Daily Thanthi |
- பொங்கல் போனஸ் வழங்கும் திட்டத்தை தி.மு.க.தான் அறிமுகப்படுத்தியது கருணாநிதி அறிக்கை
- அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் கெஜ்ரிவாலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் : திக்விஜய்சிங்
- சென்னையில் நடக்கும் மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்
- ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி தோல்விக்கு ஷேவாக்கை குற்றம் சாட்டுவது நியாயமற்றது கம்பீர் ஆதரவு
- ‘தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை’ மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பேட்டி
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்தாலும் தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக இன்று மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கூடுதலாக 65 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
- ஐதராபாத்தில் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுருதிஹாசன் உடல்நலம் திடீர் பாதிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதி
- இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம்: நரேந்திரமோடி மீது வழக்கு பதிவு செய்ய குஜராத் போலீஸ் மறுப்பு
- மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவி: நீதிபதி கங்குலி ராஜினாமா
| பொங்கல் போனஸ் வழங்கும் திட்டத்தை தி.மு.க.தான் அறிமுகப்படுத்தியது கருணாநிதி அறிக்கை Posted: 06 Jan 2014 02:28 PM PST சென்னை, பொங்கல் போனஸ் வழங்கும் திட்டத்தை தி.மு.க.தான் அறிமுகப்படுத்தியது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:– விஞ்ஞானிகளுக்கு பாராட்டு கேள்வி:– ''கிரையோஜெனிக்'' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜி.எஸ்.எல்.வி.–டி5 ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறதே?. பதில்:– இது இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. நாம் அனைவரும் பெருமைபட்டுக் கொள்ளக் கூடிய சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இருபதாண்டு கடும் உழைப்புக்குக் கிடைத்த பலன் என்று இது போற்றப்படுகிறது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் தான் இந்தத் திட்டத்திற்கான பாதையை அமைத்தார். அவர் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். பொங்கல் பண்டிகை கேள்வி:– முதல்–அமைச்சர் 5–1–2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு போனஸ், சிறப்பு போனஸ் வழங்க, தான் உத்தரவிட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறாரே; தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வில்லையா?. பதில்:– முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அந்த அறிக்கையில், முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும் என்று தெரிவித்திருக்கிறார். 1990–ம் ஆண்டில் அன்றைய தி.மு.க. அரசு, ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது; அப்போதிருந்து அரசு ஊழியர்க்கும் போனஸ் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது. ஜெயலலிதா 2001–ல் முதல்–அமைச்சராகப் பதவி ஏற்றது முதல் 2006 வரை 5 ஆண்டு காலமும், அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் மற்றும் கருணைத்தொகையை வழங்க முன்வரவில்லை. இந்த முறை அந்தப் பொங்கல் போனசைத்தான் வழங்க முன் வந்திருக்கிறார் என்று வேண்டுமென்றால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இதனை வேறு யாரும் புரிந்து கொள்ளாவிட்டாலும், அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் நன்றாகவே புரிந்து வைத்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நடவடிக்கை கேள்வி:– சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புத் தேர்வினை தமிழில் எழுதுவோருக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?. பதில்:– இது உண்மையாக இருக்குமேயானால், தமிழில் விடை எழுதுவோருக்கு வினாத்தாள்கள் தமிழிலேயே வழங்கப்பட சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகம் மாத்திரமல்ல; தமிழக அரசின் நூலகத்துறை, 2012–2013–ம் ஆண்டுக்கான புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்காக விண்ணப்பப் படிவங்களையும், விதிமுறை விவரங்களையும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு, ஆங்கிலத்தில்தான் அதனை நிரப்ப வேண்டும் என்று நிபந்தனையும் விதித்திருக்கிறதாம்.இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 06 Jan 2014 12:52 PM PST பெங்களூர், அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் கெஜ்ரிவாலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறினார்.கர்நாடக காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு மேலிட பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக்விஜய்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:– கெஜ்ரிவாலை போல்... "சமூக ஆர்வலர்கள் சிலர் தங்கள் வீடுகளில் உட்கார்ந்து கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை தவறான முறையில் பேசுகின்றனர். அத்தகைய சமூக ஆர்வலர்கள் கெஜ்ரிவாலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் அரசியல் கட்சியை தொடங்கி என்ன சட்டம் வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.ஆம் ஆத்மி கட்சி தலைவரிடம் இருந்து எளிமை, பணிவு ஆகியவற்றை பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கற்றுக்கொள்ள வேண்டும். சட்டங்களை விமர்சிப்பவர்கள் கட்சியை தொடங்குவதன் அவசியத்தை உணர வேண்டும். கெஜ்ரிவாலை போல் தேர்தலை சந்திக்க வேண்டும். நான் வரவேற்றேன் சிலர் (கெஜ்ரிவால்) அரசு மீது பழி சொற்களை சொல்லி சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கருதினர். கடைசியில் அவர்கள் சட்டத்தை இயற்ற மாநில தலைமை செயலகத்தில் நுழைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் கட்சியை தொடங்கியபோது நான் வரவேற்றேன்.கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக கருதுவது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு முன் ஊடகங்கள் அத்வானியை பிரதமர் ஆக்கின. அதன் பிறகு நரேந்திரமோடியை அந்த பதவியில் உட்கார வைத்தன. இப்போது ஊடகங்கள் கெஜ்ரிவாலை பிரதமர் ஆக்குகின்றன. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால் அது சட்டப்படி ஆய்வு செய்யப்பட வேண்டும். நீதித்துறையின் ஒப்புதலை பெற வேண்டும்.இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார். category:Tagging:News Group Category: |
| சென்னையில் நடக்கும் மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார் Posted: 06 Jan 2014 11:48 AM PST சென்னை சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் கட்சியின் மாநில மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். சென்னை அலுவலகம் திறப்பு டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் 'ஆம் ஆத்மி' கட்சி தடம் பதிக்க தொடங்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த கட்சியில் சேருவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் வேளையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆத் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கட்சியில் புதிய உறுப்பினராக ஆர்வம் காட்டுபவர்களுக்கு வசதியாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கணினி மூலம் உறுப்பினர் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் வந்திருந்து 'ஆம் ஆத்மி' கட்சியில் புதிய உறுப்பினராக சேர்ந்தனர். கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் ஆனந்த் கணேஷ் தினத்தந்தி நிருபருக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரையில் தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 'ஆம் ஆத்மி' பேஸ்புக் கணக்கிலும், இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினராக ஆகலாம். இந்த மாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வதாக கூறியுள்ளார். வரும் 11–ந்தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். இதில் பாராளுமன்ற தேர்தல், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிப்போம். கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க விரும்புகிறோம். யார், யார் கட்சியில் சேரலாம்? சமுதாய தொண்டு ஆற்றுபவர்கள் (என்.ஜி.ஓ.), சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலை சந்தித்தவர்கள், நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வக்கீல்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் உறுப்பினர்களாக சேர்ப்போம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை நாங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்போம். எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் எங்கள் கட்சியில் நீடிக்கவும் முடியாது. இதுவரையில் 6 கமிட்டி நிர்வாகிகளை நீக்கியிருக்கிறோம். மக்கள் பணி மட்டும் தான் எங்களுக்கு முக்கியம். எங்கள் கட்சியில் இணைவதற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். குற்றப்பின்னணி இருக்கக்கூடாது. பண்ருட்டி ராமச்சந்திரன் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் எங்கள் கட்சியில் இணைவது குறித்து எதுவும் பேசவில்லை. நாங்களும் அவரை சேரும்படி கேட்கவில்லை. உதயகுமாருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுவதும் உண்மைக்கு மாறானது. கட்சியில் முதலில் எல்லோரும் உறுப்பினராக தான் சேர முடியும். அதன்பிறகு அவர்களின் செயல்பாடு, நடவடிக்கைகள், சேவை நோக்கத்தை பார்த்து தான் கட்சியில் பொறுப்பை மத்திய தலைமை வழங்கும். தேர்தல் அறிக்கை பாராளுமன்ற தேர்தலில் மக்களின் அடித்தட்டு பிரச்சினைகளை முன் எடுத்து செல்லும் வகையில், மக்களின் கருத்துக்களை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கிராமங்களில் சென்று மக்கள் கருத்தை அறிந்து கொள்வார்கள். அதன்படி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் நடக்க இருக்க மாநாட்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். image: category: |
| Posted: 06 Jan 2014 11:45 AM PST புதுடெல்லி, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி கால் இறுதிக்கு முன்னேற முடியாமல் போனதுக்கு ஷேவாக்கை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ரஞ்சி கிரிக்கெட் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 27 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஷேவாக், கம்பீர் அடங்கிய டெல்லி அணி கால் இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த போட்டியில் ஷேவாக் மொத்தம் 234 ரன்களே எடுத்தார். இதனால் அவரது மோசமான ஆட்டமே டெல்லி அணி தோல்விக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் நாளை (8–ந் தேதி) முதல் 12–ந் தேதி வரை நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்களில் மும்பை–மராட்டியம், பெங்கால்–ரெயில்வே, கர்நாடகம்–உத்தரபிரதேசம், பஞ்சாப்–ஜம்மு–காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. வெங்கடேஷ் பிரசாத் அதிருப்தி இந்த முறை வலுவான மும்பை அணி தட்டுத்தடுமாறி தான் கால் இறுதிக்குள் நுழைந்தது. அந்த அணிக்கு ஜாகீர்கான், அபிஷேக் நாயர் ஆகியோர் திரும்ப இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும். இதற்கிடையில் நியூசிலாந்து ஒருநாள் அணிக்கு எதிரான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இடம் பிடித்து இருக்கும் சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர்குமார் (உத்தரபிரதேசம்), ரோகித் ஷர்மா, ரஹானே (மும்பை), ஸ்டூவர்ட் பின்னி (கர்நாடகா), முகமது ஷமி (பெங்கால்) ஆகியோரை கால் இறுதி ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று உத்தரபிரதேச அணியின் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு நியாயமற்றது என்று வெங்கடேஷ் பிரசாத் அதிருப்தி தெரிவித்துள்ளார். கம்பீர் ஆதரவு டெல்லி அணியின் தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் கம்பீர் அளித்துள்ள பேட்டியில், 'ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணி நீடித்து இருக்க வேண்டும் என்றால் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஷேவாக்கின் மோசமான பார்மே அணியின் தோல்விக்கு காரணம் என்று சொல்வது நியாயமற்றது. இதுபோன்று நடப்பது விளையாட்டில் நடக்கக்கூடிய ஒன்று தான். எனக்கும், மிதுன் மன்ஹாசுக்கும் அணியை முன்எடுத்து செல்லும் பொறுப்பு உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் மோசமாக ஆடியதே அணியின் தோல்விக்கு காரணமாகும்' என்று தெரிவித்து இருக்கிறார். image: category:Tagging: |
| ‘தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை’ மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பேட்டி Posted: 06 Jan 2014 11:33 AM PST சென்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவதாகவும், தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார். ரூ.51.60 கோடி மதிப்பில்... சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ரூ.51.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில் இருப்பு பாதையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் எண்ணூர் துறைமுக நிறுவனத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய கடல் சார் பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக்வர்தன் ஷெட்டி, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் அதுல்ய மிஸ்ரா, எண்ணூர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார், தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் கல்வெட்டை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:– கூடுதல் கையாளும் திறன் எண்ணூர் துறைமுகத்தில் ஆண்டுக்கு 30 மில்லியன் டன் திறன் கொண்ட 6 சரக்கு கையாளும் தளங்கள் உள்ளன. இவை வருடாந்திர ரீதியாக சராசரியாக 14.80 மில்லியன் டன் சரக்குகளை கையாளுகின்றன. எண்ணூர் துறைமுகம் 2013–ம் ஆண்டு 3–வது காலாண்டு முடிவில் 20.87 மில்லியன் டன்களை கையாண்டுள்ளது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணூர் துறைமுகம் 12–வது திட்ட முடிவில் 67 மில்லியன் டன் கையாளும் திறன் கொண்டதாக அதிகரித்து இருக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். எண்ணம் இல்லை இதைத்தொடர்ந்து மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி:– அண்மையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு நீங்கள் தனிக்கட்சி அமைக்கப்போவதாக செய்தி பரவுகிறதே உங்கள் கருத்து என்ன? பதில்:– காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருகிறது. ஆகவே புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. இது அடிப்படை ஆதாரம் அற்ற கேள்வி. பொழுதுபோக்கான கேள்வி. கேள்வி:– தே.மு.தி.க. காங்கிரசுடன் கூட்டணி சேர்வதை நீங்கள் எந்த அளவுக்கு வரவேற்கிறீர்கள் உங்கள் கருத்து என்ன? பதில்:– என்னுடைய கருத்தை எனது தலைமையிடத்தில் தெரிவிப்பேன். தலைமை எடுக்கும் முடிவை 100 சதவீதம் ஏற்றுக் கொள்வேன். 7 அல்லது 8 நிகழ்வுகள் கேள்வி:– நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் மத்திய கப்பல்துறை மந்திரி என்ற வகையில் எத்தனை திட்டங்கள் உள்ளன? பதில்:– தமிழகத்தை பொறுத்தவரையில் இங்கு உள்ள 3 துறைமுகங்களில் பல்வேறு வசதிகள் இந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 1 மாதத்திற்குள் 7 அல்லது 8 நிகழ்வுகள் 3 துறைமுகங்களிலும் நடைபெறும். image: category:Tagging: |
| Posted: 06 Jan 2014 11:14 AM PST சென்னை தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்தபோதும், தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்களின் ஒருவரான எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– வலு குன்றியது தென் மேற்கு வங்க கடலில் நேற்று(நேற்று முன்தினம்) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(நேற்று) காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் இலங்கையை கடந்து வலு குன்றிய நிலையில் மன்னார் வளைகுடாவை நோக்கி நகரும். இதனால், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரம் நிலவி வந்த வறண்ட நிலை மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கடலுக்குள் செல்ல வேண்டாம் டெல்டா பகுதி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே தென் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் வட கடலோர மாவட்ட மீனவர்கள் கவனமாக மீன்பிடிக்க செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். --– செய்தி எண் 17 – 36 பாயிண்ட் பார் ஆல் category: |
| Posted: 06 Jan 2014 10:59 AM PST புதுடெல்லி, காவிரி தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் மனு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007–ம் ஆண்டில் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.பாசன நிலம் குறித்த தவறான கணக்கீட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது– கூடுதலாக 65 டி.எம்.சி. ''தமிழகத்தில் 24 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களுக்கு 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென காவிரி நடுவர் மன்றம் கணக்கிட்டிருந்தது. ஆனால் அது தவறான கணக்கீடு ஆகும். தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் 29 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. அதனைக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளனர். எனவே, உண்மை நிலவரப்படி 29 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு கணக்கிட்டு, கூடுதலாக ஆண்டு தோறும் சுமார் 65 டிஎம்சி தண்ணீரை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல், கர்நாடகத்தில் மொத்தம் 6 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருப்பதாகவும் ஆனால் அதனை 18 லட்சம் ஏக்கராக அளவிட்டு இருக்கிறார்கள். இந்த மதிப்பீட்டை குறைக்க வேண்டும். 2–வது பருவ பாசனத்துக்கும் அடிப்படை விதிகளின்படி சமச்சீரான நதிநீர்ப்பங்கீடு குறித்த 11 அளவீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் காவிரியைத் தவிர வேறு பல நதிநீர்ப்படுகைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தின் பல லட்சக்கணக்கான மக்களுக்கு காவிரி நதி ஒன்றுதான் பாசனத்துக்கும் குடிநீருக்கும் வழிவகுக்கும் ஒரே நதியாகும்.பல நூற்றாண்டுகளாக தமிழகத்துக்கு உரிமை கொண்ட இந்த நதியை தண்ணீர் தட்டுப்பாட்டைக் காரணமாக வைத்து தமிழகத்தில் ஒரே ஒரு பருவப் பயிருக்கு மட்டுமே பாசனம் செய்யும் வகையில் தண்ணீர் திறந்து விட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் மாற்றம் செய்து, தமிழகத்தில் 2–வது பருவப்பயிர் பாசனத்துக்கு உதவும் வகையிலும் தண்ணீரைத் திறந்து விட உத்தரவிடவேண்டும்''.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த அறிக்கை மீதான விசாரணை வருகிற 15–ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 06 Jan 2014 10:37 AM PST ஐதராபாத், ஐதராபாத்தில் சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுருதிஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கு படம் நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தெலுங்கில் எவடு, ரேஸ் குர்ரம் ஆகிய படங்களிலும் நடித்து உள்ளார். இதில் எவடு படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். இந்த படம் 12–ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதி இந்த நிகழ்ச்சியில் நடிகை சுருதிஹாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சி குழுவினர் உடனடியாக அவரை ஜூப்ளி ஹில் பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு குடல் வால்வு பிரச்சினை இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி டாக்டர்கள் யோசனை தெரிவித்து இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. image: category:Tagging:News Group Category: |
| இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம்: நரேந்திரமோடி மீது வழக்கு பதிவு செய்ய குஜராத் போலீஸ் மறுப்பு Posted: 06 Jan 2014 10:33 AM PST ஆமதாபாத், இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம் தொடர்பாக நரேந்திரமோடி மீது வழக்கு பதிவு செய்ய குஜராத் போலீஸ் மறுத்துவிட்டது. மோடி மீது புகார் குஜராத் மாநிலத்தில் கட்டிடக்கலை நிபுணரான ஒரு இளம்பெண்ணை வேவுபார்க்க 'சாஹேப்' உத்தரவிட்டிருக்கிறார் என்று அம்மாநில உள்துறை மந்திரி அமித்ஷா, ஐ.பி.எஸ். அதிகாரி சிங்கால் என்பவருக்கு போனில் கூறியதாக 'குலைல்', 'கோப்ரா போஸ்ட்' என்ற 2 செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. அவர்களது பேச்சின் டேப்பையும் அந்த நிறுவனங்கள் வெளியிட்டன.இந்த பிரச்சினை பூதாகரமாக கிளம்பியதும் குஜராத் மாநில அரசு இதுதொடர்பாக விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா காந்திநகர் போலீசாரை அணுகி முதல்–மந்திரி நரேந்திரமோடி, மந்திரி அமித்ஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தார். போலீசார் மறுப்பு பிரிவு–7 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்த புகாரை பெற்றுக்கொண்டார். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டார்.இதுகுறித்து பிரதீப்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் இதுதொடர்பாக புகார் செய்ய எனக்கு உரிய அங்கீகாரம் இருக்கிறது. ஆனால் போலீசார் எந்த ஆரம்பகட்ட நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டனர். விசாரணை கமிஷன் அல்லது கோர்ட்டை அணுகும்படியும் போலீசார் கூறியுள்ளனர். கோர்ட்டை நாடுவேன் இது உண்மையான குற்றம். உண்மையான குற்றங்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது. நான் பேச்சு விவரம் அடங்கிய ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். விசாரணை கமிஷனுக்கு பரிந்துரைகள் செய்ய அதிகாரம் இருக்கிறது என்றாலும், போலீசார் தான் வழக்கு பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே நான் போலீஸ் சூப்பிரண்டை அணுக இருக்கிறேன். அப்படியும் வழக்கு பதிவு செய்ய மறுத்தால் கோர்ட்டை நாடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.சர்மாவின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் இதுபற்றி விளக்கமாக கூறமுடியாது என்று காந்தி நகர் போலீஸ் சூப்பிரண்டு சரத்சிங்காலும் கூறினார். image: category:News Group Category: |
| மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவி: நீதிபதி கங்குலி ராஜினாமா Posted: 06 Jan 2014 10:29 AM PST கொல்கத்தா, பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலி, மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதி கங்குலி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த ஏ.கே.கங்குலி, கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி 3–ந்தேதி ஓய்வு பெற்றார். பிறகு, அவர் மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவரிடம் பயிற்சி வக்கீலாக இருந்த ஒரு பெண், அவர் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 24–ந்தேதி, டெல்லியில் ஓர் ஓட்டலில் வைத்து தன்னை நீதிபதி கங்குலி பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த நவம்பர் மாதம் அப்பெண் குற்றம் சாட்டினார்.அந்த குற்றச்சாட்டை நீதிபதி கங்குலி மறுத்தார். தனது தீர்ப்புகளால் பாதிக்கப்பட்ட அதிகாரபலம் மிக்கவர்கள், தன்னை களங்கப்படுத்த சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். முகாந்திரம் உள்ளது இருப்பினும், நீதிபதி கங்குலி, மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின.இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு தனது விசாரணையின் முடிவில், நீதிபதி கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறியது. அதே சமயத்தில், அவர் ஓய்வு பெற்று விட்டதால், மேல்நடவடிக்கை தேவையில்லை என்றும் தெரிவித்தது.இருப்பினும், நீதிபதி கங்குலி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மந்திரிசபை முடிவு இதற்கிடையே, நீதிபதி கங்குலி மீதான குற்றச்சாட்டை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்ப கடந்த 2–ந்தேதி மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. ஜனாதிபதி விரும்பினால், அந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பலாம். அதன்பேரில், நீதிபதி கங்குலி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு புதிதாக ஒரு விசாரணை குழுவை நியமிக்கும்.இதையடுத்து, நீதிபதி கங்குலி, தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர் பதவியில் இருந்து கடந்த வாரம் விலகினார்.மேற்கு வங்காள மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்தும் விலகுவது பற்றி அவர் பரிசீலித்து வருவதாக நேற்றுமுன்தினம் தகவல்கள் வெளியாகின. இத்தகவலை தன்னிடம் கங்குலி கூறியதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி தெரிவித்தார். ராஜினாமா இந்நிலையில், நீதிபதி கங்குலி, மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. டெல்லி சென்றிருந்த அவர் மாலையில் கொல்கத்தாவுக்கு திரும்பியவுடன், நேராக கவர்னர் மாளிகைக்கு சென்றார்.அங்கு கவர்னர் எம்.கே.நாராயணனை சந்தித்து பேசினார். அப்போது, தனது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இச்சந்திப்பு 45 நிமிட நேரம் நீடித்தது. மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய இணைச்செயலாளர் சுஜோய் ஹல்தரும் உடன் சென்றிருந்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வந்த நீதிபதி கங்குலியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்று விட்டார்.நீதிபதி கங்குலி ராஜினாமா செய்தாரா என்பது பற்றிய அறிவிப்பு எதையும் கவர்னர் மாளிகை வெளியிடவில்லை.ராஜினாமா பற்றி நிருபர்கள் நீதிபதி கங்குலியை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் ஏதும் கிடைக்கவில்லை. பரபரப்பான தீர்ப்பு அளித்தவர் நீதிபதி கங்குலி, 1994–ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு, ஒடிசா, சென்னை ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2008–ம் ஆண்டு டிசம்பர் 17–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆனார்.சுப்ரீம் கோர்ட்டு பணிக்காலத்தில், 568 தீர்ப்புகளை அளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் தெரிவித்த கடுமையான கருத்துகளால், அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா பதவி விலகினார்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 122 லைசென்சுகளை ரத்து செய்தது, கிரேட்டர் நொய்டா விவசாயிகளுக்கு 156 ஹெக்டேர் நிலத்தை திருப்பித் தர உத்தரவிட்டது, மராட்டிய மாநில அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது ஆகியவை அவர் அளித்த தீர்ப்புகளில் முக்கியமானவை ஆகும். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |