Daily Thanthi |
- ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டித்து முற்றுகை-ஊர்வலம் கோவையில் இந்து அமைப்பினர் கைது
- ஐ.ஏ.எஸ், அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற 10 பேருக்கு பணி நியமனம்; தமிழக அரசு உத்தரவு
- பனிச்சறுக்கு விளையாட்டில் படுகாயம்: சூமாக்கர் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் அபாயகட்டத்தை இன்னும் தாண்டவில்லை
- ஆதார்ஷ் ஊழல் தொடர்பான விவாதம் மந்திரி சபையில் நாளை தொடங்குகிறது; தேசியவாத காங்கிரஸ் தலைவர் தகவல்
- 2013–ம் ஆண்டில் கலக்கிய கிரிக்கெட் வீரர்கள்
- சென்னை ஓபன் டென்னிஸ்: சோம்தேவுக்கு அதிர்ச்சி அளித்தார், ராம்குமார்
- நியூசிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் நீக்கம் புதுமுகங்கள் ஈஸ்வர் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி தேர்வு
- செயல்திறன் நன்றாக உள்ளதால் ‘புளுசிப்’ நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்பு
- 2013–ஆம் ஆண்டின் கடைசி நாளில் ‘சென்செக்ஸ்’ 28 புள்ளிகள் அதிகரிப்பு
| ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டித்து முற்றுகை-ஊர்வலம் கோவையில் இந்து அமைப்பினர் கைது Posted: 31 Dec 2013 02:07 PM PST கோவையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற ஓட்டல்களை முற்றுகையிட்டும், தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணியினர் கைது 2013-ம் ஆண்டு முடிந்து 2014-ம் ஆண்டு நேற்று பிறந்தது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது, நள்ளிரவில் கோவில்களை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங் களை தடை செய்யக் கோரி கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஊர்வலம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து புறப்பட்டு காந்திபார்க் வரை ஊர்வலம் நடப்பதாக இருந்தது ஆனால் இதற்கு போலீசார் அனுமதியளிக்காததால் ஊர்வலம் புறப்பட்டதும் அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தர்ங்கினார். இதில் நிர்வாகிகள் மூகாம்பிகை மணி, சசிக்குமார், ஜெய்சங்கர், சதீஷ், குணா, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதி யின்றி ஊர்வலம் செல்ல முயன்ற 290 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். பாரத் சேனாவினர் கைது மேலும் 2014 புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் உள்ள ஓட்டல்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது போல் கோவை காந்திபுரம் ராம்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது இரவு 11 மணியளவில் பாரத்சேனா கட்சியினர் நஞ்சப்பா சாலையில் இருந்து ஓடி வந்து அந்த ஓட்டல் முன்பு முற்றுகையிட முயன்றனர். அவர் களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்துக்கு பாரத்சேனா மாவட்ட அமைப்பாளர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் கண்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பாரத்சேனா நிர்வாகிகள் ஆர்.டி.எஸ். செந்தில், உங்கள் சிவா, வாசு, பிரேம், முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். ஆர்ப்பாட்டம் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டித்து கோவையை அடுத்த வடவள்ளி பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்குட்டத்துக்கு மண்டல தலை வர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பூபாலன், ரவி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சிவசேனா கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். image: category: |
| ஐ.ஏ.எஸ், அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற 10 பேருக்கு பணி நியமனம்; தமிழக அரசு உத்தரவு Posted: 31 Dec 2013 01:29 PM PST சென்னை தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற 10 அதிகாரிகளுக்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்களை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகளில் 10 பேருக்கு மத்திய அரசு ஐ.ஏ.எஸ், அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டது. இவர்களுக்கு தற்போது ஐ.ஏ.எஸ், பணியிடங்களை தமிழக அரசு ஒதுக்கி ஆணை பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:– சேலம், கன்னியாகுமரி சேலம் மோகனூர் சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த எஸ்.மலர்விழி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த எஸ்.பழனிசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். பட்டு பூச்சி வளர்ப்பு துறை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.பிரபாகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சேலம் பட்டுபூச்சி வளர்ப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதுநிலை மண்டல மேலாளாராக பணியாற்றும் கே.எஸ்.கந்தசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நிலநிர்வாக துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். முதல்–அமைச்சர் தனிப்பிரிவு சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுமேலாளராக பணியாற்றி வரும் சி.கதிரவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். முதல்–அமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் எப்.இன்னசென்ட் திவ்யா அதே இடத்தில் ஐ.ஏ.எஸ், அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சி தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சுரேஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு நீர்வழி பகுதி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் எம்.லட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆர்.கஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கணேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய இணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 31 Dec 2013 11:45 AM PST கிரனோபில், பார்முலா1 கார்பந்தய ஜாம்பவானான ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கர் 7 முறை இப்பட்டத்தை வென்று உலக சாதனை படைத்தவர். 2012–ம் ஆண்டுடன் ஓய்வு பெற்று விட்ட 44 வயதான சூமாக்கர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் ஜாலியாக பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக பாறையில் மோதி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கிழக்கு பிரான்சில் உள்ள கிரனோபில் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் மூளையில் பலத்த பாதிப்பு அடைந்துள்ள அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. தலையில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் பிரான்காய்ஸ் பயேன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'முந்தைய நாளை விட அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. ஒவ்வொரு மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம்' என்றார். அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பனிப்பாறையில் மோதிய போது சூமாக்கர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். மோதிய வேகத்தில் ஹெல்மெட்டே பயங்கர விரிசல் அடைந்து விட்டது. ஹெல்மெட் மட்டும் அவர் அணியாமல் இருந்திருந்தால் அப்போதே அவர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். image: category:Tagging: |
| ஆதார்ஷ் ஊழல் தொடர்பான விவாதம் மந்திரி சபையில் நாளை தொடங்குகிறது; தேசியவாத காங்கிரஸ் தலைவர் தகவல் Posted: 31 Dec 2013 11:43 AM PST மும்பை ஆதார்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பாக நாளை நடைபெற இருக்கும் மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார். ஆதார்ஷ் வீட்டுவசதி ஊழல் மும்பை கொலபாவில் ஆதார்ஷ் வீட்டுவசதி சங்கம் சார்பில் கார்கில் போரில் மரணம் அடைந்த தியாகிகளின் வாரிசுகளுக்காக 31 மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்டியதிலும், வீடுகளை ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு புகார் எழுந்தது. இதனால் அப்போதைய முதல்–மந்திரி அசோக் சவான் பதவி விலகினார். ஆதார்ஷ் ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஜெ.ஏ. பாட்டீல் தலைமையிலான இருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி தன் அறிக்கையை மராட்டிய அரசிடம் தாக்கல் செய்தது. விசாரணை அறிக்கையில், முன்னாள் மராட்டிய முதல்–மந்திரிகள் அசோக் சவான், விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் நிலங்கெகர் பாட்டீல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆதார்ஷ் ஊழலில் தொடர்பு இருப்பதாக சுட்டி காட்டப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் நிராகரித்தார். முதல்–மந்திரியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜனதா, சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வேண்டுமென்றே குளிர்கால கூட்ட தொடரின் கடைசி நாளில் ஆதார்ஷ் ஊழல் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்து கொண்டதாகவும், இதில் சதி திட்டம் இருப்பதாகவும் எதிர்கட்சியினர் குறை கூறினார்கள். ராகுல்–சோனியா கண்டனம் இந்த நிலையில், ஆதார்ஷ் ஊழல் அறிக்கையை மராட்டிய அரசு நிராகரித்தது கண்டனத்துக்கு உரியது என்றும், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார். ராகுல் காந்தியின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆதரவு அளித்தார். இதனால் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் தர்மச்சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார். ஆதார்ஷ் ஊழல் தொடர்பாக தன் மந்திரி சபை சகாக்களுடன் கூடி விவாதிப்பதாக அவர் தெரிவித்தார். நாளை விவாதம் இந்நிலையில், ஆதார்ஷ் ஊழல் அறிக்கை உடனடியாக விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்பது அரசியல் கட்சியினர் உள்பட பலரின் ஆர்வமாக இருந்தது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ''ஆதார்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பாக வருகிற 2–ந் தேதி (நாளை) மந்திரிசபையில் விவாதம் நடத்தப்படும். இது தொடர்பாக முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தக்கரேயுடன் கலந்தாலோசித்து உள்ளார்'' என்று கூறினார். image: category:Tagging:News Group Category: |
| 2013–ம் ஆண்டில் கலக்கிய கிரிக்கெட் வீரர்கள் Posted: 31 Dec 2013 11:41 AM PST சென்னை, 2013–ம் ஆண்டில் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அசத்திய வீரர்கள் மற்றும் அணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:– ஒரு நாள் போட்டி சென்ற ஆண்டில் மொத்தம் 136 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 34 ஆட்டங்களில் விளையாடி 22–ல் வெற்றியும், 10–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் ஷர்மா 209 ரன்கள் குவித்தது தனிநபர் அதிகபட்சமாகும். மொத்தத்தில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 34 ஆட்டங்களில் 15 அரைசதங்களுடன் 1373 ரன்கள் சேர்த்தார். ஆனால் ஒரு சதமும் அடிக்கவில்லை. ஒரு ஆண்டில் சதமின்றி அதிக அரைசதங்கள் அடித்தவர் இவர் தான். அதிக சிக்சர்கள் அடித்தர்களில் ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி (30 சிக்சர், 22 ஆட்டம்)), இந்தியாவின் ரோகித் ஷர்மா (30 சிக்சர், 28 ஆட்டம்) முதல் இடத்தை பகிர்ந்து கொண்டனர். இலங்கையின் மலிங்கா, வெஸ்ட் இண்டீசின் பொல்லார்ட் அதிக முறை டக்–அவுட் ஆனவர்கள் ஆவர். இவர்கள் தலா 6 முறை ரன்ஏதுமின்றி வீழ்ந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் 2013–ம் ஆண்டில் மொத்தம் 43 டெஸ்டுகள் அரங்கேறின. தென்ஆப்பிரிக்கா 9 டெஸ்டில் 7–ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டது. அதிக வெற்றிகளை சுவைத்த அணி தென்ஆப்பிரிக்கா தான். இந்தியா 8 டெஸ்டில் விளையாடி 6–ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்தது. தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் (234 ரன்), இந்திய கேப்டன் டோனி (224 ரன்), புஜாரா (204 ரன்) உள்பட 7 வீரர்கள் இரட்டை சதத்தை பதிவு செய்தனர். இங்கிலாந்தின் ஆண்டர்சன் அதிக முறை (6) டக்–அவுட் ஆன மோசமான பெயரை பெற்றார். 20 ஓவர் போட்டி அதிரடிக்கு பிரசித்தி பெற்ற 20 ஓவர் சர்வதேச போட்டி மொத்தம் 53 ஆட்டங்கள் நடந்தன. இந்தியா ஒரே ஆட்டத்தில் மட்டுமே ஆடியிருந்தது. அதில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். 2013–ம் ஆண்டில் கலக்கியவர்களின் விவரம் வருமாறு:– முதல் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வீரர் நாடு ஆட்டம் ரன்கள் சதம் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியா 13 1093 4 இயான் பெல் இங்கிலாந்து 14 1005 3 டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 9 933 4 அலஸ்டயர் குக் இங்கிலாந்து 14 916 2 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 12 909 2 முதல் 5 ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்கள் மிஸ்பா உல்–ஹக் பாகிஸ்தான் 34 1374 0 முகமது ஹபீஸ் பாகிஸ்தான் 32 1301 5 விராட் கோலி இந்தியா 34 1268 4 சங்கக்கரா இலங்கை 25 1201 2 ரோகித் ஷர்மா இந்தியா 28 1196 2 டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வீரர் நாடு ஆட்டம் விக்கெட் சிறந்தபந்துவீச்சு ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 14 62 7–44 ஆண்டர்சன் இங்கிலாந்து 14 52 5–47 ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா 9 51 6–8 டிரென்ட் பவுல்ட் நியூசிலாந்து 12 46 6–40 ஸ்வான் இங்கிலாந்து 10 43 6–90 ஒரு நாள் போட்டியில் டாப்–6 பவுலர் அஜ்மல் பாகிஸ்தான் 33 62 5–24 ஜூனைட் கான் பாகிஸ்தான் 28 52 4–15 ரவீந்திர ஜடேஜா இந்தியா 34 52 5–36 மெக்லரன் தென்ஆப்பிரிக்கா 27 45 4–19 மெக்லெனஹான் நியூசிலாந்து 15 40 5–58 அஸ்வின் இந்தியா 29 40 3–39 image: category: |
| சென்னை ஓபன் டென்னிஸ்: சோம்தேவுக்கு அதிர்ச்சி அளித்தார், ராம்குமார் Posted: 31 Dec 2013 11:31 AM PST சென்னை ஓபன் டென்னிசில் 2009–ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான சோம்தேவுக்கு, தமிழகத்தின் ராம்குமார் முதல் சுற்றிலே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். யுகி வெற்றி தமிழக அரசின் ஆதரவுடன் 19–வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. போட்டியின் 2–வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் யுகி பாம்ப்ரி, ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்டாவை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய பாம்ப்ரி 6–4, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார். வீழ்ந்தார் சோம்தேவ் அடுத்து 90–ம் நிலை வீரரான இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சோம்தேவ் தேவ்வர்மன், தகுதி சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு வந்த சக நாட்டவர் ராம்குமார் ராமநாதனை சந்தித்தார். அனுபவம் வாய்ந்த சோம்தேவுக்கு, ராம்குமார் கடுமையான சவால் அளித்தார். தொடக்கத்தில் சோம்தேவை உற்சாகப்படுத்திய ரசிகர்கள், போக போக தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் பக்கம் சாய்ந்தனர். அவரும் ஒவ்வொரு முறை புள்ளியை வசப்படுத்தும் போதும், கைதட்டி உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். முதல் செட்டை இழந்த ராம்குமார், 2–வது செட்டை தனதாக்கியதால் கடைசி செட்டில் அனல் பறந்தது. புதுவரவான ராம்குமார் பதற்றமின்றி, அதே சமயம் ரொம்ப ஆக்ரோஷமாக ஆடி பிரமாதப்படுத்தினார். ஆனால் சோம்தேவோ, இறுதிகட்டத்தில் மிகவும் பதற்றத்திற்குள்ளானார். ஒரு கட்டத்தில் 4–4 என்ற சமநிலை நீடித்த நிலையில், 9–வது கேமில் சோம்தேவின் சர்வீசை ராம்குமார் முறியடித்தார். அது தான் ஆட்டத்தை ராம்குமாருக்கு சாதகமாக மாற்றியது. பின்னர் தனது சர்வீசில் சூப்பரான சில ஷாட்டுகளை அடித்து, வெற்றியை வசப்படுத்தி சோம்தேவுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.
2 மணி 22 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் 4–6, 6–4, 6–4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் ஆடுகளத்தை தொட்டு வணங்கிய அவர், உங்களின் (ரசிகர்கள்) ஆதரவால் தான் வெற்றி பெற முடிந்ததாக கூறி ரசிகர்களுக்கு பல முறை நன்றி தெரிவித்தார். 19 வயதான ராம்குமாருக்கு, புத்தாண்டு பரிசாக அவரது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிட்டியிருக்கிறது. ஏ.டி.பி. போட்டியில் இது தான் அவரது முதல் வெற்றியாகவும் அமைந்தது. இவர் தரவரிசையில் 526–வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் கடந்த ஆண்டில் 2–வது இடத்தை பிடித்த ஸ்பெயினின் ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும் மண்ணை கவ்வினார். அவரை தகுதி நிலை வீரர் ரஷியாவின் அலெக்சாண்டர் குட்யவ்ட்செவ் 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில விரட்டினார். இன்றைய ஆட்டங்கள் இன்று பிரதான ஆடுகளங்களில் (மாலை 5 மணி முதல்) முன்னணி வீரர்கள் களம் இறங்குகிறார்கள். முன்னாள் சாம்பியன் மிகைல் யூஸ்னி (ரஷியா), துடி செலாவையும் (இஸ்ரேல்), போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரையும், இரட்டையரில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி–ராம்குமார் ராமநாதன், லிப்ஸ்கி–ராம் ராஜீவ் (அமெரிக்கா) இணையையும் சந்திக்கிறார்கள். image: category: |
| Posted: 31 Dec 2013 11:22 AM PST மும்பை, நியூசிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ்சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இரண்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. யுவராஜ்சிங் நீக்கம் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரை தோல்வியுடன் முடித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் (ஜனவரி 19 முதல் பிப்.18 வரை) பங்கேற்கிறது. இந்தியா–நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19–ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து யுவராஜ்சிங் அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரில் யுவராஜ்சிங் 4 இன்னிங்சில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனின் பந்து வீச்சில் திணறினார். அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரிலும் சோபிக்கவில்லை. நியூசிலாந்து ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதாலும், மோசமான பார்ம் காரணமாகவும் யுவராஜ்சிங்குக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் தென்ஆப்பிரிக்க தொடரில் ரன்களை வாரி இறைத்த வேகப்பந்து வீச்சாளர்கள் மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அறிமுக வீரர்கள் இவர்களுக்கு பதிலாக புதுமுகங்கள் ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த 29 வயதான ஸ்டூவர்ட் பின்னி 53 முதல்தர போட்டிகளில் விளையாடி 2714 ரன்களுடன், 79 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடியவர்களில் இவரும் ஒருவர். இவர் 1983–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஆல்–ரவுண்டர் ரோஜர் பின்னியின் மகன் ஆவார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே 2012–13 ஆண்டு ரஞ்சி சீசனில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த சீசனிலும் அசத்தி வரும் அவர் 8 ஆட்டங்களில் 30 விக்கெட்டுகள் சாய்த்து இருக்கிறார். உயரம் இவரது கூடுதல் பலமாகும். இதன் மூலம் இவரால் எளிதில் பவுன்ஸ் செய்ய முடியும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடியிருந்தார். இதே போல் காயத்தால் இரண்டு ஆண்டுகள் வெளியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜார்கண்டை சேர்ந்த வருண் ஆரோன் உடல்தகுதி பெற்று அணிக்கு திரும்பியிருக்கிறார். டெஸ்ட் அணியை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்க தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 17 பேரில் ஒரே ஒருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நீக்கப்பட்டு, அவரது இடத்திற்கு வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். கவுதம் கம்பீர், ஷேவாக், ஹர்பஜன்சிங் ஆகியோரின் பெயர்கள் வழக்கம் போல் பரிசீலிக்கப்படவில்லை. அணி விவரம் நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளிவிஜய், புஜாரா, விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஜாகீர்கான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, அம்பத்தி ராயுடு, புவனேஸ்வர்குமார், அஸ்வின், உமேஷ் யாதவ், விருத்திமான் சஹா, ஈஸ்வர் பாண்டே. ஒரு நாள் போட்டி அணி: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரஹானே, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன். category:Tagging: |
| செயல்திறன் நன்றாக உள்ளதால் ‘புளுசிப்’ நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்பு Posted: 31 Dec 2013 11:06 AM PST மும்பை, புத்தாண்டில் டி.சி.எஸ்., இன்போசிஸ், மாருதி சுசுகி, டாட்டா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப் உள்ளிட்ட 'புளுசிப்' நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது என பங்கு வர்த்தக நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்கள் 'புளுசிப்' கம்பெனிகள் என்று அழைக்கப்படுகின்றன. மோட்டார் வாகனத்துறை கே.ஆர்.சோக்ஷி சேர்ஸ் அண்டு செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவன் சோக்ஷி இதுகுறித்து கூறுகையில், ''புளுசிப் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துடன் ஒப்பிடும்போது அவற்றின் பங்கு விலை நியாயமாக உள்ளது. இந்நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும்போது பங்கின் விலை மிகவும் உயர வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார். பொருளாதார மந்தநிலை கடனிற்கான வட்டிவிகிதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் உள்நாட்டில் கார் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வந்துள்ளது. எனவே மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை அவற்றின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் இந்நிலையில் வேளாண் துறை உற்பத்தி வளர்ச்சியால் கிராமங்களில் தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரிக்கும். உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதால் ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே இனிவரும் மாதங்களில் கார் விற்பனை அதிகரிக்கும் என்றும், டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.டி. துறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்திய ஐ.டி. நிறுவனங்கள் வருவாயின் பெரும்பகுதியை மேற்கண்ட நாடுகள் வாயிலாக ஈட்டுகின்றன. மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும். அமெரிக்க நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அதிக நிதியை செலவிட தொடங்கியுள்ளன. எனவே ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது என ஐ.டீ.பீ.ஐ. கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் (ஆய்வு) சோனம் உதாசி தெரிவித்துள்ளார். ஐ.டி. துறை நிறுவனங்களின் பங்குகளில் பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் போன்ற முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் பங்கு விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே இந்நிறுவனங்களின் பங்கு விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் மேற்கண்ட நிறுவனங்களின் பங்கு விலை மேலும் அதிகரிக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது 2013–ஆம் ஆண்டில் இந்நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் சுமார் ரூ.1.10 லட்சம் கோடி (2,000 கோடி டாலர்) முதலீடு செய்துள்ளன. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மேலும் அதிகரித்து புத்தாண்டில் 'புளுசிப்' நிறுவனங்களின் பங்கு விலை புதிய உச்சத்தை தொடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈடல்வைஸ் நிறுவனத்தின் தலைவர் (ஆராய்ச்சி) வினய் கத்தார் கூறுகையில், ''கடந்த ஐந்து ஆண்டுகளில் புளுசிப் எனப்படும் 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம் லாபத்துடன் ஒப்பிடும்போது இதே அளவிற்கு பங்கு விலை விகிதம் உயரவில்லை. சர்வதேச அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே இனிவரும் மாதங்களில் 'புளுசிப்' நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார். பங்கு விலை 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 20 நிறுவனங்களின் பங்கு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேசமயம் லாப வளர்ச்சி அடிப்படையில் ஒட்டுமொத்தத்தில் 'சென்செக்ஸ்' நிறுவனங்களின் பங்கு விலை குறைவாக உள்ளது என ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி மணிஷ்குமார் தெரிவித்துள்ளார். image: category: |
| 2013–ஆம் ஆண்டின் கடைசி நாளில் ‘சென்செக்ஸ்’ 28 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 31 Dec 2013 11:03 AM PST மும்பை, பங்கு வியாபாரம் 2013–ஆம் ஆண்டின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அன்று ஒரளவிற்கு நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 28 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. 2013–ஆம் ஆண்டில் 'சென்செக்ஸ்' 9 சதவீதம் அதிகரித்தது. புத்தாண்டில் பொருளாதாரம் மேம்பட்டு பங்கு வியாபாரத்தில் எழுச்சி ஏற்படும் என சில நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். அமெரிக்கா நேற்று முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அதிகரித்து ரூ.70.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்து, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம் உலோகம், நுகர்பொருள், மோட்டார் வாகனம் போன்ற துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும். 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., எல்–டி, டாட்டா பவர், விப்ரோ உள்ளிட்ட 17 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 27.67 புள்ளிகள் அதிகரித்து 21,170.68 புள்ளிகளில் நிலைகொண்டது. அதிகபட்சமாக 21,230.88 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 21,122.68 புள்ளிகளுக்கும் சென்றது. நிப்டி தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்றாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள் ஐ.டீ.எஃப்.சி., ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாட்டா பவர், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. வர்த்தகம் முடியும்போது 'நிஃப்டி' 12.90 புள்ளிகள் அதிகரித்து 6,304 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 6,317.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,287.30 புள்ளிகளுக்கும் சென்றது. 2013–ஆம் ஆண்டில் நிஃப்டி 6.75 சதவீதம் உயர்ந்தது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |