Daily Thanthi |
- படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த அண்ணன்-தம்பி மீனவர்கள் மீட்டு வந்தனர்
- ரெயில்வே ரோடு சீரமைப்புக்கு பிச்சை போடும் நூதன போராட்டம்
- ரூ.7 லட்சம் நகைகளை பறித்ததாக நாடகமாடிய வியாபாரி கைது
- ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை நெருங்கினார், விராட் கோலி ஜடேஜாவுக்கு பின்னடைவு
- டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அபார வெற்றி
- இந்தியா–நியூசிலாந்து லெவன் மோதும் பயிற்சி கிரிக்கெட் இன்று தொடங்குகிறது
- ஊழல் புகார் கூறும் கெஜ்ரிவால், சீதையை போல ‘அக்னி பரீட்சை’யில் ஈடுபட தயாரா? காங்கிரஸ் எம்.பி. விசுவநாத் சவால்
- சந்தோஷ் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: தமிழ்நாடு–கர்நாடகா ஆட்டம் ‘டிரா’
- மேஷம்
| படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த அண்ணன்-தம்பி மீனவர்கள் மீட்டு வந்தனர் Posted: 01 Feb 2014 02:10 PM PST மணவாளக்குறிச்சி, கடியபட்டணம் கடலில் சூறைக்காற்று வீசியதால் படகு கவிழ்ந்து அண்ணன்-தம்பி நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அங்கு மீன்பிடிக்க இன்னொரு படகில் சென்ற மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். படகு கவிழ்ந்தது கடியபட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன்கள் சகாய வில்பிரட் (வயது30), சகாய ஸ்டாலின் (27). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 15 கடல் மைல் தொலைவில் அவர்கள் சென்று கொண்டு இருந்தபோது கடலில் பயங்கர சூறைக்காற்று வீசியது. இதில் அவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. தத்தளிப்பு கவிழ்ந்த வேகத்தில் படகு உடைந்தது. படகில் இருந்த என்ஜின் மற்றும் தொழில் கருவிகள் கடலில் மூழ்கின. அண்ணன்-தம்பி 2 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இன்னொரு படகில் ஜான்பிரிட்டோ, வெனிஷ் உள்பட 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கொண்டு இருந்தனர். மீட்டனர் அவர்கள் நடுக்கடலில் 2 பேர் தத்தளித்துக் கொண்டு இருப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டனர். நேற்று காலை 8.30 மணிக்கு அவர்களை அழைத்துக்கொண்டு கரைக்கு வந்தனர். இது பற்றி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்களிடம் குளச்சல் மரைன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடலில் மூழ்கிய தொழில்கருவிகள் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. image: category: |
| ரெயில்வே ரோடு சீரமைப்புக்கு பிச்சை போடும் நூதன போராட்டம் Posted: 01 Feb 2014 02:07 PM PST நாகர்கோவில், ஆம் ஆத்மி கட்சி சார்பில், ரெயில்வேரோடு சீரமைப்புக்கு பிச்சை போடும் போராட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டம் ஆம் ஆத்மி கட்சி குமரி மாவட்ட கிளையின் முதல் போராட்டமான 'பிச்சை போடும் போராட்டம்' நேற்று நடந்தது. நாகர்கோவில் ரெயில்நிலையத்துக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க நிதி இல்லை என ரெயில்வே நிர்வாகம் கூறுவதாக தெரிவித்து, கண்டனம் தெரிவித்து ரெயில்நிலையம் முன் இந்த போராட்டம் நடந்தது. கட்சியின் ஆயத்தக்குழு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில், இணை ஒருங்கிணைப்பாளர் ஞானகுமார், பொருளாளர் முசாமில் மற்றும் செங்கோடி லாரன்ஸ், ஷெல்லி, ராஜா, சொரூப், கண்ணன், ஜெயராஜன் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த பலர் கட்சி பெயர் பொறித்த தொப்பி அணிந்துகொண்டு ரெயில் பயணிகளிடம் தலா 1 ரூபாய் பிச்சை போடும்படி கேட்டனர். இதன்படி 150-க்கும் மேற்பட்டோரிடம் பிச்சை எடுக்கப்பட்டது. பிச்சை எடுக்கும் பெண் ஒருவரும் பிச்சை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முன்னதாக இக்கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆனந்த மகாலில் நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 160 பேர் தங்களை தன்னார்வலராக பதிவு செய்து கொண்டனர். கூட்டம் மற்றும் போராட்டத்தில் ஒரு கையும், ஒரு காலும் இல்லாத அருமனையை சேர்ந்த தேவதத் (வயது 34) என்பவரும் பங்கேற்று இருந்தார். கட்சி செயல்பாடு பற்றி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், "குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியில் நேரிலும், எஸ்.எம்.எஸ். மற்றும் ஆன்லைன் மூலமும் இதுவரை 35 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்சி இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த பிச்சைப்பணத்தை ரெயில்வே மந்திரிக்கு அனுப்பி ரோட்டை சீரமைக்க வலியுறுத்துவோம்" என்றார். image: category: |
| ரூ.7 லட்சம் நகைகளை பறித்ததாக நாடகமாடிய வியாபாரி கைது Posted: 01 Feb 2014 01:01 PM PST ஓமலூர், கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி ரூ.7 லட்சம் நகைகளை பறித்து சென்றதாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். நகைகள் கொள்ளை போனதாக போலீசில் புகார் சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால்(வயது43). இவர் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 23-ந் தேதி இவர் ஓமலூரில் உள்ள கடைகளில் பழைய நகைகளை வாங்கி கொண்டு மோட்டார்சைக்கிளில் சேலம் நோக்கி சென்றார். இந்த நிலையில் வழியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே வெட்டுக்காயங்களுடன் தனபால் கிடந்தார். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து ஓமலூர் போலீசில் தனபால் கொடுத்த புகாரில் மோட்டார்சைக்கிளில் வந்த 4 கொள்ளையர்கள் வழிமறித்து, அரிவாளால் வெட்டி தான் வைத்திருந்த 37½ பவுன் தங்கநகைகளை பறித்து சென்று விட்டனர் என்று கூறி இருந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும். சந்தேகம் அதன்பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சியண்ணன், பாஸ்கர், மாரியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் ஓமலூர் நகைக்கடைகளில் விசாரணை செய்யும் போது தனபால் சுமார் 15 பவுன் பழைய தங்க நகைகளை மட்டுமே வாங்கி சென்றதாக தகவல் வெளியானது. புகாரில் கொடுத்த 37½ பவுனை விட இது குறைவாக இருந்ததால் போலீசாருக்கு தனபால் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதையொட்டி தனபாலிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனபால் ஏற்பாட்டின் பேரில் அவரது நண்பர்களே அவரை அரிவாளால் வெட்டி நகைகளை எடுத்து சென்று இருப்பதும், இதை மறைக்க கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி தங்கநகைகள் கொள்ளை போனதாக தனபால் நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது. கைது இதைதொடர்ந்து ஓமலூர் போலீசார் தனபாலிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடன் பிரச்சினை காரணமாக திட்டம் வகுத்து நண்பர்கள் உதவியுடன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியதை தெரிவித்தார். இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியை சேர்ந்த செந்தில்(25), அய்யனார்(32) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். image: category: |
| ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை நெருங்கினார், விராட் கோலி ஜடேஜாவுக்கு பின்னடைவு Posted: 01 Feb 2014 12:06 PM PST துபாய், ஐ.சி.சி. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தை எட்டிப்பிடிக்கும் தூரத்திற்கு நெருங்கியுள்ளார். கோலியின் ஏற்றம் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளார். நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தலைகுனிந்தாலும், தனிப்பட்ட முறையில் கோலியின் செயல்பாடு திருப்திகரமாகவே இருந்தது. இந்த தொடரில் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 291 ரன்கள் சேர்த்த அவர் கூடுதலாக 11 தரவரிசை புள்ளிகளை பெற்று தற்போது 2–வது இடத்தில் இருக்கிறார். அவருக்கும், முதலிடம் வகிக்கும் டிவில்லியர்சுக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசம் வெறும் இரண்டு தான். இந்திய கேப்டன் டோனியும் முதல் 10 இடத்திற்குள் தொடருகிறார். அவர் 6–வது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து தொடரில் சொதப்பிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (688 புள்ளி) ஒரு இடம் இறங்கி 11–வது இடத்தில் உள்ளார். ரோகித் ஷர்மா 24–வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 29–வது இடத்திலும் உள்ளனர். ஜடேஜாவுக்கு சரிவு அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து இரு சதங்கள் விளாசிய நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 6 இடங்கள் உயர்ந்து மறுபடியும் டாப்–10க்குள் நுழைந்துள்ளார். 5 ஆட்டங்களில் அரைசதம் அடித்து சாதனை படைத்த நியூசிலாந்தின் இளம் வீரர் கனே வில்லியம்சன் கிடுகிடுவென மொத்தம் 20 இடங்கள் எகிறி தவானுடன் 11–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது வாழ்க்கையில் சிறந்த தரநிலை இதுவாகும். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, நியூசிலாந்து தொடரில் 5 ஆட்டங்களில் வெறும் 4 விக்கெட் மட்டுமே எடுத்ததால் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். அவர் 3 இடங்கள் இறங்கி 9–வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். என்றாலும் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய பவுலர் ஜடேஜா மட்டும் தான். நியூசிலாந்து தொடரில் அதிக விக்கெட்டுகள் (11 விக்கெட்) கைப்பற்றியவரான இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 6 இடங்கள் முன்னேறி 35–வது இடத்தை பிடித்துள்ளார். 5 ஆட்டத்தில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 22–வது இடத்தில் இருக்கிறார். அணிகளின் வரிசை எப்படி? அணிகளின் தரவரிசையும் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து தொடருக்கு முன்பாக 120 புள்ளிகளுடன் கம்பீரமாக 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்திருந்த இந்திய அணி, படுதோல்விகளை தழுவியதன் எதிரொலியாக 5 புள்ளிகளை பறிகொடுத்து 115 புள்ளியுடன் 2–வது இடத்திற்கு சரிந்து விட்டது. அதே சமயம் இந்திய தொடரை 4–0 என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று தரவரிசையில் 8–வது இடத்தில் இருந்து 7–வது இடத்தை எட்டியுள்ளது. image: category:Tagging: |
| டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அபார வெற்றி Posted: 01 Feb 2014 12:03 PM PST இந்தூர், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி கண்டது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய–ஓசியானா குரூப்–1 சுற்று ஆட்டத்தில் இந்தியா–சீன தைபே அணிகள் மோதிய ஆட்டம் இந்தூரில் நடந்தது. முதல் ஒற்றையரில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சோம்தேவ், சீன தைபே வீரர் டி ஷென்னை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 6–7, 7–6, 1–6, 6–2, 7–7 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட இந்த ஆட்டம் நேற்று காலை தொடர்ந்து நடந்தது. தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட சோம்தேவ் 8 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். திரிலிங்கான இந்த மோதலில் சோம்தேவ் 6–7 (4–7), 7–6 (7–3), 1–6, 6–2, 9–7 என்ற செட் கணக்கில் டி ஷென்னை வீழ்த்தினார். இந்தியா வெற்றி இதைத் தொடர்ந்து நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா–சகெத் மைனெனி ஜோடி 6–0, 6–7 (3–7), 6–3, 7–6 (7–2) என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹின் யின் பெங்–ஹின் ஹான் லீ இணையை 2 மணி 21 நிமிடத்தில் சாய்த்தது. இதன் மூலம் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஏப்ரல் 4 முதல் 6–ந் தேதி வரை தென்கொரியாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக சுற்றில் நுழைவதற்கான 'பிளே–ஆப்' சுற்று ஆட்டத்தில் விளையாட தகுதி பெறும். image: category: |
| இந்தியா–நியூசிலாந்து லெவன் மோதும் பயிற்சி கிரிக்கெட் இன்று தொடங்குகிறது Posted: 01 Feb 2014 11:59 AM PST வாங்கரே, இந்தியா–நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. பாராட்டு மழையில் நியூசிலாந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதுவும் வெலிங்டனில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எந்தவித போராட்டமும் இன்றி 'சரண்' அடைந்தது. நியூசிலாந்தின் வெற்றியை அந்த நாட்டு ஊடகங்கள் வானளாவிய அளவில் புகழ்ந்து தள்ளியுள்ளன. 'வெலிங்டனில் இந்திய அணிக்கு மரண அடி கொடுத்ததுடன், தரமான ஒரு அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தின் மிகவும் மனநிறைவான செயல்பாடாக இது அமைந்தது. ஊசலாடிய உலகச் சாம்பியனை நியூசிலாந்து ஊதித்தள்ளி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று டொமினியன் போஸ்ட் பத்திரிகை வர்ணித்துள்ளது. 'உலக சாம்பியனை 4–0 என்ற கணக்கில் வீழ்த்தியது, நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றியாகும்' என்று நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிகை பாராட்டியுள்ளது. மறுபக்கம் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கம் தர தவறியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். நமது வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்றும், வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாகவும் மற்றொரு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் குறை கூறியுள்ளார். பயிற்சி கிரிக்கெட் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்து (பிப்.6–10), வெலிங்டன் (பிப்.14–18) ஆகிய இடங்களில் இரண்டு டெஸ்டில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா–நியூசிலாந்து லெவன் இடையிலான இரண்டு நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி வாங்கரேயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு பயிற்சி களத்தை இந்திய வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்துள்ள முரளிவிஜய், ஜாகீர்கான், புஜாரா ஆகியோரும் பயிற்சி ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நியூசிலாந்து லெவன் அணிக்கு பீட்டர் புல்டான் கேப்டனாக உள்ளார். இவரும், பயிற்சி அணியில் இடம் பிடித்துள்ள மற்றொரு வீரர் ரூதர்போர்டுவும் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடக்கூடியவர்கள். டெஸ்ட்டுக்கு முன்பாக தங்களை ஆயத்தப்படுத்த இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வீரர்கள் விவரம் இரு அணிகள் வருமாறு:– இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளிவிஜய், புஜாரா, விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஜாகீர்கான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, அம்பத்தி ராயுடு, புவனேஸ்வர்குமார், அஸ்வின், உமேஷ் யாதவ், விருத்திமான் சஹா, ஈஸ்வர்பாண்டே. நியூசிலாந்து லெவன்: பீட்டர் புல்டான் (கேப்டன்), ரோல்ட் படென்ஹார்ஸ்ட், ஜோனோ பவுல்ட், ஆன்டான் டேவ்சிச், டிப்னே பிரைடே, ஜோனே ஹிக்கே, ஷாவ்ன் ஹிக்ஸ், இயான் பீக், ஹமிஷ் ரூதர்போர்டு, டிம் செய்பெர்ட், இலி டுககா, ஹென்ரி வால்ஸ். இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. நியூசிலாந்து பயிற்சியாளர் எச்சரிக்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் 'ஷாட்பிட்ச்' தாக்குதல் தொடரும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரித்துள்ளார். ஒரு நாள் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள், 'ஷாட்பிட்ச்'சாகி எழும்பி வந்த பந்துகளிலேயே விக்கெட்டுகளை அதிகமாக தாரை வார்த்தனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஷாட்பிட்ச் யுக்தியை டெஸ்ட் தொடரிலும் கையாளுவதில் நியூசிலாந்து அணி தயங்காது என்று அவர் கூறியுள்ளார். வெலிங்டன் மைதானத்தில் கடைசியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடிய போது, இந்த வகையிலான வியூகத்தை பயன்படுத்தி அந்த அணியை சுருட்டியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை 4–0 என்ற கணக்கில் வெல்வோம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்த வெற்றி, டெஸ்ட் தொடருக்கு நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்' என்றார். image: category:Tagging: |
| Posted: 01 Feb 2014 11:48 AM PST மைசூர், டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் சீதை போல புனிதமாக இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவர் மீதும் ஊழல் வழக்கு இருக்கிறது என்று மைசூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. விசுவநாத் குற்றம் சாட்டி இருக்கிறார். மைசூர் டி.நரசிப்புரா ரோட்டில் எம்.பி. நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்த நிழல் குடையை தொடங்கி வைத்த அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் இதுகுறித்து கூறியதாவது:– 162 அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டு இவர்கள் எல்லோரும் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர், இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவரே ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதலில் அவர் மீது தான் விசாரணை நடத்த வேண்டும். மேலும், தான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்று கூறும் கெஜ்ரிவால், இதை நிரூபிக்க சீதை போல அக்னி பரீட்சையில் ஈடுபட தயாரா? அவரால் இது முடியுமா? அனைத்து கட்சி பிரமுகர்கள் மீதும் ஊழல் புகார் கூறுவது, ஒரு முதல்–மந்திரிக்கு தகுதி அல்ல. இவ்வாறு விசுவநாத் எம்.பி. கூறினார். image: category:News Group Category: |
| சந்தோஷ் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: தமிழ்நாடு–கர்நாடகா ஆட்டம் ‘டிரா’ Posted: 01 Feb 2014 11:41 AM PST சென்னை, சந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் பிப்ரவரி 24–ந் தேதி முதல் மார்ச் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள், 5 மண்டல அளவிலான தகுதி சுற்று போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் தென்மண்டல தகுதி சுற்றில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபர் அணிகள் மோதுகின்றன. இவற்றில் இருந்து இரு அணிகள் சந்தோஷ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். தென் மண்டல தகுதி சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு–கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழக அணியில் ரீகன் 9–வது நிமிடத்திலும், கர்நாடக அணி தரப்பில் பிரகாஷ் 64–வது நிமிடத்தில் தலையால் முட்டி பதில் கோல் திருப்பினார். தமிழக அணி முதல் பாதியில் கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்புகளை நழுவ விட்டது. கர்நாடக அணியின் நடுகள ஆட்டம் சிறப்பாக இருந்தது. இரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கின்றன. மற்றொரு ஆட்டத்தில் கேரளா அணி 17–0 என்ற கோல் கணக்கில் அந்தமானை விரட்டியடித்தது. 2 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள கேரளா அணி 6 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் கேரளா–கர்நாடக அணியும் (பிற்பகல் 3 மணி), தமிழ்நாடு–ஆந்திரா (மாலை 5 மணி) அணியும் மோதுகின்றன. image: category: |
| Posted: 01 Feb 2014 11:10 AM PST தொழிலில் வளர்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். நாட்டுப் பற்று மிக்கவர்களால் வீட்டுப் பிரச்சினை களைத் தீர்த்துக் கொள்வீர்கள். Zodiac sign:Astro Category: Daily |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |