Daily Thanthi |
- பில்லி, சூனியம் விரட்டும் மந்திரங்கள்
- அகத்தியரின் சீடர் வழிபட்ட ஆலயம்
- மகிமை தரும் தேவனின் ஆசீர்வாதம்
- இறைவனின் அருட்கொடை
- அழகான குழந்தை பெற ‘அரச மரம்’ சுற்றலாமா?
- அறுவடைத் திருநாள்
- தைப்பூசம்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், பெடரர், அஸரென்கா 3–வது சுற்றுக்கு முன்னேற்றம் ஷரபோவா போராடி வெற்றி; சானியா ஜோடியும் அபாரம்
- ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணி பங்கேற்பதை உறுதி செய்தது
- ரூ.2 லட்சம் பரிசுத்தொகைக்கான மாநில கபடி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
| பில்லி, சூனியம் விரட்டும் மந்திரங்கள் Posted: 16 Jan 2014 03:00 PM PST நான்கு வேதங்களில் நான்காவது வேதமாகிய 'அதர்வண' வேதம் வாழ்வியலின் அகம் சார்ந்த புற வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி விரிவாகவும், நுட்பமாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்கிறது. சாணக்கியரும் தனது அர்த்த சாஸ்திரத்தில் இந்த அகம் சார்ந்த புறவாழ்வியலை அரசாளும் மன்னர்களுக்குச் சொல்வதன் மூலம் பாதுகாப்பான வாழ்வாதாரங்களை அமைத்துக் கொள்ளும் விதங்களை நுட்பமாகவே தந்திருக்கிறார். இந்த இரு பழமையான நெறிமுறை வழிகாட்டுதல்களையும், ஆகம சாஸ்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, செய்வினை, இடுமருந்து போன்றவை செய்யப்படுகிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற மொழி வழக்கு ஒன்று உண்டு. அன்று முதல் இன்றைய கால கட்டம் வரையில் பில்லி, சூனியம் சார்ந்த செயல் முறைகள் யாவுமே செய்பவன், செய்யப்படுபவன் ஆகிய இருவருக்குமே பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது என்பது யாவருமே அறிந்த உண்மையாகும். இந்தக் கலியுகத்தில் சாதாரணமாகவே பிரச்சினைகளுக்குப் பஞ்சமேயில்லை. இந்த நிலையில் இது போன்ற செயற்கையான துன்பங்களால் ஒரு சிலர் படும் அவதி, மற்றவர்களது பார்வையில் கேலிக் கூத்தாகவே தென்படுவது நடைமுறையில் உள்ள சங்கடமாகும். இத்தகைய அசாதாரணமான சூழலில் மேற்கண்ட சிரமங்களின் தீர்வுகளுக்கான சில வழிவகைகளையே நாம் இங்கு காண இருக்கிறோம். முதலில் காணவிருப்பது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் மூல மந்திரமாகும். இதை ஒருவர் குரு முகமாகப் பெற்று உச்சாடனம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். அப்படியில்லாவிடில் ஒரு ஸ்வாதி நட்சத்திர தினத்தன்றோ, அல்லது ஒரு பிரதோஷ தினத்தன்றோ, அல்லது கார்த்திகை மாதம் வரக்கூடிய ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமையன்றோ ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை பிரதட்சணம் வந்து நன்கு பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்ய தொடங்க வேண்டும். அன்றிலிருந்து தொடர்ந்து 108 நாட்கள் தினமும் 48 முறை வீட்டிலோ, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னிதியிலோ உச்சாட ணம் செய்து வந்தால் எந்தவிதத் துன்ப துயரமும் அணுகவே அணுகாது.
'உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்' இதை அவசரமில்லாமல் நிதானமாகச் சொல்ல வேண்டும். எண்ணிக்கைக்கு துளசி மாலையைப் பயன்படுத்தலாம். அசைவ உணவுப் பழக்கம் இருந்தால் அதை நிச்சயமாகத் தவிர்த்தே ஆக வேண்டும். இந்த மந்திரத்தை, சாத்வீக வேளையான சூரிய உதயத்திற்கு முன்பாகச் சொல்லி வருதல் விசேஷமாகும். மேலும் சிரமங்கள் கடுமையாக இருந்தால் வீட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் படத்தை வைத்து அதற்கு பானகம் நைவேத்தியம் செய்து, தூப, தீப ஆராதனை செய்து 24 முறை பிரதட்சண நமஸ்காரம் செய்து வந்தால் மிக நல்ல பலன்களை நடைமுறையில் பார்க்கலாம். இன்னொரு முறையானது ஸ்ரீ பைரவரின் வழிபாட்டு முறையாகும். நமக்கு உள்ளுணர்வில் ஏதோ முரண்பாடான உணர்வோ, தலை சுற்றலான உணர்வோ, அல்லது நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மாலேயே உணர முடியாமலிருப்பதோ, அல்லது காரணமற்ற ஒருவித பய உணர்வோ, நடுக்கமான உடல் செயல்பாடுகள் நமக்கு இருந்தாலோ (தகுந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகும்) குடும்பத்தில் மிகச் சாதாரணமாக, அடிதடி விவகாரங்களால் ரத்தக் காயங்கள் உண்டாகிற நிலைமையோ இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட ஸ்ரீ பைரவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பல சிரமங்களைத் தவிர்த்து விடலாம். சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும். பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது. பைரவருக்குரிய மந்திரங்கள் வருமாறு:– 'ஓம் பைரவாய நமஹ' 'ஓம் ப்ராம் பைரவாய நமஹ' 'ஓம் நமோ ருத்ராய கபாலியாய பைரவாய த்ரைலோக் நாதாய ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா' இவை பைரவருக்கான பல மந்திரங்களில் மூன்று மட்டுமே. பைரவருக்குரிய கால நேரங்களில், நமக்குச் சரியென்று படும் மந்திரத்தை அந்தக் குறிப்பிட்ட நாளில் இருந்து, தினமும் பைரவர் சன்னிதியில் 48 முறை ஜபம் செய்து வந்தால், துன்பங்களுக்குத் துன்பம் தரும் தூய சக்தி பெற்றவர்களாவோம். முக்கியமாக சனிக்கிழமைகளில் மந்திர ஜபம் செய்து வந்தால் கை மேல் பலன் காணலாம். நமக்கு வரக்கூடிய துன்பங்களை உடனடியாகத் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவற்றில் மகான்களின் ஜீவ சமாதிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அத்தகைய ஜீவ சமாதிகளில் மகான்களின் உடல் நிலைகளை மட்டுமே சார்ந்திராத 'ஜீவ காந்த சக்தியலைகளின் அதிர்வுகள்' ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டும் தம்மை நாடி வருபவர்களுக்கு அருளாசியை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய மகான்களின் சக்தியலைகள் பலம் பெறும் நாட்களான வியாழக்கிழமைகளிலோ, அல்லது அந்தக் குறிப்பிட்ட மகானின் ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ விரதமிருந்து, அங்கு தீபமேற்றி தரிசனம் செய்வதோடு, நமது பிரார்த்தனைகளையும் செலுத்தி வந்தால் நமது குறைகள் யாவும் நீங்கப் பெறும். அன்னை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியை சரண் புகுந்து, வழிபட்டு நமது துயரங்களை நீக்கிக் கொள்வது இன்னொரு முறையாகும். சாமுண்டேஸ்வரியை, அதற்குரிய 'நவாக்ஷா' மூலமந்திரம் கொண்டு ஜபம் செய்வதால் துன்பங்கள் விலகும். இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்றோ, அல்லது வளர்பிறை செவ்வாய்க்கிழமைஅன்றோ ராகு காலத்தில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். பிறகு தினமும் 108 முறை ஸ்படிக மாலை கொண்டு ஜபத்தை அந்தந்த நாளுக்குரிய ராகு காலங்களில் செய்து வர வேண்டும். அமர்வதற்கு ஒரு நல்ல மரத்தாலான ஆசனத்தைப் பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஆடையணிந்து கிழக்கு நோக்கி ஜபிப்பதே சிறந்ததாகும். நவாக்ஷா மூல மந்திரம் 'ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ஸ்வாஹா' இதை முறையாக உபதேசம் வாங்கிய பின் ஜபம் செய்வதே நன்மையை விரைவாகப் பெற்றுத்தரும். அப்படியில்லாவிடினும் அருகிலுள்ள அம்பிகை சன்னிதியில் பூஜா கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் சிவாச்சாரிய சுவாமிகளிடம் அதன் ஜபா முறை நியதிகளை வேண்டிக்கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக ஆபிச்சாரப் பிரயோக முறைகளைச் செயலிழக்கச் செய்ய ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி மாதாவை பிரியமுடன் வழிபட்டு வருவது மிகச் சிறந்ததாகும். வீட்டில் அவளது படத்தை நமது பிரச்சினைகள் தீரும்வரை வைத்து வழிபட்டு விட்டு பிறகு பூஜை சம்பந்தமான அனைத்துப் பொருட்களையும் ஒரு நதியிலோ, கடலிலோ சேர்த்து விட வேண்டும். வீட்டில் மிக சுத்தமான ஒரு இடத்தில் வடக்கு நோக்கியபடி படத்தை வைத்து தூப, தீப, நைவேத்தியங்கள் செய்து கீழ்கண்ட மந்திரங்களால் அவளைப் போற்றித் துதிக்க வேண்டும். நைவேத்தியமாக பானகம், உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்கலாம். மந்திரம் பின் வருமாறு: 'புத்தி முக்தி பலப்ரதாயை நம: ஸகல ஐஸ்வர்ய தாரிண்யை நம: நவக்ரஹ ரூபிண்யை நம: ஒரு வளர்பிறை செவ்வாய், வெள்ளி, அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் பூஜையை தொடங்கிச் செய்ய வேண்டும். அவ்வாறு ஏதாவதொரு நாளில் தொடங்கிவிட்டு, ஒவ்வொரு செவ்வாய், ஞாயிறு, வெள்ளி ஆகிய தினங்களில் வரும் ராகு காலங்களில் மேற்கூறிய மந்திரத்தை 48 அல்லது 108 முறைகள் உச்சாடணம் செய்த பின்பு பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். 48 முறையோ அல்லது 108 முறையோ பிரச்சினைக்குத் தக்கபடி செய்து வர வேண்டும். பாதிக்கப்பட்டவருக்காக வேறொருவர் கூட பூஜை செய்து பலனை அவர் பெறும்படியும் செய்யலாம். முறையாகச் செய்து வருவது மிக அவசியம். காரணம் அதர்வண பத்ரகாளியான அவளது தெய்வீக சான்னித்தியம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அந்த தெய்வீக அருள் யாவருக்கும் வாய்க்கட்டும். அஷ்ட கர்மங்கள் எல்லாவித தேவதா சக்திகளுக்கும் எட்டு விதமான சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன. அவை, அஷ்ட கர்மங்கள் (எண் தொழில்கள்) என்று வழங்கப்படுகின்றன. அவை: * மோகனம் (ஒருவர் மீது நல்ல மதிப்பீடுகளை ஏற்படுத்துவது) * வசியம் (ஒருவரது விருப்பப்படி இன்னொருவர் செயல்படுதல்) * ஸ்தம்பனம் (ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறுத்தி விடுதல்) * ஆகர்ஷணம் (ஒரு பொருளையோ அல்லது ஆளையோ வரவழைத்தல்) * உச்சாடணம் (ஒரு இடத்திலிருந்தோ அல்லது ஒரு ஆளிடமிருந்தோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெளியேறச் செய்தல்) * பேதனம் (ஒருவரது மனநிலைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது) * வித்வேடனம் (ஒருவரின் மனநிலைகளில் கடும் பிரிவுணர்ச்சியை உண்டாக்கி அவரைப் பிறரிடமிருந்து பிரித்து விடுதல்) * மாரணம் (ஒருவருக்கு மரணத்தையோ அல்லது அதற்குச் சமமான நிலைகளையோ உண்டாக்குவது) இந்த எட்டில், 1 முதல் 4 வரையுள்ள நான்கும் நல்ல விளைவுகளைத் தரத்தக்க நிலைப்பாட்டிலும், 5 முதல் 8 வரையுள்ள நான்கும் தீய விளைவுகளைத் தரும் நிலைப்பாட்டிலும் அமைந்துள்ளன. அவை அந்தந்த தேவதா சக்திகளின் இயல்பான தன்மைகளைப் பொறுத்ததாகும். category:Tagging: |
| அகத்தியரின் சீடர் வழிபட்ட ஆலயம் Posted: 16 Jan 2014 02:57 PM PST குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வழக்கு மொழி. மலைகள் பலவற்றின் மீது அமர்ந்து அருள்குமரன் அருளாட்சி செய்து வருகிறார். அவ்வாறு முருகப்பெருமான் அமர்ந்த தலங்கள் எல்லாம் புனிதத் தலமாக கருதப்பட்டு, பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கடையம் அடுத்த தோரணமலை மீதும் முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இந்த மலை பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்கி வருகிறது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த அருள்மலையான தோரணமலை, பார்ப்பதற்கு யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் அமைந்திருக்கும். யானை என்பதற்கு வாரணம் என்று பொருள் உண்டு. எனவே இந்த மலை வாரணமலை என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி தோரணமலை என்றாகியுள்ளது. யானை வடிவமாய் அமைந்துள்ள தோரணமலையானது குலுக்கை மலை, ஆனைமலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தென்திசை வந்த அகத்தியர் இமயமலையில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண்பதற்காக முப்பது முக்கோடி தேவர்களும், உலக மக்களும் அங்கே குவிந்தனர். இதனால் இமயமலை இருக்கும் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. பூமியின் அதிர்வால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நடுங்கிப்போனார்கள். தங்கள் அச்சம் குறித்து சிவபெருமானிடம் அனைவரும் எடுத்துரைத்தனர். அப்போது சிவபெருமான், குறு முனிவரான அகத்திய முனிவரை அழைத்து, 'அகத்தியா! உலகத்தை சமநிலை பெறச் செய்ய உன்னால்தான் இயலும். ஆகவே நீ இப்போதே தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்!' என்று கூறினார். அகத்தியன், சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருக்குள் பெரிய வருத்தம் ஒன்று இருந்தது. அதனை ஈசனிடம் வெளிப்படுத்தவும் செய்தார். 'ஐயனே! தங்கள் கட்டளையை மீறி நடக்க எனக்கு சக்தியில்லை. இருப்பினும் உலகமே காண வாய்ந்திருக்கும் உங்களது திருக்கல்யாண கோலத்தை என்னால் காண இயலாமல் போகிறதே, என்பதை எண்ணி நான் மிகவும் துயரப்படுகிறேன்' என்றார் அகத்தியர். தோரணமலைக்கு... அவரை தேற்றி ஆறுதல் படுத்திய சிவபெருமான், 'அகத்தியா! நீ எப்போது நினைத்தாலும் நான் திருமண கோலத்தில் காட்சி தருவேன்' என்று நல்லாசி கூறினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்திசை நோக்கி பயணப்பட்டார் அகத்திய முனிவர். அவர் பொதிகை மலைக்கு வந்தபோது உலகம் சமநிலையை அடைந்தது. அகத்திய முனிவர் வந்த வழியெல்லாம் புனித பூமியானது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் திருக்குற்றாலம் வந்தார். அங்குள்ள மகாவிஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றியது அவர்தான். அங்கிருந்து பொதிகை மலை செல்லும் போது அவரது பாதச்சுவடுகள் பட்ட இடம்தான் தோரணமலை. தேரையர் வழிபட்ட தலம் இந்த மலையில் அகத்தியில் சில காலம் தங்கி இருந்துள்ளார். அவரது ஆணைக்கு இணங்க, அகத்தியரின் சீடரான தேரையர் தோரணமலையிலேயே தங்கியிருந்து தவம் இயற்றி, பல சித்துக்களை செய்துள்ளார். தனது இறுதி காலத்தில் தேரையர் இங்கேயே அடங்கியதாக வரலாறு கூறுகிறது. தேரையரே இந்த மலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அறியப்படுகிறது. அகத்திய முனிவர் காலடி பட்டதாலும், சித்தர் ஐக்கியமானதாலும் இந்த பூமி மகத்துவம் நிறைந்ததாக போற்றப் படுகிறது. சித்தரின் அருள் அதிர்வலைகள் இப்போதும், எப்போதும் இந்த மலையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது தவிர்த்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட வெங்கலவன் என்ற நாயக்க மன்னன் தோரணமலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் தகவல்கள் உள்ளன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கோவில் 1928–ம் ஆண்டு மீண்டும் தோற்றம் பெற்றது. அழகுற அமைந்த முருகன் மலை உச்சியில் உள்ள குகையில் தோரணமலை சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேலுடன், மயில் வாகனத்துடன் இருக்கும் முருகப் பெருமானை தரிசனம் செய்கையில் எல்லையற்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும். முருகப்பெருமான் வீற்றிருக்கும் குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனை புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்துதான் முருகப்பெருமானின் அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படும். இதில் நீராடினாலே தங்களது நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சினை தீர, எதிரிகளின் தொல்லை அகல என பல வேண்டுதல்களோடு பக்தர்கள் முருகனை வணங்கிச் செல்கின்றனர். நினைத்த காரியங்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை முருகப்பெருமானுக்கு செலுத்திவிட்டு செல்கின்றனர். சுதை சிற்பங்கள் தோரணமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. விநாயகர் கோவிலுக்கு வலதுபுறம் சுதை வடிவில் சிவபெருமான், லட்சுமி சிலைகள் உள்ளன. இவர்களை வழிபட்ட பின்னர் சப்த கன்னியர் சன்னிதி இருக்கிறது. அவர்களை வணங்கி விட்டு மலையேறினால், வழியில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை தரிசனம் செய்யலாம். மலையேற முடியாதவர்களுக்காக மலைப்பாதையின் வலதுபுறம் தனியாக முருகன் சுதையாக இருந்து அருள்பாலித்து வருகிறார், அவரை வணங்கலாம். தோரணமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றவை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்தில் வள்ளி, தெய்வானைக்கு சன்னிதி கிடையாது. இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவின் போது தோரணமலைக் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழியில் தோரணமலை விலக்கு பகுதியில் இறங்கி, அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம். –கே.ஏ.செண்பகராமன், தோரணமலை. 64 சுனைகள் மேற்குதொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் இருக்கும் இந்த மலை மீது எண்ணற்ற சுனைகள் இருக்கின்றன. சுமார் 64 சுனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தோரணமலையை அழகுபடுத்தும் விதமாக இந்த சுனைகள் அமைந்திருக்கின்றன. பொதுவாக இரு நதிகளுக்கு இடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனித தலமாக கருதப்படும். அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு பின் புறம் ராமநதி மலையில் இருந்து பாய்ந்து வருகிறது. மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது. இந்த இரு நதிகளுக்கு இடையே தான் தோரணமலை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இரு நதிகளும் மாலையாக தோரணமாக தொங்கவிட்டதுபோல் காட்சி தரும் வகையில் இந்த கோவில் அமைப்பு இருக்கிறது. image: category:Tagging: |
| மகிமை தரும் தேவனின் ஆசீர்வாதம் Posted: 16 Jan 2014 02:54 PM PST புது வருடத்தில் (2014–ல்) பிரவேசித்திருக்கிறோம். நாட்கள் வெகுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்தில் போட்டுவைத்த பெரும்பாலான திட்டங்களும், சில தீர்மானங்களும் வெறும் கனவாகத்தான் போய்விட்டன. குறிப்பாக இந்த வருடத்திலாவது என் பிள்ளையின் திருமணம் நல்லபடியாய் நடக்கவேண்டும் என்றும், திருமணமானவர்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்றும், வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றும், கடன் பிரச்சினையோடு இருப்பவர்கள் எல்லா கடன்களும் தீரவேண்டும் என்றும் இப்படி இன்னும் பல திட்டங்களையும், ஆசைகளையும் சுமந்தவர்களாய் வருடத்தின் ஆரம்பத்தில் நுழைந்திருப்போம். ஆனால் என்ன பயன்? நாட்கள் சென்றதே தவிர, சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. பிரியமானவர்களே உங்களைப் பார்த்து இந்த புத்தாண்டில் கர்த்தர் சொல்லுவது என்னவென்றால் 'முந்தினவைகளை நினைக்க வேண்டாம். பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ புதிய காரியத்தைச் செய்கிறேன். இப்பொழுதே அது தோன்றும்' (ஏசாயா 43–18–20). 'நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்' (எபிரேயர்: 6–14) என்றும் இந்த புது வருடத்தில் கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். அவருடைய வார்த்தையில் வல்லமை உண்டு. அந்த வார்த்தையில் ஜீவன் உண்டு. அவர் பொய் சொல்ல ஒரு மனிதனும் அல்ல. மனம் மாற மனுபுத்திரனும் அல்ல. அன்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றின அதே தேவன் இன்று உங்களுக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தையும் நிச்சயமாகவே நிறைவேற்றுவார். வேதத்தில் கூட ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் யாபேஸ். அவனுடைய பெயரின் அர்த்தம் என்னவென்றால் துக்கம். சபிக்கப்பட்டவன். அவன் தாய், 'நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன்' (நாளாகமம் 4:9) என்று சொல்லி அவனுக்கு 'யாபேஸ்' என்று பெயரிட்டாள். தன் தாயே தன்னைப் பற்றி இப்படி சொன்னால், சகோதரர்களும், நண்பர்களும், உறவினர்களும் எப்படியெல்லாம் அவனை துக்கப்படுத்தி இருப்பார்கள்? அவனுடைய மனம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று சற்றே யோசித்துப்பாருங்கள். ஆனாலும் அவன் கொஞ்சமும் சோர்ந்து போகாமல் தேவனை நோக்கிப் பார்க்கிறான். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி 'தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்' (நாளாகமம்: 4–10) என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார். அதுமாத்திரமல்ல, யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் சிறப்பு பெற்றவனாக இருந்தான் என்று வேதம் சொல்கிறது. ஒருவேளை அவன் தன் சூழ்நிலையை மட்டுமே பார்த்திருந்தால் துக்கத்தில் ஆரம்பித்த அவனுடைய வாழ்க்கை துக்கத்தில்தான் முடிந்திருக்கும். ஆனால் அவனோ 'ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறவேன்' என்று சொன்ன தேவனை மட்டுமே நோக்கிப் பார்த்தான். அதனால்தான் தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், கனம் பெற்றவனாகவும் இருந்தான். ஆம் பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்களும் இந்த யாபேசைப் போல பெற்றோர்களாலும் மற்றவர்களாலும் நொறுக்கப்பட்டும், நெருக்கப்பட்டும் துக்கத்தின் பாதையில் கடந்துசென்று கொண்டிருக்கிறீர்களா? உங்களை விசாரிக்க ஒருவர் உண்டு. உங்கள் கண்ணீரையும், கதறலையும் காண்கிற தேவன் ஒருவர் உண்டு. அவர் மனுஷன் பார்க்கிற விதமாக பார்க்கவில்லை. மனுஷனோ முகத்தைப் பார்க்கிறவன். ஆனால் தேவனோ உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவர். ஆகையால், நீங்கள் எப்பொழுதெல்லாம் சோர்ந்து போகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் யாபேஸ் தேவனை நோக்கிப் பார்த்தது போல் நீங்களும் தேவனை மட்டுமே நோக்கிப்பாருங்கள். அவர் நேற்றும், இன்றும் என்றுமே மாறாத தேவன். யாபேசை ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிக்க வல்லவராய் இருக்கிறார். அது மாத்திரமல்ல, புதிய காரியத்தை செய்வேன் என்று வாக்கு செய்திருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்திராத பெரிய காரியங்களை அவர் உங்கள் வாழ்க்கையில் செய்வார். ஆகையால் இப்பொழுதே தேவனை நோக்கிப் பார்த்து உங்கள் விண்ணப்பங்களையும், வேண்டுதல் களையும் அவரிடத்தில் தெரியப்படுத்துங்கள். உடனே பதில் கிடைக்கும். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். கர்த்தர் தாமே உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக..! ஆமென். –யாகேஸ் சக்தி, சென்னை–38. image: category:Tagging: |
| Posted: 16 Jan 2014 02:51 PM PST நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை. (திருக்குர்ஆன் 21:107) அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் கி.பி. 571–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22–ம் தேதி ரபீ உல் அவ்வல் 12–ம் நாள் திங்கட்கிழமை அதிகாலையில் பிறந்தார்கள். அவர் தம் தாயின் கருவறையில் இருக்கும்போதே தந்தையை இழந்தார். பிறகு தனது 6–ம் வயதில் தாயையும் இழந்து அனாதையானார். சிறுவயதில் கூலிக்காக ஆடுகளை மேய்த்தார். பெரிய தந்தை அபூதாலிபுடன் சிரியா நாடு சென்று, வியாபாரம் கற்றுத்தேர்ந்தார். இதனால் இளமையில் படிக்கவோ, எழுதவோ தெரியவில்லை. இவர் 25 வயதில் இரண்டு முறை விதவையான அன்னை கதீஜா (ரலி) யை மணம்புரிந்தார். 40–ம் வயது வரை எந்த இயக்கத்தையும் தோற்றுவிக்கவில்லை. அவரின் மக்கா வாழ்க்கையில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஒரு கட்டத்தில் சமூக புறக்கணிப்பு, ஊர்க்கட்டுப்பாடு செய்யப்பட்டது. 40–ம் வயதில் 'ஹிரா' குகையில் நபிப்பட்டம் வழங்கப்பட்டது. முதல் மனிதர் ஆதமின் (அலை) சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே (மரபணுக்களில் பாதுகாக்கப்பட்டு வந்து இப்போது) நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த தலைமுறையில் தோன்றி, இறைத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹூரைரா (ரலி) புகாரி: 3557) 45–ம் வயதில் அண்ணலாரின் விரல் அசைவுக்கேற்ப சந்திரன் இரண்டாகப் பிளந்து, மீண்டும் ஒன்றிணைந்த அற்புதம் நிகழ்ந்தது. மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி வேண்டினார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி: 3637). சேரமான் பெருமாள் என்னும் 'பாஸ்கர் ரவிவர்மன்' என்பவர் கேரளாவில் உள்ள கொடுங்களூரை தலைமை இடமாக கொண்டு ஆட்சிபுரிந்து வந்தார். ஒருநாள் அவர் அடிவானத்தில் நிலா இரண்டாகப் பிளந்ததைப் போன்று கனவு கண்ட அவர், அரண்மனையிலுள்ள ஜோதிட வல்லுனர்களிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியளிக்காத சமயத்தில் வியாபார நிமித்தமாக கேரளா வந்த அரேபியர்களிடம் அவர் விளக்கம் தேட, 'அது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நிகழ்ந்த அற்புதம்' என அரேபியர்களின் விளக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். நிலவில் முதலில் காலடி எடுத்துவைத்த 'நீல் ஆம்ஸ்ட்ராங்' அங்கு இறங்கியபோது, அவர் பயணித்த விண்கலம் நிலவை பல கோணங்களில் பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தது. அவற்றில் ஒன்று ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது. மேற்கூறப்பட்ட நிகழ்வுகளை எல்லாம் திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது. மறுமை நாள் நெருங்கிவிட்டது. சந்திரனும் பிளந்துவிட்டது. எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதை) புறக்கணித்து விடுகிறார்கள். 'இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்' என்றும் கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 54:1,2) 52–ம் வயதில் அண்ணலார் 'மிராஜ்' என்னும் விண்ணுலகப்பயணம் மேற்கொண்டார்கள். 53–ம் வயதில் 'ஹிஜ்ரத்' என்னும் அகதிப்பயணம் புறப்பட்டார்கள். மதீனாவிற்குச் சென்ற அண்ணலாருக்கு சக்தி வாய்ந்த இரண்டு தலைமை கிடைத்தது. ஒன்று ஆன்மிகத் தலைமை! மற்றொன்று அரசியல் தலைமை.! அண்ணலார் மதீனாவில் வாழ்ந்த பத்து ஆண்டுகளில் பலவிதமான போர்களை சந்தித்திருக்கிறார்கள். இவற்றில் பத்ர், உஹீத், அஹ்ஸாப், முரைசீ, தாயிப், கைபர், மக்கா, ஹுனைன், பனூ குரைலா ஆகிய ஒன்பது போர்களில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு போர் செய்திருக்கிறார்கள். மீதி பத்து போர்களில் படையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள். இதுபோக முப்பத்தெட்டு சிறு படை களையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பத்தி ஏழு போர்களில் 1018 நபர்கள் மட்டுமே இரு தரப்பிலும் இறந்திருப்பது அண்ணலார் நடத்தியது அறப்போர் என்று நிரூபணமாகிறது. மேலும் அண்ணலார் போரிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது அவர்களின் மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகிறது. இன்று நடக்கும் சிறு சண்டையில் நூற்றுக்கணக்கிலும், கலவரத்தில் ஆயிரக்கணக்கிலும், போரில் லட்சக்கணக்கிலும் உயிரிழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டமும், மனிதநேயமற்றதும் இன அழிப்பு ஆகும். ஹிஜ்ரி 7–ம் ஆண்டு நபியின் 60–வது வயதில் உம்ரா செய்ய அவர் தம் இரண்டாயிரம் தோழர்களுடன் புனித மக்கா செல்லும் வழியில் 'ஹுதைபிய்யா' என்னும் இடத்தில் தடுக்கப்பட்டனர். அன்றைய வருடம் உம்ரா (மக்கா தரிசனம்) செய்ய முடியாமல் போனாலும் வரலாற்று சிறப்புமிக்க 'ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம்' நடந்தது. ஹிஜ்ரி 8–ம் ஆண்டு (கி.பி.630) நபியின் 61–வது வயதில் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம்களுடன் புனித மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். அந்த சமயம் மாநபிக்கு மக்கா வெற்றியும் கிட்டியது. நபி (ஸல்) அவர்கள் தமது 62–வது வயதில் முதல் ஹஜ்ஜும், இறுதி ஹஜ்ஜுமான 'ஹஜ்ஜதுல் வதா' சமயம் ஒரு லட்சம் தோழர்களுடன் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கி.பி. 632–ம் ஆண்டு ஹிஜ்ரி 11–ல் ரபீ உல் அவ்வல் மாதம் 12–ம் நாள் திங்கள் அன்று தமது 63–ம் வயதில் இறப்பெய்தினார்கள். நபியின் பிறப்பும், இறப்பும் ஒன்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் 63 வயதும், 4 நாட்களும் ஆகும். அண்ணலார் இறந்து, இரண்டு நாட்கள் கழித்து புதன்கிழமை அன்று புனித மதீனாவிலுள்ள நபியின் பள்ளியில் அமைந்துள்ள அன்னை ஆயிஷா (ரலி) வின் அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். நாயகத்தின் வாழ்க்கை காவியமாகவும், வாழும் வரலாறாகவும் அமைந்துள்ளது. நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காவியம்! அவரைப் பின்பற்றி வாழ்வது நமது பாக்கியம்.! –மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன். image: category:Tagging: |
| அழகான குழந்தை பெற ‘அரச மரம்’ சுற்றலாமா? Posted: 16 Jan 2014 02:49 PM PST நல்ல காலம் வந்தாச்சு... அழகான குழந்தை பெற 'அரச மரம்' சுற்றலாமா? 1) கேள்வி: எங்களுக்கு திருமணமாகி எட்டாண்டு ஆகிவிட்டது. இதுவரை குழந்தைச் செல்வம் பிறக்கவில்லை. இடையில் இரண்டு மூன்று முறை கரு உற்பத்தியாகி கலைந்து விட்டது. நிறைய கோவில் வழிபாடுகளைச் செய்திருக்கிறோம். நாகத்துடன் கூடிய விநாயகர் இருக்கும் அரச மரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் அதிகாலையில் சுற்றி வந்தால் பிள்ளை பிறக்கும் என்று சொல்கிறார்கள். எங்கள் பகுதியிலேயே கொஞ்சதூரத்தில் அரசமரமும், அதனடியில் நாகமும், பிள்ளையாரும் இருக்கிறது. அதை எப்பொழுது சுற்றலாம்? தொடக்க நாள் ஒரு நல்ல நாளாகக் குறித்துத் தாருங்கள். எங்கள் இருவர் ஜாதகமும், திருமண அழைப்பிதழும் உங்கள் பார்வைக்கு அனுப்பியிருக் கிறோம். (சாரதா சுப்பிரமணியன், திருமங்கலம்). பதில்:– உங்கள் இருவர் ஜாதகத்தையும் பார்க்கும் பொழுது, புத்திர ஸ்தானம் சிறப்பாகவே உள்ளது. உங்கள் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை சனி பார்க்கிறார். 'மந்தன்' எனப்படும் 'சனி' பார்ப்பதால் புத்திர விருத்தியில் தாமதம் ஏற்படத்தான் செய்யும். இருப்பினும் புத்திர காரகன் குரு உச்சம் பெற்று உலா வருவதால் நல்ல அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பிறக்கும். 'பிள்ளை வேண்டுமென்று தம்பதியர் அரசைச் (அரச மரம்) சுற்றியது அந்தக்காலம். பிள்ளை வேண்டாமென்று தம்பதியரை அரசு (அரசாங்கம்) சுற்றுவது இந்தக்காலம்' என்று ஒரு கவிதை படித்திருக்கிறேன். குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை வலியுறுத்தி கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை இது. ஆயினும் காலம், காலமாகவே கிராமப்புறங்களில் எல்லாம், அரசும், வேம்பும் இணைந்து அதனடியில் நாகத்துடன் கூடிய பிள்ளையார் இருக்குமிடத்தில் எல்லாம் தம்பதியர் 16 பிரகாரங்கள் வருவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மெஞ்ஞான கருத்தை இன்றைய விஞ்ஞானம் ஒத்துக்கொண்டிருக்கிறது. அந்த மரங்களிலிருந்து வரும் ஒரு பிராண வாயுவை தம்பதியர்கள் காலை நேரத்தில் சுவாசித்துக் கொண்டே சுற்றி வருவதால் இனப்பெருக்க உறுப்புகளுக்கு பலம் கிடைக்கிறது. அதற்குரிய ஹார்மோன்களை தூண்டிப் பலப்படுத்தக் கூடிய விதத்தில் இருக்கிறது. அதிகாலையில் ஓஸோன் காற்றோடு அது கலந்து தம்பதியரின் மேனி முழு வதும் படும்பொழுது நச்சுத் தன்மைகள் விலகி நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. எனவே, இயற்கை நமக்களித்த வரப்பிரசாதமாகக் கருதி அரச மரத்தைச் சுற்றி வந்தார்கள். வெறும் மரத்தை மட்டும் சுற்றாமல் அதனடியில் விக்னங்களை (குறைகளை) தீர்க்கும் தெய்வமாக விளங்கும் விக்னேஷ்வரரையும், நாக தோஷத்தில் பிள்ளை இல்லாதவர்களுக்கு அது விலக வேண்டி நாகத்தையும் அருகில் வைத்துப் பழந்தமிழர்கள் வணங்கத் தொடங்கினர். 'தா – வரம்' என்று இறைவனிடம் கேட்க தகுதியான தாவரமாக 'அரசு' விளங்குகிறது. மரங்களுக்கு அரசன் அரச மரம். விலங்குகளின் அரசன் சிங்கம் என்பார்கள். அப்படி தாவரங்களுக்கெல்லாம் தலைமையாக விளங்கும் அரச மரம் புவிவெப்ப மயமாவதைத்தடுக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் வெப்பத்தை உள்வாங்கி 'பச்சையம்' என்ற குளோரபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி அதனை ஆக்சிஜனாக வெளியேற்றுவதாக விஞ்ஞானம் கூறுகிறது. எனவே காலையில் வழிபடவும், மாலையில் இளப்பாறவும் உதவும் ஒரே மரமாக அரச மரம் விளங்குகிறது. அதனருகில் நடந்து உலா வரும்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியும், காந்த சக்தியும் நமது மேனிக்கு வந்து சேருகிறது. எனவே தான் ஹோமங்களில் கூட அரசமரக் குச்சிகளை சமித்து வடிவில் சேர்க்கிறார்கள். இப்படி அற்புதமான ஆற்றல்களை உள்ளடக்கி கொண்டிருக்கும் அரசமரத்தை நீங்கள் சுற்றிவரத் தொடங்க எடுத்த முடிவு நல்ல முடிவுதான். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சுற்றிவரத் தொடங்கலாம். இருந்தாலும் நாள், நட்சத்திரம் பார்த்துச் சொல்லச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஜாதக அடிப்படையில் அசுவதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரம் வரும் நாளில் சுற்றிவரத் தொடங்குவது நல்லது. அல்லது ஏதேனும் ஒரு வியாழக்கிழமை முதல் அதிகாலையில் சுற்றி வருவது நல்லது. அதன்கீழ் வீற்றிருக்கும் நாகத்துடன் கூடிய விநாயகரையும் வழிபாடு செய்து வாருங்கள். தோஷங்கள் அகன்று சந்தோஷம் ஏற்படும். சந்தான விருத்தியும் உண்டாகும். குரு வக்ர நிவர்த்திக்குப் பிறகு மார்ச் மாதத்திற்கு மேல் புத்திர சந்தானம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு பெண் குழந்தையும், அதன்பிறகு ஒரு ஆண் குழந்தையும் ஜாதக ரீதியாக பிறக்கும் அமைப்பு உண்டு. ஆலய வழிபாடு பற்றியும் கேட்டிருக்கிறீர்கள். திருவெண்காடு சென்று அங்குள்ள புதன் மற்றும் பிள்ளை இடுக்கி அம்மன் வழிபாட்டையும் யோகபலம் பெற்ற நாளில் செய்து வந்தால் சந்தான பாக்கியம் கிடைக்கும். 2) கேள்வி:– எனது மகனின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவர் பட்டப்படிப்பு முடித்து நன்கு வேலை பார்த்து நல்ல சம்பளம் வாங்குகிறார். ஆனால் 4 வருடங்களாகத் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எல்லாப் பரிகாரங்களையும் செய்து விட்டோம். குறிப்பாக காளஹஸ்தி, திருநள்ளாறு போன்ற ஸ்தலங்களுக்கும் சென்று வந்தோம். ஆனால் ஜாதகம் பொருந்தியிருந்தால் பெண் பிடிக்கவில்லை, பெண் பிடித்திருந்தால் ஜாதகம் ஒத்துவரவில்லை. எப்பொழுதான் திருமணம் நடக்கும், மேலும் இடம் வாங்க முயற்சிக்கிறோம். அது எப் பொழுது கைகூடும்? (பத்மாவதி, சென்னை). பதில்:– தங்கள் புதல்வர் ஜாதகத்தில் தற்சமயம் சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றார். களத்திர ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தான் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகின்றது. மேலும் சந்திரா ராசி அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தில் ராகு வீற்றிருக்கிறார். எனவே, 32 வயதிற்கு பிறகு நடைபெறும் திருமணமே நல்ல வரனாக அமையும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்சமயம் 32 வயது முடிந்து விட்டது. இனி ஏப்ரல் மாதத்திற்கு மேல் வரும் பேச்சு உடனடியாக முடியக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கிடையில் வார வழிபாடாக சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. சென்னையிலுள்ள கோயம்பேடு குறுங்காளீஸ்வரர் கோவிலில் வீற்றிருந்து அருள்வழங்கும் நந்தியெம்பெருமானை பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். தொடர்ந்து 4 பிரதோஷங்களுக்காவது சென்று வருவது நல்லது. ரிஷப லக்னமும், லக்னத்திலேயே களத்திரகாரகன் சுக்ரன் வீற்றிருப்பதால் இந்த பிரதோஷ வழிபாடு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் விதத்தில் அமையும். நல்ல பொருத்தமான வரன்கள் வந்து சேரும். 3) கேள்வி:– எனது ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். எனது ஜாதகப்படி திருமணமே நடைபெறாது என்கிறார்களே, எனக்கு வ ருத்தமாக இருக்கிறது. இதற்கு விமோசனம் உண்டா? திருமணம் நடைபெறுமா? (ஆர். ராணி, பெரம்பலூர்). பதில்:– உங்கள் ஜாதகப்படி சுக்ர மங்கல யோகம், புத–ஆதித்ய யோகம் மற்றும் சகட யோகமும் இருக்கிறது. நல்ல யோகமான ஜாதகம் தான். குடும்ப ஸ்தானத்தில் கேது இருப்பதால் குடும்பம் அமைவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்சமயம் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. எனவே, ஏதேனும் ஒரு சனிக்கிழமை திருநள்ளாறு சென்று இயன்றவரை அன்னதானம் செய்து அதன் பிறகு சனி பகவானை வழிபட்டு வருவதோடு தஞ்சை பெரிய கோவில் சென்று விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, வாராஹி ஆகிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வருவது நல்லது. அதன் பிறகு வரும் வரன்கள் முடிவடைந்து உங்கள் வருத்தத்தைப் போக்கும். 4) கேள்வி:– எங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் முடிந்து விட்து. ஒரு பெண் குழந்தை மட்டும் தான் இருக்கிறது. அவளுக்கு வயது ஐந்தாகிறது. 2– வது குழந்தை தங்கவில்லை. ஆண் குழந்தை வேண்டுமென்று விரும்புகின்றோம். எனவே 2– வது குழந்தை பிறக்குமா? என்பதைக் கணித்துக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். எங்கள் இருவருடைய ஜாதகமும் அனுப்பியி ருக்கிறோம். (எஸ்.கவிதா, புதுச்சேரி). பதில்:– தங்கள் இருவருடைய ஜாதகப்படியும் புத்திர ஸ்தானம் நன்றாக இருக்கிறது. மூத்த பிள்ளைக்கு பிறகு 5– வருட இடைவெளியில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் எப்பொழுது உற்பத்தியானால் அது ஆண் குழந்தையாக இருக்கும். சீரும் சிறப்புமாக அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி அறிந்துகொள்ள பிறந்த பெண் குழந்தையின் ஜாதகம் தேவை. அதில் சகோதர ஸ்தானம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள் பெண் குழந்தையின் ஜாதகத்தை அனுப்பிவைக்கவில்லை. ஜூன் 2014–க்கு மேல் குரு உங்கள் ராசியை உச்சம் பெற்றுப் பார்க்கிறார். எனவே, அதன் பிறகு உருவானால் அது ஆண் குழந்தைக்கான வாய்ப்பாக அமையும். 5) கேள்வி:– என்னுடைய ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு விரைவில் கிட்டுமா? (எஸ். கிருஷ்ணன், மதுரை). பதில்:– உங்கள் ஜாதகப்படி பார்க்கும் பொழுது ஜல ராசியில் பிறந்திருக்கிறீர்கள். லக்னாதிபதி 12–ம் இடத்தில், 12–க்கு அதிபதியோடு இணைந்திருக்கிறார். ஜீவன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். எனவே, வெளிநாட்டு யோகம் உண்டு. தற்சமயம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் மார்ச் 2014–க்கு மேல் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 6) கேள்வி:– எனது புதல்வரின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? அவர் எம்.காம் முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். அவரது ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். எந்த வகையான மோதிரம் அணிந்து கொள்ளலாம்? (என், உஷாராணி, சிவகாசி). பதில்:– தங்கள் புதல்வரின் ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானத்தில் சூரியனும், கேதுவும் இணைந்திருக்கிறார். எனவே, அரசு வேலை கிடைப்பதே அரிது. தனியார் துறையிலேயே வேலையில் நீடிக்கும் வாய்ப்பு உண்டு. பச்சைக்கல் மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. அறுங்கோண வடிவத்தில் செய்து யோக பலம் பெற்ற நாளில் விஷ்ணு சன்னிதியில் வழிபாடு செய்து அணிந்து கொள்ளச் சொல்லுங்கள். எதிர்காலம் இனிமையாக அமையும். ஜோதிடக் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்: 'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம் image: category:Tagging: |
| Posted: 16 Jan 2014 02:43 PM PST அசாமிலும், மணிப்பூரிலும் அறுவடைத் திருவிழா என்பது 'போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது. அறுவடை முடிந்த வயல்களில் கூரைக் கொட்டகைகள் போடப்படும். முதல் நாள் இரவு அங்கு இளைஞர்கள் விருந்து உண்பார்கள். மறுநாள் காலை பந்தலுக்கு தீயிட்டு அறுவடைத் திருநாள் ஆரம்பமாவதாக அறிவிப்பார்கள். image: category:Tagging: |
| Posted: 16 Jan 2014 02:42 PM PST * தைப்பூசத் தினத்தன்று சூரியனின் 7–ம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் 7–ம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. * தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார். image: category:Tagging: |
| Posted: 16 Jan 2014 02:16 PM PST மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நடால், பெடரர், அஸரென்கா 3–வது சுற்றுக்கு முன்னேறினர். ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா போராடி மீண்டார். இந்தியாவின் சானியா ஜோடியும் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது. நடால் அபாரம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 4–வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் 2–வது சுற்று ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் 17 வயதான தனாசி கோக்கினாகிசை சந்தித்தார். கடந்த ஆண்டில் இங்கு ஜூனியர் மட்டத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான கோக்கினாகிசினால், நடாலின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய ரசிகர்களின் வெறுப்புணர்வுக்கு மத்தியில் நடால், உள்ளூர் நாயகன் கோக்கினாகிசை 6–2, 6–4, 6–2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். நடால் அடுத்து பிரான்சின் கேல் மான்பில்சை சந்திக்கிறார். பெடரர் சாதனை மற்றொரு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆக்ரோஷமாக விளையாடி 6–2, 6–1, 7–6 (7–4) என்ற நேர் செட்டில் சுலோவேனியாவின் பிளாஸ் காவ்சிச்சை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 2000–ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று வரும் 32 வயதான பெடரர் 2004, 2006, 2007, 2010 ஆகிய ஆண்டுகளில் இங்கு மகுடம் சூடியிருக்கிறார். அது மட்டுமின்றி இங்கு இதுவரை 80 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் அதில் பதிவு செய்த 70–வது வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றிருக்கிறார். மொத்தத்தில் ஓர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 70–க்கும் மேற்பட்ட வெற்றிகளை பெற்றவர்களின் வரிசையில் 8–வது வீரராக பெடரர் இணைந்துள்ளார். அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் அமெரிக்க ஓபனில் 98 வெற்றிகளை பெற்றதே ஓர் கிராண்ட்ஸ்லாமில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச வெற்றியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. டெல் போட்ரோ வெளியேற்றம் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்சின் வின்சென்ட் மிலோட்டுடன் மோதினார். இதில் முதல் இரு செட்டுகளை 6–2, 6–2 என்ற வீதம் எளிதாக தனதாக்கிய முர்ரே, 3–வது செட்டில் 2–5 என்று பின்தங்கினார். பிறகு தொடர்ச்சியாக 5 கேம்களை வென்று அந்த செட்டையும் 7–5 கைப்பற்றி நேர் செட்டில் முர்ரே வெற்றியை உறுதிப்படுத்தினார். உலகின் 5–ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, 62–ம் நிலை வீரர் ஸ்பெயினின் ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்திடம் மண்ணை கவ்வினார். 3 மணி 53 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் பாவ்டிஸ்டா அகுத் 4–6, 6–3, 5–7, 6–4, 7–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஷரபோவா போரட்டம் பெண்கள் பிரிவில் உலகின் 3–ம் நிலை வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா, இத்தாலியின் கரின் னைப்பை எதிர்கொண்டார். இதில் முதல் இரு செட்டை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில், 3–வது செட்டில் அனல் பறக்கும் வெயிலுக்கு மத்தியிலும் சூடுபறந்தது. கடைசி செட்டில் ஒருகட்டத்தில் 5–3 என்று ஷரபோவா வெற்றியின் நுனிக்கு சென்று விட, சரிவில் இருந்து மீண்டெழுந்த கரின் னைப், மூன்று மேட்ச் பாயிண்ட்டில் இருந்து தப்பித்து 5–5 என்று சமன் செய்தார். 8–8 என்றும் சமநிலை வந்தது. பிறகு அடுத்த இரு கேம்களை ஒரு வழியாக தன்வசப்படுத்தி ஆட்டத்தை முடித்து ஷரபோவா நிம்மதி பெருமூச்சு விட்டார். 3 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஷரபோவா 6–3, 4–6, 10–8 என்ற செட் கணக்கில் வெற்றியை சுவைத்தார். ஷரபோவா 3–வது சுற்றில் அலிசி கார்னெட்டை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார். அஸரென்கா முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தன்னை எதிர்த்த அமெரிக்காவின் கிறிஸ்டியானா மெக்ஹலேவை 6–0, 1–6, 6–2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டார். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக இந்த ஆட்டம், ராட் லாவர் ஆடுகளத்தில் மேற்கூரை மூடப்பட்ட நிலையில் நடந்தது. 5–ம் நிலை வீராங்கனை போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்கா 6–0, 7–5 என்ற நேர் செட்டில் பெலாரசின் கோவர்ட்சோவாவை சாய்த்தார். நடப்பு சாம்பியனும் 2–ம் நிலை வீராங்கனையுமான பெலாரசின் விக்டோரியா அஸரென்கா 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் ஸ்டிரிகோவாவை வெளியேற்றினார். இந்த வெற்றியை பெற அஸரென்காவுக்கு 88 நிமிடங்கள் தேவைப்பட்டன. இது தவிர ஆண்களில் பிரான்சின் சோங்கா, ஜப்பானின் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ராவ்னிக், ஸ்பெயினின் பெலிசியானோ லோப்ஸ் பெண்களில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபென்ஸ், செர்பியாவின் ஜான்கோவிச், சுலோவக்கியாவின் சிபுல்கோவா உள்ளிட்டோரும் 2–வது தடையை வெற்றிகரமாக கடந்தனர். இந்தியர்கள் வெற்றி பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–1, 6–4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் தாமி பேட்டர்சன்–ரோடியனோவா இணையை வென்றது. இதே போல் இந்தியாவின் ரோகன் போபண்ணா–பாகிஸ்தானின் குரேஷி கூட்டணி ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இவர்கள் 6–3, 4–6, 7–6 (5) என்ற நேர் செட் கணக்கில் ரமீஸ் ஜூனைட் (ஆஸ்திரேலியா)– மனரினோ (பிரான்ஸ்) இணையை தோற்கடித்தனர். வெயில் பிரச்சினை: போட்டி அமைப்பாளர்கள் மீது ஷரபோவா புகார் ஆஸ்திரேலிய ஓபனில் சக வீரர், வீராங்கனைகளை விட ஒவ்வொருவருக்கும் இப்போது வெயில் தான் கடும் சவாலாக திகழ்கிறது. கடந்த இரு தினங்களாக மெல்போர்னில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று வெயில் 111 டிகிரி பாரன்ஹீட் வரை சுட்டெரித்தது. இதனால் வெளிப்புற ஆடுகளங்களில் நடக்க இருந்த ஆட்டங்கள் பிற்பகல் 1.50 மணியில் இருந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன. வெயிலின் உஷ்ணம் காரணமாக 12 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் சிறிது நேரம் மழையாலும் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது.
போட்டி அமைப்பாளர்களின் செயல்பாடுகளை குறை கூறிய ஷரபோவா, ஆட்டத்தை முன்கூட்டியே நிறுத்த தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். 'சில தினங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக எவ்வளவு வெயில் அடித்தால் ஆட்டம் நிறுத்தப்படும் என்பது யாருக்கு தெரியவில்லை. அது மட்டுமின்றி ஆடுகளத்தின் மேற்கூரை எப்போதும் மூடப்படும் என்பதும் வீரர்களுக்கோ அல்லது அவர்களின் பயிற்சியாளர்களுக்கோ தெரிவதில்லை. வெயிலால் எனது உடல் மரத்துப் போனது போன்று ஆகி விட்டதாக உணர்க்கிறேன்' என்றார். வெயிலின் உக்கிரம் வெகுவாக குறைந்த பின்னர் ஆட்டங்களை தொடங்கியிருக்க வேண்டும் என்று 2–வது சுற்றில் தோல்வி கண்ட அமெரிக்க வீராங்கனை லெப்சென்கோ வலியுறுத்தினார். image: category:Tagging: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணி பங்கேற்பதை உறுதி செய்தது Posted: 16 Jan 2014 02:03 PM PST டாக்கா ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதை பாகிஸ்தான் அணி உறுதி செய்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர், பாதுல்லா ஆகிய நகரங்களில் பிப்ரவரி 25-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. அரசியல் பிரச்சினை காரணமாக வங்காளதேசத்தில் அவ்வப்போது வன்முறை வெடிப்பதால் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் தயக்கம் காட்டியது. பாதுகாப்பு விவகாரத்தில் முழு திருப்தி ஏற்பட்டால் தான் இந்த போட்டியில் பங்கேற்போம் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியது. பாகிஸ்தான் பங்கேற்பு இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் உள்பட போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளன. இந்த தகவலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி சையது அஷ்ரபுல் ஹக் நேற்று தெரிவித்தார். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியா, இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் தலா ஒரு முறைமோதும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தினசரி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். image: category:Tagging: |
| ரூ.2 லட்சம் பரிசுத்தொகைக்கான மாநில கபடி போட்டி சென்னையில் இன்று தொடக்கம் Posted: 16 Jan 2014 01:56 PM PST சென்னை, பெரியார் வீர விளையாட்டு கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப், சாய், மாநகர போலீஸ், துறைமுகம், காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட அணிகளும், பெண்கள் பிரிவில் சாய், எஸ்.டி.ஏ.டி, சென்னை குயின்ஸ், கபடி ஸ்டார், ராணி மேரி, எத்திராஜ் உள்ளிட்ட அணிகளும் கலந்து கொள்கின்றன. மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். ஆட்டங்கள் தினசரி மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த தகவலை பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |