Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: பட்டம் வென்றார், சாய்னா

Posted: 26 Jan 2014 11:40 AM PST

லக்னோ

இந்திய கிராண்ட்பிரீ கோல்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவாலும், பி.வி.சிந்தும் நேற்று மோதினார்கள். இருவரும் முதல் முறையாக சர்வதேச போட்டியில் சந்தித்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த சாய்னா 21–14, 21–17 என்ற நேர் செட் கணக்கில் 40 நிமிடத்தில் சிந்துவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 15 மாத காலமாக எந்த சர்வதேச பட்டத்தையும் வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தை சாய்னா தணித்தார்.

பின்னர் சாய்னா கூறுகையில், 'இது எனக்கு உணர்ச்சிமயமான தருணம். லக்னோ எனக்கு பிடித்தமான நகரம். இங்கு தான் எனது முதல் பட்டத்தை (2009) வென்றேன். மீண்டும் ஒரு முறை இங்கு வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு கோப்பையை வென்றிருப்பதால், இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிந்து நன்றாக ஆடினார். இது ஒரு சிறந்த ஆட்டமாக அமைந்தது. ரசிகர்கள் உற்சாகமுடன் போட்டியை கண்டு ரசித்தனர்' என்றார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21–16, 19–21, 13–21 என்ற செட் கணக்கில் சீனாவின் சூ சாங்கிடம் தோல்வியை தழுவினார்.

category:

கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

Posted: 26 Jan 2014 11:37 AM PST

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா– ருமேனியாவின் ஹோரியா டெகாவ் ஜோடி 3–6, 2–6 என்ற நேர் செட்டில் கிறிஸ்டினா மிலடெனோவிச் (பிரான்ஸ்)–டேனியல் நெஸ்டர் (கனடா) இணையிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. இந்த ஆட்டம் வெறும் 58 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

பின்னர் 27 வயதான இந்திய மங்கை சானியா மிர்சா கூறுகையில், 'பெண்கள் இரட்டையரில் காரா பிளாக்குடன் இணைந்து விளையாடினேன். இதன் கால்இறுதியில், பட்டத்தை வென்றுள்ள இத்தாலியின் சாரா எர்ரானி–ராபர்ட்டா வின்சிடம் தோற்றேன். இப்போது கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளேன். ஆனாலும் இந்த ஆண்டு எனக்கு சிறப்பாகவே தொடங்கி இருக்கிறது. ஹோரியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் மேலும் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முயற்சிப்பேன். நான் மீண்டும் ஒற்றையர் பிரிவில் விளையாட வாய்ப்பில்லை. அதற்கு ஏற்ப எனது உடல்தகுதி இல்லை.' என்றார்.

சானியா மிர்சா கலப்பு இரட்டையரில் 2009–ல் ஆஸ்திரேலிய ஓபனையும், 2012–ல் பிரெஞ்ச் ஓபனையும் சக நாட்டவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து வென்றது குறிப்பிடத்தக்கது.

category:

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

Posted: 26 Jan 2014 11:35 AM PST

அடிலெய்டு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

218 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 217 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் பெய்லி 56 ரன்களும், ஷான் மார்ஷ் 36 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மைக்கேல் கிளார்க் (8 ரன்), ஷேன் வாட்சன் (0) ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இயான் பெல் 14 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றியும், கேப்டன் அலஸ்டயர் குக் 39 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின்னர் ஜோ ரூட்டும், இயான் மோர்கனும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 35 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. அப்போது இங்கிலாந்தின் வெற்றிக்கு 90 பந்துகளில் 70 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால் இந்த ஜோடியை ஜேம்ஸ் பவுல்க்னெர் தனது அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்ததும் இங்கிலாந்து தடம் புரண்டது. ரூட் 55 ரன்னிலும், மோர்கன் 39 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

ஆஸ்திரேலியா வெற்றி

இவர்களுக்கு பிறகு வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 2 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கைவசம் 2 விக்கெட்  இருந்தது. களத்தில் நின்ற ரவி போபரா (25 ரன்), டிரெட்வெல் (0) ஆகியோரால் அணியை வெற்றிகரமாக கரை சேர்க்க முடியவில்லை. இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றியை ருசித்தது. நேற்று ஆஸ்திரேலியாவின் தேசிய தினமாகும். இதை கொண்டாடிய அந்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 4–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நம்பர் ஒன் இடம்

அத்துடன் ஆஸ்திரேலியா ஒரு தரவரிசை புள்ளி கூடுதலாக பெற்று ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை (117 புள்ளி) பிடித்துள்ளது. இந்திய அணி மயிரிழையில் (117 புள்ளி) 2–வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இந்தியா மறுபடியும் முதலிடத்திற்கு முன்னேற முடியும்.

category:

சந்தோஷ் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கேரளாவை தோற்கடித்தது தமிழகம்

Posted: 26 Jan 2014 11:31 AM PST

சென்னை,

சந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்குவங்காளத்தில் உள்ள சிலிகுரியில் பிப்ரவரி 24–ந் தேதி முதல் மார்ச் 9–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள், மண்டல அளவிலான போட்டிகள் மூலம் தகுதி பெறும். இதன்படி தென் மண்டலத்துக்கான தகுதி சுற்று போட்டியில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோபர் அணிகள் மோதுகின்றன. இவற்றில் இருந்து இரு அணிகள் சந்தோஷ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

தென் மண்டல தகுதி சுற்று போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு–கேரளா அணிகள் மோதின. குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த தமிழ்நாடு அணி 30–வது நிமிடத்தில் கோல் போட்டது. தமிழக வீரர் ஏ.ரீகன் இந்த கோலை அடித்தார். இதன் பிறகு கேரளா அணி பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சித்தது. ஆனால் அந்த அணியின் பல கோல் வாய்ப்புகளை தமிழக கோல் கீப்பர் அருண்பிரதீப் சூப்பராக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார். இல்லாவிட்டால் கேரளா பல கோல்களை திணித்திருக்கும். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 1–0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வென்றது. முன்னதாக நடந்த ஆட்டத்தில் ஆந்திரா 5–0 என்ற கோல் கணக்கில் அந்தமான்–நிக்கோபர் அணியை பந்தாடியது.

category:

இலங்கை–வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

Posted: 26 Jan 2014 11:29 AM PST

டாக்கா

இரண்டு டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சென்றுள்ளது. இலங்கை–வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் மிர்புரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

 இவ்விரு அணிகளும் இதுவரை 14 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் 13–ல் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

category:

அந்தமான் படகு விபத்து;முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

Posted: 26 Jan 2014 11:26 AM PST

Flash News Text: 
அந்தமான் படகு விபத்து;முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

மாநில கைப்பந்து போட்டி: சத்யபாமா அணி முதல் இடம்

Posted: 26 Jan 2014 11:24 AM PST

சென்னை

பினாக்கிள் மற்றும் லட்சுமி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் எஸ்.என்.ஜே.குரூப் ஆதரவுடன் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னையை அடுத்த நங்கநல்லூரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சென்னை சத்யபாமா அணி 25–22, 25–22 என்ற நேர் செட்டில் லயோலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக நடந்த 3–வது இடத்திற்கான ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 25–19, 25–17 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை தோற்கடித்தது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி செல்வநாதன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய சேவை வரி கமிஷனர் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு ஆனி விஜய், போட்டி ஒருங்கிணைப்பு செயலாளர் எம்.அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

category:

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்: ‘தமிழ்மொழியை காக்க உயிர் தியாகம் செய்த இயக்கம் தி.மு.க.’ கனிமொழி எம்.பி. பேச்சு

Posted: 26 Jan 2014 11:20 AM PST

தாம்பரம்,

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்மொழியை காக்க உயிர் தியாகம் செய்த இயக்கம் தி.மு.க. என தாம்பரத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

வீரவணக்க நாள் கூட்டம்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:–

நம் தமிழ் மொழியை காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி கூறும் வகையில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டங்களை தி.மு.க. சார்பில் நடத்தி கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து 1938 முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க.வின் பங்கு மகத்தானது.

உயிர் தியாகம் செய்த இயக்கம்

கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறை சென்ற நடராஜன் சிறையிலேயே மரணமடைந்தார். மொழியை காக்க உயிரை விட்ட முதல் தியாகி நடராஜன். தி.மு.க.வை சேர்ந்த மொழிப்போர் தியாகி சின்னசாமி, தமிழ் மொழியை காக்க திருச்சியில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். தமிழ்மொழியை காக்க உயிர் தியாகம் செய்த இயக்கம் தி.மு.க. தமிழை செம்மொழி ஆக்கிய இயக்கம் தி.மு.க. இன்றும் பல்வேறு வகைகளில் நடைபெறும் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. தலைவர் கருணாநிதி போராடி வருகிறார்.

குலசேகரபட்டினத்தில் 3–வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரதமரிடம் கோரிக்கை வைத்து உள்ளார். மற்ற கட்சிகளும் இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியே தீரும் என மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைக்கும் வெற்றி வீரர்களுக்கு இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன், வக்கீல் ஜானகிராமன், நகரமன்ற தி.மு.க. குழு தலைவர் இந்திரன், ஆதிமாறன், டி.ஆர்.கோபி, ஜோதிக்குமார், வ.க.ரவி, ராஜேந்திரன், செல்வகுமார், வேல்மணி, சுப்புலட்சுமி, ரமணி ஆதிமூலம், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தமான் அருகே படகு கவிந்து விபத்து;பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சி

Posted: 26 Jan 2014 11:18 AM PST

புதுடெல்லி,

அந்தமானில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், அனைத்து மத்திய மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடும்படி உத்தரவிட்டார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்து இருக்கிறார்.

category:

News Group Category:

ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சம்மானம் தந்தை அறிவிப்பு

Posted: 26 Jan 2014 11:17 AM PST

ஹாங்காங்,

ஒரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு ரூ. 815 கோடி சம்மானம் வழங்கப்படும் என்று ஹாங்காங்கை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஹாங்காங்கில் கட்டுமான கம்பெனியின் அதிபராக உள்ளவர் செசில். இவரது ஒரே செல்ல மகள் கிகிக்கு 33 வயது. கிகி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவரை திருமணம் செய்பவருக்கு ரூ. 815 கோடி கொடுக்கப்படும் என்று செசில் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பும் இது போன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று செசில் கூறியதை அடுத்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.

தற்போது தொகையை அதிகரிக்க அவர் பரிசிலித்து வருவதாக மலேசியன் பைனான்சியல் பப்ளிகேஷன் தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது மகளின் மனதில் இடம் பிடிக்கும் ஆண்மகனுக்கு மேலும் வழங்கப்படும் தொகை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று அவர் அறிவித்துள்ளர்.
    
நான் எனது மகளின் சுதந்திரமான வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை. அவளை ஒரு நல்ல முறையில் திருமணம் செய்யது கொடுக்க வேண்டும் மற்றும் எனது தொழிலை வழிவழியாக நடத்த வாரிசு வேண்டும் என்று செசில் கூறியுள்ளார்.

கிகியின் மனதில் இடம் பிடிப்பவருக்கு கூடுதல் பணம் வழங்கப்படும் என்று செசில் அறிவித்திருப்பது கிகியின் தற்போதையை பெண் பார்ட்டனர் சீன் ஏவ் மிகவும் சங்கடமாகியுள்ளார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கிகியும் "எனது தகப்பனாரின் இந்த அறிவிப்பின்படி என்னை வசீகரிக்கும் ஆண் மகன் கிடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என்று கூறியுள்ளார். தந்தையின் இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும், அவர் மீது மிகுந்த அன்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். கிகி கடந்த 2012-ம் ஆண்டு சீன் ஏவ் என்ற பெண்ணை பிரான்சில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹாங்காங்கில் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் கிகியின் மனதில் இடம் பிடிக்கும் ஆவலுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் கிகியின் மனதை மாற்றவில்லை.  மேலும் கிகி இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு தனது தந்தையுடன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் பாரோன் கோஹன் இந்த கதையை அடிப்படையாக கொண்டு ஒரு படம் எடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

செசில் கடையில் நிகழ்ச்சிகளில் இளம் பெண்களுடன் காணப்பட்டுள்ளார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவன் என்று கூறும் செசில் கூறியுள்ளான்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™