Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் காங்கிரசுக்கு நரேந்திர மோடி பதிலடி ‘டீ விற்றவருக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை நிறுத்த காங்கிரசுக்கு வெட்கம்’

Posted: 19 Jan 2014 12:14 PM PST

புதுடெல்லி,

பாரதீய ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில், காங்கிரசுக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். 'டீ விற்றவருக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை நிறுத்த காங்கிரசுக்குத்தான் வெட்கம்' என அவர் கூறினார்.

மோடி பதிலடி

பாராளுமன்ற தேர்தலுக்கான உத்திகளை வகுப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம், தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்து வந்தது. நிறைவுநாளான நேற்று கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

அவர், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாததின் பின்னணி, நாட்டின் நிலவரம் குறித்தும், 'டீ விற்பவர் நாட்டின் பிரதமராக முடியாது' என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசிய பேச்சுக்கு பதிலடி தந்தும், 75 நிமிடங்கள் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

டீ விற்பவர்கள் எல்லோரும் இப்போது கருத்து பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு டீ விற்பனையாளரும் இப்போது பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் பண்ணை முதலாளி– வேலைக்காரர் மனோபாவத்தில் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

வெட்கம்

அதனால்தான் டீ விற்றவருக்கு எதிராக போட்டியிடுவதா என வேட்பாளரை நிறுத்த வெட்கப்படுகின்றனர். அவர்கள் மிகவும் உயர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்ததாக கருதுகிறார்கள். வீடுகளில் வேலை செய்த பெண்ணை தாயாக கொண்ட ஒருவரோடு, அதுவும் ரெயில்களில் டீ விற்றவரோடு அவர்கள் போட்டியிட மாட்டார்கள்.

அவர்கள், தாங்கள் எப்போதும் மதிக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தின் அங்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம் இப்போது பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியிலிருந்து வந்த ஒருவருடன் போட்டி போடுவதா என கருதுகிறார்கள்.

கூடுதல் சிலிண்டர்கள்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் அறிவிக்கவில்லை. ஏனெனில் அவர் தனது மகனை அரசியலில் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் தங்களது பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு கூடுதலாக 3 கியாஸ் சிலிண்டர்கள்தான் கிடைத்தன.

மரபு இல்லையா?

தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசின் மரபு அல்ல என்று அவர்கள் கூறி இருக்கின்றனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் ஒட்டுமொத்த காங்கிரசும் சர்தார் வல்லபாய் படேல்தான் பிரதமராக வேண்டும் என்று விரும்பியது. பின்னர் எந்த மரபின் அடிப்படையில் பிரதமர் ஆக சர்தார் வல்லபாய் படேலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை?

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அடுத்த சில தருணங்களில் ராஜீவ் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாரே? காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி அவரை பிரதமராக தேர்வு செய்ததா? அவரை பிரதமராக அறிவித்ததில் 2 அல்லது 3 பேருக்குத்தானே தொடர்பு இருந்தது?

தப்பிக்க முடியாது காங்.

2004–ம் ஆண்டு பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தியை தேர்வு செய்தது. ஆனால் அவரோ, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தேர்வு செய்யாத நிலையில் மன்மோகன் சிங்கை பிரதமராக நியமனம் செய்தார்.

பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி தப்பிக்க முடியாது. அதற்கு அரசியல் காரணம் இருக்கிறது. மனிதர்களுக்கே உரிய ஒரு காரணத்தையும் நான் காண்கிறேன். சோனியா காந்தி தனது மகனை அரசியலில் காப்பாற்ற விரும்புகிறார்.

சிந்தனையில் வித்தியாசம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு அழிவுகளை சந்தித்தது. ஊழல்கள், விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் சாமானிய மனிதர்களை கடுமையாக பாதித்தது.

பாரதீய ஜனதாவின் சிந்தனைக்கும், காங்கிரசின் சிந்தனைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், அடுத்த தேர்தலில் கட்சியை எப்படி காப்பாற்றுவது என்று விவாதித்திருக்கிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ நாட்டை எப்படி காப்பாற்றுவது என்று இப்போது இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதித்துக்கொண்டிருக்கிறது.

குடும்ப அரசியல்

காங்கிரஸ் பிரித்து ஆள்வதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் ஒன்றுபட்டு, வளர்ச்சி காண்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவர்கள் குடும்ப அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் நாட்டுப்பற்றில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

இந்த பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. வித்தியாசமானது.

வாய்ப்பு தாருங்கள்

ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) 60 ஆண்டு காலம் ஆள்வதற்கு வாய்ப்பு தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்கள் கொடுங்கள். இந்த நாட்டுக்கு தேவை வேலைக்காரன்தான். ஆட்சியாளன் அல்ல.

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் எங்கள் அரசு நல்ல சுகாதாரம், கல்வி வழங்கவும், உள்கட்டமைப்புக்களை மேம்படுத்தவும், இந்திய ரெயில்வேயை நவீனமயம் ஆக்கவும், புல்லட் ரெயில் சேவை வழங்கவும், நெடுஞ்சாலைகளை நீட்டிக்கவும், தேசத்தின் நிர்மாணத்தில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கவும் உழைப்போம்.

சொர்க்கத்தை விட மேலானவர்கள்

எனது இந்தியாவில் வாய்மையே வெல்லும். அகிம்சைதான் உயர்ந்த தர்மமாக இருக்கும். ஒட்டுமொத்த உலகமே ஒரே குடும்பமாக வேண்டும் என்ற நற்சிந்தனை வெளிப்படும். அனைவரும் மகிழ்ச்சியுடனும், வளத்துடனும் இருப்பார்கள். அனைவரும் நோய்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

பெண்கள் தெய்வமாக போற்றப்படுவார்கள். மதிக்கப்படுவார்கள். தாயும், தாய் நாடும்தான் சொர்க்கத்தை விட மேலானவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பதில்

பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காததை நரேந்திர மோடி குறை கூறி இருப்பதற்கு, காங்கிரஸ் பதிலடி தந்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான மணீஷ் திவாரி, ''கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் இந்த நாட்டுக்கு வலிமையான பிரதமர்களைத் தந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியோ பிரதமர் வேட்பாளர்களைத்தான் தந்திருக்கிறது'' என கூறினார்.

மேலும், ''இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு ஒரு வலிமையான பிரதமரைத் தரும்'' என உறுதிபடத் தெரிவித்தார்.
 

image: 

category:

News Group Category:

தி.மு.க., திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் கருணாநிதி அறிக்கை

Posted: 19 Jan 2014 11:43 AM PST

சென்னை,

இட ஒதுக்கீடுக்காக தி.மு.க., திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பல்நோக்கு மருத்துவமனை

சென்னை–அண்ணா சாலையில் தி.மு.க. ஆட்சியில் ஓமந்தூரார் பெயரில் வளாகம் அமைத்து, சட்டப்பேரவைக்காகவும், தலைமைச்செயலகத்துக்காகவும் கட்டப்பட்ட கட்டிடத்தின் நோக்கத்தையும், பெயரையும் மாற்றி, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினைத் தொடங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்து, அந்த மருத்துவமனையிலே பணிபுரிவதற்காக சுமார் 100 உயர் அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஒன்று 27–12–2013 அன்று மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தினால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அந்த பணி நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் என்றும், இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் அந்த விளம்பரத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் அது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந்தன. சென்னை பெரியார் திடலில், கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் விரிவாகப் பதிலளித்திருந்தேன்.

மறு ஆய்வு மனு

 உச்சநீதிமன்றம் 18–7–2013 அன்று அளித்த தீர்ப்பின்படிதான் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்ற வில்லை என்றும், தற்போதுள்ள மத்திய அரசு, இந்திய அரசமைப்பு சட்டத்தில் நிச்சயமாக உரிய திருத்தங்களைக் கொண்டுவராது என்றும் ஜெயலலிதா சொல்லியிருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது–18–7–2013 அன்றுதான்; உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் நாடாளுமன்றத்திலே இதுபற்றி மிகப்பெரிய விவாதமே (13–8–2013) அன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது, ''மத்திய அரசின் சார்பில் உடனடியாக இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்'' என்று சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் அவையிலே உறுதி அளித்ததோடு, ''தேவைப்பட்டால் அரசியல் சட்டத்திருத்தமே கொண்டுவரப்படும்'' என்றும் கூறியிருக்கிறார்.

அப்படிக் கூறியதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவினையும் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று குறைபட்டிருக்கிறார். மேலும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு மாறாகவே மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனுப்பிய கடிதத்தில் வருங்காலத்தில் செய்யப்படும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்ற வேண்டும் என்றே தெரிவித்திருந்தார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மத்திய அரசின் நிறுவனங்களில், இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசு அதனை அமல்படுத்தாது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதும், மத்திய அரசின் மீதும் பழி போடுவது என்பது எத்தகைய மோசடி வித்தை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச்செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து, தி.மு.க. மாணவர் அணி சார்பில், ஜனவரி–21 அன்று மாநில மாணவர் அணிச்செயலாளர், கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., மாணவர் அணியின் துணைச்செயலாளர்கள் தம்பிகள் கோவி.செழியன், எம்.எல்.ஏ., குத்தாலம் க.அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க.மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் மாணவர் அணியும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங்களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு 21–ந்தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிட வேண்டும். இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன்வருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

 

category:

News Group Category:

‘கணவன்–மனைவி சண்டையில் என் காதல் ஏன் வந்தது?’ புலம்புகிறார் மெஹர் தரார்

Posted: 19 Jan 2014 11:39 AM PST

இஸ்லாமாபாத்,

முதலில் சசி தரூர்– சுனந்தாவின் இடையே நுழைந்து, இப்போது சுனந்தாவின் மரணத்துக்கு பின்னணியாக பேசப்படுகிறவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார். பரபரப்பான இந்த தருணத்தில் அவர் பாகிஸ்தானின் 'ஜியோ தேஜ்' டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர், ''சசி தரூரை கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் சந்தித்தேன். ஜூன் மாதம் துபாயில் சந்தித்தேன். எங்களுக்கு இடையே இரண்டே சந்திப்புகள்தான். அவரைப்பற்றி நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். தனக்கு தெரியாத இன்னொரு பெண், தன் கணவரைப்பற்றி புகழ்ந்து எழுதியது அனேகமாக சுனந்தாவுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதனால் என்னுடன் பேச வேண்டாம் என சசி தரூரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் அதைக்கேட்காமல், 'டுவிட்டரில்' தொடர்ந்தார். அதன்பின்னர்தான் என்னை அவர் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும் என்று 'டுவிட்டரில்' சுனந்தா கூறினார்'' என்றார் மெஹர்.

தொடர்ந்து அவர், ''சதி செய்து என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். இங்கு ஒரு பாகிஸ்தான் பெண் உட்கார்ந்து கொண்டு, அவர்களது திருமண வாழ்வை கெடுத்து விட முடியாது'' என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, சுனந்தா சாப்பிடாமல் கொள்ளாமல், தொடர்ந்து அளவு கடந்து சிகரெட் பிடித்துக்கொண்டே இருந்ததாகவும், வயிற்று எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். 'இதைத்தான் அல்ல, இந்திய ஊடகங்கள்தான் சொல்கின்றன' என்றும் கூறினார்.

கடைசியாக அவர் கேட்டது, ''சுனந்தா தனது கணவருடன் சண்டை போட்டார்; அவரது உடல் நலம் பாதித்தது. இதில் எனது காதல் கதைக்கு என்ன தொடர்பு இருக்கிறது?'' என புலம்பினார்.
 

image: 

category:

News Group Category:

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி விராட் கோலியின் சதம் வீண்

Posted: 19 Jan 2014 11:36 AM PST

நேப்பியர்,

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாம்பியன் இந்திய அணி போராடி தோற்றது. கோலி சதம் அடித்தும் பலன் இல்லை.

ஒரு நாள் கிரிக்கெட்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. நியூசிலாந்து அணியில் மில்சுக்கு பதிலாக அதிவேக பவுலர் ஆடம் மில்னே சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெஸ்சி ரைடர்(18 ரன்), மார்ட்டின் கப்தில் (8 ரன்) ஆகியோரை துரிதமாக வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அகமது இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

2 பேர் அரைசதம்

ஆனால் நியூசிலாந்தின் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களை அவ்வளவு சீக்கிரம் காலி செய்ய முடியவில்லை. என்றாலும் அவர்களின் ரன்ரேட்டை நமது பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். வில்லியம்சன் (71 ரன், 88 பந்து), ராஸ் டெய்லர் (55 ரன், 82 பந்து) அரைசதத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார்கள். 39 ஓவர்கள் வரை (4/185) ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரன்டன் மெக்கல்லமும் 30 ரன்களில் (25 பந்து, 4 பவுண்டரி) நடையை கட்டினார்.

ஆனால் இறுதி கட்டத்தில் ஆல்–ரவுண்டர் கோரி ஆண்டர்சனும், விக்கெட் கீப்பர் லுக் ரோஞ்சியும் இணைந்து, ஜெட் வேகத்தில் ரன்களை திரட்டினர். குறைந்த பந்துகளில் சதம் அடித்த உலக சாதனையாளரான ஆண்டர்சன், இந்திய பவுலர்களை பின்னியெடுத்தார். இஷாந்த் ஷர்மா, அஸ்வின், முகமது ஷமியின் ஓவர்களில் மெகா சிக்சர்கள் பறந்தன.

ஆண்டர்சன் அதிரடி

இந்த மைதானம் வித்தியாசமாக நீள் வட்ட வடிவில் காணப்படுகிறது. பேட்ஸ்மேனின் நேர் பகுதியை விட ஆப் மற்றும் லெக்–சைடு பவுண்டரி தூரம் குறைவு. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அந்த பகுதிகளை நோக்கி பந்துகளை அதிகமாக விரட்டியடித்து ரன்களை எளிதாக எடுத்தனர். ஆண்டர்சனின் வாணவேடிக்கையால் நியூசிலாந்து வலுவான ஸ்கோரை அடைந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. ரோஞ்சி 30 ரன்களில் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். கோரி ஆண்டர்சன் 68 ரன்களுடன் (40 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 11 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 107 ரன்கள் சேர்த்தது.

முதல் கோணல் ரோகித்

அடுத்து கடின இலக்கை நோக்கி ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அன்னிய மண்ணில் தொடர்ந்து திணறி வரும் ரோகித் ஷர்மா, எச்சரிக்கையாக ஆடுகிறேன் என்ற பெயரில் வெறுப்பேற்றியதுடன், சொற்ப ரன்னில் கேட்ச் ஆனார். அவர் 23 பந்துகளில் வெறும் 3 ரன் மட்டுமே எடுத்தார்.

இதைத் தொடர்ந்து விராட் கோலி களம் புகுந்தார். நியூசிலாந்தின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு கோலி அசத்தினார். மறுமுனையில் தவான் 32 ரன்களில் (46 பந்து, 3 பவுண்டரி) ஆண்டர்சனின் பவுன்சருக்கு இரையானார். ரஹானே (7 ரன்), ரெய்னாவும் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 129 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பரிதவித்தது.

இந்த சூழலில் கோலியுடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இவர்கள் அணியை சரிவில் இருந்து தேற்றினர். 95 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த கோலி பவுண்டரி அடித்து தனது 18–வது சதத்தை நிறைவு செய்தார். கேப்டன் டோனி தனது பங்குக்கு இரு சிக்சர்களை தூக்கினார். ஆனாலும் இந்தியாவுக்கு நெருக்கடி குறையவில்லை. கடைசி 10 ஓவர்களில் 83 ரன்கள் தேவைப்பட்டன.

கோலி 123 ரன்

கோலி, டோனி ஜோடி களத்தில் நின்றதால் ரசிகர்கள் துளியும் தளரவில்லை. ஆனால் அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது டோனி (40 ரன், 46 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) மிட்செல் மெக்லெனஹான் வீசிய 'ஷார்ட் பிட்ச்' வகை பந்து வீச்சில் தேவையில்லாமல் ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் வெளியேற மறுபடியும் அணி தடம்புரண்டது. ஒரே நம்பிக்கையாக களத்தில் மின்னிக்கொண்டிருந்த விராட் கோலி 123 ரன்களில்(111 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), மெக்லெனஹானின் அடுத்த ஓவரில் புல்டாசாக வீசப்பட்ட பந்தில் கேட்ச் ஆனார். 11 பந்து இடைவெளியில் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டத்தின் போக்கு மாறியது.

நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், இந்தியாவின் பலவீனங்களில் ஒன்றாக கருதப்படும் 'ஷாட்பிட்ச்' பந்து யுக்தியை தமது பவுலர்களை அடிக்கடி கையாள வைத்தார். அதற்கு பலனும் கிடைத்தது. இந்தியாவின் முதல் 6 பேட்ஸ்மேன்களில் 4 பேர் இந்த வகையான பந்து வீச்சுக்கே பலியானார்கள். கோலியின் வெளியேற்றத்திற்கு பிறகு இந்தியாவின் வாய்ப்பு நழுவிப் போனது.

நியூசிலாந்து வெற்றி

முடிவில் இந்தியா 48.4 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை ருசித்தது. நியூசிலாந்து தரப்பில் மெக்லெனஹான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மணிக்கு 153 கிலோ மீட்டர் வேகம் வரை பந்து வீசிய ஆடம் மில்னே முதுகுவலி காரணமாக பாதியிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது. கோரி ஆண்டர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியையடுத்து நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது ஒரு நாள் போட்டி வருகிற 22–ந்தேதி ஹாமில்டனில் நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

நியூசிலாந்து

கப்தில் (சி) அஸ்வின் (பி) ஷமி 8

ரைடர்(பி) ஷமி 18

வில்லியம்சன் (சி) ரஹானே (பி) ஜடேஜா 71

ராஸ் டெய்லர் (சி) டோனி (பி) ஷமி 55

பிரன்டன் மெக்கல்லம் (சி) டோனி (பி) புவனேஸ்வர் 30

கோரி ஆண்டர்சன் (நாட்–அவுட்) 68

ரோஞ்சி (சி) புவனேஸ்வர் (பி) இஷாந்த் 30

நாதன் மெக்கல்லம் (சி) அண்ட் (பி) ஷமி 2

டிம் சவுதி (நாட்–அவுட்) 3

எக்ஸ்டிரா 7

மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 292

விக்கெட் வீழ்ச்சி: 1–22, 2–32, 3–153, 4–171, 5–213, 6–279, 7–284

பந்து வீச்சு விவரம்

புவனேஸ்வர்குமார் 10–0–38–1

முகமது ஷமி அகமது 9–0–55–4

இஷாந்த் ஷர்மா 9–0–72–1

ரவீந்திர ஜடேஜா 9–0–61–1

அஸ்வின் 10–0–52–0

விராட் கோலி 3–0–13–0

இந்தியா

ரோகித் ஷர்மா(சி) சவுதி (பி) மெக்லெனஹான் 3

தவான் (சி) டெய்லர் (பி) ஆண்டர்சன் 32

கோலி (சி) ரைடர் (பி) மெக்லெனஹான் 123

ரஹானே (சி) நாதன் மெக்கல்லம் (பி) ஆண்டர்சன் 7

ரெய்னா (சி) சவுதி (பி) மில்னே 18

டோனி (சி) ரோஞ்சி (பி) மெக்லெனஹான் 40

ஜடேஜா (சி) ரோஞ்சி (பி) மெக்லெனஹான் 0

அஸ்வின் (சி) சவுதி (பி) வில்லியம்சன் 12

புவனேஸ்வர்குமார் (ரன்–அவுட்) 6

இஷாந்த் ஷர்மா (பி) சவுதி 5

முகமது ஷமி (நாட்–அவுட்) 7

எக்ஸ்டிரா 15

மொத்தம் (48.4 ஓவர்களில் ஆல்–அவுட்) 268

விக்கெட் வீழ்ச்சி: 1–15, 2–73, 3–84, 4–129, 5–224, 6–224, 7–237, 8–244, 8–259

பந்து வீச்சு விவரம்

டிம் சவுதி 9.4–2–43–1

மெக்லெனஹான் 10–0–68–4

ஆடம் மில்னே 7.3–0–40–1

ஆண்டர்சன் 10–0–51–2

நாதன் மெக்கல்லம் 10–0–54–0

வில்லியம்சன் 1.3–0–9–1

--–

விக்கெட் கீப்பிங்கில் டோனி சாதனை

--–

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் 32 வயதான டோனி, நியூசிலாந்தின் ராஸ் டெய்லரை கேட்ச் செய்த போது, புதிய மைல்கல்லை எட்டினார். அதாவது விக்கெட் கீப்பிங் பணியில் ஒருவரை டோனி ஆட்டம் இழக்கச் செய்த 300–வது நிகழ்வு இதுவாகும். இந்த இலக்கை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்திய விக்கெட் கீப்பர்களில் அவருக்கு அடுத்த இடத்தில் நயன் மோங்கியா (154 பேர் ஆட்டம் இழப்பு) உள்ளார்.

டோனி இதுவரை 239 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 301 பேரை (222 கேட்ச், 79 ஸ்டம்பிங்) விக்கெட் கீப்பராக செயல்பட்டு அவுட் ஆக்கி இருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அவரது சாதனை 4–வது இடத்தில் வருகிறது. ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (472 ஆட்டம் இழப்பு, 287 ஆட்டம்), தென்ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (424 ஆட்டம் இழப்பு, 295 ஆட்டம்), இலங்கையின் சங்கக்கரா (424 ஆட்டம் இழப்பு, 362 ஆட்டம்) ஆகியோர் இந்த சாதனைப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

--–

சேசிங்கில் கோலி சதத்திற்கு முதல் தோல்வி

--–

இந்திய இளம் நட்சத்திரம் விராட் கோலிக்கு இது 18–வது சதமாகும். தனது 119–வது இன்னிங்சில் இச்சதத்தை எட்டியிருக்கிறார். இதன் மூலம் 18 சதங்களை அதிவேகமாக அடித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது 174–வது இன்னிங்சில் 18 சதங்கள் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. கங்குலியின் சாதனையை கோலி முறியடித்தார்.

2–வது பேட்டிங் செய்யும் போது அதாவது இலக்கை துரத்துகையில் (சேசிங்) கோலி பதிவு செய்த 12–வது சதம் இதுவாகும். இரண்டாவது பேட்டிங்கில் கோலி சதம் அடித்து இந்திய அணி தோற்பது இதுவே முதல் தடவையாகும்.

--–

category:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இவானோவிச்சிடம் வீழ்ந்தார், செரீனா கால்இறுதிக்கு பெயஸ் ஜோடி முன்னேற்றம்

Posted: 19 Jan 2014 11:29 AM PST

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 4–வது சுற்றில் மண்ணை கவ்வினார்.

வீழ்ந்தார் செரீனா

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. நேற்று இந்த சீசனில் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி நிகழ்ந்தது.

2013–ம் ஆண்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தள்ளிய உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சே, பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபனை வெல்வார் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் அனைத்து கணிப்புகளும் பொய்த்து போனதுடன், செரீனாவின் 18–வது கிராண்ட்ஸ்லாம் கனவும் தகர்ந்து போனது. அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர், 14–ம் நிலை வீராங்கனை செர்பியாவின் அனா இவானோவிச். இருவரும் 4–வது சுற்றில் மல்லுக்கட்டினர். இதில் முதல் செட்டை தனதாக்கிய செரீனா, அடுத்த இரு செட்டுகளில் நிறைய தவறுகளை இழைத்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி மீண்டெழுந்த இவானோவிச், அசுர வேகத்தில் ஷாட்டுகளை அடித்து செரீனாவை நிலைகுலைய வைத்தார். இத்தனைக்கும் சர்வீசில் வழக்கம் போல் ஆக்ரோஷம் காட்டிய செரீனா 13 ஏஸ் சர்வீஸ்களை போட்டுத் தாக்கினார். ஆனாலும் அவரால் அடுத்த இரு செட்டுகளில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இவானோவிச் பூரிப்பு

1 மணி 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் இவானோவிச் 4–6, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் செரீனாவை வெளியேற்றினார். இத்துடன் தொடர்ச்சியாக 25 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த அவரது ராஜநடையும் முடிவுக்கு வந்தது. இவானோவிச் தனது வாழ்க்கையில் செரீனாவை சாய்த்து இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடிய 4 ஆட்டங்களிலும் இவானோவிச் நேர் செட்டில் தோற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் பந்தை வெளியே அடித்துவிட்டு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை இவானோவிச்சை விட (27 முறை) செரீனா அதிக முறை (31 முறை) செய்தது அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அளவுக்கு அதிகமாக நிறைய தவறுகள் செய்ததாக ஒப்புக் கொண்ட 32 வயதான செரீனா, வழக்கமாக தான் எளிதில் அடிக்கக்கூடிய ஷாட்டுகளையும் திருப்பி அடிக்க முடியாமல் தவறி விட்டதாக கூறினார்.

வெற்றிக்கு பிறகு 26 வயதான இவானோவிச் கூறுகையில், 'இது வியப்புக்குரிய வெற்றி. எனது வாழ்க்கையில் நான் பெற்ற சிறந்த வெற்றி. இதை நினைக்கும் போது ரொம்ப திரிலிங்காக இருக்கிறது' என்று குறிப்பிட்டார். இந்த ஆட்டம் தான் சமூக வலைதளத்தில் இந்த ஆஸ்திரேலிய ஓபனில் அதிகமாக விவாதிக்கப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியமான விஷயமாகும். ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது மட்டும் 1 லட்சத்து 23 பேர் தங்களது கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்தனர்.

லீ நா வெற்றி

இவானோவிச் கால்இறுதியில் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக விளையாடி வரும் கனடாவின் பவுச்சார்டை சந்திக்கிறார். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் பிளவியா பென்னட்டா 6–1, 4–6, 7–5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக கால்இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

சீனாவின் லீ நா தன்னை எதிர்த்த ரஷியாவின் மகரோவாவை 6–2, 6–0 என்ற நேர் செட்டில் பந்தாடினார். லீ நா கால்இறுதியில் பென்னட்டாவுடன் மோதுகிறார்.

ஜோகோவிச் அபாரம்

ஆண்கள் ஒற்றையரில் 2–ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பாபியோ போக்னினியுடன் மோதினார். இதில் எதிராளியை வெளுத்து வாங்கிய ஜோகோவிச் 6–3, 6–0, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் தொடர்ந்து 19–வது முறையாக கால்இறுதியை எட்டியிருக்கிறார்.

ஜோகோவிச் அடுத்து சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார். வாவ்ரிங்கா 4–வது ரவுண்டில் 6–3, 7–6 (7–3), 7–6 (7–5) என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் தாமி ராபிரிடோவை தோற்கடித்தார்.

இந்திய ஜோடிகள்

ஆண்கள் இரட்டையர் 3–வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட்டில் யுகி பாம்ப்ரி (இந்தியா)–மைக்கேல் வீனஸ்(நியூசிலாந்து இணையை வென்று கால்இறுதிக்குள் நுழைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவையும் லியாண்டர் பெயஸ் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறார். அவர் சுலோவக்கிய வீராங்கனை ஹன்ட்சோவாவுடன் கைகோர்த்து 7–5, 4–6 (10–7) என்ற செட் கணக்கில் தாம்ஜனோவிச் (குரோஷியா)– ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா) இணையை விரட்டி 2–வது சுற்றை அடைந்தார்.

இந்தியாவின் ரோகன் போபண்ணா–பாகிஸ்தானின் குரேஷி கூட்டணி தங்களது 3–வது சுற்றில் 4–6, 6–7 (1) என்ற நேர் செட்டில் டிரிட் ஹூய் (பிலிப்பைன்ஸ்)–டொமினிக் இங்லோட் (இங்கிலாந்து) ஜோடியிடம் சரண் அடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷிய வீராங்கனை எலினா வெஸ்னினா ஜோடி 6–7 (3), 6–4 (10–5) என்ற செட் கணக்கில் சான்டோன்ஜா–டேவிட் மரெரோ (ஸ்பெயின்) இணையை வென்றது.

category:

தமிழகம் முழுவதும் 25–ந்தேதி வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 19 Jan 2014 11:28 AM PST

சென்னை,

தமிழகம் முழுவதும் 25–ந்தேதி வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

வீர வணக்கம் பொதுக்கூட்டம்

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25–ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்த தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத்தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 25–ந்தேதி (சனிக்கிழமை) அன்று அ.தி.மு.க. மாணவர் அணி சார்பாக, அ.தி.மு.க. அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ''வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்'' நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுடனும், மாவட்ட நிர்வாகிகளுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர்பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி.

இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசுபவர்கள் விவரம் குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

வட சென்னை

25–ந் தேதி (சனிக்கிழமை) வட சென்னை வடக்கு மாவட்டம்–இ.மதுசூதனன் (அவைத்தலைவர்), எல்.சசிகலா புஷ்பா (மகளிர் அணிச்செயலாளர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர்), நெல்லை பாலாஜி, கடலூர் ஜி.கங்கா, புலவர் நா.ராஜகோபால், வெங்கடேஷ்பாபு (மாவட்ட செயலாளர்), ஏ.டேவிட் ஞானசேகரன் (மாவட்ட மாணவர் அணிச்செயலாளர்).

வட சென்னை தெற்கு மாவட்டம்– விசாலாட்சி நெடுஞ்செழியன்(அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர்), கே.எம்.கலைச்செல்வி(மகளிர் அணி துணைச்செயலாளர்), சைதை சா.துரைசாமி(சென்னை மாநகராட்சி மேயர்), நடிகர் ஏ.கே.ராஜேந்திரன், இப்ராஹிம் ராவுத்தர் (திரைப்பட தயாரிப்பாளர்), கோவை புரட்சித்தம்பி, நா.பாலகங்கா, எம்.பி. (மாவட்ட செயலாளர்), கோபால் (மாவட்ட மாணவர் அணிச்செயலாளர்).

தென் சென்னை

தென் சென்னை தெற்கு மாவட்டம்–ஈ.வெ.கி.சுலோச்சனா சம்பத்(அமைப்புசெயலாளர்), ஏ.கே.செல்வராஜ்(அமைப்பு செயலாளர்), ஆர்.ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., லியாகத்அலிகான் (திரைப்பட இயக்குனர்), தரங்கை கண்ணன், நாஞ்சில் என். கோபிநாத், விருகை ரவி (மாவட்ட செயலாளர்), எம். ராமலிங்கம் (மாவட்ட மாணவர் அணிச்செயலாளர்).

தென் சென்னை வடக்கு மாவட்டம்–பி.பழனியப்பன் (தலைமை நிலையச்செயலாளர், உயர் கல்வித் துறை அமைச்சர்), எஸ். கோகுல இந்திரா, எம்.எல்.ஏ., (அமைப்புச்செயலாளர்), கவிஞர் முத்துலிங்கம் (திரைப்பட பாடலாசிரியர்), நடிகர் பாலு ஆனந்த், காஞ்சி பாஸ்கர், வி.பி. கலைராஜன், எம்.எல்.ஏ., (மாவட்ட செயலாளர்), செந்தில்வேல்(மாவட்ட மாணவர் அணி செயலாளர்).

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மத்திய மாவட்டம்– ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க. பொருளாளர், பொதுப்பணித்துறை அமைச்சர்), ஆலந்தூர் பக்கீம்(சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்), நடிகர் ஜெயகோவிந்தன், ஏ.நூர்ஜஹான், தீக்கனல் லட்சுமணன், சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன், எம்.பி.(மாவட்ட செயலாளர்), கே.பாலகுமார்(மாவட்ட மாணவர் அணிச்செயலாளர்).

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம்–டாக்டர் வா.மைத்ரேயன், எம்.பி.,(மருத்துவ அணித்தலைவர்), பி.செந்தூர்பாண்டியன்(இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்), எம்.எம்.சேகர் (அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி துணைத்தலைவர்), நடிகர் கே.ஆர்.சிங்கமுத்து, இடிமுரசு ரா.ரவி, சைதை அரவரசன், வாலாஜாபாத் பா.கணேசன், எம்.எல்.ஏ.,(மாவட்ட செயலாளர்), அப்பு (எ) வள்ளிநாயகம் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்).

காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்– விஜயகுமார்(மாணவர் அணிச்செயலாளர்), கே.குமார்(அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி துணைச்செயலாளர்), நடிகர் ராமராஜன், புலவர் பூ.செல்வராஜ், க.மாணிக்கம், சின்னையா(மாவட்ட செயலாளர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்), ஜி.எம்.சாந்தகுமார் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்).

திருவள்ளூர்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்–பா. வளர்மதி (இலக்கிய அணிச்செயலாளர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர்), டாக்டர் கே.கவிதா (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர்), சங்கரதாஸ்(திரைப்பட வசனகர்த்தா), ஆர்.கே.சண்முகம், எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி, ரமணா(மாவட்ட செயலாளர், வருவாய்த்துறை அமைச்சர்), முல்லைவேந்தன்(மாவட்ட மாணவர் அணி செயலாளர்).

திருவள்ளூர் தெற்கு மாவட்டம்–டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி.,(மருத்துவ அணிச்செயலாளர்), எஸ்.அப்துல் ரஹீம்(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்), வளர்மதி ஜெபராஜ் (முன்னாள் அமைச்சர்), விழுப்புரம் செல்வராஜ், புலவர் மா.குழந்தைசாமி, ஆர்.எஸ்.கே.துரை, மாதவரம் வி.மூர்த்தி(மாவட்ட செயலாளர், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்), மைக்கேல்ராஜ் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

மத்திய மந்திரி அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் இன்று தர்ணா போலீஸ் திடீர் தடை உத்தரவு

Posted: 19 Jan 2014 11:26 AM PST

புதுடெல்லி,

ஆத் ஆத்மி கட்சி சார்பில் உள்துறை அமைச்சகம் முன் இன்று தர்ணா போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

முதல்–மந்திரி கோரிக்கை

தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட மந்திரி சோம்நாத் பாரதிக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ராக்கி பிர்லாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்த முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு காவல்துறை தலைவரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார்.

தர்ணாவுக்கு அழைப்பு

இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவை பின்னர் சந்தித்து பேசிய முதல்–மந்திரி, 'கடமையை செய்யாத போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் மத்திய உள்துறை மந்திரியின் அலுவலகம் முன் 20–ந்தேதி (இன்று) முதல்–மந்திரி தலைமையில் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவர் என அக்கட்சி சார்பில் பின்னர் அறிவிக்கப்பட்டது.

144 தடை உத்தரவு

இந்தநிலையில் உள்துறை மந்திரியின் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி மாவட்டம் முழுவதும் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டெல்லி மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்தால் அப்பகுதியில் கூட்டம் கூடாமல், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி போலீசாருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மியின் தர்ணா போராட்டத்துக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

category:

News Group Category:

மாநில கபடி போட்டி: சென்னை குயின்ஸ் அணி சாம்பியன்

Posted: 19 Jan 2014 11:23 AM PST

சென்னை,

பெரியார் வீர விளையாட்டு கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மூன்று நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை குயின்ஸ் அணி 24–12 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பரிசினை வழங்கினார். விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், பெரியார் வீரர் விளையாட்டு கழக தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் எடிசன் ராஜா, செயலாளர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ், முன்னாள் சர்வதேச வீரர் ராஜரத்தினம், சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

category:

இந்தியன் முஜாகிதீன் கைதியை விடுவிக்கக்கோரி கெஜ்ரிவாலை கடத்த தீவிரவாதிகள் சதி விமான நிலையங்களுக்கும் அச்சுறுத்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 19 Jan 2014 11:23 AM PST

புதுடெல்லி,
 

இந்தியன் முஜாகிதீன் கைதியை விடுவிக்கக்கோரி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருக்கிறது. மேலும் அவர்கள் விமானத்தை கடத்தும் அச்சுறுத்தல் இருப்பதால், விமானநிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி யாசின் பத்கல்.

தீவிரவாததாக்குதல்கள்

இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பத்கல் என்ற இடத்தை சேர்ந்தவர். 30 வயதான யாசின் பத்கல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி பீகார் மாநிலத்தில் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.

யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆமதாபாத், சூரத், பெங்களூர், புனே, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

பெங்களூர் கொண்டு வந்தனர்

2010-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையேயான ஆட்டம் தொடங்குவதற்கு முன், அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு விசாரணைக்காக யாசின் பத்கலை கர்நாடக போலீசார் கடந்த 17-ந்தேதி தங்கள் காவலில் எடுத்தனர். இதைத்தொடர்ந்து அவரை டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெங்களூர் கொண்டு வந்தனர். வருகிற 28-ந்தேதி வரை யாசின் பத்கலை கர்நாடக போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க இருக்கிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவாலை கடத்த சதி

இந்த நிலையில், யாசின் பத்கலை விடுவிக்கும் கோரிக்கையை முன்வைத்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தனக்கோ தனது மந்திரிகளுக்கோ போலீஸ் பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை என்று கெஜ்ரிவால் கூறி வந்தார். காசியாபாத்தில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதும் அவருக்கு டெல்லி போலீசாரும், உத்தரபிரதேச மாநில போலீசாரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முன்வந்தனர். அத்துடன் அவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கவும் போலீசார் தீர்மானித்தனர். ஆனால் கெஜ்ரிவால் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்து, கடத்தல் அச்சுறுத்தல் பற்றி எடுத்துக் கூறி 'இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

விமானத்தை கடத்த திட்டம்?

யாசின் பத்கலை விடுதலை செய்யும் நோக்கத்தில், இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் குடியரசு தினமான 26-ந்தேதியன்று விமானத்தை கடத்த வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதுபற்றிய தகவலை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கருக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதேபோல் சென்னை, ஐதராபாத் நகரில் உள்ள விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு 'உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீர் சிறையில் இருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் மற்றும் இரு தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கந்தகாருக்கு கடத்திச்சென்றனர். அந்த தீவிரவாதிகளை விடுதலை செய்த பின்னரே விமான பயணிகளை தீவிரவாதிகள் விடுவித்தனர்.

5 அடுக்கு பாதுகாப்பு

அதேபோல் இப்போது யாசின் பத்கலை விடுதலை செய்யக்கோரி தீவிரவாதிகள் விமானத்தை கடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்து இருப்பதால் சென்னை, பெங்களூர், ஐதராபாத் விமானநிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

விமான கடத்தல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவுப் பகுதியில் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தே அனுமதிக்கின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

விமான நிலைய 'போர்டிகோ' பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கார்கள் நிறுத்தும் இடம், விமான நிலைய சுற்று பகுதிகள் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மாறு வேடத்திலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

விமான நிலைய வளாகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரிப்பதோடு, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது

Posted: 19 Jan 2014 11:15 AM PST

சிட்னி,

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3–வது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.

'டாஸ்: ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இயான் மோர்கான் 54 ரன்னும், டிம் பிரிஸ்னன் (நாட்–அவுட்) 41 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவுல்டர் நிலே 3 விக்கெட்டும், கிறிஸ்டியன், பவுல்க்னெர் தலா 2 விக்கெட்டும், டோஹர்த்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலியா வெற்றி

பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 22 ரன்னிலும், டேவிட் வார்னர் 71 ரன்னிலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 34 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷான் மார்ஷ் 71 ரன்னுடனும், பிராட் ஹேடின் 37 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான், ரவிபோபரா, பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பிரிஸ்பேனில் நடந்த 2–வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 4–வது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற 24–ந் தேதி நடக்கிறது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™