Daily Thanthi |
- இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையா? அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க இலங்கை நடவடிக்கை
- தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்களெல்லாம் வெளி மாநிலங்களுக்கு செல்வதா? கருணாநிதி அறிக்கை
- பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 1.2 லட்சம் ராணுவத்தினர் மத்திய அரசு திட்டம்
- புல்லரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது
- ஆசிரியர் தகுதி தேர்வில் உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
- உத்தரபிரதேசத்தில் வாக்காளர்களை கவர 40 லட்சம் குடும்பங்களுக்கு ஓய்வூதியம்
- கார் மீது பஸ் மோதல் நடிகை குஷ்பு உயிர் தப்பினார்
- ஆஸ்திரேலியா–இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது
- காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி–காங்கிரஸ் கூட்டணி முறிகிறது முதல்–மந்திரி உமர் அப்துல்லா ராஜினாமா?
- சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட பெண் கத்தி முனையில் கற்பழிப்பு 3 பேர் கைது
| இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையா? அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க இலங்கை நடவடிக்கை Posted: 28 Jan 2014 08:23 AM PST வாஷிங்டன், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை முடியடிக்க, ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவை இலங்கை திரட்டுகிறது. போர்க்குற்றங்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் 2009–ம் ஆண்டு உச்சகட்டம் அடைந்தது. அப்போது உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அளவுக்கு போர்க்குற்றங்கள் அரங்கேறின. போர் இல்லாத பிரதேசங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அங்கு நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை இங்கிலாந்தின் சேனல்–4 டெலிவிஷன் அம்பலப்படுத்தி, உலக நாடுகளை அதிர வைத்தது.இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர உள்ளது. இலங்கை தீவிரம் ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தது. அதில் இலங்கைக்கு தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில், மீண்டும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வெற்றி பெற்றால், இலங்கை மீதான நிர்ப்பந்தம் அதிகரிக்கும். சர்வதேச விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்படக்கூடும். அப்படி ஏற்படாமல் தடுக்க, அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிப்பதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவைத் தேடும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாடுகளுக்கு இலங்கை அரசு தனது பிரதிநிதிகளை அனுப்பி வருகிறது.அந்த வகையில், அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்கா, வாஷிங்டனில் 'ரெயிட்டர்' செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– சர்வதேச விசாரணை இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்றால், மோதலில் தொடர்புடைய விடுதலைப்புலிகள், இந்திய அமைதிப்படையினர், ராணுவத்தினர் என அனைவர்மீதும் விசாரணை நடத்த வேண்டும். அது மீண்டும் காயங்களைத்தான் கிளறும். அது நாட்டில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும். 1980–ம் ஆண்டிலிருந்து, இந்திய அமைதிப்படை இருந்த இரண்டு ஆண்டு காலம் உள்ளிட்ட மொத்த காலக்கட்டத்துக்கும் விசாரணை நடத்த வேண்டும். இது இந்தியாவுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவைப் பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்களெல்லாம் வெளி மாநிலங்களுக்கு செல்வதா? கருணாநிதி அறிக்கை Posted: 28 Jan 2014 08:10 AM PST சென்னை, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்களெல்லாம் வெளிமாநிலங்களுக்கு செல்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மோசமாகி வரும் முதலீட்டு சூழல் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்கள் எல்லாம் பிற மாநிலங்களுக்குப் படையெடுத்து செல்வதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. ஏடுகளிலும் அதுபற்றி செய்தி வந்துள்ளது.கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்கு செல்ல உள்ளன என்றும், தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல்தான் அதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது என்றும், இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்குத் தொழில்கள் இடம் பெயர வாய்ப்புள்ளது என்றும் செய்தி வந்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில் கடந்த 20–ந்தேதியன்று ''சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு'' ஒன்று நடத்தப்பட்டுள்ளது.கர்நாடகா தொழில் வர்த்தக சபைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல தொழில் முனைவோரின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. அந்த மாநாட்டில், கர்நாடக முதல்–மந்திரி, தொழில் துறை அமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் எல்லாம் பங்கேற்றதோடு, தொழிலதிபர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை எல்லாம் வாரி வழங்கியுள்ளனர். 12 ஆயிரம் கோடி முதலீடு கோவையில் கர்நாடக மாநிலத்தின் சார்பில் நடைபெற்ற அந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளிலே தொழில் நடத்துகின்ற சுமார் 200 தொழிலதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாம்ராஜ் நகரில் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்கிட முன்வந்துள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து, கர்நாடகாவிற்கு முதலீடுகள் போகக் காரணம், தமிழகத்திலே உள்ள மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியாத சூழல், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காத அணுகுமுறை போன்றவைதான் என்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள், மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்று விட்டார்கள். இப்போது மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் வெளிமாநிலத்திற்குச் செல்லத் தொடங்கிவிட்டன. அமைதிப்புரட்சி 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு புதிய தொழில் கொள்கையை வகுத்து தொழில் வளர்ச்சிக்கு அளித்துவந்த ஊக்கம், தொழில் முதலீட்டாளர்களுடன் தொழில் நேயத்துடன் கொண்டுள்ள வெளிப்படையான அணுகுமுறை, உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.தொழில் கட்டமைப்புகள் முதலியவற்றின் பயனாக ஐந்தாண்டுகளில் 5 இலட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 லட்ச ரூபாய் அதிகரித்து மொத்த முதலீடு 2010–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 லட்ச ரூபாய் என, ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து. தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. பூங்கா அமைக்க... கடந்த வாரத்தில் மத்திய அரசின் கயிறு வாரிய துணைத்தலைவராக உள்ள கா.ராயர், சென்னையிலே செய்தியாளர்களைச் சந்தித்த போது, ''மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சார்பில், மத்திய கயிறு வாரியத்தின் (காயர் போர்டு) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் கயிறு தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு மத்திய அரசு 70 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கத் தயாராக உள்ளது. மாநில அரசு 10 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும். கதர், கிராம சர்வோதய சங்கத்தின் மூலமாக 20 கோடி ரூபாய் வழங்கினால் விழுப்புரத்தில் வழுதரெட்டி கிராமத்தில் 200 ஏக்கர் இடத்தில் இந்தத் தொழில் பூங்கா உருவாகும். ஆனால் தமிழக அரசு இதுவரை பூங்கா அமைக்க அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை மட்டையும், நாறும் தீயிட்டுக் கொளுத்தி வீணாக்கப்படுகிறது'' என்று தமிழக அரசுமீது குற்றஞ்சாட்டிய மத்திய அரசு அதிகாரியின் பேட்டி ஏடுகளில் வெளி வந்திருக்கிறது. ஒரு வாரம் ஆகிறது. இதற்கு தமிழக அரசின் பதில் என்ன?இவ்வாறு அவர் கூறி உள்ளார். image: category:Tagging:News Group Category: |
| பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 1.2 லட்சம் ராணுவத்தினர் மத்திய அரசு திட்டம் Posted: 28 Jan 2014 08:01 AM PST புதுடெல்லி, இந்தியாவில் இப்போதுள்ள பாராளுமன்றம் இந்த ஆண்டு ஜூன் 1–ந்தேதியுடன் முடிகிறது. எனவே மே மாதம் 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.எனவே இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.நாட்டில் 80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆயத்த பணிகளை உள்துறை அமைச்சகம் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய தேவையான துணை ராணுவத்தினரை வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் கமிஷனிடம் கூறியுள்ளது. பல்வேறு துணை ராணுவப்படைகளை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் மிகப்பெரும் பணி தொடங்கிவிட்டதாக உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ராணுவத்தினர் மாநிலங்களில் ஒரு கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், அடுத்தகட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.இந்த ராணுவ வீரர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு ரெயில்வேயின் உதவியையும் உள்துறை நாடியுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சுமார் 70 ரெயில்களை மத்திய அரசு வாடகைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது. category:Tagging:News Group Category: |
| புல்லரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது Posted: 28 Jan 2014 07:33 AM PST புதுடெல்லி, காலிஸ்தான் விடுதலை படையை சேர்ந்த தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் என்கிற புல்லருக்கு, புதுடெல்லியில் 1993–ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை எதிர்த்து பல முறை கோர்ட்டுகளில் மேல்முறையீடு செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2003–ம் ஆண்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு 8 வருடங்களுக்கு பின்னர் 2011–ல் தள்ளுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம்காட்டி வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து புல்லரின் மனைவி நவ்நீத்கவுர் இப்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் புல்லரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
image: category:News Group Category: |
| ஆசிரியர் தகுதி தேர்வில் உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 28 Jan 2014 07:20 AM PST சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வில் உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசு ரத்து தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ரத்து செய்தது.அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இடஒதுக்கீடு விதி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதன் பிறகும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சமூக அநீதிக் கொள்கையை கடைபிடித்து வந்த தமிழக அரசுக்கு தனது கண்டனத்தின் மூலம் மத்தியச் சமூகநீதி அமைச்சகம் 'குட்டு' வைத்துள்ளது.மத்தியச் சமூகநீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். இதே முறையை பின்பற்றி அதுமட்டுமின்றி, ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். image: category:News Group Category: |
| உத்தரபிரதேசத்தில் வாக்காளர்களை கவர 40 லட்சம் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் Posted: 28 Jan 2014 07:16 AM PST லக்னோ, நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேச மாநிலம், பாராளுமன்றத்தேர்தலுக்குப்பின் மத்தியில் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.இந்த நிலையில், மக்கள் மனம் கவர்ந்து, ஓட்டுக்களை அள்ளுகிற வகையில் மாநிலத்தில் 40 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 ஓய்வூதியம் வழங்க முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் உத்தரபிரதேசம் பெறும்.சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, 1.70 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இது தொடர்பான அறிவிப்புகளை மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஜாவத் உஸ்மானி வெளியிட்டார்.
image: category:News Group Category: |
| கார் மீது பஸ் மோதல் நடிகை குஷ்பு உயிர் தப்பினார் Posted: 28 Jan 2014 07:05 AM PST சென்னை, நடிகை குஷ்புவின் கார் மீது பஸ் மோதியது. அதில், குஷ்பு காயமின்றி உயிர் தப்பினார். விபத்து நடிகை குஷ்புவின் வீடு சென்னை சாந்தோமில் உள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் தனது காரை ஓட்டிச்சென்றார். வழியில் போக்குவரத்து சிக்னலுக்காக அவர் காரை நிறுத்தினார்.அப்போது பின்னால் வந்த மாநகர பஸ், குஷ்புவின் கார் மீது மோதியது. அதில், காரின் பின்பக்கம் சேதமடைந்தது. பம்பர் மற்றும் விளக்குகள் உடைந்து நொறுங்கின.இந்த சம்பவம் பற்றி, குஷ்பு தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது:– சாலை விதிகள் என் கார் மீது பஸ் மோதிய விபத்தில் எனக்கு காயம் எதுவும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். ஆனால், முன்னால் செல்லும் வாகனங்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தாறுமாறாக பஸ் ஓட்டிய டிரைவரை பற்றி நினைக்கும்போது கோபம் வருகிறது.சாலை விதிகளை அவர் கொஞ்சமும் கடைபிடிக்கவில்லை. மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், கார் மீது பஸ் மோதியபிறகு, என் கார் நகர முடியாமல் பழுதாகி நின்றுவிட்டது. புகார் டிரைவர் மீது புகார் கொடுத்தால், அவர்களின் சங்கம் அவரை காப்பாற்றிவிடும். அந்த டிரைவர், என்னிடம், தனது குடும்பம் மற்றும் எதிர்காலம் பற்றி முறையிட்டு, விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். அதனால் நானும், அவர் மீது புகார் கொடுக்கவில்லை.விபத்துக்குள்ளான கார் எனக்கு மிகவும் விசேஷமானது. அந்த காரை எனது கணவர் பரிசாக அளித்திருந்தார். அதிர்ஷ்டவசமாக எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அது எனக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்துவிட்டது.இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார். image: category:News Group Category: |
| ஆஸ்திரேலியா–இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது Posted: 28 Jan 2014 06:56 AM PST ஹோபர்ட், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0–5 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1–4 என்ற கணக்கிலும் இழந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகள் நடக்கின்றன. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி ஹோபர்ட்டில் நாளை நடக்கிறது. ஸ்டூவர்ட் பிராட் தலைமையிலான இங்கிலாந்து 20 ஓவர் அணியுடன் மைக்கேல் லம்ப், 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹாலஸ், லுக் ரைட் ஆகியோர் இணைந்திருப்பது கூடுதல் பலமாகும். இதனால் தொடரை கைப்பற்ற முடியும் என்று ஸ்டூவர்ட் பிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரைவில் 20 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அணிக்கு வந்துள்ள சில புதிய வீரர்களுக்கு இடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த போட்டித் தொடர் மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்தார். இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணியும் தலா 4–ல் வெற்றி கண்டிருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.இந்திய நேரப்படி பிற்பகல் 2.05 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
image: category:News Group Category: |
| Posted: 28 Jan 2014 06:23 AM PST புதுடெல்லி, காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் தேசிய மாநாடு–காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. முதல்–மந்திரி பதவியை உமர் அப்துல்லா ராஜினாமா செய்ய பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணி ஆட்சி காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தேசிய மாநாடு கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்–மந்திரியாக தேசிய மாநாடு கட்சித் தலைவரும் மத்திய மந்திரி பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா உள்ளார்.அங்கு பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. காஷ்மீர் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. கருத்துவேறுபாடு இந்த நிலையில் முதல்–மந்திரி உமர் அப்துல்லா, அரசு நிர்வாகத்தில் புதிதாக 700 பிரிவுகளை உருவாக்கினார். தேர்தலை கருத்தில் கொண்டே உமர் அப்துல்லா புதிய அரசு நிர்வாக பிரிவுகளை உருவாக்கியுள்ளதாகவும், அவரது திட்டம் வருகிற தேர்தலில் தேசிய மாநாடு கட்சிக்கே சாதகமாக அமையும் என்று காங்கிரசார் கருதுகின்றனர். உமர் அப்துல்லாவின் திட்டம், கூட்டணி கட்சியாகிய காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதற்கிடையே இரு கட்சிகள் இடையே சமரச பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் முதல்–மந்திரி உமர் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அம்பிகா சோனி, மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. கூட்டணி முறிவு இதனால் காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி–காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. உமர் அப்துல்லா முதல்–மந்திரி பதவியை விட்டு விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்படி அவர் பதவி விலகினால், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. image: News Group Category: |
| சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட பெண் கத்தி முனையில் கற்பழிப்பு 3 பேர் கைது Posted: 28 Jan 2014 06:16 AM PST மும்பை, சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட பெண் கத்தி முனையில் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர். சினிமாவில் நடிக்க... மும்பை தானே அருகே உள்ள கால்வா பகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் மின்சார ரெயில் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த துணை நடிகர், நடிகைகள் தேவை என்ற போலி விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.எதிர் முனையில் பேசிய நபர் பாந்திரா கிழக்கு பகுதியில் வரும் படி அந்த பெண்ணிடம் கூறினார். அதன்படி அந்த பெண்ணும் அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 40 வயது நபர் ஒருவர் அந்த பெண்ணை முக்தார் கான் என்பவருடன் அனுப்பி வைத்தார். முக்தார் கான் அந்த பெண்ணை பக்ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார். பெண் கற்பழிப்பு அங்கு வைத்து முக்தார் கான் அவரை கத்தி முனையில் கற்பழித்தார். பின்னர் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் நிர்மல் நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான முக்தார் கான், பெண் கற்பழிக்கப்பட்ட அறையின் உரிமையாளர் மசூத் சேக்(40) மற்றும் சஜித் அலி(வயது40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மேலும் இது போன்று நடிகை ஆசை காட்டி பல பெண்களை கற்பழித்தார்களா? என்ற கோணத்தில் அவர்கள் 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |