Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலி வாலிபர் கைது

Posted: 11 Feb 2014 12:14 PM PST

அறந்தாங்கி,

அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள்மோதியது

அறந்தாங்கியை அடுத்த பள்ளத்திவயலைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மகன் கண்ணன் (வயது 16). இவர் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த கண்ணனின் உறவினரான ஒரு பெண்ணை நாய் கடித்துவிட்ட தால், அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் கண்ணனும் வந்தார்.

சிகிச்சை பெற்ற பின்னர் கண்ணனும், அந்த பெண்ணும் பஸ் நிலையத்திற்கு செல்வதற் காக அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

பச்சைக் காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் வந்த போது, பின்னால் அழியா நிலையைச் சேர்ந்த கருப்பையா மகன் பாண்டியன் (23) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கண்ணன் மீது மோதியது.

பள்ளி மாணவர் பலி

இதில் பலத்த காயமடைந்த கண்ணனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி செய்யப்பட்டு, அவர் மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ் பத்திரிக் கும் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாப மாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறந் தாங்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

சென்னை–ராஜஸ்தான் ஆட்டத்தில் சந்தேகம்: ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு? திடுக்கிடும் தகவல்கள்

Posted: 11 Feb 2014 11:59 AM PST

புதுடெல்லி,

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூதாட்ட அறிக்கை

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த நீதிபதி முகுல் முட்கல், கூடுதல் சொலிசிடர் ஜெனரல் என்.நாகேஸ்வர்ராவ், அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி வக்கீல் நிலே தத்தா ஆகியோர் கொண்ட கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் 170 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சூதாட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடிய 6 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முட்கல், தனது அறிக்கையில் எந்த தேசிய வீரரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார். நிலே தத்தா தான் தனது அறிக்கையில் 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு உண்டு என்பதை கூறியிருக்கிறார்.

டோனிக்கு தொடர்பா?

அது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் 'மேட்ச் பிக்சிங்' மற்றும் சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்று கைது செய்யப்பட்ட சூதாட்ட புரோக்கர் உத்தம் ஜெயின் என்ற கிட்டி, திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஜி.சம்பத்குமார் நடத்திய விசாரணையின் போது கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி எங்களிடம் தெரிவித்தார்.

விக்ரம் அகர்வால் (ஓட்டல் அதிபர்), குருநாத் மெய்யப்பன் (சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்), கிரிக்கெட் வீரர்கள் டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் இன்னும் சிலருக்கு மேட்ச் பிக்சிங்கில் என்னென்ன தொடர்பு உண்டு என்பதை தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் உத்தம் ஜெயின்  சொல்லியிருக்கிறார்.

சென்னை ஆட்டத்திலும் சந்தேகம்

கடந்த மே 12–ந்தேதி ஜெய்ப்பூரில் நடந்த சென்னை சூப்பர்கிங்ஸ்– ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 130 முதல் 140 ரன்கள் வரை எடுக்கும் என்று குருநாத் மெய்யப்பன் தனது கணிப்பை விண்டூ தாரா சிங்கிடம் (இந்தி நடிகர்) கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே ஏறக்குறைய நடந்துள்ளது. சென்னை அணி அந்த ஆட்டத்தில் 141 ரன்களே எடுத்தது. ஆனால் இதன் மூலம் வைத்து மட்டுமே குருநாத் மெய்யப்பன், 'மேட்ச் பிக்சிங்' செய்தார் என்று அர்த்தம் கிடையாது.

ஏனெனில் மெய்யப்பனுக்கு அது தொடர்பான தகவல்கள் நிறைய தெரிந்து இருந்தது. அல்லது அவருக்கு அந்த அணியின் ரகசிய தகவல்கள்,  திட்டங்கள், ஆட்டத்தின் நிலைப்பாடுகள் அனைத்தையும் எளிதாக பெறும் நிலை இருந்தது. இது போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கு கிடைத்திருக்காது.

போலீஸ் மீது அதிருப்தி

சென்னை–ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தை 'பிக்சிங்' செய்வதற்கு ஒரு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று ஏப்ரல் 27–ந்தேதி நடந்த இரவு விருந்து ஒன்றில் அகர்வால் உத்தம் ஜெயினிடம் கூறியுள்ளார்.  பின்னர் அதே நாளில் குருநாத் மெய்யப்பன், சீனியர் வீரர் ஒருவர், தங்களது அணி 140 ரன்கள் மட்டுமே எடுப்பது என்ற திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவல் ஜெய்ப்பூரில் இருந்த சஞ்சய் என்பவருக்கு, அகர்வாலின் மூலம் ஜெயின் முன்னிலையில் போன் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

புரோக்கர் உத்தம் ஜெயின் கூறிய விஷயங்கள் பற்றி தெரிந்த அனைத்து போலீஸ் அதிகாரிகளும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கும் சென்னை சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கேட்ட போது யாரும் தாக்கல் செய்யவில்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில் இது தொடர்பாக முழு அதிகாரம் கொண்ட தனிப்பட்ட விசாரணை முகமை மூலம் விசாரணை நடத்த உத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாந்த் கூறிய தகவல்

இதே போல் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா, பிரபலமான இரண்டு இந்திய முன்னாள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்பதை நான் அறிவேன் என்று சொல்லியுள்ளார். சூதாட்டத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரிடம், மூன்று முன்னாள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு உண்டு என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விஷயங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

category:

ஆசிய கோப்பை–20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா நீக்கம் ரெய்னா, யுவராஜ்சிங்குக்கு 20 ஓவர் அணியில் மட்டும் இடம்

Posted: 11 Feb 2014 11:57 AM PST

பெங்களூர்,

ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டார். ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோருக்கு 20 ஓவர் அணியில் மட்டும் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி தேர்வு

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 25–ந்தேதி முதல் மார்ச் 8–ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை போட்டி முடிந்ததும் ஐந்தாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவும் வங்காளதேசத்தில் அரங்கேறுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி மார்ச் 16–ந்தேதி முதல் ஏப்ரல் 6–ந்தேதி வரை நடக்கிறது. இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி பெங்களூரில் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒரு நாள் போட்டி அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான ஒரு நாள் போட்டி அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 24 இன்னிங்சில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள ரெய்னா மோசமான பார்ம் காரணமாக கழற்றி விடப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக புஜாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி 2 ஆட்டங்களில் மட்டுமே (13 ரன், 0) விளையாடிய புஜாராவுக்கு, அதன் பிறகு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருவதால், அவரது நிலையான ஆட்டம், ஒரு நாள் போட்டிகளுக்கும் அவசியம் என்ற முடிவுக்கு தேர்வு குழு வந்துள்ளது.

இஷாந்தும் நீக்கம்

நியூசிலாந்து ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய ஆல்–ரவுண்டர் 29 வயதான ஸ்டூவர்ட் பின்னி, இரானி கிரிக்கெட்டில் காட்டிய வேகம் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஒரு நாள் போட்டி, 20 ஓவர் உலக கோப்பை இரு அணிகளிலும் அவர் வாய்ப்பு பெற்றுள்ளார்.அதே சமயம் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ரன்களை தாறுமாறாக வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இரு அணிகளில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார்.

யுவராஜ்சிங்

ஒரு நாள் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் யுவராஜ்சிங், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் மட்டும் தொடருகிறார். இதே போல் ஒரு நாள் போட்டி அணியில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னாவுக்கும், 20 ஓவர் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை அணி: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, அம்பத்தி ராயுடு, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

20 ஓவர் போட்டிக்கான அணி: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மொகித் ஷர்மா, வருண் ஆரோன்.

category:

14 மாத கால பிரச்சினை முடிவுக்கு வந்தது: இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீக்கம்

Posted: 11 Feb 2014 11:52 AM PST

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான 14 மாத கால தடையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நீக்கியுள்ளது.

தடையால் சர்ச்சை

ஊழல் முறைகேடு மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற ஒலிம்பிக் சாசன விதிமுறைகளை கடைபிடிக்க மறுத்ததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐ.ஓ.ஏ.), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் தடை விதித்தது.

இதனால் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொண்ட இந்திய ஒலிம்பிக் சங்கம் கடைசியில் ஐ.ஓ.சி.யின் நெருக்கடிக்கு பணிந்தது. கறைபடிந்த நிர்வாகிகளை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பது என்ற ஐ.ஓ.சி.யின் திருத்தப்பட்ட விதிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக் கொண்டது.

நிர்வாகிகள் தேர்தல்

இதைத் தொடர்ந்து புதிய விதிகளுக்குட்பட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்தது. சங்கத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.ராமச்சந்திரனும், பொதுச் செயலாளராக ராஜீவ் மேத்தாவும், பொருளாளராக அனில் கண்ணாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் தேர்தலை பார்வையிட்ட ஐ.ஓ.சி.யின் மூன்று பேர் கொண்ட பார்வையாளர்கள் திருப்தி தெரிவித்ததுடன், அது தொடர்பான அறிக்கையை ஐ.ஓ.சி.யிடம் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் அவசர கூட்டம் ரஷியாவின் சோச்சி நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விதிக்கபட்ட 14 மாத கால தடையை விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 தடை நீக்கம்

ஐ.ஓ.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'ஐ.ஓ.ஏ.–யின் நிர்வாகிகள் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான அறிக்கை எங்களுக்கு கிடைத்தது. இதில் முக்கிய அம்சமாக புதிய நிர்வாக அமைப்பில், வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றவர்கள் யாரும் இல்லை என்பதை எங்களது தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஐ.ஓ.ஏ. மீதான தடையை உடனடியாக நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி (குளிர் கால ஒலிம்பிக்) நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு தேசிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடையை தளர்த்துவது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சோச்சி குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய வீரர்கள், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர்.

தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை விலக்கப்பட்டிருப்பதன் மூலம், குளிர்கால ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் (பிப்.23) இந்திய வீரர்கள் தங்களின் தேசிய கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல முடியும். அது மட்டுமின்றி, ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

category:

ஐ.பி.எல். ஏலம் இன்று தொடங்குகிறது பீட்டர்சனை எடுக்க கடும் போட்டி

Posted: 11 Feb 2014 11:50 AM PST

பெங்களூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது.

ஐ.பி.எல். ஏலம்

ஒரு பக்கம் சூதாட்ட சர்ச்சை பற்றி எரிகின்ற நிலையில், மறுபுறம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும், நாளையும் நடக்கிறது. 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ஏலப்பட்டியலில் மொத்தம் 514 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 169 இந்தியர் உள்பட 219 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். 255 இந்தியர் உள்பட 295 பேர் உள்ளூர் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் ஆடியவர்கள். சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களும் ஏலத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் வீரர்கள் ஏலத்தொகை முதல்முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் (முன்பு அமெரிக்க டாலர்) கணக்கிடப்படுகிறது.

எவ்வளவு செலவு செய்யலாம்?

*ஒவ்வொரு அணியும் குறைந்தது ரூ.36 கோடியில் இருந்து அதிகபட்சமாக ரூ.60 கோடி வரை வீரர்களை ஏலத்தில் வாங்க செலவு செய்யலாம்.

*ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 16 வீரர்களும், 27 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் அதிகபட்சமாக 9 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம்.

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வெய்ன் பிராவோ ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குரிய ஊதியத் தொகை ரூ.39 கோடி (ரூ.12.5 கோடி, 9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி) போக மீதமுள்ள 21 கோடியை கொண்டு தான் எஞ்சிய வீரர்களை வாங்க முடியும். இதே போல் 5 வீரர்களை முழுமையாக தக்க வைத்துக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலைமையும் இது தான்.

*எந்த வீரர்களையும் வைத்துக் கொள்ளாத டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டுமே முழுமையான இருப்புடன் (ரூ.60 கோடி) ஏலத்தில் குதிக்கிறது.

*இந்த முறை 'மேட்ச் கார்டு' என்ற புதிய முறை அறிமுகமாகிறது. அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவித்த ஒரு வீரரை மறுபடியும் தங்கள் அணிக்கு இழுக்க விரும்பினால், மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி அந்த வீரரை ஏலத்தில் கேட்கப்பட்ட அதிகபட்ச தொகையை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். தக்க வைத்துக் கொள்ளப்படும் வீரர்களின்அடிப்படையிலேயே மேட்ச் கார்டு எண்ணிக்கை அமையும். சென்னை அணிக்கு ஒரு மேட்ச் கார்டு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு 3 மேட்ச் கார்டு கிடைத்துள்ளது. பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் தலா 2 மேட்ச் கார்டு வைத்துள்ளன.

ஷேவாக்–யுவராஜ்

ஏலத்தில், முத்திரை அந்தஸ்து பெற்ற வீரர்கள் கணிசமான தொகைக்கு விற்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி ஷேவாக்கை தக்க வைத்துக் கொள்ளாவிட்டாலும், அவரை ஏலம் மூலம் மீண்டும் எடுக்க வாய்ப்புள்ளது.

இதே போல் யுவராஜ்சிங்கை வாங்கவும் போட்டி இருக்கும். யுவராஜ்சிங்கை தங்கள் அணிக்கு எடுக்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட்கோலி விரும்புகிறார். இவர்களது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

பீட்டர்சன்

வெளிநாட்டு வீரர்களில் இரண்டு வீரர்களை தான் பெரும்பாலான அணிகள் குறி வைத்துள்ளன.

அதிரடிக்கு பிரசித்தி பெற்ற இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென நிரந்தரமாக நீக்கி விட்டது. இனி சர்வதேச போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்பதால், முதல்முறையாக இந்த ஐ.பி.எல். சீசனில்  முழுமையாக அவர் விளையாட முடியும். இதனால் அவரை இழுக்க ஒவ்வொரு அணிகளும் வரிந்துகட்டும். கிங்ஸ் லெவன் அணி அவரை இழுப்பதற்கான வியூகங்களை தீட்டி வருகிறது. இவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

நியூசிலாந்து ஆல்–ரவுண்டர் கோரி ஆண்டர்சனுக்கும் கிராக்கி காணப்படுகிறது. ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தவரான இவரது அடிப்படை விலை ரூ.1 கோடி என்றாலும், அதை விட சில மடங்கு தாராளமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.

காலை 9.30 மணிக்கு...

மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன், மேத்யூஸ் (இலங்கை), டேவிட் வார்னர், மிட்செல் ஜான்சன், கிளைன் மேக்வெல், ஸ்டீவன் சுமித், மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா), பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), வெய்ன் சுமித், டேரன் சேமி (வெஸ்ட் இண்டீஸ்), அலெக்ஸ் ஹாலஸ் (இங்கிலாந்து), உத்தப்பா, முரளிவிஜய், யூசுப் பதான், தினேஷ் கார்த்திக், ஜாகீர்கான், எல்.பாலாஜி (இந்தியா), கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) உள்ளிட்டோரும் நல்ல தொகைக்கு விலை போகலாம்.

வீரர்கள் மொத்தம் 53 பிரிவாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறார்கள். இதில் ஷேவாக், யுவராஜ்சிங், பீட்டர்சன் உள்ளிட்டோர் முதல் பிரிவில் அங்கம் வகிப்பதால், அவர்கள் தொடக்கத்திலேயே ஏலத்திற்கு வருகிறார்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஏலம் நிகழ்ச்சியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

category:

இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயித்ததில் முறைகேடு புகார்: மத்திய மந்திரி வீரப்ப மொய்லி மீது வழக்கு டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் நடவடிக்கை

Posted: 11 Feb 2014 11:33 AM PST

புதுடெல்லி,

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கிருஷ்ணா, கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து மத்திய அரசுக்கு சப்ளை செய்கிற இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்வதில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது.இது தொடர்பாக மத்திய மந்திரிசபை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் தஹிலியானி, மூத்த வக்கீல் காமினி ஜெய்ஸ்வால், மத்திய அரசு துறையின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா ஆகியோர் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளித்துள்ளனர்.

வழக்கு

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி ஊழல் தடுப்பு பிரிவை கேட்டுக்கொண்டுள்ளோம். மத்திய பெட்ரோலியத்துறை முன்னாள் மந்திரி முரளி தியோராவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர்கிறோம்.தற்போதைய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பன்கள் பிரிவின் முன்னாள் தலைமை இயக்குனர் வி.கே.சிபல், ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

கூட்டுச்சதி

2000–ம் ஆண்டு கிருஷ்ணா, கோதாவரி–டி6 வயல்களில் கியாஸ் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. அதில் ஒரு யூனிட் கியாசுக்கு விலை 2.3 டாலர் என நிர்ணயித்து குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் பின்னர் சில (மத்திய) மந்திரிகளுடன் கூட்டுச்சதி செய்து தங்கள் நிலைப்பாட்டை ரிலையன்ஸ் நிறுவனத்தார் மாற்றிக்கொண்டுள்ளனர். அதையடுத்து கியாஸ் விலையை ஒரு யூனிட்டுக்கு 4 டாலருக்கு மேல் உயர்த்தி விட்டனர். இதன் மூலம் ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை 2.3 டாலரில் இருந்து 4.2 டாலராக உயர்ந்தது. அதாவது, கியாஸ் விலையை யூனிட்டுக்கு சுமார் ரூ.142–லிருந்து ரூ.262 ஆக உயர்த்தி விட்டனர்.

உற்பத்தியை குறைத்தனர்

விலையை உயர்த்திய பிறகும்கூட, மத்திய அரசை (விலை உயர்வுக்காக) 'பிளாக்மெயில்' செய்கிற நோக்கத்தில், உற்பத்தியை அதிகரிக்கவில்லை. 8 கோடி யூனிட் கியாஸ் உற்பத்திக்கு திட்டமிட்டிருந்த வேளையில், அதில் 18 சதவீதமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டது. கியாஸ் இறக்குமதியும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது நாட்டில் பண வீக்கத்துக்கு வழி வகுத்தது. ரிலையன்ஸ் வேண்டுமென்றே உற்பத்தியை குறைத்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கியாஸ் விலை உயர்த்தப்படுகிறது என்பதே அரசின் வாதம். உற்பத்தி செலவினம் அதிகரித்திருப்பதன் அடிப்படையில் விலை உயர்வு என கூறவில்லை. அரசின் வாதம் ஏற்கும்படியானது அல்ல.

ரூ.1.25 லட்சம் கோடி குறி

தலைமை கணக்கு தணிக்கையர் குழு, இந்த எண்ணெய் வயல்களின் கணக்கை தணிக்கை செய்துள்ளது.

அதன் ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு தருணத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் சம்பாதிக்க எண்ணி உள்ளது. அந்த வகையில், ரூ.1.25 லட்சம் கோடி அளவுக்கு லாபம் ஈட்ட குறி வைத்து உள்ளது என்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. தலைமை கணக்கு தணிக்கையர் குழு அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. கியாஸ் விலையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைக்கு எதிராக 2012–ம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.

யூனிட்டுக்கு 8 டாலர்

இப்போது யூனிட்டுக்கு 8.4 டாலர் (சுமார் ரூ.524) என்ற அளவுக்கு விலையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுத்தது ஏன்?ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஒரு யூனிட் கியாஸ் விலையை 8.4 டாலர் என்ற அளவுக்கு உயர்த்துவது, ரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.54 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க உதவும். இது நிச்சயம் அரசு கஜானாவுக்கு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

உற்பத்தி செலவு எவ்வளவு?

ரிலையன்சுக்கு வழங்கப்பட்டுள்ள வயல்களில், ஒரு யூனிட் கியாஸ் உற்பத்திக்கு ஆகும் செலவு ஒரு டாலருக்கு (ரூ.62) கீழேதான். இந்த உற்பத்தி செலவு விவரம், டெல்லி அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிலையன்ஸ் மீதான புகாருடன், செலவின அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒரு யூனிட் கியாஸ் விலையை 8.4 டாலராக உயர்த்தும் வேளையில், வங்காளதேசத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் நிக்கோ இன்றைக்கும் ஒரு யூனிட் கியாசை 2.34 டாலர் விலைக்குத்தான் சப்ளை செய்கிறது.

உயர்த்தினால் என்ன ஆகும்?

கியாஸ் விலையை ஏப்ரல் 1 முதல் யூனிட்டுக்கு 8.4 டாலர் என்ற அளவுக்கு உயர்த்தினால், அது, போக்குவரத்து, சமையல் கியாஸ் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என தொடர் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.இது, சாமானிய மக்களின் வாழ்க்கையை துயரத்துக்கு உள்ளாக்கி விடும்.

பிரதமருக்கு கடிதம்

ரிலையன்ஸ் நிறுவனம், மத்திய மந்திரிகளுடன் கூட்டுச்சதி செய்தே இப்போது கியாஸ் விலையை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 1 முதல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கியாஸ் விலையை உயர்த்துவதை நிறுத்திவைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங், பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லிக்கு கடிதம் எழுதுவேன். ரிலையன்சிடம் வழங்கிய எண்ணெய் வயல்களை அரசு திரும்பப்பெற வேண்டும். இப்போது வழக்கு விசாரணைக்கு அனைத்து அமைச்சகங்களும் ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிடவேண்டும் என்றும் பிரதமரை கேட்டுக்கொள்வேன்.ஊழல்கள் நடைபெறுவதின் காரணமாகத்தான் பணவீக்கம் எகிறுகிறது என நாங்கள் நம்புகிறோம். ஊழலை ஒழிக்க கண்டிப்பான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். இது ஒரு முடிவான யுத்தமாக அமையும்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் ஜனாதிபதி உத்தரவு

Posted: 11 Feb 2014 11:05 AM PST

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமை நீதிபதி

அலகாபாத் ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி 7–ந் தேதி சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 23–ந்தேதி இவரை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 24–ந்தேதி தமிழக கவர்னர் ரோசய்யா, ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரிவு உபசார விழா

இந்த நிலையில், தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'தலைமை நீதிபதியான ராஜேஷ்குமார் அக்ரவாலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமித்து' நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு, நேற்று மாலை சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு, இன்று (புதன்கிழமை) ஐகோர்ட்டில் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. இதன்பின்னர் வருகிற 13 அல்லது 14–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

தந்தை மூத்த வக்கீல்

சுப்ரீம் கோர்ட்டு புதிய நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், உத்தரபிரேதச மாநிலத்தில் 5.5.1953 அன்று பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, 14.8.1976 அன்று வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.இவரது தந்தை ராஜாராம் அக்ரவால், உத்தரபிரதேச மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அலகாபாத் ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாகவும் பணியாற்றியவர்.அதேபோல, அலகாபாத் ஐகோர்ட்டில் ராஜேஷ்குமார் அக்ரவால், மத்திய அரசின் வக்கீலாக பணியாற்றினார். பின்னர், 5.2.1999 அன்று அலகாபாத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

சோனியா தலைமையில் காங்கிரஸ் பிரசார கமிட்டி அமைப்பு இணைத்தலைவராக ராகுல் காந்தி நியமனம்

Posted: 11 Feb 2014 10:50 AM PST

புதுடெல்லி,

சோனியா காந்தியை தலைவராக கொண்டு, காங்கிரஸ் பிரசார கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அக்கமிட்டியில் ராகுல் காந்திக்கு இணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

50 பேர் குழு

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க, எல்லா கட்சிகளையும் போல காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறது.அதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார கமிட்டி நேற்று அமைக்கப்பட்டது.

ராகுல் காந்தி

இந்த கமிட்டியின் இணைத்தலைவராக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கும் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார்.மேலும், மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, குலாம்நபி ஆசாத், கமல்நாத், ஆனந்த் சர்மா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சல்மான் குர்ஷித், வி.நாராயணசாமி, ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, ஜிதேந்திரசிங், ராஜீவ் சுக்லா, ஜோதிர்ஆதித்ய சிந்தியா,

திக்விஜய்சிங்

அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜனார்த்தன் திவிவேதி, அம்பிகா சோனி, திக்விஜய்சிங், குருதாஸ் காமத், பி.கே.ஹரிபிரசாத், முகுல் வாஸ்னிக், சி.பி.ஜோஷி, மதுசூதன் மிஸ்திரி, ஷகீல் அகமது, அஜய் மக்கான், மோகன் பிரகாஷ்,சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல், முன்னாள் முதல்–மந்திரிகள் அசோக் கெலாட், ஷீலா தீட்சித், அமரிந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சத்யவிரத் சதுர்வேதி, ரந்தீப் சுர்ஜிவாலா, ஜே.டி.சீலம், ராஜிந்தர் கவுர் பாட்டல் உள்ளிட்டோருக்கும் காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

category:

News Group Category:

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் சீனா கடும் எதிர்ப்பு

Posted: 11 Feb 2014 10:43 AM PST

பீஜிங்,

போர் குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

இலங்கையின் போர் குற்றம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை அரசின் இந்த போர் குற்றம் குறித்தும், போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்தும் உலக நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த பிரச்சினையில், அமெரிக்கா சார்பில் ஏற்கனவே கடந்த 2012 மற்றும் 2013–ம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

3–வது தீர்மானம்

இந்த நிலையில், அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில், இந்த பிரச்சினையில் 3–வது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானம் நேற்று அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த தீர்மானத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்குவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானத்தின் எதிரொலியாக போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு எழுந்துள்ளது.

இலங்கைக்கு சீனா ஆதரவு

இதற்கிடையில், அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்துக்கு எதிராக தங்கள் நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஏற்கனவே இலங்கை ஈடுபட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாக இலங்கை வெளியுறவு துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் அமெரிக்கா சென்று, அந்த நாட்டின் வெளியுறவு துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சீன மந்திரி வாங் யி மனித உரிமைகள் மீறல் பிரச்சினையில் இலங்கை அரசின் நிலைக்கு ஆதரவு தெரிவித்தார்.

மனித உரிமைகள் மீறல் என்ற பெயரில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவதை சீனா கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். ''இலங்கையின் தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மையை பாதுகாக்க சீனா ஆதரவு அளிக்கும். தங்கள் நாட்டின் சொந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான அறிவு, ஆற்றல் இலங்கை மக்களுக்கு உண்டு'' என்றும் வாங் யி தெரிவித்தார்.

இலங்கையை ஆதரித்து ஓட்டு

இலங்கையின் முக்கியமான நட்பு நாடாக விளங்கும் சீனா, அந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, அதாவது இலங்கைக்கு ஆதரவாக சீனா ஓட்டளித்தது.ஏற்கனவே இந்தியா வந்திருந்த இலங்கை மந்திரி பெரீஸ், இந்த பிரச்சினையில் இந்தியாவின் ஆதரவையும் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

ஈரான் ராணுவம் 2 புதிய ஏவுகணை சோதனை

Posted: 11 Feb 2014 10:16 AM PST

அங்காரா,

ஈரான் ராணுவம் நவீனரக 2 புதிய ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது. அதில் ஒன்று நீண்டதூரம் சென்று தாக்க கூடியதாகும். இந்த தகவலை ஈரான் ராணுவ மந்திரி வெளியிட்டார்.

மேலும் இதுபற்றி பிரிகேடியர் ஜெனரல் ஹ¨சைன் டெஹ்கான் குறிப்பிடுகையில், லேசர் வழிகாட்டுதல்படி இயங்கும் இந்த ஏவுகணைகள் ரேடார் கண்காணிப்பையும் தவிர்க்கும் சக்தி படைத்ததாகும் என்று தெரிவித்தார். வெற்றிகரமாக ஏவுகணை சோதனை நடத்திய ராணுவத்தை, ஈரானின் குழந்தைகள் புதியதலைமுறை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள் என அதிபர் ஹசன் ரவுகானி பாராட்டினார். ஈரான் ஏற்கனவே 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் (அதாவது இஸ்ரேல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க முகாம் வரையில்) சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™