Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நரேந்திர மோடிக்கும், ராஜ்நாத் சிங்

Posted: 29 Dec 2013 03:25 PM PST

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடிக்கும், ராஜ்நாத் சிங்குக்கும் தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்த காட்சி.

8

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்கள் சிறைபிடிப்பு; யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்

Posted: 29 Dec 2013 03:08 PM PST

புதுக்கோட்டை,

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

பிரதமருடன் சந்திப்பு

இலங்கை சிறையில் உள்ள 227 தமிழக மீனவர்களை விடுதலை செய்து, அவர்களுடைய 77 படகுகளை மீட்பது தொடர்பாக தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்கள். இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்படும் என பிரதமர் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

22 மீனவர்கள் சிறைபிடிப்பு

இந்த நிலையில், மேலும் 22 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 230 விசைப்படகுகளில் சுமார் 900 மீனவர்களும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 255 விசைப்படகுகளில் சுமார் 1,100 மீனவர்களும் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடற்கரையில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் இரவு அவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளை சுற்றி வளைத்து அந்த படகுகளில் இருந்த 22 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகள், டீசல் ஆகியவற்றையும் பறித்துச் சென்றனர்.

சிறையில் அடைப்பு

சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் 22 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற ஜனவரி 10–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 22 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் குட்டியாண்டி 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:–

பிரதமரிடம் மனு

இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்து தமிழக மீனவர்களை தொடாந்து சிறைபிடித்துச் செல்கின்றனர். தற்போதுகூட இலங்கை சிறையில் 213 தமிழக மீனவர்கள் வாடி வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் 77 விசைப்படகுகளும் இலங்கை கடற்படை வசம் உள்ளன.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் இருமுறை பிரதமர் மன்மோகன் சிங்கையும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தையும் சந்தித்து மனு கொடுத்தனர். இதேபோல் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவையும் சந்தித்து மனு கொடுத்தோம்.

தேர்தலை புறக்கணிப்போம்

சனிக்கிழமை தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் 2–வது முறையாக தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டனர். பிரதமரும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இந்திய–இலங்கை மீனவர்கள் சந்தித்து பேச நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்த அன்று இரவே இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்று உள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். இதே நிலை நீடித்தால் தமிழக மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

இவ்வாறு குட்டியாண்டி கூறினார்.

ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் அஞ்சப்பன் கூறுகையில்; ஏழை மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொந்தளிப்பு

இலங்கை சிறையில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோந்த 71 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 22 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

வாவ்ரிங்கா, லியாண்டர் பெயஸ் உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் திருவிழா இன்று தொடக்கம்

Posted: 29 Dec 2013 11:31 AM PST

சென்னை,

முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

டென்னிஸ் திருவிழா

19–வது ஏர்செல் சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி (ஆண்கள் மட்டும்) சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியை சிறப்பாக நடத்திட தமிழக அரசு ரூ.2 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஏகோபித்த வரவேற்பு உண்டு. அது மட்டுமின்றி, ஜனவரி மத்தியில் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராவதற்கு ஏதுவாக இந்த போட்டி அமைந்திருப்பதால் முன்னணி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள்.

இந்த முறை ஒற்றையர் பிரிவில் 28 வீரர்கள் குதிக்கிறார்கள். இதில் உலக தரவரிசையில் 8–வது இடமும், போட்டித் தரநிலையில் முதலிடமும் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுக்கு பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. 'பை' சலுகை பெற்றுள்ள அவர் நேரடியாக 2–வது சுற்றில் விளையாட உள்ளார்.

வாவ்ரிங்காவுக்கு வாய்ப்பு

6–வது முறையாக சென்னை ஓபனில் களம் காணும் வாவ்ரிங்கா 2011–ம் ஆண்டு இங்கு சாம்பியன் ஆகியுள்ளார். அமெரிக்க ஓபனில் கால்இறுதியில் இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்த வாவ்ரிங்கா, ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இப்படி 2013–ம் ஆண்டு தனக்கு அருமையாக அமைந்ததாக குறிப்பிட்ட 28 வயதான வாவ்ரிங்கா, புதிய சீசனும் நன்றாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் இன்னும் 2 வெற்றி பெற்றால் சர்வதேச அரங்கில் தனது 300–வது வெற்றியை பதிவு செய்வார். இந்த இலக்கை அவர் சென்னை ஓபனில் அடைவார் என்று நம்பலாம்.

சென்னை ஓபன் இறுதிஆட்டத்தில் அவரும் 15–ம் நிலை வீரருமான ரஷியாவின் மிகைல் யூஸ்னியும் சந்திக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர்களுடன் பிரான்சின் பெனாய்ட் பேர், இத்தாலியின் பாபியோ போக்னினி, கடந்த ஆண்டில் 2–வது இடம் பிடித்த ஸ்பெயினின் ராபர்ட்டோ பாவ்டிஸ்டா அகுத் ஆகியோரும் பட்டத்திற்கான வாய்ப்பில் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

சோம்தேவ் எப்படி?

இந்தியர்களை பொறுத்தவரை சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகிய மூன்று பேர் பிரதான சுற்றில் விளையாட உள்ளனர். தகுதி சுற்றில் 2 வெற்றிகளை பெற்றுள்ள ராம்குமார் ராமநாதன் இன்று தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் சுலோவக்கியா வீரர் கோம்பாசுடன் மோதுகிறார். இதிலும் அவர் வெற்றி கண்டால் 4–வது இந்தியராக பிரதான சுற்றில் அடியெடுத்து வைப்பார்.

ஒற்றையர் தரவரிசையில் டாப்–100 இடத்திற்குள் உள்ள ஒரே இந்தியவரான சோம்தேவ் (90–வது இடம்) முதல் ரவுண்டில், தகுதி சுற்றில் இருந்து வீரரை சந்திக்கிறார். அந்த வீரர் யார் என்ற விவரம் இன்று தெரிந்து விடும். முதல் சவாலை சோம்தேவ் கடந்து விட்டால், 2–வது சுற்றில் 38–ம் நிலை வீரர் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்சை எதிர்கொள்ள வேண்டி வரலாம். போட்டி அட்டவணையை பார்க்கும் போது அவர் கால்இறுதியை தாண்டினாலே ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். ஒற்றையரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஒரே இந்தியர் சோம்தேவ் தான் (2009–ம் ஆண்டு) என்பது குறிப்பிடத்தக்கது.

லியாண்டர் பெயஸ்

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா–பாகிஸ்தானின் குரேஷி, இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–இத்தாலியின் பாபியோ போக்னினி ஜோடிகள் வெற்றி வாய்ப்புள்ள ஜோடிகளாக கணிக்கப்பட்டுள்ளன. ஆனால் ரோகன் போபண்ணா ஜோடியை பொறுத்தவரை முதல் சுற்றில் பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் பெனாய்ட் பேர்–வாவ்ரிங்கா ஜோடியை சந்திக்கிறார்கள். இவர்களை மட்டும் வீழ்த்தி விட்டால் அதன் பிறகு போபண்ணா இணைக்கு இறுதி சுற்று வரை பெரிய அளவில் முட்டுக்கட்டை ஏதும் இருக்காது.

40 வயதான லியாண்டர் பெயஸ் இரட்டையர் பிரிவில் சென்னை ஓபனை 6 முறை வென்றிருக்கிறார். 5 முறை மகேஷ் பூபதியுடனும், இன்னொரு தடவை டிப்சரேவிச்சுடனும் இணைந்து சாதித்திருக்கும் பெயஸ், இப்போது புதிய ஜோடியுடன் கூட்டணி அமைத்து 7–வது பட்டத்திற்கு குறி வைத்துள்ளார்.

பரிசுத் தொகை எவ்வளவு?

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியே 78 லட்சமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு சுமார் ரூ.45 லட்சமும், 250 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். 2–வது இடம் பிடிக்கும் வீரருக்கு ரூ.23.64 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.13½ லட்சமும், 250 தரவரிசை புள்ளிகளும் அளிக்கப்படும். இறுதிசுற்றில் தோற்கும் இணைக்கு ரூ.7.17 லட்சம் கிடைக்கும்.

ஜனவரி 5–ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னணி வீரர்கள் முகாமிட்டு இருப்பதால் இந்த வார காலமும் சென்னை ரசிகர்களுக்கு விறுவிறுப்பான டென்னிஸ் விருந்து காத்திருக்கிறது.

தொடர்ந்து 2–வது ஆண்டாக நடப்பு சாம்பியன் இல்லை

2013–ம் ஆண்டில் சென்னை ஓபனில் சாம்பியன் பட்டத்தை வென்ற செர்பியாவின் ஜாங்கோ டிப்சரேவிச், காயம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு விலகி விட்டார். இதே போல் 2012–ம் ஆண்டு பட்டம் வென்ற கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 2013–ம் ஆண்டில் பங்கேற்கவில்லை. ஆக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சென்னை ஓபன் போட்டி, நடப்பு சாம்பியன் இன்றி தொடங்குகிறது.

இதே போல் 2009, 2010–ம் ஆண்டுகளில் பட்டம் வென்ற குரோஷியாவின் மரின் சிலிச்சுக்கு என்று இங்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 4 மாதங்கள் தடையை அனுபவித்த சிலிச்சும் இந்த முறை சென்னை ஓபன் பக்கம் திரும்பவில்லை.

இன்றைய ஆட்டங்கள்

பிரான ஆடுகளம் (மாலை 5 மணி முதல்)

பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), அல்பர்ட் ரமோஸ் (ஸ்பெயின்)– கரென் கச்சனோவ் (ரஷியா)– சகெத் மைனெனி (இந்தியா)

ஜீவன் நெடுஞ்செழியன் (இந்தியா)– ஜிரி வெஸ்லி (செக்குடியரசு)

கைல் எட்மன்ட் (இங்கிலாந்து)–வாசக் போஸ்பிசில் (கனடா)

ஆடுகளம் 1 (பிற்பகல் 2 மணி முதல்)

தகுதி சுற்று: நார்பெர்ட் கோம்பாஸ் (சுலோவக்கியா)– ராம்குமார் ராமநாதன் (இந்தியா)

தகுதி சுற்று: அலெக்சாண்டர் குட்யவ்ட்செவ் (ரஷியா)– பிரட்ரிக் நீல்சன் (டென்மார்க்)

யென்–ஹிசுன் லு (சீனத்தைபே)– டிம் சிம்செக் (அமெரிக்கா)

துடி செலா (இஸ்ரேல்)– லுகாஸ் லாக்கோ (சுலோவக்கியா)

ஆடுகளம் 2 (பிற்பகல் 2 மணி முதல்)

தகுதி சுற்று: ஹென்ரி லாக்சோனன் (சுவிட்சர்லாந்து)–மார்சென்கோ (உக்ரைன்)

தகுதி சுற்று: பிலிப் ஒஸ்வால்ட்(ஆஸ்திரியா)– ரடு அல்போட் (மால்டோவா)

category:

டர்பன் 2-வது டெஸ்ட்: காலிஸ் சதத்தில் தென்ஆப்பிரிக்கா 500 ரன் குவிப்பு தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

Posted: 29 Dec 2013 11:20 AM PST

டர்பன்,

டர்பன் டெஸ்டில் காலிசின் சதத்தின் உதவியுடன் தென்ஆப்பிரிக்கா 500 ரன்கள் குவித்தது. 166 ரன் பின்தங்கிய இந்தியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடுகிறது.

காலிஸ் சதம்

இந்தியா-தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் 78 ரன்களுடனும், ஸ்டெயின் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் காலிஸ், கவனமுடன் பந்துகளை எதிர்கொண்டு பொறுமையை கடைபிடித்தார். மறுமுனையில் விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட ஸ்டெயினும் அட்டகாசப்படுத்தினார். இந்த ஜோடியை மிரட்டும் அளவுக்கு இந்திய பந்து வீச்சு எடுபடவில்லை. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது.

அதற்குள் காலிஸ் தனது 45-வது டெஸ்ட் சதத்தை சுவைத்து விட்டார். இந்தியாவுக்கு எதிராக அவரது 7-வது செஞ்சுரியாகும். தனது கடைசி போட்டியில் மிகவும் பிரமிப்பான ஒரு இன்னிங்சை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்திய காலிஸ் 115 ரன்களில் (316 பந்து, 13 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ஸ்டெயினும் (44 ரன், 94 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

தென்ஆப்பிரிக்கா 500 ரன்

இதன் பின்னர் பாப் டு பிளிஸ்சிஸ்சும், ராபின் பீட்டர்சனும் கைகோர்த்து அதிரடிவேட்டை நடத்தினர். குறிப்பாக ராபின் பீட்டர்சன் இந்திய பந்துவீச்சை நொறுக்கியெடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. ராபின் பீட்டர்சன் 31 ரன்களில், முகமது ஷமியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்திருக்க வேண்டியது. சூப்பரான எல்.பி.டபிள்யூ. வாய்ப்பை நடுவர் ஸ்டீவ் டேவிஸ் நிராகரித்து விட்டார். பந்து அவரது காலுறையில் மட்டும் படாமல் இருந்திருந்தால் நடுஸ்டெம்பை தாக்கியிருக்கும். நடுவரின் கருணையுடன் தொடர்ந்து பேட் செய்யும் வாய்ப்பை பெற்ற ராபின் பீட்டர்சன் மேலும் ஆக்ரோஷம் காட்டினார்.

அணியின் ஸ்கோர் 497 ரன்களாக உயர்ந்த போது, ராபின் பீட்டர்சன் 61 ரன்களில் ( 52 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாகீர்கானின் பந்து வீச்சில் வீழ்ந்தார். பிளிஸ்சிஸ்-ராபின் ஜோடி 108 பந்துகளில் 110 ரன்களை சேகரித்தது கவனிக்கத்தக்க அம்சமாகும். இதைத் தொடர்ந்து பிளிஸ்சிஸ் 43 ரன்களிலும் (70 பந்து, 4 பவுண்டரி), மோர்கல் ரன் ஏதுமின்றியும் வெளியேற தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இது இந்தியாவின் ஸ்கோரை விட 166 ரன்கள் அதிகமாகும். தென்ஆப்பிரிக்கா பேட் செய்த போது மழையால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

2 விக்கெட் சரிவு

பின்னர் 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. விஜய் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் ஷிகர் தவானும், புஜாராவும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்ஆப்பிரிக்க பவுலர்கள் அசுர வேகத்தில் தாக்குதல் நடத்தினர். பல பந்துகளை நமது வீரர்கள் சீண்டவே இல்லை. இதனால் ரன்வேகம் ஆமை வேகத்தில் நடைபோட்டது. முதல் 10 ஓவர்களில் இந்தியா 10 ரன் மட்டுமே எடுத்தது.

இந்த ஜோடியை பிரிக்க தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித், பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. தவான் (19 ரன், 87 பந்து) அருகில் நின்ற பிளிஸ்சிஸ்சால் பிரமாதமாக கேட்ச் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புஜாராவும், கோலியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் சமாளித்துக் கொண்டனர்.

4-வது நாள் முடிவில் இந்திய அணி 36 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 32 ரன்களுடனும் (90 பந்து), கோலி 11 ரன்னுடனும் (26 பந்து) களத்தில் இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு சிக்கல்

இந்திய அணி இன்னும் 98 ரன்கள் பின்தங்கி இருப்பதால் தற்போதைய நிலையில் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடைசி நாளில் மழை பெய்வதற்கும் பெரிய அளவில் வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே இந்திய வீரர்கள் ஆட்டத்தை டிராவுக்கு கொண்டு செல்ல கடுமையாக போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இன்றைய 5-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 334

தென்ஆப்பிரிக்கா

சுமித் (சி) தவான் (பி) ஜடேஜா 47

அல்விரோ பீட்டர்சன் (சி) விஜய்

(பி) ஜடேஜா 62

அம்லா (பி) முகமது ஷமி 3

காலிஸ்(சி)டோனி(பி)ஜடேஜா 115

டிவில்லியர்ஸ் (சி) கோலி

(பி) ஜடேஜா 74

டுமினி எல்.பி.டபிள்யூ(பி)ஜடேஜா 28

ஸ்டெயின் (சி) டோனி

(பி) ஜாகீர்கான் 44

பாப் டு பிளிஸ்சிஸ் (ரன்-அவுட்) 43

ராபின் பீட்டர்சன் (சி) விஜய்

(பி) ஜாகீர்கான் 61

பிலாண்டர் (நாட்-அவுட்) 0

மோர்னே மோர்கல் (சி) அண்ட்

(பி) ஜடேஜா 0

எக்ஸ்டிரா 23

மொத்தம் (155.2 ஓவர்களில்

ஆல்-அவுட்) 500

விக்கெட் வீழ்ச்சி: 1-103, 2-113, 3-113, 4-240, 5-298, 6-384, 7-387, 8-497, 9-500

பந்து வீச்சு விவரம்

ஜாகீர்கான் 29-4-97-2

முகமது ஷமி 27-2-104-1

இஷாந்த் ஷர்மா 31-7-114-0

ரவீந்திர ஜடேஜா 58.2-15-138-6

ரோகித் ஷர்மா 11-1-29-0

2-வது இன்னிங்சில்

இந்தியா

தவான் (சி) பிளிஸ்சிஸ் (பி)

ராபின் பீட்டர்சன் 19

விஜய்(சி) சுமித் (பி) பிலாண்டர் 6

புஜாரா (நாட்-அவுட்) 32

கோலி (நாட்-அவுட்) 11

மொத்தம் (36 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 68

விக்கெட் வீழ்ச்சி: 1-8, 2-53

பந்து வீச்சு விவரம்

ஸ்டெயின் 7-5-5-0

பிலாண்டர் 6-2-9-1

மோர்னே மோர்கல் 6-2-11-0

ராபின் பீட்டர்சன் 9-2-23-1

டுமினி 8-2-20-0

category:

ஆஷஸ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி

Posted: 29 Dec 2013 11:10 AM PST

மெல்போர்ன்,

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4–வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

231 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4–வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 255 ரன்களும், ஆஸ்திரேலியா 204 ரன்களும் எடுத்தன. 51 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும், 2–வது இன்னிங்சில் சொதப்பிய இங்கிலாந்து அணி வெறும் 179 ரன்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சுலபமான இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.

ரோஜர்ஸ் சதம்

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் ரோஜர்சும் (18 ரன்), டேவிட் வார்னரும் (12) முந்தைய நாள் ஸ்கோருடன தொடர்ந்து பேட் செய்தனர். ரோஜர்ஸ் 19 ரன்களில் இருந்த போது, ஸ்லிப் பகுதியில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் குக் வீணடித்தார். இதற்குரிய விளைவு இங்கிலாந்துக்கு கடுமையாக இருந்தது. வார்னர் 25 ரன்களில் வெளியேறினாலும் ரோஜர்ஸ் வெளுத்து கட்டினார். அவருக்கு ஷேன் வாட்சன் பக்கபலமாக நின்றார்.

அபாரமாக ஆடிய ரோஜர்ஸ் பவுண்டரி அடித்து தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் சதம் அடித்த 6–வது ஆஸ்திரேலிய வீரர் ரோஜர்ஸ் ஆவார். அவர் 116 ரன்களில் (155 பந்து, 13 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

ஆஸ்திரேலியா வெற்றி

இதைத் தொடர்ந்து ஷேன் வாட்சனும் (83 ரன், 90 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் (6 ரன்) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஆஸ்திரேலிய அணி 51.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 8 விக்கெட்டுகள் சாய்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 4–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் வருகிற 3–ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

8 ஆயிரம் ரன்களை கடந்தார், கிளார்க்

*ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பவுண்டரி அடித்து 5 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 6–வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்றார். 32 வயதான கிளார்க் இதுவரை 101 டெஸ்டில் பங்கேற்று 26 சதங்களுடன் 8003 ரன்கள் குவித்துள்ளார்.

*சதம் விளாசிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் ரோஜர்ஸ்சின் தற்போதைய வயது 36 ஆண்டு 117 நாட்கள் ஆகும். 1953–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த லின்ட்சே ஹஸ்செட்டுக்கு (அப்போது அவரது வயது 39 ஆண்டு 301 நாள்) பிறகு அதிக வயதில் சதம் அடித்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை ரோஜர்ஸ் பெற்றார்.

குக்கின் கேப்டன் பதவிக்கு நெருக்கடி

தொடர்ந்து 4 டெஸ்டுகளில் படுதோல்வி அடைந்துள்ளதால் இங்கிலாந்து கேப்டன் 29 வயதான அலஸ்டயர் குக்கின் கேப்டன் பதவிக்கு ஆபத்து உருவாகியுள்ளது. ஆனாலும் அவர் கேப்டன் பதவியை விட்டு விலக தயாராக இல்லை. அவர் கூறும் போது ''100 சதவீதம் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன். இப்பணியை உற்சாகமாக செய்து வருகிறேன். அணியின் கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு, கேப்டன் பதவிக்கு நான் பொருத்தமான நபராக இல்லை என்று தேர்வு குழு முடிவு செய்தால், அதை செய்யட்டும். மற்றபடி கேப்டன் பதவியில் இருந்து விலகும் திட்டம் இல்லை' என்றார்.

category:

தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’

Posted: 29 Dec 2013 10:57 AM PST

மொரதாபாத்,

62–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழ்நாடு–உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு 25–17, 25–16, 25–14 என்ற நேர் செட்டில் உத்தரகாண்ட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நவீன் ராஜா ஜேக்கப், ஜி.ஆர்.வைஷ்ணவ் ஆகியோரின் கலக்கலான ஆட்டம் தமிழக அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.

பெண்கள் பிரிவில் ரெயில்வே அணி 25–17, 25–10, 23–25, 25–21 என்ற செட் கணக்கில் கேரளாவை வீழ்த்தி பட்டத்தை ருசித்தது முன்னதாக பெண்கள் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 26–24, 25–16, 25–21 என்ற நேர் செட்டில் அரியானாவை சாய்த்து வெண்கலத்தை தட்டிச் சென்றது.

category:

காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும் மத்திய மந்திரி சுதர்சனநாச்சியப்பன் பேட்டி

Posted: 29 Dec 2013 10:57 AM PST

ராமநாதபுரம்

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

மீனவர் பிரச்சினை

ராமநாதபுரத்தில் வர்த்தக சங்கம், தமிழ் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சுதர்சனநாச்சியப்பன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மத்திய அரசின் சார்பில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட 6 லட்சம் ரேஷன் கடைகளை நாடு முழுவதும் தொடங்க உள்ளோம்.

இதன்மூலம் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக சென்று சேரும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் வழிமாறி எல்லை தாண்டுபவர்களை மீட்க கடற்படை, கடலோர காவல்படையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எல்லைதாண்டி செல்பவர்களை சட்ட ரீதியாக மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடந்து வருகிறது. அந்தபகுதியை சேர்ந்த ஈழ மீனவர்கள் 35 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தற்போது மீன்பிடி தொழிலை தொடங்கி உள்ளனர். அந்த பகுதிக்குள் இந்திய மீனவர்களும் செல்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்.

ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தற்போது 3–வது சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 20–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் சந்திக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உதவவேண்டும்.

வலுவான கூட்டணி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்படவில்லை. விடுதலை பெற்றுள்ளதாக நினைக்கிறோம். காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும். அதற்காக தே.மு.தி.க. உள்பட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமவன்னி உடன் இருந்தார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வர்த்த சங்கத்தினரிடம் குறைகள் கேட்டார். இதில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழ் சங்கம் சார்பில் நடந்த இலக்கிய விழாவில் தலைவர் அப்துல்சலாம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஜனவரி மாத இறுதிக்குள் பா.ஜனதா கூட்டணி முடிவு செய்யப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted: 29 Dec 2013 10:45 AM PST

குழித்துறை

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி ஜனவரி மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டம்

பாரதீய ஜனதா காட்சியின் குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். குழித்துறை நகர தலைவர் ரத்தினமணி வரவேற்று பேசினார்.

மாவட்ட பொதுசெயலாளர் சொக்கலிங்கம் அறிக்கை படித்தார். பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொது செயலாளர்கள் ராஜசேகர், ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் காந்தி, உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், விஜு, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

கன்னியாகுமரி மாவட்டதில் ஏழை சிறு மற்றும் குறு விவசாயிகள் நலன் கருதி தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம், கஸ்தூரி ரெங்கன் குழு பரிந்துரை, வனவிலங்கு கள் பாதுகாப்பு பகுதி சட்டம், ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரெயில்களும் தற்போது, இயங்கி கொண்டிருப்பது போன்று நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுசீந்திரத்தில் போர்கால நடவடிக்கை எடுத்து புதிதாக அகலமாக பாலம் கட்ட வேண்டும்.

குமரி மாவட்ட சில தனியார் கல்வி நிறுவனங்கள், இந்துகளின் விழா நாட்களில் கல்வி நிறுவனங்களை இயக்குவதை தடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தின் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் தரமான முறையில் செப்பனிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட துணைத் தலைவர் விஜய பிரசாத் நன்றி கூறினார்.

பேட்டி

செயற்குழு கூட்டம் தொடங்கும் முன்பு பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

'வீடுதோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை' நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி பகுதிகளில் 150 இடங்களில் ஜனவரி 12–ல் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி மாநாடு பிப்ரவரி மாதம் நிறைவுபெறும். பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மார்ச் மாதம் 1–ந் தேதி முதல் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி ஜனவரி மாதம் இறுதிக்குள் முடிவுசெய்யப்படும்.

பேச்சுவார்த்தை

கூட்டணி குறித்து வை.கோ. ஐ.ஜெ.கே. தலைவர் பச்சை முத்து, மற்றும் பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. விஜயகாந்தும் பா.ஜனதா கூட்டணியில் வருவார் என நம்பிக்கை உள்ளது.

காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் முகவரி தெரியாமல் போய் விடுவார்கள். திராவிட கட்சிகள் திடீரென கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு திடீரென கூட்டணி அமைத்து விடுகிறார்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், மீண்டும் குளச்சல் துறைமுகம் கொண்டு வரப்படும்.

மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம்: சட்டக்கல்லூரி மாணவி திருச்சி சிறையில் அடைப்பு

Posted: 29 Dec 2013 10:36 AM PST

மதுரை,

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றாங்கரையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உடனே அவரையும், அவருடன் உண்ணாவிரதம் இருந்த அவரது தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வரை அதிகாரிகள் நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அவரது தந்தை ஆனந்தனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நந்தினியின் தங்கை உண்ணாவிரத்தை வாபஸ் வாங்கியதால் அவரை போலீசார் விடுவித்தனர்.

category:

தி.மு.க. வேட்புமனு தாக்கலில் தள்ளுமுள்ளு; அடிதடி ‘திடீர்’ பரபரப்பு

Posted: 29 Dec 2013 10:31 AM PST

மதுரை,

மதுரையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்கள் பெறுவதில் திடீரென்று தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்கட்சி தேர்தல்

தி.மு.க. உள்கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.

இதுபோல் மதுரை மாவட்டத்திலும் பல இடங்களில் தி.மு.க. சார்பில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்ட தி.மு.க. பேரூர் கழக நிர்வாகி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். தேர்தல் ஆணையர் செல்வராகவன் தலைமை தாங்கினார்.

மனு தாக்கல் தொடங்கியவுடன், முதலில் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

திடீர் தள்ளுமுள்ளு

ஆனால் அங்கு இருந்த வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், எங்கள் பகுதி வேட்பு மனுக்களை தான் முதலில் பெற வேண்டும் என்று கூறினர். ஆனால் தேர்தல் ஆணையர் இதற்கு மறுத்ததாக தெரிகிறது.

இதனால் வாடிப்பட்டி நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். அப்போது மாவட்ட செயலாளர் மூர்த்தி, கோஷம் எழுப்பிய நிர்வாகிகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது. அப்போது சிலர், அடி–தடியில் ஈடுபட்டனர். அதன்பின் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

இதன்பின் தொடர்ந்து மனு தாக்கல் நடந்தது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறும் போது, 'இங்கு எந்த அடி–தடியும் நடக்கவில்லை. மனு தாக்கல் செய்வது தொடர்பாக முந்திக் கொண்டு சிலர் வந்தனர். இதுதொடர்பான பிரச்சினை தான் நடந்தது. வேறு எதுவும் அசம்பாவிதம் நடைபெறவில்லை' என்று தெரிவித்தார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™