Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள், போலீசாருக்கு சலுகைகள் உள்பட 312 முக்கிய அறிவிப்புகள் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வெளியிட்டார்

Posted: 13 Dec 2013 12:04 PM PST

சென்னை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு, தலைமைச் செயலகத்தில் 11-ந் தேதி தொடங்கியது.

புதிய அறிவிப்புகள்

இந்த 3 நாட்கள் மாநாட்டிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முழுமையாக கலந்து கொண்டு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

மாநாட்டின் நிறைவையொட்டி மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக 312 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூடுதல் அதிகாரம்

சென்னை போலீஸ் துணை கமிஷனருக்கு இருக்கும் அதிகாரம் போல், குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 107, 108, 110 ஆகிய பிரிவுகளின்படி, அனைத்து நகர துணை கமிஷனர்களுக்கும் மாஜிஸ்திரேட்டு அதிகாரம் அளிக்கப்படும்.

திருச்சி மாவட்டம் உன்னியூர், கரூர் மாவட்டம் நேரூர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும்.

காஞ்சீபுரம்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடுபுதூரில் கடலறிப்பை தடுப்பதற்காக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கல்பட்டு துணை மண்டலத்தை பிரித்து வண்டலூரில் புதிய துணை மண்டலம் உருவாக்கப்படும்.

காஞ்சீபுரம் மாவட்டம் போக்குவரத்தை நிர்வகிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பதவி, இன்ஸ்பெக்டர் பதவியாக தரம் உயர்த்தப்படும். மறைமலை நகரில் போலீஸ் குடியிருப்பு கட்டித்தரப்படும்.

கொடுங்குற்றம்

திருட்டு, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்கள் தொடர்பாக போலீஸ் நிலையாணைகளில் திருத்தங்கள் கொண்டுவரப்படும். கொள்ளையின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேலும், திருட்டின் அளவு ரூ.3 லட்சத்துக்கு மேலும் இருந்தால் அவை கொடுங்குற்றம் என்று கருதப்படும்.

நெல்லை - அம்பாசமுத்திரம் சாலை, நெல்லை - தென்காசி சாலை, நெல்லை சங்கரன்கோவில் சாலை ஆகியவற்றுக்கு பைபாஸ் சாலைகள் அமைத்துத்தரப்படும்.

மதுரை - கன்னியாகுமரி சாலையில் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்துக்கு இணையாக, நெல்லை, பாளையங்கோட்டையை இணைக் கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

திருவண்ணாமலைக்கு செல்லும் ஒன்பது முக்கிய சாலைகளில் கார் நிறுத்தும் வசதி செய்து தரப்படும்.

இணைப்பு அலுவலர்

அனைத்து மாவட்டங்களிலும், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராமத்தில் உள்ளவர் களிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இருக் கும் ஒரு அதிகாரி, இணைப்பு அலுவலராக (லையசன்) அலுவலராக நியமிக்கப்படுவார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

கூடுதல் இழப்பீடு

சென்னை போலீஸ் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தும் விதத்தில் கூடுதல் பதவிகள் அனுமதிக்கப்படும்.

வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் சம்பவங்களில், இறப்போரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும், கொடுங்காயமடைந்தோருக்கு ரூ.10 ஆயிரமும் இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த தொகை இனி ரூ.2 லட்சம் மற்றும் ஒரு லட்சம் என்றும் முறையே உயர்த்தப்படும்.

நீலகிரி மாவட்ட பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு உடையாக, மாணவர்களுக்கு முழு கால்சட்டையும் (பேண்ட்), "புல்" கை சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், ஓவர் கோர்ட்-ம் அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு

அரசு ஊழியர்களுக்கு மலைவாழ் படி மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். குளிர்கால படி மாதமொன்றுக்கு ரூ.500 ஆக உயர்த்தப்படும்.

சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எப்.) போலீசாருக்கு கடும்பணி படியாக, மாதமொன்றுக்கு ரூ.900 அனுமதிக்கப்படும்.

அம்மா உணவகம்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிளாக் அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் நிலத்தடி கழிவுநீர் அகற்றும் முறை கொண்டு வரப்படும். திருவள்ளூரில் புதிய நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஏரிக்கு நீர் சப்ளை வசதிக்காக வாய்கால் ஒன்று கட்டப்படும். திருவள்ளூர், திருத்தணி பக்தர்கள் மையத்தில் நடைபாதை அமைக்கப்படும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர், மதுரவாயல், நாற்றாம்பள்ளி, அணைக்கட்டு தாலுகாக்களுக்காக அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் தொடங்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் தாலுக்காக்களுக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் எஸ்.பி.பி. மில்ஸ் அருகே கீழ்மட்ட ரெயில் பாலம் கட்டப்படும். நாமக்கல் நகராட்சிக்காக புதிய நீர் சப்ளை திட்டம் உருவாக்கப்படும். நாமக்கல் நகரில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.

புதிய கட்டிடம்

சென்னையில் புதிய 5 தாலுகா அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டித்தரப்படும். சென்னை தாசில்தார்களுக்கு 10 சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக வாகனங்கள் வழங்கபடும்.

செங்கல்பட்டு அருகே பழூரில் பாலாற்றின் குறுக்கே நீர் நெறிச் சுவர் எழுப்பப்படும். காஞ்சீபுரம் அரசு தலைமையிட ஆஸ்பத்திரியில் விபத்து சிகிச்சை வார்டு (டருமா கேர்) அமைக்கப்படும்.

குண்டு துளைக்காத கார்

எஸ்.ஐ.டி. என்ற சிறப்பு போலீஸ் படையில் உள்ள 776 பேர், அடிப்படைவாதிகளின் வழக்குகள் தொடர்பான விசாரணையை பலப்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அமர்த்தப்படுவார்கள். சைபர் கிரைம் பிரிவு மேலும் பலப்படுத்தப்படும். எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு டிஜிட்டல் பைல் நிர்வாகம் ஒப்பளிக்கப்படும்.

இந்திய கடற்படை அல்லது கடலோர பாதுகாப்பு படையில் இருந்து அதிகாரி ஒருவர், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கமாண்டண்ட் ஆக நியமிக்கப்படுவார்.

மிகமுக்கிய நபர்களின் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத கார் வாங்கப்படும்.

சைதாப்பேட்டை, பூந்தமல்லி துணை சிறைகளில் 100 கைதிகளை அடைக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு கமாண்டோ படைக்கு துரித செயல்பாட்டுக்கான பயிற்சி அளிப்பதற்கான துப்பாக்கிகள் வாங்கப்படும். பாதுகாப்பு தொடர்பாக அனைத்து போலீசாருக்கும் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசாருக்கு அலுவலக கட்டிடம் தரப்படும். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் இன்ஸ்பெக்டர்களுக்கு பதிலாக 27 துணை சூப்பிரண்டுகள் பதவி ஏற்படுத்தப்படும். அந்த பிரிவுகளுக்கென்று தனி கூடுதல் ஐ.ஜி. பதவி உருவாக்கப்படும்.

தகவல் பரிமாற்றத்துக்காக போலீஸ் துறைக்கு நவீன எச்.எப். டேட்டா நெட்ஒர்க் அளிக்கப்படும். 300 வி.எச்.எப். ஸ்டாட்டிக் கருவி, 600 மொபைல், ஆயிரத்து 200 கையடக்க கருவிகள் போன்றவை தரப்படும்.

மேற்கண்டவை உள்பட 312 அறிவிப்புகளை முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

கருத்து வேறுபாடு காரணமாக ஹிருத்திக் ரோஷன்–சுசன்னே தம்பதி பிரிந்து வாழ முடிவு

Posted: 13 Dec 2013 11:48 AM PST

மும்பை

கருத்து வேறுபாடு காரணமாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்– சுசன்னே தம்பதியினர் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஹிருத்திக் ரோஷன்–சுசன்னே

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசன்னேவை கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சுசன்னே இந்தி நடிகர் சஞ்சய் கானின் மகள். இந்த தம்பதியினருக்கு ஹிரே கான்(வயது 7), ஹிருதான்(5) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 6–ந் தேதி ஹிருத்திக் ரோசனின் தந்தை ராகேஷ் ரோசன் தனது 64–வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஹிருத்திக் ரோசனின் மனைவி சுசன்னே காலதாமதமாக வந்தார்.

அவருடன் அவரது தாயார் சரைன் கான், தந்தை சஞ்சய் கான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர். இதையடுத்து நடைபெற்ற 'கிரிஷ் 3' படத்தின் வெற்றி விழா உள்பட எந்த நிகழ்ச்சிகளிலும் ஹிருத்திக் ரோசன் தன் மனைவி சுசன்னேவுடன் கலந்து கொள்ளவில்லை.

ஹிருத்திக் விளக்கம்

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோசன் பதிலளித்து பேசுகையில், ''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டு பிரிய அவர் (சுசன்னே) தீர்மானித்துவிட்டார். இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிமையில் அனுமதிக்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

மேலும் அவர், ''இதன் காரணமாக எனது ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது என்றும், எனக்கு சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பிரிந்து வாழ முடிவு

ஹிருத்திக் ரோசனின் மாமனாரும், சுசன்னேவின் தந்தையுமான சஞ்சய் கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,'' மற்ற தம்பதிகளை போல் ஹிருத்திக்–சுசன்னே தம்பதிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். அருமையான தம்பதியினர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிறிதுகாலம் பிரிந்து வாழ தீர்மானித்து இருக்கிறார்கள். இதை முடிவு என்று கருதுவது தவறு. அவர்கள் இருவரும் பிரியவில்லை'' என்றார்.

 

category:

News Group Category:

அகில இந்திய நீச்சல் போட்டி சென்னை மாணவர் 2 தங்கம் வென்றார்

Posted: 13 Dec 2013 11:13 AM PST

சென்னை,

பள்ளிகளுக்கு இடையிலான அகில இந்திய நீச்சல் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடந்து வருகிறது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நேற்று நடந்த 100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த எஸ்.ஆதர்ஷ் தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே ஆதர்ஷ் 100 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். சென்னையை சேர்ந்த ஆதர்ஷ் சென்னை மாநகராட்சி நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டியிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
 

category:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இரட்டை விருதுக்கு கிளார்க் தேர்வு புஜாராவுக்கு வளர்ந்து வரும் வீரர் விருது

Posted: 13 Dec 2013 10:27 AM PST

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இரட்டை விருதுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய வீரர் புஜாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி.விருது

2004–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த வீரர்–வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவித்து வருகிறது.

விருதுக்கான வீரர்கள் பட்டியலை முன்னாள் பிரபல வீரர்கள் 5 பேர் அடங்கிய குழு முதலில் தேர்வு செய்து ஐ.சி.சி.யிடம் வழங்கும். அதில் இருந்து டெஸ்ட் போட்டியில் ஆடும் அணிகளின் கேப்டன், முன்னாள் முன்னணி வீரர்கள், நடுவர்கள் உள்பட 56 பேர் தங்கள் வாக்குகளின் மூலம் ஒரு பிரிவில் ஒரு வீரரை இறுதி செய்வார்கள்.

கிளார்க்குக்கு இரட்டை விருது

இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. 2012–ம் ஆண்டு ஆகஸ்டு 7–ந் தேதி முதல் 2013–ம் ஆண்டு ஆகஸ்டு 25–ந் தேதி வரையிலான கால கட்டத்தில் வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் விருதை ஒருசேர ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தட்டிச் சென்றார்.

ஒருநாள் வீரர் சங்கக்கரா

வாக்கெடுப்பு கால கட்டத்தில் 1,559 ரன்கள் குவித்து இருந்த மைக்கேல் கிளார்க், சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு தன்னுடன் களத்தில் இருந்த அம்லா (தென் ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன், குக் (இங்கிலாந்து), டோனி (இந்தியா), சங்கக்கரா (இலங்கை) மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு போட்டியாக விளங்கிய அம்லா (தென் ஆப்பிரிக்கா) ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), அஸ்வின், புஜாரா (இந்தியா), ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரை பின்னுக்கு தள்ளி இரட்டை விருதுகளை அள்ளிச் சென்றார்.

சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதினை இலங்கை வீரர் சங்கக்கரா பெறுகிறார். இந்த விருதுக்கான பட்டியலில் இடம் பெற்று இருந்த சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), ஷிகர் தவான் (இந்தியா), டோனி (இந்தியா), மிஸ்பா உல்–ஹக் (பாகிஸ்தான்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

புஜாராவுக்கு விருது

வளர்ந்து வரும் வீரர் விருது இந்தியாவின் புஜாராவுக்கும், 20 ஓவர் போட்டியில் சிறந்த வீரர் விருது உமர்குல்லுக்கும் (பாகிஸ்தான்), உத்வேக வீரர் விருது மஹேலா ஜெயவர்த்தனேவுக்கும் கிடைத்து இருக்கிறது. அசோசியேட் அணிகளில் சிறந்த வீரர் விருதுக்கு அயர்லாந்து அணி வீரர் கெவின் ஓபிரையன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு சுசி பேட்சும் (நியூசிலாந்து), சிறந்த 20 ஓவர் போட்டி வீராங்கனை விருதுக்கு சாரா டெய்லரும் (இங்கிலாந்து) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கேப்டன் டோனி

ஏற்கனவே மக்கள் விரும்பும் வீரர் விருதுக்கு இந்திய அணி கேப்டன் டோனியும், ஐ.சி.சி. ஒருநாள் அணிக்கு இந்திய வீரர்கள் டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் அணிக்கு டோனி, புஜாரா, அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

category:

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 3–வது டெஸ்ட் ஸ்டீவன் சுமித் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்

Posted: 13 Dec 2013 10:22 AM PST

பெர்த்,

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கண்டது.

3–வது டெஸ்ட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் 381 ரன்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2–வது டெஸ்டில் 218 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

மைக்கேல் கிளார்க் ஏமாற்றம்

தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் ரோஜர்ஸ் 11 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஷேன் வாட்சன் 18 ரன்னிலும், 100–வது டெஸ்டில் ஆடும் கேப்டன் மைக்கேல் கிளார்க் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது.

4–வது விக்கெட்டுக்கு டேவிட் வார்னருடன், ஸ்டீவன் சுமித் சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் பொறுப்புடன் விளையாடினார். அரை சதத்தை கடந்த டேவிட் வார்னர் 60 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஜார்ஜ் பெய்லி 7 ரன்னில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து இருந்தது.

ஸ்டீவன் சுமித் சதம்

வேகப்பந்து வீச்சாளர் பிராட் ஹேடின் 100 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் சுமித் 173 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார்.

நேற்றைய ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 87 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் சுமித் 103 ரன்னுடனும், ஜான்சன் 39 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஸ்வான் தலா 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இன்று (சனிக்கிழமை) 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

image: 

category:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி

Posted: 13 Dec 2013 10:19 AM PST

வெலிங்டன், டிச.14–

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

2–வது டெஸ்ட்

நியூசிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 441 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 129 ரன்கள் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மழையால் பாதிக்கப்பட்ட 2–வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது. சாமுவேல்ஸ் 50 ரன்னுடனும், டியோநரைன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் பாலோ–ஆன்

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 193 ரன்னில் ஆல்–அவுட் ஆகி பாலோ–ஆன் ஆனது. 35 ரன்களுக்குள் கடைசி 6 விக்கெட்டுகள் சரிந்தன.

நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 6 விக்கெட்டும், டிம் சவுதி, கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். கேப்டன் டேரன் சேமி, ஷில்லிங்போர்டு, டினோபெஸ்ட் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் பவுல்ட் பந்து வீச்சில் போல்டு ஆனார்கள்.

175 ரன்னில் சுருண்டது

'பாலோ–ஆன்' ஆகி தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பவெல் (36 ரன்), எட்வர்ட்ஸ் (35 ரன்) ஆகியோர் மட்டுமே ஒரளவு தாக்குப்பிடித்து நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 54.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 175 ரன்னில் சுருண்டது.

நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வி

இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சந்தர்பால் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் 4 விக்கெட்டும், டிம் சவுதி 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும், கோரி ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். நேற்று ஒரேநாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 24 வயதான நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் வருகிற 19–ந் தேதி தொடங்குகிறது.

இந்த ஆண்டில் முதல் வெற்றி

இந்த ஆண்டில் 11–வது டெஸ்டில் விளையாடிய நியூசிலாந்து அணி பெற்ற முதல் வெற்றியாகும். 2012–ம் ஆண்டில் கேப்டனான பிரன்டன் மெக்கல்லம் தலைமையில் நியூசிலாந்து அணி பெற்ற முதல் வெற்றியும் இதுவாகும். கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட 3–வது இன்னிங்ஸ் தோல்வியாகும்.

image: 

category:

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் டெபாசிட் ரூ.3,652 கோடி

Posted: 13 Dec 2013 10:00 AM PST

புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.3,652 கோடி அளவிற்கு வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை உரிமை கோரப்படாமல் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 15 சதவீத தொகை உள்ளது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்ற மக்களவையில் இதனை தெரிவித்துள்ளார்.

கணக்கு விவரங்கள்

2012 டிசம்பர் இறுதி நிலவரப்படி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோராத நிலையில் உள்ள டெபாசிட் தொகை ரூ.3,652 கோடியாக உள்ளது. இவ்வாறு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கியிருக்கும் எல்லா கணக்குகள் பற்றிய விவரங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு தொடங்கி 30 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியிடம் இது குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு வங்கிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொதுத் துறை வங்கிகளில் ரூ.3,237 கோடி கேட்பாரற்று கிடக்கிறது. தனியார் வங்கிகளில் ரூ.340 கோடியும், வெளிநாட்டு வங்கிகளில் ரூ.75 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளன.

பாரத ஸ்டேட் வங்கியிடம் மட்டும் ரூ.539 கோடி அளவிற்கு டெபாசிட் தொகை கேட்பாரற்று உள்ளது. இவ்வங்கி ஐந்து துணை வங்கிகளைக் கொண்டுள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தில் மொத்தம் ரூ.714 கோடி உரிமை கோராத நிலையில் உள்ளது.

கனரா வங்கி

கனரா வங்கியில் ரூ.526 கோடி டெபாசிட் தொகை கேட்பாரற்று உள்ளது. அடுத்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.390 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.385 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளது. தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.101 கோடி டெபாசிட் கேட்பாரற்ற நிலையில் உள்ளது. எச்.டீ.எப்.சி. வங்கியில் ரூ.13 கோடி கேட்பாரற்று கிடக்கிறது.

category:

ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

Posted: 13 Dec 2013 09:57 AM PST

மும்பை,

சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளதால், ரிசர்வ் வங்கி இம்மாதம் 18–ந் தேதி வெளியிடும் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையில் ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர்

ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு இரண்டு முறை வெளியிட்ட ஆய்வு அறிக்கைகளிலும் ரெப்போ ரேட் விகிதங்களை தலா 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டிக்கு ரெப்போ ரேட் என்று பெயர். இந்த வட்டிவிகிதம் 7.75 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் என்பது தேவைப்பாட்டைக் காட்டிலும் பொருள்கள் சப்ளை குறைவதாலும் பணபுழக்கம் அதிகமாக இருப்பதாலும் ஏற்படுகிறது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை மேலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. நவம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 11.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடமிருந்து அவசர கால தேவைக்கு வங்கிகள் வாங்கும் கடனுக்கான (எம்.எஸ்.எஃப்.ரேட்) வட்டி விகிதத்தையும் ரிசர்வ் வங்கி உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாண்டு ஜூலை 15–ந் தேதி இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி திடீரென 2 சதவீதம் உயர்த்தியது. தற்போது இந்த வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உள்ளது.

category:

சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானியத்திற்கு வரி விதிக்கப்படுமா?

Posted: 13 Dec 2013 09:49 AM PST

கொல்கத்தா,

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் நாட்டின் சில பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்த பகுதிகளில் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனை வருமானமாக கணக்கிட்டு வரி விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விதிமுறைகள்

இது தொடர்பாக தெளிவான விதிமுறைகள் எதுவும் இல்லை. இதற்கு வரிவிதிப்பதா அல்லது கூடாதா என்பது குறித்து வருமான வரித்துறை முடிவு எடுக்கும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை குறைவாக இருப்பினும் இதற்கு வருமான வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கே.பி.எம்.ஜி. நிறுவனத்தின் பங்குதாரர் (வரி) நபின் பல்லோடியா தெரிவித்துள்ளார். அதேசமயம் வரி விதிக்கப்படால் அதனை எதிர்த்து வழக்கு தொடரப்படலாம் என ஒரு மூத்த வருமான வரி கணக்கு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெறும் மானியத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக கொல்கத்தா துறைமுக பொறுப்பு கழகம் மத்திய அரசிடமிருந்து பெறும் மானியத்திற்கு வரி செலுத்துகிறது.

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை சுமார் ரூ.1,015–ஆக உள்ளது. மானிய கியாஸ் விலை சுமார் ரூ.402–ஆக உள்ளது. ஆக, ஒரு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் சுமார் ரூ.600–ஆக உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு 9 மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் ஓராண்டிற்கான மானியம் சுமார் ரூ.5,400 ஆகும்.

பாதிப்பு ஏற்படுமா?

எரிவாயு மானியத்திற்கு வரி விதிக்கப்படும் நிலையில் வரி செலுத்தும் அளவுக்கு ஆண்டு வருமானம் இல்லாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் 30 சதவீதம் வருமானவரி செலுத்தும் அளவிற்கு வருமானம் உள்ளவர்கள் சுமார் ரூ.1,700 வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

image: 

category:

இந்தியப் பெண் தூதர் கைது விவகாரம்: அமெரிக்க தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

Posted: 13 Dec 2013 09:40 AM PST

வாஷிங்டன்

இந்தியப் பெண் தூதரை கைது செய்த விவகாரத்தில், அமெரிக்க தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

பெண் துணை தூதர்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் கடந்த ஆண்டு துணைத்தூதராக பதவியில் அமர்த்தப்பட்டவர் டாக்டர் தேவயானி கோப்ரகாடே. டாக்டராக இருந்து தூதரகப் பணிக்கு இவர் சென்றுள்ளார். இவர் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சங்கீதா ரிச்சர்ட் என்ற வேலைக்காரப் பெண்ணை அழைத்துச்சென்றிருந்தார்.

 இந்தப் பெண், தேவயானி வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வேலை பார்த்தார்.

சம்பளப்பிரச்சினை

இவருக்கு அமெரிக்க சட்ட விதிகள்படி மணிக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.620) தருவதாக அழைத்துச்சென்ற தேவயானி அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மணிக்கு 3.11 டாலர் மட்டுமே (சுமார் ரூ.186) சம்பளம் தந்ததாக தெரிகிறது. இதற்கு உடன்படாத நிலையில் அந்தப் பெண், தேவயானியின் வீட்டில் இருந்து சென்று விட்டார்.

இதுதொடர்பாக டெல்லி கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

விசா மோசடி

இந்த நிலையில், தேவயானி, வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்கள் தந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகவும், வேலைக்காரப்பெண்ணுக்கு குறைவான ஊதியம் தந்த குற்றச்சாட்டின் பேரிலும் தேவயானி மீது மேன்ஹட்டனில் உள்ள அரசு வக்கீல் பிரித் பராரா வழக்கு தொடுத்துள்ளார். (இவரும் இந்தியப்பெண்தான்)

'திடீர்' கைது

இந்த வழக்கில் தேவயானியை கைது செய்வதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் தனது 2 பெண் குழந்தைகளை தேவயானி பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடச்சென்றார். அப்போது அவர் நடுரோட்டில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

இப்படி ஒரு கைது நடவடிக்கை இதுவரை நடந்ததில்லை. தேவயானி கைது செய்யப்பட்டதற்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜாமீனில் விடுதலை

கைது செய்யப்பட்ட தேவயானி, மேன்ஹட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்து ஜாமீன் பெற்றார்.

இந்தச் சம்பவம் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

தூதரிடம் இந்தியா கண்டனம்

தேவயானியின் கைது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை நேற்று அவசரமாக அழைத்துப்பேசினார். இந்தியாவின் கடும் எதிர்ப்பை அவர் பதிவு செய்தார்.

அமெரிக்க தூதர் நான்சி பவலுடன் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் பேசுகையில், ''மூத்த ஒரு தூதரக அதிகாரி நடத்தப்பட்ட விதம் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வெளிநாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு உடன்படிக்கைகளின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள மரியாதைக்கு அவரும் உரிமையுடையவர்'' என கண்டிப்புடன் கூறினார்.

கொஞ்சமும் ஏற்க முடியாது

இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையத் அக்பருதீன், டெல்லியில் இந்த விவகாரம் தொடர்பாக நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ''அமெரிக்க அதிகாரிகளால் அவர் அவமதிக்கப்பட்ட விதம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், திகைப்பையும் அளித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள எங்களது தூதரகம் வாயிலாக இந்த விவகாரத்தை அமெரிக்க அரசிடம் வலுவான விதத்தில் எடுத்துச்சென்றுள்ளோம். இது கொஞ்சம் கூட ஏற்க முடியாத ஒன்று என்பதை நாங்களும் வலியுறுத்துகிறோம்'' என கூறினார்.

அவர் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், ''இந்த விவகாரத்தை விரைவாக முடிப்பதற்கு எங்கள் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விவகாரங்கள் இருந்தால், அவற்றுக்கு தனியாக தீர்வு காணப்படும். பொது இடத்தில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு இளம்தாயை அவமதிக்க எந்தவொரு உரிமையும் இல்லை. தூதரக அதிகாரியாக ஒருவரை அனுப்பியுள்ளோம் என்றால் அவர் இந்த நாட்டின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டிருக்கிறார். குழந்தைகளை பள்ளிக்கு விடச்சென்ற ஒரு இளம்தாய்க்கு நேர்ந்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என உறுதிபடத் தெரிவித்தார்.

இது முதல் முறையல்ல

இந்திய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் அவமதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. மூன்றாவது முறை. 2011 ஜூன் மாதம் நியூயார்க்கில் இந்திய துணைத்தூதராக இருந்த பிரபுதயாள் மீது முன்னாள் வேலைக்காரப்பெண் தன்னை ஓராண்டு காலம் கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொல்லி மிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடுத்தார்.

2012–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நியூயார்க் இந்திய தூதரகத்தில் ஊடகம், கலாச்சாரப்பிரிவு கவுன்சிலராக பணியாற்றிய நீனா மல்கோத்ராவுக்கு எதிராக இந்திய பணிப்பெண் சாந்தி குருங்க் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டார்.

இப்போது நியூயார்க்கில் இந்திய துணைத்தூதர் தேவயானி பொது இடத்தில் கைது செய்து, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™