Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


2–வது ஒருநாள் கிரிக்கெட் இலங்கை அணியிடம் பாகிஸ்தான் தோல்வி

Posted: 21 Dec 2013 10:55 AM PST

துபாய்,

இலங்கை–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது  ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி   4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.  அகமது ஷேசாத் 124 ரன்னும், கேப்டன் மிஸ்பா உல்–ஹக்   59 ரன்னும் சேர்த்தனர். பின்னர்  ஆடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சங்கக்கரா 58 ரன்னும், கேப்டன் மேத்யூஸ் 47 ரன்னும், சன்டிமால் 44 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1–1 என்ற சமநிலையை எட்டியது.   3–வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று   நடக்கிறது.

category:

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியது

Posted: 21 Dec 2013 10:54 AM PST

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியுள்ளது.

பல்வேறு ஏற்பாடுகள்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பண்டிகையை முன்னிட்டு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்த கிறிஸ்தவர்களில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். பண்டிகையை சிறப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

வீடுகளுக்கு வர்ணம் பூசி வண்ண வண்ண மின் விளக்குளால் அலங்கரித்துள்ளனர். கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்கவிட்டுள்ளனர். மேலும் கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் குடில் போன்றவற்றையும் வீடுகளில் வைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் குடில்

இதைப்போல கிறிஸ்தவ ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. ஆலய பங்கு சார்பிலும், சபை சார்பிலும் கிறிஸ்துமஸ் கேரல் பவனிகள் நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவருடன் குழுவினர் வீடு வீடாகச் சென்று கிறிஸ்துமஸ் ஆசிகளை வழங்கி வருகிறார்கள்.

இது தவிர பல்வேறு அமைப்பினர் தங்களது பகுதிகளில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடிலை லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைத்து வருகிறார்கள். குடில் அமைப்பதில் போட்டியும் நடக்கிறது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை குமரி மாவட்டத்தில் களை கட்டியுள்ளது. மேலும், பண்டிகை கொண்டாட்டத்துக்காக ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

இதை முன்னிட்டு முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக இருக்கும். இந்த கொண்டாட்ட ஆரவாரங்களின் காரணமாக, கடந்த ஆண்டுகளில் ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் நடைபெற்றன.

இதை தவிர்க்கும் பொருட்டு கடலோர பகுதிகளில் போலீஸ் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பவர் கிரிட் வெளியீடு வெற்றியால் உற்சாகம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராகும் நிறுவனங்கள்

Posted: 21 Dec 2013 09:28 AM PST

மும்பை

பொதுத் துறையைச் சேர்ந்த பவர் கிரிட் நிறுவனத்தின் மூன்றாவது பங்கு வெளியீட்டிற்கு கிடைத்த வெற்றியால் ஊக்கம் பெற்றுள்ள பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க அணிவகுத்து நிற்கின்றன.

மூன்றாவது பங்கு வெளியீடு

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பவர் கிரிட் கார்ப்பரேஷன் (பிஜிசிஐஎல்) 2007 அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. பின்னர் 2010 நவம்பரில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. அப்போது 10 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிறுவனம் அண்மையில் மூன்றாவது முறையாக புதிய பங்குகளை வெளியிட்டது. இடர்பாடான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இப்பங்கு வெளியீட்டுக்கு சிறப்பான ஆதரவு இருந்தது.

அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் அளித்த ஆதரவால் பவர் கிரிட் பங்கு வெளியீடு அமோக வெற்றி பெற்றது. தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்து மட்டும் 11.17 மடங்குகளுக்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. நிதி நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர் களிடமிருந்து முறையே 1.85 மற்றும் 1.17 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன.

12 நிறுவனங்கள் தயார்

இப்பங்கு வெளியீட்டிற்கு கிடைத்த அமோக வரவேற்பாலும், புத்தாண்டில் பங்கு வியாபாரம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும் 12–க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள தயாராகியுள்ளன. இதில் ஜி.எம்.ஆர். ஏர்போர்ட், ஷிமாரூ என்டர்டெயின்மென்ட், ஒன்டர்லா ஹாலிடேஸ் போன்ற நிறுவனங்களுடன், மும்பை பங்குச் சந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான பிரைம் டேட்டாபேஸ், ரூ.72 ஆயிரம் கோடி மதிப்பிற்கான புதிய பங்கு வெளியீட்டுத் திட்டங்களுக்கு செபி அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் செபியிடம் தமது புதிய வெளியீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நிலைக்கு வந்துள்ளன என்றும், ஏப்ரல், மே மாதங்கள் பங்கு வெளியிட சரியான காலமாக இருக்கும் என வங்கியாளர்கள் கருதுவதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் பொது பங்கு வெளியீடுகளில் பங்கேற்பதில் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் இன்னும் தயக்கம் நீடிப்பதாக கூறப்படுகிறது. இன்றைய நிலையில் நிதி நிறுவனங்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்கள்தான் பங்கு வெளியீடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் எதிர்வரும் புத்தாண்டில் சில்லறை முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஜஸ்ட் டயல்

பவர் கிரிட்டுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் அதிக நிதி (ரூ.927 கோடி) திரட்டிய நிறுவனம் ஜஸ்ட் டயல். மும்பையை சேர்ந்த இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு மே 20–ந் தேதி தொடங்கி 22–ந் தேதி நிறைவடைந்தது. இப்பங்கு வெளியீடு அமோக வெற்றி பெற்றது. வெளியீடு முடிந்த பின் ஒரு பங்கின் இறுதி விலை ரூ.530 என நிர்ணயம் செய்யப்பட்டது. பங்குச் சந்தைகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் பட்டியலிடப்பட்டன. தற்போது இந்நிறுவனப் பங்கின் விலை ரூ.1,325–ஆக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் மொத்தம் ரூ.40 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியாருக்கு ஏற்கனவே விற்கப்பட்ட நிறுவனங்களில் எஞ்சியுள்ள அரசுப் பங்கு மூலதனத்தை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.14,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த வழிமுறையில் மொத்தம் ரூ.54 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு விரும்புகிறது.

செபி விதிமுறை

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறையை நிறைவு செய்யும் வகையில், இதுவரை 6 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.3,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் பவர் கிரிட் கார்ப்பரேஷனின் மூன்றாவது பங்கு வெளியீடு மூலம் மத்திய அரசுக்கு ரூ.1,600 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

category:

புத்தாண்டில், அதிக லாபம் தர வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகள்

Posted: 21 Dec 2013 09:25 AM PST

மும்பை

2013–ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சில தினங்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் பங்குச் சந்தைகளில் கடும் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டது. இந்த நிலையில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு பிறக்கிறது. 2014–ஆம் ஆண்டில் அதிக லாபம் தர வாய்ப்புள்ள 10 நிறுவனங்களின் பங்குகள் குறித்து ஆய்வாளர்கள் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர்.

வங்கி, உலோகம்

எதிர்வரும் ஆண்டில் வங்கி, தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை நல்ல ஏற்றம் காண வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக வங்கித் துறையில் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ, உலோகத் துறையில் டாட்டா ஸ்டீல், இந்துஸ்தான் சிங்க், ஐ.டி. துறையில் டி.சி.எஸ்., மருந்து துறையில் சிப்லா மற்றும் கெடிலா ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் கணிசமான ஆதாயம் தரும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆக்சிஸ் வங்கியின் சில்லறை கடன் பிரிவு நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வங்கியின் மூலதன இருப்பு விகிதம் மற்றும் கட்டண வருவாய் சிறப்பாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் அண்மைக் கால விரிவாக்க நடவடிக்கைகள் அதன் வளர்ச்சிக்கு துணையாக உள்ளன. உலக அளவில், அடுத்த ஆண்டில் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட உள்ள பெரும் செலவினம் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு மிக சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவும் இதன் வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிப்லா நிறுவனத்தின் ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அமெரிக்க சந்தையில் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தி வருகிறது. இதே போன்று, உள்நாட்டில் ஐந்தாவது பெரிய மருந்து நிறுவனமான உள்ள கெடிலா ஹெல்த்கேரும் ஏற்றுமதி நடவடிக்கைகளை பரவலாக்கி வருகிறது.

புத்தாண்டில் உலோகங்களுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாட்டா ஸ்டீல், இந்துஸ்தான் சிங்க் போன்ற பங்குகள் குறித்த மதிப்பீடுகளும் சிறப்பாக உள்ளன. மேலும் பஜாஜ் ஆட்டோ, யுனைடெட் பாஸ்பரஸ், கிராம்ப்ட்ன் கிரீவ்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளதால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் முதலீட்டுக்கு ஏற்றவை என பரிந்துரை செய்யப்படுகிறது.

கடந்த கால செயல்திறன்

மேற்கண்ட 10 நிறுவனங்களின் பங்குகள் பற்றிய மதிப்பீடு சந்தையில் இந்த பங்குகளின் கடந்த கால செயல்திறன், தற்போதைய பங்கு வர்த்தக சூழ்நிலை, நிதி நிலை முடிவுகள், வருங்கால வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்பங்குகளில் முதலீடு செய்யும்போது, அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

category:

டிசம்பர் 20–ந் தேதி நிலவரப்படி நிகர நேரடி வரி வசூல் ரூ.4.12 லட்சம் கோடி

Posted: 21 Dec 2013 09:20 AM PST

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டில், மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல், டிசம்பர் 20–ந் தேதி நிலவரப்படி, 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.4.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.3.63 லட்சம் கோடியாக இருந்தது.

வரி வசூல் இலக்கு

நேரடி வரி வசூலில், நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரிகள் வாயிலாக ரூ.6.68 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் ரூ.5.65 லட்சம் கோடியாக இருந்தது. மறைமுக வரிகள் வாயிலாக ரூ.5.65 லட்சம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களும், தனிநபர்களும் ஒரு ஆண்டில் தமது நிகர லாபத்தை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கான வருமான வரியை ஜூன் 15, செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 ஆகிய நான்கு தவணைகளில் செலுத்துகின்றன. இதுவே முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) எனப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 20 வரை நிகர நேரடி வரி வசூலில் முன்கூட்டிய வரியின் பங்கு 8.8 சதவீதம் உயர்ந்து ரூ.2.03 லட்சம் கோடியாக உள்ளது. இதில் நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி மட்டும் ரூ.1.77 லட்சம் கோடியாகும். இப்பிரிவில் 8.4 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அளவில் நிறுவன வரி வசூல் 10.2 சதவீதம் அதிகரித்து ரூ.2.61 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி வசூல் 20.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1.48 லட்சம் கோடியாகவும் உள்ளது. சொத்து வரிகள் வாயிலாக ரூ.752 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பங்கு பரிவர்த்தனை வரி

பங்கு பரிவர்த்தனை வரியும் நேரடி வரிகளின் கீழ் வருகிறது. பங்குச் சந்தைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் பங்குளை வாங்கும்போதும், விற்கும்போதும் முதலீட்டாளர்கள் இந்த வரியை செலுத்த வேண்டும். ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 20 வரையிலான காலத்தில் இந்த வரி வசூல் ரூ.3,427 கோடியாக உள்ளது. பங்குச் சந்தைகளில் கடும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுவதால் இந்த வரி வசூல் திருப்திகரமாக இல்லை.

category:

மாணவன்-மாணவியை நிர்வாணமாக்கி ‘வீடியோ’ எடுத்து மிரட்டல் ரூ.25 லட்சம் கேட்ட 6 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Posted: 21 Dec 2013 09:17 AM PST

மங்களூர்,

மருத்துவ கல்லூரி மாணவன்-மாணவியை நிர்வாணமாக்கி 6 பேர் கொண்ட கும்பல் வீடியோ படம் எடுத்தது. பின்னர் அந்த வீடியோவை இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய அந்த 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரில் இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறி உள்ளது.

மருத்துவ கல்லூரி

கேரளாவை சேர்ந்தவர் முகமது(வயது 21. பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் மங்களூர் அருகே தேரளகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் முகமதுவுடன் ஒரு வகுப்பில் படிப்பவர் அப்சரா(21 வயது. பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோணஜே போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காரில் கடத்தல்

"கடந்த 18-ந் தேதி மாலை கல்லூரியில் இருந்து நாங்கள் தங்கி இருக்கும் விடுதியை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் முன் ஒரு கார் வந்து நின்றது. அதில் 6 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் கீழே இறங்கி எங்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டு கடத்திச் சென்றனர்.

அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்ற அந்த கும்பல், நாங்கள் அணிந்து இருந்த ஆடைகளை களைந்தனர்.

நிர்வாண படங்கள்

பின்னர் அவர்கள் வைத்திருந்த வீடியோ காமிராவிலும், புகைப்படம் எடுக்கும் காமிராவிலும் எங்களை நிர்வாணமாக படம் பிடித்தனர். பின்னர் எங்களிடம், ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர். பின்னர் எங்களிடம் இருந்த செல்போன்களை பறித்துக் கொண்டு 6 பேரும் காரில் சென்று விட்டனர்.

எங்களை நிர்வாண படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்து, அவர்களிடம் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களையும் கைப்பற்றி அழிக்க வேண்டும்"

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

போலீஸ் தந்திரம்

இதைத்தொடர்ந்து 6 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தந்திரம் ஒன்றை கையாண்டனர். அதன்படி கடத்தல் கும்பல் கொடுத்து இருந்த செல்போன் நம்பருக்கு மாணவியை தொடர்பு கொண்டு, ''25 லட்ச ரூபாய் தயாராக இருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லும்படி போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் சொல்லிக் கொடுத்தபடி ஒரு செல்போனில் இருந்து கடத்தல் கும்பலுடன் மாணவி அப்சரா தொடர்பு கொண்டார். ''எங்களிடம் ரூ.25 லட்சம் தயாராக உள்ளது. ஒரு இடத்தை சொல்லுங்கள். அங்கு வந்து பணத்தை கொடுக்கிறேன். நீங்கள் உங்களிடம் உள்ள நிர்வாண படங்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்'' என்று அப்சரா கூறினார்.

தப்பி ஓட்டம்

அதன்படி கடத்தல் கும்பல் தெரிவித்த கோணஜே போலீஸ் எல்லைக்குட்பட்ட இடத்துக்கு அப்சராவும், முகமதுவும் சென்றனர். அவர்களை பின் தொடர்பு மாறு வேடத்தில் போலீசார் சென்றனர். அந்த நேரத்தில் 6 வாலிபர்களும் ஒரு காரில் அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாறுவேடத்தில் போலீசார் வருவதை பார்த்துவிட்ட 6 பேரும் உஷார் அடைந்து அதே காரில் தப்பி ஓடினார்கள்.

உடனே போலீசார் மற்றொரு காரில் விரட்டிச் சென்றனர். ஆனால் காரில் இருந்த 6 பேரும் மின்னல் வேகத்தில் சென்று தலைமறைவாகி விட்டனர்.

வலைவீச்சு

அந்த கும்பல் கேரளாவுக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை கோணஜே போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மருத்துவ கல்லூரி மாணவன்-மாணவியை மர்ம கும்பல் நிர்வாணப்படம் எடுத்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் மங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி ஆணையம் அமைக்க வேண்டும் அசோசெம் அமைப்பு வலியுறுத்தல்

Posted: 21 Dec 2013 09:15 AM PST

புதுடெல்லி

தொழில்துறை உற்பத்தி அதிகரிக்க வேண்டுமானால் நிலக்கரி ஆணையம் அமைக்க வேண்டும் என அசோசெம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அனல்மின் உற்பத்தி

உருக்கு மற்றும் சிமெண்டு ஆலைகள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் அனல்மின் நிலையங்களின் பங்களிப்பு ஏறக்குறைய 55 சதவீதமாக உள்ளது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைவாக உள்ள நிலையில், தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலக்கரி இறக்குமதியும் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. நம் நாட்டில் போதுமான நிலக்கரி வளம் இருந்தாலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வனத்துறையின் அனுமதி கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க இயலாத நிலை உள்ளது.

இந்த நிலையில் நிலக்கரி துறையை முறைப்படுத்த ஓர் ஒழுங்கு முறை ஆணையம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏனென்றால் நிலக்கரியின் தரத்தை பரிசோதித்தல், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுரங்கங்களின் செயல்திறனை கண்காணித்தல் மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒழுங்குமுறை ஆணையம்தான் நெறிப்படுத்த முடியும்.

பல்வேறு நிறுவனங்களுக்கு தற்போது 4,000 கோடி டன் நிலக்கரி வளம் உள்ள 176 சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 35 சுரங்கங்கள் மட்டுமே உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன என்பதையும் அசோசெம் சுட்டிக் காட்டியுள்ளது. சென்ற நிதி ஆண்டில் 13.50 கோடி டன் நிலக்கரிக்கு பற்றாக்குறை இருந்தது. 2016–17–ஆம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 18.55 கோடி டன்னாக அதிகரிக்கும் என இவ்வமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

அன்னிய நேரடி முதலீடு

இந்நிலையில் கட்டுப்பாட்டு ஆணையம் ஒன்றின் மூலம் இத்துறையில் அன்னிய நேரடி முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்யவும், தீர்வு காணவும் தனி ஆணையம் ஒன்று தேவை என அசோசெம் உறுதிபட தெரிவித்துள்ளது. நிலம் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான அம்சங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளித்து வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்க ஒழுங்குமுறை ஆணையம் வகை செய்ய வேண்டும் என இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

category:

நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உற்பத்தி துறை நிறுவனங்களின் நிகர லாபம் 27 சதவீதம் சரிவு

Posted: 21 Dec 2013 09:12 AM PST

மும்பை

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) உற்பத்தி துறையைச் சேர்ந்த 2,708 தனியார் நிறுவனங்களின் நிகர லாபம் சென்ற ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 27 சதவீதம் சரிந்து ரூ.23,000 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், முதல் காலாண்டின் (ஏப்ரல்–ஜூன்) நிகர லாபம் சென்ற ஆண்டின் முதல் காலாண்டை காட்டிலும் 5 சதவீதம் மட்டுமே சரிந்து ரூ.25,200 கோடியாக இருந்தது.

வருவாய்

அதேசமயம், இத்துறை நிறுவனங்களின் வருவாய் சென்ற ஆண்டின் இரண்டாவது காலாண்டைக் காட்டிலும் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ.5.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் 0.8 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.5.33 லட்சம் கோடியாக இருந்தது.

சேவை துறையில் (ஐ.டி. தவிர) நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு லாபம் 23.2 சதவீதம் குறைந்து ரூ.2,500 கோடியாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், முதல் காலாண்டில் லாபம் 42.7 சதவீதம் குறைந்து ரூ.2,600 கோடியாக இருந்தது.

சேவை துறை

சேவை துறை நிறுவனங்களின் வருவாய் 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.67,800 கோடியாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் வருவாய் 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.73,300 கோடியாக உயர்ந்திருந்தது.

இரண்டாவது காலாண்டில் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் நிகர லாபம் 26.3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.11,700 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், முதல் காலாண்டில் லாபம் 2.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு ரூ.8,400 கோடியாக இருந்தது. ஜூலை–செப்டம்பர் காலாண்டில் இத்துறை நிறுவனங்களின் வருவாய் 18.9 சதவீதம் அதிகரித்து ரூ.57,300 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் வருவாய் 13.2 சதவீதம் அதிகரித்து ரூ.56,400 கோடியாக உயர்ந்திருந்தது.

உற்பத்தி மற்றும் ஐ.டி. துறைகளின் வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ள போதிலும் சேவை துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது. மந்தநிலை நீடிப்பதே இதற்கு காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நிலக்கரி

ஜவுளி, நிலக்கரி, பெட்ரோலிய பொருள்கள் மற்றும் ரசாயன பொருள்கள் ஆகிய துறைகளின் வருவாய் அதிகரித்துள்ளது. அதேசமயம் சிமெண்டு மற்றும் சிமெண்டு தயாரிப்புகள், இரும்பு – உருக்கு, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளின் வருவாய் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த மூன்று துறை நிறுவனங்களின் லாபம் 20.5 சதவீதம் குறைந்து ரூ.38,200 கோடியாக உள்ளது. அதேசமயம், வருவாய் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.7.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ள போதிலும் நிகர லாபம் மற்றும் லாப வரம்புகள் உயரவில்லை என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

category:

ரூ.10 லட்சம் கோடிக்கான 250 கட்டமைப்பு திட்டங்கள் விரைவில் ஒப்புதல்

Posted: 21 Dec 2013 09:04 AM PST

புதுடெல்லி

உள்கட்டமைப்பு துறையில் ரூ.10 லட்சம் கோடிக்கான 250 திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வகையில், மிக குறுகிய காலத்தில் 287 அதிமுக்கிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.5.55 லட்சம் கோடியாகும்.

அரசுத் துறைகளின் அனுமதிகளை பெறுவதில் கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் முடங்கியுள்ளன. இதனால் மிக முக்கிய திட்டங்கள் பற்றி ஆய்வு செய்து விரைந்து அனுமதிகளை வழங்க முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு உருவானதில் இருந்து இதுவரை 11 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் முடங்கிக் கிடந்த சுமார் 300 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இக்குழு துரிதமாக பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 ஏப்ரல் – 2017 மார்ச்) அடிப்படைக் கட்டமைப்பு துறையில் சுமார் ரூ.50 லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

category:

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 19.30 கோடி டாலர் சரிவு

Posted: 21 Dec 2013 09:02 AM PST

மும்பை

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, டிசம்பர் 13–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 19.30 கோடி டாலர் சரிந்து 29,552 கோடி டாலராக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் கையிருப்பு 900 கோடி டாலர் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது, டிசம்பர் 6–ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 441 கோடி டாலர் அதிகரித்து 29,570 கோடி டாலராக இருந்தது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில், பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

எனவே, டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் டாலருக்கு எதிராக ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 19.10 கோடி டாலர் குறைந்து 26,856 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

டிசம்பர் 13–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஸ்.டீ.ஆர். மதிப்பு 12 லட்சம் டாலர் குறைந்துள்ளது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 5 லட்சம் டாலர் சரிவடைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வித மாற்றமும் இன்றி 2,060 கோடி டாலராக உள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™