Daily Thanthi |
- காவலர் கால்பந்து போட்டி பதக்கம்–கோப்பையை வென்ற 22 காவல்துறையினருக்கு தலா ரூ.30 ஆயிரம் ஜெயலலிதா வழங்கினார்
- ரூ.9 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஆண், பெண் தங்கும் விடுதிகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்
- நடிகர் மயில்சாமியிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்
- ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
- ரகுராம் ராஜன் கருத்து பொருளாதார மந்தநிலைக்கு உள்நாட்டு நிலவரங்களே காரணம்
- 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவு எதிரொலி இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை எட்டின
- பங்குகளில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய 5 விகிதங்கள்
- குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன் சுட்டுக்கொலை தந்தை வெறிச்செயல்
- பணவீக்கத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் முதலீடு செய்வது எப்படி?
- விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் 8,041 டன் வெங்காயம் இறக்குமதி
| Posted: 09 Dec 2013 11:21 AM PST சென்னை 62–வது பி.என்.முல்லிக் அகில இந்திய காவலர் கால்பந்து போட்டியில், இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த 22 காவல்துறையினருக்கு தலா ரூ.30 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கால்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் நவம்பர் மாதம் 13–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை 2013–ம் ஆண்டிற்கான 62–வது பி.என். முல்லிக் நினைவு அகில இந்திய காவலர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து மத்திய காவல் படை உட்பட 30 காவல் அணிகள் கலந்துகொண்டன. இந்த அனைத்திந்திய காவலர் கால்பந்து போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் உதவி தளவாய் சார்லஸ் மேலாளராகவும், சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ பயிற்சியாளராகவும், 20 காவலர்கள் என மொத்தம் 22 காவல்துறையினர் கலந்துகொண்டனர். 62–வது பி.என்.முல்லிக் நினைவு அகில இந்திய காவலர் கால்பந்து போட்டியில் தமிழக காவல்துறையினர் சிறப்பாக விளையாடி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்று வெள்ளி பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர். இந்த வெற்றி தமிழக காவல் துறை வரலாற்றில் முதன் முறையானதாகும். தலா ரூ.30 ஆயிரம் அகில இந்திய அளவில் காவல்துறையினருக்காக நடைபெறும் 62–வது பி.என்.முல்லிக் நினைவு அகில இந்திய காவலர் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கம் மற்றும் கோப்பையை வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த 22 காவல்துறையினருக்கு தலா 30 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் வழங்கினார். அப்போது, ''அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடைபெற்ற அகில இந்திய காவலர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல் துறையினர் முதன் முறையாக பரிசினை வென்று இருக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாடு காவல் துறையினருக்கும், தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதோடு, மேலும், பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வெல்ல வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் கே.ராமானுஜம், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| Posted: 09 Dec 2013 11:12 AM PST சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில், தொழிலாளர்களுக்கு ரூ.9 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கட்டப்பட்டுள்ள இரண்டு தங்கும் விடுதிகளை காணொலிக்காட்சி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– 2 தங்கும் விடுதிகள் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஐந்து சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் பெரிய தொழில் மண்டலமாக விளங்கி வருகிறது. இந்தப் பகுதியில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள தொழிற் கூடங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், 2.01 ஏக்கர் நிலப்பரப்பில் 37,675 சதுர அடி பரப்பளவு கட்டுமானத்தில் 400 நபர்கள் தங்கும் வசதியுடன் ரூ.4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆண் பணியாளர்கள் தங்கும் விடுதி மற்றும் 1.85 ஏக்கர் நிலப்பரப்பில் 56,510 சதுர அடி பரப்பளவு கட்டுமானத்தில் 600 நபர்கள் தங்கும் வசதியுடன் ரூ.5 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி, என மொத்தம் ரூ.9 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு தங்கும் விடுதிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். குறைந்த செலவில் அனைத்து வசதிகள் இந்த இரண்டு விடுதிகளிலும் சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அறை, உணவு பரிமாறும் கூடம், குளியல் அறைகள், கழிவறைகள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகள், முதலுதவி மையம், பொழுது போக்கு அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய விடுதிகள் அமைக்கப்பட்டதின் மூலம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண்களும், பெண்களும் குறைந்த செலவில் அனைத்து வசதிகளும் கூடிய தங்கும் வசதி பெற்று பெரும் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச்செயலாளர் சி.வி.சங்கர், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
image: category: |
| நடிகர் மயில்சாமியிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் Posted: 09 Dec 2013 11:09 AM PST பூந்தமல்லி விருகம்பாக்கத்தில் நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு மிரட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நடிகர் மயில்சாமிக்கு மிரட்டல் தூள், தில், வருஷமெல்லாம்வசந்தம், பட்டத்துயானை உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் மயில்சாமி. சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், நேற்றுமுன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அதில் பேசிய மர்ம நபர் 'நீங்கள் எனக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்' என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார். விசாரணை இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைச்சுவை நடிகர் மயில்சாமியிடம் செல்போனில் பணம் கேட்டு மிரட்டியது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| Posted: 09 Dec 2013 10:57 AM PST சென்னை ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதற்கு வசதியாக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம்., அந்தந்த மாவட்ட வரைபடம் ஆகியவை கிழியாத அளவுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்தவும், எந்த ஒரு குழந்தையும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்று எண்ணியும் பள்ளிக்கூடம் செல்வதற்கு தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறார். இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சரியான முறையில் மாணவர்களுக்கு கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். சபீதா உத்தரவுப்படி சலுகைகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அடிக்கடி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தி கேட்டறிகிறார். குறைகள் இருந்தால் அவ்வப்போது நிவர்த்தி செய்கிறார். வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த மாவட்ட வரைபடம் பெரிய அளவில் கரும்பலகை அருகே போடும் அளவுக்கு வழங்கப்பட உள்ளது. அவை அனைத்தும் அரசியல் வரைபடம் ஆகும். இந்த வரைபடம் வள வளப்பான தாளில் கிழிபடாத அளவுக்கு சிறப்பாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சடிக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு 3 வரைபடம் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்புகளுக்கு மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 741 வரைபடங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள் விநியோகிக்கப்பட இருக்கின்றன. image: category:Tagging: |
| ரகுராம் ராஜன் கருத்து பொருளாதார மந்தநிலைக்கு உள்நாட்டு நிலவரங்களே காரணம் Posted: 09 Dec 2013 09:27 AM PST புதுடெல்லி, இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு உள்நாட்டு நிலவரங்களே காரணம் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் சிட்டி பேங்க் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது இத்தகவலை வெளியிட்டார். வளர்ச்சி கடந்த 2002 மற்றும் 2012–ஆம் ஆண்டுகளுக்கிடையில் நாட்டின் பொருளாதாரத்தில் சராசரியாக 8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. இது தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. உள்நாட்டு நிலவரங்களே இதற்கு காரணம் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ராஜனின் கருத்து அடிப்படையில் சிட்டி பேங்க் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ''பொருளாதார மந்தநிலைக்கு சலுகை திட்டங்களை நீக்கியது உள்ளிட்ட உள்நாட்டு நிகழ்வுகளே காரணமாகும். சர்வதேச பொருளாதாரத்தின் பங்கு 33 சதவீதமாகத்தான் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகை திட்டங்களால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதனால் பணவீக்கம் உயர்ந்து மத்திய அரசின் நிதி பற்றாக்குறையும் மிகவும் அதிகரித்துள்ளது'' என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் கடந்த 2008–ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் உருக்குலைந்தது. இதனையடுத்து, 2008–09–ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி மூன்று முறை சலுகை திட்டங்களை வழங்கினார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் ஏற்றுமதி குறைந்தது. அதேசமயம், இறக்குமதி உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 4.8 சதவீதமாக உயர்ந்தது. தங்கம் இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையிலும் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டன. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.1 சதவீதமாக குறைந்தது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 4.5 சதவீதமாக இருந்தது. image: category: |
| 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவு எதிரொலி இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை எட்டின Posted: 09 Dec 2013 09:24 AM PST இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு மும்பை நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன. இதனையடுத்து, திங்கள்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' வரலாறு காணாத அளவிற்கு 21,326.42 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' வர்த்தகத்தின் இடையே எப்போதும் இல்லாத அளவிற்கு 6,415.25 புள்ளிகளாக உயர்ந்தது. ஆக, இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் நேற்று புதிய உச்சத்தை எட்டின. சட்டசபை தேர்தல் 4 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களை பா.ஜனதா கைப்பற்றியது. எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை வைத்து பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு வருவது நாட்டின் பொருளாதாரத்திற்கும், பங்கு வியாபாரத்திற்கும் சாதகமான அம்சம் என சில பங்கு வர்த்தக தரகு நிறுவனங்களும், நிபுணர்களும் கருதுகின்றனர். அதேசமயம், யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே நடவடிக்கையைத்தான் எடுப்பார்கள் என்பது இதர ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி மாநில சட்டசபை தேர்தல் முடிவு எதிரொலியால் 'சென்செக்ஸ்' ஒரு கட்டத்தில் 487.21 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை விரைவில் குறைக்கலாம் என்ற அச்சப்பாடு மீண்டும் தலைதூக்கியது. இதனால் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறையும். இந்நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அமெரிக்க பொருளாதார நிலவரத்தால் சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. ரூபாய் வெளிமதிப்பு உயர்ந்தது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு 61.14–ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை அன்று இது 61.42–ஆக இருந்தது. ஆக, ஒரே நாளில் ரூபாய் மதிப்பு 28 காசு உயர்ந்தது. ரூபாய் மதிப்பு உயர்வதால் கச்சா எண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைந்து வருகிறது. சீனாவின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. 12 துறைகள் இதுபோன்ற காரணங்களால் மொத்தமுள்ள 13 துறைகளில் 12 துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக பொறியியல், வங்கி, ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் 95 நிறுவனங்களின் பங்கு விலை 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சேசா ஸ்டெர்லைட், எல்&டி, மாருதி சுசுகி, ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., விப்ரோ, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எம்&எம் உள்ளிட்ட 26 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 329.89 புள்ளிகள் அதிகரித்து 21,326.42 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 21,483.74 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 21,282.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்கு சந்தை தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 104 புள்ளிகள் உயர்ந்து 6,363.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,415.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 6,345 புள்ளிகள் வரையிலும் சென்றது. நேற்று முதலீட்டாளர்கள் பங்குகளின் மதிப்பு ரூ.75,000 கோடி உயர்ந்தது. image: category: |
| பங்குகளில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய 5 விகிதங்கள் Posted: 09 Dec 2013 09:21 AM PST நாட்டின் பங்கு வியாபாரத்தில் மீண்டும் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளதால் பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளது. அதேசமயம், சில நிறுவனங்களின் பங்கு விலை குறைவாக உள்ளது. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு முன்னர் அவற்றின் செயல்திறன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்வரும் ஐந்து விகிதங்கள் வாயிலாக ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாமா, கூடாதா என்பது குறித்து ஓரளவிற்கு முடிவுக்கு வர முடியும். 1. விலை – பங்கு சம்பாத்திய விகிதம் (பி.இ. விகிதம்) ஒரு நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது பங்கின் விலை எத்தனை மடங்காக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விலை – பங்குச் சம்பாத்திய விகிதம் (பி.இ. ரேஷியோ) உதவுகிறது. ஒரு நிறுவனம் ஈட்டும் லாபத்துடன் ஒப்பிடும்போது, அந்நிறுவனப் பங்கை வாங்க முதலீட்டாளர் கொடுக்கும் விலை நியாயமானதுதானா என்பதை இந்த விகிதம் தெளிவுப்படுத்துகிறது. பி.இ. விகிதத்தை கணக்கிடுவது எப்படி? பங்கின் விலையை ஒரு பங்குச் சம்பாத்தியத்தால் வகுப்பதால் இது கிடைக்கிறது. ஒரு பங்குச் சம்பாத்தியம் என்றால் என்ன? முன்னுரிமை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு வழங்கியது போக, ஒரு நிறுவனம் ஈட்டும் நிகர லாபத்தை, மொத்த பங்குகளால் வகுப்பதால் இது கிடைக்கிறது. விலை – பங்குச் சம்பாத்திய விகிதம் எதை குறிக்கிறது? ஒரு நிறுவனம் ஈட்டும் நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை எத்தனை மடங்கு என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பி.இ. விகிதம், அந்நிறுவனம் ஈடுபட்டு வரும் துறையின் பொதுவான பி.இ. விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், அந்த நிறுவன பங்கின் விலை அதிகமாக உள்ளது என்று பொருள். எதிர்காலத்தில் அதிக லாபம் ஈட்டும் என்ற எதிர்பார்ப்பினால் இந்நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதையடுத்து விலை மிகவும் உயர்ந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய நிறுவனப் பங்குகள் விலை சிறிதளவே உயர வாய்ப்புள்ளது. அதேசமயம், சில நிறுவனங்களின் பி.இ. விகிதம், நிறுவனம் ஈடுபட்டு வரும் துறையின் சராசரி பி.இ. விகிதத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இந்நிறுவனப் பங்குகள் விலை நன்கு உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிறுவனத்துக்கு எதிர்காலத்தில் வளமான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும். 2. விலை – புத்தக மதிப்பு விகிதம் (பி.பீ.வி. விகிதம்) பங்கின் விலையை புத்தக மதிப்புடன் ஒப்பிடுவது விலை – புத்தக மதிப்பு விகிதம் (பி.பீ.வி. விகிதம்) புத்தக மதிப்பு என்பது, ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ஆகும். அதாவது, கடன்கள் நீங்கலாக உள்ள மொத்த சொத்து மதிப்பு ஆகும். பி.பீ.வி. விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? பங்கின் விலையை, ஒரு பங்கிற்கான புத்தக மதிப்பால் வகுப்பதால் இது கிடைக்கிறது. ஒரு நிறுவனப் பங்கின் பி.பீ.வி. விகிதம் 1–க்கு குறைவாக இருந்தால், நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பைக் காட்டிலும் பங்கின் விலை குறைவாக உள்ளது என்று பொருள். குறிப்பாக, வங்கி பங்குகளை வாங்குவதற்கு இந்த விகிதத்தை பயன்படுத்தலாம். மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க இந்த விகிதம் பொருத்தமானது அல்ல. 3. விலை – விற்பனை விகிதம் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை எத்தனை மடங்கு என்பதை விலை – விற்பனை விகிதம் எடுத்துக்காட்டுகிறது. இந்த விகிதம் குறைவாக உள்ள பங்குகள் முதலீடு செய்வதற்கு ஏற்றவையாக கருதப்படுகிறது. அடிப்படை கட்டமைப்பு, சிமெண்டு துறை பங்குகளில் முதலீடு செய்ய இந்த விகிதத்தை பயன்படுத்தலாம். இந்த விகிதம் லாபத்தை எடுத்துக்காட்டாது. எனவே, இதர விகிதங்களையும் இதனுடன் ஒப்பிட்டு பார்ப்பது சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. 4. கடன் – பங்கு மூலதன விகிதம் ஒரு நிறுவனத்தின் பங்கு மூலதனத்துடன் ஒப்பிடும்போடு, அதற்கு கடன் எந்த அளவிற்கு உள்ளது என்பதை கடன் – பங்கு மூலதன விகிதம் எடுத்துக்காட்டுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.750 கோடியாகவும், மொத்த நீண்ட கால கடன் ரூ.1,500 கோடியாகவும் உள்ள நிலையில், கடன் – பங்கு மூலதன விகிதம் 2 ஆகும். இந்த விகிதம் அதிகமாக (15–20–க்கு மேல்) உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இத்தகைய நிறுவனங்களின் வட்டிச் செலவினம் அதிகமாக இருக்கும். எனவே, ஈட்டும் லாபம் குறையும். 5. சொத்து – விற்றுமுதல் விகிதம் மொத்த சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது, வருவாய் எந்த அளவிற்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் அளவுகோல் சொத்து – விற்றுமுதல் விகிதமாகும். ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,000 கோடியாகவும், வருவாய் ரூ.2,500 கோடியாகவும் உள்ள நிலையில், சொத்து – விற்றுமுதல் விகிதம் 2.5 மடங்கு ஆகும். இந்த விகிதம் அதிகமாக இருப்பது நிறுவனத்தின் செயல்திறனை வெளிப்படுத்தும் அம்சமாகும். இருப்பினும், குறைந்த அளவு லாபம் ஈட்டும் நிறுவனங்களிலும் இந்த விகிதம் அதிகமாக இருக்கலாம். image: category: |
| குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன் சுட்டுக்கொலை தந்தை வெறிச்செயல் Posted: 09 Dec 2013 09:11 AM PST திருவண்ணாமலை செங்கத்தில் குடித்து விட்டு தகராறு செய் ததை தட்டிக்கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தையை போலீ சார்தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– குடித்துவிட்டு தகராறு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமனந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செந்தாமரை விவசாயி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு சங் கீதா (வயது20) என்ற மகளும் திருப்பதி (19) என்ற மகனும் உள்ளனர். செந்தாமரைக்கு மது குடிக் கும் பழக்கம் உண்டு தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். வழக் கம்போல நேற்று இரவும் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். துப்பாக்கியால் சுட்டார் அப்போது வீட்டில் இருந்த மகள் சங்கீதா தந்தையை தட் டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தா மரை வீட்டில் இருந்த துப்பாக் கியை எடுத்து அதன் பின் பகுதியால் சங்கீதாவை தாக்கி இருக்கிறார். இதைபார்த்த மகன் திருப்பதி சென்று தந்தையுடன் தக ராறு செய்துள்ளார். இத னால் மேலும் ஆத்திரம் அடைந்த செந்தாமரை மகன் என்றும் பார்க்காமல் துப் பாக்கி£ல் திருப்பதியை நோக்கி சுட்டார். குண்டு பாய்ந்து சாவு இதில் திருப்பதியின் மார் பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதை பார்த்த தாய் காமாட்சி. சகோ தரி சங்கீதா ஆகியோர் அதிர் ச்சி அடைந்து கதறி அழுத னர். இந்த சம்பவம் குறித்து செந்தாமரையின் மனைவி காமாட்சி செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாமன் ராஜா மற்றும் போலீசார் சென்று திருப்பதியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை துப்பாக் கியால் சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக் கிறது. திருவண்ணாமலை மாவட் டத்தில் தற்போது கள்ளத்துப் பாகிகள் நடமாட்டம் அதிக ரித்து வருகிறது. மலைப் பகுதி களில் மட்டும் பயன்படுத்தப் பட்ட கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கிராமப்புறங்களி லும் சாதாரணமாக பயன் படுத்தப்படுகிறது. இதனால் தந்தையே மகனை சுட்டுக்கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. category:Tagging:News Group Category: |
| பணவீக்கத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் முதலீடு செய்வது எப்படி? Posted: 09 Dec 2013 09:11 AM PST பிரசாந்த் மகேஷ் இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு வங்கி மற்றும் நிறுவனங்களின் டெபாசிட்டுகளில் முதலீடு செய்பவர்கள் பணவீக்க விகிதத்தை காட்டிலும் 1 சதவீதம் அதிகமாக ஆதாயம் ஈட்ட விரும்புகின்றனர். இவர்களின் ஆவலை பூர்த்தி செய்திடும் வகையில் இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் சார்ந்த தேசிய சேமிப்பு பத்திரங்களை வெளியிடப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கம் இவ்வகை பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி விகிதத்துடன் சில்லரை விலை பணவீக்கமும் சேர்த்து வட்டியாக வழங்கப்படும். அரையாண்டிற்கு ஒரு முறை இந்த வட்டி அசலுடன் சேர்க்கப்படும். ஐ.ஐ.என்.எஸ்.எஸ்–சி என்றழைக்கப்படும் இவ்வகை சேமிப்பு பத்திரங்களுக்கான முதிர்வு காலம் 10 ஆண்டுகளாகும். இந்த பத்திரத்தின் முகமதிப்பு ரூ.5,000 ஆகும். நீங்கள் ஒரு பத்திரத்தை கூட வாங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.5 லட்சம் ஆகும். நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். சில்லரை விலை பணவீக்கம் 10 சதவீதமாக இருக்கும் நிலையில், உங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் 11.50 சதவீதம் ஆகும் (10 சதவீதம் + 1.50 சதவீதம்). வட்டி விகிதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு கிடைக்கும் வட்டி ரூ.5,750 ஆகும். முதலீடு இந்நிலையில், சில்லரை விலை பணவீக்கம் 10.5 சதவீதமாக உயரும் நிலையில் இரண்டாவது அரையாண்டில் கிடைக்கும் வட்டி விகிதம் 12 சதவீதம் ஆகும். அதாவது வட்டி வருமானம் ரூ.6,345 கிடைக்கும். ஆக ரூ.1 லட்சம் முதலீட்டின் மதிப்பு ஓர் ஆண்டு இறுதியில் ரூ.1,12,095–ஆக அதிகரிக்கிறது. இதனடிப்படையில் உங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் 11.21 சதவீதம் ஆகும். அதேசமயம், வங்கி டெபாசிட்டுகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு கிடைக்கும் ஆதாயம் 9 முதல் 9.50 சதவீதம் வரைதான் உள்ளது. ஆக, இவ்வகை சேமிப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு வங்கி டெபாசிட்டுகளை காட்டிலும் அதிக ஆதாயம் கிடைக்கிறது. வங்கி டெபாசிட் அதேசமயம், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியும். ஆனால் பணவீக்கம் சார்ந்த சேமிப்பு பத்திரங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை மதிப்பிட முடியாது. பணவீக்கத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப ஆதாயம் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். பணவீக்கம் சார்ந்த கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதால் பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள முடியும். அதேசமயம், வருமான வரிக்கு உட்படாத வருமானத்தை உடையவர்கள் மற்றும் குறைந்த அளவு வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த சேமிப்பு பத்திரங்கள் முதலீட்டிற்கு ஏற்றவை ஆகும். அதிக வருமான வரி செலுத்துவர்களுக்கு உகந்தது அல்ல என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முதிர்வு காலம் வரை முதலீட்டை தக்க வைப்பவர்களுக்கு மட்டுமே இது சிறந்தது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் 8,041 டன் வெங்காயம் இறக்குமதி Posted: 09 Dec 2013 08:49 AM PST விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் செப்டம்பர் 1–ந் தேதி முதல் நவம்பர் 13–ந் தேதி வரையிலான காலத்தில் 8,041 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய உணவு துறை அமைச்சர் கே.வி. தாமஸ் பாரளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இதனை தெரிவித்தார். ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்தது. இதனையடுத்து வெங்காய வரத்து குறைந்து விலை சந்தையில் அதிகரித்தது. எனவே விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் சீனா, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த மே மாதத்தில் காய்கறிகள் விலை 5.21 சதவீதம் உயர்ந்திருந்தது. இந்த விலை உயர்வு செப்டம்பர் மாதத்தில் 89.37 சதவீதமாகவும், அக்டோபர் மாதத்தில் 78.38 சதவீதமாக அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களில் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வே மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பிற்கு காரணம் என மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் இதனை தெரிவித்தார். உற்பத்தி பாதிப்பு மற்றும் பண்டிகை காலத்தில் தேவைப்பாடு அதிகரித்தது போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளது என கே.வி. தாமஸ் மேலும் தெரிவித்தார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |