Daily Thanthi |
- நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு: மூத்த அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு
- பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கிய நகருக்கு அமெரிக்க மந்திரி செல்கிறார்
- ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டி கருணாநிதி பேட்டி
- பா.ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்காது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் பேட்டி
- டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு
- இந்தியா–தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
- இந்திய கேப்டன் டோனி
- ஆஸ்திரேலிய வீரர்கள்.
- அன்னா ஹசாரே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி.
- சோனியாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து
| Posted: 17 Dec 2013 10:56 AM PST புதுடெல்லி கோர்ட்டு கண்காணிக்கும் வழக்குகளில் மூத்த அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இது நிலக்கரிச்சுரங்க ஊழல் வழக்கில் திருப்பமாக அமைந்துள்ளது. நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் வகித்த காலத்தில் நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடுகளில் மத்திய அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுத்தி, ஊழல் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ.க்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என கூறப்பட்டது. இந்த ஒப்புதல் தேவை இல்லை என உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் விசாரணை இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, ''மத்திய அரசின் இணைச்செயலாளர் அந்தஸ்திலான அதிகாரிகள் தொடங்கி மேல் அதிகாரிகளை விசாரிக்க அல்லது அவர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் பிரிவு 6ஏ–யின்படி, தகுந்த அதிகார அமைப்பின் ஒப்புதலைப் பெற வேண்டும்'' என்று மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி வாதாடினார். ஆனால் மத்திய அரசின் நிலைப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.யின் நிலைப்பாட்டில் முரண்பாடு இருந்தது. சி.பி.ஐ. சார்பில் அதன் மூத்த வக்கீல் அமரேந்திர ஷரண் வாதாடினார். அவர், ''நிலக்கரிச்சுரங்க ஊழல் வழக்கு போன்ற சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நடக்கிற வழக்குகளில் மூத்த அதிகாரிகளை விசாரிப்பதற்கு மத்திய அரசின் தகுந்த அதிகார அமைப்பின் ஒப்புதலைப் பெறத் தேவை இல்லை'' என கூறினார். இதே கருத்தை தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்றின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணும் தெரிவித்தார். அவர், ''கோர்ட்டு கண்காணிக்கிற வழக்கு விசாரணைகளில் டெல்லி போலீஸ் சிறப்பு சட்டம் பிரிவு 6–ன் வடிவத்தில் முட்டுக்கட்டை கூடாது'' என கூறினார். ஒப்புதல் தேவை இல்லை விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, ''கோர்ட்டு கண்காணிப்பில் நடக்கிற வழக்கு விசாரணைகளில், மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை'' என நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.அந்த தீர்ப்பில், ''ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், ஒரு வழக்கில் கோர்ட்டு கண்காணிப்பின்கீழ் விசாரணை நடந்து வருகிறபோது, மூத்த அதிகாரிகளை விசாரிக்க டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம் பிரிவு 6 ஏ–யின்படி, ஒப்புதல் எதையும் பெறத் தேவை இல்லை'' என கூறப்பட்டுள்ளது. திருப்பம் இந்த தீர்ப்பு நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஒரு திருப்பமாக அமைந்துள்ளதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த தீர்ப்பு, நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு ஊழலில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு வழி வகுத்துத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. image: category: |
| பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கிய நகருக்கு அமெரிக்க மந்திரி செல்கிறார் Posted: 17 Dec 2013 10:51 AM PST மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டில் சில வாரத்திற்கு முன் 'ஹையான்' புயல் தாக்கி கோரத்தாண்டவமாடியதில் தக்லோபான் நகர் தரைமட்டமானது. 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பலி கொண்டதுடன் சுமார் 40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றார். தலைநகர் மணிலாவில் அவர் பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகள், தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று (புதன்கிழமை) மந்திரி ஜான் கெர்ரி புயல் தாக்கிய தக்லோபான் நகருக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 17 Dec 2013 10:47 AM PST சென்னை ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:– லோக்பால் மசோதா கேள்வி:– ''லோக்பால்'' மசோதா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா?. பதில்:– பாராளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர். பாலு, இந்த மசோதா விவாதத்திற்கு வருகின்ற நேரத்தில் எப்படி முடிவெடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அந்த முடிவு எடுத்த பிறகு உங்களுக்கும் தெரியும். கேள்வி:– இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் இன்று அளித்த பேட்டியில், தமிழகத்தில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருக்கிறாரே?. பதில்:– மகிழ்ச்சி. தனித்துப் போட்டி கேள்வி:– நேற்றையதினம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அளித்த பேட்டியின்போது, தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே தற்போது இல்லை என்றும், ஏற்கனவே விலகி விட்டதாகவும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு எந்தவிதமான கடிதமும் தான் எழுதவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?. பதில்:– அதிலிருந்தே நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகனே சொல்லிவிட்டதற்காக நன்றி. கேள்வி:– தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. உடன் சேராமல் தி.மு.க. தனித்துப் போட்டியிடப்போகிறதா?. பதில்:– ஆமாம். ஏற்கனவே எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம். கேள்வி:– பா.ஜ.க. சார்பில் நேற்றையதினம் பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், தி.மு.க. கூட்டணிக்காக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?. பதில்:– பா.ஜ.க.வை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார். image: category:Tagging: |
| Posted: 17 Dec 2013 10:43 AM PST சென்னை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்ததுடன், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் கூறினார். கருணாநிதியுடன் சந்திப்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் அக்கட்சியின் மாநில – மாவட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். காலை 11 மணி முதல் 11.15 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.இந்த சந்திப்பின்போது, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த கே.எம்.காதர்மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு ஆதரவு கடந்த 15–ந்தேதி தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது. அதை உறுதி செய்ய இன்று வந்தோம். தி.மு.க. தலைவர் கருணாநிதி எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ''பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தால், உங்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?'' என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த கே.எம்.காதர்மொய்தீன், ''பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைப்பது என்பது உறுதியாக நடக்காது என்று நம்புகிறோம்'' என்றார். தமிழகத்தில் 3–வது அணி? தொடர்ந்து அவரிடம், ''பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் 3–வது அணி அமையுமா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும், பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும் கூறிவந்தார்கள். ஆனால், மூன்றாவதாக ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் வரும்'' என்று கே.எம்.காதர்மொய்தீன் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 17 Dec 2013 10:37 AM PST புதுடெல்லி, ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. மேல்சபையில் விவாதம் அப்போது டெல்லி மேல்சபையில் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து தேர்வு குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு குழு வழங்கிய 22 திருத்தங்களில் மூன்றை தவிர மற்ற திருத்தங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா (2011), மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு இது என்று குறிப்பிட்டார். நிறைவேறியது விவாதத்தில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சி தவிர அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. 5 மணி நேர விவாதத்திற்கு பிறகு பதில் அளித்து மந்திரி கபில் சிபல் பேசியபின் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா மேல்சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மீண்டும் இன்று (புதன்கிழமை) பாராளுமன்ற மக்களவையில் விவாதத்துக்கு வந்து நிறைவேற்றப்படுகிறது. அதன்பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு லோக்பால் மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும். விசாரணை வரம்புக்குள் பிரதமர் ஊழலுக்கு எதிரான இந்த லோக்பால் சட்ட மசோதா, சில பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரையும் அதன் விசாரணை அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறாமல் போனதற்கு முக்கிய காரணம், மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது கட்டாயம் என்ற பிரிவுக்கு தெரிவிக்கப்பட்ட கடும் எதிர்ப்புதான்.தற்போது மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது சட்டபூர்வம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுவிட்டது. ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடம் நோட்டீசு அனுப்பாமல் சி.பி.ஐ. அல்லது போலீசார் திடீர் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் முக்கிய திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்டது.குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு நியமிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாறுதல் செய்யக்கூடாது என்ற திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, அவர் மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பாக தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்ற திருத்தம் ஏற்கப்படவில்லை. பலம் வாய்ந்த மசோதா தொடக்கத்தில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், கூறியதாவது:பிரதமரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வர இருப்பதால், தற்போது இது பலம் வாய்ந்த மசோதாவாக மாறி உள்ளது. ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான 8 உறுப்பினர் லோக்பால் அமைப்பை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பிரபல நீதித்துறை நிபுணர் ஒருவர் இடம்பெறுவார்கள். சிபாரிசுகள் ஏற்பு எனவே லோக்பால் அமைப்பு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மசோதா தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சத்யவரத் சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் பெரும்பான்மையான சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.மத்திய பணியாளர் நல ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமிதான் இந்த மசோதாவை தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், அவருடைய மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சட்ட மந்திரி கபில் சிபல் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அருண்ஜெட்லி மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினையில் விவாதம் நடைபெற்று வருவதால் லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.லோக்பால் அமைப்புக்கு மத அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்க இட ஒதுக்கீடு வழங்குவது, விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்புவது உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அருண் ஜெட்லி மொத்தத்தில் மசோதாவை பா.ஜனதா ஆதரிப்பதாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சீதாராம் யச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) பேசும்போது கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான ஊழல் புகார்களையும் லோக்பால் அமைப்பு விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும், நியமன உறுப்பினரான ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மொத்தத்தில் மசோதாவை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க,தி.மு.க. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் மற்றும் முதல்மந்திரிகளை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் வி.மைத்ரேயன் எதிர்ப்பு தெரிவித்தார்.மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், பிரதமர், முதல்மந்திரிகளையும் விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தவறாக அதன் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மத நிறுவனங்களும் லோக்பால் மசோதா வரம்புக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமரை சேர்க்க எதிர்ப்பு இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.கில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு பிரதிநிதி அவர் என்று கில் குறிப்பிட்டார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுதன், கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்வதாக குற்றம் சாட்டினார். சமாஜ்வாடி வெளிநடப்பு முன்னதாக லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அந்த கட்சியின் உறுப்பினர் ராம்கோபால் யாதவ், இந்த சட்டத்தின்படி, பிரதமர், மந்திரிகள், எம்.பி.க்கள் என அனைவருமே போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள் அந்தஸ்துள்ள அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியது இருக்கும் என்றார்.ஒரு மந்திரி அல்லது அதிகாரி எந்த ஒரு ஆவணத்தில் கையெழுத்து போடுவதற்கும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| இந்தியா–தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம் Posted: 17 Dec 2013 10:07 AM PST ஜோகன்னஸ்பர்க், இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடக்கம் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் 141 ரன் மற்றும் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்தது. மழையால் கடைசி ஒரு நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது. இதைத் தொடர்ந்து இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஒரு நாள் தொடரில், தென்ஆப்பிரிக்காவின் மிரட்டலான வேகப்பந்து வீச்சு மற்றும் பவுன்ஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிய இந்திய வீரர்கள் ஒட்டுமொத்த சரணாகதியானார்கள். டெஸ்ட் தொடரிலும், அதே சூறாவளி தாக்குதலை தொடுக்க தென்ஆப்பிரிக்க பவுலர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்தியர்கள் சமாளிப்பார்களா? டெஸ்டில் போதிய அனுபவம் இல்லாத இந்திய இளம் வீரர்கள், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொண்டு, ரன்களை திரட்டப்போகிறார்கள் என்பதே இப்போது ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இந்தியா 'டிரா' செய்தாலே பெரிய விஷயம், 5–வது நாளுக்கு ஆட்டம் சென்றால் ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். இது போன்ற எதிர்முறையான விமர்சனங்களுக்கு நமது வீரர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்ற எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இல்லை. இந்த ஆண்டில் டெஸ்டில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா மட்டும் தான். 6 வெற்றிகளை (இவை அனைத்தும் உள்ளூரில்) வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்த வெற்றிப்பயணத்தை வெளிநாட்டிலும் தொடருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. கடைசியாக இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 8 டெஸ்டுகளில் (இங்கிலாந்துடன் 4, ஆஸ்திரேலியாவுடன் 4) படுதோல்விகளை சந்தித்த அனுபவமே அதற்கு உதாரணம். தெண்டுல்கர் இடத்தில் யார்? எப்போதுமே முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோரை குவித்து விட்டால், அதன் பிறகு எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதில் சிரமம் இருக்காது. எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜயும், ஷிகர் தவானும் தாக்குப்பிடித்து ஆட வேண்டியது முக்கியம். சச்சின் தெண்டுல்கர் விடைபெற்று விட்டதால், அவரது 4–வது வரிசையில் விராட் கோலி ஆடுவார் என்று தெரிகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு இப்போது சென்றுள்ள நமது அணியில், இந்திய துணை கண்டத்தை தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த ஒரே வீரர் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஜாகீர்கான் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சிகரமான விஷயம். அவர் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் ஷார்ட்–பிட்ச் பந்துகளை வீசும் யுக்தியை சாதுர்யமாக கையாண்டால், நிச்சயம் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை தடுமாற வைக்க முடியும். மொத்தத்தில் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப செயல்பட்டால் அது பலன் கொடுக்கும். அசைக்க முடியாத தென்ஆப்பிரிக்கா உலகின் நம்பர் ஒன் அணியான தென்ஆப்பிரிக்கா கடந்த 2 ஆண்டுகளில் உள்ளூரில் தோற்றதில்லை. பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி நம்ப முடியாத அளவுக்கு அந்த அணி வலுவானதாக திகழ்கிறது. 'நம்பர் ஒன்' பவுலர் ஸ்டெயின், வெரோன் பிலாண்டர், மோர்னே மோர்கல் ஆகிய மூவரும் தான் அவர்களின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இவர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பதை பொறுத்தே ஆட்டம் கடைசி நாள் வரை செல்லுமா? என்பதை சொல்ல முடியும். மொத்தத்தில் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் இன்னொரு அக்னிபரீட்சை என்றே சொல்லாம். சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், சவுரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்களில் ஒருவர் கூட இல்லாமல் இந்திய அணி விளையாட இருப்பது 1996–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஜோகன்னஸ்பர்க்கில் போட்டி நடக்கும் நாட்களில் கொஞ்சம் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய 20 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்கள் விவரம் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:– இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரஹானே அல்லது ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), அஸ்வின், ஜாகீர்கான், முகமது ஷமி அகமது, இஷாந்த் ஷர்மா அல்லது புவனேஷ்வர்குமார். தென்ஆப்பிரிக்கா: சுமித் (கேப்டன்), அல்விரோ பீட்டர்சன், அம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், டுமினி, வெரோன் பிலாண்டர், ஸ்டெயின், மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்ஸ்போர்ட்ஸ், டென் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. image: category: |
| Posted: 17 Dec 2013 09:47 AM PST |
| Posted: 17 Dec 2013 09:45 AM PST |
| அன்னா ஹசாரே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி. Posted: 17 Dec 2013 09:42 AM PST |
| சோனியாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து Posted: 17 Dec 2013 09:35 AM PST |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



