Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Posted: 12 Dec 2013 12:28 PM PST

கோவையை அடுத்த இருகூரில் கட்டப்பட்டுவரும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலங்களினால் பிரச்சினை

கோவையை அடுத்த இருகூரில் சிந்தாமணிபுதூர்-அத்தப்பகவுண்டன்புதூர் ரோட்டில் இருகூர் 1-ம் நம்பர் ரெயில்வே மேம்பாலம் ரூ.25 கோடி செலவில் கட்டி திறந்து வைக்கப்பட்டது.இருகூர் 2-ம் நம்பர் பாலம் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் காலனி, செந்தில் ஜனதாநகர் உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பாலங்களில் 1-ம் நம்பர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்ட பின்னர் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெயில்வே கேட்டை திறந்தனர்.

கேட்டை மூடக்கூடாது

ஆனால் இருகூர் 2-ம் நம்பர் பாலத்தின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்ட நிலையில் தற்போது புதிய பிரச்சினை எழுந்துள்ளது.இது குறித்து இருகூர் பேரூராட்சி தலைவர் ஜி.கவிதா, இருகூர் ஊர் நல ஒருங்கிணைப்பு குழு தலைவர் எம்.கே.கருப்பண்ணன்,துணை தலைவர் இருகூர் சுப்பிரமணியம்,பொருளாளர் பரமசிவம்,செயலாளர்கள் எம்.கே.எம்.ஆனந்தகுமார்,செந்தில் ஆகியோர் கூறியதாவது:-

இருகூர் 1-ம் நம்பர் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஏற்கனவே செயல்பட்டு வந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டது.அந்த பாலத்துக்கு அருகில் அரசு பள்ளி உள்ளது.அந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் புதிய பாலத்தின் மீது ஏறி நடந்து தான் செல்ல வேண்டும்.ஏனென்றால் புதிய பாலத்தின் இரண்டு புறமும் நடந்து செல்பவர்களின் வசதிக்காக படிக்கட்டுகள் அமைக்கப் படவில்லை.எனவே 1-ம் நம்பர் பாலத்துக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட்டை மூடக்கூடாது.மேலும் அந்த கேட்டுக்கு அருகில் உள்ள கீழ்ப்பாலத்தை சரி செய்து கொடுத்தால் அதன் வழியாக அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பயன்அடைவார்கள்.

சேவை சாலை அமைக்க வேண்டும்

இருகூர் 2-ம் நம்பர் ரெயில்வே மேம்பாலத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சர்வீஸ் சாலையும் உடனடியாக அமைக்க வேண்டும்.ஏனென்றால் ஒண்டிப்புதூர் ரெயில்வே மேம்பாலம் கட்டியபோது சேவை சாலையை அமைக்கவில்லை.இதனால் பாலத்துக்கு கீழ் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் நடந்து செல்வதற்கு கூட வசதியில்லாமல் அவதிப்பட்டனர்.அதை போல பிரச்சினை இங்கும் வந்து விடக்கூடாது.அது மட்டுமல்லாமல் தற்போதுள்ள ரெயில்வே கேட்டுக்கு அடியில் ரெயில்வே கீழ்பாலத்தையும் உடனே அமைக்க வேண்டும்.இல்லையென்றால் சேவை சாலை அமைத்தும் பலனில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேம்பாலம் அமைப்பதின் நோக்கம்

ரெயில்வே மேம்பாலம் கட்டி முடித்த பின்னர் ரெயில்வே கேட்டை திறக்க முடியுமா? என்பது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரெயில்வே மேம்பாலங்கள் கட்டுவதின் முக்கிய நோக்கமே சாலையில் தடையின்றி வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது தான்.பாலம் கட்டிய பின்னர் அந்த ரெயில்வே கேட்டை அடைத்து விடுவோம்.ரெயில்வே கேட்டில் 8 மணி நேரத்துக்கு ஒருவர் வீதம் 3 கேட் மேன் நியமிக்கும் செலவும் மிச்சமாகும்.அதன்படி தான் கோவை இருகூர் 1-ம் நம்பர் ரெயில்வே கேட் மூடப்பட்டது.ஆனால் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கேட் திறக்கப்பட்டது.ஆனால் பொதுமக்களின் கோரிக்கை நிறைவு பெற்றதும் அந்த கேட்டை மூடி விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

image: 

category:

அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க மந்திரிகளுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 12 Dec 2013 12:17 PM PST

புதுடெல்லி

அரசியல் காரணங்களுக்காக, அதிகாரிகளை மந்திரிகள் துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்காக, மந்திரிகளுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

திருத்தம்

மந்திரிகளுக்கான நடத்தை நெறிமுறைகள் கடந்த 1964–ம் ஆண்டு அமலுக்கு வந்தன. ஏற்கனவே ஒருதடவை அதில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், நேற்று 2–வது தடவையாக திருத்தம் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதன்படி, மந்திரிகளுக்கான நடத்தை நெறிமுறைகளில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக, அரசு அதிகாரிகளை மந்திரிகள் துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்த உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகள், அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கத்தில் செயல்படுவதையும் தடுக்கிறது.

அரசியல் ஆதாயம்

இந்த திருத்தம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது:–

மந்திரிகள், பதவி ஏற்றதில் இருந்து மந்திரிகளாக நீடிக்கும்வரை, அரசு அதிகாரிகள் விஷயத்தில் அரசியல் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை, எவ்வகையிலும் தங்கள் பணிக்கோ, பொறுப்புகளுக்கோ குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுமாறு கேட்கக்கூடாது.

அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில், அரசு அதிகாரிகளை கவர்வதற்காக, அவர்களுக்கு பிடித்தமான பணியிடங்கள் வழங்குவதையோ, இடமாற்றம் வழங்குவதையோ மந்திரிகள் செய்யாமல் இருக்க இந்த திருத்தம் உதவும். அரசு அதிகாரிகளும் தங்கள் பணிக்கு குந்தகம் விளையாத வகையில் செயல்பட உதவும்.

இந்த திருத்தத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றபோதிலும், இவற்றை மந்திரிகள் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

சொத்து கணக்கு

ஏற்கனவே உள்ள நடத்தை நெறிமுறைகளின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு 31–ந் தேதிக்குள், மந்திரிகள் தங்களுடைய மற்றும் குடும்பத்தினருடைய சொத்து விவரங்கள் மற்றும் கடன் விவரங்களை பிரதமரிடமும், மாநில மந்திரிகளாக இருப்பின், முதல்–மந்திரியிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

மந்திரிகள் தாங்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாகவோ யாரிடமும் பண உதவி பெறக்கூடாது. பதிவு செய்யப்பட்ட சங்கத்துக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ, மந்திரிகளிடம் யாராவது காசோலை வழங்கினால், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மந்திரிகள் வழங்கிவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த திருத்தம், மத்திய அரசில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, அவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

மக்களுக்காக நீட்டப்பட்டுள்ள அரசின் கருணைக் கரங்களாக கலெக்டர்கள் இருக்க வேண்டும் ஜெயலலிதா பேச்சு

Posted: 12 Dec 2013 11:53 AM PST

சென்னை

மக்களுக்காக நீட்டப்பட்டுள்ள அரசின் கருணைக் கரங்களாக கலெக்டர்கள் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் நடந்த மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

கலெக்டர் மாநாடு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (11–ந் தேதி) தொடங்கியது முதல் நாளன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இண்டாவது நாளான இன்று மாவட்ட கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாநாடு நடந்தது. காலையில் 11 மணிக்கு மாநாடு தொடங்கியது. அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய தொடக்க உரை வருமாறு:–

எதிர்கால வளர்ச்சி

சட்டம்–ஒழுங்கு பிரச்சினை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி 11–ந் தேதி (நேற்று ) நடந்த விவாதம், மிகுந்த பலனுள்ளதாக அமைந்தது. இன்று மேம்பாடு குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி நிரலை வைத்துள்ளோம்.

எனது அரசின் புதிய திட்டங்களை அமலாக்கியது பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் அறிந்து கொள்வதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் அந்தத் திட்டங்களின் பயன் சென்றடைந்ததையும், அவர்களின் நல்ல எதிர்காலத்துக்கு தேவையான வளர்ச்சி கிடைத்துள்ளதையும் இந்தத் தருணத்தில் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நம்பிக்கை உள்ளது

தேசிய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு, மாநில பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது. மேலும், கடந்த 2012–ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சி, மாநில வளர்ச்சியை குறிப்பாக வேளாண்மை மற்றும் அதன் உப தொழில்களை பாதித்தது.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் அளிப்பதற்கு எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகள் பற்றி நாம் பேசுவது அவசியமாகிறது. அதிகபட்ச வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும். மாநிலத்தின் அனைத்து துறைகள் சார்பிலும் எடுத்து வரும் நிலையான மற்றும் உன்னிப்பான முயற்சிகளால், 2013–14–ம் ஆண்டில் நிர்ணயித்துள்ள வளர்ச்சியை நாம் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

சிறப்புப் பொறுப்பு

தமிழகத்துக்காக நான் மேற்கொண்டுள்ள கொள்கையால் நிலையான மேம்பாட்டை அடைய முடியும். வளர்ச்சி அடைவதில் இருந்து யாருமே விடுபட்டு விடக்கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடம் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது கலெக்டர்களுக்கு இருக்கும் சிறப்பு பொறுப்பு ஆகும்.

கருணைக் கரங்கள்

கலெக்டர்களின் பணியை பொது நிர்வாக மேதை, ''கலெக்டர் என்பவர், அரசின் ஒரு கருவி என்று மக்கள் நினைக்கவில்லை. தங்களை நோக்கி நீட்டப்பட்டுள்ள கருணையுள்ள அரசின் கரம்தான் கலெக்டர் என்பதே அவர்களின் எண்ணம். கலெக்டர் என்பவர் முதலில் மக்கள் நல அலுவலர். இயற்கை சீற்றம், உள்ளூர் பிரச்சினை, தனிப்பட்ட சிக்கல்கள் ஆகியவற்றால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கலெக்டர் எதிர்பார்க்கப்படுகிறார்'' என்று வர்ணிக்கிறார். அதைத்தான் இங்கு இருக்கும் ஒவ்வொரு கலெக்டரிடமும் நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாளை போலீஸ் மாநாடு

அதைத் தொடர்ந்து கலெக்டர்கள் மாநாடு தொடர்ந்து நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காலை மற்றும் பிற்பகலில் நடந்த நிகழ்ச்சி முழுவதிலும் கலந்து கொண்டார்.

நாளை  (13–ந் தேதி) நடக்கும் மாநாட்டு நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்வார்கள்.

category:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Posted: 12 Dec 2013 11:52 AM PST

சென்னை

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அதிராம்பட்டினம்–பாம்பன் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்க கடலில் உருவான மேடி புயல் வலுவிழந்து மீண்டும் தமிழகம் நோக்கி வந்தது. இதன் காரணமாக நேற்று புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. புதுவை துறைமுகத்தில் 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. நாகை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

மீனவர் பலி

நாகையை அடுத்த சாமந்தான் பேட்டையை சேர்ந்த 4 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதனால் 4 பேரும் கடலில் குதித்து நீந்தினர்.

இதில் 3 பேர் மட்டுமே நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். தவமணி (வயது40) என்பவர் இறந்தார்.

இன்று கரையை கடக்கிறது

சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வங்கக்கடலில் உருவான மேடி புயல் வடக்கு நோக்கி சென்று, பின்னர் வலுவிழந்து மீண்டும் தமிழகம் நோக்கி நகர்ந்து வந்துள்ளது. அது இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மேலும் வலு குன்றி தாழ்வுப்பகுதியாக தென்மேற்கு வங்கக்கடலில் வேதாரண்யம் அருகே உள்ளது.

வேதாரண்யம் அருகே அது கரையை கடக்கும். பின்னர் மேற்கு தென்மேற்காக நகர்ந்து மீண்டும் தமிழக கடற்கரையை அதிராம்பட்டினம் – பாம்பன் இடையே தொண்டிக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அநேக இடங்களில் மழை

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்றும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இந்த வானிலை 14–ந்தேதி காலை வரை நீடிக்கும். அதன் பின்னர் படிப்படியாக மழை குறையும்.

இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 அரையாண்டு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புதுச்சேரியிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

category:

News Group Category:

அன்னா ஹசாரே போராட்டம் எதிரொலி டெல்லி மேல்–சபையில் லோக்பால் மசோதா இன்று தாக்கல் சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு

Posted: 12 Dec 2013 11:47 AM PST

புதுடெல்லி

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மேல்மட்ட தலைவர்களையும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க வகைசெய்யும் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேல்–சபை

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், லோக்பால் மசோதா கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. இந்த மசோதா, கடந்த ஆண்டு பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிறகு, டெல்லி மேல்–சபைக்கு அனுப்பப்பட்டபோது, அமளி காரணமாக, மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அத்துடன், பாராளுமன்ற கூட்டத்தொடரும் முடிவடைந்ததால், லோக்பால் மசோதா, டெல்லி மேல்–சபை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக்குழு, பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.

உண்ணாவிரதம்

இந்த சூழ்நிலையில், நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டெல்லி மேல்–சபையிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தனது சொந்த ஊரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

மேலும், லோக்பால் மசோதா தொடர்பான போராட்டங்களின் பின்னணியில் தொடங்கப்பட்ட 'ஆம் ஆத்மி' கட்சி, டெல்லி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை கைப்பற்றி அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்த காரணங்களால், லோக்பால் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கமல்நாத்

இதுகுறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, டெல்லி மேல்–சபையில், இன்று (வெள்ளிக்கிழமை)லோக்பால் மசோதா எடுத்துக்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து, மக்களவையிலும் எடுத்துக்கொள்ளப்படும்.

நடப்பு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. இதர அலுவல்களுக்கு நாங்கள் நேரம் ஒதுக்கி உள்ளோம். முன்னுரிமை பணிகளை பட்டியலிட்டுள்ளோம். நிதி அமைச்சகம் மற்றும் ரெயில்வே அமைச்சகத்தின் துணை மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி உள்ளது.

இவ்வாறு கமல்நாத் கூறினார்.

பா.ஜனதா கோரிக்கை

இதற்கிடையே, மக்களவை, டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:–

லோக்பால், தெலுங்கானா போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. துணை மானிய கோரிக்கைகளை விவாதம் இன்றி நிறைவேற்றியதுபோல, லோக்பால் மசோதாவையும் நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கனவே, அனைத்து அரசியல் கட்சிகளின ஒப்புதலுடன், டெல்லி மேல்–சபை தேர்வுக்குழு 13 சிபாரிசுகளை செய்துள்ளது. அந்த திருத்தங்களுடன், லோக்பால் மசோதாவை மேல்–சபையில் வெள்ளிக்கிழமையும் (இன்று), மக்களவையில் திங்கட்கிழமையும் நிறைவேற்ற வேண்டும். அதை பா.ஜனதா ஆதரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்சிகள் ஆதரவு

லோக்பால் மசோதாவை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் டி.பி.திரிபாதியும், லோக்பால் மசோதாவை ஆதரிப்பதாக கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும், லோக்பால் மசோதாவை தனது கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். ஆனால், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாடி எதிர்ப்பு

அதே சமயத்தில், லோக்பால் மசோதாவை எதிர்க்க போவதாக, மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

''மத்திய அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆகவே, மத்திய அரசுக்கு எந்த மசோதாவையும் கொண்டு வர உரிமை இல்லை'' என்று சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்தார்.
 

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் மானியக்கோரிக்கைகள் நிறைவேறின இருசபைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு

Posted: 12 Dec 2013 11:34 AM PST

புதுடெல்லி

பாராளுமன்றம் தொடர்ந்து 4–வது நாளாக நேற்றும் முடங்கியது. இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. அமளிக்கு மத்தியில் மானியக்கோரிக்கைகள் நிறைவேறின.

ஐக்கிய ஜனதாதளம் கோஷம்

பாராளுமன்றத்தில் , 'நக்சலைட்டுகள் பிரச்சினையை கட்டுப்படுத்த தவறி விட்டதாக' பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமாரை அவமதிக்கும்விதத்தில் உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே கடிதம் எழுதியிருப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர். இது தொடர்பான வாசகங்கள் கொண்ட அட்டைகளையும் அவர்கள் ஏந்தி கோஷங்களை முழங்கினர்.

பகுஜன்சமாஜ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியில் சூழ்ந்து, முசாபர்நகர் கலவரத்தால் பாதித்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் 40 குழந்தைகள் பலியானது தொடர்பான பத்திரிகை செய்திகளை சுட்டிக்காட்டி, உத்தரபிரதேச அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழங்கினர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை

தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, 150 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக முழக்கமிட்டனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள், தெலுங்கானாவுக்கு எதிராகவும், ஐக்கிய ஆந்திராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.

கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் எந்த அலுவலும் நடைபெறமுடியாத நிலையில், சபையை நண்பகல் வரைக்கும் சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.

மானியக்கோரிக்கைகள்

சபை மீண்டும் கூடியபோது, அமளிக்கு இடையே மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கொண்டு வந்த பொதுவான துணை மானிய கோரிக்கை, ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜூன் கார்கேயின் ரெயில்வேக்கான துணை மானிய கோரிக்கை ஆகியவை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.

தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகளுக்கான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இதற்கிடையே அமளியில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார். உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்று அமைதி காத்தால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான நோட்டீசுகளை எடுத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

'நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவான 50 எம்.பி.க்களை நான் எண்ணிப்பார்க்க வேண்டும்' என்று அவர் கூறியும், நிலைமையில் மாற்றம் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியில் கோஷமிட்டுக்கொண்டிருந்ததை அடுத்து சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் மீரா குமார் உத்தரவிட்டார். இதன்காரணமாக காங்கிரஸ் எம்.பி. ஆர்.சாம்பசிவராவ், தெலுங்குதேசத்தின் கே. நாராயணராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடைய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நேற்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.

மேல்–சபையிலும் அமளி

மேல்–சபையில் நேற்று சபைத்தலைவர் ஹமீது அன்சாரி தனது இருக்கையில் அமர்வதற்குக்கூட பொறுக்காமல், முசாபர்நகர் பிரச்சினையை பகுஜன்சமாஜ் எம்.பி.க்கள் எழுப்ப முற்பட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைப்பது தொடர்பாக 7 நோட்டீசுகள் தமக்கு வந்துள்ளதாக சபைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார்.

அப்போது பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு விரைந்து, உத்தரபிரதேச அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். தெலுங்குதேசம் எம்.பி.க்கள், ஆந்திர பிரிவினைக்கு எதிராக முழங்கினர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள், பெண் பயிற்சி வக்கீலின் பாலியல் தொல்லை புகாருக்கு ஆளாகியுள்ள நீதிபதி ஏ.கே. கங்குலியை டெல்லி போலீசார் கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்ற விவகாரத்தை தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எழுப்பி ஆவேசமாக முழக்கமிட்டனர். ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி எம்.பி.க்களும் தங்கள் பங்குக்கு கோஷங்கள் போட்டனர். இந்த அமளிகள் காரணமாக முதலில் சபை நண்பகல் வரையும், பின்னர் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது.

பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, ரெயில்வே மானிய கோரிக்கையை தாக்கல் செய்யுமாறு ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜூன் கார்கேயை சபை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் அழைத்தார். ஆனால் பகுஜன்சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு விரைந்து கோஷம் போட்டனர். அமளியில் எதுவுமே கேட்கவில்லை.

4–வது நாளாக முடக்கம்

அமளிக்கு நடுவே ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜூன் கார்கே மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து முடித்தார். உள்துறை ராஜாங்க மந்திரி ஆர்.பி.என். சிங், கவர்னர்களுக்கான படிகள் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இருப்பினும் கோஷங்கள் முடிவுக்கு வராததால் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து பி.ஜே. குரியன் உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக தொடர்ந்து 4–வது நாளாக பாராளுமன்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்த அலுவலையும் செய்ய முடியாமல் இன்றும் முடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

category:

சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா மீண்டும் தோல்வி

Posted: 12 Dec 2013 11:31 AM PST

கோலாலம்பூர்,

சூப்பர் சீரிஸ் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 8 முன்னணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகிறார்கள். இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் நேற்று ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சீனாவின் லீ சூய்ருயுடன் மோதினார். சூய் ருயின் அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய சாய்னா 9–21, 14–21 என்ற நேர் செட்டில் வெறும் 27 நிமிடங்களில் வீழ்ந்தார். ஏற்கனவே முதல் ஆட்டத்தில் ஜப்பானின் மினட்சு மிதானியிடமும் தோற்று இருந்தார். அடுத்தடுத்து தோல்வியை தழுவிய போதிலும் சாய்னாவுக்கு அரைஇறுதிசுற்றை எட்ட சாய்னாவுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புள்ளது.

தனது கடைசி லீக்கில் சாய்னா தென்கொரியாவின் யோன் ஜீ பாவ்வை இன்று எதிர்கொள்கிறார். இதில் சாய்னா அசத்தலான வெற்றியை பெற வேண்டும். அதே நேரத்தில் சூய் ருய் தனது கடைசி லீக்கில் மினட்சு மிதானியை பந்தாட வேண்டும். இவ்வாறு நடக்கும் போது சூய்ருய் 3 வெற்றிகளுடன் அரைஇறுதியை எட்டுவார். சாய்னா, யோன் ஜீ பாவ், மிதானி ஆகியோர் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருப்பார்கள். அப்போது செட் விகிதாச்சாரம் அடிப்படையில் இவர்களில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இந்த வகையில் மட்டுமே சாய்னாவுக்கு இப்போது வாய்ப்புள்ளது.

category:

தமிழகத்தில் பா.ம.க. தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Posted: 12 Dec 2013 11:29 AM PST

பூந்தமல்லி,

டெல்லியில் 'ஆம்ஆத்மி' கட்சியைப் போல் தமிழகத்தில் பா.ம.க. தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க.வின் கட்சி அலுவலகம் போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் நேற்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் டில்லிபாபு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணி உருவாகி உள்ளது. அதோடுதான் கூட்டணி வைப்போம்.

'ஆம் ஆத்மி'யை போல்...

டெல்லியில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தது. தற்போது அங்கு ஒரு மாற்றம் தேவை என மக்கள் நினைத்து 'ஆம்ஆத்மி' கட்சியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

47 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதனால் டெல்லியில் 'ஆம்ஆத்மி' கட்சியைப் போல தமிழகத்தில் பா.ம.க. தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க முடிவு செய்து உள்ளனர். இதனால் எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடி–மின்னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் சேதம்

Posted: 12 Dec 2013 11:19 AM PST

மதுரை

மதுரை மாநகரில் நேற்று காலை முதல் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தன. அத்துடன் வெயில் குறைவாக இருந்ததுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று காலையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. மீண்டும் மாலை நேரத்திலும் சாரல் மழை பெய்தது. ஆனால் இரவு 9 மணியளவில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் லேசான சேதம் ஏற்பட்டது.

கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது. தகவலறிந்த கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் இடிதாங்கி பொருத்தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாரவர்மன் சுந்தரபாண்டியன் என்ற அரசனால் கடந்த 1216–1238 ஆண்டுக்குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

category:

News Group Category:

பாகிஸ்தானுக்கு வருமாறு மன்மோகன்சிங்குக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு

Posted: 12 Dec 2013 11:14 AM PST

புதுடெல்லி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்–மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பாகிஸ்தான் குழுவினர், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தானுக்கு வருமாறு மன்மோகன்சிங்குக்கு நவாஸ் ஷெரீப் முறைப்படி அழைப்பு விடுத்த கடிதமும், நல்லெண்ண செய்தியும் மன்மோகன்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டன.

நவாஸ் ஷெரீப்பின் விசேஷ உதவியாளர் தாரிக் பதேமி, அவற்றை ஒப்படைத்தார். நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டதாக ஷாபாஸ் ஷெரீப் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™