Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


‘‘உவகையுடன் கொண்டாடி மகிழுங்கள்”: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

Posted: 13 Jan 2014 11:30 AM PST

சென்னை,

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இறை வழிபாடு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உலக தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.

''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழவுத்தொழிலை போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டினுள்ளும் வெளி வாசலிலும் வண்ணக்கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புது பானைக்கு மஞ்சள் தழையினைக்காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, ''பொங்கலோ பொங்கல்'' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.

விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள்

'மண்ணிலே முத்தெடுத்து, பிறர்வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி' என்ற எம்.ஜி.ஆரின் வாக்கிற்கிணங்க, பிறர்வாழ பாடுபடும் விவசாயப்பெருமக்களின் நல்வாழ்விற்கென ''முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்''; வேளாண் கருவிகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரிவிலக்கு; சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், ஏனைய விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையிலும் நுண்ணீர் பாசனக்கருவிகள்;

உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் பயறு வகை, சிறுதளை, விதைப்பைகள் வினியோகம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பெருக்கும் வகையிலான கொள்முதல் விலை; வறட்சி ஏற்படின் உடனடி நிவாரணம் என பல்வேறு சிறப்பான திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

கொண்டாடி மகிழுங்கள்

பொங்கல் பண்டிகையைத்தமிழர்கள் இனிமையாக கொண்டாடி மகிழ்ந்திட எனது தலைமையிலான அரசு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியுள்ள இந்த இனிய வேளையில், என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News Group Category:

ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை எதிரொலி இலங்கை சிறையில் இருந்த 163 தமிழக மீனவர்கள் விடுதலை படகுகளுடன் ஊர் திரும்புகிறார்கள்

Posted: 13 Jan 2014 11:18 AM PST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மீனவர்கள் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போது பாரதப்பிரதமருக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரத்து 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட போதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும், 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.

இருநாட்டு மீனவர்கள் கூட்டம்

தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளை சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்றும், இதற்கு தேவையான அனுமதியினை அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும், இலங்கை மீனவர்கள் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு பாரதப்பிரதமருக்கு 20.9.2013 அன்று கடிதம் ஒன்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனுப்பியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு தனது 23.12.2013 நாளிட்ட கடிதத்தில், இரு நாட்டு மீனவர்கள் கூட்டத்தை சென்னையில் ஜனவரி மாதம் 20–ந்தேதி வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்து, அந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்வோர் விவரப்பட்டியலை அனுப்பி வைத்தது.

179 இலங்கை மீனவர்கள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் 20.1.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ள இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் தொடர்பாக தமிழக மீன்வளத்துறை செயலாளர், இந்திய அரசு அதிகாரிகளுடன் புதுதில்லியில் விவாதித்தார். அப்போது இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இந்த கூட்டத்திற்கு முன்பு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை 13.1.2014 முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்குமென தெரிவித்த மத்திய அரசு, தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

தமிழக மீனவர்கள் விடுதலை

அதன்படி, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா 11.1.2014 அன்று உத்தரவிட்டார். அவரது முயற்சியின் பயனாக 21.11.2013 அன்று கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையைச்சேர்ந்த 20 மீனவர்கள் மல்லாகம் நீதிமன்றம் மூலம் 13–ந்தேதி (நேற்று) பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.

அதனடிப்படையில், புழல் சிறையில் உள்ள 20 இலங்கை மீனவர்களை விடுவிக்க தலைமைப்பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும், 17.10.2013 அன்று காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்காலை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்கள் என திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 மீனவர்கள் 13–ந்தேதி (நேற்று) மாலை திரிகோணமலை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை மீனவர்கள்

இதனடிப்படையில், புழல் சிறையில் உள்ள 32 இலங்கை மீனவர்களை விடுவிக்க தலைமை பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 52 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்; அதேபோன்று தமிழக சிறையிலுள்ள 52 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு இணங்க, தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஏற்ப தமிழக அரசும் புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

சமூக நீதிக்காக தி.மு.க. தொடர்ந்து பாடுபடும் சென்னை கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

Posted: 13 Jan 2014 09:58 AM PST

சென்னை,

சமூக நீதிக்காக தி.மு.க. தொடர்ந்து பாடுபடும் என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

பொதுக்கூட்டம்

இடஒதுக்கீட்டில் சமூக நீதி என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசியல் நாகரீகம்

இடஒதுக்கீட்டில் சமூக நீதிக்காக திராவிட இயக்கங்கள் பாடுபட்டு வருகிறது. தேர்தலுக்காக இடஒதுக்கீடு சமூக நீதி பிரச்சினையை நான் கையில் எடுப்பதாக கூறுகிறார்கள். தேர்தல் கண்ணோட்டத்துடன் நான் அதை அணுகவில்லை. இட ஒதுக்கீடு கொள்கை என்பது எங்களுக்குள் கலந்து போன ஒன்று. பல்நோக்கு மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்களை கொண்டு வருவோம் என்கிறார். மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தி.மு.க.வையும், இட ஒதுக்கீட்டு கொள்கையையும் யாராலும் பிரிக்க முடியாது.

சட்டமன்றத்தில் இடம்

சட்டமன்றத்தில் எனக்கே இட(ம்) ஒதுக்கீடு உண்டா? இல்லையா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். உட்கார கூட முடியாமல் இருக்கிறேனே என்ற நினைப்பு கூட அவர்களுக்கு இல்லை. கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் உட்கார இடம் கொடுப்போம் என்ற எண்ணம் உண்டா? சட்டமன்றத்திற்கு சென்றால் வெளியேற்றப்படுவோம் என்றாலும், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு வாய்ப்பளிக்கலாம் அல்லவா?

காமராஜர் ஆட்சி காலத்தில் எப்படி நடந்துகொண்டார்கள்? ஏன் நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? ஆனால் இன்றைக்கு எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை நடத்துபவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அண்ணாவோ, காமராஜரோ, நண்பர் எம்.ஜி.ஆரோ இன்று உயிருடன் இருந்திருந்தால் என்னை பற்றி எவ்வளவு கவலைப்பட்டு இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

இட ஒதுக்கீட்டுக்காக...

இட ஒதுக்கீட்டை காக்க போராட்டம் நடத்தப்படும். அந்த போராட்டத்தில் தி.மு.க.வும் இடம் பெறும் என்பதை உங்களுக்காக தெரிவித்துக்கொள்கிறேன். இட ஒதுக்கீடு சமூக நீதிக்காக தி.மு.க. தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

News Group Category:

சோனியா காந்திக்கு புனித கயிறு***

Posted: 13 Jan 2014 09:54 AM PST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முஸ்லிம் மத பிரமுகர்கள் சந்தித்தனர். அவர்களிடம், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கலியார் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற தர்காவுக்கு சோனியா புனித போர்வை பரிசளித்தார். அதற்காக அவரது கையில் ஒரு மத குரு புனித கயிறு கட்டிவிட்டபோது எடுத்த படம்.

8

நடப்பு நிதி ஆண்டின் 3–வது காலாண்டில் ‘சென்செக்ஸ்’ நிறுவனங்களின் லாபம் 15 சதவீதம் அதிகரித்து இருக்கும்

Posted: 13 Jan 2014 09:54 AM PST

புதுடெல்லி,

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் (எண்ணெய் மற்றும் எரிவாயு நீங்கலாக) நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்து இருக்கும் என பங்கு வர்த்தக நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். டாட்டா மோட்டார்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் செயல்திறனே இதற்கு காரணமாகும்.

ஏற்றுமதி நிறுவனங்கள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களின் லாபம் சிறப்பான அளவில் உயர்ந்து இருக்கும். பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் சென்ற சில மாதங்களாக டாலருக்கு நிகரான ருபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. இருப்பினும், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும்.

சென்ற நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டிலும் இதே அளவிற்குதான் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டை இலக்காகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களின் லாபம் குறைந்து இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மூன்றாவது காலாண்டில் வேளாண் துறையை சேர்ந்த மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டார் வாகனம்

13 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற 2013–ஆம் ஆண்டில் உள்நாட்டில் கார் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனவே, உள்நாட்டை இலக்காக கொண்டு செயல்படும் வாகனத்துறை நிறுவனங்களின் வருவாய் குறைந்திருக்கும். அதேசமயம், ஏற்றுமதி வாயிலாக அதிக வருவாய் ஈட்டும் டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் செயல்திறன் நன்றாக இருக்கும்.

வேளாண் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் மோட்டார் வாகன பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் மதர்சன் சுமி நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தில் அமோக வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் இயற்கை ரப்பர் விலை குறைவால் டயர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாபம் உயர்ந்து இருக்கும்.

மூன்றாவது காலாண்டில் சிமெண்டு விற்பனை குறைந்துள்ளது. சரக்கு போக்குவரத்து மற்றும் மின் கட்டண உயர்வால் இத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினம் அதிகரித்துள்ளது. எனவே, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் நிதி நிலை முவுகள் திருப்திகரமாக இருக்காது என பங்கு தரகு வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பொருளாதார மந்தநிலையால் வங்கிகளின் லாப வளர்ச்சியும் குறைவாக இருக்கும். தேவைப்பாடு குறைந்துள்ள நிலையில், மூலப்பொருள்கள் விலை அதிகரித்துள்ளதால் நுகர்பொருள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் லாபத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.டி. துறை

பொதுவாக மூன்றாவது காலாண்டில் ஐ.டி. துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சுமாராகத்தான் இருக்கும். இருப்பினும், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தால் இத்துறை நிறுவனங்களின் செயல்திறன் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலோகம் மற்றும் சுரங்கத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் முடிவுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் போன்றவற்றால் ஜவுளித் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் செயல்திறன் மேம்பட்டு வருகிறது.

மருந்து துறை

மூன்றாவது காலாண்டில் மருந்து துறை நிறுவனங்களின் நிகர லாபம் 35 சதவீதம் உயர்ந்து இருக்கும். வருவாய் 26 சதவீதம் அதிகரித்து இருக்க வாய்ப்பு உள்ளது. இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக அளவில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.

category:

நியூசிலாந்து கிரிக்கெட் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் இந்திய கேப்டன் டோனி பேட்டி

Posted: 13 Jan 2014 09:50 AM PST

ஆக்லாந்து,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அணி கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

கேப்டன் டோனி பேட்டி

5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேப்பியரில் 19-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் ஆக்லாந்தில் நேற்று இந்திய அணி கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நியூசிலாந்து சிறப்பான அணியாகும். நியூசிலாந்து அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சமீபகாலங்களில் நியூசிலாந்து அணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக உள்ளூரில் அவர்கள் எங்களை விட சூழ்நிலையை நன்கு அறிந்து இருப்பார்கள். சில வீரர்கள் இங்கு இதற்கு முன்பு விளையாடியது கிடையாது என்பதால் இந்த பயணம் சவாலாக இருக்கும்.

நியூசிலாந்து அணியை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். வெற்றியை தேடிக்கொடுக்கும் அளவுக்கு அபாயகரமான சீனியர் வீரர்கள் நியூசிலாந்து அணியில் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

நல்ல அனுபவம்

உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு தயாராக இந்த போட்டி தொடர் எங்கள் அணி வீரர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். இங்குள்ள மைதானங்கள் வித்தியாசமானதாக இருக்கும். இதில் சரியான முறையில் பீல்டிங் அமைப்பது கடினமான காரியமாகும். மொத்தத்தில் இந்த தொடர் எல்லா வீரர்களுக்கும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஒட்டுமொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. பிட்ச் தன்மையை பொறுத்து பந்து வீச்சு இருக்கும். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும் நம்மிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

இவ்வாறு டோனி கூறினார்.

image: 

category:

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பெட்ரோல் போடுவதற்காக நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி கார்

Posted: 13 Jan 2014 09:48 AM PST

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி,  கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொண்டர்களுடன் சிறிது நேரம் யாத்திரையில் நடந்து சென்ற ராகுல் காந்தி, பின்னர் டெல்லி திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

கேரள மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதாலாவுடன் அவருடைய காரில் ராகுல் பயணித்தார். சங்கணாச்சேரி-ஆலப்புழை சாலையில், மான்கொம்பு என்ற இடத்தில் சென்றபோது, காரில் பெட்ரோல் மிகவும் குறைவாக இருந்ததை டிரைவர் பார்த்தார்.உடனே அடுத்து வந்த பெட்ரோல் பங்க்கில் ராகுலின் கார் நிறுத்தப்பட்டு, பெட்ரோல் போட்டபின் புறப்பட்டுச்சென்றது. மிக முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த காரில் பெட்ரோல் குறைவாக இருந்ததை கவனிக்காதது, ராகுல் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடாக கருதப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மறுத்தார்.

category:

News Group Category:

முதல் சுற்றில் ஜோகோவிச், செரீனா வெற்றி வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Posted: 13 Jan 2014 09:47 AM PST

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன்...

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

இதில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜோகோவிச் வெற்றி

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-6 (7-2), 6-1 என்ற நேர்செட்டில் சுலோவாக்கியா வீரர் லூகாஸ் லாகோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா 6-4, 4-1 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய கஜகஸ்தான் வீரர் ஆந்த்ரே கோலுவ் காயம் அடைந்து விலகினார். இதனால் வாவ்ரின்கா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். வாவ்ரின்கா சமீபத்தில் நடந்த சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் பெரர்

இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டேவிட் பெரர் (ஸ்பெயின்) 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கொலம்பியா வீரர் அலெக்சாண்ட்ரோ கொனாலிஸ்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் தாமஸ் பெட்ரிச் (செக்குடியரசு), ஜெர்ரி ஜானோவிச் (போலந்து), மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா), வாசெக் பொபிசில் (கனடா), ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்), குல்லெர்மோ (ஸ்பெயின்), டோமினிச் (ஆஸ்திரியா), ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்), எர்னஸ்ட் குல்பி (லாத்வியா), அலெக்சாண்டர் (உக்ரைன்), ஜார்கோ நிமினென் (பின்லாந்து), பாபி போக்னி (இத்தாலி), சாம் குயர்ரி (அமெரிக்கா), டாமி ரோப்ரெடோ (ஸ்பெயின்), டிமித்ரி டுர்ன்ஸ்னோவ் (ரஷியா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), மிகைல் யூஸ்னி (ரஷியா), ஜூலியன் பென்னட்டா (பிரான்ஸ்), புளோரியன் மேயர் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

வீனஸ் அதிர்ச்சி தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை மகரோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 33 வயதான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோற்றது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 88-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்து வீராங்கனை லுக்சிகா 6-2, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவாவுக்கு (செக்குடியரசு) அதிர்ச்சி அளித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

27 வயது வித்தியாசம்

இன்னொரு ஆட்டத்தில் 16 வயதான சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 43 வயதான ஜப்பான் வீராங்கனை கிமிகோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2004-ம் ஆண்டு விம்பிள்டனில் 47 வயதான மார்டினா நவரத்திலோவாவை (அமெரிக்கா), 19 வயதான ஜிசெலா டுல்கோ (அர்ஜென்டினா) வீழ்த்திய பிறகு அதிகபட்ச வயது வித்தியாச தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் ஆசிய கண்டத்தில் முதல் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவரான சீன வீராங்கனை லீ நா 6-2, 6-0 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை அனா கொஞ்சுவை எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அஷ்லிக்கை (ஆஸ்திரேலியா) எளிதில் வென்று முன்னேறினார்.

ஸ்டோசுர் வெற்றி

மற்ற ஆட்டங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சமந்த ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), அனா இவானோவிச் (செர்பியா), டானிலா ஹன்ட்சோவா (சுலோவக்கியா), சபின் லிசிகி (ஜெர்மனி), ஜி செங் (சீனா), மோனிகா (ருமேனியா), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), லூசி சபரோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி கண்டு 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

image: 

category:

ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு ‘சென்செக்ஸ்’ 376 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 13 Jan 2014 09:41 AM PST

மும்பை,

பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு 376 புள்ளிகள் அதிகரித்தது. முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயர்ந்தது.

அமெரிக்கா

அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 74,000 மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த 2011 ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போதுதான் வேலைவாய்ப்பு குறைந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. எனவே, அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை அதிக அளவில் குறைக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும்.

நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.1 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இம்மாதம் 28–ந் தேதி வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்த வாய்ப்பில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு உயர்ந்தது

திங்கள்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 தினங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. இதுபோன்ற காரணங்களால் மொத்தமுள்ள 12 துறைகளில் மருந்து துறை நீங்கலாக 11 துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

மூன்றாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் சிறப்பான அளவில் அதிகரித்தது. இதனையடுத்து, நேற்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனத்தின் பங்கு விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.3,664.85–ஆக உயர்ந்தது.

டி.சி.எஸ்.

'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 21 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம் சன்பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர், டாட்டா பவர் உள்பட 9 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 375.72 புள்ளிகள் அதிகரித்து 21,134.21 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 21,169.08 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,850.54 புள்ளிகள் வரையிலும் சென்றது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 101.30 புள்ளிகள் உயர்ந்து 6,272.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,288.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,189.55 புள்ளிகளுக்கும் சென்றது.

category:

பொங்கல் திருநாளையொட்டி போலீஸ், தீயணைப்பு, சிறை துறையை சேர்ந்த 1,685 பேருக்கு பொங்கல் பதக்கம் ஜெயலலிதா உத்தரவு

Posted: 13 Jan 2014 09:37 AM PST

சென்னை,

இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு, சிறைத் துறையைச் சேர்ந்த 1,685 பேருக்கு பொங்கல் பதக்கங்களை வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

நிகரற்ற செயல்பாடு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்–அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

போலீஸ், தீயணைப்பு துறை

இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமை காவலர் நிலைகளில் ஆயிரத்து 500 பணியாளர்களுக்கு ''தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கங்கள்'' வழங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள் 60 பேருக்கும் ''தமிழக முதல்–அமைச்சரின் சிறப்பு பணி பதக்கங்கள்'' வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தொழில் சிறப்பு பணி விருது

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு ரூ.200 மாதாந்திர பதக்கப்படியாக வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல் துறை தலைவர், இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை மற்றும் சிறைத்துறை தலைவர் ஆகியோரால் மாவட்ட தலைநகரங்களில் பின்னர் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள், 2 காவல் புகைப்பட கலைஞர் மற்றும் நாய் படைப்பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக ''முதல்–அமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம்'' வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா விருது வழங்குவார்

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்க தொகையாக காவலர் மற்றும் தலைமை காவலர் நிலையில் ரூ.3 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.4 ஆயிரமும் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் நிலையில் ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கென நடைபெறவுள்ள சிறப்பு விழாவில். இந்த பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்–அமைச்சரால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™