Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: 1,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்; தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

Posted: 13 Feb 2014 01:49 PM PST

சென்னை,

தமிழகத்தில் பழைய பஸ்களை மாற்றுவதற்காக ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம்

தமிழக சட்டசபையில் நிதிஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாசித்தளித்த பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கடந்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிலான புதிய மின் உற்பத்தித்திறன், கூடுதலாக இந்த அரசால் சேர்க்கப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில், 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலத்தில் மின் பற்றாக்குறை வெகுவாகக் குறைக்கப்பட்டு தற்போது மின் தடையும் மிகக்குறைந்த அளவிலும், அடிக்கடி நிகழாமலும் உள்ளது. இதனால், மாநிலத்தில் தடையில்லாத தரமான மின்விநியோகம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரத்து 192 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தப்புகுண்டு, ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றத் தேவையான 400 கிலோவாட் மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மின்சாரத்தைப் பெற்றிட, திருவலத்தில், உயர் அழுத்த மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணியும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை ஆயிரத்து 593 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கவும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரெயில்வே மேம்பாலம்

ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2014–15–ம் ஆண்டில் ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்வே பாலப்பணிகள் திட்டத்தின் கீழ் 69 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலப் பணிகளில், 14 பணிகள் வரும் மார்ச் மாதத்தில் நிறைவுறும். 2014–15–ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 683.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரகடம் தொழில் பகுதி வழித்தடத் திட்டத்தின் முதல் கட்டப்பணி நிறைவடைய உள்ளது. இரண்டாவது கட்டப்பணியும் 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

ஆயிரம் புதிய பஸ்கள்

சென்னை வெளிவட்டச் சாலையின் முதல் கட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளும் ஆயிரத்து 75 கோடி ரூபாய் செலவில் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதுதவிர, சென்னை மாநகரப் பகுதிகளில், பாலங்கள், சாலைகள், ரெயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றிற்கான 17 திட்டங்களை நிறைவேற்ற இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெறப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 697.96 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 994 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 2014–15–ம் ஆண்டில் ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் போக்குவரத்து அமைப்புகளின் திறனை மேம்படுத்த, சென்னை மாநகரத்தில் ஒரு புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பைச் செயல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.

மோனோ ரெயில்

சென்னையில் மோனோ ரெயில் திட்டம், செயல்படுத்தத்தக்க முறையில் திருத்தி அமைக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014–15–ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின் பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்தவும், அதை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த ஏதுவாகவும், ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பேருந்துகளின் தடம் அறிந்து, பேருந்து நிறுத்தங்களில் தகவல் அளிப்பதற்காக அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படும்.

முதல் கட்டமாக, 500 பேருந்து நிறுத்தங்களை இணைத்து, தட வரைபடங்கள், வரவிருக்கும் பேருந்து பற்றிய தகவல்களும் இதர வசதிகளும் கொண்ட பொதுத்தகவல் முறை அமைக்கப்படும். படிப்படியாக மாநகரத்தில் உள்ள அனைத்துப் பேருந்து நிறுத்தங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

திறன் மேம்பாட்டு மையம்

நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 100 கோடி ரூபாய் செலவில் சென்னையில் நடத்தப்படும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான சிறப்பு சலுகைத் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதிலும் உள்ள 53 ஆயிரம் ஏக்கர் நிலம் மேம்படுத்தப்படும். மதுரை, தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சிறப்பு செயலாக்க முகமை ஒன்று ஏற்படுத்தப்படும். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானிலும், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையிலும், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

ஒரு லட்சத்து ஆறாயிரம் வீடுகள்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை ஊக்குவிப்பதற்கு அரசால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களிலும், 10 சதவீத இடம் தனியாக ஒதுக்கப்பட்டு அதில் தகவல் தொழில்நுட்பத் தொழிலை புதிதாகத் தொடங்குவதற்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, புதிய தொழில் முனைவோருக்கு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். இந்திரா வீட்டுவசதித் திட்டத்தில், 2014–15–ம் ஆண்டில் ஒரு லட்சத்து ஆறாயிரம் வீடுகள் அமைக்கப்படும்.

பாதாள சாக்கடை

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளிலும் தகுந்த பாதாளச் சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்த இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. திருச்சி மாநகராட்சியிலும், 21 நகராட்சிகளிலும், 29 பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, 2 ஆயிரத்து 434 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான பணிகள் 2014–15–ம் ஆண்டில் தொடங்கும்.

பேரூராட்சிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டில் 150 கோடி ரூபாய் செலவில், 388 கிலோமீட்டர் நீளமுள்ள 273 சாலைப்பணிகள், 124.96 கிலோமீட்டர் நீளமுள்ள 105 வெள்ளநீர் வடிகால்கள், 29 பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய ஊரகக்குடிநீர் வழங்கல் திட்டம், அடிப்படைத் தேவைகள் திட்டத்தின்படி 2014–15–ம் ஆண்டில் மொத்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 6 ஆயிரம் ஊரகக் குடியிருப்புகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

மருத்துவத்துறைக்கு ஒதுக்கீடு

ஆரணி, திண்டிவனம், திருவத்திபுரம், பெரியகுளம் ஆகிய நான்கு நகராட்சிகளில் வாழும் 2.17 லட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் தனிக்குடிநீர் வழங்கும் திட்டங்களை 117.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் இல்லாத நிலையை உருவாக்கும் ராஜீவ் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 21 ஆயிரத்து 208 குடியிருப்புகளை கட்டுவதற்கான பணிகள் 2015–ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

2014–15–ம் ஆண்டில், சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் 197.10 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 747 குடியிருப்புகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைக்கும். மருத்துவத்துறையில் 2010–11–ம் ஆண்டில் 4 ஆயிரத்து 395.30 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீட்டை 2014–15–ம் ஆண்டு 7 ஆயிரத்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆரம்ப சுகாதார மையங்கள்

118 புதிய ஆரம்ப சுகாதார மையங்களை அமைக்கவும், 64 ஆரம்ப சுகாதார மையங்களை முப்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகத்தரம் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், சென்னை மாநகராட்சியில் 20 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும். மற்ற ஒன்பது மாநகராட்சிகளிலும் 77 நகராட்சிகளிலும், 37 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகளைப் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய முன் முயற்சியை இந்த அரசு செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில், வட்டாரத்துக்கு இரண்டு குழுக்கள் வீதம் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனரை கொண்ட 770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, 31 மாவட்டங்களிலும் மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் வீதம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இல்லாத இடங்களில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் நிறுவப்படும்.

உயர்நிலை மருத்துவம்

உயர்நிலை மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு, 300 கோடி ரூபாய் செலவில் நவீன விபத்து சிகிச்சை மையங்களுடன் கூடிய இரண்டு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனைகளை தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் இந்த அரசு அமைக்கும். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவுகளுக்கான ஒரு புதிய பலமாடிக் கட்டடம் 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். 14 கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் வழங்கப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மேம்படுத்தப்படும். மேலும், இம்மருத்துவமனையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக புறநோயாளிகளுக்கான வசதிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 2-வது நாளில் கரன் ஷர்மா ரூ.3¾ கோடிக்கு ஏலம் ரஞ்சி கிரிக்கெட்டில் அசத்தியவர்களும் கோடிகளை அள்ளினர்

Posted: 13 Feb 2014 01:46 PM PST

பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தின், 2-வது நாளில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் கரன் ஷர்மா ரூ.3¾ கோடிக்கு விலை போனார்.

ஐ.பி.எல். ஏலம்

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஏலப்பட்டியலில் உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் மொத்தம் 514 பேர் அங்கம் வகித்தனர்.

முதல் நாளில் முன்னணி வீரர்கள் கோடிகளில் புரண்டனர். யுவராஜ்சிங் ரூ.14 கோடிக்கும் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), தினேஷ் கார்த்திக் ரூ.12.5 கோடிக்கும் (டெல்லி டேர்டெவில்ஸ் அணி), கெவின் பீட்டர்சன் (டெல்லி) ரூ.9 கோடிக்கும் ஏலம் போனார்கள்.

இந்த நிலையில் 2-வது நாள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத உள்ளூர் வீரர்கள் 295 பேர் முதல் முறையாக ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

முதல் வீரராக தமிழகத்தை சேர்ந்த அனிருதாவை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது. இவரது தந்தை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ஐதராபாத் அணியின் ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷிதவான்-கரன் ஷர்மா

ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய வீரர்களையே பெரும்பாலான அணிகள் குறி வைத்தன. கடந்த ரஞ்சி சீசனில் மொத்தம் 49 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்த இமாச்சலபிரதேசத்தின் ஆல்-ரவுண்டரான வேகப்பந்து வீச்சாளர் 23 வயதான ரிஷி தவானின் அடிப்படை விலை ரூ.20 லட்சம். அவரை இழுக்க ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகள் மல்லுகட்டின. இறுதியில் அவரை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி தட்டிச் சென்றது. ரிஷி தவான் கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று இருந்தார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரெயில்வே சுழற்பந்து வீச்சாளர் 26 வயதான கரன் ஷர்மாவுக்கும் கடும் கிராக்கி காணப்பட்டது. இவரது ஆரம்ப விலை ரூ.30 லட்சமாகும். இவரை எடுப்பதில் ஆர்வம் காட்டிய சென்னையும், டெல்லியும் ரூ.70 லட்சத்துடன் ஒதுங்கின.

இதன் பின்னர் பஞ்சாப்-ஐதராபாத் அணிகள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. தங்கள் அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டதால், பஞ்சாப் அணி ரூ.3.50 கோடி வரை கேட்டு பார்த்தது. ஆனாலும் ஐதராபாத் அணி விடுவதாக இல்லை. ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு அவரை தங்களுக்கு சொந்தமாக்கியது. சிக்கனமாக பந்து வீசுவதில் கெட்டிக்காரரான கரன் ஷர்மா முந்தைய சீசனிலும் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர் என்பது நினைவு கூரத்தக்கது. இரண்டாவது நாளில் கூடுதல் விலைக்கு போனவர் இவர் தான்.

ஜாதவுக்கு அதிர்ஷ்டம்

2013-2014-ம் ஆண்டு ரஞ்சி தொடரில் 6 சதங்கள் உள்பட 1223 ரன்கள் குவித்து முதலிடத்தை பெற்ற மராட்டிய பேட்ஸ்மேன் கேதார் ஜாதவின் மதிப்பு ரூ.30 லட்சத்தில் இருந்து தொடங்கியது. அவரை வசப்படுத்துவதற்கு 4 அணிகள் மோதின. பிறகு சன்ரைசர்ஸ் ரூ.2 கோடிக்கு அவரது தொகையை உயர்த்தியதும் மற்ற அணிகள் மவுனித்து நின்றன.

ஆனாலும் சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. கேதார் ஜாதவை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 'மேட்ச் கார்டு' சலுகையை பயன்படுத்தி ரூ.2 கோடிக்கு வாங்கியது.

நியூசிலாந்து தொடரில் இடம் பெற்று முதல் சர்வதேச போட்டிக்காக காத்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1½ கோடிக்கு வாங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியரான மனிஷ் பாண்டேவை ரூ.1.7 கோடிக்கு கொல்கத்தா அணியும், கடந்த ரஞ்சி தொடரில் 41 பேரை அவுட் ஆக்கி சாதனை படைத்த விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரேவை ரூ.1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவில் உள்ளூர் போட்டிகளில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பியூரன் ஹென்ரிக்சை ரூ.1.8 கோடிக்கு பஞ்சாப் அணியும் தேர்வு செய்தது.

அதிக பிரபலமில்லாத மேற்கண்ட வீரர்களின் காட்டில் இனி பணமழை கொட்டப்போகிறது.

ராஸ் டெய்லர் ரூ.2 கோடி

முதல் நாளில் ஏலம் போகாத பல வீரர்கள் நேற்று மறுஏலத்திற்கு வந்தனர். இதில் டேவிட் ஹஸ்சி, மேத்யூஸ், அபினவ் முகுந்த், பத்ரிநாத், ஜெயவர்த்தனே உள்ளிட்டோரின் பெயர்களை வாசித்த போது, எந்த அணிகளும் வாயை திறக்கவில்லை. இதனால் இவர்களுக்கு இந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடும் கனவு தகர்ந்தது.

அதே சமயம் முதல் நாளில் ஏலம் போகாத நியூசிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லரை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்தது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். பிறகு அடுத்த சீசனுக்கு அவர்களை மேற்கொண்டு ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ளலாம்.

category:

2–வது நாளில் ஏலம் போன வீரர்கள்

Posted: 13 Feb 2014 01:37 PM PST

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2–வது நாளான நேற்று மொத்தம் 84 வீரர்கள் ஏலம் போனார்கள். அவர்கள் விவரம் வருமாறு:–

வீரர் நாடு அணி தொகை

கரன்ஷர்மா இந்தியா ஐதராபாத் 3¾

ரிஷி தவான் இந்தியா பஞ்சாப் ரூ.3 கோடி

ராஸ் டெய்லர் நியூசிலாந்து டெல்லி ரூ.2 கோடி

கேதார் ஜாதவ் இந்தியா டெல்லி ரூ.2 கோடி

ஹென்ரிக்ஸ் தென் ஆப்பிரிக்கா பஞ்சாப் ரூ.1.8 கோடி

மனிஷ் பாண்டே இந்தியா கொல்கத்தா ரூ.1.7 கோடி

ரஜத் பாட்டியா இந்தியா ராஜஸ்தான் ரூ.1.7 கோடி

ஆதித்ய தாரே இந்தியா மும்பை ரூ.1.6 கோடி

அகர்வால் இந்தியா டெல்லி ரூ.1.6 கோடி

ஈஸ்வர் பாண்டே இந்தியா சென்னை ரூ.1½ கோடி

கிறிஸ் லின் ஆஸ்திரேலியா கொல்கத்தா ரூ.1.3 கோடி

குர்கீரத்சிங் இந்தியா பஞ்சாப் ரூ.1.3 கோடி

பம்ரா இந்தியா மும்பை ரூ.1.2 கோடி

தவால் குல்கர்னி இந்தியா ராஜஸ்தான் ரூ.1.1 கோடி

டென் டஸ்சாட் நெதர்லாந்து கொல்கத்தா ரூ.1 கோடி

பார்னல் தென் ஆப்பிரிக்கா டெல்லி ரூ.1 கோடி

லோகேஷ் ராகுல் இந்தியா ஐதராபாத் ரூ.1 கோடி

கம்மின்ஸ் ஆஸ்திரேலியா கொல்கத்தா ரூ.1 கோடி

முரளிகார்த்திக் இந்தியா பஞ்சாப் ரூ.1 கோடி

பர்வீஸ் ரசூல் இந்தியா ஐதராபாத் ரூ.95 லட்சம்

ஜலஜ் சக்சேனா இந்தியா மும்பை ரூ.90 லட்சம்

நதீம் இந்தியா டெல்லி ரூ.85 லட்சம்

சந்தீப் ஷர்மா இந்தியா பஞ்சாப் ரூ.85 லட்சம்

மன்தீப்சிங் இந்தியா பஞ்சாப் ரூ.80 லட்சம்

கருண் நாயர் இந்தியா ராஜஸ்தான் ரூ.75 லட்சம்

அக்ஷர் பட்டேல் இந்தியா பஞ்சாப் ரூ.75 லட்சம்

சூர்யகுமார் யாதவ் இந்தியா கொல்கத்தா ரூ.70 லட்சம்

இக்பால் அப்துல்லா இந்தியா ராஜஸ்தான் ரூ.65 லட்சம்

உன்முக்சந்த் இந்தியா ராஜஸ்தான் ரூ.65 லட்சம்

பிஸ்லா இந்தியா கொல்கத்தா ரூ.60 லட்சம்

ரஸ்செல் வெஸ்ட் இண்டீஸ் கொல்கத்தா ரூ.60 லட்சம்

நமன் ஓஜா இந்தியா ஐதராபாத் ரூ.50 லட்சம்

ஹேஸ்டிங்ஸ் ஆஸ்திரேலியா சென்னை ரூ.50 லட்சம்

சித்தார்த் கவுல் இந்தியா டெல்லி ரூ.45 லட்சம்

ஹர்ஷால் பட்டேல் இந்தியா பெங்களூர் ரூ.40 லட்சம்

ராகுல் சுக்லா இந்தியா டெல்லி ரூ.40 லட்சம்

தீபக் ஹூடா இந்தியா ராஜஸ்தான் ரூ.40 லட்சம்

பிரதாப்சிங் இந்தியா கொல்கத்தா ரூ.40 லட்சம்

குல்தீப் யாதவ் இந்தியா கொல்கத்தா ரூ.40 லட்சம்

அபு நெசிம் இந்தியா பெங்களூர் ரூ.30 லட்சம்

பரமேஸ்வரன் இந்தியா ஐதராபாத் ரூ.30 லட்சம்

சான்டோகி வெஸ்ட் இண்டீஸ் மும்பை ரூ.30 லட்சம்

கெவோன் ஹூப்பர் வெஸ்ட் இண்டீஸ் ராஜஸ்தான் ரூ.30 லட்சம்

டீ லாங் தென் ஆப்பிரிக்கா மும்பை ரூ.30 லட்சம்

விஜய் ஜோல் இந்தியா பெங்களூர் ரூ.30 லட்சம்

மிதுன் மன்ஹாஸ் இந்தியா சென்னை ரூ.30 லட்சம்

யாக்னிக் இந்தியா ராஜஸ்தான் ரூ.30 லட்சம்

விக்ரம்ஜீத் மாலிக் இந்தியா ராஜஸ்தான் ரூ.20 லட்சம்

சச்சின் ராணா இந்தியா பெங்களூர் ரூ.20 லட்சம்

கவுதம் இந்தியா மும்பை ரூ.20 லட்சம்

பானிக்கர் இந்தியா ஐதராபாத் ரூ.20 லட்சம்

டெபப்ரதா தாஸ் இந்தியா கொல்கத்தா ரூ.20 லட்சம்

அனுரீத் சிங் இந்தியா பஞ்சாப் ரூ.20 லட்சம்

பென் டங் ஆஸ்திரேலியா மும்பை ரூ.20 லட்சம்

ஆஷிஷ் ரெட்டி இந்தியா ஐதராபாத் ரூ.20 லட்சம்

தாகூர் இந்தியா பஞ்சாப் ரூ.20 லட்சம்

ஜகாதி இந்தியா பெங்களூர் ரூ.20 லட்சம்

அனிருதா இந்தியா ஐதராபாத் ரூ.20 லட்சம்

தகவாலே இந்தியா பெங்களூர் ரூ.10 லட்சம்

தன்மே மிஸ்ரா கென்யா பெங்களூர் ரூ.10 லட்சம்

மராதே இந்தியா மும்பை ரூ.10 லட்சம்

கரன்வீர் சிங் இந்தியா பஞ்சாப் ரூ.10 லட்சம்

கோபால் இந்தியா மும்பை ரூ.10 லட்சம்

ஜூனேஜா இந்தியா ஐதராபாத் ரூ.10 லட்சம்

அங்கித் ஷர்மா இந்தியா ராஜஸ்தான் ரூ.10 லட்சம்

தேவேதியா இந்தியா ராஜஸ்தான் ரூ.10 லட்சம்

ரோனித் மோர் இந்தியா சென்னை ரூ.10 லட்சம்

ஷாகல் இந்தியா பெங்களூர் ரூ.10 லட்சம்

சுயல் இந்தியா மும்பை ரூ.10 லட்சம்

சயன் மோண்டல் இந்தியா கொல்கத்தா ரூ.10 லட்சம்

ஜெயந்த் யாதவ் இந்தியா டெல்லி ரூ.10 லட்சம்

மிலின்ட் குமார் இந்தியா டெல்லி ரூ.10 லட்சம்

விஜய்சங்கர் இந்தியா சென்னை ரூ.10 லட்சம்

பாபா அபராஜித் இந்தியா சென்னை ரூ.10 லட்சம்

ஷரத் இந்தியா டெல்லி ரூ.10 லட்சம்

வாங்கடே இந்தியா மும்பை ரூ.10 லட்சம்

பவான் நெஜி இந்தியா சென்னை ரூ.10 லட்சம்

பிரவீன் தாம்பே இந்தியா ராஜஸ்தான் ரூ.10 லட்சம்

சந்தீப் வாரியர் இந்தியா பெங்களூர் ரூ.10 லட்சம்

பெய்ன்ஸ் இந்தியா ராஜஸ்தான் ரூ.10 லட்சம்

அமித் மிஸ்ரா ஜூனியர் இந்தியா ராஜஸ்தான் ரூ.10 லட்சம்

சமா மிலின்ட் இந்தியா ஐதராபாத் ரூ.10 லட்சம்

ரிக்கி புய் இந்தியா ஐதராபாத் ரூ.10 லட்சம்

ஷிவம் ஷர்மா இந்தியா பஞ்சாப் ரூ.10 லட்சம்

category:

யுவராஜிக்கு ரூ.14 கோடி: மல்லையா திடீர் புகார்

Posted: 13 Feb 2014 01:30 PM PST

பெங்களூர்,

ஐ.பி.எல். ஏலத்தின் முதல் நாளில் யுவராஜ்சிங்கை எடுக்க பெங்களூர்–பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நிலவியது. அவரது மதிப்பு ரூ.10 கோடியை எட்டியதும் பஞ்சாப் விலகிக் கொண்டது. இதையடுத்து யுவராஜ்சிங் பெங்களூர் அணிக்கு ரூ.10 கோடிக்கு ஒதுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலம் நடத்துபவர் திடீரென ஏலம் நீடிக்கிறது என்று கூறினார். கொல்கத்தா அணி ரூ.10.5 கோடிக்கு கேட்டதை தான் கவனிக்க தவறி விட்டதாக கூறி ஏலத்தை தொடர்ந்தார். சிறிய குழப்பத்துக்கு மத்தியில் கடைசியில் யுவராஜ்சிங்கை ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணி வாங்க வேண்டியதாகி விட்டது.

இது குறித்து பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா, ஐ.பி.எல். நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார் 'என்னை பொறுத்தவரை யுவராஜ்சிங் மீதான ஏலம் ரூ.10 கோடியில் முடிந்து விட்டது. எனவே அவரது விலை ரூ.14 கோடி என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக புகார் செய்திருக்கிறோம்' என்று மல்லையா தெரிவித்தார்.

இது பற்றி ஐ.பி.எல். சேர்மன் ரஞ்சிப் பிஸ்வாலிடம் கேட்ட போது, 'யுவராஜ்சிங்கை ரூ.14 கோடி என்பதற்கு பதிலாக ரூ.10 கோடி தொகைக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் ஏலம் நடத்துபவரின் முடிவே இறுதியானது. எனவே இப்போது எதுவும் செய்ய முடியாது' என்றார்.

இதற்கிடையே யுவராஜ்சிங் அளித்த பேட்டியில், 'பெங்களூர் அணிக்காக விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடத்திற்கு செல்வதாக உணர்கிறேன். கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இருப்பினும் தற்போது எனது கவனம் 20 ஓவர் உலககோப்பை போட்டி மீது தான் உள்ளது. ' என்றார்.

category:

35 லட்சம் குடும்பத்துக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் பள்ளிக்கல்விக்கு ரூ. 17,731 கோடி: கூவம் சீரமைக்க ரூ.3,833 கோடி; தஞ்சை, நெல்லையில் சிறப்பு மருத்துவமனை; புதிய வரி இல்லாத தமிழக பட்ஜெட்

Posted: 13 Feb 2014 01:29 PM PST

சென்னை,

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

ஜெயலலிதா வந்தார்

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10.52 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்தார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
சபாநாயகர் ப.தனபால், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பட்ஜெட் தாக்கல்

பின்னர், 2014-2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு அறிக்கை) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். காலை 11.02 மணிக்கு 80 பக்க பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்த அவர் பகல் 1.42 மணி வரை தொடர்ச்சியாக 2 மணி 40 நிமிடங்கள் வாசித்தார்.

இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்போ, நடைமுறையில் உள்ள வரி விகிதத்தினை உயர்த்தவோ செய்யவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் சலுகைகள் தரும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார்.  பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

காவல் துறை

* காவல் துறைக்கான ஒதுக்கீடு ரூ.5,186.20 கோடி.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு ரூ.186.65 கோடி.
* சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.194.66 கோடி ஒதுக்கீடு.
* நீதி நிர்வாகத்துக்கு ரூ.783.02 கோடி.
* தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கப்படும். ரூ.39.29 கோடி தமிழ் வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது.
* ரூ.1,481 கோடி மதிப்பீட்டிலான கடற்கரை இயற்கை சீற்ற ஆபத்து குறைப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டதிற்காக ரூ.106.29 கோடி ஒதுக்கீடு.
* ஊட்டியை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.

இலவச வேட்டி-சேலை

* இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.499.16 கோடி ஒதுக்கீடு.
* நெசவாளர்களுக்கு சூரிய ஒளி மின்வசதி கொண்ட 10 ஆயிரம் பசுமை வீடுகளை அமைக்க ரூ.168 கோடி ஒதுக்கீடு.
* இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும். இதற்கு மாநில அரசின் பங்காக ரூ.729.69 கோடி ஒதுக்கீடு.
* தெருவிளக்குகளை சூரிய ஒளி மின்சக்தியில் செயல்படுத்தும் திட்டத்துக்கு ரூ.46.58 கோடி ஒதுக்கீடு.
* மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடியும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.750 கோடியும் ஒதுக்கீடு.

பாதாள சாக்கடை திட்டம்

* திருச்சி மாநகராட்சியிலும், 21 நகராட்சிகளிலும், 29 பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை ரூ.2433.79 கோடி செலவில் செயல்படுத்த அனுமதி.
* ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.818.77 கோடி ஒதுக்கீடு.
* ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை மையங்களுடன் கூடிய இரண்டு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனைகள் தஞ்சை மற்றும் நெல்லையில் அமைக்கப்படும்.
* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு பிரிவுகளுக்கான புதிய பல மாடி கட்டிடம் ரூ.75 கோடி செலவில் கட்டப்படும்.
* இந்த மருத்துவமனையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் ரூ.91 கோடி மதிப்பீட்டில் புதிதாக புற நோயாளிகளுக்கான வசதிகள் அமைக்கப்படும்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

* முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.757.50 கோடி ஒதுக்கீடு.
* மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு ரூ.7,005.12 கோடியாக உயர்வு.
* சென்னை மாநகராட்சியில் 20 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதுடன் தற்போதுள்ள 100 நகர்ப்புற சுகாதார மையங்களும் வலுப்படுத்தப்படும்.
* மற்ற 9 மாநகராட்சிகளிலும், 77 நகராட்சிகளிலும் 37 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதோடு, தற்போதுள்ள 243 நகர்ப்புற சுகாதார மையங்களும் வலுப்படுத்தப்படும்.
* ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் ஆகியோரை கொண்ட இரு குழுக்கள், அதாவது 770 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும்.

பள்ளிக்கல்விக்கு ரூ.17,731 கோடி

* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.17,731.71 கோடி ஒதுக்கீடு.
* 111.29 லட்சம் மாணவ&மாணவியருக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதற்கு ரூ.264.35 கோடி
* ரூ.1,100 கோடி செலவில், பிளஸ்&2 மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவ&மணவியர்களுக்கு 5.5 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
* உயர் கல்வி துறைக்கு ரூ.3,627.93 கோடி ஒதுக்கீடு.
* முதல் தலைமுறை பட்டப்படிப்பு பயிலும் மாணவ&மாணவியர்களுக்கு கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்துக்கு ரூ.585.17 கோடி ஒதுக்கீடு.
* விளையாட்டு மேம்பாடு மற்றும் விளையாட்டு சார்ந்த பணிகளுக்காக ரூ.146.64 கோடி ஒதுக்கீடு.

விலையில்லா மின்விசிறி

* 2014-2015-ம் ஆண்டில் 35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
* பல்வேறு திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.751.09 கோடி ஒதுக்கீடு. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், ரூ.547.09 கோடி பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு.
* சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,412.88 கோடி ஒதுக்கீடு.
* கல்வி உதவி திட்டங்களுக்காக ரூ.236.32 கோடி ஒதுக்கீடு.
* ரூ.2.80 கோடி செலவில் 10 கல்லூரி விடுதிகள் புதிதாக தொடங்கப்படும்.
* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.93.84 கோடி ஒதுக்கீடு.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.284.29 கோடி ஒதுக்கீடு.
* பயிர்க்காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி ஒதுக்கீடு.
விலையில்லா கறவை பசுக்கள்
* ரூ.43.65 கோடி செலவில் மேலும் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்படும்.
* 1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்குவதற்காக ரூ.198.25 கோடி ஒதுக்கீடு.
* ரூ.184.72 கோடி செலவில் மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்எண்ணெய்.
* உணவு மானியத்துக்கான ஒதுக்கீடு ரூ.5,300 கோடியாக உயர்வு.
* மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களுக்காக ரூ.119.98 கோடி ஒதுக்கீடு.
* நீர்ப்பாசன துறைக்கு ரூ.3,669.79 கோடி ஒதுக்கீடு.

கூவத்தை சீரமைக்க ரூ.3,833 கோடி

* கூவம் நதியை முழுமையாக சீரமைத்து மீட்டெடுக்க 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பெருந்திட்டத்துக்கு ரூ.3,833.62 கோடி ஒதுக்கீடு. பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும், மறுகுடியமர்வு செய்யவும் ரூ.2,077.29 கோடி ஒதுக்கீடு.
* ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் ரூ.200 கோடி செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 பேருந்துகள் வாங்கப்படும்.
* டீசல் மானியமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டு உள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

வெறி நாய் கடித்து குதறியதில் 10 சிறுவர்கள் படுகாயம் உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை

Posted: 13 Feb 2014 01:28 PM PST

அருப்புக்கோட்டை,

விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 சிறுவர்களை ஒரு வெறிநாய் கடித்துக் குதறி யது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 சிறுவர்கள் தீவிர சிகிச்சைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு வெறிநாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரியுள்ளனர். வெறிநாயை பிடிக்க பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. எனவே சுகாதார துறை அதிகாரிகள் வெறிநாய் கடிக்கு ஆளான சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம் வெறிநாயை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்ற திட்டம்?

Posted: 13 Feb 2014 01:26 PM PST

பெங்களூர்,

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வருகிற ஏப்ரல் 9–ந் தேதி முதல் ஜூன் 3–ந் தேதிக்குள் இடைப்பட்ட காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி குறுக்கிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றம்?

கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், ஐ.பி.எல். சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் முழுமையாக நடத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் குறுக்கிட்டு பாதுகாப்பு பிரச்சினை எழுந்தால் தென் ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்தும் திட்டம் உள்ளது. இந்த வகையில் மேலும் சில வெளிநாடுகளும் பரிசீலனையில் உள்ளது.

உள்துறை மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் வருகிற வாரத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இந்தியாவில் அதிகப்பட்ச ஆட்டங்களை நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். மத்திய அரசு பச்சைக்கொடி காட்டினால் முழு போட்டியும் இந்தியாவில் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

2009–ம் ஆண்டு...

பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 2009–ம் ஆண்டுக்கான 2–வது ஐ.பி.எல்.போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பிரச்சினை உருவானால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்த முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

category:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார்-யார்?

Posted: 13 Feb 2014 01:19 PM PST

சென்னை,

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் வருமாறு:-டோனி (கேப்டன்), சுரேஷ்ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), டுபிளிஸ்சிஸ் (தென் ஆப்பிரிக்கா), வெய்ன் சுமித் (வெஸ்ட் இண்டீஸ்), பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), மொகித் ஷர்மா, நெஹரா, ல்பனாஸ் (ஆஸ்திரேலியா), பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்), மேத் ஹென்ரி (நியூசிலாந்து), பாபா அபராஜித், மிதுன் மன்ஹாஸ், ஈஸ்வர் பாண்டே, பவான் நெஜி, விஜய்சங்கர், ரோனித் மோர், ஜான் ஹேஸ்டிங்ஸ் (ஆஸ்திரேலியா).
 

category:

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

Posted: 13 Feb 2014 01:15 PM PST

அபுதாபி,

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இன்று தொடங்கி மார்ச் 1–ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, பப்புவா நியூகினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. விஜய் ஜோல் தலைமையிலான இந்திய தனது தொடக்க ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை துபாயில் சந்திக்கின்றன.

இன்றைய தொடக்க நாளில் கனடா–ஜிம்பாப்வே, தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்–இங்கிலாந்து, நியூசிலாந்து–இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன.

category:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா திணறல்

Posted: 13 Feb 2014 01:11 PM PST

செஞ்சுரியன்,

தென்ஆப்பிரிக்கா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா 2–வது நாளான நேற்று 397 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. ஷான் மார்ஷ் 148 ரன்களும், 4–வது சதத்தை பூர்த்தி செய்த ஸ்டீவன் சுமித் 100 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா திணறியது. அந்த அணி 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் 2–வது நாள் ஆட்டம் முன்கூட்டிய முடித்துக் கொள்ளப்பட்டது. டிவில்லியர்ஸ் 52 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™