Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மும்பையில் பா.ஜனதா பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஊழலில் மூழ்கியவர்கள் உபதேசம் செய்கிறார்கள் ராகுல்காந்தி மீது நரேந்திரமோடி தாக்கு

Posted: 22 Dec 2013 11:05 AM PST

மும்பை,

ஊழலில் மூழ்கியவர்கள் உபதேசம் செய்கிறார்கள் என்று ராகுல்காந்தி மீது மும்பையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கி பேசினார்.

பொதுக்கூட்டம்

மும்பையில் நேற்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக இதில் கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்களுக்காக 35 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதேபோல டீ விற்பனையாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அவர்களுக்கும் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

நரேந்திர மோடி மேடைக்கு வந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொண்டர்களை நோக்கி அவர் கையசைத்தார். அவருடன் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கும் வந்தார்.

பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது:–

ஊழலில் மூழ்கியவர்கள்

காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர் (ராகுல் காந்தி) நேற்று முன்தினம் பேசியதை நான் கேட்டேன். அவர் ஊழலுக்கு எதிராக பேசினார். அவரது தைரியத்தை பாருங்கள். அவர்கள் ஊழலிலேயே மூழ்கியவர்கள். இருப்பினும், அதற்கு எதிராக பேசும்போது தங்களது அப்பாவித் தனமான முகத்தை பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். ஊழலில் மூழ்கியவர்கள், அதற்கு எதிராக உபதேசம் செய்கிறார்கள்.

மராட்டியத்தில் ஆதார்ஷ் வீட்டுவசதி ஊழல் வழக்கில் பெரும்பாலான மந்திரிகள் குற்றம் சுமத்தப்பட்டனர். அது தொடர்பான விசாரணை அறிக்கையை அரசு நிராகரித்து உள்ளது. ஒரு பக்கத்தில் ஊழலை கட்டி காப்பதில் மராட்டிய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மற்றொரு பக்கத்தில், ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் டெல்லியில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சி சொல்வது வேறு, செய்வது வேறு.

பிரித்தாளும் கொள்கை

காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது. இதற்காக பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கின்றனர். இந்த கொள்கையை அவர்கள் வெள்ளையர்களிடம் இருந்து கற்றுக் கொண்டனர். சிதறிக் கிடந்த இந்திய நிலப்பகுதிகளை ஒன்றிணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல். ஆனால் சாதி, மதம் மற்றும் மொழி ஆகியவற்றின் பேரில் பிரித்தாளும் செயல்களில் ஈடுபடுபவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.

சகோதரர்களுக்கு இடையே குடும்மிப்பிடி சண்டை போட்டு கொள்ள மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினர். மக்கள் இடையே மொழி, நதி நீர் பிரச்சினைகளை எழுப்பி வேடிக்கை பார்ப்பது காங்கிரஸ் கட்சி.

இந்தியாவை விடுவிக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு வரலாறோ, பூகோளமோ காரணம் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மட்டும் தான் காரணம். நாம் சுதந்திரம் பெற விரும்பினால், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்தியாவை முதலில் விடுவிக்க வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின்போது 'வெள்ளையனே வெளியேறு முழக்கம் முதன் முதலில் மும்பை மண்ணில்தான் ஒலித்தது. அது நாடு முழுவதும் பரவியது. அதுபோல 'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்ற முழக்கம் மும்பையில் இருந்து ஒலிக்க வேண்டும். 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக வாக்களியுங்கள். அரசியல் கட்சிகளின் பெயருக்காக வாக்களிக்க வேண்டாம். நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், பரம்பரை ஆட்சிமுறை, ஊழல், பணவீக்கம் மற்றும் தவறான ஆட்சிமுறை ஆகியவற்றை நீக்கி, நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டி 'இந்தியாவுக்கு வாக்களியுங்கள்' என்பது தான்.

கறுப்பு பணம்

வாஜ்பாய் தலைமையில் அரசு நடந்தபோது சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைக்கவில்லை என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் எழுதி கொடுத்தனர். அவ்வாறு எழுதி தர காங்கிரஸ் எம்.பி.க்கள் மறுத்து விட்டனர். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கொண்டு வருவோம். அந்த பணத்தை நாட்டின் மேம்பாட்டுக்காவும், ஏழை– எளிய மக்களின் நலனுக்காகவும் செலவு செய்வோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலை பெற யாரும் சிபாரிசுக்காக அலைய வேண்டாம். திறமையை அடிப்படையாக கொண்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

category:

News Group Category:

‘கட்சிப்பணிக்காகவே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன்’ ஜெயந்தி நடராஜன் பேட்டி

Posted: 22 Dec 2013 10:59 AM PST

புதுடெல்லி,

''கட்சிப்பணிக்காகவே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன்'' என ஜெயந்தி நடராஜன் கூறினார்.

ராஜினாமா

சமீபத்தில் நடந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய நிலையில், காங்கிரஸ் கட்சி வரும் ஏப்ரல்–மே மாதங்களில் பாராளுமன்றத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கு கட்சியை தயார் செய்யும் விதத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை ராஜாங்க மந்திரி (தனிப்பொறுப்பு) ஜெயந்தி நடராஜன், நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரைபேரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். ஜெயந்தி நடராஜனுக்கு கட்சியில் பதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயந்தி நடராஜனின் பதவி விலகலுக்கு, அவரது சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், பிற அமைச்சகங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்குத்தான் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயந்தி நடராஜன் விளக்கம்

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயந்தி நடராஜன் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு வந்த எந்த திட்டங்களையும் கிடப்பில் போடவில்லை. அப்படி எந்த திட்டமும் கிடையாது. 100 சதவீதம் கட்சிப்பணி ஆற்றுவதற்காகத்தான் நான் பதவி விலகினேன். வேறு காரணம் எதுவும் கிடையாது. பிரதமர் எனது பணியைப் பாராட்டி இருக்கிறார்.

8 சதவீத திட்டங்கள்

8 சதவீத திட்டங்கள்தான் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக வருகின்றன. மீதி 92 சதவீத திட்டங்களுக்கு மாநில அரசுகளே ஒப்புதல் வழங்கி விடுகின்றன. எனக்கு எதுவும் வந்தது இல்லை. எந்தத் திட்டமும் நிலுவையில் போடப்படவில்லை.

அணைகள், நீர் மின்நிலையங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களைப் பொறுத்தமட்டில், உத்தரகாண்ட் துயரச் சம்பவத்துக்குப் பின்னர் அனைத்து அம்சங்களையும் மிகவும் கவனத்துடன் ஆராய வேண்டி உள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்களை எடுக்கும் இத்தகைய திட்டங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் கவனத்துடன் மதிப்பிட வேண்டி உள்ளது.

தன்னிச்சையான முடிவு

சட்டப்படியான சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் உள்ளன. உத்தரகாண்ட் துயரத்துக்குப் பிறகு எங்களுக்கு அச்சம் உண்டு.

நான் தன்னிச்சையாகவே கட்சிக்கு பணியாற்ற முன்வந்துள்ளேன்.

எனது நடவடிக்கைகள் எல்லாமே இணைய தளத்தில் உள்ளன. அவை ஒளிவுமறைவற்றவை.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

தெற்கு சூடானில் அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் இந்திய வீரர்களின் துணிச்சலால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது ஐ.நா.சபை அதிகாரி பாராட்டு

Posted: 22 Dec 2013 10:32 AM PST

நியூயார்க்,

தெற்கு சூடானில் அமைதிப்படை முகாம் மீது நடைபெற்ற தாக்குதலின் போது இந்திய வீரர்களின் துணிச்சல்மிக்க செயல்களால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது என ஐ.நா.சபை அதிகாரி பாராட்டினார்.

2 இந்திய வீரர்கள் உயிர் தியாகம்

ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடானின் அதிபரின் ராணுவத்துக்கும், துணை அதிபரின் புரட்சிப்படைக்கும் இடையே கடும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதில் 500–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் தஞ்சம் தேடி ஓடுகிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா.சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படையினர் 6 இடங்களில் முகாம் அமைத்து பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையில் இந்திய ராணுவ வீரர்கள் கணிசமான அளவில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதுபோன்று அகோபோ நகரில் அமைக்கப்பட்ட முகாமில் 43 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்த முகாம் மீது கடந்த 19–ந்தேதி புரட்சிப்படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதில் 2 இந்திய வீரர்கள் உள்பட 22 பேர் உயிர் இழந்தனர். மேலும் ஒரு இந்திய வீரர் படுகாயம் அடைந்தார்.

உயிர் தியாகம் செய்த 2 இந்தியர்கள் வாரண்டு அதிகாரிகள் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆவார்கள். காயம் அடைந்தவரின் பெயர் மோன்தால் ஷாபுல். இவரது மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. தற்போது அவர் மலாகால் என்ற இடத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.

இரங்கல் கூட்டம்

உயிர் இழந்த 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் தலைநகர் ஜூபாவில் உள்ள ஐ.நா.சபை அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி (தெற்கு சூடான்) ஹில்டே ஜான்சன் கலந்து கொண்டு 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிறகு இவர்களின் உயிர் தியாகத்தை அவர் புகழ்ந்து பேசினார். குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய வீரர்கள் துணிச்சல்

இந்த அமைதிப்படை முகாமில் பணியில் இருந்த 43 இந்தியர்களும் துணிச்சலுடன் செயல்பட்டார்கள். இதனாலேயே பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'தெற்கு சூடானில் எங்கள் பணி தொடரும். அதற்கு அச்சுறுதல்கள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு சூடான் வெளியுறவு மந்திரி பர்னபா மரில் பெஞ்சமின் பேசுகையில், 'இந்த தாக்குதலை நடத்தியவர்களை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்' என்றார்.

அமெரிக்கா எச்சரிக்கை

இதற்கிடையில் அமெரிக்க போர் விமானங்கள் மீது புரட்சியாளர்கள் சுட்டதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். அங்கு வசிக்கும் அமெரிக்கர்களை மீட்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.

இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார். தெற்கு சூடானில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

category:

News Group Category:

இந்திய எல்லைக்குள் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்

Posted: 22 Dec 2013 10:20 AM PST

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லைப்பகுதியான தவுலத் பெக் ஒல்டி பகுதிக்குள் கடந்த ஏப்ரல் மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தன. சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய அவர்கள் கூடாரங்கள் அமைத்து, சீன கொடிகளையும் நாட்டினர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் சீன படைகள் மீண்டும் காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள செப்சி பகுதியில் ஊடுருவி முகாமிட்டுள்ளனர். கடந்த வாரம் 22 சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 10 கூடாரங்களை அமைத்து, சீன கொடிகளையும் நாட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

category:

News Group Category:

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும் தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்?

Posted: 22 Dec 2013 10:11 AM PST

நியூயார்க்,

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும், தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேவயானிக்கு ஐ.நா.வில் பணி

அமெரிக்காவில், நியூயார்க் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த தேவயானி கோப்ரகடே, கடந்த 12–ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு ஆளாக்கப்பட்டது இந்தியாவில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் இந்தியா–அமெரிக்கா இடையே தூதரக அளவில் மோதல் உருவாகி உள்ளது.

'வியன்னா உடன்படிக்கை'யின்படி, தூதரகப்பணியில் உள்ள தேவயானிக்கு விலக்குரிமை உள்ளிட்ட சலுகைகளை தர முடியாது என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அவரை ஐ.நா. தூதரகத்தில் கவுன்சலராக (ஆலோசகராக) நியமித்து, இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவானது.

பான்கி மூனுக்கு கடிதம்

இந்த நிலையில், தேவயானியின் பணி நியமனம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியா முறைப்படி கடிதம் எழுதி உள்ளது. இந்தக் கடிதத்தை இந்தியாவின் சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி எழுதி உள்ளார். அத்துடன், தேவயானி தொடர்பான ஆவணங்கள், பாஸ்போர்ட்டு விவரங்களையும் அவர் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:–

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். அதில் எங்கள் தூதரகக்குழுவில் ஆலோசகராக தேவயானி கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றியும், அவருக்கு தூதரக அதிகாரிக்குரிய அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பது குறித்தும் எழுதி உள்ளேன். அவரது பெயர், எங்கள் தூதரகக்குழுவில் எந்த இடத்தில் இடம்பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

அமெரிக்கா அனுமதி அளிக்குமா?

நான் அனுப்பியுள்ள ஆவணங்களை ஐ.நா. சபை, அமெரிக்காவில் வெளியுறவுத்துறையின்கீழ் இயங்கி வருகிற வெளிநாட்டு தூதரகங்களுக்கான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்குதான் மரபுரிமைப்படி அனுமதி அளிக்கப்படவேண்டும்.

ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் ஜன் எலியாசனையும் நேரில் சந்தித்துப் பேசினேன். தேவயானி தொடர்பான பிரச்சினைகளை ஐ.நா. அறியும். எங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியாகி விட்டது. அந்த ஆவணங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பதில் அளிக்க வேண்டும். இனி இந்த விவகாரம் ஐ.நா.வுக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கும் இடையேதான் கையாளப்படும்.

தேவயானியைப் பொறுத்தமட்டில், அவர் ஆலோசகர் பதவியுடன் தூதரக அதிகாரியாக இருப்பார். அந்த வகையில் தூதரக அதிகாரிக்கான அடையாள அட்டையை அவருக்கு எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சலுகைகள் கிடைக்குமா?

தேவயானி ஐ.நா.வில் பணியில் சேர்ந்தபிறகுதான் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்புச்சலுகைகள் வந்து சேரும், தேவயானிக்கு சிறப்புச்சலுகைகள் வழங்க வேண்டியது தொடர்பாக ஐ.நா. பங்களிப்பு ஏதும் கிடையாது, இதில் முடிவு எடுக்க வேண்டியது அமெரிக்காதான் என தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளுக்கு சிறப்புச்சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஐ.நா.வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உடன்படிக்கை உள்ளது. தேவயானிக்கு புதிய பதவி காரணமாக கூடுதல் சிறப்புச்சலுகை வந்து சேர முடியும், ஆனால் கிரிமினல் வழக்கிலிருந்து விலக்கு கிடைக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

தற்போது விசா மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தேவயானிக்கு சிறப்புச்சலுகைகளை அமெரிக்கா வழங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐ.நா.வில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டையையே அமெரிக்க வெளியுறவுத்துறை தான் வழங்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

category:

News Group Category:

பிரதமர் பதவி விலக வலியுறுத்தி தாய்லாந்தில் மீண்டும் பிரமாண்ட பேரணி

Posted: 22 Dec 2013 09:57 AM PST

பாங்காக்

தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தி அரசாங்க அலுவலகங்களை முற்றுகையிட்டார்கள். இதனால் பிப்ரவரி 2–ந்தேதி தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்தார்.

ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் பாங்காக் நகரில் மீண்டும் பிரதமருக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
 

category:

News Group Category:

காங்கிரஸ் மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு ‘எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெறலாம்’

Posted: 22 Dec 2013 09:48 AM PST

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி, எந்த நேரத்திலும் தனது ஆதரவை வாபஸ் பெறலாம் என்று, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தாக்குதல் தொடுத்தார்.

கிரிமினல் காங்கிரஸ்

மக்கள் கருத்தை அறிந்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்த நிலையிலும், டெல்லி லோதி காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ''கிரிமினல்கள், கபட வேடதாரிகளைக்கொண்ட கட்சி காங்கிரஸ் என்றும் எந்த நேரத்திலும் அந்த கட்சி ஆதரவை வாபஸ் பெறலாம் என்றும், தாக்கிப்பேசினார். அவர் மேலும் கூறியதாவது–

''ஆதரவை வாபஸ் பெற காங்கிரஸ் முடிவு செய்யும் போது, கெஜ்ரிவால் அடிக்கடி இருமுகிறார்; இதனால் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று கூட அவர்கள் அதற்குக் காரணம் கூறலாம். சவுத்ரி சரண்சிங், சந்திரசேகர் ஆட்சியின்போது இதைத்தான் காங்கிரஸ் கட்சி செய்தது.

அரசியல் புனிதமானது

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை அரசியல் என்பது புனிதமான பணி. ஆனால், இன்று அரசியல் கிரிமினல் குற்றவாளிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அரசியலை மாற்றும் பணியில் நாம் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைகளும் மாயமாய் மறைந்துவிடும்''.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

பா.ஜனதா மீதும் தாக்கு

அவர் கலந்து கொண்ட எல்லா கூட்டங்களிலுமே பெரும்பான்மையான மக்கள் ''ஆட்சி அமையுங்கள்; நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்'' என்று மக்கள் கோஷம் எழுப்பினார்கள். கெஜ்ரிவால் பேசும்போது காங்கிரசை மட்டுமின்றி பா.ஜனதா மீதும் தாக்குதல் தொடுத்தார்.

''மக்கள் கருத்து கேட்பதை நாடகம் என்று, இரு கட்சியினரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் இதுதான் உண்மையான ஜனநாயகம்'' என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் கிரண்பெடி''காங்கிரஸ் புதிய பாடம் கற்கப்போகிறது. தாங்கள் செய்த ஊழலுக்காக ஜெயிலுக்குப் போகாமல் தப்பிக்கும் முயற்சி இது'' என்று விமர்சித்து இருக்கிறார்.

category:

News Group Category:

‘எதிர்க்கட்சித்தலைவர் போல ராகுல் காந்தி பேசுகிறார்’ பா.ஜனதா குற்றச்சாட்டு

Posted: 22 Dec 2013 09:44 AM PST

ஐதராபாத்,

எதிர்க்கட்சித்தலைவர் போல ராகுல் காந்தி பேசுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ராகுல் பேச்சு

டெல்லியில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் ஊழல் மலிந்துள்ளதாகவும், இதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் ரத்தக்கண்ணீர் வடிப்பதாக கூறியிருந்தார்.

ஆனால், ஆளும் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பது, எதிர்க்கட்சித்தலைவர் கூறுவது போல உள்ளதாக பா.ஜனதா மூத்த தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:–

பல்வேறு பிரச்சினைகள்

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராகுல் காந்தி, இது குறித்து அரசுக்கு ஏன் அறிவுரை வழங்கவில்லை?

காங்கிரஸ் கட்சியால் நாட்டின் வளர்ச்சி மட்டும் பாதிக்கவில்லை. மாறாக ஊழல்வாதிகளை பாதுகாத்தது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறியது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் ஆதாயத்துக்காக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். இவை குறித்தும் ராகுல் காந்தி பேச வேண்டும்.

பிரிவினைவாத சக்திகள்

காமன்வெல்த் விளையாட்டு ஊழலை விசாரிக்க காங்கிரஸ் அரசு சங்லு குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழுவின் அறிக்கையை அக்கட்சி இதுவரை வெளியிடவில்லை. இதைப்போல மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அக்கட்சியின் முதல்–மந்திரிகளை கட்சி பாதுகாத்து வருகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மென்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பிரிவினைவாத சக்திகளை காங்கிரஸ் அரசு ஆதரித்து வருகிறது. இவ்வாறு மத்திய அரசு அனைத்து துறையிலும் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.

நரேந்திர மோடி

இதை உணர்ந்தே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் விலகி வருகின்றன. எனவே கட்சியிலும், அரசிலும் செய்து வரும் கடைசி நேர மாறுதல்கள் எந்த வெற்றியையும் காங்கிரசுக்கு பெற்றுத்தராது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி எழுதப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெளியேற்றப்படும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
 

category:

News Group Category:

சோமாலியாவில் புதிய பிரதமர் தேர்வுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்

Posted: 22 Dec 2013 09:40 AM PST

மொகடிஷூ,

சோமாலியா நாட்டின் புதிய பிரதமராக அன்டிவெலி ஷேக் அகமதுவை கடந்த வாரம் ஜனாதிபதி ஹசன் முகமது நியமித்தார். இதனையொட்டி சோமாலியா பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மொத்தம் 243 உறுப்பினர்களில் புதிய பிரதமர் தேர்வுக்கு ஆதரவாக 239 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டார்கள். இந்த தகவலை சபாநாயகர் முகமது ஒசமான் ஜவாரி அறிவித்தார்.

category:

News Group Category:

சாலை விபத்துக்களில் இறந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 22 Dec 2013 09:39 AM PST

சென்னை,

பல்வேறு சாலை விபத்துக்களில் உயிர்இழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியை முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;–

விபத்தில் பலி

தர்மபுரி மாவட்டம், மூக்கனூர் தரப்பு, மூக்கனூர் – கிருஷ்ணாபுரம் சாலையில் 27–11–2013 அன்று பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரின் மகன் முனுசாமி; காஞ்சீபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் கிராமம், கிழக்கு கடற்கரை சாலை அருகே 28–11–2013 அன்று வேனில் பயணம் செய்த திண்டிவனம் வட்டம், கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மகன் வேலாயுதம்,

இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் மதுரா வெண்புருஷம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் சிவக்குமார்; சென்னை, வில்லிவாக்கம், எம்.டி.எச். சாலையில் 28–11–2013 அன்று இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ராஜமங்களம் பகுதியைச் சேர்ந்த சரவணன்;

சென்னை, அடையாறு அருகே 28–11–2013 அன்று சாலையில் சென்று கொண்டிருந்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மனைவி தயாநிதி;– ஆகியோர் அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், கோ.பூவனூர் கிராமம், உளுந்தூர்பேட்டை–விருதாச்சலம் சாலையில் 25–11–2013 அன்று காவல் வாகனம் மோதியதில் சதீஷ்குமார் என்பவரின் மகள் சிறுமி ஹர்ஷினி உயிரிழந்தாள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தலா ரூ.1 லட்சம் உதவி

இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™