Daily Thanthi |
- மீண்டும் உலக கோப்பையை வென்று சாதனை வரிசையில் இணைவோம் இந்திய கேப்டன் டோனி நம்பிக்கை
- கணவரை வெறுத்து ‘பேஸ்புக்’ காதலனுடன் குடியேறிய பட்டதாரி பெண் 9 வயது மகளை தவிக்கவிட்டு ஓட்டம்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் சதம் விளாசினார்
- எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி
- ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் சோம்தேவ் தோல்வி
- ஆகஸ்டு மாதம் நடக்கிறது நடிகை பாவனா காதல் திருமணம் கன்னட பட அதிபரை மணக்கிறார்
- சுயஉதவிக்குழுவினர் நடத்திய கண்காட்சி ரூ 3½ லட்சம் பொருட்கள் விற்பனை
- திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதியது கோயம்பேடு வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
- தேவைப்பாடு குறைந்ததால் பாமாயில் இறக்குமதி 36 சதவீதம் குறைந்தது
- ஜனவரி மாதத்தில் கைவினை பொருள்கள் ஏற்றுமதி 40% வளர்ச்சி
| மீண்டும் உலக கோப்பையை வென்று சாதனை வரிசையில் இணைவோம் இந்திய கேப்டன் டோனி நம்பிக்கை Posted: 14 Feb 2014 12:12 PM PST துபாய், 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது. உலக கோப்பை திருவிழாவுக்கு தொடங்க சரியாக ஓராண்டு இருப்பதை யொட்டி இந்திய கேப்டன் டோனி, ஐ.சி.சி. இணையதளத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில் களம் இறங்க இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது என்பதை நினைக்கும் போது சிலிர்ப்பாக உள்ளது. மும்பையில் அந்த அதிசயத்தக்க இரவு வந்து (உலக கோப்பையை வென்ற நாள்) ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஓடோடி விட்டது. அந்த இரவு மட்டுமின்றி, அந்த ஒட்டுமொத்த தொடரும் என்றுமே எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாதது. உலக கோப்பை வரலாற்றில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே உலக கோப்பையை அடுத்தடுத்து ருசித்த அணிகள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த சாதனைப்பட்டியலில் 3–வது அணியாக எங்களால் இடம் பிடிக்க முடியும். அதற்குரிய தகுதி எங்களிடம் இருப்பதாக நம்புகிறேன். உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் விளையாடும் போது அதை திறம்பட சமாளிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். 2011–ம் ஆண்டு உலக கோப்பை, 2013–ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் இதை நாங்கள் நிரூபித்து காட்டியுள்ளோம். நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் தொடரில் நாங்கள் ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. ஆனால் இந்த தொடர் உலக கோப்பைக்கு தயாராவதற்கு பயனுள்ள அனுபவத்தை கொடுத்துள்ளது. 2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சிக்குள்ளானது. 2015–ம் ஆண்டிலும் அதை மீண்டும் செய்ய விரும்புகிறோம். இவ்வாறு டோனி கூறியுள்ளார். image: category: |
| கணவரை வெறுத்து ‘பேஸ்புக்’ காதலனுடன் குடியேறிய பட்டதாரி பெண் 9 வயது மகளை தவிக்கவிட்டு ஓட்டம் Posted: 14 Feb 2014 12:05 PM PST விக்கிரமசிங்கபுரம், துபாயில் வேலை செய்து வந்த கணவரை வெறுத்து ஒதுக்கிவிட்டு 'பேஸ்புக்' காதலனுடன் ஈரோட்டில் பி.எட். பட்டதாரி பெண் குடியேறினார். 9 வயது மகளையும் தவிக்க விட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– பி.எட். பட்டதாரி பெண் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர், கிறிஸ்டோபர் (வயது 37). அவருடைய மனைவி ஆன்டோ மெக்கலன் ஜெனிபர் (35). இவர்களுடைய ஒரே மகள் ஆல்வின் மெல்வினா (9). கிறிஸ்டோபர் துபாயில் உள்ள ஒரு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி ஜெனிபரும், மகளும் ஊரில் வசித்து வந்தனர். அவ்வப்போது கிறிஸ்டோபர் ஊருக்கு வந்து மனைவி, மகளை பார்த்துச் சென்றார். ஜெனிபர் எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளார். கடந்த மாதம் 26–ந் தேதி, நெல்லைக்கு சென்று ஜவுளி எடுத்து வருவதாக கூறிவிட்டு ஜெனிபர் சென்றார். மகளை தன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால், அவர் திரும்ப வரவில்லை. போலீசில் புகார் இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெனிபரை தேடிவந்தனர். ஜெனிபர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கம்ப்யூட்டரில் பொழுதுபோக்குவது வழக்கம். அவ்வப்போது கம்ப்யூட்டர் சென்டருக்கும் சென்று வந்தார். எனவே அவரது மின்–அஞ்சல் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவர் 'பேஸ்புக்' இணையதளத்திலும் இணைந்திருந்தார். அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஜெனிபருக்கு ஈரோட்டைச் சேர்ந்த அசோக்குமார் (23) என்பவர் அடிக்கடி மின்–அஞ்சல் அனுப்பி இருக்கிறார். எனவே அசோக்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பி.எட் பட்டதாரியான ஜெனிபர், எலக்ட்ரீசியான வேலை செய்து வரும் அசோக்குமார் உடன் ஈரோட்டில் தனி குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களது, ரகசிய காதல் 'பேஸ்புக்' மூலம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. காதலனுடன் சென்றார் உடனே அசோக்குமார், ஜெனிபரை போலீசார் விக்கிரமசிங்கபுரத்துக்கு அழைத்து வந்தனர். எப்படியாவது காதலனை விட்டுவிட்டு, தங்களோடு வந்துவிடும்படி ஜெனிபரின் பெற்றோர் அழைத்தனர். மகள் ஆல்வின் மெல்வினா எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது தங்களோடு வரும்படி அழைத்தனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். காதலன் அசோக்குமாரை கைவிட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. பெற்றோர், கணவர், பெற்ற மகளைவிட, புதிய காதலன் அசோக்குமாருடன் வாழ்வதில் உறுதியாக இருந்ததால், கடைசியல் காதலன் உடன் ஜெனிபர் அனுப்பி வைக்கப்பட்டார். ஜெனிபரின் வாழ்க்கையை 'பேஸ்புக்' திசைமாறச் செய்தது எப்படி? என்பது பற்றிய தகவல்களை போலீசார் கூறியதாவது:– பிரிக்க முடியாத காதல் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் உரையாடிக் கொண்டு இருந்த போதுதான், அசோக்குமாருடன் ஜெனிபருக்கு அறிமுகம் கிடைத்தது. அப்போது அசோக்குமாருக்கு வயது 20. முதலில் 2 பேரும் சாதாரணமாக பேசிவந்தனர். பின்னர் போனிலும் பேச ஆரம்பித்தனர். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், இதை யாரும் கண்டிக்கவில்லை. இப்படியே சென்ற இவர்களது பழக்கம் நாளடைவில் காதல் ஆனது. ஜெனிபர் மீது அதிக அக்கறை காட்டுவது போன்று அசோக்குமார் நடந்துள்ளார். இதனால் கட்டிய கணவரை விட, காதலன் உயர்ந்தவர் என்று நினைத்தார். அவ்வப்போது அசோக்குமாரை வரச்செய்து, ரகசியமாக சந்தித்துள்ளார். நாளடைவில் இந்த காதல் பிரிக்க முடியாத அளவுக்கு சென்றுவிட்டது. பேஸ்புக் போன்ற வசதிகளால் நன்மைகள் பல உள்ளன. ஆனால், சீராக சென்று கொண்டு இருக்கும் வாழ்க்கையை இது போன்ற நவீன வசதிகள் திசைமாறச் செய்துவிடுகின்றன. இவ்வாறு போலீசார் கூறினார்கள். image: category: |
| தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் சதம் விளாசினார் Posted: 14 Feb 2014 12:03 PM PST செஞ்சுரியன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. தென்ஆப்பிரிக்கா 206 ரன் ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 397 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்களுடன் திணறியது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 206 ரன்களுக்கு எஞ்சிய விக்கெட்டுகளையும் இழந்தது. டிவில்லியர்ஸ் 91 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்காவை மிரள வைத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வார்னர் சதம் அடுத்து 191 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. 26, 27, 51 ரன்களில் முறையே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து 6–வது சதத்தை பூர்த்தி செய்த டேவிட் வார்னர் 115 ரன்களிலும் (13 பவுண்டரி, 2 சிக்சர்), அறிமுக வீரர் அலெக்ஸ் டூலன் 89 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். ஷான் மார்ஷ் (44 ரன்), கேப்டன் மைக்கேல் கிளார்க் (17 ரன்) களத்தில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா இதுவரை 479 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது. 4–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. image: category: |
| எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி Posted: 14 Feb 2014 11:51 AM PST திண்டுக்கல், திண்டுக்கல் அக்கரைப்பட்டியில் உள்ள எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கல்லூரி மறறும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி வளாக இயக்குனர் சந்திரன் வரவேற்று பேசினார். தனியார் நிறுவன இயக்குனர் சிவராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கண்காட்சியின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி விவரித்தார். கல்லூரி செயலர் கந்தசாமி, செயல் இயக்குனர் சண்முகவேல், முதன்மை கல்வி அலுவலர் சுகுமார்தேவதாஸ், எஸ்.எஸ்.எம். பள்ளி முதல்வர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கண்காட்சியில் 100–க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், 300–க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு அதற்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி நன்றி கூறினார். image: category: |
| ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் சோம்தேவ் தோல்வி Posted: 14 Feb 2014 11:51 AM PST கொல்கத்தா, ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி தொடர் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், ரஷியாவின் இவ்ஜெனி டான்ஸ்கோயை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 6–3, 5–7, 2–6 என்ற செட் கணக்கில் டான்ஸ்கோயிடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சகெத் மைனெனி–சனம்சிங் ஜோடி 6–3, 3–6, 10–4 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த திவிஜ் சரண்–விஷ்ணுவர்தன் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. image: category:Tagging: |
| ஆகஸ்டு மாதம் நடக்கிறது நடிகை பாவனா காதல் திருமணம் கன்னட பட அதிபரை மணக்கிறார் Posted: 14 Feb 2014 11:38 AM PST சென்னை, நடிகை பாவனா கன்னட பட அதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் நடக்கிறது. பாவனா 'சித்திரம் பேசுதடி' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பாவனா. அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார். அங்கிருந்து 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்தார். இங்கு பட வாய்ப்புகள் குறைந்ததும் தெலுங்கு பட உலகுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கன்னட பட உலகில் அடைக்கலமானார். காதல் திருமணம் கன்னட படங்களில் நடித்து கொண்டு இருந்த போது பாவனாவுக்கு, நவீன் என்ற கன்னட பட அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள்.பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். ஆகஸ்டு மாதம் அதைத் தொடர்ந்து பாவனா–நவீன் திருமணம் வருகிற ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை கேரளாவில் நடத்துவதா? அல்லது பெங்களூரில் நடத்துவதா? என்பது பற்றி 2 பேரின் பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| சுயஉதவிக்குழுவினர் நடத்திய கண்காட்சி ரூ 3½ லட்சம் பொருட்கள் விற்பனை Posted: 14 Feb 2014 11:28 AM PST திண்டுக்கல், திண்டுக்கல்லில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்திய கண்காட்சியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை ஆனது. விற்பனை கண்காட்சி திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் கல்லூரி 'பஜார்' நிகழ்ச்சி, ஜி.டி.என். கலைக் கல்லூரியில் நடந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் நிறைவு விழாவிற்கு கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் பழனி, உதவி திட்ட அலுவலர் வேல்முருகன், ஜி.டி.என். கல்லூரி முதன்மை செயல் அதிகாரி ரெத்தினம், கல்லூரி செயலாளர் ஆதிநாராயணசாமி, கல்லூரி முதல்வர் மார்க்கண்டேயன், தனி அலுவலர் ஆறுமுகம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ரூ.3½ லட்சம் அப்போது அதிகமான பொருட்களை விற்பனை செய்த சுயஉதவிக் குழுவினருக்கு கலெக்டர் வெங்கடாசலம் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:– திண்டுக்கல் மாவட்டத்தில் 2–வது கட்டமாக ஜி.டி.என். கல்லூரியில் 3 நாட்கள் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடந்தது. இதில் 16 குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வருமானம் ஈட்டியுள்ளனர். இது குழு உறுப்பினர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் அமையும். ரூ.1 கோடி கடன்உதவி மாணவர்கள் எதிர்கால தொழில்துறை தேவைகள், வாழ்க்கை கல்வியை தெரிந்து கொள்வது அவசியம். தமிழக அரசு புதிய தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடனுதவியும், அதில் 25 சதவீதம் மானியமும் வழங்குகிறது. இதனை தொழில்முனைவோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் கயிறு, கைத்தறி ஆடைகள் தயாரிக்க பெண்கள் கடன்உதவி பெற்று வருகின்றனர். தொழில் பற்றிய அறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் தொழிலை திறமையாக செய்யலாம். உற்பத்தியாளர்கள், பொருட்களை வாங்குவோருக்கு நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி லாபத்திற்கு பொருட்களை விற்க வழிகாட்டப்படுகிறது. இதை பயன்படுத்தி தொழில் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் வெங்கடாசலம் பேசினார். image: category: |
| திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதியது கோயம்பேடு வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி Posted: 14 Feb 2014 11:22 AM PST திட்டக்குடி, திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதியதில் கோயம்பேடு வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் பலியானார்கள். கோயம்பேடு வியாபாரி நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 36). இவர் சென்னை கோயம்பேட்டில் வாழைத்தார் மொத்த வியாபாரம் செய்துவந்தார். கோயம்பேடு வாழைத்தார் வியாபாரிகள் சங்க செயலாளராகவும் இருந்தார். இவருடைய மாமனார் துரைப்பாண்டியும் (55) வாழைத்தார் வியாபாரி ஆவார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். அப்போது சென்னையில் சிவசங்கரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சிவசங்கர் தனது மனைவி இந்திராணி (28), மகன் நவீன் (6), தாயார் கோமத்தரசி (65), மாமனார் துரைப்பாண்டி (55), மாமியார் ஜானகித்தாய் (50), உறவினர் ராஜசேகர பாண்டியன் ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு காரில் புறப்பட்டார். லாரி மீது மோதல் காரை நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த டிரைவர் ரஞ்சித் (28) ஓட்டினார். கார் நேற்று அதிகாலை 6 மணி அளவில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த வெங்கனூரில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அவர்களுக்கு முன்னால் சாலையோரமாக நின்றுகொண்டு இருந்த காலி கியாஸ் சிலிண்டர் லாரி திடீரென புறப்பட்டு சாலையின் நடுப்பகுதிக்கு வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத, கார் டிரைவர் ரஞ்சித் காரை ஒதுக்க முயன்றார். ஆனால் முடியாததால், லாரியின் பக்கவாட்டில் கார் பயங்கரமாக மோதியது. இதனால் நிலைகுலைந்த லாரி சாலையோரமாக நின்ற வேன் மீது மோதி நின்றது. 4 பேர் பலி இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சிவசங்கர், அவருடைய மாமனார் துரைப்பாண்டி, மாமியார் ஜானகித்தாய் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்ததால் வெளியே வரமுடியாமல் ஓலமிட்டனர். அவர்களது கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மீட்புப்பணிக்காக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு படையினரும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கோமத்தரசி, டிரைவர் ரஞ்சித் ஆகியோரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோமத்தரசி மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரணை இந்த விபத்தில் சிவசங்கரின் மனைவி இந்திராணி (25), மகன் நவீன், ராஜசேகரபாண்டியன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். image: category: |
| தேவைப்பாடு குறைந்ததால் பாமாயில் இறக்குமதி 36 சதவீதம் குறைந்தது Posted: 14 Feb 2014 11:08 AM PST ஜனவரி மாதத்தில் பாமாயில் இறக்குமதி 36 சதவீதம் குறைந்து 5,55,446 டன்னாக குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இது 8,63,205 டன்னாக இருந்தது. தற்போது குளிர் காலம் என்பதால் தேவைப்பாடு குறைந்துள்ளது. இதனையடுத்து, சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஜனவரி மாதத்தில்தான் பாமாயில் இறக்குமதி குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் பாமாயில் இறக்குமதி 8,93,313 டன்னாக இருந்தது. image: category:Tagging: |
| ஜனவரி மாதத்தில் கைவினை பொருள்கள் ஏற்றுமதி 40% வளர்ச்சி Posted: 14 Feb 2014 11:06 AM PST இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு புதுடெல்லி கைவினை பொருள்கள் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 40 சதவீதம் வளர்ச்சி கண்டு 35 கோடி டாலராக உயர்ந்துள்ளது.லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட புதிய சந்தைகளில் இந்திய கைவினை பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளதால் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் நடப்பு நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை எட்ட முடியும் என கைவினை பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் செயல் இயக்குனர் ராகேஷ்குமார் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் 410 கோடி டாலருக்கு கைவினை பொருள்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் கைவினை பொருள்கள் 278 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2012–13–ஆம் நிதி ஆண்டில் மொத்த கைவினை பொருள்கள் ஏற்றுமதி 330 கோடி டாலராக இருந்தது. பாரம்பரிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. எனவே, இனிவரும் மாதங்களிலும் கைவினை பொருள்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |