ உபயோகமான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும். முதலமைச்சர் உத்தரவுப்படி, இவ்வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை(சி.பி.சி.ஜ.டி.) மேற்கொள்ளும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன அதிகாரிகளுடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இரவு நேரத்தில் பணிக்கு வரும் அல்லது வீட்டிற்குத் திரும்பும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. காஞ்சீபுரம் சரகம் காவல்துறை டி.ஐ.ஜி., நேற்று நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி, ராகுல் மீது குற்றச்சாட்டு Posted: 23 Feb 2014 11:38 AM PST ரோத்தக், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். அரியானாவில் பேரணி புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 300 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், டெல்லி முதல்–மந்திரி பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். அரியானா மாநிலம் ரோத்தக் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட அவர் பேசும்போது கூறியதாவது:– நரேந்திர மோடிக்கு கடிதம் டெல்லியில் இதுவரை எந்த அரசும் செய்யாத பல்வேறு திட்டங்களை எங்கள் குறுகிய கால ஆட்சியில் நாங்கள் செய்து முடித்தோம். நான் ஆட்சியில் இருந்து ஓடிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் நான் அப்படி ஓடி விடவில்லை. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எங்கள் கொள்கைகளில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன். சமையல் எரிவாயுக்கு விலை நிர்ணயித்த விவகாரத்தில் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நான் கடிதங்கள் எழுதினேன். ஆனால் அவர்கள் அமைதியாகவே இருந்து விட்டனர். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, நரேந்திர மோடியை ஒரு பாக்கெட்டிலும், ராகுல் காந்தியை மறு பாக்கெட்டிலும் வைத்துள்ளார். அவரே, 5 ஆண்டு காலத்துக்கு மோடியையும், மற்றொரு 5 ஆண்டு காலத்துக்கு ராகுல் காந்தியையும் ஆட்சி புரிய அனுமதிப்பார். தைரியம் உண்டா? காங்கிரசோ, பா.ஜனதாவோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையே ஏற்படும் என்பது அம்பானிக்கு தெரியும். ஆனால் நாங்கள் இதை முடிவுக்கு கொண்டு வருவோம். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் அவரது தொழிலதிபர் நண்பர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வர தைரியம் உண்டா? அவ்வாறு துணிவிருந்தால் அவர், நாட்டு மக்களிடம் இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கருத்துக்கணிப்புகள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 2 அல்லது 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவின் போது எங்களுக்கு 28 இடங்கள் கிடைத்தது. தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் கூட தற்போது பணம் விளையாடுகிறது. இந்த தேர்தலில் நாங்கள் ஒரு பொது போராட்டம் நடத்துகிறோம். இது உங்களுக்கான போராட்டம். நான் மிகவும் சாதார மனிதன். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினருக்கு டெல்லி மக்களால் பாடம் புகட்ட முடியுமென்றால், அரியானாவை சேர்ந்த உங்களாலும் முடியும். எனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
image: category:Tagging:News Group Category: |
| Posted: 23 Feb 2014 11:33 AM PST சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) 66–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தனது 66–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். 'எனது பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அது பயன்பெறுவோரை மகிழ்விக்கும், என்னை மேலும் உற்சாகப்படுத்தும்' என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல முறை தொண்டர்கள் மத்தியில் கூறியுள்ளார். அவரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வர இருப்பதால், 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பரிசளிக்கும் வகையில், நாடும் நமதே, 40–ம் நமதே என்ற முழக்கத்தோடு முதல்–அமைச்சரின் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர். தமிழகம் முழுவதும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தி சுவரொட்டிகளையும், சாலைகளில் தோரணங்களையும் கட்டி உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது. நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் அன்னதானம், ரத்ததானம், மருத்துவமுகாம், விளையாட்டு போட்டிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர். மேலும் முதியோர், ஆதரவற்றோர் நல உதவிகள், மாணவ–மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது. முதல்–அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேரில் அர்ச்சனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொண்டர்கள் ஏற்பாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தலைமை கழகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்புமலர் வெளியிடப்பட்டு, 66 கிலோ கேக் வெட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். மருத்துவ முகாம் சென்னை தலைமை செயலகத்திற்கு செல்லும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அங்கு காணொலி காட்சி (வீடியோ காண்பரன்சிங்) மூலம் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்துதுறை சார்பிலான நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். புதியதாக கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய வீடுகளை திறந்து வைக்கிறார். உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கிட்டங்கிகளை திறந்து வைக்கிறார். செங்கல்பட்டு மேம்பாலம், தகவல் தொழில் நுட்பம் சார்பிலான அரசு நகர்புற பொது இ–சேவை மையங்களையும் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் மற்றும் மருத்துவத்துறை சார்பிலான மருத்துவ முகாமை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகம் சார்பில் மூட்டு உள்நோக்கு கருவி மற்றும் விளையாட்டு அறிவியல் மையத்தை ஜெயலலிதா திறந்து வைக்கிறார். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பட அதிபர்கள் எல்.வி.பிரசாத், நாகிரெட்டியார், டி.வி.எஸ்.ராஜூ, கே.சுப்பிரமணியம், பி.சுப்பிரமணியம், பட அதிபர்–இயக்குனர் பி.ஆர்.பந்தலு, தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் மறைந்த டி.ராமானுஜம் ஆகிய 7 பேருடைய மார்பளவு சிலையையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். பொதுக்கூட்டம் இது தவிர சென்னை நகர் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 5–ந் தேதி வரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா, மராட்டியம், அந்தமான் தீவுகள், புதுடெல்லி மற்றும் வெளிநாடுகளிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள்.
image: category:News Group Category: |
| Posted: 23 Feb 2014 11:32 AM PST சென்னை, சென்னையில் ஆயிரத்து 340 மையங்களில் இரண்டாம் தவணையாக 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. போலியோ சொட்டு மருந்து நாட்டில் போலியோ நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 5 வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 19–ந்தேதி முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்தது. சென்னையில் ஆயிரத்து 325 மையங்களில் மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகளுக்கு நோய் தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. கவர்னர் கே.ரோசய்யா இதனை நேற்று காலையில் ராஜ் பவனில் கவர்னர் கே.ரோசய்யா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சுற்றுலா, பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் சொட்டு மருந்து கொடுப்பதற்காக அரசு துறைகளை சேர்ந்த பணியாளர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் என 5 ஆயிரத்து 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ரெயில்–பஸ் நிலையங்கள் ரெயில் நிலையங்களுக்கு குழந்தைகளை கொண்டு வரும் பயணிகளை குறிவைத்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 இடங்களிலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4 இடங்களிலும் சொட்டு மருந்து முகாம்களுக்கான மையம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுகாதாரத்துறை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சொர்ணப்பன் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சொட்டு மருந்து கொடுத்தனர். வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகள் தன்னார்வத்துடன் முகாமில் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தனர். இதேபோன்று உள்ளூர், வெளியூர் பஸ்களுக்காக பயணிகள் அதிகம் வரும் கோயம்பேடு பஸ் நிலையத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பஸ்சுக்காக குழந்தைகளுடன் வந்த பயணிகளை நிறுத்தி, சுகாதாரத்துறை ஊழியர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து அனுப்பினர். 95.5 சதவீதம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து இதேபோன்று மாம்பலம் உள்பட பல்வேறு மின்சார ரெயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் ஆர்வத்துடன் சொட்டு மருந்து கொடுப்பதற்காக அழைத்து வந்ததை காணமுடிந்தது. சென்னையில் 5 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 82 ஆயிரத்து 552 குழந்தைகள் உள்ளன. இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் அமைக்கப்பட்ட ஆயிரத்து 340 மையங்கள் மூலம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 750 குழந்தைகளுக்கு 2–வது தவணையாக சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இது 95.5 சதவீதம் ஆகும். image: category: |
| பதவியை பறித்து பாராளுமன்றம் தீர்மானம் உக்ரைன் அதிபர் எங்கே? மர்மம் நீடிக்கிறது Posted: 23 Feb 2014 11:30 AM PST கீவ், உக்ரைன் நாட்டு அதிபர் திடீரென்று மாயமானார். அவர் எங்கே? இருக்கிறார் என்பது தெரியவில்லை. போராட்டம்–புரட்சி சோவியத் ரஷியா சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது. அதில் இருந்து பிரிந்து உக்ரைன் நாடு 1991–ம் ஆண்டில் உதயமானது. 4½ கோடி ஜனத்தொகை கொண்ட இந்த நாட்டின் அதிபராக விக்டர் யானுகோவிச்(63) பதவி வகிக்கிறார். தற்போது இந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே இந்த சரிவில் இருந்து மீள ஐரோப்பிய யூனியன் பக்கம் சாய்வதா? அல்லது ரஷியா பக்கம் சாய்வதா? என்ற நிலை ஏற்பட்டது. அதிபர் விக்டர் ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 100–க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனால் சண்டை நிறுத்தம் செய்ய போராட்டக்குழு தலைவருடன் அதிபர் விக்டர் உடன்பாடு செய்தார். ஆனால் அதிபர் பதவியை விட்டு விலக அவர் மறுத்து விட்டார். இதனை அடுத்து கீவ் நகரில் நேற்று முன்தினம் போராட்டம் தீவிரம் அடைந்து புரட்சியாக மாறியது. போராட்டக்காரர்கள் பாராளுமன்றம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பாராளுமன்றம் தீர்மானம் பிறகு அதிபர் பங்கேற்காமலேயே பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டினர். போட்டி சபாநாயகரை தேர்வு செய்து அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியை பறித்து தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் வருகிற மே 25–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தனர். ஆனால் இந்த தீர்மானத்தை விக்டர் ஏற்க மறுத்து விட்டார். இதுபற்றி அவர் பேட்டி அளிக்கையில், 'இந்த ஓட்டெடுப்பை நான் ஏற்க மாட்டேன். நானே அதிபர் பதவியில் நீடிக்கிறேன். இந்த பாராளுமன்ற நடவடிக்கை அனைத்தும் சட்டவிரோதமானது. நாட்டில் தீவிரவாதத்தை தூண்டிவிடும் சமூகவிரோதிகளின் செயல்பாடுகளை ஏற்று எதிலும் கையெழுத்து போட மாட்டேன். பதவி விலகப் போவதில்லை' என்று கூறிவிட்டார். அதிபர் எங்கே? இந்தநிலையில் கீவ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் இருந்து விக்டர் திடீரென்று மாயமானார். தனக்கு ஆதரவு அதிகமுள்ள உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டோநெத்ஸ்க் நகருக்கு அவர் சென்றதாக தகவல் வெளியானது. இந்த ஊரில் இருந்து அவர் தனி விமானம் மூலம் புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்று எல்லைபாதுகாப்பு படை துணை அதிகாரி கூறியதாக ஒரு தகவல் கூறுகிறது. அதே நேரத்தில் அதிபரின் உதவியாளர் கூறுகையில், 'வடகிழக்கே உள்ள கார்கிவ் நகரில் அவர் தங்கி இருந்தார் என்று தெரிவித்தார். இதனால் அவர் பிராந்திய கவர்னர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. கீவ் நகரில் வசிக்கும் சிலரோ, அதிபர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டிற்கு சென்று விட்டார் என்கின்றனர். ஆகவே அதிபர் விக்டர் யானுகோவிச் தற்போது எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக இருக்கிறது. போராட்ட தலைவர் விடுதலை இந்த குளறுபடிகளுக்கு இடையே போராட்டத்தை யொட்டி கைதாகி காவலில் வைக்கப்பட்டு இருந்த எதிர்க்கட்சி தலைவர் யுலியா திமோஷின்கோ விடுதலை செய்யப்பட்டு கீவ் நகருக்கு திரும்பினார். தலைநகரில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் முன்னிலையில் தோன்றி பேசினார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தநிலையில் பாராளுமன்ற, உறுப்பினர்கள் கூடி துர்க்கினோவ் என்பவரை இடைக்கால அதிபராக தேர்ந்து எடுத்தனர். கீவ் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வெளியேறினார்கள். போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் கலைந்தனர். இதனால் கீவ் நகர் நேற்று காலை அமைதியாக காட்சி தந்தது. image: category:Tagging:News Group Category: |
| பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு நடிகர் கார்த்திக் பேச்சு Posted: 23 Feb 2014 11:30 AM PST தேனி, பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று தேனியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் பேசினார். நடிகர் கார்த்திக் பேச்சு நாடாளும் மக்கள் கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் வரும் போது இங்கு மழை இல்லை. வறட்சி நிலவுகிறது என்று கூறினார்கள். நாங்கள் வந்து விட்டோம். இனி மழை வரும். வறண்ட பூமி என்ற நிலை இல்லாமல் போகும். இது கடவுள் மேல் சத்தியம். தமிழனின் வீரம் அளவிட முடியாதது. தமிழர்களின் வீரத்தை போல் உலகில் எங்கும் கிடையாது. மத்தியில் யார் வந்தாலும், நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி ஒரு நிலை வரும். அப்போது இந்த கார்த்திக் கேட்பான், என் மக்களுக்கு செய் என்று. கூட்டணி குறித்து முடிவு ஏமாந்தது போதும். இனி ஏமாற்றுபவர்கள் தான் ஏமாறப் போகிறார்கள். இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களை சுமை தூக்க விட மாட்டேன். எனக்கு பயம் கிடையாது. வீரனுக்கு ஒருமுறை தான் மரணம். கோழை தான் காலையில் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் சாவான். பாராளுமன்ற தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்வோம். இன்னும் ஒரு வாரத்தில் நல்ல செய்தி வரும். எங்களிடம் வீரமும் இருக்கிறது, விவேகமும் இருக்கிறது. நான் அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்மை செய்வேன். முதலில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். சினிமா பாணியில் சொல்லப் போனால் இது 'டிரைலர்' தான். முழுபடம் இனிமேல் தான் வரும். வெற்றி நமதே. இவ்வாறு கார்த்திக் பேசினார். மாநில தலைவர் எஸ்.சவுந்திரபாண்டியன், மாநில பொறுப்பாளர் ரமேஷ், மாவட்ட பொருப்பாளர் ஆர்.வினோத்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். category:Tagging: |
| 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது Posted: 23 Feb 2014 11:05 AM PST போர்ட்எலிசபெத், போர்ட் எலிசபெத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி மெகா வெற்றியை சுவைத்தது. அம்லா சதம் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 423 ரன்களும், ஆஸ்திரேலியா 246 ரன்களும் எடுத்தன. 177 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. ஹஷிம் அம்லா 93 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய அம்லா தனது 21-வது சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் காலிஸ் (45 சதம்), கேப்டன் கிரேமி சுமித் (27 சதம்) ஆகியோருக்கு அடுத்து கேரி கிர்ஸ்டனுடன் (21 சதம்) 3-வது இடத்தை அம்லா பகிர்ந்து கொண்டுள்ளார். 448 ரன்கள் இலக்கு அம்லாவுக்கு ஒத்துழைப்பு தந்து ஆடிக் கொண்டிருந்த குயின்டான் டீ காக் 34 ரன்களில் கேட்ச் ஆனார். மதிய உணவு இடைவேளைக்கு 40 நிமிடங்களுக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 270 ரன்களுடன் 2-வது இன்னிங்சை 'டிக்ளேர்' செய்தது. அம்லா 127 ரன்களுடன் (176 பந்து, 16 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி நாளில் பலத்த மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்ததாலேயே தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை சீக்கிரமாக முடித்துக் கொண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 448 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இமாலய இலக்கை நோக்கி கிறிஸ் ரோஜர்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சை தொடங்கினர். அதிரடி காட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். வார்னர் 66 ரன்களில் (73 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் டுமினியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சதத்திற்கு மத்தியில் சுருண்டது தொடக்க ஜோடி பிரிந்ததும், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. ஒரு பக்கம் கிறிஸ் ரோஜர்ஸ் போராடிக் கொண்டிருக்க மறுமுனையில் அலெக்ஸ் டூலன் (5 ரன்), ஷான் மார்ஷ் (0), கேப்டன் மைக்கேல் கிளார்க் (1 ரன்), ஸ்டீவன் சுமித் (0), விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் (1 ரன்), மிட்செல் ஜான்சன் (6 ரன்), ரையான் ஹாரிஸ் (6 ரன்) வரிசையாக நடையை கட்டினர். இதற்கு மத்தியில் தனது 4-வது சதத்தை அடித்த கிறிஸ் ரோஜர்ஸ் (107 ரன், 237 பந்து, 12 பவுண்டரி) 9-வது விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து நாதன் லயன் (0) கடைசி வீரராக வெளியேற ஆஸ்திரேலிய அணி 73.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களை தவிர வேறு யாரும்இரட்டை இலக்கை தொடவில்லை. கடைசி டெஸ்ட் தென்ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டுகளும், மோர்கல், டுமினி, எல்கர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. போர்ட்எலிசபெத்தில் இன்று (பிப்.24) மழை கொட்டி தீர்க்கும் என்றும், மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை மனதில் கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 4-வது நாளிலேயே ஆஸ்திரேலியாவின் கதையை முடித்து விட்டது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. image: category: |
| ‘ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள்’ பா.ஜனதா மீது ராகுல் காந்தி தாக்கு Posted: 23 Feb 2014 11:04 AM PST டேராடூன், ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள் என பா.ஜனதா மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ரத்த அரசியல் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– பா.ஜனதா ரத்த அரசியல் நடத்த பயிற்சி எடுத்து வருகிறது. அவர்களுக்கு தேவை ஆட்சி அதிகாரம் மட்டுமே. அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆட்சியை பிடிப்பதற்கு தேவைப்பட்டால் மக்களிடையே பிரிவினையை தூண்டக்கூட அவர்கள் தயங்க மாட்டார்கள். லோக் ஆயுக்தா நாட்டின் அனைத்து தலைவர்களும் லோக் ஆயுக்தாவின் கீழ் வந்துள்ளனர். ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒருவர் (மோடி) மட்டும் இன்னும் லோக் ஆயுக்தாவின் கீழ் வரவில்லை. குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி ஊழலைப்பற்றி பேசுகிறார். ஆனால் அவரது மாநிலத்தில் ஒரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை அமைக்க முடியவில்லை. ஊழலுக்கு எதிராக 6 மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நாங்கள் முயன்றோம். இதுதொடர்பாக எங்கள் தலைவர்கள் பா.ஜனதாவினருடன் பேசினர். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தனரே தவிர, இந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசுடன் ஒத்துழைக்கவில்லை. ஆனால் இந்த அரசு எங்களுடையது. எனவே நாங்கள் இவற்றை அவசரச்சட்டமாக நிறைவேற்ற முயன்று வருகிறோம். உறுதியான திட்டம் நரேந்திரமோடி மக்களிடம் பேசும் போது, 'என்னை பிரதமராக்குங்கள், அனைத்தும் சரியாகி விடும்' என்று கூறுகிறார். ஆனால் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. ஆனால் நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான உறுதியான திட்டத்துடனேயே மக்களை அணுகுகிறோம். கம்ப்யூட்டரை குறித்து முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி பேசிய போது, மிகப்பெரிய பா.ஜனதா தலைவரும், பின்னாளில் பிரதமரானவருமான ஒருவர் (வாஜ்பாய்) அதை எதிர்த்தார். விவசாயிகளை கம்ப்யூட்டர் அழித்து விடும் என்று கூறினார். ஆனால் தகவல் தொடர்பு புரட்சிக்கு நாங்கள் தான் காரணம் என பா.ஜனதாவினர் தற்போது கூறி வருகின்றனர். அரசு அமைப்போம் இவ்வாறு நாங்கள் உயர்ந்த சிந்தனைகள் பற்றி பேசுகிறோம். அவர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. காங்கிரசை அழிக்க வேண்டும் என்று மட்டுமே பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகிறார்கள். அவர்கள் பகவத் கீதை, குரான், புத்த மதம் போன்றவற்றை படிக்க வேண்டும். பிறருக்கு தாழ்ச்சியுடன் பணிவிடை செய்யுமாறு கீதை கூறுகிறது. சிறந்த போதனைகளை வழங்கியுள்ள புத்த மதத்தை யாராலும் ஒழிக்க முடியாது. அதைப்போல காங்கிரசையும் யாராலும் அளிக்க முடியாது. நாங்கள் போராடுவோம். வெற்றி பெறுவோம். அரசு அமைப்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். image: category:Tagging:News Group Category: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வங்காளதேசம் சென்றது Posted: 23 Feb 2014 11:00 AM PST மும்பை, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக இந்திய அணி வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்றது. ஆசிய கிரிக்கெட் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் களம் இறங்கும் 12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை( செவ்வாய்க்கிழமை) முதல் மார்ச் 8–ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் பரம போட்டியாளர்களான இந்தியா–பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 2–ந்தேதி அரங்கேறுகிறது. அனைத்து ஆட்டங்களும் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி காயத்தை காரணம் காட்டி விலகி விட்டார். இதையடுத்து கேப்டனாக நட்சத்திர வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். புறப்பட்டது இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானடங மூலம் நேற்று காலை வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய அணி பிரத்யேகமாக பயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. நியூசிலாந்து தொடரை ஏமாற்றத்துடன் முடித்துக் கொண்டு கடந்த 19–ந்தேதி இரவில் தான் இந்திய வீரர்கள் தாயகம் திரும்பினர். அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு உடனடியாக வங்காளதேசத்திற்கு கிளம்பியிருக்கிறார்கள். வீரர்கள் விவரம் தொடர்ச்சியான தோல்விகளால் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, அண்டை நாட்டிலாவது சாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆசிய போட்டிக்கான இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, புஜாரா, அம்பத்தி ராயுடு, ரஹானே, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |