Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இந்திய விளையாட்டு சம்மேளனங்களில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் தலையீட்டால் பாதிப்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து

Posted: 05 Dec 2013 10:55 AM PST

புதுடெல்லி

ஆக்கி இந்தியா, இந்திய ஆக்கி சம்மேளனம் ஆகியவை இடையேயான பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சர்வதேச ஆக்கி சம்மேளனம், ஆக்கி இந்தியாவுக்கு அங்கீகாரம் அளித்து இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ஆக்கி சம்மேளனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், ஜெ.செலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், 'விளையாட்டு சம்மேளனங்களில் அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் நிர்வாகிகளாக இருப்பதால் விளையாட்டுக்கு கெடுதல் தான் ஏற்படுகிறது. விளையாட்டு தொடர்பானவர்கள், சம்மேளன நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். இந்திய ஆக்கி அணியின் தரம் படுபாதாளத்துக்கு கீழே சென்று விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்தியாவில் விளையாட்டு அமைப்புகளை தனிநபர்கள் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் ஆட்டத்தை விட தங்கள் சுயநலத்துகே முன்னுரிமை அளிக்கிறார்கள். ஆட்டத்துக்காக எதுவும் செய்வதில்லை. ஒரு காலத்தில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை குவித்த இந்திய ஆக்கி அணி, தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற கூட திண்டாடுகிறது. விளையாட்டு அமைப்புகளை அரசு கட்டுப்படுத்த முடியாதது எதிர்பாராத ஒன்றாகும். பல சங்கங்களின் பிரச்சினைகள் கோர்ட்டுக்கு வந்து இருக்கின்றன. பிரச்சினை இல்லாத விளையாட்டு சங்கங்கள் இந்தியாவில் இருக்கிறதா? என்று கேட்கும் நிலை தான் நிலவுகிறது. மற்ற நாடுகளில் விளையாட்டு அமைப்புகளில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை' என்றனர். அத்துடன் இந்திய ஆக்கி சம்மேளன நிர்வாகத்தில் ஒலிம்பியன்கள் யாரும் இருக்கிறார்களா? என்றும் வாதாடிய வக்கீல் லலித்தை நோக்கி கேள்வி எழுப்பினார்கள்.
 

category:

இந்தியாவில், உலக கோப்பை ஜூனியர் கால்பந்து 2017–ம் ஆண்டில் நடத்தும் உரிமையை பெற்றது

Posted: 05 Dec 2013 10:45 AM PST

புதுடெல்லி

17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை 2017–ம் ஆண்டு நடத்தும் உரிமையை கேட்டு இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் (பிபா) விண்ணப்பித்து இருந்தன. இது குறித்து பிரேசிலில் நேற்று நடந்த, 'பிபா' நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் உரிமை கேட்டு காத்திருந்த தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உஸ்பெகிஸ்தான் நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு 2017–ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா தட்டிச் சென்றது. இந்தியாவில் நடைபெற உள்ள மிகப்பெரிய கால்பந்து போட்டி இது தான். அது மட்டுமன்றி இந்திய வரலாற்றில் 'பிபா' தொடர் ஒன்று நடக்க இருப்பதும் இது தான் முதல் தடவை. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

category:

நீதிபதி கங்குலி மீதான செக்ஸ் புகாருக்கு முகாந்திரம் உள்ளது ஓய்வு பெற்று விட்டதால் நடவடிக்கை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

Posted: 05 Dec 2013 10:37 AM PST

புதுடெல்லி,

நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வக்கீல் கூறிய செக்ஸ் புகாருக்கு முகாந்திரம் உள்ளதாகவும், என்றாலும் அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை என்றும் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அறிவித்து உள்ளார்.

பெண் வக்கீல் செக்ஸ் புகார்

இளம் பெண் வக்கீல் ஒருவர் கடந்த நவம்பர் 6–ந் தேதி தனது வலைத்தள பக்கத்தில் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஒருவரிடம் தான் பயிற்சி பெற்ற போது, அவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லைப்படுத்தியதாகவும், இந்த சம்பவம் 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24–ந் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்ததாகவும் எழுதி இருந்தார். சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அந்த பெண் வக்கீல் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கூறிய இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தானே முன்வந்து, இதுபற்றி விசாரணை நடத்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.டட்டூ, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு 7 முறை கூடி விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த நவம்பர் 28–ந் தேதி தலைமை நீதிபதியிடம் வழங்கியது.

நீதிபதி ஏ.கே.கங்குலி

இதைத்தொடர்ந்து, செக்ஸ் புகாரில் சிக்கிய நீதிபதி ஏ.கே.கங்குலி என்ற தகவல் வெளியானது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.

பாலியல் புகாரில் தனது பெயர் வெளியானதும் அதை மறுத்த நீதிபதி ஏ.கே.கங்குலி, இந்த புகாரால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், நொறுங்கிப்போய் விட்டதாகவும் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராகி தனது தரப்பிலான கருத்துக்களை தெரிவித்ததாகவும், அதுபற்றிய விவரங்களை தெரிவிக்க இயலாது என்றும் கூறினார்.

சூழ்நிலைகளால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எதற்காகவும் தான் வெட்கப்படவேண்டியதில்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

பதவி விலக கோரிக்கை

பெண் வக்கீலின் பாலியல் புகாரை தொடர்ந்து, மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வினித் ரூயா என்பவர் தாக்கல் செய்த புகார் மனுவை தொடர்ந்து, மேற்கு வங்காள மாநில போலீசார் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக பெண் வக்கீல் கூறிய புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

புகாருக்கு முகாந்திரம்

''விசாரணையின் போது பெண் பயிற்சி வக்கீல் எழுத்து பூர்வமாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்த கருத்துகளையும், அவரது சாட்சியங்களின் பிரமாண வாக்குமூலங்களையும், நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்த கருத்துகளையும் நாங்கள் கவனத்துடன் ஆய்வு செய்தோம். அதன் மூலம், 24.12.2012–ந் தேதி அன்று நீதிபதி ஏ.கே.கங்குலி தங்கி இருந்த லீ மெரிடியன் ஓட்டலுக்கு அவருக்கு உதவி செய்வதற்காக பெண் வக்கீல் சென்று உள்ளார். அன்று இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை அவர் அங்கு இருந்துள்ளார். இந்த உண்மையை விசாரணையின் போது நீதிபதி ஏ.கே.கங்குலி மறுக்கவில்லை'' என்று நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.

''விசாரணையின் போது அந்த பெண் வக்கீல் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும் போது, நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத வகையில் (வாய் வார்த்தை மூலமாகவோ அல்லது வாய் வார்த்தை அல்லாத சைகை மூலமாகவோ) நடந்து கொண்டார் என்ற புகாருக்கு முகாந்திரம் உள்ளது'' என்றும் கூறி இருக்கிறது.

நடவடிக்கை இல்லை

என்றாலும் மேற்கண்ட சம்பவம் நடப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 5–ந் தேதி நடந்த முழு கோர்ட்டு கூட்டத்தில் (நீதிபதிகள் கூட்டம்) எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த பிரச்சினையில் இந்த கோர்ட்டால் (சுப்ரீம் கோர்ட்டு) மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க தேவை இல்லை என்று கருதுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கருத்து கூற மறுப்பு

நீதிபதிகள் விசாரணை குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பற்றி நீதிபதி ஏ.கே.கங்குலியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர்; ''சுப்ரீம் கோர்ட்டு என்ன கூறி இருக்கிறது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால் அதுகுறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.

நீதிபதிகள் விசாரணை குழு அறிக்கையில் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது என கூறப்பட்டு இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது போலீசார் தாமாக முன் வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள் என கருதுவதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறினார்.

ஆனால் மூத்த வக்கீலான கே.டி.எஸ்.துளசி இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். ''விசாரணை அறிக்கை முழு விவரமும் இன்னும் தெரியவில்லை. அந்த இளம் பெண் வக்கீல் போலீசில் புகார் கொடுக்க முடியாத நிலையிலும் இல்லை. ஒருவேளை போலீசார் தாமாக வழக்கு பதிவு செய்து அந்த பெண் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால். அது போலீசாருக்கு பாதகமாக அமைந்துவிடும்'' என்று அவர் கூறினார்.

category:

News Group Category:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் பிகினி படத்திற்கு 4000 பவுண்ட் கொடுத்த ரெபக்கா ப்ரூக்ஸ்

Posted: 05 Dec 2013 10:31 AM PST

லண்டன்,

பிரிட்டனில் இருந்து வெளிவந்த 168 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை நிறுவனம் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது. இதையடுத்து பத்திரிகையை நிறுத்தி விடுவதாக அதன் அதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்தார். அதன்படி பத்திரிகை நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான ரெபக்கா ப்ரூக்ஸ் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து விசாரணை நடந்தது. ஒட்டு கேட்பு குற்றச்சாட்டை ரெபக்கா ப்ரூக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் பிகினி படத்திற்கு அவர் சட்ட விரோதமாக 4000 பவுண்ட் கொடுத்ததுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கறிஞர் ரெபேக்கா சால்க்லே,  கடந்த 2006ம் ஆண்டு  பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் பிகினி படத்திற்கு 4000 பவுண்ட் தொகையை ராணுவ அகடாமியில் உள்ள ராணுவ வீரர் ஒருவருக்கு கொடுக்க ரெபக்கா ப்ரூக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.  இளவரசர் வில்லியம்ஸ் கடந்த 2005ம் ஆண்டு சாண்ட்ஹர்ஸ்ட் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
 

category:

News Group Category:

8 நாட்கள் நடக்கிறது சென்னையில், சர்வதேச படவிழா கமல்ஹாசன்–அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள்

Posted: 05 Dec 2013 10:09 AM PST

சென்னை,

சென்னையில், சர்வதேச படவிழா 8 நாட்கள் நடக்கிறது. இந்த படவிழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் தொடங்கி வைக்கிறார்கள்.

சர்வதேச படவிழா

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச படவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச படவிழா வருகிற 12–ந்தேதி தொடங்கி, 19–ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

சர்வதேச படவிழாவின் தொடக்க நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் சென்னையில் உள்ள முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் நடைபெறுகிறது.

கமல்ஹாசன்–அமீர்கான்

சர்வதேச படவிழாவை 12–ந்தேதி நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த படவிழாவில் 58 நாடுகளில் இருந்து 165 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளது. இதில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படங்களும் அடங்கும்.

இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், அபிராமி, கேசினோ, ராணி சீதைஹால் ஆகிய இடங்களில் திரையிடப்பட உள்ளன.

தமிழ்படங்கள்

தமிழ்படங்களுக்கான போட்டிக்கு 12 படங்கள் வந்திருக்கிறது. அந்த படங்கள் வருமாறு:– 1. ஆதலால் காதல் செய்வீர், 2. 6 மெழுகுவர்த்திகள், 3. அன்னக்கொடி, 4. ஹரிதாஸ், 5. கும்கி, 6. மரியான், 7. மூடர்கூடம், 8. மூன்று பேர் மூன்று காதல், 9. பரதேசி, 10. பொன்மாலைப்பொழுது, 11. சூது கவ்வும், 12. தங்கமீனகள்.

தமிழ்திரைப்படங்களை விருதுக்கு தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் தலைவராகவும், நடுவர் குழு உறுப்பினர்களாக நடிகை ஸ்ரீபிரியா, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுகாசினி மணிரத்னம்

தொடக்க விழாவின் போதும், நிறைவு நாள் நிகழ்ச்சியின் போதும் பிரபல திரையுலக கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

சர்வதேச படவிழா பற்றிய இந்த விவரங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. அதில் நடிகர்கள் மோகன், மோகன்ராம் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், ஸ்ரீபிரியா ராஜ்குமார், மானு பட அதிபர் யு.டி.வி. தனஞ்செயன், டைரக்டர் ஸ்டான்லி ஆகியோர் கலந்து கொண்டார்கள். கண்ணன் வரவேற்று பேசினார். தங்கராஜ் நன்றி கூறினார்.

category:

News Group Category:

‘என்னை செல்போனில் மர்மநபர்கள் மிரட்டுகிறார்கள்’ கன்னட நடிகை சஞ்சனா பரபரப்பு பேட்டி

Posted: 05 Dec 2013 10:01 AM PST

பெங்களூர்,

கன்னட திரையுலகில் கதாநாயகியாக நடித்து வருபவர் சஞ்சனா. இந்த நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்று நடிகை சஞ்சனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

என்னுடைய செல்போன் எண்ணுக்கு இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். நான் எடுத்து பேசும் போது, நீங்கள் யார்? எங்கே இருக்கிறீர்கள்? என்று பல கேள்விகளை கேட்கிறார்கள். சில நேரத்தில் தவறான வார்த்தைகளை கூட பயன்படுத்தி பேசுகின்றனர். பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். அந்த மர்மநபர்கள் யார்? என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தினமும் இரவு நேரத்தில் இதுபோன்று என்னுடைய செல்போனுக்கு தொடர்பு பேசி மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

மர்மநபர்கள் பேசும் நம்பருக்கு நான் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சினிமா துறையில் நல்ல பெயர் இருக்கிறது. இதுபோன்று மிரட்டல்களை நான் விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.

இந்த சம்பவம் கன்னட நடிகர், நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™