Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காமன்வெல்த் மாநாடு, கொழும்பில் இன்று தொடங்குகிறது

Posted: 09 Nov 2013 11:23 AM PST

கொழும்பு

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காமன்வெல்த் மாநாடு, கொழும்பில் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

சர்ச்சைக்குரிய மாநாடு

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில்  (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இலங்கையில் இனப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, போர் இல்லாத பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவங்களால், காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெரும் சர்ச்சையும் உருவானது.

இந்தியா பங்கேற்க எதிர்ப்பு

அதுமட்டுமின்றி, போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னிலையில் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள ராஜபக்சேயின் கரத்தை வலுப்படுத்த உதவும் என கருதப்படுகிற இந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

பலத்த எதிர்ப்பின் காரணமாக இதில் கலந்துகொள்வது குறித்து முடிவு எடுக்க முடியாமல் பிரதமர் மன்மோகன் சிங் திணறி வருகிறார்.

நாளை தொடங்குகிறது

இந்த நிலையில் காமன்வெல்த் மாநாடு திட்டமிட்டபடி இன்று கொழும்பு நகரில் தொடங்குகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே மாநாடு தொடங்குவதை முறைப்படி அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து '9–வது காமன்வெல்த் இளைஞர் மன்றம்' என்ற பெயரில் 5 நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த காமன்வெல்த் இளைஞர் மன்றம், 'அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வலுவாக ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் அமைகிறது. காமன்வெல்த் நாடுகளின் இளைய தலைவர்கள் இதில் பங்கேற்று, விவாதிக்கிறார்கள்.

இளவரசர் சார்லஸ்

காமன்வெல்த் மாநாட்டின் தலைமை விருந்தினராக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்கிறார். அவர் 3 நாள் நிகழ்ச்சிகளில் (15–17 தேதிகள்) கலந்துகொள்கிறார்.

தற்போது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிற இளவரசர் சார்லஸ்–கமிலா பார்க்கர் தம்பதியர், அதை முடித்துக்கொண்டு இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்வார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர்

இந்த மாநாட்டில் லண்டன் வாழ் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொள்கிறார். ஆனால் அவர் தனது இலங்கை பயணத்தை நியாயப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர், ''இலங்கையில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவேன்'' என கூறி உள்ளார்.

மேலும், ''காமன்வெல்த் மாநாட்டின்போது, உள்நாட்டு போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் பேணல் ஆகியவற்றில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை உலகளாவிய அளவுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க இந்த பயணத்தை பயன்படுத்துவேன்'' எனவும் அவர் கூறியுள்ளார்.

கமலேஷ் சர்மா

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்த அமைப்பின் தலைமை செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று கொழும்பு போய்ச்சேர்ந்தார். இவர் இந்திய முன்னாள் தூதரக அதிகாரி ஆவார். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களில், அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

காமன்வெல்த் மாநாடு பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்ல மாட்டார் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்கிறார்

Posted: 09 Nov 2013 11:22 AM PST

புதுடெல்லி

காமன்வெல்த் மாநாட்டுக்காக பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை செல்ல மாட்டார். வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், மாநாட்டில் பங்கேற்கிறார்.

காமன்வெல்த் மாநாடு

பெரும் சர்ச்சைக்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையிலும் சமீபத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யார் தலைமை?

பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ள பலத்த எதிர்ப்பு உள்ளதால் இதுபற்றி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இரண்டு முறை கூடியது. ஆனால் சாதக, பாதகங்கள் விவாதிக்கப்பட்டதே தவிர முடிவு எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ''காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிற இந்திய குழுவுக்கு தலைமை தாங்கப்போவது யார் என்பது குறித்து இன்னும் இலங்கைக்கு அரசு தெரிவிக்கவில்லை'' என கூறினார்.

5 முறை பிரதமர் பங்கேற்றார்

''பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லாதபட்சத்தில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்துகொள்வாரா?'' என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அக்பருதீன் பதில் அளித்து கூறியதாவது:–

சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு அழைப்பு வருகிறபோது, அது குறித்து முடிவு எடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1993–ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 10 காமன்வெல்த் மாநாடுகளில் பிரதமர் மன்மோகன்சிங் 5 முறை பங்கேற்றிருக்கிறார். 4 முறை மந்திரிகளே இந்தியக்குழுவுக்கு தலைமை தாங்கி உள்ளனர்.

சல்மான் குர்ஷித் பங்கேற்பு

மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தைப் பொறுத்தமட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார். இதுகுறித்து இலங்கைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், மூத்த அதிகாரிகள் பவன் கபூர், நவ்தேஜ் சர்மா ஆகியோர் உதவியாக உடன் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் பங்கேற்பு இல்லை

எனவே இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.

பிரதமர் மன்மோகன்சிங்கை பொறுத்தட்டில், அவர் இலங்கை செல்லமாட்டார் என்பது தெளிவாகி உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல்களை காரணம் காட்டி, அவர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்து விடுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இதுகுறித்த அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படாது என தெரிய வந்துள்ளது.

category:

News Group Category:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் சல்மான்குர்ஷித் செல்வார் என்று வெளியுறவு துறை அறிவிப்பு

Posted: 09 Nov 2013 11:21 AM PST

புதுடெல்லி

பெரும் சர்ச்சைக்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையிலும் சமீபத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் செல்லவில்லை

பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள பலத்த எதிர்ப்பு உள்ளதால் இதுபற்றி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு இரண்டு முறை கூடியது. ஆனால் சாதக, பாதகங்கள் விவாதிக்கப்பட்டதே தவிர முடிவு எடுக்க முடியவில்லை.

தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்த கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க விரும்பவில்லை.

5 மாநில சட்டசபை தேர்தல்களை காரணம் காட்டி, அவர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்து விடுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சல்மான் குர்ஷித்

இந்த நிலையில் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு அழைப்பு வருகிறபோது, அது குறித்து முடிவு எடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1993–ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 10 காமன்வெல்த் மாநாடுகளில் பிரதமர் 5 முறை பங்கேற்றிருக்கிறார். 4 முறை மந்திரிகளே இந்திய குழுவுக்கு தலைமை தாங்கி உள்ளனர்.

இலங்கைக்கு தகவல்

இப்போது நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தை பொறுத்தமட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார். இதுகுறித்து இலங்கைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், மூத்த அதிகாரிகள் பவன் கபூர், நவ்தேஜ் சர்மா ஆகியோர் உதவியாக உடன் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடிதம் எழுதுகிறார்

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் தான் இந்திய குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று தெரிகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரமாட்டார் என்ற தகவல் இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலமாக தெரிவிப்பார் என்றும் அரசு அதிகாரிகள் கூறினார்கள்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

உலக சதுரங்க போட்டி ஆனந்த்–கார்ல்சென் மோதிய முதல் சுற்று ஆட்டம் ‘டிரா’

Posted: 09 Nov 2013 10:43 AM PST

சென்னை,

ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் 16–வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

உலக சதுரங்க போட்டி

சதுரங்க பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலக நடப்பு சாம்பியனும், இந்திய வீரருமான விசுவநாதன் ஆனந்த்–உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக சதுரங்க (செஸ்) போட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது.

தமிழக அரசின் முழு ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டி வருகிற 26–ந் தேதி வரை நடக்கிறது. 12 சுற்றுகள் முடிவில் இருவரும் சமநிலை வகித்தால் டைபிரேக்கர் 28–ந் தேதி நடைபெறும்.

ரூ.14 கோடி பரிசு

12 சுற்றுகளை கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் தலா 6 ஆட்டங்களில் கறுப்பு நிற காயுடனும், தலா 6 ஆட்டங்களில் வெள்ளை நிற காயுடனும் விளையாடுவார்கள். வெற்றிக்கு 1 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் அளிக்கப்படும். தோல்வி அடைந்தால் புள்ளி கிடையாது. 12 சுற்றில் யார் முதலில் 6.5 புள்ளியை எட்டுகிறார்களோ? அவருக்கு உலக சாம்பியன் பட்டத்துடன் ரூ.8.4 கோடி பரிசாக வழங்கப்படும். 2–வது இடம் பெறுபவருக்கு ரூ.5.6 கோடி பரிசாக அளிக்கப்படும்.

உலக சதுரங்க போட்டியின் முதல் சுற்று ஆட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதற்காக மாக்னஸ் கார்ல்சென் 2.50 மணிக்கு வந்து கண்ணாடி அறைக்குள் அமைக்கப்பட்டு இருந்த ஆட்ட இருக்கையில் அமர்ந்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் ஆனந்த் வந்து உட்கார்ந்தார். இருவரும் கைகுலுக்கி கொண்டனர். ஆட்டம் நடைபெற்ற அரங்கம் 350–க்கும் மேற்பட்ட ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் நின்று கொண்டு பார்க்க இலவசமாக அனுமதி குறிப்பிட்ட நேரங்களுக்கு அளிக்கப்பட்டது.

குதிரையுடன் தொடங்கிய கார்ல்சென்

உலக சதுரங்க கூட்டமைப்பு (பிடே) தலைவர் கிர்சான் இஸ்யும் சினோவ் போட்டியை 3 மணிக்கு தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக அவர் கார்ல்சென் விருப்பப்படி வெள்ளை நிற குதிரையை (நைட்) முதலாவதாக நகர்த்தி வைத்தார். குதிரையை கொண்டு ஆட்டத்தை தொடங்குவது ரெட்டி ஓபன் முறையாகும்.

ஆட்டம் விறுவிறுப்பாக நீண்ட நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த் 9–வது காய் நகர்த்தலில், கார்ல்சென்னின் சிப்பாயை (பான்) காலி செய்தார். அடுத்த காய் நகர்த்தலில் கார்ல்சென் பழிக்கு பழியாக ஆனந்தின் சிப்பாயை கபளிகரம் செய்தார்.

விரைவில் டிரா

கார்ல்சன் தனது ராணியை முன்னுக்கு எடுத்து வந்து ஆனந்துக்கு அதிரடி காட்ட நினைத்தார். ஆனால் அதனை முறியடிக்க 11–வது காய் நகர்த்தலில் ஆனந்த் தனது குதிரையை கொண்டு, கார்ல்சென்னின் ராணியை (குயின்) வீழ்த்த முயற்சித்தார். ஆனால் அதற்கு இடம் அளிக்காமல் கார்ல்சென் ராணியை நகர்த்தினார். மீண்டும் அடுத்த குதிரையை கொண்டு ஆனந்த், கார்ல்சென்னின் ராணியை தண்டிக்க முயற்சித்தார். அதற்கும் கார்ல்சென் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் 3–வது முறையாக ஆனந்த் பழைய பாணியிலேயே, கார்ல்சென்னின் ராணிக்கு குறிவைத்தார். இந்த முறையும் கார்ல்சென் பாதுகாத்தார்.

30 காய் நகர்த்தலுக்கு பிறகு தான் சதுரங்க ஆட்டத்தில் டிராவுக்கு வர முடியும் என்பது விதிமுறை என்றாலும், ஒரே மாதிரியான கார் நகர்த்தலை தொடர்ந்து 3 முறைக்கு மேல் செய்ததால் 16–வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடித்து கொண்டு கைகுலுக்கினார். ஆட்டம் 1.30 மணி நேரத்துக்குள் முடிவுக்கு வந்தது. டிரா கண்டதால் இருவருக்கும் தலா அரை புள்ளி கிடைத்தது. 63–வது முறையாக இருவரும் சந்தித்த இந்த ஆட்டத்துக்கு முன்பு இதுவரை இருவரும் ரெட்டி முறையில் தொடங்கி ஆடியது கிடையாது. இருவருக்கும் இடையிலான ஆட்டம் மிக குறைந்த காய் நகர்த்தலில் முடிவது இதுவே முதல் முறையாகும். ஆட்டம் சிக்கலான நிலைக்கு செல்லாவிட்டாலும் காய் நகர்த்தலில் ஆனந்தை விட கார்ல்சென் அதிக நேரம் எடுத்து கொண்டார்.

இன்று 2–வது ஆட்டம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு 2–வது சுற்று ஆட்டம் ஆரம்பமாகிறது. இதில் ஆனந்த் வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்குவார். கார்ல்சென் கறுப்பு நிற காயுடன் விளையாடுவார்.

category:

டெஸ்ட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

Posted: 09 Nov 2013 10:32 AM PST

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அஸ்வின் முன்னேற்றம்

கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3–வது நாளிலேயே இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் டெஸ்ட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் இந்திய வீரர் 27 வயதான அஸ்வின், 403 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு இடத்திற்கு முன்னேறியுள்ளார். கொல்கத்தா டெஸ்டில் அஸ்வின் 124 ரன்கள் விளாசியதுடன், 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் முத்திரை பதித்ததன் மூலம் 81 தரவரிசை புள்ளிகளை சேகரித்த அவர், வங்காளதேசத்தின் ஷகிப் அல்–ஹசன், தென்ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு 'நம்பர் ஒன்' அந்தஸ்தை தன்வசப்படுத்தியுள்ளார். அல்–ஹசன் 362 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், காலிஸ் 332 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர்.

ரோகித்துக்கு 63–வது இடம்

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், அம்லா, வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால், இலங்கையின் சங்கக்கரா ஆகியோர் நீடிக்கிறார்கள். இந்திய வீரர்களில் டாப்–10 இடத்தில் புஜாரா (8–வது இடம்) மட்டுமே இருக்கிறார். கேப்டன் டோனி 19–வது இடமும், விரைவில் ஓய்வு பெற உள்ள சச்சின் தெண்டுல்கர் 23–வது இடமும், விராட் கோலி 25–வது இடமும் வகிக்கிறார்கள்.

அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 14–வது இந்தியர் என்ற பெருமையை பெற்ற ரோகித் ஷர்மா (177 ரன்கள்) தரவரிசையில் நுழைந்து 63–வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர் நிலை

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரநிலையில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், பிலாண்டர் முதல் இரு இடங்களில் தொடருகிறார்கள். ஆல்–ரவுண்டர்களின் வரிசையில் ஏற்றம் கண்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையிலும் முன்னேறியுள்ளார். இதில் அவர் 2 இடங்கள் அதிகரித்து 6–வது இடத்திற்கு வந்திருக்கிறார். முதல் 10 இடங்களில் இடம் வகிக்கும் ஒரே இந்திய பவுலர் இவர் தான்.

கொல்கத்தா போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை அள்ளிய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அகமது, அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். தரவரிசையிலும் அடியெடுத்து வைத்துள்ள அவருக்கு 53–வது இடம் கிடைத்துள்ளது.

category:

டெஸ்ட் முடிந்த பிறகு கொல்கத்தா வந்த லாரா தெண்டுல்கரின் ஆட்டத்தை காண முடியாததால் ஏமாற்றம்

Posted: 09 Nov 2013 10:30 AM PST

கொல்கத்தா,

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. முகமது ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 3–வது நாளான நேற்று முன்தினம் சரணாகதியானது.

சச்சின் தெண்டுல்கர் கொல்கத்தாவில் விளையாடிய கடைசி போட்டி இது தான். இதையொட்டி அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் அழைக்கப்பட்டனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவும் ஒருவர். அவர் நேற்று காலை தான் கொல்கத்தா வந்து சேர்ந்தார். ஆனால் வீரர்கள் மூட்டை முடிச்சுடன் அடுத்து போட்டிக்காக கிளம்பிக் கொண்டிருப்பதை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது.

3–வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதால் தெண்டுல்கருக்காக 4–வது மற்றும் 5–வது நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பல கொண்டாட்டங்கள் ரத்தாகின. இது பற்றி லாரா கூறுகையில், 'வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக போராடும் என்று எப்போதும் நினைப்பவன் நான். ஆனால் இந்த டெஸ்டில் அவர்கள் நிலைகுலைந்த விதம் உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. 3–வது நாளுக்குள் ஆட்டம் முடிந்து விடும் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. தெண்டுல்கரின் ஆட்டத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் (நவ.14–18) நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டி 5 நாட்கள் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் தெண்டுல்கர் கடைசியாக பேட் செய்வதை பார்ப்பேன்' என்றார். லாரா இன்று மும்பைக்கு புறப்படுவார் என்று தெரிகிறது.

category:

உலக டூர் டென்னிஸ்: அரைஇறுதிக்கு பெடரர் முன்னேற்றம்

Posted: 09 Nov 2013 10:28 AM PST

லண்டன்,

எட்டு முன்னணி வீரர்களுக்கு இடையிலான ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4–6, 7–6 (2), 7–5 என்ற செட் கணக்கில் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை (அர்ஜென்டினா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் (2 வெற்றி, ஒரு தோல்வியுடன்) நுழைந்தார். இன்று நடக்கும் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரரும், தனது எதிரியுமான நடாலுடன் பெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்.

'ஏ' பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6–7 (3), 6–4, 6–1 என்ற செட் கணக்கில் டேவிட் பெர்ரரை (ஸ்பெயின்) வெளியேற்றி அரைஇறுதியை உறுதி செய்தார். வாவ்ரிங்கா அரைஇறுதியில் ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். முன்னதாக இரட்டையர் பிரிவில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

category:

நுகர்பொருள் துறை யூனிட் மதிப்பு அபார வளர்ச்சி 67 சதவீத பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் மதிப்பு குறைந்தது

Posted: 09 Nov 2013 10:01 AM PST

மும்பை,

பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி திட்டங்களில் சுமார் 67 சதவீத திட்டங்களின் மதிப்பு குறைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுகர்பொருள் துறை

தற்போது 300–க்கும் மேற்பட்ட பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்கள் குறிப்பிட்ட துறைகளில் அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்வதில்லை. இந்த திட்டங்களின் மதிப்பு 2010 நவம்பர் 5–ந் தேதி நிலவரத்தை விட காட்டிலும் குறைந்துள்ளது. அன்றைய தினம் சென்செக்ஸ் முதல் முறையாக 21,000 புள்ளிகளைத் தாண்டியிருந்தது.

பங்குச் சந்தைகளின் தற்போதைய ஏற்றத்தில் நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் மதிப்பு நன்கு உயர்ந்துள்ளது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட மூன்று ஆண்டுக் காலத்தில் இத்திட்டங்கள் 20.7 சதவீத ஆதாயம் அளித்து முன்னிலையில் உள்ளன. இதே காலத்தில் கோல்டு இ.டி.எஃப். எனப்படும் தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் தமது மதிப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன.

தங்கம் சார்ந்த திட்டங்கள்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் கடும் சரிவு கண்டுள்ளன. என்றாலும் இவை அதிக ஆதாயம் அளித்ததில் இரண்டாவது இடம் பிடித்துள்ளன. இத்திட்டங்கள் ஈட்டித் தந்த ஆண்டு லாபம் 13.5 சதவீதமாகும்.

பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் தங்கம் சார்ந்த 8 திட்டங்கள் முன்னணி 15 முதலீட்டு திட்டங்களில் இடம் பிடித்துள்ளன. தற்போது சாம்வாட் 2070–ஆம் ஆண்டு நடைபெறுகிறது. சாம்வாட் 2066–ல் தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு பங்குகளைக் காட்டிலும் நன்கு உயர்ந்திருந்தது. உள்கட்டமைப்பு மற்றும் வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் பலத்த அடி வாங்கியுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்து வேறுபாடுகள்

சென்செக்ஸ் வளர்ச்சியுடன் குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சியை ஒப்பிடுவது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. முதலீட்டு ஆய்வு நிறுவனமான மார்னிங் ஸ்டார் இந்தியாவின் மூத்த முதலீட்டு ஆலோசகர் துருவ ராஜ் சட்டர்ஜி இது குறித்து கூறும்போது, ''சென்செக்ஸ் உண்மையான காட்சியை பிரதிபலிக்கவில்லை. பன்முக பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்தான் 2013–ஆம் ஆண்டில் பலத்த அடி வாங்கியுள்ளன. மருத்துவம், ஐ.டி. போன்ற சில துறைகளின் செயல்திறன் இதுவரை நன்றாக இருந்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

நடுத்தர அளவில் சொத்து மதிப்புடன் பல பரஸ்பர திட்டங்கள் உள்ளன. இந்த வகையில் ரெலிகேர் இன்வெஸ்கோ ஈக்விட்டி, டாட்டா எதிக்கல், கனரா ரொபேக்கோ லார்ஜ் கேப், பிராங்க்ளின் பில்டு இந்தியா, குவாண்டம் டாக்ஸ் சேவிங், ஐ.டீ.எப்.சி. நிப்டி, எல் அண்டு டி இந்தியா வேல்யூ போன்றவை நடுத்தர அளவில் சொத்து மதிப்புள்ள பரஸ்பர நிதி திட்டங்களாக உள்ளன.

பத்து நடுத்தர திட்டங்கள்

2010 செப்டம்பர் முதல் 2013 செப்டம்பர் வரையிலான மூன்று ஆண்டுகளில் இது போன்ற பத்து நடுத்தர எம்.எஃப். திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்துள்ளன. அதே சமயம் பல திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் இந்த திட்டங்கள் ஒரு சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை லாபம் தந்துள்ளன. இதே திட்டங்கள் ஓராண்டு காலத்தில் 8 முதல் 15 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன. எனினும் இத்தகைய நடுத்தர திட்டங்கள் பொதுவாக முதலீட்டாளர்கள் கவனத்தை இன்னும் ஈர்க்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டு காலத்தில் ரெலிகேர் இன்வெஸ்கோ ஈக்விட்டி திட்டம் 15.36 சதவீத ஆதாயம் அளித்துள்ளது. டாட்டா எதிக்கல் திட்டம் 14.16 சதவீத லாபம் தந்துள்ளது. கனரா ரொபேக்கோ லார்ஜ் கேப் 9.27 சதவீதமும், குவாண்டம் டாக்ஸ் சேவிங் 9.82 சதவீதமும் வருவாய் அளித்துள்ளன. ஐ.டீ.எப்.சி. நிப்டி மற்றும் எல் அண்டு டி இந்தியா வேல்யூ ஆகிய திட்டங்கள் முறையே 11 சதவீதம் மற்றும் 8.3 சதவீத வருவாய் ஈட்டித் தந்துள்ளன.

நிர்வகிக்கப்படும் சொத்து

இந்த பத்து பரஸ்பர நிதி திட்டங்களில், 2013 செப்டம்பர் நிலவரப்படி ஐ.டீ.எப்.சி. நிப்டி திட்டத்தில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு குறைந்தபட்சமாக ரூ.10.21 கோடியாகவும், டாட்டா எதிக்கல் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து அதிகபட்சமாக ரூ.111.45 கோடியாகவும் உள்ளது.

category:

அடுத்த 20 ஆண்டுகளில், பொருளாதார வலிமையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என 41% இந்தியர்கள் நம்பிக்கை

Posted: 09 Nov 2013 09:52 AM PST

அடுத்த 20 ஆண்டுகளில், அமெரிக்காவையும், சீனாவையும் பின்னுக்குத் தள்ளி பொருளாதார வலிமையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என 41 சதவீத இந்தியர்கள் நம்புகின்றனர்.

சீனாதான் வழி நடத்தும்

முன்னணி ஆய்வு நிறுவனமான இப்சாஸ் மோரி மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி இணைந்து சர்வதேச அளவில் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இதில் 42 சதவீத இந்தியர்கள் அடுத்த 20 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தை சீனாதான் வழி நடத்தும் என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில், 41 சதவீதத்தினர் இந்தியாவே முன்னிலையில் இருக்கும் என கூறியுள்ளனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளில் உள்நாட்டு மக்கள் எதிர்காலத்தில் தத்தம் நாடுதான் உலக பொருளாதாரத்தில் தலைசிறந்து விளங்கும் என உறுதியாக நம்புகின்றனர். எனினும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் சீனாவைத் தவிர பிற நாடுகளை ஒரு பொருட்டாக கருதவில்லை. சீனா மட்டுமே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த கருத்துக் கணிப்பில் முன்னிலையில் உள்ளது.

ஆய்வில் பங்கேற்ற உலக மக்களில் சீனாவில் 2 சதவீதத்தினரும், ரஷ்யாவில் 2 சதவீதத்தினரும், பிரேசிலில் 6 சதவீதத்தினரும் மட்டுமே அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா தலைமையிடத்திற்கு வர வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

52 சதவீதத்தினர் சீனாதான் அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழும் என தெரிவித்துள்ளனர். அதே சமயம் இன்று முதலிடத்தில் உள்ள அமெரிக்காவே தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கும் என 30 சதவீதத்தினர்தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். இன்றைய நிலையில் அமெரிக்காவும், சீனாவும் மட்டுமே சரியான பொருளாதார கொள்கைகளை கொண்டிருப்பதாகவும், இந்த நாடுகளில் வேலைவாய்ப்புகளும் சிறப்பாக உள்ளதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவே முதலிடம்

வளர்முக நாடுகளில் 29 சதவீதத்தினர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது என நம்புகின்றனர். சீனாதான் இதில் டாப் என 17 சதவீதத்தினர் கருதுகின்றனர். 18 சதவீதத்தினர் ஐரோப்பிய யூனியன் நாடுகள்தான் முன்னிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். எப்படியிருப்பினும் இந்த விஷயத்தில் அமெரிக்கா இரண்டு மடங்கு அதிக மதிப்பெண்களை வென்றுள்ளது.

category:

நடப்பு ரபி பருவத்தில் இதுவரை பயிர்கள் சாகுபடி பரப்பளவு 78.68 சதவீதம் அதிகரிப்பு

Posted: 09 Nov 2013 09:49 AM PST

புதுடெல்லி,

நடப்பு ரபி பருவத்தில் (அக்டோபர் – மார்ச்) பயிரிடும் பரப்பளவு 78.68 சதவீதம் அதிகரித்து 1.09 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் 61.20 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

உற்பத்தி இலக்கு

மத்திய அரசு, ரபி பருவத்தில் கோதுமை 9.25 கோடி டன், 1.20 கோடி டன் பருப்பு வகைகள், 1.40 கோடி டன் அரிசி, 44 லட்சம் டன் மக்காச்சோளம் மற்றும் 15 லட்சம் டன் பார்லி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரபி பருவத்தில் இதுவரை பருப்பு பயிரிடும் பரப்பளவு 37.78 லட்சம் ஹெக்டேராக விரிந்துள்ளது. நல்ல மழை காரணமாக தென் மாநிலங்களில் சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் சாகுபடி பணிகள் தொடங்கப்படவேயில்லை.

தற்போது எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பளவு 28.89 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் 22.36 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கரும்பு சாகுபடி பரப்பளவு 81,000 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டில் 45,000 ஹெக்டேராக இருந்தது. அதேசமயம், சிறு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு 31.63 லட்சம் ஹெக்டேரிலிருந்து 25.87 ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.

ரபி பருவத்தின் பிரதான பயிரான கோதுமை சாகுபடி பரப்பளவு இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து 15.19 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் 6.46 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கோதுமை சாகுபடி பணிகள் அக்டோபர் இறுதியில் ஆரம்பிக்கும். ஏப்ரல் மாதத்தில் அறுவடை தொடங்கும்.

வட மாநிலங்கள்

கோதுமை உற்பத்தியில் முன்னணியில் உள்ள பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை தாமதம் ஆனதால் நிலத்தில் ஈரப்பதம் நன்றாக உள்ளது. இதன் காரணமாக கோதுமை பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கோதுமை சாகுபடி பரப்பளவு மட்டும் 10 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீதோஷ்ண நிலை இதேபோல் தொடர்ந்து இருந்தால் சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிக்கும் என விவசாய துறை ஆணையர் ஜே.எஸ்.சாந்து தெரிவித்தார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™