Daily Thanthi |
- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்
- சதம் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரர் விராட்கோலி
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: விராட் கோலி அபார சதம் சரிவில் இருந்து மீண்டது இந்தியா
- சென்னை ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் நேரடி தகுதி
- கபில்தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாரத ரிசர்வ் வங்கி, முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை
- வரியற்ற இறக்குமதிக்கு தடை எல்.சி.டீ. டி.வி உற்பத்தி 20 சதவீதம் அதிகரிப்பு
- 6 நாள் மந்தநிலைக்கு பின் முன்னேற்றம் ‘சென்செக்ஸ்’ 248 புள்ளிகள் அதிகரிப்பு
| தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் Posted: 18 Dec 2013 01:56 PM PST |
| சதம் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரர் விராட்கோலி Posted: 18 Dec 2013 01:50 PM PST |
| வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் Posted: 18 Dec 2013 01:35 PM PST |
| தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: விராட் கோலி அபார சதம் சரிவில் இருந்து மீண்டது இந்தியா Posted: 18 Dec 2013 12:07 PM PST ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலியின் அபார சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. மோசமான தொடக்கம் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் 0–2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக ரஹானே, அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவானும், முரளிவிஜயும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். எதிர்பார்த்தது போலவே தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களாக (எகிறி செல்லும் பந்து) போட்டு தாக்கினர். குறிப்பாக நம்பர் 'ஒன் பவுலர்' ஸ்டெயின், இடுப்பளவுக்கு மேல் பந்தை வீசி திணறடித்தார். அவரது ஒரு பவுன்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான், அதே ஓவரில் அதே போன்று வீசப்பட்ட பந்தை தூக்கிய போது, 'பைன்லெக்' திசையில் நின்ற தாஹிரிடம் கேட்ச் ஆகி போனார். அவர் 13 ரன்களுடன் (27 பந்து, 2 பவுண்டரி) வெளியேற்றப்பட்டார். அடுத்து புஜாரா வந்தார். மறுமுனையில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடிய தமிழகத்தின் விஜய், பெரும்பாலான பந்துகளை தொடவே தயங்கினார். ஒரு மணிநேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த போதிலும் அவரது ரன் எண்ணிக்கை மட்டும் உயரவே இல்லை. வெறும் 6 ரன்கள் (42 பந்து) மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார். புஜாரா ரன்–அவுட் 24 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்து விட்ட இந்திய அணியின் நிலைமையை பார்த்த போது, இனி கரைசேருவது கடினம் தானோ என்றே நினைக்கத் தோன்றியது. ஆனால் 3–வது விக்கெட்டுக்கு களம் புகுந்த துணை கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று, அந்த எதிர்மறையான எண்ணத்தை மாற்றிக்காட்டினார். அவரும், புஜாராவும் ரொம்ப பக்குவமாக ஆடினார்கள். ஆபத்தை சுமந்து வந்த ஆக்ரோஷமான பந்துகளை அப்படியே விக்கெட் கீப்பர் வசமே விட்டு விட்டனர். மார்பு உயரத்துக்கு எழும்பிய பந்துகளை குனிந்து தவிர்த்தனர். அதே நேரத்தில் அடிப்பதற்கு ஏதுவான பந்துகளை விராட்கோலி பவுண்டரிக்கு விரட்டியடிக்க தவறவில்லை. 24–வது ஓவரில் 50 ரன்களை தொட்ட இந்திய அணி 40–வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த கூட்டணியை உடைக்க தென்ஆப்பிரிக்க பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்த போதிலும், அவ்வளவு எளிதில் அசைக்க முடியவில்லை. ஆனால் தேவையில்லாமல், இவர்களே தங்களுக்கு சூனியம் வைத்து விட்டனர். அணியின் ஸ்கோர் 113 ரன்களாக உயர்ந்த போது (42.4 ஓவர்), விராட் கோலி பந்தை அருகில் அடித்து விட்டு எதிர்முனையில் நின்ற புஜாராவை ஒரு ரன்னுக்கு அழைத்தார். அவரும் மின்னல் வேகத்தில் ஓடி வர, விராட் கோலியோ சில அடி தூரம் ஓடி விட்டு வேண்டாம் என்று பின்வாங்கினார். அதற்குள் புஜாரா (25 ரன், 98 பந்து, 2 பவுண்டரி) ரன்–அவுட் செய்யப்பட்டார்.
அடுத்து ரோகித் ஷர்மா களம் இறங்கினார். தனது முதல் இரு இன்னிங்சிலும் வரிசையாக சதம் விளாசி சாதனை படைத்திருந்த ரோகித் ஷர்மாவினால் விக்கெட்டை நீண்ட நேரம் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. 42 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த அவர், வெரோன் பிலாண்டர் வீசிய 'அவுட்–ஸ்விங்'கரை அடிக்க முயற்சித்த போது, விக்கெட் கீப்பர் டிவில்லயர்சிடம் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து விராட் கோலியுடன், ரஹானே கைகோர்த்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தனர். வேகத்தில் தடுமாறிய நமது பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் ஓவர்களை மட்டும் சர்வ சாதாரணமாக புரட்டியெடுத்தனர். தென்ஆப்பிரிக்காவின் உருட்டல்–மிரட்டலை சமாளித்து அபாரமாக ஆடிய விராட் கோலி தனது 5–வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். தென்ஆப்பிரிக்க மண்ணில் அவரது 'கன்னி' சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 219 ரன்களை எட்டிய போது விராட் கோலி 119 ரன்களில் (181 பந்து, 18 பவுண்டரி) காலிசின் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்தியா 5–255 ரன் பின்னர் ரஹானேவுடன், கேப்டன் டோனி இணைந்தார். விக்கெட் வீழ்ச்சியை சரிகட்டுவதற்காக இறுதி கட்டத்தில் இருவரும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 43 ரன்களுடனும் (105 பந்து, 7 பவுண்டரி), டோனி 17 ரன்களுடனும் (46 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருக்கிறார்கள். முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், இந்திய இளம் வீரர்கள் முதல் நாளை முழுமையாக சமாளித்த விதம் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாகும். 2–வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஸ்கோர் போர்டு இந்தியா விஜய் (சி) டிவில்லியர்ஸ் (பி) மோர்கல் 6 தவான் (சி) தாஹிர் (பி) ஸ்டெயின் 13 புஜாரா (ரன்–அவுட்) 25 விராட் கோலி (சி) டுமினி (பி) காலிஸ் 119 ரோகித் ஷர்மா (சி) டிவில்லியர்ஸ்(பி)பிலாண்டர் 14 ரஹானே (நாட்–அவுட்) 43 டோனி (நாட்–அவுட்) 17 எக்ஸ்டிரா 18 மொத்தம் (90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 255 விக்கெட் வீழ்ச்சி:–1–17, 2–24, 3–113, 4–151, 5–219 பந்து வீச்சு விவரம் ஸ்டெயின் 23–5–56–1 பிலாண்டர் 21–2–55–1 மோர்னே மோர்கல் 19–10–27–1 காலிஸ் 14–4–37–1 இம்ரான் தாஹிர் 8–0–47–0 டுமினி 5–0–30–0 தெண்டுல்கர் இடத்தில் அசத்திய கோலி 'கிரிக்கெட்டின் பிதாமகன்' சச்சின் தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். இந்திய அணியில் முக்கியத்துவம் வாய்ந்த பேட்டிங் வரிசையாக கருதப்படும் 4–வது இடத்தில் தெண்டுல்கர் விளையாடி எண்ணற்ற சாதனைகளை படைத்தார். அவரது விலகலுக்கு பிறகு அவரது 4–வது பேட்டிங் வரிசையை நிரப்புவது யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே அவரது இடத்தில் இளம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நேற்று களம் இறக்கப்பட்டார். அவரது இடத்திற்கு பொருத்தமான வீரர் என்பதை முதல் போட்டியிலேயே அதுவும் வெளிநாட்டு மண்ணில் நிரூபித்து காட்டியுள்ளார். 25 வயதான விராட் கோலிக்கு, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் இது தான். தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 8–வது இந்தியர் என்ற மகிமையை பெற்றுள்ளார். அத்துடன் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்தியர்களில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட்டுக்கு பிறகு சதத்தை பதிவு செய்திருக்கிறார். பயிற்சியாளரிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய கோலி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 119 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு, டெஸ்டில் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவரது பள்ளி கால பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் ஷர்மா, கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், 'இது ஒரு அற்புதமான ஆட்டம். ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க மண்ணில் இரண்டிலும் அவர் சதம் அடித்துள்ளதை நினைத்து எந்த அளவுக்கு பெருமிதம் அடைகிறேன் என்பதை என்னால் வார்த்தையால் சொல்ல முடியாது. இந்த டெஸ்டுக்கு முன்பாக (நேற்று முன்தினம்) அவர் என்னிடம் பேசினார். அப்போது இந்த டெஸ்டில் நிச்சயம் சதம் அடிப்பேன் என்று என்னிடம் கூறினார். தனது வாக்குறுதியை அவர் காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக ஆட்டம் முடிந்த சிறிது நேரத்தில் கோலி என்னிடம் பேசுவார். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் பேசுவது வழக்கம். இப்போதும் அவர் என்னை தொடர்பு கொண்டு, 'சார், நான் அடித்த 'புல்–ஷாட்' உங்களுக்கு பிடித்திருந்ததா' என்று கேட்பார் என நம்புகிறேன்' என்றார். image: category:Tagging: |
| சென்னை ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் நேரடி தகுதி Posted: 18 Dec 2013 12:06 PM PST சென்னை, தமிழக அரசு ஆதரவுடன் நடைபெறும் 19–வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 30–ந் தேதி முதல் ஜனவரி 5–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இருந்த எஸ்தோனியா வீரர் ஜூர்ஜென் காயம் காரணமாக விலகி இருப்பதால், உலக தர வரிசையில் 90–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் சென்னை ஓபன் போட்டியில் நேரடியாக விளையாட தகுதி பெற்று இருக்கிறார். image: category: |
| கபில்தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு Posted: 18 Dec 2013 12:04 PM PST புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. கபில்தேவுக்கு விருது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 1994–ம் ஆண்டில் இருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை முதல்முறையாக லாலா அமர்நாத் பெற்றார். கடைசியாக 2012–ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் வாங்கினார். 2004–ம் ஆண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 4 பேர் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிலையில் 2012–13–ம் ஆண்டுக்கான விருதுக்குரியவரை தேர்வு செய்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் சஞ்சய் பட்டேல், மூத்த பத்திரிகையாளர் அயாஸ் மெமோன் ஆகியோர் கொண்ட கமிட்டி சென்னையில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதில் இந்திய ஆல்–ரவுண்டர் ஜாம்பவான் கபில்தேவுக்கு இந்த முறை வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ரூ.25 லட்சம் கிடைக்கும் இந்த விருதை பெறும் 21–வது வீரர் கபில்தேவ் ஆவார். அவருக்கு விருதுடன் ரூ.25 லட்சமும் வழங்கப்படும். விருது வழங்கும் தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 54 வயதான கபில்தேவ் 1983–ம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 225 ஒரு நாள் போட்டிகளிலும், 131 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்டில் 5 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் இவை இரண்டையும் சேர்த்து எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பும் கபில்தேவுக்கு உண்டு. புயலுக்கு பிறகு அமைதி 2007–ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) அமைப்பில் கபில்தேவ் சேர்ந்து அதன் தலைவரானார். இதனால் அவருக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் சேர்மன் பதவி பறிக்கப்பட்டது. பிறகு 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.சி.எல். அமைப்பின் இருந்து விலகிய பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கரிசனம் கிடைக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இப்போது கவுரவமிக்க இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார். image: category: |
| Posted: 18 Dec 2013 11:51 AM PST மும்பை பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு இடைநிலை பணக் கொள்கை ஆய்வு அறிக்கையை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார். இதில், பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் கடனிற்கான வட்டி விகிதங்கள் உள்பட எதுவுமே மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம், பணவீக்கம் அதிகமாக இருப்பது ஒரு சவாலாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ ரேட் பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதத்தில் பெறும் கடனிற்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்யப்படவில்லை. இது 7.75 சதவீதமாக உள்ளது. வங்கிகள் தமது உபரி நிதியை பாரத ரிசர்வ் வங்கியில் குறுகிய கால அடிப்படையில் இருப்பு வைப்பதற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்திற்கு ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்று பெயர். இந்த வட்டி விகிதமும் 6.75 சதவீதமாக உள்ளது. வங்கிகள் திரட்டும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட தொகையை பாரத ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கு ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர். இந்த விகிதமும் 4 சதவீதமாகவே உள்ளது. அவசர கால தேவை ரிசர்வ் வங்கியிடமிருந்து அவசர கால தேவைக்கு வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி (எம்.எஸ்.எஃப். ரேட்) விகிதமும் உயர்த்தப்படவில்லை. இது 8.75 சதவீதமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு சில்லரை விலை பணவீக்கம் 11.24 சதவீதமாக உயர்ந்தது. மேலும், மொத்த விலை பணவீக்கமும் 14 மாதங்களுக்கு பிறகு 7.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடனிற்கான (ரெப்போ ரேட்) வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தும் என பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ரிசர்வ் வங்கி கடனிற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு முறை முக்கிய கடனிற்கான வட்டியை உயர்த்தி உள்ளார். தற்போது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அவரது கவனம் திரும்பி உள்ளது. வளர்ச்சியில் பின்னடைவு ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல முறை முக்கிய கடனிற்கான வட்டியை உயர்த்தியதையடுத்து சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 4.4 சதவீதம் மற்றும் 4.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு அக்டோபரில் தொழில்துறை உற்பத்தியில் 1.8 சதவீதம் சரிவு ஏற்பட்டது. எனவே, பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையிலும், பொருளாதார நிலவரத்தை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆய்வறிக்கை பருவமழை நன்றாக உள்ளதால் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் உச்சநிலையை அடைந்துள்ளது என்றும், டிசம்பர் மாதத்திற்கு பிறகு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்தபடி பணவீக்கம் குறையவில்லை என்றால் அடுத்த பணக் கொள்கை ஆய்வு அறிக்கைக்கு முன்பாக இடையில் முக்கிய டனிற்கான வட்டி உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த பணக் கொள்கை ஆய்வு அறிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 28–ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இனிவரும் மாதங்களில் காய்கறி விலை குறையும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. உள்நாட்டில் பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், வெளிநாட்டு நிலவரங்களும் சாதகமாக இல்லை. இந்நிலையில், அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.8 சதவீதமாக வைத்து இருப்பதில் நிதி அமைச்சகம் உறுதியாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக நிதி பற்றாக்குறையை பட்ஜெட் மதிப்பீட்டின்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2–வது அரையாண்டில் வளர்ச்சி மேம்படும் வேளாண் துறை வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்தால் சென்ற சில மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் வேளாண் துறை உற்பத்தி வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முடங்கி கிடக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடும் வகையில் முதலீட்டிற்கான சிறப்பு அமைச்சரவை கமிட்டி ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக உயர்ந்தது. இது, முதல் காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 0.4 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருளாதாரத்தில் 4.6 சதவீதம்தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்க வேண்டுமானால் இரண்டாவது அரையாண்டில் 5.4 சதவீதம் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. image: category:Tagging: |
| வரியற்ற இறக்குமதிக்கு தடை எல்.சி.டீ. டி.வி உற்பத்தி 20 சதவீதம் அதிகரிப்பு Posted: 18 Dec 2013 11:49 AM PST புதுடெல்லி செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் தட்டை வடிவ எல்.சி.டீ. டிவி பேனல்கள் உற்பத்தி உள்நாட்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியாகும் தட்டைத் திரை பிளாஸ்மா டி.வி. பெட்டிகள் மீது மத்திய அரசு இறக்குமதி வரி விதித்ததே இதற்கு காரணமாகும். நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்நாட்டில் எல்.சி.டீ. தொலைக்காட்சி பெட்டிகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக இருந்ததால் வெளிநாடுகளில் மக்கள் வாங்கி வந்தனர். இதற்கு இறக்குமதி வரி கிடையாது என்பதால் வரத்து அதிகரித்தது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களை மிகவும் பாதித்தது. இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தக மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியது. எனவே மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பை தடுக்கும் வகையிலும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நலனை காக்கும் பொருட்டும் இறக்குமதி செய்யப்படும் தட்டை வடிவ எல்.சி.டீ. டிவி பேனல்கள் மீது ஆகஸ்டு மாதத்தில் 36.05 சதவீதம் வரி விதித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களில் எல்.சி.டீ. டிவி விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என நுகர்வோர் மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அனிரூத் தூத் தெரிவித்தார். சந்தை மதிப்பு தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரிப்பு, மாறி வரும் வாழ்க்கை முறை, எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீதான மோகம் மற்றும் எளிய கடன் வசதி போன்றவையும் எலக்ட்ரானிக்ஸ் சந்தை வளர்ச்சிக்கு காரணமாகும். விற்பனை அதிகரிப்பால் சாம்சங் போன்ற உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் துறையின் சந்தை மதிப்பு 12,500 கோடி டாலரை எட்டும். 2020–ஆம் ஆண்டிற்குள் இத்துறை வருவாய் 40,000 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிட்டபட்டுள்ளது. image: category: |
| 6 நாள் மந்தநிலைக்கு பின் முன்னேற்றம் ‘சென்செக்ஸ்’ 248 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 18 Dec 2013 11:46 AM PST மும்பை தொடர்ந்து ஆறு தினங்கள் மந்தநிலைக்கு பிறகு புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 248 புள்ளிகள் அதிகரித்தது. முக்கிய கடன் வட்டி பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையிலும் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தவில்லை. இது பங்கு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ரிசர்வ் வங்கியின் கவனம் திரும்பியுள்ளதை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். நேற்று பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக ரியல் எஸ்டேட், பொறியியல், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் அதிகரித்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாததால் மத்திய அரசின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்துள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தனியார் துறையை விஞ்சி பொதுத் துறை வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை 4.2 சதவீதம், பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 2.6 சதவீதமும் உயர்ந்தது. டிரெண்ட் பங்கு விலை டிரெண்ட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கப் போவதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்கோ நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து, டிரெண்ட் நிறுவனத்தின் பங்கு விலை 10.8 சதவீதம் அதிகரித்தது. டீ.எல்.எஃப். மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை முறையே 5.4 சதவீதம் மற்றும் 3.4 சதவீதம் உயர்ந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பீ.எச்.இ.எல்., டாட்டா பவர், பஜாஜ் ஆட்டோ, எல்&டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட 27 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 247.72 புள்ளிகள் அதிகரித்து 20,859.86 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,917.57 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,568.70 புள்ளிகள் வரையிலும் சென்றது. நிப்டி தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 78.10 புள்ளிகள் உயர்ந்து 6,217.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,236 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,129.95 புள்ளிகளுக்கும் சென்றது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

கோலி சதம்