Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாராளுமன்ற தேர்தலுக்கு ஏற்பாடு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 5.37 கோடி வாக்காளர்கள் சென்னையில் பெண் வாக்காளர்கள் அதிகம்

Posted: 10 Jan 2014 12:10 PM PST

சென்னை

பாராளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

வாக்காளர் இறுதிப்பட்டியல்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று வாக்காளர் இறுதிப்பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருத்தம்

1.1.2014–ந் தேதியை வாக்காளர் தகுதிக்கான நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான வரைவுப் பட்டியல் 1.10.2013–ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதில், 2 கோடியே 58 லட்சம் ஆண்கள், 2 கோடியே 56 லட்சம் பெண்கள், 2ஆயிரத்து 421 திருநங்கைகள் என மொத்தம் 5 கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள், கடந்த அக்டோபர் 1–ந் தேதி முதல் 31–ந் தேதிவரை பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் தாக்கல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 29 லட்சத்து 38ஆயிரத்து 185 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் 27 லட்சத்து 53 ஆயிரத்து 109 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.வாக்காளர்களின் இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு ஆகியவை காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 407 பெயர்கள் நீக்கப்பட்டன. வாக்காளர் பட்டியல் பதிவுகளில் திருத்தம் கோரி, 4 லட்சத்து 13 ஆயிரத்து 897 விண்ணப்பங்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்காக ஒரு லட்சத்து 47ஆயிரத்து 814 விண்ணப்பங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் 5.37 கோடி வாக்காளர்கள்

இந்த விண்ணப்பங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரிகளால் வெளியிடப்பட்டு இருக்கிறது.இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 கோடியே 69 லட்சம் பேர் ஆண்கள்; 2 கோடியே 68 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். 2 ஆயிரத்து 996 பேர் திருநங்கைகள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் வெளிநாட்டில் வாழும் வாக்காளர்களும் அடங்குவார்கள்.இறுதிப் பட்டியலில் கூடுதலாக 23 கோடியே 49 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் அதிகம்

அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை சென்னையில் உள்ளது. இங்கு 33 லட்சத்து 33 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாக அரியலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 67ஆயிரத்து 586 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிகபட்சமாக, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7.41 சதவீதம் வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.வெளிநாட்டைச் சேர்ந்த வாக்காளர்கள் 20 பேர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். அரசுப் பணியில் 69 ஆயிரத்து 109 வாக்காளர்கள் உள்ளனர்.

71.24 சதவீதம்

தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில், 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் என்பது 71.24 சதவீதமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 996 என்ற வீதத்திலும், வாக்காளர் பட்டியலில் ஆயிரம் ஆண்களுக்கு 999 என்ற வீதத்திலும் பெண்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. அகில இந்திய அளவில் தமிழக வாக்காளர்களின் சதவீதம் 7.8 ஆகும்.இந்த வாக்காளர் பட்டியலின்படி, 18 முதல் 19 வயதினர் 24 லட்சத்து 46 ஆயிரத்து 878 பேர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் 11 லட்சத்து 99 ஆயிரத்து 600 பேர் மட்டுமே பதிவு பெற்றுள்ளனர். என்றாலும் முந்தைய ஆண்டைவிட தற்போதைய எண்ணிக்கை உயர்ந்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம்தான்.ஆனால் தகுதியுள்ள மொத்த மக்கள் தொகையில் இது 49 சதவீதமாகவே உள்ளது. இது கவலை அளிக்கிறது. வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு இந்த வயதினருக்கு ஊக்கம் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக என்.ஜி.ஓ.க்களையும் களத்தில் இறக்கவுள்ளோம்.

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை 27ஆயிரத்து 946 இடங்களில் அமைந்துள்ளன. அந்த அமைவிடங்களில் வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி நடைபெறும் விழாவில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மாநில அளவில் நடக்கும் விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.தற்போது வெளியிடப்பட்டுள்ளது இறுதிப் பட்டியலாக இருந்தாலும், 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியாகி தகுதி பெற்றிருப்பவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளுக்கு 10 நாட்கள் முன்பு வரை அவர்கள் விண்ணப்பிக்க முடியும். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்த பிறகு வாக்காளர் துணைப் பட்டியல் வெளியிடப்படும்.

கலர் அட்டை இப்போது இல்லை

இந்த முறை, ஆன்லைன் மூலம் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக இருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு வசதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் மையங்களை தேர்தல் அதிகாரிகள் ஒருங்கிணைத்திருந்தனர். இது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் அது தரப்பட்டுவிடும். அடையாள அட்டைகளை கலர் அட்டைகளாக கொடுக்க தற்போது இயலவில்லை. அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

மாணவர்கள்

மாணவர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக 1,100 கல்லூரிகளில் தேர்தல் கமிஷனுக்காக 1,374 மாணவர்களை பிரதிநிதிகளாக நியமித்திருந்தோம். அவர்கள் மூலம் 1,300 பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.ஊரகப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இதுபோன்ற நடவடிக்கைக்காக என்.சி.சி., என்.எஸ்.எஸ்., யுவகேந்திரா போன்ற அமைப்பில் உள்ள மாணவர்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். கல்லூரி சேர்க்கைக்காக மாணவர்களுக்கு அளிக்கப்படும் விண்ணப்பத்தோடு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சேர்த்து வழங்கும் முறையும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தையும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஓரிடத்தில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தாலே அந்த இடத்தில் வசிப்பவர் என்ற அங்கீகாரத்தை பெறலாம். வீட்டில்தான் வசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுபற்றி வாக்குச்சாவடி அதிகாரியிடம் கூறினால், அதை அவர் நேரடியாக வந்து பரிசீலித்து பார்த்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம். ஆனால் ஏதாவது ஒரு அத்தாட்சியை காட்ட வேண்டும்.

ஆதார் அட்டை இல்லை

ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்ட தபாலில் தபால் துறையின் முத்திரையிடப்பட்டு அது பட்டுவாடா செய்யப்பட்டு இருந்தால், அதையே முகவரிச் சான்றாக எடுத்து கொள்ள முடியும். வாக்குப்பதிவுக்காக காட்ட வேண்டிய சான்றுகளின் பட்டியலில் ஆதார் அட்டை இதுவரை இடம்பெறவில்லை.தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர்களை எந்தக் கட்சியாவது அறிவித்துவிட்டு பிரசாரம் செய்வதை நாங்கள் தடுக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகுதான் நாங்கள் செயல்படத் தொடங்குவோம்.

புகார் கூறலாம்

ஏதாவது புகார் கூற வேண்டுமென்றால், 1030 அல்லது 1374 என்ற டோல் எண்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.அப்போது இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம், துணை தலைமைத் தேர்தல் அதிகாரி சசிகுமார் உடனிருந்தனர்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்: ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி டோனி, ரெய்னா உள்பட 5 வீரர்களை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Posted: 10 Jan 2014 12:01 PM PST

புதுடெல்லி

ஏழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இதன் மூலம் ஷேவாக் முதல் முறையாக பகிரங்க ஏலத்திற்கு வருகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12–ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13–தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 5 வீரர்களை தொடர்ந்து தங்கள் அணிகளில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி வீதம் சம்பளமாக ஒதுக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பட்டியலை சமர்ப்பிக்க ஜனவரி 10–ந்தேதி (நேற்று) கடைசி நாளாகும். இதன்படி 8 அணி நிர்வாகங்களும் அந்த விவரங்களை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

சென்னை அணியில் 5 பேர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணி என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்சில் எதிர்பார்த்தது போலவே கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஆல்–ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ ஆகிய 5 பேர் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 'டுவிட்டர்' மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய், பத்ரிநாத் 2013 ஐ.பி.எல். சீசனில் அதிக ரன்கள் குவித்தவரான (733 ரன்) ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி, தென்ஆப்பிரிக்காவின் அல்பி மோர்கல், பாப் டு பிளிஸ்சிஸ் உள்ளிட்டோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்–5

ஓய்வு பெற்று விட்ட சச்சின் தெண்டுல்கர் இல்லாமல் முதல் முறையாக களம் இறங்க உள்ள நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, யார்க்கர் மன்னன் மலிங்கா, ஹர்பஜன்சிங், ஆல்–ரவுண்டர் கீரன் பொல்லார்ட், அம்பத்தி ராயுடு ஆகியோர் தக்க வைக்கப்பட்டிருப்பதாக அந்த அணியின் உரிமையாளர் நிதா அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அணிக்காக பங்கேற்ற, ஆஷஸ் தொடரில் 37 விக்கெட்டுகளை சாய்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் ஏலத்திற்கு வருகிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்–5

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய கேப்டன் ஷேன் வாட்சன், ரஹானே, ஜேம்ஸ் பவுல்க்னெர், ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடருகிறார்கள். இவர்களில் சாம்சன் 19 வயதே நிரம்பியவர் ஆவர்.

இதுவரை சர்வதேச போட்டிகளில் எதுவும் ஆடாத கேரளாவைச் சேர்ந்த சாம்சன் சமீபத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து கலக்கினார். அடுத்த மாதம் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் சாம்சன் உள்ளார்.

பஞ்சாப் அணி–2

கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணி இரண்டு பேரை மட்டுமே வைத்துக் கொண்டுள்ளது. இதில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின் போது மின்னல் வேகத்தில் சதம் அடித்து மிரள வைத்த தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரின் பெயர் கணித்தது போலவே இடம் பெற்றுள்ளது.

ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதிக பிரபலமில்லாத உள்ளூர் பேட்ஸ்மேன் 20 வயதான மனன் வோராவையும் தக்க வைத்திருக்கிறது. வோரா சமீபத்தில் ரஞ்சி கிரிக்கெட்டில் ஜார்கண்டுக்கு எதிராக 187 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்–2

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான், உலகின் அபாயகரமான பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் ஆகிய இருவரை மட்டும் தொடர்ந்து அணியில் வைப்பது என்று முடிவு செய்துள்ளது.

சங்கக்கரா, இந்திய தொடரில் 'ஹாட்ரிக்' சதம் அடித்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் டேரன் சேமி, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோர் ஐதராபாத் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

டெல்லி அணி–0

டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக, எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது. அந்த அணியின் உள்ளூர் நாயகன் 35 வயதான ஷேவாக் பார்மில் இல்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் 13 இன்னிங்சில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஓராண்டுக்கு மேலாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதால் அவரை வைத்துக் கொள்ள டெல்லி அணிக்கு விருப்பம் இல்லை. இதனால் தங்கள் அணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து விட்டு, இந்த சீசனில் புத்தம் புதிய அணியை தேர்வு செய்யும் முடிவுக்கு டெல்லி அணி வந்துள்ளது.

முதல் மூன்று சீசனில் முத்திரை வீரர் அந்தஸ்துடன் அதிரடி காட்டிய ஷேவாக், அடுத்த மூன்று தொடர்களிலும் அந்த அணியில் நீடித்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக ஷேவாக் ஏலம் மூலம் விற்கப்பட இருக்கிறார். அவருடன் சேர்த்து மஹேலா ஜெயவர்த்தனே, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன், உன்முக் சந்த் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களும் ஏலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி ஏலத்தின் போது ஷேவாக்கை மறுபடியும் டெல்லி அணி வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

பெங்களூர்–3, கொல்கத்தா–2

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோரையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஆகியோரையும் தக்க வைத்துள்ளது.

10 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 24 வீரர்கள் அந்தந்த அணிகளில் தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 16 வீரர்களும், அதிகபட்சமாக 27 வீரர்களும் இடம் பெறலாம். ஏலத்தின் போது ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சமாக ரூ.60 கோடி வரை செலவு செய்து வீரர்களை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களுக்கு ரூ.39 கோடியை ஊதியமாக ஒதுக்கி விட வேண்டி இருப்பதால், எஞ்சிய ரூ.21 கோடியை வைத்து தான் அணிக்கான மீதமுள்ள வீரர்களை வாங்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் ஆடாத 2 வீரர் உள்பட 5 பேரை பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணி இன்னும் 22.5 கோடி செலவு செய்யலாம்.

மேட்ச் கார்டு

இந்த ஏலத்தின் போது முதல் முறையாக 'மேட்ச் கார்டு' என்ற புதிய முறை அறிமுகம் ஆகிறது. அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவித்த வீரரை ஏலத்தின் போது அந்த அணி நிர்வாகம் மீண்டும் வாங்க விரும்பினால், 'மேட்ச் கார்டு' வாய்ப்பை பயன்படுத்தி ஏலத்தில் கேட்கப்பட்ட அதிகபட்ச தொகையை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

எத்தனை வீரர்களை வைத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே மேட்ச் கார்டு சலுகை கிடைக்கும். 3 முதல் 5 வீரர்களை வைத்துக் கொள்ளும் அணிக்கு ஒரு மேட்ச் கார்டும், 2 வீரர்களை வைத்துக் கொள்ளும் அணிக்கு 2 மேட்ச் கார்டும், எந்த வீரரையும் தக்க வைக்காத அணிக்கு 3 மேட்ச் கார்டும் வழங்கப்படும். இதன்படி டெல்லி அணி மூன்று வீரர்களை மேட்ச் கார்டு மூலம் மறுபடியும் வாங்க தகுதியுடன் உள்ளது.

--–

எவ்வளவு செலவு செய்யலாம்?

தக்க வைத்துக்கொள்ள வீரர்களுக்கான ஊதியம் போக ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற விவரம் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ்–ரூ.21 கோடி

மும்பை இந்தியன்ஸ்–ரூ.21 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்–ரூ.22.5 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்–ரூ.60 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ரூ.43.5 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–ரூ.38 கோடி

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்–ரூ.30.5 கோடி

ஐதராபாத் சன் ரைசர்ஸ்–ரூ.38 கோடி

category:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரரை சந்திக்கிறார், நடால்

Posted: 10 Jan 2014 11:56 AM PST

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் பெர்னர்ட் தாமிக்குடன் மோதுகிறார்.

மோதல் அட்டவணை

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்–யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் (டிரா) நேற்று நடந்தது.

இதன்படி ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. முதல் சுற்றில் உள்ளூர் வீரரும், 52–ம் நிலை வீரருமான பெர்னர்ட் தாமிக்கை சந்திக்கும் நடால், 3–வது சுற்றில் பிரான்சின் கேல் மான்பில்சையும், 4–வது சுற்றில் ஜப்பானின் நிஷிகோரியையும், கால்இறுதியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

முர்ரே–பெடரர்

தொடர்ந்து 4–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும் முனைப்புடன் தயாராகும் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் சுலோவக்கியாவின் லுகாஸ் லாக்கோவுடன் மோதுகிறார். கால்இறுதி சுற்றில் இருந்து தான் ஜோகோவிச்சுக்கு உண்மையான சவால் ஆரம்பிக்க போகிறது. கால்இறுதியில் அவர் சென்னை ஓபன் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்த்து களம் காண வேண்டி வரலாம்

விம்பிள்டன் சாம்பியனும், 3–ம் நிலை வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே முதல் சவாலை 112–ம் நிலை வீரர் ஜப்பானின் கோ சோடாவுடன் தொடங்குகிறார்.

கடந்த ஆண்டில் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்த முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் வைல்டு கார்டு வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்கொள்கிறார்.

சோம்தேவ்

பெடரர் இந்த முறையும் பெரும் யுத்தத்திற்கு தயாராக வேண்டியது அவசியமாகும். அவர் 4–வது சுற்றில் பிரான்ஸ் வீரர் வில்பிரட் சோங்காவை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த தடையை கடந்தால் கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டிமுர்ரேவுடன் மல்லுகட்ட வேண்டியிருக்கும்.

ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் ஒரே இந்தியரான சோம்தேவ் தேவ்வர்மன்(தரவரிசையில் 93–வது இடம்), முதல் சுற்றில் 27–ம் நிலை வீரர் ஸ்பெயினின் பெலிசியனோ லோப்சுடன் மோதுகிறார். சோம்தேவ் முதல் சுற்றை தாண்டிலே அதிசயம் தான்.

செரீனா எப்படி?

பெண்கள் பிரிவில், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது முதல் சுற்றில் வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஆஷ்லெ பேர்ட்டியுடன் மோதுகிறார். செரீனா 4–வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுரை சந்திக்க வாய்ப்புள்ளது. ஸ்டோசுர், 2011–ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்தில் செரீனாவை தோற்கடித்தது நினைவிருக்கலாம்.

இரட்டை நடப்பு சாம்பியனும், 2–ம் நிலை வீராங்கனையுமான பெலாரசின் விக்டோரியா அஸரென்கா சுவீடனின் ஜோஹன்னா லார்சனையும், ரஷிய புயல் மரிய ஷரபோவா அமெரிக்காவின் பெதானி மாடக் சாண்ட்சையும், சீன மங்கை லீ நா முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனையையும் சந்திக்க உள்ளனர்.

category:

சிட்னி டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி

Posted: 10 Jan 2014 11:55 AM PST

சிட்னி

சிட்னியில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரை இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா(இந்தியா), குரேஷி (பாகிஸ்தான்) ஜோடி, லூகாஸ் ரசோல் (செக்குடியரசு)–ஜாவ் ஜோசா (போர்ச்சுக்கல்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரோகன் போபண்ணா–குரேஷி ஜோடி 6–1, 6–2 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி, டேனியல் நெஸ்டர் (கனடா)–ஜிமோன்ஜிச் (செர்பியா) ஜோடியை சந்திக்கிறது.

category:

மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மராட்டிய அணிக்கு 252 ரன்கள் இலக்கு

Posted: 10 Jan 2014 11:55 AM PST

மும்பை

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தற்போது கால்இறுதி ஆட்டங்கள் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மராட்டிய அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் 122 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 38.1 ஓவர்களில் 129 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மராட்டியத்திற்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய மராட்டிய அணி 3–வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது. மராட்டியத்திற்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது. இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் இந்த ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

இதே போல் வதோதராவில் நடக்கும் பஞ்சாப்–ஜம்மு–காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டமும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. 27 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி 3–வது நாளான நேற்று 296 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. மன்தீப்சிங் 101 ரன்களும், யுவராஜ்சிங் 40 ரன்களும் எடுத்தனர். ஜம்மு–காஷ்மீர் தரப்பில் கேப்டன் பர்வேஸ் ரசூல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 324 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஜம்மு–காஷ்மீர் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்திருந்தது.

கொல்கத்தாவில் நடக்கும் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 314 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இது பெங்காலின் முதல் இன்னிங்சை விட 3 ரன் குறைவாகும். பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா 6 விக்கெட்டுகளை அள்ளினார். 2–வது இன்னிங்சில் பெங்கால் அணி 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரில் நடந்து வரும் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே கர்நாடகம் 349 ரன்னும், உத்தரபிரதேசம் 221 ரன்னும் எடுத்தன. 128 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடிய கர்நாடக அணி அலி முர்தசாவின் பந்து வீச்சுக்கு (6 விக்கெட் எடுத்தார்) ஈடுகொடுக்க முடியாமல் 204 ரன்னில் அடங்கியது. அடுத்து 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த உத்தரபிரதேச அணி நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்துள்ளது.

category:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு 17–ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது

Posted: 10 Jan 2014 11:23 AM PST

சென்னை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வின் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தல் 17–ந் தேதி நடக்கிறது.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் தேர்வு எழுதினார்கள்.

தமிழ் பாடத்தேர்வில் 44 பிழைகள் இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையொட்டி நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்பாட தேர்வு முடிவு வெளியிடப்பட்டு தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

முடிவுகள் வெளியீடு

மற்ற பாடங்களுக்கு ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டு முடிவும் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்த்தலும் முடிந்தது. ஆனால் விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று சிலர் நீதிமன்றங்களை நாடினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி ஆங்கிலம், கணிதம், விலங்கியல், பொருளாதாரம், மைக்ரோ பயாலஜி உள்பட 10 பாடங்களின் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 17–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்றவர்கள் நீதிமன்ற உத்தரவு மற்றும் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர் விபு நய்யார், செயலாளர் உறுப்பினர் தண்.வசுந்தராதேவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மீதம் உள்ள தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும் மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியிடப்படுவது உறுதி என ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

image: 

category:

News Group Category:

‘வாங்கி சாப்பிடுவதை நிறுத்தினால் விலை குறையும்’ சுப்ரீம் கோர்ட்டு யோசனை

Posted: 10 Jan 2014 11:20 AM PST

புதுடெல்லி

தீபாவளி பண்டிகை நேரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.100 ஆனது. சாமானிய மக்கள் வெங்காயம் வாங்கி சமைத்து சாப்பிட முடியாமல் கடும் வேதனை அடைந்தனர்.

அப்போது உணவுப்பொருள் பணவீக்கத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது என கூறி சுப்ரீம் கோர்ட்டில் விஷ்ணு பிரதாப்சிங் என்ற வக்கீல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வக்கீல் விஷ்ணு பிரதாப் சிங் வாதிடுகையில், ''அத்தியாவசியப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில் அரசு தவறி விட்டது. இதனால், சமூகத்தில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் சாப்பிட்டு உயிர் வாழும் உரிமையைப் பறிக்கிறது'' என கூறினார்.

ஆனால் நீதிபதிகள், ''நீங்கள் வெங்காயம் சாப்பிடுவதை இரண்டு மாதங்களுக்கு நிறுத்திவிடுங்கள். அப்போது அதன் விலை கட்டுக்குள் வந்துவிடும். இத்தகைய வழக்குகளால் எங்களுக்கு பணிச்சுமையை ஏற்றாதீர்கள். இத்தகைய வழக்குகளை விசாரிக்க மாட்டோம்'' என கூறி தள்ளுபடி செய்தனர்.
 

category:

News Group Category:

தேவயானி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி அமெரிக்க அதிகாரி 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

Posted: 10 Jan 2014 11:16 AM PST

புதுடெல்லி,

தேவயானி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி அமெரிக்க அதிகாரி 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

தேவயானி வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க அதிகாரி 48 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

மோதல் போக்கு

விசா மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பெண் தூதர் தேவயானி மீது அதிரடியாக அமெரிக்க கோர்ட்டு நேற்று குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து அவரை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நாடு திரும்புகிறார்.

தேவயானி மீது அமெரிக்கா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை, இரு தரப்பு ராஜ்ய உறவில் மேலும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

அதிகாரி மீது நடவடிக்கை

இந்த நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இயக்குனர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் ஒரு மூத்த அதிகாரிதான் தேவயானி வழக்கைக் கையாண்டு வந்தார் என்றும், அவர்தான் தேவயானி மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு காரணம் என்றும் மத்திய அரசு நம்புகிறது. மேலும், சர்ச்சைக்குரிய தேவயானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்சின் குடும்பம் இந்தியாவை விட்டு வெளியேறி, அமெரிக்கா செல்ல நடவடிக்கை எடுத்ததில் முக்கிய பங்கு இந்த அதிகாரிக்கு உண்டு என்றும் நம்பப்படுகிறது.

பதிலடி

இதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அவர் நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. தேவயானி மீது அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு இது பதிலடியாக அமைந்துள்ளது.
 

category:

News Group Category:

அய்யப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்காக சென்ற தமிழக போலீசாரின் நடவடிக்கையால் கேரள போலீசாருக்கு மகிழ்ச்சிதான் டி.ஜி.பி. ராமானுஜம் விளக்கம்

Posted: 10 Jan 2014 10:56 AM PST

சென்னை

அய்யப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்காக சென்ற தமிழக போலீசார் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகளுக்கு, டி.ஜி.பி.ராமானுஜம் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:–

பத்திரிகை செய்தி

கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் பாதுகாப்பு பணிகளில் இருந்து வந்த தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், பக்தர்களிடம் கெடுபிடியுடன் நடந்து கொண்டதாக கூறி, கேரள அரசு, தமிழ்நாடு காவல் துறையினரை திருப்பி அனுப்பி விட்டதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

கேரள காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் வகையில், அய்யப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட தமிழக காவல்துறையினர் தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மகிழ்ச்சியளிப்பதாக...

தமிழ்நாடு காவல்துறையினர் நிலக்கல் என்ற இடத்தில் பக்தர்கர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு பத்திரிகையில் வெளியான செய்தி தெரிவிக்கின்றது. தமிழ்நாடு காவல்துறையினர் நிலக்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு காவல்துறையினர் பம்பா மற்றும் அய்யப்பன் சன்னிதானத்தில் மட்டுமே பணிகளில் இருந்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக கேரள காவல் துறையினருடன் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்நாடு காவல்துறையினர் பணிபுரியும் விதம் கேரள காவல்துறையினருக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.

அறிவுரை

கேரள அரசு ஒவ்வொரு வருடமும், சபரிமலை கோவில் நடை திறக்கும் காலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணிக்காக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த குழு ஒன்றைக் கோரி வருகிறது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த சுமார் 90 காவலர்கள் கொண்ட நிறுமம் ஒன்று 1.12.2013 முதல் 19.1.2014 வரை இப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பணிக்காக காவலர்கள் அனுப்பி வைக்கப்படும் முன்பு, அவர்களுக்கு பக்தர்களிடம் எவ்வாறு அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லத்தியை எடுத்துச் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

மெட்ரோ ரெயில் திட்டத்தில் ரிலையன்ஸ் முத்திரை: சிவசேனா கடும் எதிர்ப்பு

Posted: 10 Jan 2014 10:35 AM PST

மும்பை

மும்பை புறநகர் பகுதியான காட்கோபரிலிருந்து அந்தேரி வழியாக வெர்சோவா வரையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட மும்பை மெட்ரோ ஒன் பிரவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டது. இதன்காரணமாக ரெயில் பெட்டிகளிலும், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ரிலையன்ஸ் மெட்ரோ என்ற முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரையை அப்புறப்படுத்தும்படி மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அந்த நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுபாஷ் தேசாய் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியில் இருந்து தான் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் எதற்காக ரிலையன்ஸ் மெட்ரோ என்று முத்திரையை பதிக்க வேண்டும்? மும்பை மெட்ரோ ஒன் என்று தான் முத்திரை பதிக்கப்பட வேண்டும். வேறு எந்த பெயரும் முத்திரையாக இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானை இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™