Daily Thanthi |
- மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் உயர்வை திரும்பப் பெற வேண்டும் ஜெயலலிதா அறிக்கை
- காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்ற தி.மு.க. அறிவிப்பை இறுதி முடிவாகக் கருத முடியாது ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை
- பெண் தூதர் தேவயானியின் வேலைக்கார பெண், இந்திய சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் மத்திய அரசு தகவல்
- திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கொன்று புதைப்பு கோவையில் பிணத்தை தோண்டி எடுத்து போலீஸ் விசாரணை
- பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது
- தர்மத்தின் பெயரில் சமுதாயத்தில் விஷ விதைகளை விதைக்கக்கூடாது கவர்னர் பரத்வாஜ் பேச்சு
- நரேந்திர மோடி பொதுகூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க தூதருக்கு கொடுத்த அழைப்பிதழை திரும்ப பெற மாட்டோம் பா.ஜனதா திட்டவட்டம்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி புஜாரா சதம் அடித்தார்
- ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சாதிக்க துடிக்கும், காது கேளாத வீரர்
- தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் காயம்
| Posted: 20 Dec 2013 12:22 PM PST சென்னை, மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்வதுடன், டீசல் விநியோக கமிஷன் தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மக்கள் விரோதச் செயல் இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி உயர்த்தி இந்தியாவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் பணியில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டிருப்பது மக்கள் விரோதச் செயல் ஆகும். ''அடியாத மாடு படியாது'' என்பது பழமொழி. ஆனால், இந்தப் பழமொழியையும் பொய்யாக்கும் வண்ணம், சமீபத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ள போதும், தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி வருகிறது. சமையல் எரிவாயு உருளையின் விலையை 3 ரூபாய் 46 காசு என்று உயர்த்தி அதன் சுமையிலிருந்து மக்கள் இன்னமும் மீளாத சூழ்நிலையில், 20.12.2013 நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 41 காசு எனவும், டீசலுக்கான விநியோகக் கமிஷன் தொகையை லிட்டருக்கு 10 காசு எனவும், எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது நியாயமற்ற செயல். பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பது ஓர் பொருளாதாரத்தில் தொடர் விளைவை ஏற்படுத்தக் கூடியது. அனைத்துப் பொருட்களும், பெட்ரோல் அல்லது டீசலினால் ஓடும் வாகனங்கள் மூலம் ஆங்காங்கே எடுத்துச் செல்லப்படுவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வு என்பது அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த வழி வகுக்கும். ஒவ்வொரு இந்தியனும் பண வீக்க உயர்வால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பது அனைவரின், குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்களின் வருமானத்தில் மேலும் குறைவை ஏற்படுத்தும். இந்த விலை உயர்வு, ஏழை எளிய மக்களின் செலவை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கடனில் சிக்கி தவிக்கவும் தான் வழி வகுக்கும். விலைவாசி உயர்வையும், பண வீக்கத்தையும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதையும் கட்டுப்படுத்தாமல் ரூபாய் மதிப்பு சிறிதளவு வீழ்ச்சி, உலக சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, விநியோக கமிஷன் உயர்வு என காரணங்களைக் காட்டி, பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு 41 காசு என்றும், டீசலுக்கான விநியோகத் தொகையை லிட்டருக்கு 10 காசு எனவும் உயர்த்தி இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் ஆகும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் ஓரளவு நிலையாக இருக்கின்ற இந்தத் தருணத்தில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒவ்வொன்றாக உயர்த்துவது நியாயமற்ற செயல் ஆகும். எனவே, மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், டீசல் விநியோக கமிஷன் தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலை நிர்ணய அதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் நாட்டு மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார். image: category:News Group Category: |
| Posted: 20 Dec 2013 12:07 PM PST சென்னை, காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்ற தி.மு.க. அறிவிப்பை இறுதியான முடிவாக கருத முடியாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கருணாநிதி விமர்சனம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவும், மக்கள் விரோதக் கொள்கைகளை அமலாக்கிய காங்கிரசும் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட அகில இந்திய அளவிலான ஒரு மாற்றை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசின் பொருளாதாரக்கொள்கைகளை எதிர்த்து வரக்கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு. இத்தகைய கட்சிகளோடு உடன்பாடு வைத்துக் கொள்வோம் என்பதைத்தான் தி.மு.க. தலைவர் விமர்சிக்கிறார். இறுதி முடிவு அல்ல காங்கிரஸ் கட்சி கடந்த 4½ ஆண்டு காலத்தில் பல முறை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திய போதும், சாதாரண வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் முறையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதித்த போதும் காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடி, ஆதரவளித்து அவற்றை நிறைவேற்ற ஒத்துழைத்த காரியத்தை தி.மு.க. செய்து கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை காரணமாக்கி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறிவிட்ட பிறகும் இந்த விசுவாசம் தொடர்ந்தது. மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது காங்கிரஸ் எவ்வித தயக்கமும் இன்றி ஆதரவளித்தது. எனவே, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. அறிவித்திருப்பது இறுதியான முடிவாகக் கருத முடியாது. மோடிக்கு புகழாரம் ஆங்கில பத்திரிகையில் தி.மு.க. தலைவரின் நேர்காணல் வெளிவந்துள்ளது. பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தி.மு.க. தலைவர் ''எனது சொந்த கருத்து மோடி நல்ல மனிதர். அவருடைய மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த சிறப்பான கவனம் எடுத்துக் கொண்டார். நிர்வாகத்தில் அவர் திறமையானவர் என்பதை குஜராத்தில் நிரூபித்திருக்கிறார். மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்''. இது தி.மு.க. தலைவர் நேற்று (19.12.2013) சொன்ன கருத்து. தி.மு.க.வின் நிலைப்பாடு இதை பார்த்தாலே தி.மு.க. வின் நிலைப்பாடு என்னவென்று புரிந்துவிடும். 1991–ல் துவங்கி இதுநாள் வரையிலும் பா.ஜ.க.வும் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மாறி மாறி அமலாக்கி வந்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. எனவே மூன்றாவது மாற்றே இன்றைய தேவையாக உள்ளது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக முன்வைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். image: category: |
| பெண் தூதர் தேவயானியின் வேலைக்கார பெண், இந்திய சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் மத்திய அரசு தகவல் Posted: 20 Dec 2013 11:50 AM PST புதுடெல்லி, பெண் தூதர் தேவயானியின் வேலைக்கார பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ்சுக்கு குறை£வன சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், கூடுதல் நேரம் வேலை வாங்கப்பட்டது உள்பட பல்வேறு புகார்களை அவருடைய வக்கீல் சுஸ்மன் கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்க நீதிமன்றத்தால் தேவயானி மீது சுமத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரை மத்திய அரசு அதிகாரிகள் நேற்று மறுத்தனர். ''இந்த விவகாரத்தில் சங்கீதா இந்திய நாட்டின் சட்டத்துக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமெரிக்காவின் சட்டத்துக்கு அல்ல என்று. கடந்த அக்டோபர் மாதத்திலேயே அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டதாக'' அவர்கள் தெரிவித்தனர். தேவயானி கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, சங்கீதாவின் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா தப்பிச் செல்ல அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் மோசடியாக விசா வழங்கி உடந்தையாக இருந்ததாகவும் இந்தியா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. category: |
| திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கொன்று புதைப்பு கோவையில் பிணத்தை தோண்டி எடுத்து போலீஸ் விசாரணை Posted: 20 Dec 2013 11:37 AM PST வடவள்ளி, தொழில் போட்டியில் திருப்பூர் பனியன் கம்பெனி அதிபரை கொலை செய்து கோவையில் புதைத்தனர். அந்த பிணத்தை தோண்டி எடுத்து போலீஸ் விசாரணை நடத்தினர். பனியன் கம்பெனி திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 37). இவர் அதே பகுதியில் செந்தில்குமார் (வயது40) என்பவர் நடத்தும் லேசர் டிசைனிங் பனியன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனியாக அதே தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற பத்மநாபன் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அன்புச்செல்வி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பத்மநாபனை தேடி வந்தனர். ஆனால் அவரைப்பற்றிய தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் போலீசார் பலகோணங்களில் விசாரணை நடத்திய போது ஒரு துப்பு கிடைத்தது. விவசாய தொழிலாளர்கள் சிலர் இரவில் ஒருபிணத்தை புதைத்த விவரம் தெரிய வந்தது.இதையொட்டி விசாரணையை முடுக்கி விட்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- காரில் கடத்தி கொலை தனது கம்பெனியில் வேலை பார்த்த பத்மநாபன், வேறு கம்பெனி தொடங்கியது செந்தில்குமாருக்கு பிடிக்கவில்லை. தனது வாடிக்கையாளர்களை அவர் பிடித்துக்கொண்டார் என்பதை அறிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர், செந்தில் குமாரை தந்திரமாக வரவழைத்து காரில் கடத்தி சென்று கொலை செய்துள்ளார். அதன் பின்னர் பிணத்தை எங்கே புதைப்பது என்று தெரியாமல் தவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கோவை நரசிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தின் அருகில் புதைத்து விடலாம் என்று பிணத்துடன் காரில் வந்துள்ளார். அங்கு விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த வெள்ளருகம்பாளையத்தை சேர்ந்த குமாரசாமி (வயது 40), கிட்டான் (25), சின்னத்துரை (24), ஆகியோரை அழைத்து அவர்களுக்கு மது வாங்கி கொடுத்து, தானும் அவர்களுடன் சேர்ந்து குடித்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் பிணத்துடன் ஆலாந்துறை சித்திரைச்சாவடி அணை அருகில் உள்ள மயானத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு இடத்தில் குழிதோண்டி பத்மநாபனின் உடலை புதைத்துவிட்டு செந்தில் குமார் தலைமறைவானது தெரியவந்தது. பிணத்தை தோண்டி எடுத்தனர் இதைத் தொடர்ந்து போலீசாரின் பிடியில் இருக்கும் விவசாய கூலியான குமாரசாமியை அழைத்துக்கொண்டு பிணம் புதைக்கப்பட்ட இடத்துக்கு திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் சென்றனர். அங்கு குமாரசாமி பிணத்தை புதைத்த இடத்தை குமாரசாமி அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் வடக்கு மண்டல போலீஸ் உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன், கோவை தெற்கு தாசில்தார் முரளி கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், ஆலாந்துரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் விரைந்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் பிணம் தோண்டும் பணி தொடங்கியது. அப்போது அந்த குழியின் உள்ளே 3 பெரிய மூட்டைகள் இருந்தன. மனைவி அடையாளம் காட்டினார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தனர். அதில் ஒரு மூட்டையில் பத்மநாபனின் உடலும், மீதி இரண்டு மூட்டைகளில் பனியன் வேஸ்ட் துணிகளும் இருந்தது தெரியவந்தது. பத்மநாபனின் உடலை அவரது மனைவி அன்புச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். பின்னர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி அறிந்ததும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் படை எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவான செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கியதும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது. image: category: |
| பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Posted: 20 Dec 2013 11:36 AM PST புதுடெல்லி, டீலர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 49 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கமிஷன் உயர்வு பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது. அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 912 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1089 ஆக உயர்ந்தது. கமிஷன் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் அவர்களின் கமிஷனை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தன. ஆனால் டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் டீலர்களின் கமிஷனை உயர்த்த முடியவில்லை. தற்போது தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து டீலர்களின் கமிஷனை உயர்த்த மத்திய அரசு நேற்று முடிவு செய்தது. பெட்ரோல் விலை அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசும் (இதர வரிகள் சேர்க்கப்படவில்லை) உயர்த்தப்பட்டன. பெட்ரோல் விலையை பொறுத்தவரை, வழக்கமாக மாதந்தோறும் இரு முறை (1 மற்றும் 16–ந்தேதி) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்க உரிமை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த நவம்பர் 1–ந்தேதி லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 21 காசு கமிஷன் உயர்வுடன் சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் லிட்டருக்கு 28 காசும் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மொத்தம் 49 காசு உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை அதன்படி, சென்னையில் ரூ.74.22 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.74.71 ஆக உயர்ந்தது. டெல்லியில் ரூ.71.02 ஆக இருந்து வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51 ஆக உயர்ந்தது. கொல்கத்தாவில், 53 காசுகளும், மும்பையில் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலை டீலர் கமிஷன் தொகை உயர்வான லிட்டருக்கு 9 காசு மட்டுமே டீசல் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலைப்படி சென்னையில், ரூ.57.23 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 57.32 ஆக உயர்ந்தது. டெல்லியில், ரூ.53.67–ல் இருந்து ரூ.53.78 ஆக உயர்த்தப்பட்டது. கொல்கத்தாவில், 10 காசுகளும், மும்பையில் 10 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது. image: category:Tagging: |
| தர்மத்தின் பெயரில் சமுதாயத்தில் விஷ விதைகளை விதைக்கக்கூடாது கவர்னர் பரத்வாஜ் பேச்சு Posted: 20 Dec 2013 11:33 AM PST பெங்களூர், பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கவர்னர் பரத்வாஜ் பேசும்போது கூறியதாவது:– பனாரஸ் பல்கலைக்கழகம் தொடங்க மகாராஜாக்கள் பணம் மற்றும் நிலம் கொடுத்து உதவி செய்தனர். அதனால் அந்த பல்கலைக்கழகம் இன்று உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. ஆனால் இன்றோ பணம் சம்பாதிப்பதே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். பண்பாடு, வேதங்களில் வாழ்வதற்கு தேவையான அளவுக்கு மட்டும் பணம் இருந்தால் போதும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலத்தில் நடைபெறுவதே வேறு. எல்லாவற்றையும் விட்டு பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள். தர்மத்தின் பெயரில் சமுதாயத்தில் விஷ விதைகளை விதைக்கக்கூடாது. கடந்த 4½ ஆண்டுகளாக நான் கர்நாடகத்தில் உள்ளேன். பண்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. பண்பாடு என்பது தாய்மொழி. இதில் அபாரமான அறிவு சொத்து உள்ளது. வேதங்கள் சாதாரண மக்களை சென்று அடையவில்லை. நம்மிடையே விருந்தினர்களை உபசரிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் மற்றவர்கள் தாக்குதல் நடத்தினாலும் சகித்துக் கொள்கிறேன். வேதங்களில் தாய்–தந்தை, குருக்களை மதிக்கும் பண்புகள் உள்ளன. இதை குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது இல்லை. இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார். image: category:Tagging: |
| Posted: 20 Dec 2013 11:29 AM PST மும்பை, நரேந்திர மோடி பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க தூதருக்கு கொடுத்த அழைப்பிதழை திரும்ப பெற மாட்டோம் என பா.ஜனதா கட்சியின் பொது செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். நரேந்திர மோடி பொதுகூட்டம் மும்பையில் நாளை நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுகூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்கான அழைப்பிதழ் மும்பையில் இருக்கும் அமெரிக்காவுக்கான தூதருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியா பெண் தூதர் தேவயானி கோபரகாடேக்கு அமெரிக்காவில் நேர்ந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் நீடித்துள்ளது. அழைப்பிதழை திரும்ப பெற முடியாது இந்த நிலையில் நாளை நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுகூட்டத்தில் அமெரிக்க தூதர் கலந்து கொள்வது குறித்து பா.ஜனதா பொது செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அமெரிக்க தூதர் உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய பெண் தூதர் தேவயானி அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இருப்பினும், மும்பையில் இருக்கும் அமெரிக்க தூதருக்கு நாங்கள் அனுப்பிய அழைப்பிதழை திரும்ப பெற முடியாது. அமெரிக்காவின் எண்ணத்தில் தூய்மை இல்லை. எங்களது விருந்தாளிகளை நாங்கள் எப்போதும் மரியாதையுடன் தான் நடத்துவோம். ஆனால் நமது தேசத்துக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினையில் அவர்களை நாங்கள் சமாதானப்படுத்த முயற்சிக்க மாட்டோம். மக்களவையில் எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், டெல்லி மேல்சபை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லீ ஆகியோரும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்தியாவுக்கு நிகரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஏற்று கொள்ள முடியாது. அதவானி பங்கேற்க மாட்டார் நாளை நடைபெறும் பொதுகூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்வார். இருப்பினும் அத்வானி கலந்து கொள்ளமாட்டார். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வதற்கு இது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டம் அல்ல. இது பா.ஜனதா கட்சி கூட்டம். எனவே உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளமாட்டார். இவ்வாறு ராஜீவ் பிரதாப் ருடி கூறினார். இருப்பினும் நரேந்திர மோடி கூட்டத்தில் அமெரிக்க தூதர் பங்கேற்பாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் உறுதியான பதிலளிக்க மறுத்துவிட்டார். தேவேந்திர பட்னாவிஸ் இந்த 'மஹாகர்ஜனா பேரணி' வெற்றி பெற பா.ஜனதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த கூட்டத்தில் மராட்டியம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களின் பயணத்துக்காக 22 சிறப்பு தொலைதூர ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளோம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவுரங்காபாத் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் அளித்த பேட்டியில், ''மரத்வாடா மண்டலத்தின் 8 மாவட்டங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் 7 சிறப்பு ரெயில்களில் மும்பை வருகிறார்கள்'' என்று கூறினார்கள். image: category: |
| தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி புஜாரா சதம் அடித்தார் Posted: 20 Dec 2013 10:31 AM PST ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புஜாரா, கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தென்ஆப்பிரிக்கா 244 ரன் இந்தியா–தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. பிலாண்டர் 48 ரன்களுடனும், பாப் டு பிளிஸ்சிஸ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வேகக் கூட்டணி ஜாகீர்கானும், இஷாந்த் ஷர்மாவும் இணைந்து தென்ஆப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வெறும் 45 நிமிடங்களுக்குள் சாய்த்தனர். இஷாந்த் ஷர்மா வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு திருப்பி, பிலாண்டர் அரைசதத்தை கடந்தார். அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரியும் ஓட விட்டார். அவர் 59 ரன்களில் (86 பந்து, 7 பவுண்டரி), ஜாகீர்கானின் பந்து வீச்சில் முதலாவது ஸ்லிப்பில் நின்ற அஸ்வினிடம் கேட்ச் ஆனார். பிளிஸ்சிஸ்சும் (20 ரன்) ஜாகீர்கானுக்கு இரையானார். இதன் பின்னர் ஸ்டெயினை (10 ரன்) இஷாந்த் ஷர்மா வெளியேற்ற, மோர்கலை (ரன்) ஜாகீர்கான் வீழ்த்தி இன்னிங்சை முடிவுக்கு கொண்டு வந்தார். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். விஜய் 39 ரன் அடுத்து 36 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் இன்னிங்சை முரளிவிஜயும், ஷிகர் தவானும் ஆரம்பித்தனர். மீண்டும் சொதப்பிய தவான் 15 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து விஜயுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 94 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் சேகரித்த விஜய், காலிசின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து புஜா£ராவும், விராட் கோலியும் 3–வது விக்கெட்டுக்கு கைகோர்த்தனர். இவர்கள் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டனர். புஜாரா 9 ரன்களில் இருந்தபோது ரன்–அவுட்டில் இருந்து தப்பினார். இதே போல் 51 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை பந்து வீசிய இம்ரான் தாஹிர் வீணடித்தார். இந்த வாய்ப்பை புஜாரா கெட்டியாக பிடித்துக் கொண்டார். புஜாரா சதம் இதன் பின்னர் புஜாரா–கோலி ரன் குவிப்பில் வேகம் காட்டினர். மோர்னே மோர்கலின் காயமும், சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் சாதாரண பந்து வீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த ஜோடியை பிரிக்க தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் பல்வேறு யுக்திகளை கையாண்டும் பலன் கிடைக்கவில்லை. அபாரமாக ஆடிய புஜாரா பவுண்டரி விளாசி தனது 6–வது சதத்தை பூர்த்தி செய்தார். வெளிநாட்டு மண்ணில் இது அவரது முதல் சதமாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 9–வது இந்தியர் புஜாரா ஆவார். இதற்கிடையே கோலி அரைசதத்தை கடந்தார். 66 ஓவர்கள் முடிந்திருந்த போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 120 ரன்களுடனும் (191 பந்து, 17 பவுண்டரி), கோலி 54 ரன்களுடனும் (91 பந்து, 6 பவுண்டரி) களத்தில் நின்றனர். அப்போது இந்திய அணி 282 ரன்கள் முன்னிலை கண்டு வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ் இந்தியா 280 தென்ஆப்பிரிக்கா சுமித் எல்.பி.டபிள்யூ (பி) ஜாகீர்கான் 68 பீட்டர்சன் எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 21 அம்லா (பி) இஷாந்த் 36 காலிஸ் எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 0 டிவில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) முகமது ஷமி 13 டுமினி(சி) விஜய் (பி) முகமது ஷமி 2 பிளிஸ்சிஸ் (சி) டோனி(பி) ஜாகீர்கான் 20 பிலாண்டர் (சி) அஸ்வின் (பி) ஜாகீர்கான் 59 ஸ்டெயின் (சி) ரோகித் (பி) இஷாந்த் 10 மோர்னே மோர்கல் (பி) ஜாகீர்கான் 7 இம்ரான் தாஹிர் (நாட்–அவுட்) 0 எக்ஸ்டிரா 8 மொத்தம் (75.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 244 விக்கெட் வீழ்ச்சி: 1–37, 2–130, 3–130, 4–130, 5–145, 6–146, 7–226, 8–237, 9–239 பந்து வீச்சு விவரம் ஜாகீர்கான் 26.3–6–88–4 முகமது ஷமி அகமது 18–3–48–2 இஷாந்த் ஷர்மா 25–5–79–4 அஸ்வின் 6–0–25–0 2–வது இன்னிங்ஸ் இந்தியா (66 ஓவர் வரை) தவான் (சி) காலிஸ் (பி) பிலாண்டர் 15 விஜய் (சி) டிவில்லியர்ஸ் (பி) காலிஸ் 39 புஜாரா (நாட்–அவுட்) 120 கோலி (நாட்–அவுட்) 54 எக்ஸ்டிரா 18 மொத்தம் (66 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 246 விக்கெட் வீழ்ச்சி: 1–23, 2–93 பந்து வீச்சு விவரம் ஸ்டெயின் 19–3–62–0 பிலாண்டர் 15–5–41–1 மோர்னே மோர்கல் 2–1–4–0 காலிஸ் 14–4–51–1 இம்ரான் தாஹிர் 10–0–47–0 டிவில்லியர்ஸ் 1–0–5–0 டுமினி 5–0–26–0 image: category:Tagging: |
| ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சாதிக்க துடிக்கும், காது கேளாத வீரர் Posted: 20 Dec 2013 10:22 AM PST புதுடெல்லி, டிச.21– பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்த செவிதிறனற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் 28 வயதான மல்யுத்த வீரர் வீரேந்தர்சிங், 74 கிலோவினருக்கான பிரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இது தவிர 2005–ம் ஆண்டில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், 2008–ம் ஆண்டில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருக்கிறார். வீரேந்தர்சிங் டெல்லியில் நேற்று சைகை மொழிபெயர்ப்பாளர் மூலம் அளித்த பேட்டியில், 'நான் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று இருக்கிறேன். இருப்பினும் எனக்கு அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. எனக்கு அரசு ஊக்கம் அளித்தால் நான் மேலும் சிறப்பாக செயல்பட முடியும். 2016–ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வழக்கமான வீரர்களுடன் போட்டியிடுவதே எனது இலக்காகும். அதற்கு நான் தயாராக அரசு உதவி செய்ய வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். image: category:Tagging: |
| தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் காயம் Posted: 20 Dec 2013 10:19 AM PST ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், நேற்றைய ஆட்டத்தின் போது காயமடைந்தார். இந்திய வீரர் அடித்த பந்தை 'பைன்லெக்' திசையில் பீல்டிங் செய்ய வேகமாக ஓடி வந்த போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரால் இயல்பாக நடந்து செல்ல முடியவில்லை. சக வீரர்கள் கைதாங்கலாக அவரை அழைத்துச் சென்றனர். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவு தெரிந்த பிறகே அவர் தொடர்ந்து பந்து வீசுவாரா என்பது தெரிய வரும். காயமடைவதற்கு முன்பாக அவர் 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருந்தார். அவரது காயம் தென்ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் முதல் இன்னிங்சில் சிக்கனமாக பந்து வீசியதுடன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். மோர்கலின் இழப்பை ஈடுகட்டுவதற்காக தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிவில்லியர்சும் பந்து வீசினார். ஒரு ஓவர் பவுலிங் செய்த அவர் 5 ரன் விட்டுக்கொடுத்தார். அந்த சமயத்தில் அம்லா விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
