Daily Thanthi |
- மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் தேர்தல் தோல்வி மிக மிக ஏமாற்றம் அளிக்கிறது சோனியா காந்தி பேட்டி
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது
- கோவை கவுண்டம்பாளையத்தில் பங்களாவில் விபசாரத்தில் ஈடுபட்ட துணை நடிகைகள் 4 பேர் மீட்பு தப்பி ஓடிய புரோக்கருக்கு வலைவீச்சு
- குற்றப்பின்னணி உடையவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிட முடியாது விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டது
- ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தார், அம்லா விவியன் ரிச்சர்ட்சின் 28 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2–வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்
- தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் டோனி சொல்கிறார்
- ஆன்மீக சிந்தனை (09-12-2013)
- கன்னித்தீவு (09-12-2013)
- ஆண்டியார் (09-12-2013)
| மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் தேர்தல் தோல்வி மிக மிக ஏமாற்றம் அளிக்கிறது சோனியா காந்தி பேட்டி Posted: 08 Dec 2013 12:07 PM PST புதுடெல்லி, தேர்தல் தோல்வி மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக தெரிவித்தார். 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மிக மிக ஏமாற்றம் ''தேர்தல் முடிவுகள் கட்சிக்கு மிக மிக ஏமாற்றத்தை அளித்து உள்ளது. மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். அதே நேரத்தில் இந்த முடிவுகள், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் பாராளுமன்ற தேர்தல், இதில் இருந்து மாறுபட்டது. தோல்விக்கான காரணங்கள் குறித்து மிக ஆழமாக சுயபரிசோதனை செய்வோம். அதன் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவும், கட்சியின் செயல்பாட்டை மாற்றி அமைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இல்லையென்றால் அவர்கள் இதுபோன்ற தீர்ப்பினை அவர்கள் வழங்கி இருக்க மாட்டார்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு பாராட்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளே காங்கிரசின் தோல்விக்கு காரணமாகும். தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை பாராட்டுகிறோம். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி பாராட்டுக்கு உரியது. பாரம்பரிய கட்சிகள் செயல்பட்ட முறையில் இருந்து அவர்கள் மாறுபட்டு திரளான மக்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். அவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்று நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வருங்காலத்தில் செயல்படுவோம்.'' இவ்வாறு சோனியா கூறினார். ராகுல் பிரதமர் வேட்பாளரா? டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பேட்டி அளித்த சோனியாவுடன் அவருடைய மகனும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் காந்தியும் இருந்தார். ''பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருப்பதைப்போல் காங்கிரசிலும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?'' என்று சோனியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''உரிய சந்தர்ப்பம் வரும்போது காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம்'' என்றார். முன்னதாக ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்று கேட்டதற்கு பதில் அளிக்க சோனியா தயங்கினார். பின்னர் பதில் அளித்த சோனியா, ''அது குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும்'' என்று தெரிவித்தார். ஜெயந்தி நடராஜன் முன்னதாக, மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கூறும்போது, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தி மீது பழி போடக்கூடாது என்றார். ''காங்கிரஸ் தனி நபர் கட்சி அல்ல. தோல்விக்கு அனைவருமே கூட்டாக பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கருத்து தெரிவித்த அவர், ''தோல்விக்காக காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எங்கே தவறு நடந்தது என்பதை கண்டறிய வேண்டும்'' என்றும் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ''கடந்த 1998–99–ம் ஆண்டில் மாநில தேர்தல்களில் வென்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. அதேபோல் 2003–ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் வென்ற பா.ஜனதா பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. அதேபோல் மீண்டும் நடக்கும் என்று நம்புவதாக'' தெரிவித்தார். நரேந்திர மோடி அலையா? டெல்லி தேர்தல் முடிவு வியப்பை அளிப்பதாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், டெல்லி மாநில மேலிட பொறுப்பாளருமான ஷகீல் அக்தர் கூறினார். 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நாடு முழுவதும் வீசும் அலைதான் காரணம் என்று கூறப்படுவதை காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி நிராகரித்தார். image: category:Tagging: |
| தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது Posted: 08 Dec 2013 11:44 AM PST டர்பன், டர்பனில் நேற்று நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. யுவராஜ்சிங் நீக்கம் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று நடந்தது. கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட படுதோல்வி எதிரொலியாக இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. யுவராஜ்சிங், மொகித் ஷர்மா, புவனேஷ்வர்குமார் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரஹானே, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டனர். இதில் யுவராஜ்சிங் முதுகுபிடிப்பால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அணியில் ஒரே ஒரு மாற்றமாக வெய்ன் பார்னலுக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த வெரோன் பிலாண்டர் இடம்பிடித்தார். முந்தைய நாள் பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், ஆட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. இந்த முறையும் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டி காக் மீண்டும் சதம் இதையடுத்து குயின்டான் டி காக்கும், அம்லாவும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர். மழை மேகமான சீதோஷ்ண நிலையுடன், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக காணப்பட்ட போதிலும் நமது பவுலர்களால் எந்த தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. நங்கூரம் போல் நிலை கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்க ஜோடியை, எப்படி பிரிப்பது என்பது தெரியாமல் தடுமாறினார்கள். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுத்து அணியின் ஸ்கோரை சீராக நகர்த்திய தென் ஆப்பிரிக்க வீரர்கள், லாவகமான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டனர். அபாரமாக ஆடிய டி காக் முதல் ஆட்டத்தை போலவே மீண்டும் சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு இது 3–வது சதமாகும். ஒரு மாதத்திற்குள் இந்த மூன்று சதங்களையும் அவர் புசித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்கோர் 194 ரன்களை (35.1 ஓவர்) எட்டிய போது, குயின்டான் டி காக் 106 ரன்களில் (118 பந்து, 9 பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். முதல் விக்கெட்டுக்கு(194 ரன்) தென்ஆப்பிரிக்கா கூட்டணி திரட்டிய 2–வது அதிகபட்சமாக இது அமைந்தது. 2000–ம் ஆண்டு கொச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கிப்ஸ்–கிர்ஸ்டன் இணைந்து 235 ரன்கள் எடுத்ததே தென்ஆப்பிரிக்க தொடக்க ஜோடியின் சிறந்த ஸ்கோராக இந்த நாள் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. 280 ரன்கள் குவிப்பு டி காக் வெளியேற்றத்திற்கு பிறகு வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் (3 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதனால் 300 ரன்களை எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவின் ரன்வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. மறுமுனையில் நிதானமாக ஆடிய அம்லா தனது 12–வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவுக்கு எதிராக அவரது 2–வது சதம் இதுவாகும். 100 ரன்கள் எடுத்த நிலையில் (117 பந்து, 8 பவுண்டரி) அம்லா, முகமது ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் சிக்கினார். அடுத்த சில விக்கெட்டுகளும் சீக்கிரம் சரிந்ததால், எதிரணியின் ரன்வேட்டை கடைசி கட்டத்தில் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் இறுதி ஓவரில் மட்டும் ஒட்டுமொத்தமாக கோட்டை விட்டு விட்டனர். 49–வது ஓவரை வீசிய உமேஷ்யாதவின் பந்து வீச்சில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உள்பட 20 ரன்கள் பறந்தது. இதன் உதவியுடன் தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 280 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. வீழ்ந்தது இந்தியா அடுத்து 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் மறுபடியும் படுமோசமாக விளையாடி வெறுப்பேற்றி விட்டனர். ஸ்டெயின், சோட்சோப், மோர்னே மோர்கல், பிலாண்டர் ஆகிய மிரட்டல் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் நமது பேட்ஸ்மேன்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்களான ஷிகர் தவான் (0), விராட் கோலி (0), ரோகித் ஷர்மா (19 ரன்) முதல் 8 ஓவர்களுக்குள் நடையை கட்டினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு இந்திய அணியின் நிலைமை கந்தலாகி விட்டது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 36 ரன்கள் எடுத்தார். வெறும் 35.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 146 ரன்களில் சுருண்டு போனது. இதனால் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. சோட்சோப் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். சதம் அடித்த குயின்டான் டி காக் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடரும் சோகம் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 6 ஒரு நாள் போட்டி கோப்பைகளை வென்ற பிறகு இந்திய அணி இழக்கும் முதல் ஒரு நாள் தொடர் இதுவாகும். அது மட்டுமின்றி தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை எந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வசப்படுத்தியதில்லை என்ற இந்தியாவின் நீண்ட கால பரிதாபமும் தொடருகிறது. இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 11–ந்தேதி செஞ்சுரியனில் நடக்கிறது. ஸ்கோர் போர்டு தென்ஆப்பிரிக்கா டி காக் (சி) ரோகித் (பி) அஸ்வின் 106 அம்லா (சி) டோனி (பி) முகமது ஷமி 100 டிவில்லியர்ஸ் (ஸ்டம்பிங்) டோனி (பி) ஜடேஜா 3 டுமினி (ரன்–அவுட்) 26 மில்லர் எல்.பி.டபிள்யூ (பி) முகமது ஷமி 0 காலிஸ் (பி) முகமது ஷமி 10 மெக்லரன் (நாட்–அவுட்) 12 பிலாண்டர் (நாட்–அவுட்) 14 எக்ஸ்டிரா 9 மொத்தம் (49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 280 விக்கெட் வீழ்ச்சி: 1–194, 2–199, 3–233, 4–234, 5–249, 6–255 பந்து வீச்சு விவரம் உமேஷ் யாதவ் 6–0–45–0 முகமது ஷமி 8–0–48–3 இஷாந்த் ஷர்மா 7–0–38–0 அஸ்வின் 9–0–48–1 ரெய்னா 6–0–32–0 கோலி 3–0–17–0 ஜடேஜா 10–0–49–1 இந்தியா ரோகித் ஷர்மா (சி) அம்லா (பி) சோட்சோப் 19 தவான் (சி) டுமினி (பி) ஸ்டெயின் 0 கோலி (சி) டி காக் (பி) சோட்சோப் 0 ரஹானே (சி) டி காக் (பி) மோர்கல் 8 ரெய்னா (சி) மில்லர் (பி) மோர்கல் 36 டோனி (சி) டி காக் (பி) பிலாண்டர் 19 ஜடேஜா (சி) டிவில்லியர்ஸ் (பி) சோட்சோப் 26 அஸ்வின் (சி) டி காக் (பி) ஸ்டெயின் 15 முகமது ஷமி (பி) சோட்சோப் 8 உமேஷ் யாதவ் (பி) ஸ்டெயின் 1 இஷாந்த் ஷர்மா (நாட்–அவுட்) 0 எக்ஸ்டிரா 14 மொத்தம் (35.1 ஓவர்களில் ஆல்–அவுட்) 146 விக்கெட் வீழ்ச்சி:– 1–10, 2–16, 3–29, 4–34, 5–74, 6–95, 7–133, 8–145, 9–146 பந்து வீச்சு விவரம் ஸ்டெயின் 7–1–17–3 சோட்சோப் 7.1–0–25–4 மோர்னே மோர்கல் 6–0–34–2 பிலாண்டர் 6–1–20–1 டுமினி 5–0–20–0 மெக்லரன் 4–0–25–0 image: category:Tagging: |
| Posted: 08 Dec 2013 11:33 AM PST துடியலூர் கோவை அருகே உள்ள துடியலூரில் வாடகை பங்களாவில் துணை நடிகைகளை விபசாரத்தில் ஈடுபட்ட துணை நடிகைகள் 4 பேரை போலீசார் மீட்டுள்ளனர். தப்பி ஓடிய புரோக்கரை தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பங்களாவில் விபசாரம் கோவை கவுண்டம்பாளையம் அருகில் உள்ள தென்றல் நகர் பகுதியில் தனி பங்களாவில் விபச்சாரம் நடப்பதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா, சப்–இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், ராஜேந்திர பிரசாத், நாகரத்தினம், கனிமொழி, பாக்கியலட்சுமி ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தென்றல் நகரில் உள்ள ஒரு பங்களா அருகே போலீசார் சென்றபோது, அங்கிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும், தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பங்களாவுக்குள் சென்று பார்த்தபோது அங்கு 4 இளம்பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. துணை நடிகைகள் மீட்பு அதைத்தொடர்ந்து போலீசார் அந்த 4 இளம்பெண்களையும், அங்கிருந்த 3 ஆண்களையும் பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் மும்பையை சேர்ந்த லக்ஷனா (வயது 20), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆர்த்தி (20), ரீனா மற்றும் (19), நபியா (20) என்பதும், சினிமாவில் துணை நடிகர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் அவர்களுடன் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் துணை நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கோவை பூக்கடை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பாபு (41) என்ற புரோக்கரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.15 ஆயிரம் மாத வாடகைக்கு பங்களா எடுத்து, செல்போன் மூலம் இளைஞர்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி ஆயிரக்கணக்கில் சம்பாதித்தது தெரியவந்தது. கடும் நடவடிக்கை இது குறித்து போலீசார் கூறும்போது, 'துடியலூர் பகுதியில் விபசாரம் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாராவது விபசாரம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பங்களா வீடுகளை வாடகை கேட்டு வருபவர்களை நன்கு விசாரித்து வாடகைக்கு கொடுக்க வேண்டும்' என்றனர். image: category: |
| Posted: 08 Dec 2013 11:29 AM PST புதுடெல்லி, குற்றப்பின்னணி உடையவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிட முடியாது என்று நேற்று ஒருமனதாக சங்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்டு இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஒலிம்பிக் சாசனத்தின் படி நடத்தப்படாததால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சஸ்பெண்டு செய்தது. குற்ற வழக்கில் சிக்கியவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிட முடியாது என்று அதன் சங்க விதிமுறையில் திருத்தம் செய்தால் மட்டுமே சஸ்பெண்டு நீக்கப்படும் என்று ஐ.ஓ.சி. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அதனை ஏற்காமல் அடம் பிடித்து வந்தது. பொதுக்குழு கூட்டம் வருகிற 10–ந் தேதிக்குள் தங்களின் அறிவுரையை ஏற்று விதிமுறையில் திருத்தம் செய்யாவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை திரும்ப பெற வருகிற 10 மற்றும் 11–ந் தேதிகளில் நடைபெறும் ஐ.ஓ.சி. செயற்குழு கூட்டத்தில் சிபாரிசு செய்யப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய கயாகிங் கனோயிங் சங்க (படகு விளையாட்டு) தலைவர் ரகுநாதன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் 134 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஐ.ஓ.சி.யின் அறிவுறுத்தியபடி குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒருமனதாக விதிமுறையில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. விதிமுறையில் திருத்தம் கூட்டம் முடிந்த பின்னர் ரகுநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் குற்றப்பின்னணி உடையவர்கள் போட்டியிட தடை விதிக்கும் விதிமுறையை அமல்படுத்த ஒருமனதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சஸ்பெண்டு செய்யப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அபய்சிங் சவுதாலா, செயலாளர் லலித் பானோட் ஆகியோர் மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூட்டத்தில் தெரிவித்து விட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை பிப்ரவரி 9–ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. சஸ்பெண்டை 7 முதல் 10 நாட்களுக்குள் திரும்ப பெற்று விடும் என்று நம்புகிறோம். இனிமேல் ஐ.ஓ.சி. தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் என்ன சொன்னார்களோ அதனை நாங்கள் செய்து விட்டோம். அபய்சிங் சவுதாலா, லலித் பானோட் ஆகியோர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை. ஐ.ஓ.சி. நமது விதிமுறை திருத்த மசோதாவை ஏற்ற பிறகு தேர்தலுக்கு முன்னர் இருவரும் பதவியை ராஜினாமா செய்யலாம். ஐ.ஓ.சி. சொல்கிறபடி நாங்கள் நடப்போம். ஐ.ஓ.சி.யின் அறிவுவரையின் படி செயல்பட காத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். image: category: |
| Posted: 08 Dec 2013 11:14 AM PST டர்பன், இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் 59 ரன்களை எட்டிய போது, 4 ஆயிரம் ரன்களை மின்னல் வேகத்தில் கடந்த வீரர் என்ற உலக சாதனைக்கு தென்ஆப்பிரிக்காவின் அம்லா சொந்தக்காரர் ஆனார். சிகரத்தில் அம்லா டர்பனில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 31 வயதான ஹஷிம் அம்லா 100 ரன்கள் குவித்தார். அவர் 59 ரன்களை எட்டிய போது அவரது ஒட்டுமொத்த ரன் கணக்கு 4 ஆயிரத்தை தொட்டது. இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அம்லா அதில் 81–வது இன்னிங்சில் களம் இறங்கி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் 42 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது 88–வது இன்னிங்சில் 4 ஆயிரம் ரன்களை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அவர் இச்சாதனையை 1985–ம் ஆண்டு படைத்திருந்தார். அவரது 28 ஆண்டு கால சாதனை இப்போது அம்லா வசம் ஆகியுள்ளது. அம்லா இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12 சதம், 23 அரைசதம் உள்பட 4041 ரன்கள் (சராசரி 53.88) சேர்த்துள்ளார். 4 ஆயிரம் ரன்களை துரிதமாக கடந்தவர்களின் சாதனை பட்டியலில் 3–வது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி உள்ளார். அவர் தனது 93–வது இன்னிங்சில் 4 ஆயிரம் ரன்களை தாண்டியிருந்தார். மேலும் சில சாதனைகள் இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட மேலும் சில சாதனைகள் விவரம் வருமாறு:– *தென்ஆப்பிரிக்க வீரர் 20 வயதான குயின்டான் டி காக் இந்த ஆட்டத்திலும் சதம் (106 ரன்) அடித்தார். ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியிலும் செஞ்சுரி (135 ரன்) கண்டிருந்தார். இதன் மூலம் தொடர்ந்து இரு ஆட்டங்களில் சதம் விளாசிய 3–வது தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை டி காக் பெற்றுள்ளார். 2002–ல் கிப்சும் (வங்காளதேசம், இந்தியா, கென்யாவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதம்) 2010–ம் ஆண்டில் அம்லாவும் (ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 2 சதம்) இதற்கு முன்பு அடுத்தடுத்து சதம் அடித்த தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர். *இந்த ஆட்டத்தில் அம்லாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேகரித்தனர். டர்பன் மைதானத்தில் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2002–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்–மேத்யூ ஹைடன் இணை 170 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோராக இருந்தது. *இந்த மோதலில் தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் டி காக், அம்லா இருவரும் சதத்தை பதிவு செய்தனர். ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதத்தை ருசிப்பது இது 27–வது நிகழ்வாகும். அதே சமயம் தென்ஆப்பிரிக்க தரப்பில் தொடக்க ஜோடி சதம் காண்பது இது 2–வது முறையாகும். இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு கொச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் கேரி கிர்ஸ்டனும் (115 ரன்), கிப்சும் (111 ரன்) சதம் எடுத்திருந்தனர். image: category: |
| ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2–வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம் Posted: 08 Dec 2013 11:10 AM PST அடிலெய்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தோல்வியை தடுக்க போராடி வருகிறது. ஆஷஸ் டெஸ்ட் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 570 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 172 ரன்களில் ஆல்–அவுட் ஆகி 'பாலோ–ஆன்' ஆனது. இதையடுத்து 398 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு 'பாலோ–ஆன்' வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து தனது 2–வது இன்னிங்சை ஆடியது. 3–வது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் வார்னர் 83 ரன்களுடனும், ஸ்டீவன் சுமித் 23 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 531 ரன்கள் இலக்கு நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் முந்தைய நாள் ஸ்கோருடன் (39 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள்) டிக்ளேர் செய்தது. இதைத்தொடந்து 531 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் குக் (1 ரன்), கார்பெர்ரி (14 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்கள். ஜோ ரூட் 87 ரன் ஜோ ரூட், கெவின் பீட்டர்சன் ஜோடி தொடக்க சரிவை சமாளிக்கும் வகையில் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தது. மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்து இருந்தது. அடித்து ஆடிய கெவின் பீட்டர்சன் (53 ரன்) பீட்டர் சிடில் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கிய இயான்பெல் 6 ரன்னில் அவுட் ஆனார். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் 87 ரன்னிலும், பின்னர் களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் தன் பங்குக்கு 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். வீரர்கள் மோதல் நேற்றைய ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. மேத் பிரையர் 31 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வீரர்களிடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக் ரன் எடுக்க ஓடுகையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன், முழங்கையால் உரசினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறுமுனையில் நின்ற மேத் பிரையர், ஸ்டோக்குக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். ஜான்சனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர்கள் திரண்டனர். உடனடியாக நடுவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெற்றிக்கு இங்கிலாந்துக்கு மேலும் 284 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளது. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடினாலும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. image: category: |
| தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் டோனி சொல்கிறார் Posted: 08 Dec 2013 11:06 AM PST டர்பன், தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:– முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு எங்களது பந்து வீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் அவசரகதியில் சில மோசமான ஷாட்களை அடித்து விக்கெட்டுகளை தாரை வார்த்து விட்டனர். பந்தை எப்படி கணித்து ஷாட்டுகளை தேர்வு செய்வது என்பதில் சரியாக செயல்படவில்லை. தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு தாக்குதல் மிகவும் துல்லியமாக இருந்ததுடன், தொடர்ந்து அது போன்று வீசினர். சொல்லப் போனால், ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அதிகமாக ஸ்விங் ஆகவும் இல்லை. அதிவேகமாகவும் இல்லை. இப்படிப்பட்ட நிலையிலும் அவர்கள் அபாரமாக பந்து வீசினர். இது ஒரு நாள் போட்டிக்கு ஏற்ற நல்ல ஆடுகளம். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் அமைத்த வியூகத்தை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. இந்த தோல்வியால் நான் அதிகமாக கவலைப்பட்டு கொண்டிருக்க மாட்டேன். விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எனவே எப்போதும் இயல்பாக இருக்க வேண்டும். தோல்வியை மறந்து விட்டு, அடுத்து போட்டிக்கு தயாராக வேண்டியது அவசியம். இவ்வாறு டோனி கூறினார். தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், 'இது எங்களுக்கு உணர்ச்சிமயமான நாளாக (மண்டேலா மறைவினால்) இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. 'நம்பர் ஒன்' அணிக்கு எதிராக எங்களது வீரர்கள் உண்மையிலேயே அசத்தலாக ஆடி தொடரை கைப்பற்றி உள்ளோம். அம்லா–டி காக்கின் இணை ஆட்டம் அற்புதமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 230 முதல் 240 வரை ஓரளவு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். 280 ரன்கள் என்பது ரொம்ப நல்ல இலக்கு. குயின்டான் டி காக், மிகவும் ஆக்ரோஷமான வீரர். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது' என்றார். image: category:Tagging: |
| Posted: 08 Dec 2013 10:57 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| Posted: 08 Dec 2013 10:57 AM PST Daily Thanthi Image Special: ![]() Daily Thanthi Special Term: |
| Posted: 08 Dec 2013 10:53 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


