Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இந்திய பெண்ணுக்கு முக்கிய பதவி: ஒபாமா உத்தரவு

Posted: 17 Jan 2014 01:00 PM PST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வசிக்கும் சிறந்த திறமையுள்ள இந்திய வம்சாவளிகள் பலருக்கு ஜனாதிபதி ஒபாமா முக்கிய பதவிகள் வழங்கி கவுரவித்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் ஏமன் நாட்டு தூதராக மேத்யூ எச்.துயில்லெர் உள்பட பலரை புதிதாக நியமனம் செய்து ஒபாமா உத்தரவு பிறப்பித்தார்.

இதில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஷமினா சிங் தேசிய சமுதாய சேவை கார்ப்பரேசனின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உள்ளிட்ட பல அரசு, தனியார் துறைகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

category:

News Group Category:

இங்கிலாந்து ராணியின் பேத்திக்கு பெண்குழந்தை பிறந்தது

Posted: 17 Jan 2014 12:58 PM PST

லண்டன்

இங்கிலாந்து ராணி   எலிசபத்தின் மகன்  பிலிப்ஸ்சின் மகள் சாரா பிலிப்ஸ் இவருக்கும் ரக்பி விளையாட்டு வீரர்  பிலிப்ஸ்சுக்கும்  கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது பெண்குழந்தை பிறந்து உள்ளது.இத்தகவலை  பக்கிகாம் அரண்மனை வெளியிட்டு உள்ளது

category:

எம்.ஜி.ஆர்.சிலை உடைப்பு அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

Posted: 17 Jan 2014 12:10 PM PST

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே எம்.ஜி.ஆர். சிலையை மர்ம மனிதர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு, காலை 6 மணியளவில் விழா ஏற்பாடுகளை செய்வதற்காக மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், தேவனூர் செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தனர்.

அப்போது சிலையின் ஒரு கையையும், மற்றொரு கையின் விரல் பகுதியையும் யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து, சேதப்படுத்தி இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சம்பவம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

சாலை மறியல் செய்ய முயற்சி

தகவல் அறிந்ததும் அரகண்டநல்லூர் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலு, திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஏ.வினாயகமூர்த்தி, முகையூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.துளசிராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கூடினார்கள்.

பின்னர் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் கூடியிருந்த அ.தி.மு.க. வினரிடையே சமரசம் பேசி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். சேதப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையையும் தற்சமயம் மூடி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் நேற்று நடைபெற இருந்த எம்.ஜி.ஆர் பிறந்ததின விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மணம்பூண்டி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் கோவில்களில் தைப்பூச விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Posted: 17 Jan 2014 12:00 PM PST

விழுப்புரம் கோவில்களில் நடந்த தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழா

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அரிகரபுத்திர அய்யனாரப்பன் கோவிலில் நேற்று தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை யொட்டி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 2 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அய் யனாரப்பனை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் வாண வேடிக் கையுடன் சாமி திருவீதி உலா வும், வெட்டுக்காடு சுந்தரம் குழுவினரின் தெருக் கூத்து நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கட கிருஷ் ணன், ஆய்வாளர் கவியரசு மற்றும் காகுப்பம் பகுதி பொதுமக்கள் செய்திருந் தனர்.

அன்னதானம்

விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம், பிரசாதம் வழங்கப்பட் டது.

இதேபோல் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள பாலமுருகன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில் களிலும் நேற்று தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.

முண்டியம்பாக்கம் பாலமுருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மத்திய இணை அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்த புஷ்கர் தற்கொலை

Posted: 17 Jan 2014 11:58 AM PST

புதுடெல்லி,

மத்திய இணை அமைச்சராக இருந்து வருபவர் சசிதரூர் இவர் மனைவி புதுடெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில் (சுனந்தா புஷ்கர்) மர்மமாக இறந்துகிடந்ததாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் பேரில் டெல்லி போலீசார் புதுடெல்லியில் உள்ள லீலா ஓட்டலுக்கு சென்று பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் அவர் மர்மமாக இறந்து கிடந்தது தெரியவந்தது.டெல்லிபோலீசார் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய மந்திரி சசிதரூர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் நீண்டநாள் காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மெர் தரார் என்ற பெண் பத்திரிகையாளருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டி இருந்தார்.

மெர் தரார், 13–வயது பையனின் தாய் ஆவார். அவர் பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரும், சசிதரூரின் மனைவி சுனந்தாவும் நேற்று பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

மேலும், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருடன் சசிதரூர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனால் சசிதரூரிடம் இருந்து விவாகரத்து கேட்கப் போவதாகவும் சுனந்தா கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மத்திய மந்திரி சசிதரூரின் 'டுவிட்டர்' கணக்கில் யாரோ விஷமிகள் ஊடுருவி அதை சிதைத்தனர். அவரது கணக்கில் இருந்து பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருக்கு கேலிக்கூத்தான மெசேஜ்களை அனுப்பி வைத்தனர். இதனால் சமூக வலைத்தள வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சசிதரூர் தனது 'டுவிட்டர்' கணக்கை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில்,  தரூர் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தனது டுவிட்டர் கணக்கு சிலரால் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.  மேலும், சசி தரூர் மற்றும் சுனந்தா தம்பதியினர்  இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டோம்.  அந்த வழியிலேயே தொடர்ந்து பயணம்செய்து வருகிறோம் என்று தெரிவித்து  இருந்தனர் இந்த நிலையில் சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 

category:

News Group Category:

மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அளக்கும் பணி

Posted: 17 Jan 2014 11:43 AM PST

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி விதி மீறிகட்டப்பட்ட கட்டிடங்களை அளக்கும் பணி நேற்று தொடங்கியது. 70 சதவீத கட்டிடங்களுக்கு இதனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கோபுர தரிசனத்தை மறைக்கும் கட்டிடங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சித்திரை வீதிகளில் 9 மீட்டர் அளவிற்கும், மாசிவீதிகளில் 12மீட்டர் அளவிற்கும், வெளிவீதிகளில் 15 மீட்டர் அளவிற்கும் மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று 1997, 99–ம் ஆண்டுகளில் அரசு ஆணை பிறப்பித்தது. இது தவிர மதுரை மாநகராட்சியின் உயர கட்டுப்பாடு விதியும் நடைமுறையில் உள்ளது.

இதையொல்லம் மீறி ஏராளமான கட்டிடங்கள் இந்த விதிகளை மீறி வணிக நோக்குடன் கட்டியும், கட்டப்பட்டும் வருகின்றன. இந்த உயரமான கட்டிடங்களால் பக்தர்களால் கோபுர தரிசனம் செய்ய முடியவில்லை.

பொதுநல மனு தாக்கல்

இதனை சுட்டிக்காட்டி வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகரன், வைத்தியநாதன் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உயரக்கட்டுப்பாடு மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எத்தனை என்பது குறித்து ஆய்வு செய்து வருகிற ஜனவரி 31–தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, வக்கீல் ஆணையர்களாக வக்கீல்கள் சித்தரஞ்சன்தாஸ், ரமேஷ் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று காலை கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கட்டிடங்களை அளக்க வக்கீல் ஆணையர்கள் சித்தரஞ்சன்தாஸ், ரமேஷ், மனுதாரர் முத்துக்குமார், மாநகராட்சி உதவி கமிஷனர் தேவதாஸ், நகரமைப்பு முதன்மை அலுவலர் ராக்கப்பன் மற்றம் மாநகராட்சி நல அளவை பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து அம்மன் சன்னதி, சித்திரை வீதிகளில் உள்ள கட்டிடங்களை நேற்று காலை அளவு எடுக்கத் தொடங்கினார்.

70 சதவீத கட்டிடங்களுக்கு ஆபத்து

அப்போது அம்மன் சன்னதியில் உள்ள கட்டிடங்களில், ஒரு சில கட்டிடங்கள் 12 மீட்டருக்கு மேல் இருப்பதை கண்டு பிடித்தனர். அது குறித்து கட்டிட உரிமையாளர்களிடம் விசாரித்த போது, அந்த கட்டிடங்கள் 1956–ல் கட்டப்பட்டன என்பது தெரியவந்தது. கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பு இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதால் இது குறித்து விவரங்களையும் அதிகாரிகள் குறிப்பெடுத்து கொண்டனர்.

நேற்று மாலை 5 மணி வரை நடந்த இந்த ஆய்வில் 200–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அளவிடப்பட்டன. இதில் 70 சதவீதத்திற்கும் மேல் உள்ள கட்டிடங்கள் வீதி மீறி கட்டப்பட்டு உள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆதீன மடமும், வடக்கு சித்திரை வீதிகளில் உள்ள பல்வேறு புதிய கட்டிடங்களும் அடங்கும்.

category:

ஆண்டு ஒன்றுக்கு, வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் 12 ஆக உயர்வு மத்திய மந்திரி அறிவிப்பு

Posted: 17 Jan 2014 11:13 AM PST

புதுடெல்லி,

தற்போது வீடுகளுக்கு மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி கோரிக்கை

9 சிலிண்டர்களுக்கு அதிகமாக பயன்படுத்தும் குடும்பத்தினர், வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு (ஒரு சிலிண்டருக்கு ரூ.1,258) கியாஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இந்த கோரிக்கையை வற்புறுத்தி வந்தார். ஆனால், மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கடந்த வாரம் வரை கூறி வந்தார்.

12 சிலிண்டர்களாக உயர்வு

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், பேசிய ராகுல் காந்தி, மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி வீரப்ப மொய்லி, மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9–ல் இருந்து 12 ஆக அதிகரிக்கப்படும் என்றும், அது குறித்து மத்திய மந்திரிசபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த பெட்ரோலியம் அமைச்சக அதிகாரிகள், சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து மத்திய மந்திரி உத்தரவு வெளியானதும், அது தொடர்பான திட்டக்குறிப்பை மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழுவிற்கு அனுப்பி வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

15 கோடி வாடிக்கையாளர்கள்

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர் (14.2 கிலோ) ஆண்டுக்கு 9 என்பது ஒரு குடும்பத்துக்கு போதாது என்றும், இதை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தார்.

கடந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து இருந்த மந்திரி வீரப்ப மொய்லி, ''நாடு முழுவதிலும் சமையல் கியாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 15 கோடி பேர் உள்ளனர். அவர்களில் 89.2 சதவீதம் பேருக்கு 9 சிலிண்டர்கள் போதுமானது. இதனால் 10 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை வாங்கி வருகிறார்கள். இந்த ஒதுக்கீடு எண்ணிக்கை 12 சிலிண்டர்களாக உயர்த்தப்பட்டால் 97 சதவீத வாடிக்கையாளர்களுக்கு முழு அளவில் மானிய விலை சிலிண்டர்கள் கிடைக்கும்'' என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மானியச்சுமை அதிகரிப்பு

தற்போது சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதன் மூலம், மத்திய அரசு வழங்க வேண்டிய மானியச்சுமை, ரூ.3,300 கோடியில் இருந்து ரூ.5,800 கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானியச்சுமையை குறைப்பதற்காக கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கிளம்பிய கடும் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு, கடந்த ஆண்டு (2013) ஜனவரியில் இந்த எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தி இருந்தது. இனி, ஆண்டுக்கு 12 சிலிண்டர்களாக உயர்த்தப்படும்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்விப்பிடியில் இருந்து தப்பினார், லீ நா

Posted: 17 Jan 2014 11:04 AM PST

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் முன்னணி வீராங்கனை சீனாவின் லீ நா நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பித்தார்.

ஜோகோவிச்சின் அசத்தல்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியின் 5–வது நாளான நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் 2–ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6–3, 6–3, 7–5 என்ற நேர் செட்டில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமினை தோற்கடித்தார். ஆஸ்திரேலிய ஓபனில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 27–வது வெற்றி இதுவாகும். அடுத்து அவர், ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 3–ம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெரர் 6–2, 7–6 (5), 6–2 என்ற செட்டில் பிரான்சின் ஜெர்மி சார்டியை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார். தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), தாமி ராபிரிடோ (ஸ்பெயின்), புளோரியன் மேயர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இந்திய ஜோடிகள்

ஆண்கள் இரட்டையர் 2–வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்பரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட்டில்டி ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)– ஹோரியா டெகாவ் (ருமேனியா) இணையை வென்றது.

இதே போல் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் கூட்டணி தங்களது முதல் சுற்றில் 6–4, 6–1 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் லுகாஸ் லோகி–லுகாஸ் ரசோல் இணையை துரத்தியது.

தப்பினார் லீ நா

பெண்கள் பிரிவில் உலகின் 4–ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி பிழைத்தார். இவர் 3–வது சுற்றில் 26–ம் நிலை வீராங்கனை செக்குடியரசின் லூசி சபரோவாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய சபரோவா, 2–வது செட்டிலும் 6–5 என்று முன்னிலை பெற்று, வெற்றியின் விளிம்புக்கு சென்றார். இந்த புள்ளியை எடுத்தால் வெற்றி உறுதி என்ற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவர் அடித்த ஷாட் வெளியே சென்றதால் லீ நாவுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு இந்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி தனதாக்கிய லீ நா அடுத்த செட்டில் எதிராளியின் கை ஓங்க விடாமல் பார்த்துக் கொண்டார்.

2 மணி 37 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் லீ நா 1–6, 7–6 (2), 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். பின்னர் லீ நா கூறுகையில், 'அந்த 5 சென்டி மீட்டர் தான் (சபரோவா அடித்த ஷாட் லைனை விட்டு விலகிய தூரம்) போட்டியில் என்னை காப்பாற்றி இருக்கிறது. அவர் மட்டும் அந்த ஷாட்டை சரியாக அடித்திருந்தால், நானும் எனது சகாக்களும் இப்போது விமான நிலையத்திற்கு கிளம்பியிருப்போம். இது கடினமான நாளாக அமைந்தாலும், முதல் புள்ளியில் இருந்து கடைசி புள்ளி வரை போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

இவானோவிச்

உள்ளூர் ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கிய செர்பியாவின் அனா இவானோவிச் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுரின் சவாலை 2 மணி 14 நிமிடங்களில் 6–7 (8–10), 6–4, 6–2 என்ற செட் கணக்கில் முடிவுக்கு கொண்டு வந்தார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், இத்தாலியின் பிளவியா பென்னட்டா, ரஷியாவின் மகரோவா, கனடாவின் பவுச்சார்டு, ஆஸ்திரேலியாவின் கேசி டெல்லக்குவா உள்ளிட்டோரும் 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நேற்றும் மெல்போர்னில் வெயில் வறுத்தெடுத்தது. அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வரை அனல்காற்று வீசியது. ஆனாலும் முந்தைய நாள் போன்று ஆட்டங்கள் ஏதும் நிறுத்தப்படவில்லை.

செரீனா வில்லியம்ஸ் சாதனை

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3–வது சுற்றில் 6–3, 6–3 என்ற நேர் செட்டில் 31 வயதான சுலோவக்கியாவின் டேனிலா ஹன்ட்சோவாவை பந்தாடினார். 1998–ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று வரும் 32 வயதான செரீனா இங்கு இதுவரை 69 ஆட்டங்களில் விளையாடி அதில் பதிவு செய்த 61–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் அதிக வெற்றிகள் பெற்ற வீராங்கனை என்று புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் 60 வெற்றிகள் பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

ஆஸ்திரேலிய ஓபனை 5 முறை கைப்பற்றியவரான செரீனா இன்னொரு சாதனையையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். அதாவது ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை ஆடியவரான அமெரிக்காவின் லின்சே டேவன்போர்டுவின் (69 ஆட்டம்) சாதனையை சமன் செய்தார். ஆனால் செரீனாவுடன் ஒப்பிடும் போது, டேவன்போர்டு அதில் 56–ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 30 வயதுக்கு மேல் உள்ள வீராங்கனைகளுக்கு எதிராக செரீனா தொடர்ச்சியாக பெற்ற 21–வது வெற்றியாகவும் இது அமைந்தது.

category:

இங்கிலாந்துக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: பவுல்க்னெர் அதிரடியில் ஆஸ்திரேலியா ‘திரில்’ வெற்றி

Posted: 17 Jan 2014 11:01 AM PST

பிரிஸ்பேன்,

இங்கிலாந்துக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் 'திரில்' வெற்றியை பெற்றது.

2–வது ஆட்டம்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக ஷேன் வாட்சன், டோஹர்த்திக்கு பதிலாக ஷான் மார்ஷ், மிட்செல் ஜான்சன் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. கேப்டன் அலஸ்டயர் குக் 22 ரன்னிலும், ஜோ ரூட் 2 ரன்னிலும், கேரி பேலன்ஸ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 4–வது விக்கெட்டுக்கு இறங்கிய இயான் மோர்கனும் ஒரு ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. சுழற்பந்து வீச்சாளர் மைக்கேல் கிளார்க்கின் பந்து வீச்சில் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் ஆனார். ஆனால் விதிமுறைக்கு புறம்பாக உள்வட்டத்திற்கு வெளியே அதிக பீல்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக நடுவர் தர்மசேனாவிடம் மோர்கன் புகார் செய்தார்.

மோர்கனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

'பவர்–பிளே' இல்லாத நேரங்களில், 30 யார்டு வட்டத்திற்கு வெளியே புதிய விதிப்படி 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அந்த சமயத்தில் 5 பீல்டர்களை நிறுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை 'நோ–பால்' என்று நடுவர் அறிவித்தார். இப்படியொரு அரிய அதிர்ஷ்டத்தை பெற்ற மோர்கன் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 70 பந்துகளில் அரைசதத்தை கடந்த அவர் அதன் பிறகு வெளுத்து வாங்கினார். வெறும் 24 பந்துகளில் அடுத்த 50 ரன்களை சேரிகத்த அவர் 94 பந்துகளில் தனது 6–வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அணி வலுவான நிலையை எட்ட உதவிய மோர்கன் கடைசி ஓவரில் 106 ரன்களில் (99 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. இயான் பெல் (68 ரன்), ஜோஸ் பட்லர் (49 ரன்), ரவி போபரா (24 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

பவுல்க்னெர் மிரட்டல்

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில், முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஆரோன் பிஞ்ச் டக்–அவுட் ஆனார். மற்றொரு அதிரடி சூரர் டேவிட் வார்னர் 18 ரன்களில் நடையை கட்டினார். ஷான் மார்ஷ் (55 ரன்), கிளைன் மேக்ஸ்வெல் (54 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்த போதிலும், இன்னொரு புறம் கேப்டன் மைக்கேல் கிளார்க் (17 ரன்), ஜார்ஜ் பெய்லி (24 ரன்), பிராட் ஹேடின் (26 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 9–வது விக்கெட்டாக மிட்செல் ஜான்சன் (2 ரன்) ஆட்டம் இழந்த போது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்டன. எனவே இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து முதல் வெற்றியை ருசிக்கப்போகிறது என்று தான் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் இந்திய தொடரில் பட்டைய கிளப்பிய ஆல்–ரவுண்டர் ஜேம்ஸ் பவுல்க்னெர் சொந்த மண்ணிலும் விசுவரூபம் எடுத்தார். அவரும், கிளைன்ட் மெக்கேவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் நேர்த்தியாக ஆடினார். மெக்கேயின் ஒத்துழைப்புடன் வாண வேடிக்கை காட்டிய பவுல்க்னெர், பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் 2 சிக்சர்கள் விரட்டினார். அவரது அடுத்த ஓவரில் மீண்டும் சிக்சருக்கு தூக்கிய போது, எல்லைக்கோடு அருகே ஜோ ரூட் கேட்ச் செய்தார். ஆனால் பந்தை பிடித்த ஜோ ரூட் தடுமாறி எல்லைக்கோட்டை தாண்டி விழுந்ததால், அது சிக்சராக மாறியதோடு, வெற்றிக்கனியும் நழுவி இடம் மாறியது.

ஆஸ்திரேலியா வெற்றி

இதன் பின்னர் ஸ்டோக்சின் இன்னொரு ஓவரில் மறுபடியும் 2 சிக்சர்களை பறக்க விட்டு பவுல்க்னெர் அட்டகாசப்படுத்தினார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் வீசினார். ஆனால் அவராலும் பவுல்க்னெரை கட்டுப்படுத்த இயலவில்லை. அவரது முதல் 3 பந்துகளையும் தொடர்ந்து பவுண்டரிக்கு விரட்டி பவுல்க்னெர் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 301 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த மைதானத்தில் 300–க்கும் மேலான ஸ்கோரை ஓர் அணி வெற்றிகரமாக சேசிங் செய்வது இதுவே முதல் முறையாகும். 23 வயதான பவுல்க்னெர் 69 ரன்களுடனும் (47 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), மெக்கே 2 ரன்னுடனும் (9 பந்து) களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பவுல்க்னெரின் ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததாக இரு அணியின் கேப்டன்களும் வியந்து பாராட்டினர். 'ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் அணியின் புதிய வரவு. இவர் புதிய மைக்கேல் பெவன்' என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பவுல்க்னெருக்கு புகழாரம் சூட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.

category:

போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு ஆம் ஆத்மி கட்சி அதிரடி

Posted: 17 Jan 2014 11:00 AM PST

புதுடெல்லி,

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சிப் பூசல் உருவாகி உள்ளது. இந்தக்கட்சியின் லட்சுமிநகர் தொகுதி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி நேற்று முன்தினம் கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கட்சி, தனது கொள்கைகளிலிருந்து விலகிச்செல்வதாகவும், கெஜ்ரிவால் சர்வாதிகாரிபோல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தப் பேட்டி கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி அவரிடம் விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி கட்சி நோட்டீசு அனுப்பி உள்ளது. கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தாவுக்கு அவர் தனது விளக்கத்தை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் தீபக் வாஜ்பாய் தெரிவித்தார்.
 

image: 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™