Daily Thanthi |
- ரூ.182 கோடி பரிசுத்தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் நடால், ஜோகோவிச் இடையே கடும் போட்டி
- முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
- தேசிய டேபிள் டென்னிஸ்: சனில் ஷெட்டி, அங்கிதா சாம்பியன்
- உலகின் சிறந்த கால்பந்து வீரர் இன்று அறிவிப்பு ரொனால்டோவுக்கு வாய்ப்பு
- பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் சரண கோஷம் முழங்க புறப்பட்டது
- இறக்குமதி குறைந்துள்ளதால், மூன்றாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவீதமாக குறையும் தர நிர்ணய அமைப்புகள் மதிப்பீடு
- தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிவை சந்தித்த பங்கு வியாபாரம்
- சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.38,362 கோடி அதிகரிப்பு
- இன்று நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் பிராவிடண்ட் பண்டு சேமிப்புக்கு 8.5% வட்டி நிர்ணயிக்கப்பட வாய்ப்பு
- நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்களின் கடன்பத்திர முதலீடு ரூ.3,546 கோடி
| Posted: 12 Jan 2014 11:25 AM PST மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய ஓபன் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முதலில் வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வழக்கம் போல் 'நீயா–நானா' போட்டிக்கு பஞ்சமில்லை. இருப்பினும் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), விம்பிள்டன் சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரில் ஒருவருக்கே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு யாராவது மகுடம் சூடினால் புருவத்தை உயர்த்தி சிலிர்த்துக் கொள்ளலாம். நடால்–ஜோகோவிச் காயத்தால் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட முடியாமல் போன ரபெல் நடால், 2–வது முறையாக இங்கு பட்டம் வெல்லும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளார். சூப்பரான பார்மில் காணப்படும் நடால் முதல் சுற்றில் 52–ம் நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் பெர்னர்ட் தாமிக்குடன் மோதுகிறார். இளம் வீரரான தாமிக் உள்ளூர் சூழலில் நன்றாக ஆடக்கூடியவர். அது மட்டுமின்றி அவர் எல்லா தடவையும் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். ஆனால் இந்த முறை அது நடக்குமா? என்பது சந்தேகம் தான். ரபெல் நடால் கால்இறுதியில் அபாயகரமான வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இறுதிப்போட்டியில் நடால், ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்த வாய்ப்பிருக்கிறது. செர்பிய சூரன் ஜோகோவிச்சுக்கு, இது மிகவும் ராசியான போட்டியாகும். 4 முறை ஆஸ்திரேலிய ஓபனை ருசித்துள்ள அவர் முதல் சுற்றில் சுலோவக்கியாவின் லுகாஸ் லாக்கோவுடன் மோதுகிறார். புதிய பயிற்சியாளர் போரிஸ் பெக்கரின் ஆலோசனையின் கீழ் தன்னை பட்டை தீட்டியுள்ள ஜோகோவிச், மறுபடியும் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார். பெடரர் எப்படி? முன்னாள் நம்பர் ஒன் வீரர் 32 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு அண்மை காலமாக தோல்விகளே பரிசாக மிஞ்சி வருகின்றன. வயது ஆகி விட்டதால் அவரது ஆட்டத்திறன் தளர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பெடரர் இல்லை. தன்னால் நடால், ஜோகோவிச்சை விரட்டியடிக்க முடியும் என்று எச்சரித்துள்ளார். 2004, 2006, 2007, 2010–ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றியிருக்கும் பெடரர், இங்கு 2003–ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு வராமல் இருந்ததே கிடையாது. முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வைல்டு கார்டு வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்கொள்ளும் அவர் 4–வது சுற்றில் பிரான்சின் சோங்காவுடனும், அதை தாண்டினால் கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேவுடனும் யுத்தம் நடத்த வேண்டி இருக்கும். 4–ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே முதல் ரவுண்டில் ஜப்பானின் கோ சோடாவுடன் களம் காணுகிறார். இவர்களை தவிர 3–ம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெர்ரர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, தொடர்ந்து 18–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் களம் குதிக்கும் உள்ளூர் ஹீரோ லெய்டன் ஹெவிட் ஆகியோரும் போட்டியை கடுமையாக்க கோதாவில் நிற்கிறார்கள்.
செரீனாவுக்கு வாய்ப்பு பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையும், 5 முறை சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீதே அனைவரின் கணிப்பும் பதிந்து போய் கிடக்கின்றன. கடந்த ஆண்டில் 11 பட்டங்களை வென்று பிரமிக்க வைத்த 32 வயதான செரீனாவுக்கு, வயது ஏற ஏறத்தான் ஆட்டத்திறனும் கூடிக் கொண்டே போகிறது. மிரட்டல் ராணியாக வலம் வரும் அவர் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பேர்ட்டியுடன் மோதுகிறார். செரீனா இந்த பட்டத்தை வென்றால், 'ஓபன் எரா' வரலாற்றில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களின் வரிசையில் 2–வது இடத்தில் உள்ள செக்கோஸ்லோவக்கியாவின் மார்ட்டினா நவரத்திலோவா, அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட் ஆகியோரின் 18 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்து விடுவார். 2012, 2013–ம் ஆண்டு சாம்பியனும், 2–ம் நிலை வீராங்கனையுமான பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, செரீனாவுக்கு சவால் கொடுக்கக்கூடியவராக திகழ்கிறார். இவர் முதல் சுற்றில் சுவீடனின் ஜோஹன்னா லார்சனை சந்திக்கிறார். இதே போல் உலக தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ரஷியாவின் மரிய ஷரபோவா அமெரிக்காவின் பெதானி மாடக் சாண்ட்சையும், 4–ம் நிலை வீராங்கனை சீனாவின் லீ நா, குரோஷியாவின் அனா கொஞ்ஜூவையும் எதிர்கொள்கிறார்கள். போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்கா, இத்தாலியின் சாரா எர்ரானி, ராபர்ட்டா வின்சி, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சபினே லிசிக்கி, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, செர்பியாவின் ஜான்கோவிச் உள்ளிட்ட முன்னணி வீராங்கனை களும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்கு வரிந்து கட்டி நிற்கிறார்கள். சானியா மிர்சா இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் ஒரே இந்தியரான 93–ம் நிலை வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், முதல் சுற்றில் 27–ம் நிலை வீரர் ஸ்பெயினின் பெலிசியனோ லோப்சுடன் மோதுகிறார். இந்த சுற்றை தாண்டினாலே நம்மவருக்கு பெரிய விஷயமாக இருக்கும்.
பரிசு எவ்வளவு? வருகிற 26–ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.182 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.14½ கோடியும், 2–வது இடம் பிடிப்பவருக்கு ரூ.7¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.2.87 கோடி கிடைக்கும். இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாளில் களம் இறங்குவோரில் ஜோகோவிச், செரீனா முக்கியமானவர்கள் ஆவர். சாதனை வரிசையில் பெடரர் *உலக தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தொடர்ச்சியாக பங்கேற்கும் 57–வது கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர் இதுவாகும். இதன் மூலம் தொடர்ந்து அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரில் பங்கேற்ற வீரர் என்ற சாதனை அவரது வசம் ஆகிறது. இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் வெய்ன் பெரேய்ரா 56 கிராண்ட்ஸ்லாமில் கலந்து கொண்டதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. *முன்னாள் நம்பர் ஒன் வீரர் 41 வயதான ஆஸ்திரேலியாவின் பாட்ரிக் ராப்டர் மீண்டும் டென்னிஸ் களம் திரும்புகிறார். கடைசியாக 2001–ம் ஆண்டு விளையாடி இருந்த ராப்டர் அதன் பிறகு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் ஓய்வில் இருந்து விடுபட்டு அவர் ஆஸ்திரேலிய ஓபனில் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளார். தனது ஜோடியாக சக நாட்டவர் லெய்டன் ஹெவிட்டை சேர்த்துள்ளார். இவர்கள் முதல் சுற்றில் எரிக் பூட்டோராக் (அமெரிக்கா)– ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா) ஜோடியை சந்திக்கிறார்கள். image: category: |
| முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து Posted: 12 Jan 2014 11:24 AM PST மெல்போர்ன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்தின் சோகம் தொடருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. 270 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் ஐந்து டெஸ்டிலும் தோற்று 'ஒயிட் வாஷ்' ஆனது. அடுத்ததாக இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகிறது. இதன் முதல் ஆட்டம் மெல்போர்னில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்தது. கேப்டன் அலஸ்டயர் குக் (4 ரன்), ஜோ ரூட் (3 ரன்) இருவரும் ஏமாற்றிய போதிலும், இயான் பெல் (41 ரன்), மோர்கன் (50 ரன்), கேரி பேலன்ஸ் (79 ரன்), ஜோஸ் பட்லர் (34 ரன்) ஆகியோர் அளித்த கணிசமான பங்களிப்பால் இங்கிலாந்து கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிளைன்ட் மெக்கே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பீல்டிங் சொதப்பல் பின்னர் 270 ரன்கள் இலக்கை நோக்கி டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக தொடங்கிய இந்த கூட்டணிக்கு அதிர்ஷ்டத்தின் கருணை கிடைத்து கொண்டே இருந்தது தான் ஆச்சரியமான விஷயம். ஆரோன் பிஞ்ச் 8 ரன்னில் இருந்த போது, கிறிஸ் ஜோர்டான் வீசிய பந்தை நேராக 'மிட்–ஆப்' திசையில் நின்ற பீல்டர் கேரி பேலன்ஸ் நோக்கி அடித்தார். கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர் கூட பிடித்து விடலாம் என்று சொல்கிற அளவுக்கு வந்த மிக எளிதான கேட்ச்சை பேலன்ஸ் பிடிக்க தவறினார். இதற்கான விளைவு பேரிடியாக விழும் என்று அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். இதே போல் வார்னர் 9 ரன்னில் இருந்த போது முதல் கண்டத்தில் தப்பினார். அடுத்து 22 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். ஆனால் எல்லைக்கோடு அருகே அவரை நிற்க வைத்த நடுவர்கள், கேட்ச்சில் சந்தேகம் அடைந்து, ரீப்ளேயை பரிசேரித்தனர். ஒரு கோணத்தில் பந்தை பட்லர் கேட்ச் செய்வது போன்றும், இன்னொரு கோணத்தில் தரையோடு பிடிப்பது போன்றும் தெரிந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பலன் வார்னருக்கு வழங்கப்பட, தொடர்ந்து பேட் செய்யும் வாய்ப்பு கிட்டியது. சில ரன்–அவுட் வாய்ப்பில் இருந்தும் இந்த ஜோடி தப்பி பிழைத்தது. பிஞ்ச் சதம் இவ்வாறு கேட்ச், ரன்–அவுட் வாய்ப்பு, நடுவரின் சில கடினமான தீர்ப்புகள் என்று 7 முறை மறுவாழ்வு பெற்றதன் மூலம் தொடக்க ஜோடியால் வலுவான அஸ்திவாரம் அமைக்க முடிந்தது. அணியின் ஸ்கோர் 163 ரன்களை (27.5 ஓவர்) தொட்ட போது வார்னர் 65 ரன்களில் (72 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய தொடக்க ஜோடி ஒன்று சேர்த்த அதிகபட்ச ரன் இதுவாகும். அவருக்கு பிறகு களம் புகுந்த ஷேன் வாட்சன் ரன் ஏதுமின்றி கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன், ஆரோன் பிஞ்ச் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய பிஞ்ச் தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார். 121 ரன்கள் (128 பந்து, 12 பவுண்டரி) குவித்த பிஞ்ச், ஸ்டோக்சின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது, அதை கேரி பேலன்ஸ் கேட்ச் செய்தார். இதே பிஞ்ச் ஆரம்பத்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பேலன்ஸ் பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு ஒரு வேளை மாறியிருக்கலாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்க£ரம் போன்று தான் பேலன்சின் நிலைமை அமைந்துவிட்டது. சிறிது நேரத்தில் மைக்கேல் கிளார்க்கும் (43 ரன், 42 பந்து, 6 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியா வெற்றி இதைத் தொடர்ந்து ஜார்ஜ் பெய்லியும் (17 ரன்), மேக்ஸ்வெல்லும் (8 ரன்) கைகோர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஆஸ்திரேலிய அணி 45.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. பிஞ்ச் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது. image: category: |
| தேசிய டேபிள் டென்னிஸ்: சனில் ஷெட்டி, அங்கிதா சாம்பியன் Posted: 12 Jan 2014 11:23 AM PST பாட்னா, 75–வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பாட்னாவில் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டு போர்டு அணிக்காக பங்கேற்ற மும்பையை சேர்ந்த சனில் ஷெட்டி 11–9, 11–7, 10–12, 12–10, 7–11, 11–7 என்ற செட் கணக்கில் சக அணியை சேர்ந்த ஹர்மீத் தேசாயை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கினார். மும்பையை சேர்ந்த ஒருவர் இந்த தேசிய பட்டத்தை வெல்வது 1995–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.2.30 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. முன்னதாக தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் அரைஇறுதியில் 1–4 என்ற செட் கணக்கில் ஹர்மீத் தேசாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பிரிவில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டு போர்டு அணி வீராங்கனை அங்கிதா தாஸ் 11–9, 12–10, 11–8, 13–11 என்ற செட் கணக்கில் விமான ஆணையக அணியை சேர்ந்த கிரித்விகா சின்ஹா ராயை தோற்கடித்து ரூ.1¾ லட்சம் பரிசுத்தொகையுடன் பட்டத்தை தட்டிச் சென்றார். image: category:Tagging: |
| உலகின் சிறந்த கால்பந்து வீரர் இன்று அறிவிப்பு ரொனால்டோவுக்கு வாய்ப்பு Posted: 12 Jan 2014 11:23 AM PST சூரிச், ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் லயனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), பிராங்க் ரிபெரி (பிரான்ஸ்) ஆகியோர் உள்ளனர். இதில் இருந்து ஒருவர் இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார். தொடர்ந்து 4 முறை இவ்விருதினை கைப்பற்றியிருக்கும் மெஸ்சியை விட இந்த முறை ரொனால்டோவுக்கே விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டில் ரொனால்டோ ரியல்மாட்ரிட் கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக 59 ஆட்டங்களில் பங்கேற்று 69 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. image: category: |
| பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் சரண கோஷம் முழங்க புறப்பட்டது Posted: 12 Jan 2014 10:38 AM PST பந்தளம், மகர விளக்கு பூஜையன்று சாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நேற்று காலை சரண கோஷம் முழங்க சபரிமலை நோக்கி புறப்பட்டது. மகர விளக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30–ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக இருமுடி சுமந்து வந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சபரிமலையில் ஜோதி தரிசனம் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னதாகவே வந்து ஆங்காங்கே இடம் பிடித்து விரி அமைத்து முகாமிட்டு உள்ளனர். திருவாபரண ஊர்வலம் மகர விளக்கு பூஜையின்போது சாமி அய்யப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 1 மணிக்கு சபரிமலை நோக்கிசரண கோஷம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது. முன்னதாக காலை 8 மணிக்கு பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் மேல்சாந்தி அனில்குமார் போற்றி தலைமையில் திருவாபரண பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பந்தளம் வலிய தம்புரான் இதையொட்டி பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் ரேவதி திருநாள் ராமவர்மா பல்லக்கில் அழைத்து வரப்பட்டார்.தேவசம் தலைவர் எம்.பி. கோவிந்தன்நாயர், உறுப்பினர் பி.கே. குமாரன், கமிஷனர் வேணுகோபால், மாவட்ட கலெக்டர் தேவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆர்.நாயர், போலீஸ் சிறப்பு அதிகாரி பைக்கீம், பந்தளம் கொட்டாரம் நிர்வாக அதிகாரி மோகனன் உள்பட திரளான அய்யப்ப பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக நாளை பிற்பகல் பம்பையை வந்தடைகிறது. பின்னர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை, சிறப்பு பூஜை, ஜோதி தரிசனம் ஆகியவை நடை பெறும். அன்று இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பம்பை விளக்கு, விருந்து சபரிமலையில் சாமி அய் யப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடு பம்பை விருந்து மற்றும் பம்பை விளக்கு ஆகும். இன்று (திங்கட்கிழமை) மாலை பக்தர்கள் தங்கள் கொண்டு வந்துள்ள அரிசி மற்றும் பொருட்களை கொண்டு பம்பை நதிக்கரையில் வைத்து சமையல் செய்து, அய்யனுக்கு படைத்து பஜனைப்பாடல்கள் பாடி வழிபட்டு பிற பக்தர்களுக்கு பம்பை விருந்து வழங்கி தாங்களும் அருந்துவது வழக்கம். பின்னர் அந்திப்பொழுது சாயும் நேரம் மூங்கில்களால் வடிவமைக்கக்கப்பட்ட சிறிய தேரில் பலூன்களால் அலங்கரித்து அதில் மெழுகுவர்த்தி விளக்குகள் ஏற்றி, அதை அய்யப்பன் மன்னருக்கு காட்சி தந்த பம்பை நதியில் மிதக்க விட்டு மகிழ்வார்கள். இதுவே பம்பை விளக்கு வழி பாடாகும். மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், சபரிமலையில் 10 லட்சம் டின் அரவணை மற்றும் 3 லட்சம் பொட்டலம் அப்பம் ஆகிய ஆகியவை தயார் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 12 Jan 2014 10:18 AM PST மும்பை இறக்குமதி குறைந்துள்ளதால், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.1–1.2 சதவீதமாக குறையும் என தர நிர்ணய அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன. இந்தியா ரேட்டிங்ஸ் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும். இது, மூன்றாவது காலாண்டில் 1.1 சதவீதமாக குறையும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் முன்னறிவிப்பு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 3.49 சதவீதம் அதிகரித்து 2,635 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி 15.25 சதவீதம் குறைந்து 3,649 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து, டிசம்பரில் சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை 1,014 கோடி டாலராக குறைந்துள்ளது. 2012–ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 42 சதவீதம் குறைவாகும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இந்நிலையில், அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை கணிசமாக குறைக்க போவதாக அறிவித்தது. இதனையடுத்து, சென்ற 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு 28–ந் தேதி அன்று வர்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 68.86–ஆக வீழ்ச்சி அடைந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்ததற்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதே முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. தங்கம் – வெள்ளி கடந்த டிசம்பர் மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 68.80 சதவீதம் குறைந்து 560 கோடி டாலரிலிருந்து 177 கோடி டாலராக குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் இது 30.3 சதவீதம் குறைந்து 2,730 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து இறக்குமதி 34,030 கோடி டாலராக குறைந்து வர்த்தக பற்றாக்குறை 11,000 கோடி டாலராக குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவீதமாக குறைந்தது. இது, சென்ற நிதி ஆண்டில் 4.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவீதமாக குறையும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். சென்ற 2013–ஆம் ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி பாரத ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றார். அவர் டாலர் வரத்தை அதிகரித்து ரூபாய் மதிப்பு சரிவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் பிறகு ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கியது. இம்மாதம் 10–ந் தேதி அன்று இது 61.91–ல் நிலைபெற்றது. 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு 28–ந் தேதியுடன் ஒப்பிடும்போது இது 10 சதவீதம் அதிகமாகும். பார்க்ளேஸ் கணிப்பு இந்த நிதி ஆண்டில் (2013–14) நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,000 கோடி டாலராக குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 43.30 சதவீதம் குறைவாகும். எனவே, அடுத்த 6–12 மாதங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61–ஆக உயர வாய்ப்புள்ளது என பார்க்ளேஸ் நிறுவனம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இறக்குமதி செலவினம் கச்சா எண்ணெய், பருப்பு வகைகள், நிலக்கரி, சமையல் எண்ணெய் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ரூபாய் மதிப்பு உயருவதால் இவற்றின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் குறையும். நவம்பர் மாத்தில் மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு 17.52 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 11.24 சதவீதமாகவும் உயர்ந்து இருந்தது. image: category:Tagging: |
| தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிவை சந்தித்த பங்கு வியாபாரம் Posted: 12 Jan 2014 10:11 AM PST மும்பை தொடர்ந்து இரண்டாவது வாரமாக பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 92.84 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 39.70 புள்ளிகளையும் இழந்தது. சேவை துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில் 55 சதவீத பங்கை கொண்டுள்ள சேவைத் துறையின் உற்பத்தி டிசம்பர் மாதத்தில் சரிவடைந்துள்ளதாக எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் மதிப்பீடு செய்தது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இந்த உற்பத்தி சரிவடைந்துள்ளது. இது, பங்கு வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அன்னிய நிதி நிறுவனங்களும் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தன. சென்ற வாரம் இந்நிறுவனங்கள் ரூ.381.34 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தன. இதுபோன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்பொருள், மின்சாரம், பொறியியல், உலோகம், மருந்து, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ஆக்சிஸ் பேங்க், டாட்டா ஸ்டீல், ஹிண்டால்கோ, பாரத ஸ்டேட் வங்கி, எல் & டி, டாட்டா பவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், மகிந்திரா & மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. அதேசமயம் டாக்டர் ரெட்டீஸ் லேப், சன்பார்மா, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., ஐ.டி.சி., கெயில் இந்தியா, சிப்லா, டாட்டா மோட்டார், எச்.டீ.எஃப்.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. சென்ற வாரம் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் முறையே ரூ.11,663.44 கோடி மற்றும் ரூ.59,964.52 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் முறையே ரூ.10,486.82 கோடி மற்றும் ரூ.46,164.73 கோடியாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் 'சென்செக்ஸ்' 435 புள்ளிகளையும், நிஃப்டி 142 புள்ளிகளையும் இழந்தது. இந்த வார வர்த்தகம் இந்த வாரத்தில் டி.சி.எஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. மேலும், சில்லறை விலை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களும் வெளியிடப்பட உள்ளன. இவை இந்த வாரத்தில் பங்குச் சந்தைகளின் போக்கை நிர்ணயிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.38,362 கோடி அதிகரிப்பு Posted: 12 Jan 2014 10:09 AM PST மும்பை சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.38,362 கோடி அதிகரித்துள்ளது. பங்கு வியாபாரம் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. மேலும் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்ற காரணங்களால் சென்ற வார வர்த்தகம் மொத்தத்தில் இறங்குமுகமாகவே இருந்தது. டி.சி.எஸ் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.11,713 கோடி அதிகரித்து ரூ.4,46,942 கோடியாக உயர்ந்துள்ளது. கோல் இந்தியா நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.6,916 கோடி உயர்ந்து ரூ.1,82,353 கோடியாக அதிகரித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.6,844 கோடி அதிகரித்து ரூ.2,42,804 கோடியாக உயர்ந்துள்ளது. சன் பார்மா நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.6,158 கோடி உயர்ந்து ரூ.1,26,275 கோடியாக அதிகரித்துள்ளது. ஐ.டி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.6,031 கோடி அதிகரித்து ரூ.2,55,880 கோடியாக உயர்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் பங்குகளின் மதிப்பு ரூ.700 கோடி உயர்ந்து ரூ.1,32,154 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் நான்கு நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.2,595 கோடி குறைந்து ரூ.2,76,907 கோடியாக சரிவடைந்துள்ளது. இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.951 கோடி சரிந்து ரூ.2,03,790 கோடியாக குறைந்துள்ளது. விப்ரோ பங்குகளின் மதிப்பு ரூ.641 கோடி குறைந்து ரூ.1,36,725 கோடியாக சரிவடைந்துள்ளது. எச்.டீ.எஃப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.287 கோடி சரிந்து ரூ.1,58,558 கோடியாக குறைந்துள்ளது. முதல் நான்கு இடங்களில்... பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி. மற்றும் ஒ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன. இன்போசிஸ், கோல் இந்தியா மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி ஆகியன முறையே ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடங்களை பிடித்துள்ளன. விப்ரோ மற்றும் பார்தி ஏர்டெல் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. சன் பார்மா பத்தாவது இடத்தில் உள்ளது. image: category:Tagging: |
| Posted: 12 Jan 2014 10:05 AM PST புதுடெல்லி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எஃப்.ஓ) மத்திய அறங்காவலர் குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதில், நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் பிராவிடண்ட் ஃபண்டு சேமிப்புக்கு 8.5 சதவீத வட்டி நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஃப். சேமிப்பிற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குவதால் ரூ.56.96 கோடி தான் உபரி நிதி கிடைக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி, இ.பி.எஃப்.ஓ. ஈட்டும் வருவாயின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்த அமைப்பிற்கு ரூ.20,796.96 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8.5 சதவீத வட்டி வழங்குவதானால் ரூ.20,740 கோடி செலவினம் ஏற்படும். ஆக, உபரி நிதி குறைவாக உள்ளது. இ.பி.எஃப். அமைப்பு சந்தாதாரர்களிடமிருந்து திரட்டும் டெபாசிட்டுகளை முதலீடு செய்து ஆதாயம் ஈட்டுகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில் பி.எஃப். டெபாசிட்டிற்கு 9 சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த அளவிற்கு வட்டி வழங்கினால் இ.பி.எஃப்.ஓ. அமைப்பிற்கு வருவாயைக் காட்டிலும் கூடுதலாக ரூ.1,220 கோடி செலவினம் ஏற்படும். இது சாத்தியப்படாது என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உபரி நிதி கடந்த 2010–11–ஆம் நிதி ஆண்டில் பி.எஃப். வட்டி விகிதம் 9.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அப்போது இ.பி.எஃப்.ஓ. அமைப்பிடம் ரூ.1,761 கோடி உபரி நிதி இருந்தது. இந்நிலையில், நிதி குறைவாக இருந்ததால் 2011–12–ஆம் நிதி ஆண்டில் பி.எஃப். டெபாசிட் வட்டி 8.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. நடப்பு நிதி ஆண்டிலும் இதே வட்டிதான் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. image: category:Tagging: |
| நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்களின் கடன்பத்திர முதலீடு ரூ.3,546 கோடி Posted: 12 Jan 2014 10:03 AM PST புதுடெல்லி ஜனவரி மாதத்தில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் ரூ.3,546 கோடி முதலீடு செய்துள்ளன. நிகர முதலீடு ஜனவரி 10–ந் தேதி வரையிலான காலத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.8,155 கோடிக்கு கடன்பத்திரங்களை வாங்கின. அதேசமயம், ரூ.4,609 கோடிக்கு கடன்பத்திரங்களை விற்பனை செய்தன. இதனையடுத்து, இந்திய கடன்பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.3,546 கோடியாக உள்ளது. ரூபாய் வெளிமதிப்பு மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றில் திருப்தி உள்ளதால் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் கடன்பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குகளில் ரூ.545 கோடி முதலீடு செய்துள்ளன. இதனையடுதத்து நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பங்கு மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு ரூ.4,091 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி இம்மாதம் முதல் சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்க உள்ளது. இதன் காரணமாக அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீட்டை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி மாதந்தோறும் 8,500 கோடி டாலருக்கு கடன்பத்திரங்களை வாங்கி வந்தது. இதன் காரணமாக அன்னிய நிதி நிறுவனங்களுக்கு நிதி அதிக அளவில் கிடைத்தது. எனவே, இந்நிறுவனங்கள் இந்த நிதியை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு செய்து அதிக ஆதாயம் பெற்று வந்தன. இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியதை தொடர்ந்து அந்நாட்டு ரிசர்வ் வங்கி கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை 7,500 கோடி டாலராக குறைக்க போவதாக அறிவித்தது. இது இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நிறுவன பங்குகள் 2013–ஆம் ஆண்டில் அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் விலக்கிய நிகர முதலீடு ரூ.50,847 கோடியாகும். அதேசமயம், நிறுவன பங்குகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.1.13 லட்சம் கோடியாக உள்ளது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷியுடனும், லியாண்டர் பெயஸ் (இந்தியா), செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக்குடனும், இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனசுடனும், இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் ராஜீவ் ராமுடனும் ஜோடி சேர்ந்து களம் இறங்குகிறார்கள். பெண்கள் இரட்டையரில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் சேர்ந்து விளையாட இருக்கிறார்.